SSKN — epi 19

அத்தியாயம் 19

 

வெட்கத்தை உடைத்தாய்

கைக்குள்ளே அடைத்தாய்

தண்ணீரை ஊற்று குளிர்ந்திட

நான் தள்ளாடி தத்தளிக்கும் நேரம்..

 

வேலை முடிந்து அன்று சீக்கிரமே வீடு திரும்பி விட்டார் வெங்கி. மிக சந்தோஷமாக இருந்தார் அவர். மணி போன் செய்து தாங்கள் நல்லபடி புதிய இடத்தில் செட்டில் ஆகிவிட்டதாகவும், எந்தப் பிரச்சனையும் இல்லை எனவும் சொல்லி இருந்தான். அதோடு கவியும் வீடியோ கால் போட்டு சிரித்த முகமாக பேசி பாய் சொல்லி இருந்தாள்.

மீராவையும் ஹேரியையும் சர்ப்ரைஸ் செய்து வெளியே சாப்பிட அழைத்து செல்லலாம் என ஆசையாக வந்திருந்தார். வாசல் கதவை தன்னுடைய சாவி கொண்டு மெல்ல திறந்து பூனை போல சமையல் அறைப்பக்கம் நடந்தார்.

இன்று அவரின் ஜீரா சேலையில் இருந்தார். அதை லேசாக தூக்கி சொருகி இருந்தவர், சிங்கில் இருந்த பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தார். ஹேரி டேபிளில் அமர்ந்து கலரிங் செய்து கொண்டிருந்தான். இவரைப் பார்க்கவும், கத்த வாய் திறந்தவனை சத்தம் செய்ய வேண்டாம் என சைகை காட்டினார் வெங்கி. அவனும் கண்கள் பளபளக்க சரி என தலை அசைத்தான்.

சத்தமில்லாமல் நாற்காலியில் இருந்து இறங்கி வந்தவன் கையில், வாங்கி வந்திருந்த சாக்லேட்டைத் திணித்து ஹோலுக்கு விளையாட போக சொன்னார் வெங்கி. மீரா மிரட்டி கலர் செய்ய வைத்திருந்ததால் விளையாட போக சொல்லவும் குடுகுடுவென ஓடிவிட்டான் ஹேரி.

சிரிப்புடன் அவன் போனதைப் பார்த்து உறுதி செய்துக் கொண்டவர், மீராவை மெல்ல நெருங்கினார். பின்னால் இருந்து மீராவின் இடுப்பை வளைத்தவர், அவரைத் தன் புறமாக திருப்பினார்..

“அம்மே!” அதிர்ச்சியில் அலறினார் மீரா.

“அம்மே இல்ல மாமே அப்படின்னு சொல்லனும்!” என்றவர் மீராவின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டார்.

“ஐ மிஸ் யூ மீராக்குட்டி”

“விடுங்க வெங்கி சார்! ஹேரி வேற இருக்கான்” தள்ளினார் மீரா.

“அவன ஹோலுக்கு அனுப்பிட்டேன் செல்லோ! இன்னிக்கு முழுக்க உன் நினைப்பாவே இருந்துச்சு. லாஸ்ட் கிளாஸ் முடிஞ்சதும் நாளைக்கு கிளாசுக்கு ஒன்னும் ப்ரிபேர் பண்ணாம ஓடி வந்துட்டேன். ஓடி வந்ததுக்கு ஆசையா ஒரு மீம்மா குடு பாப்போம்”

“மீம்மாவா?”

“மீரா குடுக்கும் உம்மா ஈக்குவல் டூ மீம்மா! சீக்கிரம் குடு”

“அதான் கிடைக்கற கேப்லாம் நீங்களே அள்ளி அள்ளி குடுக்கறீங்களே, போதலையா வெங்கி சார்?”

“அது நானா குடுக்கறது, வேற டிப்பார்ட்மேண்ட். இது நீயா குடுக்கப் போறது, இது வேற டிப்பார்ட்மேண்ட். கமான், குவீக்!”

“பட்டப்பகல்ல இதென்ன வம்பு வெங்கி சார்?”

“அடியே, சார் மோர்னு கூப்பிடற கட்டத்தையெல்லாம் ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கு வெங்கி ஐ லவ் யூன்னு காதுல குசுகுசுன்னு சொன்னியே அப்பவே நாம தாண்டிட்டோம். இனிமே வெறும் வெங்கின்னு கூப்பிடு. புரியுதா?”

