SSKN — epi 18

அத்தியாயம் 18

 

நெஞ்சம் இது ஒன்றுதான்

அங்கும் இங்கும் உள்ளது

உனக்கதை தருகிறேன்

உயிர் என சுமந்திடு!!!

 

மணி எப்பொழுது வெளியே போகிறான் எப்பொழுது ரூமுக்கு வருகிறான் என்பதே தெரியவில்லை கவிலயாவுக்கு. இரண்டு நாட்களாய் அவளிடம் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறான். அவர்கள் இருவரும் இன்னும் அதே ஹோட்டலில் தான் தங்கி இருக்கிறார்கள். பிரகாஷீன் அப்பா ரோவனுக்கு சொந்தமான அப்பார்ட்மெண்ட் லீஸ் முடிந்து கிடைக்க இன்னும் ஒரு வாரம் ஆகும். சாவி கைக்கு வந்ததும் அங்கே ஷிப்ட் ஆகி விடலாம் என முடிவெடுத்து அதை கவிக்கும் மேசேஜில் தெரிவித்திருந்தான் மணி. கவியின் கம்ப்யூட்டர் மற்றும் பொருட்களை எல்லாம் ஷிப்ட் செய்ய ஒரு நிறுவனத்திடம் அட்வான்ஸ் கொடுத்திருந்தான். இதை எல்லாம் வெங்கியிடம் தெரிவித்து அவர் ஆசீர்வாதத்துடனே தனிக்குடித்தனம் போக ரெடியானான் மணி.

தன்னிடம் நேரில் எதையும் பேசாமல் மேசேஜிலேயே வார்த்தை பரிமாற்றம் செய்து கொள்ளும் மணி மேல் கொலை வெறியில் இருந்தாள் கவி. எப்பொழுதும் தூக்கம் வராமல் விடிய விடிய கோட்டான் மாதிரி விழித்திருப்பவளுக்குத் தாலி கழுத்தில் ஏறியதில் இருந்து பெரிய பாரம் நீங்கியது போல தூக்கம் கண்களை சுழட்டி அடித்தது. மணியைக் காண கண் இமைகளை கஸ்டப்பட்டு பிரித்து வைத்திருந்தாலும், விடியும் முன்னே அவை தங்களுக்குள்ளே முத்தமிட்டு முக்தி கொண்டு விடுகின்றன. அன்றும் விழித்திருக்க முயன்று, முடியாமல் தூங்கி இருந்தாள்.

விடியற்காலை மூன்று மணிக்கு, தன்னிடம் இருந்த கீ கார்ட் கொண்டு கதவைத் திறந்து உள்ளே வந்தான் மணி. ரூமில் இருந்த மெல்லிய வெளிச்சம் கண்ணுக்குப் பழகும் வரை கதவின் அருகிலேயே நின்றிருந்தான். பின் மெல்ல அடி எடுத்து கவி படுத்திருந்த கட்டில் அருகே நெருங்கினான்.

தலையணையின் மேல் கால் போட்டு, குட்டி தேவதையாக தூங்கிக் கொண்டிருந்தாள் அவள்.

‘எப்படிடி உன்னால இப்படி நிம்மதியா தூங்க முடியுது? இங்க ஒருத்தன் உன்னையே நினைச்சு நொந்து நொறுங்கிப் போய் சுத்திக்கிட்டு இருக்கானேன்ற கவலை இருக்கா? ராட்சசிடி நீ! கொலைகார பாவி! என் மனச கொன்னுப் புதைச்ச பிசாசு. அழகான பிசாசு!’

மனம் பாட்டுக்கு அவளைத் திட்டித் தீர்த்தாலும் கண்கள் ஆசையாக தன் லயனஸ்சை வருடிக் கொடுத்தது. பெட் சைட் விளக்கின் மெல்லிய ஒளியில் தனது மனைவியை ரசித்துப் பார்த்தான் மணி. டீசர்ட் அணிந்து நைட் பேண்ட் போட்டிருந்தாள். வெள்ளை உறை போட்ட தலகாணியில் அவளின் முடி கலைந்துக் கிடந்தது கூட ரவிவர்மன் தீட்டிய ஓவியம் போல இவன் கண்ணுக்குத் தெரிந்தது.

