VNE 57(3)

VNE 57(3)

நாட்கள் அதன் போக்கில் போய்க் கொண்டிருந்தது. மஹா ஹவுஸ் சர்ஜனாக வேலை பார்க்கும் மருத்துவமனையில் அவர்களது கடைசி நாள். இங்கு முடித்துவிட்டு, ஏதேனும் ஒரு கிராமத்தில் அல்லது நடுத்தரமான நகரத்தின் அரசு மருத்துவமனையில் மூன்று மாதங்கள் வேலை பார்க்க வேண்டும் என்பது அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த டாஸ்க். மருத்துவ கல்லூரியை சேர்ந்த அந்த மருத்துவமனையில் அவர்களுடைய பணி காலம் முடிந்து இருந்தது.

“அடுத்தது என்னடா ப்ளான்?” நண்பர்கள் குழுவாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, விகாசினி கேட்டாள். அவளும் அவர்களது வகுப்புத் தோழி. ரொம்பவும் பேசமாட்டாள். அமைதி. கேட்கும் கேள்விக்கு பதில் என்று இருப்பவள். அவர்களது குழுவில் ஸ்ரீராம் மட்டும் இல்லை. யாரையோ சந்திக்க வேண்டும் என்று வெளியே சென்றிருந்தான்.

மஹா, பிருந்தா, விகாசினி, சேஷா, செந்தில், ஸ்ரீராம் எல்லாரும் ஒரே குழு. ஒருவருக்கொருவர் உதவிக் கொள்பவர்கள். வகுப்பறையில் இருந்ததை விட, ஹவுஸ் சர்ஜன் செய்ய வந்த போது நன்றாகவே இறுகி விட்டிருந்தது அவர்களுடைய நட்பு.

“கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆவறதுதான் ப்ளான். ஆனா என்ன இவ அண்ணன் இன்னும் அசைய மாட்டேங்கறாங்க…” பிருந்தா சிரிக்க,

“அந்தளவு கார்த்தியை பயம் காட்டி வெச்சுருக்க செல்லோ…” என்று மஹா வாய்விட்டு சிரித்தாள்.

“அடடா… உன் அண்ணன் ரொம்ப பயப்படுறவங்க ல்ல…”

“அப்கோர்ஸ்… பாவம்.. அவன் ஒரு அப்புராணி. உன்னோட கோல்மால் தெரியாம ஏதோவொரு வீக் பாயின்ட்ல லவ் பண்றேன்னு சொல்லிட்டான் போல…” என்று சிரித்தாள்.

“பாயிண்ட்டா சொன்ன மஹா…” என்றான் செந்தில், ஹைஃபை  கொடுத்தவாறே! அவனது வேலையே பிருந்தாவை கிண்டலடித்தே ஒரு வழியாக்குவதுதான். சமயத்தில் விகாசினியும் சிக்கி விடுவாள். ஆனால் மஹா சிக்குவதில்லை. அவளிடம் வாய் கொடுத்தால் மீள முடியாது என்பதும் ஆட்டி வைத்து விடுவாள் என்பதும் செந்திலுக்கு நன்றாகவே தெரியும் என்பதால் மகாவிடம் மட்டும் வேலையை காட்ட மாட்டான்.

“ஆனா எப்படி சகோ உன்னை வெச்சு மாமா மேய்க்கறாரு?” என்று கேட்டான். அவளிடமே அவ்வப்போது இப்படி கூறி வாங்கியும் கட்டிக் கொள்வான்.

“ஏன் உன்னை வெச்சு சேஷா மேய்க்கலையா லூசே?” சேஷா அவனுடைய காதலி. வருங்கால மனைவி.

“ஏன்னா நான் அவ்ளோ நல்லவன், வல்லவன், நாலும் தெரிஞ்சவன், அறிஞ்சவன், புரிஞ்சவன், அன்பானவன் இப்படி நிறைய சொல்லலாம் சகோ. ஏதோ சேஷாவுக்கு ரொம்ப லக்…” என்று நீட்டி முழக்க, அருகிலிருந்து சேஷா முறைத்தாள்.

