unnodu thaan en jeevan 13
unnodu thaan en jeevan 13
உன்னோடு தான்… என் ஜீவன்…
பகுதி 13
சென்னை…
‘சக்கரவர்த்தி பேலஸ்’ இன்று கோலாகலமாக, சகல அலங்காரத்தோடு காட்சியளித்தது. எண்ணிலடங்கா பூக்களும், வண்ண விளக்குகளும் கொண்டு அந்த மாளிகையே ஜெக ஜோதியாய் மின்னிக்கொண்டிருந்தது இன்றைய விழாவிற்காக…
அந்த குடும்பத்தின் அடுத்த வாரிசுவின் வரவை ஊருக்கும் , உறவுக்கும் பரைசாற்றவே இந்த விழாவும் கோலாகலமும்…
தனது அறுபது வயதிலும் இன்னும் இளமையோடும், கம்பீரத்தோடும் வலம் வந்து , நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றுள்ளதா?! என கண்காணித்தவாரே மனதின் சந்தோஷம் முகத்தில் மிளிர நடைபோட்டுக் கொண்டிருந்தார் சக்கரவர்த்தி.
அவரின் ஒரே செல்ல மகளின் வலை காப்பு இன்று. தனது ஒட்டு மொத்த சொத்துக்கும் , தனக்கு பின் தான் உருவாக்கிய வைத்திருக்கும் நிறைய தொழில் சம்ராஜ்ஜியத்திற்கும் வாரிசு வர போகும் ஆவல் , அவரை நிலை கொள்ள விடாமல் அலக்களித்துக்கொண்டிருந்தது.
சக்கரவர்த்தியின் மகள், வசந்தசேனாவிற்கு இது ஏழாவது மாதம். திட்டமிட்ட படி நல்ல நேரத்தில் சகல அலங்காரத்தோடு மனையில் அமர வைக்கப்பட்ட வசந்தாவின் முகத்தில் மட்டும் அன்றைய நாளுக்கான பூரிப்போ, சந்தோஷமோ எதுவும் இல்லை..
ஏதோ ஒரு வித அவஸ்த்தையில் இருப்பது போல இருந்தவள் நேரம் செல்லச் செல்ல ‘தன்னால் முடியாது..’ என்பது போல தனது தந்தையின் முகம் தேட… அவளை தூர இருந்தே சந்தோஷத்தோடு பார்க்க ஆரம்பித்தவர் , அவளின் சங்கடத்தை உணர்ந்தாற் போல அருகே வரவும் அவளும் அவரை தேடுவது புரிந்தது.
“என்னடாம்மா… ?” என்று பாசம் மிளிற கேட்ட தந்தையின் கரம் பற்றியவளோ, தனது வலியை முகத்தில் காட்டி , அவரிடம் சொன்ன விசயத்தை கேட்டவர், முதலில் அதிர்ந்தாலும் , தாமதிக்காமல் தனது இரு கரங்களில் அவளை ஏந்திய பிறகே பலருக்கும் புரிந்தது நிலைமையின் தீவிரம்.
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல… ஏற்கனவே பனிக்குடம் உடைந்த நிலையில் , மருத்துவமனை வந்த சிறிது நேரத்திலேயே ஜெனித்திருந்தான் அவரின் பேரன்… அவரின் ஒட்டு மொத்த சந்தோஷத்தின் வித்து… கௌதம் சக்கரவர்த்தி….
குறை பிரசவமாக இருந்தாலும் , எந்த வித குறையும் இல்லாது , அழகின் மொத்த உருவமாய் பிறந்த , தனது குட்டி இளவரசனின் மீது உயிரையே வைத்திருந்தார் அந்த பாசமான தாத்தா. அவனின் சிரிப்பும், சந்தோஷமும் தான் அவரின் சகலமும்…
பாசம் நிறைந்திருந்தாலும், சில விதிமுறைகளும் கௌதமிற்கு விதிக்கப்பட்டது தான். தனக்கு அடுத்து தொழிலை கவனிக்க வேண்டியவன் அவனே என்பதாலும் , சில கசப்பான நிகழ்வுகளாலும் அவனிடம் சிறிது கடுமையையும் பின்பற்ற தவறவில்லை அவர்.
அவர் இருக்கும் பொழுதுகளில் அவரிடமே வைத்திருப்பவர் , தனது தொழில் காரணமாக வெளியூரோ அல்லது வெளிநாடோ செல்லும் போது அவனை முழுமையாய் கவனிக்க வேண்டிய பொறுப்பை அங்கிருந்த வேலை ஆட்களிடம் ஒப்படைக்க வேண்டிய நிலை.
