SSKN — EPI 29

அத்தியாயம் 27

 

நான் உன்னை துரத்தியடிப்பதும்

நீ எந்தன் தூக்கம் பறிப்பதும்

சரியா முறையா!!!

 

“அம்மா!”

“என்னடா பாலா?”

“அப்பாரு ரூமெல்லாம் ஒரே தூசியா இருக்காம். உன் கையால சுத்தம் பண்ணி வைக்க சொன்னாரு. போ, முதல்ல அந்த வேலைய போய் பாரும்மா”

சமையல் அறையில் மருமகளுடன் இரவு உணவுக்கு வேண்டியது செய்துக் கொண்டிருந்தவர், மகனின் குரலில் அவனைத் திரும்பிப் பார்த்தார்.

“இருடா! சாதம் வேக போகுது, வடிச்சு வச்சிட்டுப் போறேன்!”

“அதெல்லாம் என் பொண்டாட்டி பாத்துக்குவா! நீ போம்மா! வீட்டுக்கு வந்ததும் கத்தப் போறாரு”

“அப்பன் மகன் ரெண்டு பேருக்கும் கத்தாம பேசத் தெரியாது! முரட்டு முட்டாப்பசங்க” முனகிக் கொண்டே சமையல் அறையில் இருந்து வெளியேறினார் அவர்.

கணவனின் குரல் கேட்டாலும், தன் செய்யும் வேலையிலேயே கவனமாக இருந்தாள் அபி. அவளை நெருங்கி வந்த பாலா,

“சுந்தரி, என் சுந்துக் குட்டி! என்ன செய்யறடீ, மாமன கூட கவனிக்காம?” என குழைவான குரலில் கேட்டு அவளைத் தன் புறம் திருப்பினான். எப்பொழுதும் போலவே தலையைக் குனிந்தபடி நின்றாள் அபி.

பாண்ட் பாக்கேட்டில் மறைத்து வைத்திருந்த மல்லிகையை வெளியே எடுத்தவன், தன் கையாலேயே அவளுக்கு வைத்து விட்டான். பின் இறுக்கி அணைத்து கூந்தலை வாசம் பிடித்தான்.

“இந்தப் பூ உன் தலைக்கு போனதும், அது பிறந்த பிறப்புக்கு ஒரு அர்த்தம் கிடைச்சிருச்சுடி! உன் தலையில இருக்கறதுனாலதாண்டி இந்தப் பூவுக்கே அழகு என் சுந்துக்குட்டி”

“விடுங்க மாமா! அத்தை வந்துருவாங்க!” மெல்லிய குரலில் பேசினாள்.

“அப்பாடா! நாலு வார்த்தை சேர்த்து பேசிட்டடி! கல்யாணம் ஆன இந்த ஒரு மாசத்துல மொத்தமா அம்பது வார்த்தைப் பேசிருப்பியா?”

அதற்கும் பதில் இல்லை. ஆனால் அவன் அணைப்பில் இருந்து விலகாமல் அப்படியே நின்றிருந்தாள் அபி.

“புது பாட்டு ஒன்னு கேட்டேண்டி டீ கடையில. நமக்குன்னு எழுதிருக்காங்க. பாடவா?”

சரி என்பது போல தலையாட்டினாள் அவள்.

“கோடி சுகம் வாராதோ

நீ எனைத் தீண்டினால்

காயங்களும் ஆறாதோ

நீ எதிர் தோன்றினால்

சுந்தரி கண்ணால் ஒரு சேதி

சொல்லடி இன்னாள் நல்ல தேதி

எப்ப டி மாமா நான் உன்னைக் காதலிக்கறேன்னு நல்ல வார்த்தை சொல்லப் போறே?” ஆசையாக கேட்டான் பாலா.

முரட்டு பாலாதான் தனக்கு கடவுளால் விதிக்கப்பட்ட கணவன் என அறிந்த தினத்தில் இருந்தே தனிமையில் அழுது கரைந்தாள் அபி. தம்பிக்காக, அவனின் நல்வாழ்வுக்காக அமைதியாக வலம் வந்தாள் அவள். எப்பொழுதுமே அவள் அமைதிதான். மனதில் உள்ளதை வெங்கியைத் தவிர வேறு யாரிடமும் பகிர்ந்து அறியாதவள். பெற்றவர்களோ சிறு வயதில் இருந்து வளர்ச்சிக்கு மீறி இவள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க தெரியாமல்,

“வாய மூடுடி சனியனே!” என சொல்லி அடக்கி வைத்தார்கள். வாயை மூடியே பழகி இருந்தவளுக்கு, புதிதாக வந்த கணவன் எனும் சொந்தத்திடம் கூட வாயைத் திறக்க முடியவில்லை.

அவள் பயந்து போய் கிடந்தது போல இல்லை அவளது மணவாழ்க்கை. திடீர் என வரும் கோபத்தில் சில சமயம் கத்தினாலும், பல சமயம் ஆதரவாகவும் அன்பாகவும் தான் இருந்தான் பாலா. முரட்டுத் தோற்றமும் அதற்கேற்றார் போல குணமும் அமையப் பெற்றவன், தனி அறையில் மனைவியை கண்ணாடி பாத்திரம் போல தாங்கினான். கொஞ்சி கொஞ்சியே கொலை செய்தான். தனிமையில் எந்நேரமும் சுந்துக்குட்டி ஜபம் தான் அவனுக்கு.