“மூதேவி… மொதல்ல சாக்ஸை துவைச்சு போட்டுத் தொலை… நாறுது…”

“அது உன்னோட சாக்ஸ் சேஷு டார்லிங். உன் ரூம்லருந்து சுட்டுட்டு வந்தேன்….” பெருமையாக செந்தில் சொல்ல, தலையில் அடித்துக் கொண்டாள் சேஷா. அவளும் விகாசினியும் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தனர். அவ்வபோது நண்பர்கள் விசிட் அடிப்பது வழக்கம். மஹா எப்போது ஷ்யாமை கண்டாளோ, இவை அத்தனையும் நின்று போயிருந்தது. அவளது வாழ்க்கையை மொத்தமாக ஆக்ரமித்துக் கொண்டான் ஷ்யாம். சிந்தனை, செயல், கனவு, நினைவு என்று அத்தனையும் அவன் மயமாக்கி இருந்தான்.

“எலி பொந்தை பழைய சாக்ஸ் வெச்சு அடைச்சு இருந்தேன். ஒரு நாள் அதைக் காணோம். சரி எலிதான் தூக்கிட்டு போய்டுச்சுன்னு நினைச்சா, தூக்கினது அந்த எலி இல்ல, இந்த…” என்று சேஷா நிறுத்த, சிரித்த செந்தில், “மாமன் புலிதான…” என்று கண்ணடிக்க,

“போடா… பெருச்சாளி…” என்று சேஷா திட்ட,

“இவளுங்க முன்னாடி மாமனை இப்படி டேமேஜ் பண்ணக் கூடாது தங்கம்…” பாவமாக அவன் கூற,

“ஒரு அழுக்கு சாக்ஸை ஆட்டைய போட்டவனை வேற எப்படிடா சொல்வாங்க?” என்று சேஷா கேட்க, சுற்றியிருந்த அனைவருமே வாய்விட்டு சிரிக்க, மஹாவின் செல்பேசி அழைத்தது.

ஸ்ரீராம் தான் அழைத்துக் கொண்டிருந்தான்.

என்ன இவன் அழைக்கிறான் என்று யோசித்தவாறே பேசியை காதுக்கு கொடுத்தாள்.

“என்னடா?”

“மஹா…” என்று அவன் தயங்க,

“சொல்லு ஸ்ரீ…” என்றாலும் அவன் புறம் சற்று அமைதியாக இருந்தது.

“ம்ம்ம்….”

“என்ன ஸ்ரீ? ஏதாவது பிரச்சனையா?” சற்று தீவிரமான குரலில் கேட்டாள் மஹா.

“ம்ம்ம்… தெரியல மஹா… ஆனா எனக்கு நல்லவிதமா படலை…” என்றான் ஸ்ரீராம்.

“என்னன்னு சொல்லுடா…”

“நான் இங்க ஒருத்தரை மீட் பண்றதுக்காக பார்க் ஹயாட் வந்தேன்…” என்று தயங்கியவாறே நிறுத்த, மஹாவுக்கு உள்ளுக்குள் திக்கென்று இருந்தது.

“சொல்லுடா…”

“அங்க ஷ்யாம் மாமாவ பார்த்தேன் மஹா…” அவன் எப்போதும் ஷ்யாமை மாமா என்றே அழைக்க பழகியிருந்தான். அவன் மட்டுமல்ல, அவளது நண்பர்கள் அனைவருக்கும் அவன் ‘மாமா’. நண்பிகளுக்கு ‘அண்ணா’.

“சரி அதுக்கு என்னடா? ஏதாவது வேலையா போயிருப்பாங்க..” என்று சாதாரணமாகத்தான் சொன்னாள்.

“இல்லடி… சௌஜன்யாவும் கூட இருக்கா…” என்று அவன் தயங்கியவாறே கூற, அவளுக்கு தலை சுற்றியது. ஸ்ரீராம் நல்ல நண்பன். அவன் பொய் சொல்ல வாய்ப்பில்லை என்பது தெரியும். அவன் கூறிய விஷயத்தில் அதிர்ந்தவள், மௌனமாகவே இருக்க, அவன் தொடர்ந்தான்.