அவரின் ‘ மகள் மட்டும் , தேவையில்லாது தனது உடல்நிலையை சீரழித்துக் கொள்ளாமல் இருந்திருந்தால், அவளும் அவளின் கணவருமே அவனை பார்த்திருக்கலாமே!’ என்ற சிந்தனை தோன்றும் போது அவரின் கண்டிப்பும் கூடி தான் போகும் கௌதமிடம்..
தனது தாத்தா இல்லாத நேரத்தில், தாயை பார்க்க போனால் , எந்த நேரமும் படுக்கையில் இருக்கும் அவரிடம் ஓடி விளையாடும் வயதில் எவ்வளவு நேரம் ஒரே இடத்தில் அவனால் இருக்க இயலும்.
வேலைக்காரர்களோ , இயல்பிலேயே வேகத்தை கொண்டவனை சமாளிக்க திணறி தான் போனார்கள்… காலை எழுந்தது முதல் இரவு படுக்கை வரை ஓயாமல் ஓடியாடும் குழந்தையை எவ்வளவு தான் சமாளிக்க முடியும். அதனால் சில சமயம் அவன் எது செய்தாலும் கண்டும் காணாமலும் விட்டு விடுவர்.
அவனை அவர்கள் கவனிக்கவில்லை என்பதை உணர்ந்தால் , அவர்கள் கவனத்தை தன் பக்கம் திருப்புவதற்காகவே எதையாவது செய்து வைப்பான் கௌதம். அவன் அவ்வாறு செய்தால் எல்லாரும் அவனிடம் வருவதை உணர்ந்தவன் கையில் எடுத்த ஆயுதம் தான் அவனின் முரட்டு தனம்..
தனக்கு தேவையெனில் அதை பெற்றே தீரவேண்டும். இல்லாவிட்டால் , அது கிடைக்கும் வரை அவனை யாராலும் கணிக்கவே முடியாது எனும் வண்ணம் இருக்கும் அவன் செயல்கள்.
சிலநேரம் அழுது பார்த்தும் நடக்காத காரியம், அடாவடியாய் நடக்கும் போது கிடைக்க, அதுவே அவனுக்கு பழக்கமாக மாறியது, அவனின் வாய் பேசுவதற்கு முன்பே கை பேசிவிடும்.
அவனை பார்த்துக்கொள்ள வந்த நிறைய பேர், சம்பளத்தை பார்த்து ,’சரி ‘ என்றாலும் , அவனை சமாளிக்க முடியாமல் ஒரே வாரம், இல்லை … ஒரே நாளில் ஓடியவர்களும் உண்டு.
அவனின் நாட்களில் காலை எழுந்தது முதல் எல்லாமே அட்டவணை போட்டது போல தான் நடக்கும். எழுந்தவுடன் வரும் வேலையாள் குளிக்கவைப்பது , உணவு கொடுப்பது, விளையாட விடுவது, பள்ளி செல்லும் முன்பே தனி ஆசிரியர் கொண்டு வீட்டிலேயே கல்வி என எல்லாம் செய்தாலும் , அதில் கடமை இருக்குமே தவிர பாசம் இருக்காது.
இது போன்ற சூழலில் வளர்ந்த கௌதம் பள்ளி செல்லும் நாளும் வந்தது. அவனின் சில நடவடிக்கைகளை அறிந்த சக்கரவர்த்தி , பெரும் வசதி கொண்டிருந்தாலும் , கௌதமின் வளர்ப்பில் , எந்த ஒழுக்கக்கேடும் வந்திடக்கூடாது என்பதில் மிகவும் கவனம் வைத்திருந்ததால், அவர் அந்த பள்ளியை தேர்ந்தெடுத்தார்.
அந்த பள்ளியில் சேர்க்கவே பல விதிமுறைகள் உண்டு. பணம் ஒன்று மட்டும் இருந்தால், எதையும் செய்யலாம் என்ற எண்ணத்தை உடைக்கும் வண்ணம் செயல்படும் பள்ளி அது. அவர்கள் விதிமுறை படி யார் ஒத்து வருகிறார்களோ ! அவர்களுக்கே அங்கே அனுமதி உண்டு.
பணம் படைத்தவர் மட்டுமல்லாது , மத்திய வகுப்பை சேர்ந்த பல குழந்தைகளும், படிக்கும் பள்ளியாய் இருந்தாலும், அவர்களின் ஒழுக்க முறைக்காகவே அங்கு சேர்த்திருந்தார் சக்கரவர்த்தி.
அங்கே தான் கௌதம் , ஆரன் சந்திப்பு நிகழ்ந்தது. இப்படியொரு நண்பன் தனக்கு கிடைப்பான் என்பதை அறியாமல் தனது காரிலிருந்து இறங்கி வந்தவனை ஈர்த்தது அங்கிருந்த இருவரின் நடவடிக்கை.