“சரிங்க, வெறும் வெங்கி!”

வாய் விட்டு சிரித்தார் வெங்கி.

“உடம்பு முழுக்க கொழுப்புடி உனக்கு! ஒரு மீம்மா கேட்டா என்னலாம் பேசி என்னை டைவெர்ட் பண்ணுற! நீயா குடுத்தா ஒன்னோட விட்ருவேன். நானே கொடுத்தேன், பல நூறை தாண்டிப் போகும்! அவ்வளவு சேர்த்து வச்சிருக்கேன் எனக்குள்ள! எப்படி வசதி?” என வம்படியாக மீராவின் இதழணைப்பை வாங்கிக் கொண்டே ஓய்ந்தார் வெங்கி.

முத்தமிட்டு வெட்கத்துடன் நெஞ்சில் சாய்ந்து கொண்ட மீராவின் இடுப்பைக் கட்டிக் கொண்டு, மெல்ல ஆங்கிலேய பாணியில் ட்வீஸ்ட் ஆடினார் வெங்கி.

“ச்சாம் ச்சாம் ச்சகச்சாம் ச்சகச்சாம் சாம்

உனக்கே தந்தேன் என் நெஞ்சம்

ச்சாம் ச்சாம் ச்சகச்சாம் ச்சகச்சாம் சாம்

உடனே வருவாய் என் மஞ்சம்”

மீராவின் காதோரமாய் பாடினார் வெங்கி.

“பாட்டுக்கூட உங்களுக்கு ஏத்த மாதிரியே புடிச்சிருக்கீங்க, நெஞ்சம் மஞ்சம்னு” புன்னகைத்தார் மீரா.

“எங்க டைம்ல பேமஸ் பாட்டுடி இது. என் பொண்டாட்டி கூட சேர்ந்து பாடி ஆடனும்னு எவ்வளவு கனவெல்லாம் கண்டு வச்சிருந்தேன் தெரியுமா? இப்போத்தான் எல்லாம் நிறைவேறுது”

இவர்களின் ட்விஸ்டில் ஓடி வந்து இடை புகுந்தான் ஹேரி.

“நானும், நானும் டான்ஸ்”

சிரிப்புடன் வெங்கி அவனைத் தூக்கிக் கொண்டார். அவனை ஒரு கையில் வைத்துக் கொண்டே மறுகையால் மீராவை அணைத்து ஆடியவருக்கு முகம் கொள்ளா சிரிப்பு.

பிறகு சிரித்துப் பேசி சந்தோஷமாக சாப்பிட வெளியே கிளம்பினார்கள். ஹேரியின் சாய்ஸ்சாக பர்கர் கிங் துரித உணவகத்துக்கேப் போனார்கள் மூவரும். இருவரையும் தன் கைவளைவிலேயே வைத்திருந்தார் வெங்கி.

வீட்டில் இருக்கும் போதும் சரி, வெளியே போனாலும் சரி வெங்கி மீராவைத் தன் அருகாமையை விட்டு நீங்க விட்டதில்லை. உடம்பு சரியில்லாத பிள்ளை தன் தாயின் அருகாமையையே நாடுமே, அதே போல எந்நேரமும் மீராவின் கையைப் பற்றிக் கொண்டோ, தோளணைத்துக் கொண்டோ தனது இருப்பை உணர்த்திக் கொண்டே இருப்பார்.

பர்கர் கிங்கில் இருந்த ப்ளே ஏரியாவில் ஹேரி விளையாடிக் கொண்டிருக்க, மீராவின் கையை வருடியவாறே அமர்ந்திருந்தார் வெங்கி.

“ஏன் வெங்கி, எப்பப் பாரு என்னைத் தொட்டுகிட்டே இருக்கனுமா?”

“ஏன் மீரா, பிடிக்கலையா?”

“பிடிக்கலைனா தள்ளி இருப்பீங்களா?”

மீராவின் கையில் இருந்து தன் கரத்தினை விலக்கியவர், மெல்ல தள்ளி அமர்ந்துக் கொண்டார்.

“நான் உன்னை ஒட்டிக்கிட்டே திரியறது உனக்கு மூச்சு முட்ட வைக்கும்னு எனக்கும் புரியுது. ஆனா விட முடியலை மீரா”

இப்பொழுது வெங்கியை ஒட்டி அமர்ந்த மீரா, அவர் கையைத் தன் கைக்குள் புதைத்துக் கொண்டார்.

