SSKN — Epi 26

அத்தியாயம் 26

 

கைவளையல் குலுங்காமல்

கால் கொலுசு சிணுங்காமல்

அணைப்பது சுகமாகும்

அது ஒரு தவமாகும்!!!

 

“யார் அங்கிள் அந்த அபிலயா?”

சாதரணமான கேள்விதான். இத்தனை வருடங்கள் ஆகியும்  குற்ற உணர்ச்சியில் குமைந்து கொண்டிருக்கும் வெங்கிக்கு அந்தக் கேள்வி இதயத்தைத் கிழித்து சுக்கு நூறாக போட்டது போல வலித்தது.

“அபிலயாவ பத்தி உனக்கு யார் சொன்னா மணி?” கண்ணில் கண்ணீர் கோர்க்கக் கேட்டார் வெங்கி.

“கவிதான் குண்டடி பட்டப்போ அத்தை அபிலயா கூப்புடறாங்கன்னு என்னைப் பிடிச்சுட்டு கதறிட்டா!”

“கவியா? கவியா சொன்னா?” பதட்டம் வெங்கியின் குரலில்.

“அவளுக்குத் தெரியாம மறைச்சுட்டதா நிம்மதியா இருந்தேனே!” மெல்ல முனகினார்.

“இத்தனை நாள் என் பொண்டாட்டி உயிர் மட்டும்தான் என் கண் முன்ன நின்னுச்சு. இப்போ அதுக்கு எந்த ஆபத்தும் இல்லைனதும் தான் சுற்றுப்புறம் உறைக்குது! சொல்லுங்க அங்கிள், யார் அவங்க? சாவ கண்ணுல பார்க்கறப்போ அவ அம்மா நினைப்புக் கூட வராம இந்த அபிலயா நினைப்பு ஏன் வந்துச்சு?”

வெங்கி அமைதியாகவே அமர்ந்திருந்தார்.

“வீட்டுக்குப் போய் பேசலாமா மணி? இங்க பேச ஆரம்பிச்சா நான் உடஞ்சி அழுதுருவேன்! ப்ளிஸ்ப்பா”

தன் அங்கிளின் கையை இறுகப் பற்றிக் கொண்டான் மணி. வீட்டை அடையும் வரை இருவரும் அமைதியாகவே அமர்ந்திருந்தார்கள். உள்ளே சென்றதும், வெங்கி தொப்பென சோபாவில் அமர, மணி கிச்சனுக்கு சென்றான். அவன் திரும்பி வரும் போது ஆவி பறக்கும் க்ரீன் டீ கையில் இருந்தது.

“அங்கிள், இந்தாங்க குடிங்க! நான் போய் நல்லா குளிச்சிட்டு வரேன்! கசகசன்னு இருக்கு” என சொல்லியவன் அவருக்கு தனிமைக் கொடுத்து அகன்றான். அவன் திரும்பி வரும் போது, வெங்கியும் முகம் கழுவி ப்ரெஷ்சாக அமர்ந்திருந்தார். மணிக்கு காபியும் போட்டு வைத்திருந்தார்.

காபி கப்புடன் அவன் அமரவும்,

“மணீ! என் மக உன் கிட்ட ஒரு நல்ல மனைவியா நடந்துக்கறாளா?” என கேட்டார்.