‘யாருடி சொன்னா நீ அழகா இல்லைன்னு? என் கண்ணுக்கு நீ மட்டும்தான்டி அழகா தெரியற! மாசு மருவற்ற முகம்டி உனக்கு, பேபி ஸ்கின். எப்போ பார்த்தாலும் அப்படியே கடிச்சு வக்கனும்னு தோணும்டி உன் கன்னம்! மூக்கப் பாரு மூக்க! பட்டன் நோஸ்னு சொல்லுவாங்களே இங்கிலிசுல அந்த மாதிரி செம்ம க்யூட்! கண்ணு ரெண்டும் இருக்கே, ராவா போடாமலே போதை ஏத்தி விட்டுரும்டி! அவ்வளவு அழகுடி நீ! எனக்கே எனக்குன்னு பிரம்மன் செஞ்ச அழகு சிலை. ஐயோ உதட்டப் பத்தி சொல்ல மறந்துட்டனே! அது தான் உனக்கு ஹைலைட்டே! உதடல்ல உதடல்ல, காமபாணம் ஏந்திய மந்திர தகடு. தகடு! தகடு! மொத்தத்துல என்னை சுக்கு நூறா உடைச்சுப் போட பூமிக்கு வந்த அஸ்டேரோய்ட்டி (பூமியைத் தாக்க வரும் எறிகற்கள்) நீ! பச்சைத் துரோகி!’

கண்களை அழுந்த மூடித் திறந்தவன், மெல்லிய பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான். பாத்ரூம் போய், சத்தமில்லாமல் உடை மாற்றி வந்தவன், கட்டிலில் மெல்லப் படுத்தான். தூக்கம் மட்டும் வர மாட்டேனென சண்டித்தணம் செய்தது. கண்ணை மூடினாலே கல்யாணத்துக்கு முன் கிடைத்த கேப்பில் எல்லாம் உரசிக் கொண்டே தன்னை உசுப்பேற்றிக் கொண்டிருந்த கவிலயாவும், கல்யாண தினத்தன்று கதறி துடித்த கவிலயாவும் மாறி மாறி வந்து அவனை இம்சைப்படுத்தினார்கள்.

நித்திராதேவியோடு போராட முடியாமல் கட்டிலில் இருந்து எழுந்துக் கொண்டான். டீ சர்டைக் கழட்டிப் போட்டவன், தரையில் சரிந்துப் படுத்தான். மனத்தை அடக்க உடலுக்கு உழைப்பைக் கொடுத்தான் மணி.

மனதை ஒரு நிலைப்படுத்தி புஷ் அப் செய்ய ஆரம்பித்தான். இரு கைகளையும் ஊணி செய்தவன், பின் ஒரு கையை இடுப்பின் பின் வைத்து ஒற்றைக் கையால் செய்ய ஆரம்பித்தான்.

“ஏன் மணி, இப்படி அதி தீவிரமா எக்ஸ்சர்சைஸ் செய்யறவங்க எல்லாம், பலான மேட்டர்ல வீக்கா இருப்பாங்களாமே, உண்மையா?” என திடீரென கேட்டக் குரலில் தூக்கி வாரிப் போட பொத்தென தரையில் விழுந்தான் மணி. தாடையைத் தேய்த்துக் கொண்டே எழுந்து அமர்ந்தவன், அவளை முறைத்துப் பார்த்தான்.

அவளோ புன்னகை முகத்துடன் அவனைப் பார்த்திருந்தாள்.

“என் சந்தேகத்த தீர்த்து வை மணி!”

“எப்படி தீர்க்கணும்?”

