t5

t5

தொடுவானம் _ 5

போதும் போதும்எப்போதும் உன் நினைவுகள்பாவம் என் உள்ளம்சொல்லாமல் கறையுதேகாயத்தை கண்கொண்டுபார்த்திட முடியும்
வலியை கண்டிட கண்கள் இல்லை
காற்றினை கைநீட்டி
தீண்டிட முடியும் ஓவியம் ஆக்கிட ஏதுமில்லை
காதல் மழலையின் வார்த்தை அல்லவா
சொன்னால் புரிவது கஷ்டம் அல்லவா
போ போ என் இதயம் தரையில்
விழுந்து சிதறி போகட்டும்
போ போ என் நிழலும் பிரிந்து
என்னை தனிமை ஆக்கட்டும்
ஏனோ என்னை மட்டும்
வழக்கை கொல்லுதடி
நான்தான் என்ன செய்ய
எல்லாம் கைவந்துபோகுதடி
நீ என் அருகிலே
இருந்த போது பிறந்தவன்
நீ என் தொலைவிலே
பிரிந்தபோது சிதைந்தவன்
போதும் உன்னாலே
தூள் தூளாய் உடைகிறேன்
போதும் உன்னாலே
என்னோடு அழுகிறேன்
ஏதும் என்னோடு
இல்லாமல் போகட்டும்
நீ என் கைகோர்த்து வாழ்ந்தால் போதுமே…

நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. ‘ மேட்டுப்பாளையம்’ நீலகிரி மலையின் அடிவாரம். ஊரை விட்டு சற்று ஒதுங்கி இருந்த ரிசார்ட் அது. அங்கிருந்த ஆடம்பரமான அறைகளில் ஒன்றில், இரவின் ஏகாந்தத்தையும் பனிக்காற்றின் குளுமையையும் மீறி , மனதில் பொங்கிய எரிச்சலுடனும் , எதிரில் இருப்பவர்களை எரித்து சாம்பலாக்கி விடுமளவு இருக்கும் கோபத்துடனும் ஆங்காரமாக முறைத்தபடி அங்கிருந்த சோபாவில் அமர்ந்திருந்தார் எழுபத்தைந்து வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர்.
அவருக்கு இருபுறமும் ஆஜானுபாகுவாக நினறிருந்தவர்களுக்கு ஐம்பது வயது மதிக்கலாம். அவர்களது தோற்றமும் அப்பெரியவரையே ஒத்து இருந்தது.
அப்பெரியவரின் இரு மகன்களே அவர்கள். அவர்களுக்கு எதிரே தம் கரங்களை பின்னே கட்டியபடி ஐந்து பேர் நின்றிருந்தனர்.
அப்பெரியவர் எதிரே நின்றிருந்தவர்களை கடுமையான வார்த்தைகளால் விளாசிக் கொண்டிருந்தார்.

“ இரண்டு வருஷமா கண்டுபிடிக்க முடியாம ஆட்டம் காட்டிட்டு இருந்தவள நேர்ல பார்த்தும் இப்படி தப்பிக்க விட்டுட்டு வந்திருக்கீங்களேடா… அறிவு கெட்ட முட்டாப் பசங்களா… என்ன செய்வீங்களோ? ஏது செய்வீங்களோ? எனக்குத் தெரியாது, இன்னைக்கு ஒரு நாள் உங்களுக்கு டைம் தரேன் அவ செத்துட்டான்னு செய்தியும், அவ டெட் பாடியும் எங்கிட்ட வந்து சேரனும். இல்ல உங்க அம்புட்டு பயலையும் தொலைச்சுப் புடுவேன்” மூச்சிரைக்க கத்தியவர் அங்கிருந்த தண்ணீரைப் பருகினார்.

எதிரில் இருந்தவன் பணிவுடன், “ ஐயா, அவள ஊட்டில பார்ப்போமுன்னு நினைக்கவே இல்லீங்கய்யா… எதிர்பாராம பார்த்ததும் போட்டுத் தள்ளனும்னு துரத்திப் போயும் எப்படித் தப்பிச்சான்னே புரியலைங்க . சரின்னு உங்களுக்குத் தகவலை சொல்லிட்டுத் திரும்பி வரும் போது , வர்ற வழியில மறுபடியும் பார்த்ததும் காரையேத்தி கொன்னுடலாம்ன்னு துரத்திப் போனோமுங்க…

எதிர்ல வந்த கார்ல மோதி விழுந்தவ எழும்பலங்க. அநேகமா செத்து போயிருப்பான்னு தான் நினைக்குறேனுங்க.
ஒருத்தன் ரெண்டு பேர்னா இறங்கி போயி சமாளிச்சிருப்போமுங்க ஆனா நிறைய பேரு விபத்துன்னதும் இறங்கி வரவும் ,உங்களுக்கு பிரச்சனை எதுவும் வரக்கூடாதுன்னு திரும்பி வந்துட்டோமுங்க.