*******
ஆரன் , சாமுவேல் , ஜெனிபரின் ஒரே மகன். திருமணம் முடிந்து பல வருடம் குழந்தை இல்லாது இருந்தவருக்கு , பல்வேறு பிராத்தனைக்கு பிறகு பிறந்த மகன் என்பதால் அவன் மீது பாசம் மட்டுமல்ல, செல்லமும் மிக அதிகம்.
ஆரன் தந்தை அப்போது தான் புதிதாக ஆட்டோ மொபைலிங் சம்மந்தமான தொழில் சென்னையில் துவங்கியிருந்த நேரம்.
புதிய இடத்திலேயே தடுமாறிய குழந்தை ,
முதன் முறை பள்ளிக்கு செல்லும் பயம், ஆரன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. “டாடி, நா இங்க இருக்கமாட்டேன் . உன் கூடவே வர்றேன். மம்மிகிட்ட போலாம்” என அழுகையோடு கேட்கும் ,’மகனை அழைத்து செல்வது சுலபம், ஆனால் அவனின் எதிர்காலம்? ‘ என்ற சிந்தனையோடு…
“ஆரன், இங்க பாருப்பா. டாடி எங்கையும் போகல. இங்க தான்டா, கேட்டுக்கு வெளியில இருப்பேன். நீ சமத்தா ஸ்கூல் போயிட்டு வருவியாம், நம்ம போகும் போது ஐஸ்கிரீம் கடைக்கு போயிட்டு வீட்டுக்கு போலாம் , என்ன .. ஓகே வா..!” என பலவாறு சமாதானம் செய்து அனுப்பினார் அந்த பாசக்கார தந்தை.
பள்ளி செல்லும் வயதில் கௌதமிற்கு ,’ புதிதாக வேறு இடத்திற்கு அதுவும் தன்னை போன்ற நிறைய குழந்தைகள் இருக்குமிடம் செல்கிறோம் என்பதே மிகவும் மகிழ்ச்சி… அவர்கள் தன்னை போல இருப்பார்கள் !! ‘ என்ற நம்பிக்கையில் வந்தவன்.. தன் காரிலிருந்து இறங்கும் போதே ஆரனையும், அவன் தந்தையையும் பார்த்தவன் அவர்கள் பேசியதையும் கேட்கவே செய்தான்.
அவரின் ‘ஐஸ்கிரீம்’ என்ற வார்த்தைக்கு கட்டுப்பட்டு, திரும்பி பார்த்த வண்ணம், கண்களில் தழும்பும் நீருடன் சென்ற 3 1/2 வயது ஆரனை… தாண்டி சென்ற கௌதம், இருவரின் பேச்சில் இருந்த பாசத்தை கண்டு கொண்டவன் , வித்தியாசமாக பார்த்துவிட்டு அவர்களை கடந்து உள்ளே சென்றான்.
இருவரும் ஒரே வகுப்பில் இருந்ததால் கௌதம் ,ஆரனை கவனித்துக் கொண்டே இருந்தான். வந்தது முதல் மிரட்சியோடும், பயத்தோடும் , அழுகையால் சிவந்திருந்த முகத்தோடு அமர்ந்திருந்தவன் மேல் இனம் புரியா நேசம் எழுந்ததை அவனே அறியவில்லை.
காலை வகுப்பு முடியும் வரை எந்த பிரச்சனையும் இல்லை. மதிய உணவின் போது இதுவரை தாய் மட்டுமே ஊட்டி உண்டு பழகிய ஆரனுக்கு ஒரு வாய் கூட இறங்க வில்லை. வீட்டில் இருந்தால் ஜெனிபர் எதையாவது கொடுத்து சாப்பிட வைப்பார். இங்கு காலை முதல் எதுவும் சாப்பிடாமல் பசி வேறு அதிகமாய் இருக்க, விட்டால் வீட்டிற்கு ஓடி செல்லும் நிலையில் இருந்தான்.
தன் வயதே என்றாலும் தந்தை கரம் பற்றி அழும் ஆரன், சின்ன குழந்தையாய் தான் கௌதமின் கண்ணுக்கு தெரிந்தான்.
சாப்பிடும் நேரம் அவனுக்கு , அவனே சாப்பிட முறையான பயிற்சி அளிக்கப்பட்டிருக்க, அவனுக்கான உணவை உண்டவன் கண்கள், ஆரனையும் கவனித்து கொண்டு தான் இருந்தது.
