SSKN — epi 20

அத்தியாயம் 20

 

ஒரு சிறு வலி இருந்ததுவே

இதயத்திலே இதயத்திலே

உனதிரு விழி தடவியதால்

அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே…

 

திருமணம் முடிந்து இவர்களுடனே வாழ வந்தான் நீலாவின் கணவன் பாபு. சங்கர் விளையாட்டுத்தனமாக கிரிக்கேட் ஆடி படிப்பில் கவனம் வைக்க மறுப்பதால், அவனை ஹாஸ்டலில் சேர்த்துப் படிக்க வைத்துக் கொண்டிருந்தாள் மீரா. ஆகவே வீட்டில் பாபுவுடன் இவர்கள் மூன்று பெண்கள்தான்.

மீராவை ரொம்ப மரியாதையாக நடத்துவான் பாபு. அண்ணி, அண்ணி என அவன் கூப்பிடும் போது மகிழ்ந்துப் போவாள் மீரா. பல சமயங்களில், காபி முதல் சாப்பாடு வரை மீராவையே செய்து தர சொல்லுவான். நீலாவுக்கு பூ வாங்கி வந்தால், மீராவுக்கும் சேர்த்து வாங்கி வருவான். நீலாவுக்கு சேலை எடுக்கும் போது, மீராவுக்கு இன்னும் கொஞ்சம் அகல பார்டர் வைத்து எடுத்துக் கொடுப்பான். தின்பண்டங்கள் இருந்து படத்துக்குப் போவது முதல் எல்லாவற்றையும் இருவருக்குமே சேர்த்து செய்தான் பாபு.

வீட்டின் பொருளாதார நிலையை உயர்த்தி, தன் மகள்களையும் பாசமாகப் பார்த்துக் கொள்ளும் பாபு மீது கங்காவுக்கு கடவுள் பக்தியே இருந்தது. மருமகன் சொல்வது வேதவாக்காகி போனது அவருக்கு. பாபு, நீலா சந்தோஷ வாழ்க்கையின் விளைவாக நீலா கருவுற்றாள்.

அப்பொழுதுதான் பாபு, மீராவை கடையை விற்று விட்டு வீட்டோடு இருக்க சொல்லி வற்புறுத்தினான்.

“மாப்பிள்ளைதான் சொல்லுறாருல! வீட்டுல இருந்து தங்கச்சியப் பார்த்துக்க மீரா. கடையில கிடந்து கஸ்டப்படனும்னு இன்னும் என்ன தலையெழுத்து? வீட்டை இழுத்து பெருசா கட்டிட்டாரு மாப்பிள்ளை. வீட்டு செலவு எல்லாத்தையும் பார்த்துக்குறாரு. இன்னும் நீ ஏன் கஸ்டப்படனும்னு ரொம்ப வருத்தப்படறாருடி” என கங்காவும் ஒத்து ஊதினார்.

தந்தை ஆரம்பித்த தொழிலை மட்டும் விட்டுவிட ஏனோ மீராவுக்கு மனம் வரவில்லை. மற்ற விஷயங்களில் பாபுவின் சொல் கேட்டு நடப்பவள், இதை மட்டும் தீவிரமாக மறுத்தாள்.

யாரும் இல்லாத தனிமையில் ஒரு நாள்,

“நான் சொன்னா கேட்க மாட்டியா மீரா? நான் ராப்பகலா பாடுபட்டு சம்பாதிக்கறனே, யாருக்காக? உனக்காகத்தானே! இன்னும் அந்த தையல் மிஷின் கூட போராடனும்னு உனக்கு என்ன தலை எழுத்து?” என கேட்டான் பாபு.

அண்ணி மீராவானதில் திகைத்துப் போனாள் மீரா.

“பாபு! என்ன பேர் சொல்லி கூப்புடறீங்க?”

“சொல்லிக் கூப்புடத்தானே பேரு மீரா? ஸ்ட்ரோங்கா இந்த வீட்டுல பவுண்டேஷன போட்டு யாரும் என்னை அசைக்க முடியாத அளவுக்கு மாப்பிள்ளையா உட்கார்ந்துட்டேன். நான் எள்ளுன்னா உங்கம்மா எண்ணெயா நிப்பாங்க! உன் தங்கச்சியும் தான். பிள்ளை குடுத்த நான் அவளுக்கு கடவுள். அதனால இனிமே இந்த அண்ணி நொண்ணி வேஷமெல்லாம் வேணாம்னு முடிவு பண்ணிட்டேன் மீரா.” அவள் முகத்தைப் பார்த்து கண்ணடித்தவாறே புன்னகைத்தான் அவன். இவளுக்கு உள்ளுக்குள் கிலி பிடித்தது.