அப்படியும் கொஞ்ச நேரம் பதுங்கியிருந்துட்டு திரும்பவும் அங்க போயி பார்த்தோமுங்க, அங்கன யாரும் இல்ல அந்த கார்க்காரன்தான் அவள தூக்கிட்டு போயிருக்கனும். நிறைய இரத்தம் கீழ இருந்துச்சிங்க.” என்றான்.

“ இப்ப என்ன செய்யனும்ன்னு ஐயா சொன்னீங்கன்னா செய்யறோமுங்க. அவளத் தவற விட்டது தப்புத்தானுங்க. அவ அடையாளமே தெரியாத அளவு மோசமா இருந்தாங்க. கார்ல மோதினதெல்லாம் தாங்க மாட்டாங்க . எப்படியும் செத்துப் போயிருப்பாங்க”
தொண்டையை கணைத்துக் கொண்ட அந்தப் பெரியவர், “ செத்துப் போயிருந்தா ஏன்டா அந்த கார்க்காரன் தூக்கிட்டு போகனும்? அங்கன போலீசுதான் வந்திருக்கும்.

கண்டிப்பா அவ செத்துப் போயிருக்க மாட்டா. இங்க சுத்தியிருக்கற எல்லா ஆசுபத்திரியிலயும் தேடுங்க. அவளப் பார்த்ததும் அவ கதைய முடிச்சிட்டு என்கிட்ட சொல்லுங்க.” என்றார்.

“ சரிங்க ஐயா …” என்று கும்பிட்ட அந்த அடியாட்கள் மீண்டும் தாங்கள் வந்த வண்டியில் ஏறி அவளைத் தேடச் சென்றனர்.

அந்தப் பெரியவரின் மகன்களில் ஒருவர், “ அப்பா, இரண்டு வருஷமா நமக்கு பயந்துகிட்டு ஒளிஞ்சு இருந்தவ ,இனிமேலும் நம்மள என்ன பண்ணிடுவா? அவ போலீசுல சின்னதா ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுத்தாக் கூட போதும் நம்ம கதை முடிஞ்சது. ஆனா அவ இப்பவும் நம்ம பார்த்து பயந்து ஓடதான் செய்யறா . எதுக்கு தேவையில்லாம இப்ப அவளக் கொல்லனும். அதுவும் எலெக்ஷன்ல நிக்கலாம்னு நினைச்சிருக்க நேரத்துல எதுக்கு தேவையில்லாம ஒரு கொலை” என்று சற்றுத் தயக்கத்துடன் கூறினார்.

மற்றொருவரும் அவர் கூற்றை ஆமோதிப்பது போல அமைதியாக இருந்ததால் எரிச்சலின் உச்சத்திற்கு போன அப்பெரியவர், “ எவன்டா அவன், கூறுகெட்ட பயலா இருப்பான் போல, அவ உயிரோட இருக்கறது என்னைக்கு இருந்தாலும் நமக்கு ஆபத்துதான்டா. அவ மட்டும் நினைச்சா நம்ம எல்லாரையும் கூண்டோட ஜெயில்ல களி திங்க வைக்க முடியும். அதனால அவளக் கண்டுபிடிச்சி போட்டுத் தள்ற வேலைய பாருங்க.

பொட்டக்குட்டிய பார்த்ததும் அப்படியே பாசம் பொங்குதோ… டேய் நீங்க எல்லாம் கஷ்டமே படாம வளர்ந்தீங்க … ஆனா நான் அப்படியில்ல ஊர்ல இருக்கற அத்தனை பயகிட்டயும் பேச்சும் ஏச்சும் வாங்கி, அசிங்கப்பட்டும் அவமானப்பட்டும் வளர்ந்தவன். அதெல்லாம் நான் சாகுற வரை என் மனசுல இருக்கும்டா. வார்த்தையாடாம நான் சொன்னதை முடிக்கற வழியப் பாருங்க” என்றார்.
அவர் கூறியதைக் கேட்ட இருவரும் , கங்காவைத் தேடி மேட்டுப்பாளையத்தில் ஒவ்வொரு மருத்துவமனையாக அலசத் துவங்கினர்.

மருத்துவமனையில்,

அவளது டாக்டர் சார் என்ற அழைப்பைக் கேட்டதும் தன்னைமீறி ஒரு புன்னகை ஆகாஷின் முகத்தில் வந்தமர்ந்தது. கனிவுடன் அவள் முகத்தைப் பார்த்து, “ என்னம்மா, என்னைத் தெரிகிறதா ?” என்றான்.

அவள் சற்று சோர்வுடன் ஆமாம் என்று தலையை அசைத்தாள். பின் சற்று பயத்துடன் சுற்றிப் பார்த்தவள், “ நான் எப்படி இங்க வந்தேன்?” என்றாள்.
“ நீ என் கார்ல தான் மா மோதி விழுந்த . இது நான் வொர்க் பண்ற ஹாஸ்பிடல் தான்.