‘நல்ல மனைவி என்பவள் யார்? வயிற்றுப் பசியையும், உடல் சார்ந்த பசியையும் தீர்த்து வைப்பவளா? இளமையின் பசி தீர்க்கும் கவி நல்ல மனைவி என்றால், உணவுப் பசியைத் தீர்க்கத் தெரியாததால் கெட்டவளாகிவிடுவாளா? நல்ல மனைவி என்பவள் யார்? மனம் ஓயும் போது தாயாய் தாங்குபவளா? அருமையாய் தாங்குகிறாளே என் கவி! ஆனால் அந்த மனம் ஓய்ந்து போய் கிடப்பதற்கும் காரணம் அவள்தான் அல்லவா? யார் நல்ல மனைவி? கட்டியவனை சேயாய் தாங்கி அவனுக்கு அனைத்தையும் பார்த்து பார்த்து செய்பவளா? விதி வசத்தால் தாயின் மடி சீக்கிரமே பிடிங்கிக் கொள்ளப்பட, அன்னையாய், அரணாய், அன்புப்பிடிக்குள் அடைத்து வைத்திருக்கும் என் கவி நல்ல மனைவியல்லவா! தீப்பிழம்பாய் சில வேளைகளில் சுட்டெரித்தாலும், தென்றலாய் பல சமயம் தாலாட்டுபவள், என்னவள், அருமையான மனைவியல்லவா!’

“என்னப்பா மனசுக்குள்ள பட்டிமன்றம் நடத்துற? என மக உனக்கு நல்ல பொண்டாட்டியா நடந்துக்கலயா மணி? எனக்குத் தெரியாம எதையாச்சும் மறைக்கறியா? அபிலயா பத்தி கவிக்கு தெரிஞ்சிருக்குன்னா, என் கணிப்புப் படி  கண்டிப்பா சோதனைக்கு மேல சோதனை கொடுத்து உன் அன்ப சோதிச்சுட்டே இருந்துருப்பா! ஆமாவா இல்லையா?” என கேட்டார் வெங்கி.

‘ட்ரெயின்ல முத்தம் கேட்கறதுல இருந்து, ஜிம்ல என்னை கண்காணிக்கறது வரை ஒவ்வொரு நாளும் உங்க மக என் அன்பை சோதிச்சுப் பார்த்து என்னைத் தீக்குளிக்க வச்சிட்டுத்தான் இருக்கா! ஆனா என்னை சோதிக்கறேன்ற பேருல அவ தான் துடிதுடிச்சு போயிருறா! அவ என் பொண்டாட்டி, என்னை எப்படி நடத்துனாலும், அவ அப்பாவாகிய உங்க கிட்டக்கூட அவள நான் விட்டுக் குடுக்க மாட்டேன் அங்கிள்’

மெல்ல சிரித்தவன்,

“நல்ல கற்பனை அங்கிள் உங்களுக்கு. என் கவி எனக்கு வெறும் நல்ல மனைவி மட்டும் இல்ல, அதுக்கும் மேல அங்கிள். அவ எனக்கு இன்னொரு அம்மா! அவ்வளவு அருமையா என்னைப் பார்த்துக்கறா! நீங்க சொல்லுங்க அபிலயா யாரு?”

மெல்லிய பெருமூச்சொன்றை விட்டார் வெங்கி.

“அபிலயா என்னோட அக்கா. எனக்கு அக்கான்னு சொல்லறத விட அம்மான்னு சொல்லலாம். இப்போ அவ உயிரோட இல்ல!” கண்ணைத் தேய்த்துக் கொண்டார் வெங்கி.

“என்ன அங்கிள் சொல்லுறீங்க? அவங்கள பத்தி யாரும் பேசி நான் கேட்டதே இல்லையே!” ஆச்சரியமாகக் கேட்டான் மணி.

தன் போனில் லாக் செய்து வைத்திருந்த கேலரியில் இருந்த சில படங்களைக் காட்டினார் வெங்கி. அபிலயாவைப் பார்த்து ஆடிப் போய்விட்டான் மணி. கவி அப்படியே தனது அத்தையை உரித்து வைத்திருந்தாள்.

“அபி இறந்த பத்தாம் நாள் தான் நம்ம கவி பொறந்தா மணி. அபிக்கும் கவிக்கும் இருந்த ஜாடை ஒற்றைமையைப் பார்த்து என் மனைவிக்கு ஜன்னியே வந்துருச்சு! இந்த கதையை முழுசா சொன்னாத்தான் உனக்குப் புரியும் மணி!”