ஆரனை தூர இருந்து பார்த்த சில குறும்புக்கார வாண்டுகள்.. அவனின் அப்பாவி தோற்றத்தை பார்த்ததும் அவனை நெருங்கி, “என்ன தம்பி சாப்பிட பிடிக்கலையா? இல்ல சாப்பாடே பிடிக்கலையா ?. அந்த டிபன கொடு நாங்க புல்லா சாப்பிட்டு, எப்படி இருக்குன்னு சொல்றோம்.. !” என வம்பிழுக்க ஆரம்பித்தனர்.
அவர்கள் அனைவரும் வயதில் பெரியவர்களாய் இருக்க, ஏற்கனவே தாய், தந்தையை விட்டு வந்தது, புதிய இடம், புதிய சூழல், கண்களில் வழிந்த நீரை கூட துடைக்க தெரியாமல், ‘தனது உணவையும் பரித்துவிடுவார்களோ?!’ , என்று , அது நாள் வரை பசியை உணர்ந்திராதவன் , ‘ பசியில் என்ன செய்வது!’ என்பது கூட தெரியாமல் நின்றிருந்த ஆரனை கண்ட கௌதமின் மனதில் என்ன தோன்றியதோ,
அடுத்த நிமிடம், அங்கே வந்தவன் ஆரனுக்கு அரணாய் அனைவரின் முன்பும் நின்றான். அவனை பார்த்து , “டேய் இங்க பார்ரா, இந்த குட்டிபையனுக்கு நம்ம பத்தி தெரியாம வாலன்டியரா வந்து மாட்டுது. என்ன உன்னோட சாப்பாடும் சாப்பிடணுமா?” என நக்கலாய் பேசியவன், கௌதம் முகம் பார்க்க , சில நொடி ஸ்தம்பித்து தான் போனான், அவன் விழியில் தெரிந்த மாற்றத்தில்,
கௌதமின் விழிகள், எப்போதும் ஒரு வித ப்ரௌனிஸ் கலரில் இருந்தாலும் அதித கோபமோ அல்லது உணர்ச்சி வசப்படும் போதோ , அது இன்னும் அதித ப்ரௌனிஸ்ஸாக மாறி விடும். அவனின் தாயின் விழிகள் அப்படியே அவனுக்கு, சக்கரவர்த்திக்கு தன் மகளின் விழிகள் பேரனிடம் அப்படியே அமைந்திருப்பதில் பெருமை தான் எப்போதும்…
அவன் விழியை பார்த்ததும் சிறிது அச்சம் வந்தாலும், ‘தன்னை விட சிறியவன் தன்னை அப்படி பார்ப்பதா ?!’ என நினைத்தவன், “ஏய், என்னடா முறைக்கற. அடிங்க.. ” என கை ஓங்கியது மட்டுமே தெரியும், அடுத்த நொடி மண்ணில் கவிழ்ந்திருந்தான் கௌதமின் கை வரிசையால், அவன் எழுவதற்கு முன்பு அவன் மேலே ஏறி அமர்ந்தவன் கொடுத்த அடியை கண்ட மற்றவர்கள் மாயமாய் மறைந்திருந்தனர் அந்த நொடியே..
ஆரனுக்கு தன்னிடம் வம்பு செய்தவரை அடித்த கௌதமை கண்டவுடன், தன் தந்தை போல தன்னை காப்பவனாக தெரிய, அவனின் கரங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டான்.அன்று பிடித்த கை, அவர்கள் கல்லூரி வரையிலும் தொடர்ந்து.. அந்த பொல்லாத நாள் வரை…
ஆரனை வம்பிழுத்தவனை பார்த்தவன், “இவன் மேல கை வைக்கனுமின்னா, முதல்ல என்ன அடுச்சிட்டு அப்புறமா தொடுடா..!” என சவாலாக சொன்னவன், ஆரன் கரம் பற்றி தன்னோடே அழைத்து சென்று அமர வைத்தவன் , தனது ஸ்பூன் கொண்டே , அவனுக்கும் ஊட்டி தானும் உண்டு முடித்தான்.
தாயின் அன்பையும் , அக்கரையையும் இதுவரை அனுபவிக்காமலேயே, அதை பிறருக்கு கொடுக்கும் மனம் அவனின் பிறப்பிலேயே இருந்ததோ… அவனை படைத்தவனுக்கே அது வெளிச்சம்…
இந்த விசயம் நிர்வாகத்தை சென்றடைய, கௌதம் ,ஆரன் மற்றும் அந்த வாண்டுகளின் வீட்டிற்கு அழைப்பு பறந்தது. அனைவரையும் வைத்து விசாரித்த போது, தவறு அந்த வாண்டுகளின் மீது இருந்ததால் அவர்களுக்கு டிசி யை உடனடியாக தந்த நிறுவனம், கௌதமின் செயலுக்காக கண்டனத்தையும் தெரிவித்து, மன்னிப்பு கடிதம் தரவைத்தே விட்டனர்.
