SSKN — epi 11

அத்தியாயம் 11

 

எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி

ஆடிக் கொண்டே இருக்கிறாய்

எனக்குள் புகுந்து எங்கோ நீயும்

ஓடிக் கொண்டே இருக்கிறாய்

 

“ஹேரி, ஒழுங்கா உட்கார்ந்து சாப்பிடுடா”

மீராம்மா உணவை ஊட்ட நாற்காலியில் உட்காராமல், நடப்பதும், ஓடுவதும் பின் மீண்டும் வந்து உட்காருவதுமாக போக்குக் காட்டிக் கொண்டிருந்தான் ஹேரி.

“இந்தியன் சூப் வேணாம் கேம்மா. ஸ்பைசி”

“இந்த ரசம் டைஜெஷனுக்கு நல்லதுடா. என் செல்லம்ல. சாப்புடுவியாம், கேம்மா பாட்டுப் பாடுவேனாம்”

“இன்னும் ரெண்டு ஆ தான் வாங்குவேன். அதுக்கு மேல வேணாம்.” என வேண்டுமென்றே வாயைக் குட்டியாகத் திறந்தான்.

அந்த குட்டி வாய்க்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சோற்றைத் திணித்தார் மீரா.

மென்றுக் கொண்டே,

“பாடுங்க!” என்றான் குட்டி.

தொண்டைய கணைத்துக் கொண்டவர்,

“திமிரு புடிச்சவன்

இவன் திமிருக்கே புடிச்சவன்

காயங்கள் பொறுப்பவன்

கோபத்தில் வெடிப்பவன்

டிகிடிங்டிங் டிகிடிங்டிங்” என தன் தலைவரின் புது பாடலை எடுத்து விட்டார் அவர்.

“தலைவருக்கு மட்டும் திமிர் இல்ல, அவரு ரசிகைக்கும் திமிர் டன் டன்னா இருக்கு.”

சொல்லியவாறே நாற்காலியில் வந்து அமர்ந்தார் வெங்கி. டேட்டிங் முடிந்து ஒரு வாரம் ஓடி விட்டது. மீரா இன்னும் இவரிடம் ஒற்றை வார்த்தைக் கூட பேசவில்லை என்கிற கடுப்பில் இருந்தார் அவர்.

“கேப்பா, வேலை பினிஸ்சா?” பகலிலே வீட்டுக்கு வந்திருக்கும் வெங்கியைப் பார்த்து குதூகலித்தான் ஹேரி.

“கேப்பாக்கு சரியான தலைவலிடா! வேலைப் பார்க்க முடியல. அதான் வந்துட்டேன். நீ ஒழுங்கா உட்கார்ந்து சாப்பிடு”

“ஹேரி, கேப்பாக்கு காபி வேணுமா கேளு!”

சின்னவனைத் தூது விட்டார் மீரா.

“சாப்பாடே சாப்படறேன்” என நேராக மீராவைப் பார்த்தே பேசினார் வெங்கி.

மீரா இன்னும் ஹேரிக்கு சாப்பாடு கொடுத்து முடிக்காததால் தானாகவே தட்டை எடுத்துக் கொண்டு சாப்பாட்டைப் பரிமாறிக் கொண்டார்.

ரசத்தை தட்டில் ஊற்றும் போது,

“கொள்ளு ரசம், எள்ளு ரசம் எல்லாம் வைக்கத் தெரியுது. சமரசம் மட்டும் வைக்கத் தெரியல” சத்தமாகவே முனகினார்.

“கேம்மா, டுமோரோ சமரசம் வச்சு கேப்பாக்கு குடுங்க”

சிரிப்பு வந்துவிட்டது வெங்கிக்கு. ஹேரியின் வாயில் சோற்றைத் திணித்த மீரா, வெங்கியை ஒரு முறை முறைத்தார்.