“என்னடா கேள்வி இது? கோல்மால் பண்ணி தாலி கட்டனவன் கேட்கற கேள்வியா இது? அதான் லைசென்ஸ் மாட்டிட்ட இல்ல, அப்புறம் என்ன? எல்லா புருஷனும் எப்படி இந்த மாதிரி சந்தேகத்தைத் தீர்த்து வைப்பாங்களோ அப்படி தீர்த்து வை”

“எல்லா புருஷன் பொண்டாட்டி மாதிரியா நாம கல்யாணம் பண்ணிக்கிட்டோம்? கோல்மால் பண்ணி நான் தாலி கட்ட, கண்ணீர் விட்டு நீ கழுத்த நீட்ட, ஒரே குதூகலமால இருந்துச்சு நம்ம கல்யாணம்!”

“எப்படி நடந்தா என்ன? தாலி ஏறிருச்சுல்ல. அமெரிக்காவுல இருந்தாலும் நான் தமிழ் கல்ச்சர ஃபோலே பண்ணுற பொண்ணு மணி! கல்லானாலும் கணவன், ப்ளூட்டோவானாலும் புருஷன். யூ ஆர் ஆஃபிசியலி மை புருஷ் நவ்!”

அவள் சொன்ன புதுமொழியைக் கேட்டு மணிக்கு சிரிப்பு வரப் பார்த்தது. அடக்கிக் கொண்டான்.

“மணி!” உதட்டை சுழித்து ஆசையாக கூப்பிட்டாள் கவி.

‘ஐயோ! உசுப்பேத்தி கிட்னிய புடுங்க கூப்பிடறா! அசராதடா மணி! மயக்கத்துல ஏடாகூடாமா நீ ஏதாச்சும் செஞ்சு வச்சா, அப்புறம் காணாமப் போயிருவா! எப்போ உன்னை விட்டுப் போக மாட்டான்னு நம்பிக்கை வருதோ அது வரைக்கும் இவ கிட்ட இருந்து தள்ளித்தான் நிக்கனும்!’

“என்ன கவிலயா?” கோபமாக கேட்டான்.

“இன்னிக்கு நம்ம ஃபர்ஸ்ட் நைட்ட வச்சிக்கலாமா?” குயில் கொஞ்சியது.

“தேவையில்ல கவிலயா!”

“என்னடா நானும் போனா போகுதுன்னு பார்க்கறேன், சும்ம சும்மா கவிலயா கிவிலயான்னு நீட்டி முழக்கிக் கூப்புடற? கொன்னுருவேன்! எப்போதும் போல லயனஸ்னு ஆசையா கூப்பிடு. திருட்டுக் கல்யாணம் மட்டும் செய்வானாம், ஆனா பொண்டாட்டிய மட்டும் தொட மாட்டானாம்! ஓவரா சீன் போடறடா நீ!”

“நான் திருட்டுக் கல்யாணம் செய்யல”

“தெரியும், தெரியும்! உங்க ஜீஜூவோட வேலைதான்னு நிதானமா யோசிச்சுப் பார்த்தப்ப புரிஞ்சது. உனக்கு அந்த மாதிரி ப்ராடுதனமெல்லாம் வராதே! நேர்மை, எருமை, கருமைன்னு சுத்தற வேஸ்ட் பீசாச்சே நீ”

ஏற்கனவே கனன்று கொண்டிருந்த கோபம் தலைக்கேறியது மணிக்கு.

“நானும் மொதப்புடிச்சு பார்த்துட்டே இருக்கேன், தேவை இல்லாம என்னை சீண்டிப் பார்த்துட்டே இருக்கடி!”

ஒரே எட்டில் அவளை நெருங்கியவன், தன் ஒரு கையால் அவள் கை இரண்டையும் பின்னால் சுற்றிப் பிடித்து இன்னொரு கையால் உதட்டை வலிக்கக் கிள்ளினான்.

“வலிக்குதுடா மணீ”

“நல்லா வலிக்கட்டும்! இனிமே இப்படி வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவியா? பேசுவியா?”