தங்கள் மகனுக்காய் இவ்வளவு தூரம் செய்த கௌதம் மேல் அந்த நிமிடமே சாம்வேலுக்கு நல்லெண்ணம் உண்டாகியிருந்தது.ஆனால் சக்கரவர்த்திக்கு அப்படி நடந்ததில், மிகப்பெரும் அவமானம் கிடைத்ததாய் நினைக்கிறார் ! என்பதை ஆரனை அவர் பார்த்த பார்வையிலேயே புரிந்து கொண்ட சாம்வேல், தன் மகனிடம் பேசி இனி கௌதமை நெருங்க விடாமல் வைத்திருக்க நினைக்க, அவரின் எண்ணத்திற்கு நேர் மாறாய் அவர்களின் நட்பு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே சென்றதை, தன் மகன் வாய் மொழியாய் கேட்டவர் , இது வரை எதற்கும் அதட்டி கூட இல்லாத தன் மகனை கண்டிக்கும் வழி புரியாமல் தவித்தார்.
‘குழந்தை மனம் தான் அந்தஸ்து, கௌரவம்,பணம், பதவி எனும் எந்த மோகமும் நெருங்கா அற்புத இடமாயிற்றே… அங்கு பாசத்திற்கு மட்டுமே திறவுகோல் உண்டு’.
கௌதமின் தாத்தாவோ அங்கே மன்னிப்பை வேண்டிவிட்டு , வீட்டிற்கு வந்ததும், இனி ஆரன் போன்ற மத்திய தரத்துடன் பழகுவதை தவிர்க்க சொல்லி அட்வைஸ் செய்ய , அப்போதைக்கு அதன் அர்த்தம் கூட சரியாக புரியாத குழந்தை, “சரி கிரேன்ப்பா….!” என சொல்லும் வரையிலும் விடவில்லை.
கௌதம், ஆரன் இருவரின் நட்பும் ஆரம்பித்த போது இரு வீட்டை பற்றி எதுவும் இருவருக்கும் தெரியாது. இருப்பினும் ஆரன், அவன் வீட்டில் எப்போதும் கௌதம் புகழ் பாடாமல் இருக்கமாட்டான். படிப்பிலும், விளையாட்டயிலும் என அனைத்திலும் முதலாவதாக இருக்கும் கௌதம் மீது அளவுகடந்த நேசம் ஆரனுக்கு.
அந்த நிகழ்வுக்கு பிறகு கௌதமிற்கு தன் தாத்தாவை காண்பதே அறிதாகி போனது .அவரும் கௌதம் பள்ளி செல்லும் வரையிலும் , முடிந்த வரை வெளியூர் பயணத்தை தள்ளி வைத்திருந்தவர், அதன் பிறகு அதில் முழு மூச்சாய் இறங்கிட அவனின் நட்பு பற்றி யாருக்கும் தெரியாமலே போனது.
‘ஆரனுக்காக , தான் எதற்கு சண்டை போட்டோம் !’ என்றே புரியாத போதும் ‘அவனுக்காக எதையும் செய்வேன்’ என்ற நிலைக்கு சென்று கொண்டிருந்தான் கௌதம் அவனின் தாத்தா அறியாதவாறு….
**********
ஆரன் ,கௌதமின் பிணைப்பை கௌதமின் தாத்தாவும் உணர்ந்து கொள்ளும் நாள் வந்தது. அந்த நாளுக்கு பிறகு கௌதமின் வாழ்வில் நடந்த அனைத்தும் , ஆரனுடன் சேர்ந்து தான், அவனின் தாத்தா அறிந்தே..