“தானத்திலே சிறந்த தானம் என்ன தெரியுமா மீரா? சமாதானம். சீக்கிரமா சமாதானம் ஆகிடேன் ப்ளீஸ்! உனக்கு கோடி புண்ணியமா போகும். மனுஷனால ஒழுங்கா வேலைப் பார்க்க முடியல. இப்போ கூட மார்ஸ் பத்தி பாடம் எடுக்கறேன், அந்த சிகப்பு வட்ட பிளேனட் உன் கோபமான வட்ட முகத்தத்தான் ஞாபகப் படுத்துது. கிளாஸ்ச கேன்சல் பண்ணிட்டு வந்துட்டேன்.”

ஹேரி நாற்காலியில் இருந்து இறங்கி ஓடிய நொடி தன் மனதைத் திறந்தார் வெங்கி. பதில் ஏதும் சொல்லாமல் கையைக் கழுவ போனார் மீரா.

திரும்பி வரும் போது ஒரு கிளாஸ் தண்ணீரும், தலை வலி மாத்திரையும் கையில் இருந்தது. அவர் அருகே மேசை மேல் வைத்தவர் நகரப் போனார். வலது கை சாதத்தில் இருக்க, இடது கை நீட்டி, மீராவின் கரத்தைப் பற்றி நிறுத்தினார் வெங்கி.

“இந்த அக்கறை எனக்குத் தேவையில்ல மீரா. போதும் போதும்கற அளவுக்கு அக்கறை வச்சு கடமையா செய்யப்படற செயல்கள என் வாழ்க்கையில ரொம்பவே அனுபவிச்சுட்டேன். எனக்கு யார் அக்கறையும் வேணாம். காதல்தான் வேணும். அதைக் குடுக்க முடிஞ்சா குடு. இல்லைனா விடு.”

மீரா கையை உறுவிக் கொள்ள, மாத்திரையை ஆத்திரமாகத் தள்ளிவிட்டவர் பாதி சாப்பாட்டில் எழுந்தார்.

“சாப்பிட்டுப் போங்க சார்”

“இப்போத்தான் சொன்னேன் உன் அக்கறை எனக்குத் தேவையில்லன்னு” என கோபமாக கத்தினார்.

ஹேரி அந்த சத்தத்துக்கு ஓடி வந்தான். அவன் பயந்த முகம் பார்த்து தன் கோபத்தைக் கட்டுப் படுத்தியவர்,

“நத்திங் ஹேரி. நாங்க பேசிட்டுத்தான் இருந்தோம். நீ போய் விளையாடு” என கஸ்டப்பட்டு சிரித்தார். மீராவும் புன்னகைக்கவும், சமாதானமாகி மீண்டும் விளையாட ஹாலுக்குப் போய் விட்டான் அவன்.

“மன்னிச்சிரு மீரா. என்னமோ கடுப்புல கத்திட்டேன். சாரி”

கையைக் கழுவியவர், நெற்றியைத் தேய்த்துக் கொண்டார்.

வெங்கியின் கோப முகத்தைப் பார்த்திருக்கிறார், சந்தோஷமான முகத்தை, அசட்டுக்களை வடியும் முகம் என எல்லா பரிணாமத்தையும் பார்த்திருந்த மீராவுக்கு அவரின் ஓய்ந்துப் போன தோற்றம் மட்டும் மனதை பிசைந்தது. ஆறுதலாக பேசத் தோன்றினாலும், ஏதோ ஒன்று அவரைத் தடுத்து நிறுத்தியது.

“நான் கொஞ்ச நேரம் படுக்கறேன் மீரா” என நகரப் போனவரை,

“அக்கா, ஹ்ம்ம் கவியோட அம்மா உங்கள லவ் பண்ணது இல்லையா?” என்ற கேள்வி அப்படியே நிறுத்தியது.

அப்பொழுதுதான் தான் ஆத்திரத்தில் வாய் தவறிப் பேசியதை உணர்ந்தவர் பெருமூச்சொன்றை வெளியிட்டார்.