அன்றிலிருந்து அவன் முன்னே வரவே தயங்கினாள் மீரா. முடிந்த அளவு கடையிலேயே குடி இருந்தாள். தூங்க மட்டும் வீட்டுக்கு வந்து, அவன் எழும் முன் கடைக்குப் போய் விடுவாள்.

தன்னிடம் பாபு ஒரு மாதிரியாக பேசுகிறான் என அம்மாவிடம் சொல்லலாம் என போன போது,

“அத்தை, அண்ணி ரொம்பப் பாவம்! அவங்களுக்கு நான் முடிஞ்ச அளவுக்கு ஒரு நல்ல வரனா பார்க்கறேன். இத்தனை வயசுக்கும் அவங்க உணர்ச்சிய அடக்கி வச்சிட்டு குடும்பத்துக்காக உழைக்கறாங்க. என்னைக்காச்சும் அவங்கள மீறி தப்புப் பண்ணிட்டா நம்ம குடும்பத்துக்குத் தானே அசிங்கம்” என பாபு  சொல்வதும் தன் அம்மா அவனின் கூற்றை ஒட்டிப் பேசுவதையும் கேட்டாள். மனம் சுக்கு நூறாக வெடித்துப் போனது மீராவுக்கு.

முதிர்கன்னியாக இருக்கும் இவர்கள் எப்போதடா தவறி விழுவார்கள் எள்ளி நகையாடலாம் என காத்திருக்கும் சமூகத்தை வெறுத்தாள். தொட்டு சில்லறை தரும் கடைக்காரனை, மனைவியின் ரவிக்கையை வாங்குவது போல வந்து கைப்பிடித்து காசு கொடுக்கும் கணவன்மார்களை, காஞ்சு போய் கிடப்பா தொட்டா விழுந்துருவாடா என பேசும் ரோட்டோர ரோமியோக்களை என ஆண் இனத்தையே வெறுக்க ஆரம்பித்தாள் மீரா.

எப்பொழுதும் தனக்கு முகம் சுளிக்காமல் புன்னகையுடன் பணிவிடை செய்யும் மீரா தன்னிடம் முகம் கொடுத்துப் பேசாமல் இருப்பது பாபுவுக்கு வெறியையே உண்டு பண்ணியது. அவள் விலக விலக இவனுக்கு நெருங்க வேண்டும் எனும் ஆசை கொழுந்துவிட்டு எரிந்தது.

அன்று மனைவியையும் மாமியாரையும் கோயிலுக்கு அழைத்து சென்றான். இவர்கள் போய் விட்டு ராத்திரிதான் வருவார்கள் எனும் விஷயம் மீராவுக்கு கேட்கும்படி பார்த்துக் கொண்டான். யாரும் இல்லையே கொஞ்ச நேரம் நிம்மதியாக தூங்கலாம் என வீட்டுக்கு வந்தாள் மீரா. கசகசவெனெ இருக்கவும் குளித்து சேலை மாற்றிக் கொண்டவள், அக்கடாவென கட்டிலில் விழுந்தாள்.

அப்பாவை நினைத்துக் கொண்டு கொஞ்ச நேரம் கண்ணீர் சிந்தினாள். பாபுவின் விடாமல் தொடரும் பார்வைக் கணைகளை நினைத்து அழுதாள். தங்கை வாழ்க்கை தன்னால் சிக்கல் ஆகுமோ என கலங்கினாள். வீட்டை விட்டு வெளியேப் போனால் கழுகு போல் கொத்தித் தின்ன காத்திருக்கும் மற்ற ஆண்களை நினைத்து பயந்தாள். அழுது அழுது அசதியில் ஆழ்ந்து உறங்கிவிட்டாள் மீரா. கழுத்தில் என்னவோ ஊறுவதைப் போல இருக்க மெல்ல கண் விழித்தவள் தன் கழுத்தில் முத்த ஊர்வலம் நடத்திக் கொண்டிருக்கும் பாபுவைப் பார்த்து அதிர்ந்துப் போனாள்.

ஆத்திரமாக அவனை உதறித் தள்ளி எழுந்து நின்றாள் மீரா.