இறக்கும் முன் இரு வாரங்கள் தங்களோடு வந்து தங்கி இருந்த அபிலயா, தன் வாழ்க்கையில் நடந்த அத்தனையையும் தன் அன்பு சகோதரனிடம் பகிர்ந்துக் கொண்டாள். அதை அப்படியே மணிக்கு சொன்னார் வெங்கி. என்னதான் அவன் தங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றாலும், அவர் உள் மனது அடித்து சொன்னது கவி இவனைக் கண்டிப்பாக பாடாய் படுத்துகிறாள் என.

அபிலயா என்றழைக்கப்படும் அபிலயசுந்தரிக்குப் பிறகு ஆண் குழந்தை வேண்டும் என தவமாய் தவமிருந்த பெற்றவர்களுக்கு வரமாய் பிறந்தவர்தான் வெங்கி. குழந்தையில் இருந்தே அபிக்கு வெங்கிதான் விளையாட்டு பொம்மை. தம்பியைத் தரையில் கூட விடாமல் தூக்கிக் கொண்டே திரிவாள் அவள். பள்ளிக்கு சென்று வந்த மீதி நேரம் எல்லாம் தம்பியுடனே கழியும் அவளுக்கு.

பள்ளியில் எந்த நண்பர்களும் இல்லாமல், தனித்து இருக்கும் அபிக்கு தம்பிதான் உற்ற நண்பன். தன் மனதில் உள்ள எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்ள கிடைத்த கடவுளின் பரிசாகத்தான் அவனைக் கொண்டாடினாள். ஆம் அபிலயாவும் பிறப்பிலேயே ஜீனியஸ்தான். அந்த வயதுக்கு உரிய விளையாட்டுக்கள், குறும்புத்தனம் எதுவும் இன்றி எந்நேரமும் புத்தகத்துக்குள்ளே முகம் புதைத்திருக்கும் அபியை யாரும் தங்கள் நட்பு வட்டத்துக்குள் சேர்த்துக் கொள்ள முன் வருவதில்லை. வகுப்பில் பாதி நேரம், மேசையில் சாய்ந்து தன்னுலகில் மிதப்பவள், பரீட்சையில் மட்டும் நூற்றுக்கு நூறு வாங்கி விடுவாள். அவளைக் கவனித்திருந்த ஆசிரியை பெற்றவர்களைக் கூப்பிட்டுப் பேசினார்.

“உங்க மக வயசுக்கு மீறின புத்திசாலியா இருக்கா! நீங்க அவள சென்னை மாதிரி இடத்துல உள்ள நல்ல ஸ்கூலுல சேர்த்து விடுங்க. வருங்காலத்துல இவளுக்கு நல்ல பியூச்சர் இருக்கு” என  வழிகாட்டினார்.

ஆனால் பழமையில் ஊறி பெண்கள் தங்கள் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லி கொடுக்கும் அளவு படித்திருந்தால் போதும் என எண்ணம் கொண்ட அபியின் பெற்றோர், அவளது புத்திசாலித்தனத்தை மறைக்கவே முயன்றனர். இவள் மெத்தப் படித்திருந்தால் கல்யாண சந்தையில் விலை போக மாட்டாள் என பயந்துப் போனார்கள். ஆசிரியையின் அறிவுரையைக் காற்றில் விட்டவர்கள், அவளை அந்தப் பள்ளியிலேயே படிக்க வைத்தார்கள். ப்ளஸ் 2 முடிக்கவும், படித்தது போதும் என வீட்டிலேயே வைத்துக் கொண்டனர். இவர்கள் அபியின் புத்திசாலித்தனத்தை மறைக்க நினைத்தாலும், ஸ்டேட் பர்ஸ்ட் வந்து அவளின் புகழ் அந்த ஊர் எங்கும் பரவியது. பல நிறுவனங்கள் அவளுக்கு ஸ்காலர்ஷிப் கொடுத்து படிக்க வைக்க வீடு தேடி வந்தார்கள். பயந்துப் போனார்கள் அவளின் பெற்றோர்.