“ரூமுக்குள்ள போய் ஒரு மணி நேரமாகுது. அவங்க ரூமுக்கு பக்கத்துல இருக்க ரூமுக்கு வெளியத்தான் நான் இருக்கேன். முதல்ல நானும் சீரியஸா நினைக்கல மஹா. ஆனா இப்ப எனக்கு நெருடலா இருக்கு. பயமாவும் இருக்குடி. ப்ரெஷர் ஏறிப் போய் நின்னுட்டு இருக்கேன்…” என்று ஒரு மாதிரியான குரலில் கூறி முடிக்க, தன்னை தானே நிதானித்துக் கொண்டவள்,

“பைனான்ஸ் சம்பந்தமா எதாவது பேச்சுவார்த்தையா இருக்கும் ஸ்ரீ…” என்றாள் சற்று அழுத்தமாக. “இல்லைன்னா உனக்கு அவங்களை அடையாளம் தெரியலையாடா?” என்றும் கேட்டு வைக்க,

“லூசா நீ? மாமாவை எனக்கு தெரியாதா? அவருக்குத்தான் என்னை அடையாளம் தெரியல. பக்கத்துல நான் நின்னுட்டு இருந்ததை கண்டுக்காம சௌஜன்யாவோட ரூமுக்குள்ள போனாங்கனா நீயும் இப்படி கேக்கற?” அவனுக்கு கோபம் வந்துவிட்டது.

இவர்களது திருமணத்தில் எத்தனை அலம்பல் செய்திருக்கிறோம், குழுவாக! முகம் கூடவா அவனுக்கு நினைவிருக்காது?

அவள் மெளனமாக இருக்க, “சரி… உன்னோட வாட்ஸ்அப் ஓபன் பண்ணி பார். உனக்கு ஸ்நாப்ஸ் அனுப்பறேன்.” என்று கூறிவிட்டு வைத்தான்.

அவசரமாக வாட்ஸ்அப்பை திறந்தாள். இந்த வாட்ஸ்அப்பை கண்டுபிடித்தவன், இவளது வாழ்க்கையில் நிறைய விளையாடி பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று நினைத்துக் கொண்டவளை வரவேற்றது ஸ்ரீராம் அனுப்பியிருந்த படங்கள்.

சௌஜன்யாவோடு இருந்தது சாட்சாத் ஷ்யாம் தான். இருவருமாக காரிடாரில் நடந்து வரும் படமும், ஜோடியாக அறைக்குள்ளே நுழைவதையும் அனுப்பி, “மாமா?” என்று கேள்வியும் கேட்டிருந்தான்.

“நீ இன்னும் அங்க தான் இருக்கியா?” என்று மெசேஜில் கேட்ட மஹாவுக்கு ஆமென்று பதில் கொடுத்தான் ஸ்ரீராம்.

உடனே ஷ்யாமுக்கு அழைத்தாள்.

அவளது இருண்டு போன முகத்தை பார்த்தவர்கள் என்னவாயிற்று என்று புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க, பிருந்தா கையை சுரண்டி என்னவென்று கேட்டாள். ‘சொல்றேன்’ என்று கண்ணசைத்தவள், ஷ்யாம் போனை எடுப்பதற்காக காத்திருந்தாள்.

“சொல்லுடி பொண்டாட்டி…” என்று உற்சாகக் குரலில் அழைப்பை ஏற்றவனை என்ன கேட்பது? குழம்பியது மஹாவுக்கு… சௌஜன்யாவுடன் நீ இருக்கிறாயா என்று கேட்பதா? ச்சே… அவளுக்கே அசிங்கமாக இருந்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல் குரலை சாதாரணமாக வைத்துக் கொண்டு,

“ஷ்யாம்…கொஞ்சம் அர்ஜன்ட்… எங்க இருக்க?” என்று கேட்க,

“ஹாஸ்பிடல்ல இருக்கேன் மஹா…” என்றானே பார்க்கலாம்.

அவளது காலுக்கு கீழே பூமி பிளந்து விடும் போல இருந்தது. அதிர்ச்சியில் நெஞ்சில் சுருக்கென்றது. எதற்காக மறைக்கிறான்?

“எந்த ஹாஸ்பிடல்?” புரியாமல் கேட்டாள் மஹா.

“எத்தனை ஹாஸ்பிடல்டி இருக்கு? சுஷ்ருதா தான். காலைலருந்து மன்த்லி ஆடிட்டிங் நடந்துட்டு இருக்கு மஹா” என்று கூற, அவளது கைகள் நடுங்கியது.