“கவி அம்மா, என்னோட கீதா ரொம்ப நல்லவ மீரா, ஒரு நல்லா அம்மா, நல்ல மனைவி.  இத மட்டும்தான் என்னால சொல்ல முடியும். தன் பொண்டாட்டிய பத்தி தப்பு தப்பா அதையும் இதையும் சொல்லி இன்னொரு பொண்ணு மனசுல சிம்பத்தி வர வச்சு மடக்கறான் பாத்தியா, அவன விட கேவலமான ஒரு பிறவி இந்த உலகத்துலயே இருக்க முடியாது. அத எந்தக் காரணத்த கொண்டும் நான் செய்ய மாட்டேன். தெய்வமா ஆகிட்ட அவளப் பத்தி இனி நாம பேச வேணாம்னு நினைக்கறேன். நீ என்னைக் கல்யாணம் செஞ்சிக்கிட்டன்னா என் பழைய வாழ்க்கையோட மிச்சமா கவி மட்டும் தான் நமக்கிடையில இருப்பா. வேற எதையும் நினைச்சு நீ கவலைப் பட வேணாம் மீரா.”

கண்கள் மட்டும் எப்பொழுது சரி சொல்வாய் என ஆவலாக மீராவின் முகம் பார்த்தது. வெங்கியின் பார்வையில் தடுமாறினார் மீரா.

‘இது என்ன கண்ணால பார்த்தே காதல் காவியம் படைக்கிறாரு! முதல் மனைவிப் பத்தி பேச வேணாம்னு சொல்லுறாரு, ஆனா அவங்க நல்ல மனைவின்னும் சொல்லுறாரு. யார் கிட்டயும் காதல் கிடைக்காத மாதிரி விரக்தியா பேசறாரு. இப்ப என்னை லவ்வோ லவ்வுன்னு லவ் பார்வை பார்க்கறாரு. ஐயோ மண்டை வெடிக்குது எனக்கு. ஒரே மக்கயாலாவா இருக்கு!’

ஒன்றும் பேசாமல் மீரா தலையைக் குனிந்துக் கொள்ளவும், வெங்கிக்கு மீண்டும் கோபம் உச்சாணிக் கொம்பில் ஏறிக் கொண்டது.

வேகமாக அவர் அருகில் வந்தவர்,

“நானும் எவ்வளவுதான்டி பொறுத்துப் போறது? அன்னைக்கு அவசரப்பட்டு முத்தம் கொடுத்துட்டேன் தான். இன்னும் கூட அது எனக்கு ரொம்ப கில்ட்டியா இருக்கு! ஏன்டா அவசரப்பட்டுக் குடுத்தோம், இன்னும் கொஞ்சம் நிதானமா பொறுமையா அனுபவிச்சுக் குடுத்துருக்கலாம்னு நான் என்னையே திட்டாத நாள் இல்ல.” என்றவரை பேவேனப் பார்த்தார் மீரா.

மீராவின் ரியாக்‌ஷனில் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது வெங்கிக்கு. வாய் விட்டு சிரித்தவர், மீராவை இழுத்து அணைத்துக் கொண்டார்.

“மீரா மை மீரா! இத்தனை வயசுக்கும் மேல, என்னைப் போட்டு இப்படி இம்சைப் பண்ணுறியேடி! எனக்கே என்னை நினைச்சா வெக்கம் வெக்கமா வருது. என்னைக் கல்யாணம் பண்ணிக்கோடி ப்ளிஸ்” அணைப்பு இறுகிக் கொண்டே போனது. உடல் விறைத்தாலும் திமிறாமல், திருப்பி அணைக்காமல் அப்படியே நின்றார் மீரா. அதற்குள் கிச்சனுக்கு வந்த ஹேரி,

“நானும் நானும்! எனக்கும் பிக் ஹக் வேணும்” என இருவரின் காலையும் கட்டிக் கொண்டான். கீழே குனிந்து அவனைத் தூக்கிக் கொண்ட வெங்கி, மீராவைப் பார்த்து ஆசையாக புன்னகைத்தார்.

“தலை வலி போச்சா சார்?”