“சீச்சி! இப்படிலாம் நடந்துக்க உனக்கு அசிங்கமா இல்ல? அண்ணின்னா அம்மா மாதிரிடா பாவி! உன்னோட பல வயசு மூத்தவடா நானு, அறிவு கெட்ட ஜென்மமே!” என பொங்கி விட்டாள்.

கடகடவென சிரித்தான் பாபு.

“உன்னை யாரு அவசரக்குடுக்கையா எனக்கு முன்ன பொறக்க சொன்னா? இப்போ பாரு எனக்கு நாக்க சுத்தி மூக்கத் தொடற மாதிரி எவ்வளவு கஸ்டமா இருக்கு. உன்னை அண்ணின்னு நான் கூப்பிட்டதெல்லாம் சும்மாடி மீரா! அண்ணின்னு வாய் சொன்னாலும், மனசுல என் காதல் மன்னின்னு நினைச்சுக்குவேன்! உன் தங்கச்சிய கட்டறதுக்கு முன்ன இருந்தே எனக்கு உன் மேலத்தான் காதல். எத்தனை முறை உன் கடை முன்னுக்கு பைக்ல குறுக்கும் நெடுக்கும் போயிருப்பேன்! திரும்பியே பார்க்கலையேடி பாவி! நாய் மாதிரி உன் பின்னால சுத்தி இருக்கேன். குனிஞ்ச தலை நிமிர்ந்தா தானே நான் பின்னால வரது தெரியும். எப்ப பாரு பாடிகார்ட் மாதிரி உன் தம்பிய வேற கூட கூட்டிக்கிட்டு சுத்திட்டு இருந்த. லவ்வுதான் முடியலைன்னு தரகர விட்டு பொண்ணு கூட கேட்க சொன்னேன். யாரு என்னன்னு கூட விசாரிக்காம கல்யாணம் வேணான்னு ஒத்தக்காலுல நின்னுட்ட! என்னை என்னடி செய்ய சொல்லுற? உன்னோட சின்னவனா பொறந்தது என் குத்தமா? இல்லை இந்தப் பாழா போன காதல் ஊருல உள்ளவ எவ மேலயும் வராம உன் மேல வந்தது என் குத்தமா?”

“காதல் கீதல்னு உளறாதடா”

“என் காதல் உனக்கு உளறலா மீரா? இது தெய்வீக காதல்டி! உனக்காக உன் கூறுகெட்ட தங்கச்சிய காதலிக்கற மாதிரி நடிச்சு, உன் வீட்டுக்குள்ள நுழைஞ்சேன். உனக்கு குடுக்க வேண்டிய என் கற்ப அவளுக்குத் தாரை வார்த்துக் குடுத்தேன். எல்லாம் உன் பக்கத்துலயே இருக்கனும், உன் காதல பெறனும்னு தான். எத்தனை தடவை உன் கைப்பிடிச்சு தம்ளர் வாங்கிருப்பேன், பாத்ரூம்ல இருந்து துண்டு கேட்டுருப்பேன், நெத்தியில திருநீறு வச்சி விட்டுருப்பேன், ரோட்டுல போறப்போ தோளுல கைப்போட்டு கூட்டத்துல இருந்து நகர்த்திருப்பேன்! அப்போலாம் காதல் எனக்கு அப்படியே பத்திக்கிட்டு எரியும்டி! ஆனா நீ கல்லையும் மண்ணையும் பார்க்கற மாதிரி பார்த்து வச்ச. நெஞ்சு கொதிக்குதுடி உன்னோட பாராமுகத்தால”

“உன்னை என் தம்பி மாதிரி நினைச்சேன்டா! நீ காட்டனது பாசம்னு நம்பினேன்” கண் கலங்க கத்தினாள் மீரா.