அவள் கட்டிலில் உட்கார்ந்திருக்க, இவன் நின்றபடி இருந்தான். அவனை இன்னும் நெருங்கிய கவி, அவன் வயிற்றில் முகத்தை வைத்துத் தேய்த்தாள்.

“என்னடி பண்ணுற?”

“ஜிம் பாடின்னு பீத்திக்கிவியே, அதான் சிக்ஸ் பேக்லாம் கடினமா இருக்கா இல்லை சோப்டா இருக்கான்னு என் முகத்த வச்சி டெஸ்ட் பண்ணிட்டு இருக்கேன்”

“ஒரு மண்ணும் பண்ண வேணாம் நகரு!”

“என் கைய விடு, நகர்ந்துப் போறேன்”

பட்டென அவள் கைகள் இரண்டையும் விட்டான் மணி. அவன் கைகளை விடுவித்த நொடி வயிற்றொடு மணியை இறுக்கிக் கட்டிக் கொண்டாள் கவி. அவன் நகர முடியாதபடி உடும்புப் பிடியாக இருந்தது அது.

“ஐ லவ் யூ மணி! ஐ லவ் யூ சோ மச்!”

அமைதி மட்டுமே பதிலாக கிடைத்தது.

“திருப்பி சொல்ல மாட்டியா மணீ?”

பேரமைதி.

“ஐ லவ் யூ சொல்லு மணி!” குரல் கலங்கி இருந்தது.

அவனின் கைகள் மெல்ல உயர்ந்து கவியின் தலையை தடவிக் கொடுத்தன. ஆனால் பதில் ஏதும் சொல்லவில்லை மணி.

“பதில் சொல்லுடா மாசிலாமணீ! ஐ லவ் யூ லயனஸ்னு சொல்லு. ரொம்ப நாள் ஆச்சு அதக் கேட்டு! சொல்லு, சொல்லு!”

இன்னும் அமைதி. அவனின் கை மட்டும் அவளின் கூந்தல் உள்ளே அலைந்து விளையாடியது.

அவனின் அமைதியில், கவியின் உடல் மெல்ல குலுங்கியது. அவள் முகத்தை தன் வயிற்றோடு இன்னும் இறுக்கிக் கொண்டான் மணி. அவன் வயிறு இவளின் சூடான கண்ணீரால் நனைந்தது. சமாதானம் செய்யாமல் அப்படியே அவளை அழவிட்டான் மணி.

மெல்ல அழுது ஓய்ந்தவள்,

“சொல்லமாட்டல்ல? என்னை வெறுத்துட்டல்ல?” லேசாக தேம்பினாள்.

பின் என்ன நினைத்தாளோ, மெல்ல எழுந்து முட்டிப் போட்டு நின்றாள். அவள் முகம் அவன் நெஞ்சு வரைக்கும் வந்தது. ஆவேசமாக அவனை அணைத்து, எட்டிய இடமெல்லாம் முத்த மழை பொழிந்தாள் கவி.

“கவி, கவி! ஸ்டாப் இட் கவி” என கத்திய மணி அவளைத் தடுத்துப் பிடித்தான்.

“பைத்தியம் மாதிரி நடந்துக்காதே கவி!”

“பைத்தியம் தான், பைத்தியம் தான்! உன் மேல பைத்தியம்! ரொம்ப நாளா மணி பைத்தியம் பிடுச்சு அலையறேன்! எனக்கு நீ வேணும் மணி. முழுசா எனக்கே எனக்கா வேணும்!”

“எதுக்கு கவி? உனக்கு எதுக்காக நான் வேணும்?”

பதில் சொல்ல முடியாமல் விழித்தாள் கவி.

“எதுக்குன்னு நான் சொல்லவா? என்னை மயக்கி, என் கூட ஜாலியா இருந்து, பிள்ளை வந்ததும் என்னை மட்டும் அம்போன்னு தனியா விட்டுட்டு ஓடத்தானே?”