“இல்ல வெங்கி, இத்தனைப் பேரு நம்ம சுத்தி இருக்காங்க. அதோட நமக்கு வயசு வேற போயிருச்சு, இப்படி ஒட்டிக்கிட்டு இருந்தா என்ன நினைப்பாங்க? அதான் எனக்கு கூச்சமா இருக்கு”

“நாம் இருக்கறது அமெரிக்கா மீரா! இங்க இதையெல்லாம் பெருசாவே எடுத்துக்க மாட்டாங்க! அதோட இப்ப நீயும் நானும் இந்தியால இருந்தாக் கூட நான் இப்படித்தான் இருப்பேன். நீ சொன்ன மாதிரி, வயசாயிருச்சுதான். இந்த வயசுக்கு மேல மத்தவங்க என்ன சொல்லுவாங்களோ, ஏது சொல்லுவாங்களோன்னு பயந்துகிட்டு என் சந்தோஷத்தை விட்டுக் குடுக்க விரும்பல நான். நாம சேர்ந்து வாழற, வாழப் போற ஒவ்வொரு நொடியும் ரொம்ப ப்ரீஷியஸ் மீரா.”

தன் மறு கரத்தால் மீராவின் கன்னைத்தை வருடியவர்,

“அன்பு, காதல்னு நான் நெறையா சேமிச்சு வச்சிருக்கேன்! விநாடி கூட வேஸ்ட் பண்ணாம அதை எல்லாம் உன் கிட்ட காட்டனும் மீரா. கடவுள் நமக்கு எவ்வளவு ஆயுச வச்சிருக்கானோ, அதுக்குள்ள திகட்ட திகட்ட வாழனும் மீரா. உனக்கு புரியுதா மீராக்குட்டி? லெட் மீ லவ் யூ மீரா!” குரல் கம்ம சொன்னார் வெங்கி.

மீராவுக்கு கண்கள் கலங்கி விட்டன. இவ்வளவு அன்பு கிடைக்க தாம் என்ன தவம் செய்தோம் என நெஞ்சம் விம்மியது. தன் வாழ்க்கையில் நடந்த கசப்பான தருணங்களை வெங்கியின் காதல் மறக்கடிக்க செய்வதை உணர்ந்தார் மீரா.

நேற்றைய நினைவுகளில் வாழ்பவன் மன அழுத்தத்தில் வாழ்கிறான், நாளைய நினைவுகளில் வாழ்பவன் பயத்தில் வாழ்கிறான், இன்றைக்கு வாழ்பவனே நிம்மதியில் வாழ்கிறான் எனும் வாசகம் மனதில் ஓடியது மீராவுக்கு. நேற்று நடந்ததை மறந்து, நாளை நடப்பதை கடவுளிடம் விட்டு இன்று மட்டும் வெங்கியின் காதலில் களித்து வாழ முடிவெடுத்தவர் வெங்கியின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டார். முகம் புன்னகையில் பூக்க, மீராவின் தோளை சுற்றி தன் கையைப் போட்டுக் கொண்டார் வெங்கி.

வீட்டிற்கு திரும்பி வரும் போது மீராவின் செல் போன் ஒலி எழுப்பியது. தம்பியின் பேரை திரையில் பார்த்தவர், வெங்கியின் அருகில் பேசத் தயங்கினார்.

“யாரு மீரா?”

“தம்பி”

“பேசு!”

“பரவாயில்ல வெங்கி, வீட்டுக்குப் போய் நானே கூப்புடறேன்”

வெங்கியிடம் தனக்கு அம்மா, ஒரு தங்கை, ஒரு தம்பி இருப்பதாக மட்டும் சொல்லி இருந்தார். யாரோடும் உறவு சரியில்லை என்பதை லேசாக கோடிட்டுக் காட்டி இருந்தார் அவ்வளவே. அது கூட மாதா மாதம் சம்பளத்தை இந்தியாவில் இருக்கும் தம்பிக்கு அனுப்புவதற்கு வெங்கியின் உதவி தேவை என்பதற்கே சொல்லி இருந்தார். மீராவுக்கு குடும்பத்தைப் பற்றிப் பேச பிரியம் இல்லாததால் அவரும் தூண்டித் துருவவில்லை. கல்யாணத்துக்குக் கூட அழைக்க மாட்டேன் என பிடிவாதம் பிடிக்கவும், கொஞ்சம் கண்டிப்பு காட்டினார் வெங்கி. வீட்டில் சொல்வதானால் கல்யாணமே வேண்டாம் என மீரா சொல்லவும், இவரும் விட்டுவிட்டார்.