“பாசம் தான் மீரா. காதல், காமம், அன்பு எல்லாம் கலந்த மிக்சிங் அது. உனக்கே உனக்கான மிக்சிங். உன் தங்கச்சிய சகிச்சுக்கிட்டது கூட நம்ம காதல வாழ வைக்கத்தான் மீரா. இதுக்கு மேலயும் என்னால பொறுக்க முடியாது மீரா. என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ. உன் தங்கச்சியும், அவ புள்ளயும் ஒரு மூலைல இருந்துட்டுப் போகட்டும். எனக்கு நீதான் வேணும்”

“பைத்தியாமாடா உனக்கு? நீ சொல்லறத கேட்கவே கேவலமா இருக்குடா”

“டா! டான்னா சொல்லுற? நல்ல இருக்கு மீரா! அப்படியே கூப்பிடு! நீ டான்னு கூப்பிடறது கூட எனக்கு பரவசமா இருக்கு. பாரேன், பாரேன் கை முடிலாம் எப்படி சிலிர்த்துக்கிச்சுன்னு”

பாபுவிடம் தனியாக சிக்கிக் கொண்ட தன் நிலையை எண்ணி மறுகினாள் மீரா.

“ஏண்டி என்னை விட்டு இப்போலாம் விலகிப் போற? இன்னிக்கு இதுக்கு ரெண்டுல ஒன்னு முடிவு கட்டனும்னு தான் அவங்க ரெண்டு பேரையும் கோயில்ல விட்டுட்டு பர்ஸ்ச மறந்துட்டேன்னு வீட்டுக்கு வந்துருக்கேன். என்னைக் கல்யாணம் பண்ணிப்பியா இல்லையா?”

“முடியாது முடியவே முடியாது”

“இந்த ஊருக்கு பாட்டியைப் பார்க்க வந்தவன், எதுக்கு இங்கயே கடை வச்சேன்னு நினக்கற மீரா? உன்னைப் பார்த்துதான்! கோயிலுக்கு பச்சை கலர் சாரி கட்டி, தலை நிறைய மல்லிப்பூ வச்சி, தேவதை மாதிரி நடந்து போன உன்னைப் பார்த்து நான் தொபுக்கடீர்னு காதல்ல விழுந்துட்டேன் மீரா. அப்போ உன் வயசோ, குணமோ, ஜாதியோ எதுவும் என் கண்ணுக்குத் தெரியல. நீ எனக்கு வேணும் மீரா, இந்த அழகு எனக்கு வேணும். இதுக்காக நான் என்ன வேணும்னா செய்வேன்”

தலையை முடியாது என ஆட்டியப்படியே மெல்லப் பின்னால் நகர்ந்தாள் மீரா.

“அப்போ சரி! ஆதி காலம் தொட்டு ஆம்பிளைங்க அடங்காத பொண்ணுங்கள எப்படி கைப்பிடிச்சாங்களோ, அதையே நானும் செய்யறேன். உன் கூட ஆசையா கூடனும்னு தான் எனக்கு ஆசை மீரா! என்னை இப்படி அதிரடியா நடக்க வைக்கறது நீதான். இன்னிக்கு நமது சங்கமம். அதுக்குப் பிறகு உன் நெத்தியில வைக்கிறேன் குங்குமம்”

மீரா ஓட எத்தனிக்க அவள் புடவையின் முந்தானை அவன் கைகளுக்குள் அகப்பட்டிருந்தது.

“இப்படி செய்ய எனக்கு மனசே வரல. கல்யாணத்துக்கு ஒத்துக்கோ மீரா!” அப்பொழுது கூட கெஞ்சினான்.

புடவையை இவள் இழுக்கப் போராடவும், அவனுக்கு கோபம் வந்துவிட்டது. ஆத்திரத்தில் ஒரே இழு, மொத்த புடவையும் அவன் கையில் வந்துவிட்டது. மீராவுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ! அவன் அருகே சென்று பளாரென ஓர் அறை அறைந்தாள். அவன் திகைத்து நிற்க கையில் இருந்த புடவையை பிடிங்கிக் கொண்டாள்.

கையில் சேலையைப் பிடித்துக் கொண்டு, பாவாடை ரவிக்கையோடு வெளியே வந்தவள், அப்பொழுதுதான் உள்ளே வந்த அம்மாவையையும் தன் தங்கையையும் பார்த்து அதிர்ந்தாள். களைப்பில் மயக்கம் வருவது போல இருக்கிறது என நீலா சொல்லவும், ஆட்டோ பிடித்து வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார் கங்கா.

கதறலுடன் தாயை நோக்கி ஓடியவளை தடுத்து நிறுத்தினாள் நீலா.