ஆரன், கௌதம் இருவரும் முதல் வகுப்பில் இருக்க, கௌதமிற்கு வந்த திடீர் அழைப்பை ஏற்று சென்றவனை கேள்வியுடன் பார்த்தவனுக்கு விடை தெரியாமல் , வீட்டிற்கு வந்தவுடன் எப்போதும் போல, “டாடி இன்னைக்கி கிளாஸ் ஸ்டார்ட் ஆன கொஞ்ச நேரத்தில கௌதம வந்து வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க. என்ன ரீஷன்னே தெரியல. அவன் இல்லாம எனக்கு அங்க இருக்கவே பிடிக்கல ” என சொல்லி சோகமாய் முகத்தை வைத்திருந்த மகனை பார்த்தவர்,
“ஆரன் செல்லம், அவன் வீட்டுல யாராவது கெஸ்ட் திடீர்ன்னு வந்திருப்பாங்க. சோ அவன கூட்டிட்டு போயிருப்பாங்க. நாளைக்கே வந்திடுவான் , பாரு! ” என சமாதானம் செய்தவருக்கு, உண்மை நிலவரம் தெரிந்திருந்தால் அது வேறு விதமாய் போயிருக்கும்…
அடுத்து ரெண்டு நாள் ஆகியும் கௌதம் பள்ளிக்கு வராமல் போக, அதை நினைத்து ஏங்கியே காய்ச்சலில் விழுந்தான் ஆரன். அவனின் மீது உயிரையே வைத்திருந்த பெற்றோர் தவித்து தான் போனார்கள் அவன் தூக்கத்திலும் ,”கௌதம் !” என்ற பேர் சொல்லி அனத்தும் போது…
சக்கரவர்த்தியின் குணத்தை அறிந்த சாமுவேல்,’ கௌதம்’ பற்றி கேட்கவும் முடியாமல், தனது மகனின் உடல்நிலையை நினைத்து கவலை கொண்டார். இந்த நிலையில் ஆரனின் உடல்நிலை மிகவும் மோசமாக , டாக்டர் சாமுவேலிடம், “சார், யார் அது கௌதம் ?” என்று கேட்க,
சாமுவேல் , “அந்த பையன் ஆரன் கூட படிக்கற பையன் தான் டாக்டர். ரெண்டு மூனு நாளா அந்த பையன் ஸ்கூல் வரல… அதான் … !” என கூறி முடிக்கும் முன்பு ,
மருத்துவர், “முதல்ல அந்த பையன கூட்டிட்டு வந்து அவன்கிட்ட விடுங்க. எல்லாமே சரியாகிடும். இப்படியே போனா உங்க மகனுக்கு தான் ஆபத்து.. ” என பெரிய குண்டை போட, ‘மானம் ,ரோசம் பார்த்தால் ,தனது குழந்தையின் உயிருக்கு ஏதாவது வந்திடுமோ ?!’ என்ற அச்சத்தில் , வேறு வழியில்லாமல் சாம்வேல் , கௌதமின் வீட்டிற்கு ஆரனையும் அழைத்துக் கொண்டு சென்றார்.
‘ஒருவேளை கௌதமை தங்களோடு அனுப்பாவிட்டாலும் , தன் மகன் கண்ணிலாவது, கௌதமை பார்க்கட்டும், அப்போதாவது அவனின் உடல்நிலை சரியாகிடாதா ?! ‘ என்ற ஏக்கத்தோடும், சிறிய பதட்டத்தோடும் தன் உடன் அழைத்து சென்றார் ஆரனை…
அங்கே அவர்கள் , சென்ற பிறகே கௌதமின் தாய் வசந்தசேனா , இறந்த செய்தி தெரிந்தது.’ துக்கம் நடந்த இடத்தில், தங்கள் பாசத்திற்காக உதவியை கேட்கலாமா? வேணாடாமா? ‘ என்ற எண்ணத்தில் இருந்தவரை, கலைத்தது அங்க பேசி கொண்டிருந்த இருவரின் வார்த்தைகள்…
“என்னப்பா சொல்ற.. ?ஆச்சர்யமா இருக்கு. அவனுக்கு மீறி போன அஞ்சு வயசு இருக்குமா? இவ்வளவு அழுத்தமாவா இருப்பான் !”என ஒருவர் சொல்ல…
“அட! நிஜமா தான் பெரியப்பா, வந்து அவன் அம்மா முகத்த பார்த்துட்டு போய் ஒரு இடத்துல உக்காந்த பையன் , ரெண்டு நாளா அந்த இடத்த விட்டும் அசையல, சோறு தண்ணின்னு எதுவும் இல்ல. அவனோட தாத்தா எவ்வளவோ கெஞ்சி மிரட்டி பார்த்திட்டு, ஒரு அடி கூட அடிச்சிட்டாரூ. ஊகூம் … ஒரு மாற்றமும் இல்ல. கண்ணுல ஒரு சொட்டு தண்ணி வரலையே , பையனுக்கு!
காலைல அப்படியே மயங்கி விழுந்த பையன வந்து பாத்த டாக்டர் , அவன் அழுகாத வரை அவனோட இந்த நிலை மாறாது . முதல்ல , அவன மனசு விட்டு அழுக வைங்கன்னுட்டு போயிட்டாரு. இப்படியே விட்டா பைத்தியம் ஆகிடுவானாமே !” என சொன்னதை கேட்டவர்,
ஒரு குழந்தையின் தந்தையாய் , கௌதமின் நிலை புரிந்து , ‘யார் , என்ன சொன்னாலும் சரி! இனி கௌதமை பார்க்காமல் செல்வதில்லை’ என்ற முடிவோடு , அந்த வீட்டினுள் காலடி எடுத்து வைத்தார். தன் மகனுக்காய் வந்தவர் இப்போது கௌதமிற்காக, எதையாவது செய்தே ஆக வேண்டும் என்ற உறுதியோடு அவன் அறையை அறிந்து அங்கே சென்றார்.