ஹேரி வீட்டுக்குப் போனதும், தனது அறைக்குள் புகுந்துக் கொண்டார் மீரா. வெங்கியும் வருவார், வருவார் என காத்திருக்க நேரம் ஓடிக் கொண்டே இருந்தது, ஆனால் மீரா வெளி வரும் பாட்டைக் காணோம். பொறுமை இழந்த வெங்கி,

“மீரா, கதவைத் திற! இன்னும் என்ன பண்ணுற உள்ள? வா நம்ம ரூமுக்குப் போலாம்” என அழைத்தார்.

“வரேன்!” என குரல் முதலில் கேட்டது. ஆனால் பத்து நிமிடம் அதுவும் வெங்கி படபடவென கதவைத் தட்டவும் தான் வெளியே வந்தார் மீரா. முகம் கழுவி, பவுடர் போட்டிருந்தாலும் கண்ணின் சிவப்புத் தெரிந்தது வெங்கிக்கு.

“அழுதியா மீரா?”

“இல்ல வெங்கி”

“பொய் சொல்லாதே! கண்ணு சிவந்துருக்கு, குரலு செக்சியா இருக்கு! கண்டிப்பா அழுதுருக்க! ஏன், என்னாச்சு?” மீராவைப் போட்டுத் துருவினார் அவர்.

“ஒன்னும் இல்லன்னு சொல்லுறேன்ல” இவர் கடுப்பாக பதில் அளித்தார்.

“சொல்லுடி! என்ன மேட்டர்?”

“நீங்க இன்னும் மேட்டர் பண்ண ஆரம்பிக்கலையே, அதான் மேட்டர்”

“மேட்டர்னு சொன்னா, நீங்க அழுதத மறந்துட்டு நாங்க உடனே கட்டில்ல குதிச்சிருவோமா? என்னை நீ உன் மனசுல என்னன்னு நினைச்சு வச்சிருக்க? வெங்கி ஒரு வெளெக்கெண்ணெய்னா? மேட்டர டைவெர்ட் பண்ணாம ஒழுங்கா என்னாச்சுன்னு சொல்லு”

விட மாட்டார் என புரியவும் தன் மனதைத் திறந்தார் மீரா.

“தம்பி போன் போட்டன்ல, நான் திரும்ப அவனுக்கு கூப்பிட்டேன்”

“சரி, அதுல நீ அழற அளவுக்கு என்ன நடந்தது?”

“அவனுக்கு நான் கல்யாணம் செஞ்சிகிட்டது தெரிஞ்சிருக்கு”

“ஓஹோ! நீயா சொல்லிருக்க வேணும். ஆனா நீ சொல்ல மாட்டேன்னு அடம். அவங்களே தெரிஞ்சிகிட்டது நல்லது தானே மீரா. அது சரி, எப்படி தெரிஞ்சதாம்?”

“நம்ம தீபா இருக்கால்ல, அவ பேஸ்புக்ல கவியோடதும், நம்மளோடதும் கல்யாணப் போட்டோ எல்லாம் இப்போத்தான் போட்டுருக்காளாம். தீபா, சங்கர் காலேஜ் மேட்டோட தங்கச்சி கூட படிக்கறாளாம். தீபா அவ ப்ரேண்ட் எல்லாம் டேக் பண்ணவும் சங்கர் ப்ரேண்டுக்கும் என்னவோ நோடிபிகேஷன் வந்துச்சாம். அதுல என்னைப் பார்த்துட்டு உங்கக்காடான்னு போட்டோவ காட்டனானாம். அதைப் பார்த்துட்டு போன் போட்டுருக்கான்.”

“ஏசுனானா?”

“இல்ல! அவன் நல்லவந்தான். ரொம்ப வருத்தப்பட்டான் சொல்லலன்னு. அப்புறம் உங்க மாமியார் பேசுனாங்க.”

“என்ன சொன்னாங்க?”

“உருப்புடாம போயிருவடி, நாசமா போயிருவடின்னு வாழ்த்து சொன்னாங்க” சொல்லும் போதே கண்ணில் நீர் வழிந்தது. வாரி அணைத்துக் கொண்டார் வெங்கி.