“நான் அப்பவே சொன்னேன்லமா, இவளுக்கு என் புருஷன் மேல ஆசைன்னு, நீதான் நம்பல. இப்ப உன் கண்ணால பாரு! சேலையை கழட்டிட்டு அவர் முன்னால போய் நின்னு மயக்கி இருக்கறத! சீச்சீ! இதுக்கு நொண்டியோ முடமோ எவனையாச்சும் நீ கட்டி வச்சிருக்கலாம்மா இவளுக்கு! ஆசை வெக்கம் அறியாம இப்போ என் வாழ்க்கையிலேயே மண்ண அள்ளி போட துணிஞ்சிட்டாம்மா!” என ஒப்பாரி வைத்தாள்.

மீரா தன் தங்கையின் அபாண்டமான குற்றச்சாட்டில் திகைத்துப் போய் நின்றாள்.

“அம்மா!” என தன் அம்மாவைப் பாவமாகப் பார்த்தாள் மீரா.

“பேசாதடீ! அப்பவே தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன் கல்யாணம் பண்ணிக்கோ, பண்ணிக்கோன்னு. என்னமோ குடும்பத்த நிமிர்த்தி வைக்கிறேன்ற பேருல ஆம்பளை கணக்கா திரிஞ்ச! இப்ப காலம் போன காலத்துல தங்கச்சி புருஷனையே…வாயே கூசுது எனக்கு” கோபத்தில் அறைந்து தள்ளி விட்டார் மீராவை.

“அத்தை அவங்கள அடிக்காதீங்க!’ என கோபமாக சப்போர்ட்டுக்கு வந்தவன் மீராவிடம் இருந்து கங்காவைத் தள்ளிவிட்டான்.

“பாரு மாப்பிள்ளைய! நீ இவ்வளவு கேவலமா நடந்தும் அவரு உன்னை தாங்கிப் பேசறாரு”

கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள் மீரா. அவர்கள் முன்னாலேயே கலண்டிருந்த சேலையை பதட்டமே இல்லாமல் கட்டினாள். பின் ரூமின் உள்ளே போனவள், தன் பெட்டியில் தேவையான துணிமணி, அவளது சர்டிபிகேட்கள், நகை, பணம் எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்.

ரூமில் இருந்து வெளியே வந்தவளை, கங்கா தடுத்து நிறுத்தினார்.

“நில்லுடி! பெட்டியோட எங்க போற?”

“எப்பப் பெத்த பொண்ணை விட கண்டவன்லாம் உனக்குப் பெருசா போயிட்டானோ, இதோட நம்ம உறவு முறிஞ்சுப் போச்சு. இனி நீ எனக்கு அம்மாவும் இல்ல, நான் உனக்கு மகளும் இல்ல. எவ்வளவோ என் ஆசைய அடக்கி, இளமைய அடக்கி இந்த குடும்பத்துகாக ஓடா தேஞ்சிருக்கேன்! ஆனா உனக்கு உன் ரெண்டாவது மகளும் பணத்தோட இருக்கற உன் புது மருமகனும் முக்கியமா போச்சு. அவன் பேச்சு வேதமா போச்சு! விட்ரு, இனி என் வழிய நான் பார்த்துக்கறேன். என்னைப் பெத்து வளர்த்த கடமைக்கு மாசம் மாசம் பணம் குடுக்கறேன். என் கூட பொறந்த கடமைக்கு சங்கர படிக்க வைக்கறேன். அவ்வளவுதான் இனி நமக்குள்ள! செத்தாலும் உன் மூஞ்சில இனி முழிக்க மாட்டேன்”

“இருடி! நீ வெட்டிக்கிட்டாலும் பெத்தவ நான் அப்படியே விட்டற முடியுமா? என்ன நினைச்சு உன் தங்கச்சிப் புருஷன் முன்னாடி அப்படி ஒரு கோலத்துல நின்னியோ, அத அவர நிறைவேத்திக் குடுக்கறேன்னு சொல்லிட்டாரு. ஆமாடி, உன்னை கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லிட்டாரு!”

“சீச்சீ! அவன் அப்படி சொல்லுறானா, அவன செருப்பக் கொண்டு அடிச்சிருந்தீனா நீ என் அம்மா! இப்படி அவனுக்கு பரிஞ்சிகிட்டு என் கிட்ட வந்துப் பேசுறியே, என்னை நீதான் பெத்தியாமா? உன் மக இப்படிலாம் பண்ணுவாளான்னு ஒரு நிமிஷம் யோசிச்சியா?”