அதிர்ச்சியில் வார்த்தை வராமல் விழித்தாள் கவி.

“சொல்லு கவி, சொல்லு! உனக்கு யூஸ் அண்ட் த்ரோ பண்ண நான் தான் கிடைச்சனா? என் ஆழமான காதல்தான் கிடைச்சதா? சொல்லு கவி!!! ஐ நீட் அன்ஸ்சர் டேமிட்!”

“உனக்கு எ..எப்படி தெரியும்?” திக்கினாள் கவி.

“உன்னோட போனை ஹேரிக்கு கேம் விளையாட குடுப்பியே, அவன் அத என் கிட்ட குடுத்துட்டு என் போனை எடுத்துட்டு ஓடிருவான். டிஸ்ப்ளேல என் போட்டோ வச்சிருக்கியேன்னு சும்மா போனை நோண்டிப் பார்த்தேன். நிறைய ஆப்ளிகேஷன்ஸ் ஓவுலேஷன் டே சம்பந்தப்பட்டதா இருந்தது. அதுல ஒன்ன ஒப்பென் பண்ணிப் பார்த்தேன். பதினெட்டாம் தேதிய டிக் பண்ணி, திஸ் இஸ் தெ டேன்னு போட்டு வச்சிருந்த. கல்யாணத்துக்கு முன்னாடியே, உனக்கு ஓவுலேஷன் தேதிலாம் எதுக்குன்னு தோணுச்சு. ஆனாலும் நமக்குன்னு ஒரு குழந்தை வரதுல இவ்வளவு ஆர்வமான்னு ஒரு பக்கம் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.”

கலவரமாக மணியின் முகத்தைப் பார்த்தாள் கவி.

“நீ எப்படி என் போனை நோண்டிப் பார்க்கலாம்? எப்போ பார்த்த?” கோபத்துடன் கத்தினாள் கவி.

“சத்தத்தக் குறை கவிலயா! ஆப்ளிகேஷன்ஸ் பார்த்து மிரண்டுப் போனது நான் அமெரிக்கா வந்த சில நாளுலயே நடந்துருச்சி. ஆனா உன் கேடி ஜீனியஸ் மூளைய வச்சு என்ன திட்டம் போட்டு வச்சிருந்தன்னு அப்போ எனக்குத் தெரியல. புத்திசாலி டிப்பார்ட்மெண்ட்ல நான் கொஞ்சம் வீக் தானே! அடிக்கடி நீ என்ன ரொம்ப நெருங்கி வரும் போதுலாம், உன் காதல் மட்டும்தான் என் கண்ணுக்குத் தெரிஞ்சது. கட்டிப்பிடிக்கறது, முத்தம் குடுக்கறது, நடு ராத்திரில பாத்ரூம் வழியா வந்து என் பக்கத்துல படுத்துக்கறதுன்னு  உன் அட்டகாசம் எல்லையத் தாண்டனப்போ கூட, என்னடா இவளுக்கு நம்ம மேல இவ்வளவு அன்புன்னு தோணுச்சே தவிர ஒரு செகண்ட் கூட உன்னைத் தப்பா நினைக்கல நான். இங்க இருக்கறதுனால இவங்க கல்ச்சர் ஒட்டிக்கிச்சு, அதான் கல்யாணத்துக்கு முன்னவே எல்லாத்தையும் எதிர்ப்பார்க்கறன்னு நினைச்சேனே தவிர, என் கூட கல்யாணம்கறது உன் லிஸ்ட்லயே இல்லன்னு நினைச்சுப் பார்க்கல. அப்போலாம் எப்படி உன்னை  நிறுத்தறதுன்னு யோசிச்சுத்தான் ஐம் மேன் ஆப் பிரின்சிப்பள்னு சொல்லி உன்னை தள்ளி, தள்ளி வச்சேன்! என் கூட இருக்க ஆசைப்படற, என் பிள்ளைய சுமக்க ஆவலா இருக்கேன்னு நினைச்சுத்தான் கல்யாணம் செஞ்சிக்கலாம்னு உன்னை அடிக்கடி வற்புறுத்துனேன்.”