அவசரமாக அபியை மூட்டைக் கட்டி தங்கள் தூரத்து உறவான கீதாவின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். தம்பியைப் பிரிந்துப் போக முடியாது என அழுதவளுக்கு கிடைத்தது அடியும் உதையும்தான்.

தம்பியும் தன்னைப் போல் புத்திசாலி என ஏற்கனவே கண்டுக் கொண்ட அபி, தனக்குக் கிடைக்காத வழிக்காட்டலை அவனுக்குக் கொடுக்க ஆரம்பித்திருந்தாள். தன்னுடைய விண்ணுலக காதலை தன் தம்பியின் மூலம் நிறைவேற்றிக் கொள்ள முனைந்தாள் அபி. லைப்ரரியில் அது சம்பந்தப்பட்ட புத்தகங்களை எடுத்து தான் படித்தது மட்டுமில்லாது வெங்கிக்கும் சொல்லிக் கொடுத்தாள். அக்காவைப் போலவே கற்பூரபுத்திக் கொண்ட வெங்கி, பட்டென எல்லாவற்றையும் பிடித்துக் கொள்வான். அங்கிருந்த வரை அவனுக்கு இவளே கைடாக, ஆசிரியராக, அனைத்துமாக இருந்தாள்.

தம்பியைப் பிரிந்துப் போகும் முன்னே,

“வெங்கி! அக்கா உன்னை விட்டு தூரமாப் போறேன்! நான் ஒரு முட்டாளா, பத்துப் பாத்திரம் தேய்ச்சுக்கிட்டு, பிள்ளைப் பெத்து போட்டுகிட்டு சாதாரண பொண்ணா இருக்கறதுதான் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பிடிச்சிருக்கு. ஒரு பொண்ணா போயிட்டதால என்னால அவங்கள எதிர்த்துக்க முடியல. ஆனா என் தம்பி ஆம்பளை. அக்காவோட ஆசையை நீதான் நிறைவேத்தனும். ஆஸ்ட்ரோபிசிக்ஸ்ச நீ கரைச்சுக் குடிக்கனும். அண்ட சராசரங்கள கட்டி ஆளனும்னு எனக்குப் பேராசைடா. அந்த ஆசைய நீதான் நிறைவேத்தனும். கூட இருந்து அக்கா கைட் பண்ணலனாலும், நீயா சொந்தமா படிக்கனும். தேடி தேடி கத்துக்கனும். செய்வியா?” என கண்ணீர் மல்க கேட்டாள் அபி.

“கண்டிப்பா செய்வேன்கா” தன் அக்கா அழுவதைத் தாங்கிக் கொள்ள முடியாத வெங்கி சத்தியம் செய்துக் கொடுத்தான்.

பெற்றவர்களையும் ஆசைத் தம்பியையும் பிரிந்த அபிக்கு ஆறுதலாக இருந்தது கீதா மட்டுமே. துறுதுறுவென அழகாக இருக்கும் கீதாவைத் தன் சொந்தத் தங்கைப் போல பாசம் காட்டி அன்பை செலுத்தினாள் அபி. அந்த வீட்டில் இருந்த அவளின் மாமா, அத்தை இருவருமே அபியை நன்றாகத்தான் பார்த்துக் கொண்டனர். அவளுக்கு தலைவலி கொடுத்த ஒரே ஆள் கீதாவின் அருமை அண்ணன் பாலகணபதி மட்டுமே.

படிப்பில் மிகவும் சுமாராக இருந்த பாலாவுக்கு, ஸ்டேட் பர்ஸ்ட் வந்த அபியின் மீது ஆத்திரம் கொழுந்து விட்டு எரிந்தது. இப்பொழுது காலேஜில் இவனை சேர்ப்பதற்கு தண்டமாக பல லட்சம் கொட்டி அழுதிருந்த அவன் அப்பா வேறு அபியை எடுத்துக்காட்டாக காட்டி அவனை வெறுப்பேற்றி இருந்தார்.