“உன் மேல நம்பிக்கை இருந்தாலும், உன் உணர்ச்சிகள் மேல எனக்கு நம்பிக்கை இல்லைடி. கல்யாணம் ஆகாம இத்தனை வயசு வரைக்கும் இருந்தா இப்படித்தான் துணை தேட ஏங்கும்டி!”

அதற்கு மேல் மீரா ஒன்றுமே பேசவில்லை. வாசலில் கால் வைத்தவள், மீண்டும் உள்ளே வந்து பாபுவின் முன் நின்றாள்.

அவன் மெல்லிய குரலில்,

“எங்கே பெட்டியத் தூக்கிட்ட மீரா? இப்ப கூட ஒன்னும் கெட்டுப் போகல, உங்கம்மாவும் உன் தங்கச்சியும் சம்மதிச்சிட்டாங்க. என்னக் கட்டிக்கோ மீரா! உன்னை கண்ணுக்குள்ள வச்சிப் பார்த்துக்குவேன்! உன் தங்கச்சிய தொடக்கூட மாட்டேன். எனக்கு நீ மட்டும் போதும் மீரா. வீட்டை விட்டுப் போனா கூட உன்னை விட மாட்டேன். நீ எனக்குத்தான் மீரா” என அழுத்தமாக சொன்னான்.

“போறதுக்கு முன்ன இன்னும் நாலு குடுக்கனும்னு தோணிச்சு! அதான் திரும்பி வந்தேன்” என்றவள் அவன் இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தாள்.

அதைக்கூட சுகமாக ஏற்று மீராவையே ஆசையாகப் பார்த்திருந்தான் பாபு.

“உன்னை நம்பி வயித்துல வாங்கிட்டு நிக்கறாளே, அவள ஒழுங்கா பாத்துக்கோ! என்னை தேடி மட்டும் வந்த, பெட்ரோல் ஊத்தி நீ ஆசையா தடவிப் பார்த்த இந்த உடம்ப கொழுத்திக்குவேன்! எங்கப்பா மேல சத்தியமா கொழுத்திக்குவேன்!”

கண்களில் வலியுடன் திகைத்து நின்றவனைத் துச்சமாகப் பார்த்தவள் விடுவிடுவென வெளியேறிவிட்டாள்.

ஒரு மாதம் தையல் கடையில் வேலை செய்யும் அக்கா வீட்டில் தங்கி இருந்தாள். கடை ஆரம்பித்ததில் இருந்து வேலைக்கு இருக்கும் அவரிடம், கடையை அவசர விலைக்கு விற்று, அந்தப் பணத்தை வெளிநாட்டு வீட்டு வேலைக்கு ஆள் தேடும் ஏஜென்சியில் கட்டி அமெரிக்கா வந்தாள் மீரா. வாழவே பிடிக்கவில்லை அவளுக்கு. அந்த பாபு இருக்கும் நாட்டில் கூட இருக்கக் கூடாது எனத்தான் வெளிநாடு வந்தாள். கூட்டி துடைத்தாலும் மானமாய் இருக்கலாம் என நினைத்தாள். உள்நாட்டில் வாலாட்டுபவர்களையே தடுக்க முடியவில்லையே, அந்நிய தேசத்தில் எப்படி வாழ்வது என கலக்கம் இருந்தது. நல்ல மனிதர்கள் முதலாளியாக அமைந்தால் வாழ்ந்துப் பார்ப்பது, இல்லையென்றால் அனாதையாக செத்து மடிவது எனும் முடிவோடுதான் அமெரிக்காவில் பாதம் பதித்தார் மீரா. கடவுள் கருணையால் வெங்கியிடம் தஞ்சம் புகுந்திருந்தார்.

சொன்ன மாதிரியே மாசா மாசம் சம்பளத்தில் பாதியை தம்பி பேருக்கு போட்டு விடுவாள். ஹேரியைப் பார்க்க வரும் பணத்தையும், மீதி சம்பளத்தையும் சேமித்து வைக்கிறாள். தன்னைப் போல முதிர்கன்னிகளுக்கு ஒரு இல்லம் அமைத்து கடைசி காலத்தில் இந்தியாவில் காலத்தை ஓட்டி விடலாம் என்பதுதான் அவளது திட்டம்.

தன் கதை முழுவதையும் சொல்லி முடித்தவளுக்கு, அழுகை நின்றிருந்தது. வெங்கி எனும் அன்பு மரத்தின் நிழல் இருக்கும் போது இனி கண்ணிலிருந்து நீர் வருமோ!