“போயே போச்சு மீராக்குட்டி”

சட்டென அவர் அணைப்பில் இருந்து விலகிக் கொண்ட மீரா,

“தலை வலி போகனும்னு தான் கட்டிப்பிடி வைத்தியத்துக்கு சும்மா நின்னேன். இனிமே இப்படி கட்டிப் பிடிக்காதீங்க!” என சொல்லிவிட்டு ஹாலுக்குப் போய் விட்டார்.

“அப்போ தலைவலி வந்தா மட்டும் தான் உன்னை கட்டிப்பிடிக்கனுமா? ரைட்டு, இனிமே அடிக்கடி எனக்கு தலைவலி வரும்டி” என சிரிப்புடன் குரல் கொடுத்தார் வெங்கி.

மேலே ரூமில் தனதறையில் போனில் பேசிக் கொண்டிருந்தான் மணி.

“என்னால முடியலடி நிலா!”

“முடியலைனா பாத்ரூம் போக வேண்டியது தானேடா! மனுஷன் தூங்கற நேரத்துக்குப் போன போட்டு என் உசுர ஏன்டா குறைக்கற பாசி மணி?” கொட்டாவி விட்டப்படியே பேசினாள் மணியின் இரண்டாவது அக்கா நிலா.

“நீயெல்லாம் ஒரு அக்காவா? தம்பி இருக்கற ஸ்ட்ரேஸ் தெரியாம கொட்டாவி கொட்டாவியா விடற!”

“உன்னோட ஸ்ட்ரேஸ் என் கொட்டாவிக்கு எங்கடா புரியுது! அதுவா வருது, அதுவா போகுது” தத்துவம் பேசினாள் அவள்.

“உனக்குப் போன போட்டேன் பாரு. என் புத்திய…”

“இருடா மணி. நானே லேட்டாத்தான்டா படுத்தேன். நான் மட்டும் முழிச்சிருக்க உங்க மாமா மட்டும் சொகுசா தூங்குறாரு. லைன்லே இரு அடிச்சு எழுப்பிட்டு ஸ்பீக்கர்ல போடறேன்”

“என்ன ஒரு நல்லெண்ணம்டா சாமி!” என சிரித்தான் மணி.

“சிவுடு, ஏந்திரி சிவுடு ஏந்திரி” என சத்தம் கேட்டது.

“ஏன்டி வைசி இந்த மாதிரி டார்ச்சர் பண்ணுற? இப்பத்தானடி படுக்க விட்ட, அதுக்குள்ள மறுபடியும் எழுப்பற! இது கடவுளுக்கே அடுக்காது சொல்லிட்டேன்” என தூக்கக் கலக்கத்தில் சிவா முனகும் சத்தமும் கேட்டது.

“மானத்த வாங்காத, கொன்னுருவேன் ராஸ்கல்! உன் மச்சான் லைன்ல இருக்கான், பேசனுமாம்”

“சொல்லுடா மாப்பிள்ளை? நிலவரம் எல்லாம் எப்படி இருக்கு?” என லைனில் வந்தான் சிவா.

இவன் பேசுவதற்குள்,

“அந்த பல்செட்டு என் தம்பிய டார்ச்சர் பண்ணுறாளாம். பாவம் பையன் நொந்துப் போயிருக்கான்” என நிலா பதில் அளித்தாள்.

“ஓஹோ, நீ என்னை பண்ணாத டார்ச்சரா அவ உன் தம்பிக்குப் பண்ணிருக்கப் போறா? உங்க குடும்பத்துக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?” என கேட்டான் சிவா.

மணி பேச வாயெடுப்பதற்குள்,

“நாங்க என்ன உங்கள டார்ச்சர் பண்ணிட்டமாம்? சொல்லித்தான் பாரேன்! பாவம்னு வாழ்க்கைக் குடுத்தா ஓவர் சவுண்டு” என நிலா கோபக் குரல் எழுப்பினாள்.