“பொட்டப்புள்ள கெட்ட கேட்டுக்கு ஸ்டேட் பர்ஸ்ட் வந்துருக்கு. ஒரு வேலையும் உனக்கு குடுக்காம வேளா வேளைக்கு நல்லா பொங்கித்தானே போட்டோம்! படிக்கற ஒத்த வேலைய உருப்படியா செஞ்சியாடா நீ? தெண்ட கருமாந்திரம் புடிச்சவன்!” என அபியின் காதுபடவே திட்டு விழும்.

அவன் பார்வை ஒரு மூலையில் அமர்ந்து கீதாவுக்கு பாடம் சொல்லித் தரும் அபியின் மேல் துவேஷமாகப் பாயும். அவள் குனிந்த தலையை நிமிர்த்த மாட்டாள். அது கூட இவனுக்குக் கடுப்பாக இருக்கும்.

‘மண்டைக்கனம் புடிச்ச மகாராணிக்கு என்னை நிமிர்ந்துப் பார்க்கக் கூட புடிக்கலையோ!’ என மனதினுள்ளே வறுத்து எடுப்பான். அவள் மட்டும் தனியாக மாட்டினால், கையைப் பிடித்து முறுக்குவான். வலியில் கூட வாயைத் திறக்க மாட்டாள் அபி. நிமிர்ந்தும் பார்க்கமாட்டாள்.

“திமிராடி? என்னை நிமிர்ந்துப் பார்த்தா என் முட்டாள்தனம் உனக்கு ஒட்டிக்குமோ? பாருடி! நிமிர்ந்துப் பாரு!” என தாடையை அழுத்திப் பிடிப்பான்.

வலியில் நிமிர்ந்துப் பார்த்தால், தலையிலேயே கொட்டுவான்.

“நீ பெரிய புத்திசாலினா, ஆம்பள என் கண்ண கூட பயப்படாம நேரா பார்ப்பியா? பார்ப்பியா என்னை நிமிர்ந்து பார்ப்பியா?” என கேட்டு வலிக்க கொட்டுவான். அவன் முன்னே வரவே பயப்படுவாள் அபி.

அந்த நேரத்தில் தான் அபிக்கும் வரன்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவள் வீட்டில். கோள்களை ஆராய்ச்சி செய்ய ஆசைப்படவளுக்கு செவ்வாய் கோள் அதாவது செவ்வாய் கிரகம் அவள் ஜாதகத்தில் ஆட்சி செய்வதுதான் வினையாகி போனது. எந்த வரனும் அமையாமல் தள்ளிப் போனது.

இவளது ஸ்டேட் பர்ஸ்ட் அலை கொஞ்சம் ஓய, மகளை வீட்டுக்குக் கூட்டி வர முடிவெடுத்தார்கள் அவளைப் பெற்றவர்கள். அவள் கிளம்புகிறாள் என அறிந்துக் கொண்ட பாலா, அன்றிரவு அவளின் அறைக்குள் திருட்டுத்தனமாக நுழைந்தான். கீதா அவள் பக்கத்தில் படுத்திருக்க, நிர்மலமான முகத்துடன் உறங்கியவளை வாய் பொத்தி கைகளில் அள்ளிக் கொண்டான் பாலா.

பயத்தில் கண்களை அகல விரித்த அபி, போராடாமல் அமைதியாக அவன் இழுத்த இழுப்புக்குப் போனாள். மொட்டை மாடியில் அவளை இறக்கி விட்டவன்,

“என்னடி? என்னை விட்டுப் போறியா?” என கேட்டான்.

எப்பொழுதும் அவன் முன் வாய் திறக்காதவள் இப்பொழுதும் அதையே கடைப்பிடித்தாள்.