ஆறுதலாக மீராவை அணைத்துக் கொண்டார் வெங்கி. அவள் உச்சியில் இதழ் பதித்தவர்,

“இவ்வளவு கஸ்டத்தைத் தாண்டி வந்துருப்பன்னு நான் நினைக்கவே இல்லை மீரா” என சொன்னார்.

“அவன கொன்னுப் போடனும்னு வருது எனக்கு” கை முஷ்டிகள் இறுகியது அவருக்கு.

“விடுங்க வெங்கி! அவன் புள்ளைக் குட்டின்னு குடும்பஸ்தன் ஆகிட்டான். ஆனா எங்கம்மாவ மட்டும் ஒதுக்கி வச்சிட்டான். என்னை அவன் முன்னுக்கு அடிச்சதனாலயா இருக்கும். என் தங்கச்சியையும் பிள்ளைங்களயும் கூட  அவங்க கண்ணுல காட்டறது இல்லையாம்.  அதுனால தான் அவங்களுக்கு என் மேல அவ்வளவு கோபம். நான் அவன் கூடவே வாழ்ந்திருந்தா அவங்களும் என் தங்கச்சி பேர பிள்ளைன்னு நிம்மதியா இருந்துருப்பாங்க. அதை நான் கெடுத்துட்டேன்னு வெறி. தம்பி தனி வீடு எடுத்து தங்க வச்சிப் பார்த்துக்கறான். ஆனாலும் அவங்களுக்கு நீலா மேலத்தான் அடிச்சிக்குது பாசம்.” பெருமூச்சொன்றை விட்டார் மீரா.

“நீ என்ன சொன்னாலும் எனக்கு மனசே ஆறல!” மீரா தங்கைக்காக அவனை விட்டுவிட சொன்னாலும், மனதில் அவன் கை காலையாவது உடைக்க வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டார் வெங்கி. இங்கிருந்து பணம் கொடுத்தால், அங்கே முடிக்கவா ஆளில்லை!

அந்த முடிவிற்கு பிறகே அவர் சகஜமாகப் பேசத் தொடங்கினார்.

“இந்த அனுபவங்களாலத்தான் எனக்கு உங்க கூட பழக பயமா இருந்துச்சு வெங்கி. நீங்க வேற என்னை எப்பப்பாரு வெறிக்க வெறிக்க பார்ப்பீங்களா, ரொம்ப பயமா இருக்கும்”

“என்னது? வெறிக்க வெறிக்கப் பார்த்தேனா? நான் ரொமேண்டிக்கா பார்க்கறதால நினைச்சேன்”

“ஹ்கும்! நான் என்ன செஞ்சாலும் உங்க கண்ணு என்னையே சுத்தி வரும். கண்ணுக்கும் வாய்க்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி வாய் பாட்டுக்கு என்னைத் திட்டிட்டே இருக்கும். நீங்க திட்டறப்போ எனக்கு சந்தோஷமாத்தான் இருக்கும். நம்ம கிட்ட கடலைப் போடாம, பார்க்கறப்பலாம் திட்டறாரேன்னு மகிழ்ச்சியாயிருவேன்.”

“அதெல்லாம் சும்மா, மனசுல ஒன்னு வச்சிக்கிட்டு வாயில ஒன்னு சொல்லுறது. நீ வந்த ஒரு வருஷத்துல அப்படி பேசறதுல நான் பி.எச்.டியே வாங்கிட்டேன். “ சிரித்தார் வெங்கி.

“கவியால தான் டேட்டிங் ஒத்துக்கிட்டேன். அதுவும் அவ என்னைப் போட்டு மிரட்டி உருட்டவும்தான். அப்போத்தான் நீங்க எனக்கு முத்தா குடுத்து பயம் காட்டிட்டீங்க! நான் மதிப்பு வச்சிருந்த நீங்களும் இப்படி தரமிறங்கிப் போயிட்டீங்களேன்னு நான் நொந்துப் போயிட்டேன். உங்களுக்கும் என் மேல ஆசை கொழுந்து விட்டு எரியுதோன்னு பயந்துட்டேன். நீங்க செயறதெல்லாம் பார்க்கறப்போ காதல் தான்னு தோணும். அதுக்குள்ள வேற எதாவது ஏடாகூடமா பேசி உங்களுக்கு அந்த பாபு மாதிரியே என் மேல தப்பு எண்ணம்தான் காதல் இல்லைன்னு தோண வச்சிருவீங்க. அதனாலத்தான் கல்யாணத்துக்கு நான் முதல்ல ஒத்துக்கல.”