“இந்த பொம்பளைங்களே இப்படித்தான் மாப்பு. நாம வலைல விழற வரைக்கும் அடக்கி வாசிப்பாங்க. எப்ப நாம தொபுக்கடீர்னு விழறமோ, அப்படியே அமுக்கி அடிமையாக்கிருவாங்க. பாத்து மாப்பூ, சூதனமா பொழச்சுக்கோ”

“இப்ப நீ அப்படித்தான் அடிமையா கிடக்கறியா? உன் வாய் கொழுப்பு மட்டும் அடங்காதுடா சிவுடு” என கடபுடவென சத்தம் கேட்டது.

‘மாமாவுக்கு சேதாரம் ரொம்ப இருக்கும் போல இருக்கே!’ என சிரித்தப்படியே போன் காலை கட் பண்ணினான் மணி. அவன் எதிர்ப்பார்த்தப்படியே பதினைந்து நிமிடங்கள் கழித்து நிலாவே போன் செய்தாள்.

“ஏன்டா, போனை கட் பண்ண?”

“சண்டைப் போட்டு சமாதானம் ஆகிட்டீங்களா? இனிமே என் பிரச்சனையைப் பத்தி பேசலாமா?” என கேட்டான்.

“சொல்லு மணி, கேக்கறோம்” என கோரசாக பதில் வந்தது அங்கிருந்து.

“இந்த கவி திரும்பவும் காணாம போயிட்டா! போன் போட்டா கிடைக்கல, வீட்டுக்கும் வரல. அவங்க அப்பா கிட்ட, வேலை விஷயமா போறேன்னு மட்டும் சொல்லிட்டுப் போயிருக்கா. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல மாமா. ஒரு சமயம் ரொம்ப நெருங்கிட்ட மாதிரி இருக்கு, பல சமயம் எங்கயோ ஒட்டாம இருக்கற மாதிரி இருக்கு இந்த உறவு. எனக்கு அவ வேணும் நிலா. பக்கத்துலயே வேணும். அதுக்கு வழி சொல்லுங்க ரெண்டு பேரும்” அவன் குரலில் இருந்த ஆதங்கத்தைக் கேட்ட இருவருக்கும் சற்று நேரம் பேச்சு வரவில்லை. நிலாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“அவ என்ன பெரிய இவளாடா? என் தம்பிய இப்படி அலைய விடறா! எனக்கு வர கோபத்துக்கு பல்செட்டுப் போட்டு நேரா ஆகியிருக்கற வாயிலயே ஒரு குத்து விட்டு பல்லெல்லாம் தெறிக்க விட்டுருவேன். என்ன நினைச்சுகிட்டு இருக்கா மனசுல! என் தம்பிக்கு என்ன குறை? இவ்வளவு அழகா, அறிவா, மேன்லியா ஒருத்தன் தொங்கிகிட்டு வந்தா அவளுக்குக் கசக்குதாமா?”

அந்த பக்கம் முழு அமைதி. கவியை ஏசவும் கோபத்தை மௌனமாக காட்டுகிறான் என இருவருக்கும் புரிந்தது. நிலமையை சரி செய்ய சிவா,

“விடு மச்சான். பொறுத்ததே பொறுத்துட்ட இன்னும் ஒரு பத்து பதினைஞ்சு வருஷம் வெய்ட பண்ணா என் மக பெரிய பொண்ணா ஆகிருவா. உனக்கே கட்டி வைச்சிருறேன். எப்புடி?” என சிரித்தான்.

அந்த பக்கம் மணிக்கும் சிரிப்பு வந்தது. அவன் சிரிக்கவும் நிலா மெல்ல பேச்சுக் கொடுத்தாள்.

“சாரிடா மணி! உன்னை வேணாம் வேணாம்னு சொல்லவும் எனக்கு கோபம் வந்துருச்சு”

“விடு நிலாக்கா! அவ நிலைமை உனக்குப் புரியல. நெஞ்சு முழுக்க என் மேல ஆசை வச்சிருக்கா. தன்னை அறியாம அதை என் கிட்ட காட்டவும் செய்யற. ஆனா நான் சீரியசா இந்த ரிலேசன்ஷிப்ப கொண்டு போக நினைச்சா பின் வாங்கறா! என்னால அவள புரிஞ்சுக்க முடியுது. ஆனா எப்படி என் வழிக்கு கொண்டு வரதுன்னு தான் தெரியல”

“அவளப் புரியுதுன்னு சொல்லுறியே, ஏன் கல்யாணத்துக்கு மறுக்கறான்னு க்ளூ எதாவது இருக்கா மச்சான்?” என கேட்டான் சிவா.