“உள்ளுக்குள்ள குளுகுளுன்னு இருக்குமே என் தொல்லைய விட்டுப் போறதுக்கு! ஊமையாட்டம் இருந்தாலும், எங்கப்பன் என்னைத் திட்டறப்பெல்லாம் உனக்கு ஜில்லுன்னு இருக்கும்னு எனக்குத் தெரியும்டி”

“அப்படிலாம் இல்லைங்க மாமா”

“மாமாவா? இந்த வீட்டுக்கு வந்து இத்தனை மாசமாச்சு, இன்னைக்குத்தான் என்னை மரியாதையா மாமான்னு கூப்பிட தோணிருக்கா? நாளைக்குக் கிளம்பிருவோம், இவன் தொல்லை இருக்காது இனிமேன்னு, மாமான்னு கூப்டு உசுப்பேத்தி பார்க்கறியா? நீ என்னதான் மாமா மச்சான்னு கூப்பிட்டாலும் உன் கரிச்சட்டி மூஞ்சிய பார்த்து இங்க யாரும் மயங்கி போயிர மாட்டோம். மாமாவாம் மாமா! முகரையப் பாரு” என வாய் சொன்னாலும் கைகள் அவளை இழுத்து அணைத்தன.

“மாமா கோமான்னு கூப்பிடாதே! எனக்குப் பிடிக்கல! எனக்கு என்னிக்கும் உன்னைப் பிடிக்காது! குட்டியூண்டு தலைக்குள்ள இந்த பொம்பளைங்களுக்கு மூளை இருந்தாலே தாங்க முடியாது! உனக்கு இந்த குட்டி உடம்பு முழுக்க மூளைடி! எனக்கு அது பிடிக்கல! நான் ஆம்பளைடி! வீட்டுல நாந்தான் மூளையா இருக்கனும். எனக்கு வரவ, அச்சுபிசகாம நான் சொல்லறத கேட்டுத்தான் நடக்கனும். அவளுக்குன்னு தனியா சிந்தனையோ செயலோ இருக்கக்கூடாது. அது என் மண்டைக்குப் புரியுது. ஆனா மனசுக்குப் புரிய மாட்டுது. நீ நான் தேடுற பொண்ணு இல்ல. ஆனா என் பொண்டாட்டின்னு எடத்துல உன்னைதான் என் மனசு வச்சுப் பார்க்குது. சொல்லுடி, நான் சொல்லுறபடி கேட்டு மூளைன்னு ஒன்னு உனக்கு இருக்குன்றதே மறந்துட்டு என் கூட குடும்பம் நடத்துவியா? சொல்லு! ” எப்பொழுதும் போல அழுத்தமாக தாடையைப் பிடித்து அழுத்தி நிமிர்த்திக் கேட்டான் பாலா.

முடியவே முடியாது என வேகமாகத் தலையாட்டினாள் அபி.

“அவ்வளவு திமிராடி! அந்தத் திமிர அடக்கறேண்டி!” என சபதமாக சொன்னவன், அதிரடியாக அவளை முத்தமிட முயன்றான். தன்னில் இருந்த சக்தியெல்லாம் திரட்டி அவனைத் தள்ளிவிட்டவள், வேகமாக தனதறைக்குள் புகுந்து கதவை அடைத்துக் கொண்டாள்.

“போடி போ! என் கிட்ட ஒரு நாள் மாட்டாமலா போவ!” அவன் குரல் அவளைத் துரத்தியது.