சாம்வேல் அந்த அறைக்கு சென்ற போது பார்த்தது, மெத்தையில் அமர்ந்து எங்கோ வெறித்துக் கொண்டிருந்த கௌதமையும், அவனின் நிலை கண்டு, தனது கம்பீரம் அனைத்தும் தொலைத்து , அவனை காக்க இயலாது போயிடுமோ ?! என தவித்து போய் கண்ணீரோடு, அவனின் கரம் பற்றி அமர்ந்திருந்த சக்கரவர்த்தியையும் தான்…
மெல்ல அறைக்குள் வந்தவர் , தன் கரத்தில் இருந்த ஆரன் இறக்கி விட்டு, “கௌதம் ..!” என்று அழைக்க எந்த சலனமும் இல்லை அவனிடம்… சக்கரவர்த்தி , முதலில் இவர்களை பார்த்தவர் முகத்தில் ஒவ்வாதன்மை காட்டினாலும், அதை ஒரு பொருட்டாகவே கொள்ளாமல், தனது முயற்சியே கைவிடாதவராய் , “கௌதம், இங்க பாரு ஆரன் வந்திருக்கான்!” என கூற, அப்போதும் அதே நிலை தான்.
ஆரனுக்கு , எப்போதும் தன்னிடம் பெரிய மனிதன் போல் தனக்காக எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்யும் தன் நண்பன், இப்போது ஒரு பொம்மை போல அமர்ந்திருப்பதை பார்த்தவன் , தனது உடல்நிலையை மறந்து மெல்ல அந்த மெத்தையில் ஏறி, யாருமற்று அமைதியாய் ஒரே இடத்தை வெறித்திருந்த கௌதமிடம் சென்றவன், அவனின் கரத்தை தொட்டவுடன் , அவனை பார்த்தவன் கண்கள் சொன்ன செய்தி, ஆரனுக்கு என்ன உணர்த்தியதோ,
ஆரன் கைகள் கௌதமை தழுவிக்கொண்டது…. அடுத்த நொடி இதுவரை வெளிவிடாத கண்ணீர் மழை கௌதமிடமிருந்து! அவன் தாத்தாவே அதிசயத்து நின்ற இடம் அது. அவரின் மனதில் பெரும் மாற்றத்தை கொடுத்த நிகழ்வும் அதுவே…
பணத்தையும் ,கௌரவத்தையும் பெரிதாக நினைத்திருந்தவருக்கு, அந்த பணமும் , கௌரவமும் செய்யாத செயலை ஒரு சிறுவன் செய்திருப்பது அதிசயம் கலந்த அதிர்ச்சி தான். அவரும் தனது பேரனின் நிலையை எண்ணி கலங்கி நின்றிருந்தவர் தானே.
ஆரனுக்கோ , கௌதமின் இந்த அழுகை மிகவும் புதிது. அவன் இதுவரை எந்த நேரத்திலும் அழுது பார்த்திராதவன், அவனின் அழுகையில், ஆரனும் சேர்ந்து கொள்ள, சாம்வேலுக்கோ தன் மகனின் உடல்நிலை அச்சத்தை கொடுத்தது.
இருவரையும் நெருங்கி வந்தவரை கண்ட சக்கரவர்த்தி தானே அவருக்கு இடம்விட்டு நகர , அவரின் மாற்றம் புரிந்து , கண்களால் நன்றி கூறியவர், இருவரையும் அனைத்து ஆறுதல் கூற வந்தவர்,
மனதில் உள்ள பாரமும் , அழுத்தமும் குறைந்த கௌதம் , அப்போது தான், தன் மீது பாரம் ஏறுவது புரிந்து யோசித்தவனுக்கு, ஆரனின் உடலில் இருந்த சூடு புரிய, “ஆரா ,உனக்கு என்னடா ஆச்சு..?!” என பதறி விலக்க ,தனது உடல்நிலையால் கௌதம் மீதே மயங்கி சரிந்திருந்தான் ஆரன்.