என்ன ஆச்சும்மா உனக்கு? ஏன் இப்படி மெலிஞ்சு ஆளே அடையாளம் தெரியாத அளவு மாறிப்போய் இருக்க?”
அவளிடம் பதில் தரவிரும்பா மௌனம்.
“,உன்ன துரத்திகிட்டு வந்தவங்க யாரு?”, மீண்டும் வினவினான்.
எனக்குத் தெரியாது என்பது போல லேசாக உதட்டைப் பிதுக்கி தலையசைத்து விட்டு, ஆயாசமாக விழிகளை மூடிக்கொண்டாள்.
அவளது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, அவளைத் தொந்தரவு செய்ய விரும்பாதவன், அவளிடம், “ ரொம்ப வீக்கா இருக்க… கொஞ்சம் சாப்பிட்டுட்டு படுத்துக்கோம்மா” என்றான்.

“அப்பா, அண்ணன் நம்பர் சொல்லுமா அவங்களுக்கு தகவல் சொல்றேன்.”
யாரும் இல்லை என்பதுபோல தலையை அசைத்தவளின் மூடிய விழிகளில் இருந்து கண்ணீர் கோடாக வழிந்தது.
அன்றைய நாளின் இரண்டாவது முறையாக அதிர்ந்தவன், பதட்டத்துடன், “ என்னம்மா? … என்ன சொல்ற நீ?? அவங்களுக்கு என்ன ஆச்சு? …” என்றான்.

“ப்ளீஸ் சார்… இப்ப என்ன எதுவும் கேட்காதீங்க… “ குரல் தழுதழுக்கக் கூறி, அவள் இறைஞ்சவும் அமைதியானவன் , கங்காவுக்கு உணவு தரும் படி திவ்யாவை அழைத்துக் கூறினான்.

ஒரே ஒரு இட்டலியைச் சாப்பிட அவள் படும் சிரமத்தைக் கண்டவன் மனது மிகவும் பாரமாக உணர்ந்தது. திவ்யாவை அழைத்து இரவில் அவளை கவனித்துக் கொள்ளுமாறு கூறி விட்டு தனது வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றான் .

அவளைத் தனியாக விட்டுவிட்டு அவளது பெற்றோர் எங்கு சென்றனர்??. ஒருவேளை அவர்கள் இந்த உலகத்திலே இல்லையோ?? என்று எண்ணியவனின் விழிகள் தன்னவளின் துயரத்தை எண்ணிக் கலங்கியது. வரும் வழியெல்லாம் தனது தாயிடம் கங்காவைப் பற்றிய விபரங்களைக்கூறி அவளைத் தன்னருகிலேயே, கண்ணுக்குள் வைத்து பாதுகாத்துக் கொள்ளத்தான் தோன்றியது.
அவனுக்காக வாசலிலேயே காத்திருந்த மஞ்சுளா சோர்வாக நடந்து வரும் மகனைக் கண்டதும், “என்னாச்சுப்பா? ஏன் இவ்வளவு சோர்வாக இருக்கிறாய்? அடிபட்ட பெண்ணுக்கு இப்ப எப்படி இருக்கிறது, அவள் நன்றாக இருக்கிறாளா?” என்றார் .

தாயின் ஆதரவு கலந்த கனிவான வார்த்தைகளைக் கேட்டவன், அவரது மடியில் தலைசாய்ந்து படுத்து கங்காவை முதன்முதலில் பார்த்தது, தன் மனதில் முதன்முறை காதல் முகிழ்த்தது, மற்றும் தற்போதைய அவளது நிலை அவ்வளவும் மூச்சுவிடாமல் கூறி முடித்தான். அவரின் பதிலை எதிர் பார்த்து அவரது முகத்தைப் பார்த்திருந்தான்.

சற்று அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்துடன் அவனைப் பார்த்தவர், “ இவ்வளவு நாள் இதையெல்லாம் நீ சொன்னதே இல்லயேடா?” என்றார்.

“ இல்லம்மா… கிட்டத்தட்ட ஒன்றரை வருஷமா அவள தேடிகிட்டுதான் இருக்கேன். ஆனா நேத்துதான் ம்மா அவளை பார்த்தேன். அவளுக்கு வாழ்க்கையில என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியல ம்மா. ஆனா… பாவம்மா அவ… எனக்கு அவளை ரொம்பப் புடிக்கும்மா.” என்றான்.

“ஆகாஷ், கண்டிப்பா உனக்கு பிடித்த பொண்ணு தான் இந்த வீட்டு மருமகள் . நாளைக்கு ஹாஸ்பிடல் போகும் போது நானும் உன் கூட வரேன். அவளைப் பற்றிய விபரங்களை கேட்டுவிட்டு , அவளை நம்மோடு அழைச்சிட்டு வந்திடலாம்” என்றவர், “ இப்ப போய் கொஞ்ச நேரம் தூங்குப்பா” என்று அனுப்பி வைத்தவர் தானும் உறங்கச் சென்றார்.

இரவு முழுவதும், மேட்டுப்பாளையத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், விபத்தில் காயமுற்ற கங்கா இருக்கிறாளா எனத் தேடி அலைந்தவர்கள், விடியலின் துவக்கத்தில் கோயம்புத்தூரில் உள்ள மருத்துவமனைகளில் தேடத் துவங்கினர்.

__ தொடுவோம்.

error: Content is protected !!