மறுநாள் யாரையும் நிமிர்ந்துப் பார்க்காமல், தன்னைப் பெற்றவர்களுடன் தனது வீட்டை நோக்கிப் பயணப்பட்டாள் அபி. பல வருடங்கள் அபிக்கு மாப்பிள்ளை வேட்டை நடந்தது. அந்த வருடங்களை எல்லாம் தம்பியை மெருகேற்ற பயன்படுத்தினாள் அபி. அப்பொழுதுதான் வெங்கி ஆராய்ச்சி செய்திருந்த ஜெர்னல் ஒன்று அமெரிக்காவில் இருந்த பல்கலைகழகப் பார்வையில் பட, ஸ்காலர்சிப்போடு படிக்க வாய்ப்பு வந்தது. மகனை திருமணம் செய்தே அனுப்ப முடிவெடுத்த வெங்கியின் பெற்றோர் பெண் பார்க்கும் படலத்தை ஆரம்பித்தார்கள். அக்காவுக்கு முன்னே தனக்கு திருமணம் வேண்டாமென சொன்ன வெங்கியை, ஒன்று திருமணம் செய்து படி அல்லது இங்கேயே இருந்து விடு என மிரட்டினார்கள் பெற்றவர்கள்.

தனக்கு கிடைக்காத வாய்ப்பு தம்பிக்கு கிடைத்திருப்பதை பார்த்து மனமகிழ்ந்த அபிதான் திருமணம் முடிக்க சொல்லி தம்பியை சமாதானப்படித்தினாள். அப்பொழுது வரனாய் வந்தவள் தான் கீதா. பார்த்த மாத்திரத்திலேயே கீதாவின் அழகில் கவரப்பட்டான் வெங்கி. தம்பியின் மனதை அபியும் புரிந்துக் கொண்டாள். பெண் வீட்டில் கேட்ட ஒரே விஷயம் பெண் கொடுத்து பெண் எடுக்கலாம் என்பது மட்டும்தான். ஏற்கனவே மாப்பிள்ளை அமையாமல் தவித்துக் கிடந்த அபியின் பெற்றோர் உடனே ஒத்துக் கொண்டார்கள். அபியிடம் கேட்க வேண்டும் என்று கூட தோணவில்லை அவர்களுக்கு.

பாலாவின் பெற்றவர்களுக்கோ ஏற்கனவே அபியைப் பிடிக்கும். அவள் வீட்டுக்கு வந்தால், புத்திசாலித்தனமாக தாங்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்தை பாதுகாப்பாள். பொறுப்பாகவும் இருப்பாள் என எண்ணியே தோஷத்துக்குப் ஐயர் சொன்ன பரிகாரத்தை செய்து கல்யாணம் வைத்துக் கொள்ளலாம் என சொல்லிவிட்டார்கள். பாலா பிடித்திருக்கிறது என்றோ பிடிக்கவில்லை என்றோ எதையும் சொல்லவில்லை. பெற்றவர்கள் விருப்பம் என்பது போல இருந்தான்.

‘அக்கா, உனக்கு இந்த கல்யாணத்துல இஸ்டமா?” என கேட்டான் வெங்கி.

‘உனக்கு கீதாவ பிடிச்சிருக்கு! அதோட கல்யாணம் நடக்காம நீ வெளிநாடு போக முடியாதுடா தம்பி. அப்படி போறவன் பிடிச்சவள கட்டிக்கிட்டேப் போ! நான் பெத்தவங்க வீட்டுலயும் என் சுயத்தை இழந்து வாழ்ந்தேன். போற இடத்துலயும் அப்படியே வாழ்ந்துட்டுப் போறேன்! எனக்கு என் தம்பி நல்ல நிலைமைக்கு வரனும், சாதிக்கனும். கடவுள் குடுத்த ஜீனியஸ்ன்ற கிப்ட சரியா உபயோகிக்கனும். அது போதும்’

“இஸ்டம்தாண்டா வெங்கி! ரொம்ப பிடிச்சிருக்கு பாலா மாமாவ!” மெல்லிய புன்னகை இழையோட சோகத்தை உள்ளுக்குள் மறைத்து சொன்னாள் அபிலயா.

மூளையும் முரட்டுத்தனமும் ஒன்றாக இணைந்தால் என்ன ஆகும்?

 

(கொட்டும்)