“மாமா, அவ கிட்ட பல குறைகள் இருக்கறதா அவ நம்புறா. அவ தோற்றத்துல அவளுக்கு ஒரு காம்ப்ளேக்ஸ். நான் தோற்றத்துல அவள விட நல்லா இருக்கேன்னு நினைச்சு ஒரு தயக்கம். அவளால நல்ல வைப்பா நடந்துக்க முடியாதுன்னு ஒரு பயம்”

“பொண்ணுன்னா பொண்டாட்டியா ஆவறதும், அப்புறம் போண்டாவா ஆகறதும், அதான்டா வயித்த தள்ளிக்கிட்டு அம்மாவா ஆகறதும் இயற்கையா நடக்கறது தானேடா! இதுல என்ன வைப் மேட்டிரியல் இல்லைன்னு சில்லியா ஒரு எண்ணம்?” என கேட்டாள் நிலா.

“அவளால எந்த ஒரு விஷயத்தையும் கான்சண்ட்ரேட் பண்ணி ரொம்ப நேரம் செய்ய முடியாது. அவ மூளையோட இயக்கம் அப்படி. அவங்க அம்மா இருந்த வரைக்கும் அவள கண்ணுல வச்சிப் பார்த்துகிட்டாங்க. அதுக்கப்புறம் அவ அப்பா. போன வருஷத்துல இவருக்கு வைரல் பீவர் வந்து ரொம்ப முடியாம இருந்தாராம். அப்போ கஞ்சி வச்சித் தரேன்னு அடுப்படிக்குப் போனவ, ஃபயர் இஞ்சின் வர அளவுக்கு கஞ்சி வச்சாளாம்.”

“என்னடா சொல்லுற?”

“ஆமாக்கா! அடுப்புல கஞ்சிய வச்சிட்டு வேகட்டும்னு இவ ரூமுக்குப் போயிருக்கா. அங்க போய் என்னமோ கணக்குப் போட உட்கார்ந்தவ, அதுலயே அப்படியே மூழ்கிட்டாளாம். சட்டி தீஞ்சி போய் புகை வந்து ஃபயர் அலார்ம் ட்ரீகர் பண்ணி ஒரே களேபரமா போச்சாம். இது மாதிரி பல சாம்பிள் இருக்கு. அதனால தான் அவ அப்பா வேலைக்கே ஆள் பாத்தாரு. அவ மைண்ட்ல எப்பவும் எதாச்சும் ஓடிட்டே இருக்கும்கா. இப்ப நீ டான்ஸ் ஆடறப்போ, பிள்ளைய பத்தி நினைச்சுக்கவ, டெலிபோன் பில் கட்டியாச்சான்னு நினைச்சுக்குவ, மாமா ஒழுங்கா சாப்பிட்டாறா இல்லைன்னு நினைச்சுக்குவ. இப்படி ஒரு பத்து விஷயங்கள் மண்டைக்குள்ள ஓடும். ஆனா அவளுக்கு நூறு விஷயங்கள் ஓடும். அவ ரொம்ப பாவம்கா. சில சமயம் ரூம விட்டே வரமாட்டா! தூங்கக் கூட ரொம்ப கஸ்டப்படுவா. இப்ப நாம ஒரு கார்ட்டூன் பார்த்துட்டு தூங்கினா, அதுல வர கேரேக்டர் மட்டும் தான் மனசுல நிக்கும். ஆனா இவளுக்கு ஒவ்வொரு கேரக்டரும், அதோட மேனரிஷம், சவுண்ட், பேக்ரவுண்ட எல்லாம் மண்டையில ஓடும். மூளை ஒவ்வொன்னா அலசி ஆராயும். அப்புறம் எப்படி தூக்கம் வரும் சொல்லு? அங்கிள் இன்னும் நெறைய சொன்னாரு. கேக்கற உனக்குத்தான் மண்டை வலி வரும். இவ்ளோவுக்கும் எப்படியோ மக்கா மனுஷன அனுசரிச்சுப் படிச்சு வந்துட்டா.”