“ஓ… சரி… இட்ஸ் ஓகே…” என்று மஹா சட்டென முடிக்கப் பார்க்க,

“என்ன மஹா? என்ன விஷயம்?” என்று சாதாரணமாக கேட்க,

“ஒண்ணுமில்ல. கொஞ்சம் வேலை. நீ இருந்தா நல்லா இருக்கும்ன்னு தோனுச்சு…” என்று கூறினாள், ஒரு சிறு நம்பிக்கையோடு.

“இல்லடி… காலைலருந்து வேலை நெட்டி முறிக்குது. பிருந்தாவை கூட்டிட்டு போயேன். ஈவினிங் பார்க்கலாம்…” என்று முடிக்க,

“ஓகே…” என்று வைத்து விட்டாள்.

கண்கள் கலங்கும் போல இருந்தது. அருகிலிருந்த நண்பர்களின் முன் உடைந்து விடக் கூடாதே! கண்ணை சிமிட்டி சிரமப்பட்டு தன்னை கட்டுப் படுத்திக் கொண்டவள், ஸ்ரீராமை அழைத்தாள்.

“ஸ்ரீ… எங்கடா இருக்க?”

“அங்கேயே தான் இருக்கேன் மஹா…” அவனது குரலிலும் சற்றான கசப்பு.

“அங்கேயே இருடா… இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்…” என்று கூறியவள், அனைவரிடமும் சொல்லி விட்டு காரில் பறந்தாள் பார்க் ஹயாட் நோக்கி.

சொன்னபடி பத்து நிமிடங்களில் வந்த மகாவோடு ஷ்யாம் இருந்த ஃப்ளோருக்கு போனான் ஸ்ரீராம்.

இருவருமாக அறைக்கு வெளியே காத்திருக்க, தன்னையே வெறுத்து, அருவருத்து போனாள் மஹா.

யாருக்கும் இந்த மாதிரி ஒரு நிலை வந்துவிடக் கூடாது கடவுளே என்று வேண்டியபடி!

அவ்வப்போது அவளது தோளை தட்டிக் கொடுத்த ஸ்ரீராம்,

“ஸ்டே காம் மஹா. ஸ்டே ஸ்ட்ராங். நாங்க எல்லாரும் இருக்கோம்டா. டோன்ட் ஒர்ரி…” அவளுக்கு தைரியம் சொல்லிக் கொண்டாலும், அவனுக்கே உள்ளுக்குள் அவ்வளவு கோபமாக இருந்தது. இவ்வளவு நேரம் அறைக்குள் இருவர் மட்டும். என்ன உலக சமாதானம் பற்றிய பேச்சுவார்த்தையா நடக்கிறது?

இருபது நிமிடங்கள் கழித்து அந்த சொர்க்க வாசல் திறந்தது.

வெளியே வந்த ஷ்யாம், கைகளை கட்டிக் கொண்டு, கண்களில் நீர் சூழ, கலக்கத்தோடு நின்று கொண்டிருந்த மஹாவை பார்த்து அதிர்ந்து நின்றான். மஹா இங்கு வருவாள் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அவள் எதுவும் பேசாமல், அவனுக்கு பின்னால் நின்றிருந்த சௌஜன்யாவை பார்க்க, அவள் அலட்டிக் கொள்ளாமல் நின்றிருந்தாள்.

அவனது கண்களையே ஆழ்ந்து பார்த்தாள். அதில் அவளால் பொய்மையை கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஒருவேளை அவ்வளவு சிறப்பான நடிகனாகி விட்டானா அவளது கணவன்? தன்னிடம் கிடைக்காததை கிடைக்குமிடம் நோக்கி போக துவங்கி விட்டானா? அவனது தேவை, அவளா இல்லையென்றால் அதுவா?

மனதுக்குள் போராடிய போராட்டத்தை கண்ணீர் வெளிப்படுத்த பார்க்க, இமைகளை கொட்டி கண்ணீரை அடக்கினாள்.

அழ மாட்டேன். அழக் கூடாது. யாருக்காக அழுவது?

அவனை ஆழ்ந்து பார்த்தவள்,

“வெளக்கும் புடிக்க வெச்சுட்ட… இப்ப திருப்தியா?” குரலில் கனம் கூடிக் கூறியவள், “மஹா…” என்று அழைத்த ஷ்யாமை திரும்பியும் பார்க்காமல் விடுவிடுவென்று கிளம்பியிருந்தாள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!