அங்கு நிகழ்ந்ததை பார்த்த சக்கரவர்த்தி, உடனடியாக தனது வீட்டிற்கே மருத்துவரை வரவைக்க, ஆரனுக்கு அங்கேயே சிகிச்சை ஆரம்பித்து. அடுத்து அவன் கண் திறக்கும் வரை , அவன் கைகளை பிடித்த படி அவனின் முகத்தையே பார்த்திருந்த பேரனை பார்த்தவர் , அப்போதே முடிவு செய்து விட்டார் ,’இனி தன் பேரனின் இந்த பாசத்திற்கு தடையாக இருக்க கூடாது’ என…
அன்றைக்கு மட்டுமல்ல அதை தொடர்ந்து மூன்று நாள்களும் , ஆரனை விட்டு விலக கௌதம் மறுக்க, ஆரனின் சிகிச்சை அங்கேயே தொடர்ந்தது. என்ன இருந்தாலும் சக்கரவர்த்தியின் குணம் பற்றிய முழு தெளிவும் இல்லாத நிலையில் தங்களின் மகனை அழைத்து செல்ல சாமுவேல், ஜெனிபர் முயல,
சக்கரவர்த்தியே நேரடியாக , சாமுவேலிடம் வந்தவர், ” தம்பி, எனக்கு இருக்கற நம்பிக்கை, எங்க வம்ச எதிர்காலம் எல்லாமே என்னோட பேரன் கௌதம் தான். அவன் அப்படி சித்தபிரம்மை பிடிச்ச மாதிரி இருந்தப்ப இந்த பணம் எதுவுமே செய்யலையேப்பா. உன் மகன் கொடுத்த ஆறுதல கூட , இந்த கிழவனால கொடுக்க முடியல. இப்ப அவனுக்கு தேவை எதுன்னு நல்லா புரிஞ்சிடுச்சு எனக்கு.
அவனோட மனசு ரொம்பவும் நொந்து போயிருக்கு.. அதுக்கு இப்போதைய மருந்து உன் மகன் தான்… உனக்கு ஆட்சேபனை இல்லன்னா , இங்க எங்க வீட்டுலையே , ஒரு ரெண்டு மூனு நாள் நீங்களும் வேணுமின்னா தங்கிக்கோங்க . நிரந்தரமாவே இருக்க சொல்லி கேட்டிருப்பேன். ஆனா அதற்கான தகுதிய நா இழந்துட்டேன். ” என கைகளை பிடித்து கெஞ்ச, வயதில் பெரியவர் அவரிடம் இறஞ்சுவது பிடிக்காத சாம்வேலும் அங்கேயே தங்கினார்.. தன் மனைவி ஜெனிபரோடு..
தாய் அன்பு என்பதை ஒராளவிற்கு புரிந்து கொண்டது அவரிடம் தான் கௌதம். தன் தாய்க்கு தன் மீது பாசமிருந்தாலும் ஒரு நாளும் அவரால் அதை கௌதமிற்கு காட்ட முடியாத நிலையில், புதிதாக ஒருவர் காட்டும் பாசத்தை முழுமையாக அனுபவிக்கவும் முடியாது , தவிர்க்கவும் முடியாது போகவே அமைதியாய் அந்த சூழலை ரசிக்க ஆரம்பித்தான் கௌதம்.
அதன் பிறகு ,’கௌதமிற்காக !’ என , எதை செய்தாலும் , அதே போல ஆரனுக்கும் செய்ய ஆரம்பித்தார் சக்கரவர்த்தி.
எவ்வளவோ சாம்வேல் மறுத்தும் , அவர் செய்ய நினைத்ததை செய்து கொண்டே தான் இருந்தார் கௌதமை கொண்டு. இயல்பிலேயே பிடிவாதம் கொண்ட கௌதமின் பிடிவாதத்தை சாம்வேலால் மட்டும் மாற்றிடவா முடியும்.
சக்கரவர்த்தி, சாம்வேலின் தொழிலிலும் தலையிட முயல, அதை மட்டும் அறவே மறுத்துவிட்டார் சாம்வேல்….” ஆரனுக்கு நீங்க செய்யறது வேறங்க. ஆனா இது நா உருவாக்க நினச்சு நானே ஆரம்பிச்சது. அதுல என்னோட உழைப்பு தான் இருக்கனும் . புரிஞ்சுப்பீங்கன்னு நினைக்கறேன். ” என்றவரை மேலும் வற்புறுத்தாமல் , மறைமுகமாக அவருக்கான தொழிலில் உதவிகளை செய்து வந்தார் .
கௌதமின் முரட்டுதனம், பிடிவாதம், கோபம், அனைத்து குணத்தையும் பிரட்டி போட்டு மாற்றிட அவனின் தேவதை அவன் வாழ்வில் வரும் வரை எல்லாமே சரியாக தான் இருந்தது.