“மணி டேய், இப்டிப்பட்ட காம்ப்ளேக்‌ஷ்சான பெட்ரோமேக்ஸ் லைட்டே தான் உனக்கு வேணுமாடா? ஒரு சிட்டி ரோபோ கூட எப்படிடா குடும்பம் நடத்துவ?”

“தோ, உனக்கு வர சந்தேகம் தான் அவளுக்கும் வந்துருக்கு. அதான் என் மேல அவ்வளவு ஆசை இருந்தும் தள்ளி ஓடுறா. எங்கள பத்தி உனக்குத்தான் நல்லா தெரியும் நிலாக்கா. உனக்குத்தானே போன் பண்ணி பேசுவா. அவளுக்கு நான் அப்போ இருந்தே ஸ்பெஷல் நிலாக்கா. எனக்கும் அப்படிதான், என்னோட முதல் காதல், முடிவான காதல் அவ மேல மட்டும்தான். அவ மூளை பண்ணுற சித்து விளையாட்டுக்கெல்லாம் பயந்து அவள அப்படியே விட்டுற சொல்லுறியா? எங்கள பிரிக்க நீ போட்ட ஷாலினி பிட்டையே நம்பாம, என்னைத்தான் இத்தனை நாளா நினைச்சுட்டு இருக்கா அவ”

“சொல்லிட்டாளா அந்த பல்செட்டு?”

“சொன்னா, சொன்னா! அதுக்கு உனக்கு ஸ்பெஷல் கவனிப்பு இருக்கு. டோண்ட் வோரி!” என மிரட்டினான் மணி.

“விட்ரா, விட்ரா! அதெல்லாம் நம்ம வாழ்க்கையில சகஜம்டா பாசி”

“எனக்கு அவ வேணும் நிலா, மாமா. அவ கிட்ட இருக்கற மைனஸ் எல்லாம் என் கிட்ட ப்ளஸ்சா இருக்கு. என் கிட்ட இருக்கற மைனஸ் எல்லாம் அவ கிட்ட ப்ளஸ்சா இருக்கு. நாங்க ஒன்னு சேரறது தான் கரெக்டு. அவளுக்கு வீட்டப் பார்த்து பிள்ளைங்கள பாத்துக்க முடியாதுன்னா, நான் பாத்துட்டுப் போறேன். அதுல நான் எக்ஸ்பேர்ட் ஆச்சே! நான் ஹவூஸ்ஹஸ்பண்டா இருக்கனும்னா பிள்ளை வேணும். பிள்ளை வேணும்னா கல்யாணம் வேணும். அதுக்கு ஐடியா குடுங்க” என ஆரம்பித்த இடத்திலேயே வந்து நின்றான் மணி.

“மச்சான் அகில உலக பெண்கள் ஃபார்முலா ஒன்னு என் கிட்ட இருக்கு, வேணுமா? எந்த பொண்ணையும் வசப்படுத்துற ஃபார்முலா இது.”

“சொல்லுங்க மாமா. மீ வேய்ட்டிங்”

“இந்த பொண்ணுங்க இருக்காங்களே, அவங்க நாம கெஞ்சிகிட்டுப் போனா மிஞ்சிகிட்டுப் போவாங்க. அதே நாம மிஞ்கிட்டுப் போனா கொஞ்சிகிட்டு வருவாங்க. பேசாம நீ மிஞ்சி பாரேன். என்ன நடக்குதுன்னு பார்க்கலாம். கேக் உப்பனும்னா பேக்கிங் சோடா போடனும். காதலி சிக்கனும்னா பேசாம இருக்கனும்”

“எப்போ பாரு கேக்கு, பேக்குன்னு கிட்டு. நீ இன்னும் அப்படியேதான் இருக்கே சிவுடு”

“இந்த கேக்கு சுடற பேக்கு வேணும்னுதான்டி தவமா தவமிருந்த!” மீண்டும் கடபுடா சத்தம்.