“அழாதம்மா! வயசானவங்களுக்கு அறிவு புல் மேய போயிருச்சு! அவங்க அப்படி சொன்னா நாம நாசமா போயிருவோமா? இன்னும் நல்லா இருப்போம்மா! அழாதே!”

இவ்வளவு நாள் அடைத்து வைத்திருந்தது எல்லாம் மடை திறந்த வெள்ளமெனெ பொங்கி வந்தது மீராவுக்கு. அழுதபடியே தனது கதையைப் பகிர்ந்துக் கொண்டார்.

மீராம்மாவின் அப்பா சபாபதி பஞ்சம் பிழைக்க சென்னைக்கு வந்தவர். புறநகர் பக்கமாக சின்ன கடைபோட்டு தனது குல தொழிலான தையல் தொழிலை ஆரம்பித்தார். கைக்கும் வாய்க்கும் ஓரளவு கட்டி வந்தது. முப்பத்து ஐந்து வயதாக தனக்கும் துணை ஒன்று வேண்டும் என அனாதை விடுதியில் வளர்ந்த கங்கம்மாவைத் திருமணம் செய்துக் கொண்டார் சபாபதி. அடுத்த வருடமே அழகு பதுமையென மீராம்மா பிறந்தார். இருவருமே மகளை ஆசையாக வளர்த்தாலும், சபாபதிக்கு மகள் என்றால் உயிர்.

மீராவுக்கு பத்து வயது இருக்கும் போது கங்கா மீண்டும் கருவுற்றார். அதுவும் பெண் குழந்தைதான். நீலாம்மா என பெயரிட்டனர். அதன் பிறகு நான்கு வருடம் கழித்துப் பிறந்தவன் தான் சங்கர். ஏற்கனவே மீரா அப்பா செல்லம், அதோடு இன்னும் சின்னப்பிள்ளைகள் வரவும் கங்கா சிறியவர்கள் மேலே கவனம் செலுத்தத் தொடங்கி விட்டார். மீரா அப்படியே அவரை விட்டுத் தள்ளிப் போய் அப்பாவிடம் ஒட்டிக் கொண்டாள்.

மீரா பள்ளி முடிந்து அப்பாவுடன் கடையில் அமர்ந்து விடுவாள். சின்ன வயதில் இருந்தே தையலை அவளுக்குள் விதைத்தார் சபாபதி. இவளும் பட்டன் தைப்பது, அயர்ன் போடுவது என சின்ன வேலைகள் தொடங்கி போக போக நன்றாக தைக்க ஆரம்பித்தாள். வியாபரம் பெருக, அவர்கள் கடைக்கு இன்னும் இரண்டு பேர் பணிக்கு அமர்த்தப்பட்டனர்.

எல்லாம் நன்றாகவே போய் கொண்டிருந்தது மீராவுக்கு வயது பதினைந்தை தொடும் வரை. தையல் மிஷினில் அமர்ந்து தைத்துக் கொண்டிருந்த சபாபதி அதன் மேலேயே சரிந்து விழுந்தார். ஹாஸ்பிட்டலுக்கு போவதற்குள் உயிர் கூட்டை விட்டுப் போயிருந்தது. ஹார்ட் அட்டாக். பிடித்த வேலையை செய்யும் போதே உயிர் பிரிவது கூட வரமல்லவா! வரம் சபாபதிக்குக் கிடைத்தாலும் அவர் இறப்பு குடும்பத்துக்கு சாபமாக போய் விட்டது.

குடும்ப பொறுப்பு முதல் மகவானதால் மீராவின் மேல் விழுந்தது. கங்கா, கணவர் இருந்த வரை வீடு, பிள்ளைகள், சமையல் என இருந்தாரே தவிர தொழிலைப் படித்துக் கொள்ளவில்லை. தொழில் படித்திருந்த மீரா பள்ளிக்கு முழுக்குப் போட்டு விட்டு மிஷினில் அமர்ந்தாள். தைக்க தெரிந்த அளவுக்கு வியாபார சூட்சுமம் தெரியவில்லை மீராவுக்கு. கடனுக்குக் கொடுத்து நிறைய நட்டம். அல்லும் பகலும் முட்டி மோதி பதினெட்டு ஆகும் போது அப்பாவை விட நன்றாக வளர ஆரம்பித்திருந்தாள். அப்பொழுதுதான் நன்றாக மூச்சை இழுத்து விட்டார் கங்கா. மற்ற இருவரும் பள்ளிக்குப் போக, மீரா குடும்பத்தைத் தாங்கினாள். வியாபாரம் வளர்ந்தது போல மீராவின் அழகும் வளர்ந்து பிரகாசித்தது.