“என் வாயில வாஸ்து சரியில்ல மீரா. அதான் இப்படி பேசி நம்ம காதலுக்கு நானே ஆப்பு வச்சிக்கிட்டேன் போல”

“அப்புறமா கவி உங்கள பத்தியும் அக்காவப் பத்தியும் ரொம்ப சொன்னா. அதுல உங்கள ஓரளவு புரிஞ்சிக்கிட்டேன் வெங்கி. அப்புறம் உங்க கூட பழக பழக நீங்க பாசத்துக்கு ஏங்கற பச்சைக் குழந்தைன்னு தெரிஞ்சிகிட்டேன். அப்புறம் தான் என்னையும் என் மனசையும் முழுசா உங்க கிட்ட குடுத்தேன். இனிமே கவி நம்ம கூட சேரனும்! நாம குடும்பமா இருக்கனும் அவ்வளவுதான் என் ஆசை எல்லாம்”

“என்னடி இப்படி சொல்லுற? நமக்குன்னு புள்ளை குட்டிங்க வேணாமா? அட் லீஸ்ட் ஒரு பையனாச்சும் பெத்துக் குடுடி உன்னை மாதிரியே க்யூட்டா”

“யோவ், நமக்கு பேரன் பேத்தி எடுக்கற வயசுய்யா! பிள்ளைலாம் ஒன்னும் வேணா! கவி பெத்துப் போடுவா, நாம வளர்த்து விடுவோம். அது போதும்”

“அதெல்லாம் முடியாது! என் மீரா என் பிள்ளைய சுமக்கறப்போ எவ்வளவு அழகா இருக்கான்னு நான் அனுபவிச்சுப் பார்க்கறது இல்லையா? வாயும் வயிறுமா நீ இருக்க, நான் உன்னை நடக்க விடாம தாங்கன்னு இன்னும் நம்ம வாழவும் அனுபவிக்கவும் வேண்டியது எவ்வளவு இருக்கு தெரியுமா மீரா! கவி வயித்துல இருந்தப்போ நான் தடவிக் கூட பார்த்தது இல்லைடி மீரா. நம்ம புள்ள உன் வயித்துல இருக்கறப்போ, தினமும் பாடி, தடவி, கொஞ்சின்னு கவிக்கு செய்யாதத எல்லாம் செய்யனும். ஆரம்பத்துல இருந்து நீ பொறக்க வைக்கற வரைக்கும் ஒவ்வொரு நொடியும் உன் கூட இருக்கனும். இப்படிலாம் கட்டுக்கடங்காத ஆசைகள் இந்த கட்டிளம் காளைக்குள்ள! ப்ளிஸ்டி! ஒரே ஒரு பிள்ளை! ப்ளிஸ்டி”

“வேணாம் வெங்கி!”

“வேணும் மீரா”

“வேணா”

“வேணும்”

“வேணான்னு சொன்னா கேளுங்க”

“வேணும்னு சொன்னா கேளு”

“ங்கொய்யால முடியாதுன்னு சொன்னா என்ன பிடிவாதம் இது வெங்கி” என சொன்னவர் ஆவென கத்த ஆரம்பித்து விட்டார்.

“யோவ் வெங்கி! காலை விடுய்யா! விடு!” படக்கென காலில் விழுந்து அசையாமல் பிடித்துக் கொண்ட வெங்கியைப் பார்த்து சத்தமிட்டார் மீரா.

“பெத்துக் குடுப்பேன்னு சொல்லு! அது வரைக்கும் எழுந்திருக்க மாட்டேன்”

“தரேன், ஒன்னுக்கு ரெண்டா பெத்துக் குடுக்கறேன். எழுந்திரிங்க”

“சத்தியமா?”

“நீங்க அடிக்கடி கட்டி அழற அந்த ப்ளேக் ஹோல் மேல சத்தியமா பெத்துக் குடுக்கறேன்”

நினைத்த காரியத்தை சாதித்து விட்ட வெற்றிக் களிப்பில் எழுந்து நின்றவருக்கு சரமாரியாக அடிகள் விழுந்தன. மீராவின் அடிகளை காதல் படிகளாய் மாற்றத் தெரியாதவரா நம் வெங்கி!!!

(கொட்டும்)