“ஐயோ! ரெண்டு பேரும் அடிச்சிக்காம என் மேட்டருக்கு வாங்க”

“மேட்டருலாம் உங்கக்காவுக்குத்தான் நல்லா தெரியும்டா மச்சான். அவ கிட்டயே கேளு” மீண்டுன் போன் கட்டானது.

தலையில் அடித்துக் கொண்டான் மணி.

பத்து நிமிடத்தில் போன் வந்தது.

“ஏன்டா போனை வச்ச?” என கேட்டாள் நிலா.

“கொன்னுருவேன்டி. இனிமே கவி என்னை கலட்டி விட்டாக் கூட ஐடியா வேணும்னு உனக்குப் போன் போட மாட்டேன்”

“கோச்சிக்காதடா! மாமாவ தொரத்தி விட்டுட்டேன். இனிமே ஒழுங்கா பேசறேன். ஜொள்ளு, ஐ மீன் சொல்லு”

“எவ்வளவு நாள் இப்படி மிஞ்சனும்?

“”ஒரு வாரம் எடுத்துக்கோ” என்றாள் நிலா.

“அதெல்லாம் முடியாது. ஒரு மூனு நாள் ஓகே. அதுக்கு மேல என்னால முடியாது”

“அடச்சை! ரொம்ப கேவலமா இருக்குடா, என் தம்பின்னு வெளிய சொல்லிறாதே!”

சிரித்தப்படியே பாய் சொல்லி போனை வைத்தான் மணி. இரண்டு நாள் கழித்து, கவியே இவனுக்கு போன் செய்தாள். இவன் எடுக்கவில்லை. மேசேஜ் போட்டாள், ப்ளூ டிக் தெரிய வேண்டும் என படித்தவன் ரிப்ளை போடவில்லை. விடாமல் மேசேஜூம் போனும் வந்தவாறு இருந்தன இவன் கண்டு கொள்ளவில்லை.

அடுத்த நாள், பாத்ரூம் கதவைத் திறந்துக் கொண்டு இவன் முன் பத்ரகாளியாய் நின்றாள் கவி.

“என்னடா பெரிய இவன் ஆயிட்டியா? போன் எடுக்கல, ரிப்ளை போடல! கேம் விளையாடி பார்க்கறியா என் கிட்ட?”

அமைதியாகவே கைக்கட்டியபடி நின்றான் மணி. முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை.

“ஒழுங்கா பேசு மணீ! நான் செம்ம கோபத்துல இருக்கேன்”

அப்பொழுதும் அதே பார்வை, அதே மௌனம்.

“பேசுடா!”

அவன் அருகே சென்று அவனை உலுக்கினாள்.

“பேசுன்னு சொல்லுறேன்ல, பேசு ப்ளிஸ்” கண்ணில் நீர் வழிய அவன் முகமெங்கும் முத்தமிட்டாள் கவி.

“பேசு மணி” இன்னும் இன்னும் கொடுத்தாள்.

“பேச மாட்ட?” அழுத்தமாக அவன் உதட்டை முற்றுகையிட்டாள். அவன் வாயைத் திறக்காமல் இருக்க, கோபத்தையெல்லாம் அவன் உதட்டில் காட்டினாள். கடித்து வைத்தாள். எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு அமைதியாகவே இருந்தான் மணி.

“பேசு, பேசு, பேசு! மணி பேசு!”

கத்தி கத்தி அவன் மார்பிலே தொய்ந்தவள்,

“பேசு மணி” என கதறி அழுதாள்.

இரும்பென நின்றவன் அவளின் சூடான கண்ணீர் பட, உருகி கரைந்தான். நெஞ்சில் சாய்ந்திருந்தவளை தனக்குள் புதைத்துக் கொள்வதைப் போல இறுக்கிக் கொண்டான் மாசிலாமணி.

(கொட்டும்)