தலை முடியைக் கோதிக் கொண்டான் மணி. முகம் கோபத்தில் சிவந்துப் போய் கிடந்தது.

“மணீ!”

“ஷட் அப் கவி! நான் பேசி முடிக்கற வரைக்கும் வாயத் திறக்கக் கூடாது”

கப்பென வாயை மூடிக் கொண்டாள் கவி. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது நன்றாக புரிந்தது அவளுக்கு. பயத்துடன் அவனைப் பார்த்திருந்தாள்.

“ஆனா கல்யாணம் வேணான்னு கோயில்ல நீ கதறி,கதறி அழுத பாரு, அப்போ புரிஞ்சது உனக்கு என்னைக் கட்டிக்கற ஐடியாவே இல்லைன்னு. அப்புறம் எதுக்கு ஆரம்பத்துல இருந்து என்னை நெருங்கி இழைஞ்சிட்டு நின்னனு ரொம்ப குழப்பமா இருந்துச்சு. அதுக்கு பதில் ரெண்டு நாளைக்கு முன்ன உன்னோட திங்ஸ் எல்லாம் பேக் பண்ணப்போ கிடைச்சது.”

“எ..என்ன கிடைச்சது?” நாக்கு குழறியது அவளுக்கு.

“மிஷன் மணின்னு நீ வச்சிருந்த ஃபைல்”

“அதை நான் ட்ராவர்ல பூட்டி வச்சிருந்தேனே!” பதட்டம் அவள் குரலில்.

“ரொம்ப பாரமா இருக்குன்னு, ட்ராவர்ல உள்ள திங்ஸ்லாம் கிளியர் பண்ண சொன்னாங்க மூவிங் கம்பேனிகாரங்க. நான் தான் உங்க அப்பா கிட்ட மாற்று சாவி வாங்கி திறந்து எல்லாத்தையும் அட்டைப் பெட்டியில பேக் பண்ணேன்.”

திடீரென கடகடவென சிரித்தான் மணி.

“எவ்வளவு தெனாவெட்டு உனக்கு? ஒவ்வொரு மாசமும், அந்த மூனு நாள் டேட்ல மிஷன் பெயில்னு எழுதி வேற வச்சிருக்க! அதுல ஒரு மாசம் நான் செமினார் வேற போயிட்டேன். ஆனாலும் ஒரு விஷயத்துல உன்னை மெச்சிக்கனும். ப்ரெக்னெண்டா ஆனதும் எங்கள எல்லாம் விட்டுட்டுப் ஓடிப்போக பக்காவா சுவிஸ்ல ஒரு அபார்ட்மேண்ட் வாங்கி வச்சிருக்க. அங்க இருக்கற மேட்டர்னட்டி செண்டர்ல இருந்து, கிண்டர்கார்டன் வரை அக்கு வேறா ஆணி வேறா அலசி ரிப்போர்ட் ரெடி பண்ணி வச்சிருக்க. ரியல் ஜீனியஸ்டி நீ! உங்கப்பா கல்யாணம் முடிஞ்சதும், முழு நேரமா என்னை மயக்கற ப்ளான்ல தானே இருந்த? எனக்கு ஒரு சந்தேகம் கவிலயா!”

“எ..என்ன?”

“அதெப்படி நாம ஒன்னு சேர்ந்த உடனே பிள்ளை வந்துரும்னு உனக்கு அவ்வளவு நம்பிக்கை? உன்னோட மெடிக்கல் ரிப்போர்ட்லாம் அந்த ஃபைல்ல பார்த்தேன். பக்காவா தான் இருக்கு. அதோட இப்பவே ப்போலிக் அசிட் மருந்துலாம் வேற சாப்பிட்டு ரெடியாத்தான் இருக்க பிள்ளைப் பெத்துக்க! ஆனா எனக்கு மெடிக்கல் கண்டிஷன் எல்லாம் கரேக்டா இருக்கும்னு உனக்கு என்ன நிச்சயம்?”