பல வரன்கள் மீராவுக்கு வந்த வண்ணம்தான் இருந்தன. இவள் தான் எதற்கும் பிடி கொடுக்கவில்லை. கங்காவோ புரிந்துக் கொள்ளாமல், இவள் திருமணம் செய்து கணவனோடு குடும்பத்தைப் பார்க்க வேண்டும் என சண்டைப் பிடித்தார். ஆனால் வந்த மாப்பிள்ளைகளோ மீரா மட்டும் வேண்டும் அவள் குடும்ப பாரம் வேண்டாமென கருதினர். இப்படியே இழுபறியில் போய் கொண்டிருந்தது மீராவின் கல்யாண வாழ்க்கை.

மகள் கல்யாணம் ஆகாமல் இவர்கள் உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள் என யாராவது சொல்வதும், அதைக் கேட்டு வந்து ஒரு மூச்சு அழுவதும் தான் கங்காவின் வேலை. கல்யாணம் செய்துக் கொண்டு அங்கிருந்து எங்களுக்கு சம்பாரித்துக் கொடு என தினந்தோறும் ஒப்பாரி. இப்பொழுது சரி என சொல்லும் எவனும், கல்யானம் முடிந்து குடும்பத்தை வெட்டி விடு என சொன்னால் என்ன செய்வது என இவள் ரொம்பவே தயங்கினாள். ஆகையால் தனது கல்யாணக் கனவையே மனதுள் புதைத்து தையல் மிஷினை ஓட்டினாள்.

வருடங்கள் ஓட, நீலா கல்லூரியில் அடி எடுத்து வைத்தாள். அப்பொழுது பிடித்தது இவர்களுக்கு சனி. படிக்கப் போனவள் காதல் என வந்து நின்றாள். மீரா அதட்ட, உன்னைப் போல கன்னி கழியாமல் காலம் எல்லாம் இருக்க வேண்டுமா என கேட்டு ஒரே ரகளை. பெரியவள் தான் திருமணம் செய்யாமல் இருக்கிறாள், இவளாவது குடும்பம் குட்டி என இருக்கட்டும் என பச்சைக் கொடி காட்டினார் கங்கா. எங்கே சென்று முட்டிக் கொள்ள என புரியாமல் நின்றாள் மீரா.

அந்த காலக்கட்டத்தில் எல்லாம் இவளுக்கு மாப்பிள்ளை வருவது அறவே நின்றிருந்தது. இவளுக்கும் வந்தவர்கள் பார்த்த பார்வையிலும், தன் பொருளாதாரத்தை ஆராய்ந்த விதத்திலும், அவர்களின் சுயநலத்திலும் மனம் விட்டுப் போயிருந்தது. சரி நமக்கு அமையாத வாழ்க்கை இவளுக்காகவாவது அமையட்டும் என தங்கைக்கு மணம் முடித்து வைத்தாள்.

நீலா காதலித்தது கல்லூரியில் படிப்பவனையல்ல. கல்லூரிக்குப் போகும் வழியில் மெக்கானிக் ஷோப் வைத்திருந்தவனை. விசாரித்த வரை நல்லவன் எனத்தான் சொன்னார்கள். ஆனால் அவனை அடிக்கடி தான் போகும் இடமெல்லாம் பார்த்த மாதிரி இருந்தது மீராவுக்கு. தன் கடை முன்னே கூட இவன் மோட்டார்பைக் உறும அடிக்கடி காட்சி கொடுப்பதைக் கண்டிருக்கிறாள் மீரா. சில சமயம் கடைக்கு வரும் தங்கையைப் பார்க்க வந்திருப்பான் என நினைத்துக் கொண்டாள்.

பெண் பார்க்க வரும் போது மீராவிடம்,

“அண்ணி, உங்க குடும்ப நிலைமையப் பத்தி நீலா சொன்னுச்சு. இனிமே உங்களுக்கு முழு துணையா நான் இருப்பேன். நானும் வீட்டோட மாப்பிள்ளையா வந்துறரேன், உங்க பாரமும் குறையும்” என சொன்னவனை நன்றியுடன் பார்த்தாள் மீரா. அவன் துணை என சொன்னது என்ன அர்த்தத்தில் என புரிந்துக் கொள்ள தெரியவில்லை அவளுக்கு.

 

(கொட்டும்)