“கண்டதையும் பேசாதடா! என் மணி ஹேல்த்தியா தான் இருப்பான்.” தேம்பினாள் கவி.

“பிள்ளை கடவுள் குடுக்கறதுடி! உன்னை மாதிரி ப்ளான் போட்டு, ஸ்கீம் பண்ணிலாம் பட்டுன்னு பெத்துக்க முடியாது. கடவுள்னு ஒருத்தன் இருகான்டி. நீயே எதிர்ப்பார்க்காத நேரத்துல நமக்கு கல்யாணத்த நடத்தி வச்சிட்டான் பாரு. அது சரி, கல்யாணம் முடிஞ்சதும் முதல்ல அழுதாலும் சட்டுன்னு தேறிக்கிட்டியே வொய் கவிலயா? லைசென்சோட உன் மிஷன தொடரலாம்னா?”

“மணி, ப்ளீஸ் மணி! இப்படிலாம் பேசாதே மணி”

“என்னை என்னான்னு நினைச்ச கவி? பிள்ளை குடுக்கற மிஷினுன்னா?”

“இல்ல, இல்ல மணி!”

“அப்போ சொல்லு, இன்னிக்கு தேதி என்ன?”

“அது வந்து..”

“மென்னு முழுங்காத! இன்னிக்கு தேதி பதினெட்டு. உன் கர்ப்பப்பையில இருந்து உயிர் முட்டை வெளிய வர நாள். அதுக்கு உயிர் குடுக்க உனக்கு நான் வேணும்! ஆமாதானே கவி?”

வாயைத் திறக்கவே இல்லை அவள். கண்ணீர் மட்டும் நின்று ஒரு பிடிவாதம் வந்திருந்தது முகத்தில்.

“உன் மேல செம்ம கோபத்துல இருக்கேன். ரெண்டு நாளா அதான் உன் மூஞ்சிய பார்க்காம வெளியவே சுத்திட்டு இருக்கேன். எங்க உன் முகரையப் பார்த்தா என்னை மீறி கை நீட்டிருவேனோன்னு பயம்! எப்படிடி இப்படி உன்னால கிரிமினலா யோசிக்க முடிஞ்சது? உன்னோட வாழாமலே இத்தனை வருஷமா உன்னையே நினைச்சிட்டு இருந்தேன். இதே வாழ்ந்துட்டா, நீ இல்லாம என்னால இருக்க முடியுமான்னு யோசிச்சுப் பார்த்தியா கவி? செத்துருவேண்டி! உன்னை நினைச்சு, நாம வாழ்ந்தத நினைச்சு பைத்தியம் புடிச்சு செத்துருவேன். இப்படி என்னைக் கொல்லத்தான் என் வாழ்க்கையில நீ வந்தியா கவிலயா? இப்போ கூட நீ அழுதா என்னால தாங்க முடியலடி! ஆனா என்னைக் காலம் முழுக்க கதற விட எப்படி உன்னால முடிவெடுக்க முடிஞ்சது? யெஸ், மேய்பீ, நோன்னு என் கிட்ட ப்ரோபோஸ் பண்ண அந்த இன்னசேண்ட் கவிலயா எங்கடி போனா? இப்போ உனக்குள்ள இருக்கற இந்த கிரிமினல நான் லவ் பண்ணலடி! ஒல்லியா, பல்லுல சாக்லேட் கறையோட மணின்னு என்னைப் பார்த்து சிரிச்ச அந்த கவிலயாவத்தான் நான் லவ் பண்ணேன். இப்போ இங்க இருக்கற இந்த கவிலயாவ நான் வெறுக்கறேன். ஐ ஹேட் யூ கவி! ஐ ஹேட் யூ டூ தெ கோர்”

 

(கொட்டும்)