திருமணத்துக்கு முன்னே, கைப்பிடித்து முறுக்கி வலி கொடுத்தவனா இவன்? கொட்டி கொட்டி மண்டையை கலங்க செய்தவனா இவன் என அதிசயித்துப் போவாள் அபி. அந்த செயலுக்கு காரணங்களும் கூட அவனின் இரவு நேர கொஞ்சல்களில் வெளிப்படும்.

“ஏண்டி என்னைத் திரும்பியே பார்க்காம இருந்த? என்னைப் பார்ப்பியா, பார்ப்பியான்னு எந்நேரமும் உன் பின்னாலயே என் பார்வைப் போகும். எங்கப்பன் வேற உன் முன்னுக்குத்தான் இல்லாத திட்டெல்லாம் திட்டுவான். தலை குனிஞ்சிகிட்டே என்னைப் பார்த்து நீ சிரிக்கிறீயோன்னு தோணும்! அதான் தனிமை கிடைச்சா கையப் பிடிப்பேன். நீ கைய இழுக்க முயற்சி பண்ணுறப்பா என் கோபம் பிச்சிக்கிட்டு வரும். அதான் முறுக்கிப்புடுவேன். மாமன் கைப்பிடிச்சா கைய இழுத்துக்க ட்ரை பண்ணுவியா இனி?” என கேட்டு முத்தமிட்டே கொலை செய்வான்.

சில சமயங்களில் அணைத்தப்படியே தலை வருடிக் கொடுத்து அமைதியாக படுத்திருப்பான் பாலா.

“அடிக்கடி கொட்டுனேனே, தலை வலிக்குதா சுந்துக்குட்டி?” எப்பவோ கொட்டியதுக்கு இப்பொழுது வருந்துவான்.

வலிக்கவில்லை என்பது போல தலையை ஆட்டி வைப்பாள் அபி.

“வலிச்சிருக்கும்! நிமிந்துப் பார்க்க மாட்டறியேன்னு கோபத்துல கொட்டிருவேன். நிமிர்ந்துப் பார்த்துட்டா, உன் முட்டைக் கண்ணுல அப்படியே சொக்கிப் போயிருவேன். இந்த கண்ண வச்சித்தானே என்னை பாடா படுத்தறேன்னு அதுக்கும் கோபம் வரும். மூளைக்காரிக்கிட்டே மயங்கிப் போய் நிக்கறோமேன்னு ஆத்திரமா வரும். ஆனாலும் உன்னை விட்டுக் குடுக்க முடியலடி. என் சுந்துக் குட்டிடி நீ! நீ உங்க வீட்டுக்குப் போனதுல இருந்து எனக்குள்ள ஒரே கலக்கம். யாருகாச்சும் உன்னைக் கட்டிக் குடுத்துருவாங்களோன்னு ஒரே பயம். கடவுள் கூட என் பக்கம்தாண்டி. வச்சான் பாரு உனக்கு செவ்வாய் தோஷம்” அவள் தலையை நெஞ்சில் அழுத்திக் கொள்வான்.

‘உன் தம்பிக்குப் பொண்ணு பார்க்கறாங்கன்னு தெரியவும், தரகர் மூலமா கீதா போட்டோவ குடுத்து விட்டேன். ஒரே பதைப்புதான் சரி வருமா வராதான்னு. எங்கம்மாவையும் உசுப்பி விட்டு எங்கப்பாட்ட பேச வச்சு உன்னை இங்க கொண்டு வரதுக்குள்ள படாதபாடு பட்டுட்டேண்டி. இப்போத்தான் நிம்மதியா தூங்கவே முடியுது” எனபவன் தூங்காமல், மனைவியையும் தூங்க விடாமல் செய்வான்.

மனைவி மேல் உயிரை வைத்திருந்தாலும் பாலாவும் சராசரி கணவன் தான். சூரியகாந்தி படத்தில் வரும் முத்துராமன் முதல் நம் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜாராமன் வரை மனைவி என்பவள் என்றும் தனக்கு கீழ் படிந்து நடப்பதை விரும்புவது போலத்தான் இவனும் இருந்தான். அதை ஆண் ஈகோ என சொல்லலாமா? அல்லது ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் நான் ஆண் ஆளப்பிறந்தவன், நீ பெண் அடிபணிய பிறந்தவள் எனும் கோட்பாட்டின் வெளிப்பாடு என சொல்லலாமா?

மகனிடம் தங்களது தொழிலை ஒப்படைத்திருந்தாலும், முக்கியமான முடிவுகளை மருமகளையும் கூட வைத்துக் கொண்டு தான் எடுப்பார் பாலாவின் அப்பா. தன் மருமகளின் அறிவுத் திறன் மேல் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை. தொழில் சிறக்க வேண்டும், தங்கள் குடும்பம் இன்னும் செழிக்க வேண்டும் என இவளும் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து அமைதியான குரலில் தனது கருத்துக்களை சொல்லுவாள். அவள் சொல்வது பெரும்பாலும் லாபத்தையே கொடுப்பதால் முழுமனதுடன் அவரால் ஏற்றுக் கொள்ளப்படும்.

ஆனால் பாலாவின் அப்பாவுக்கு அதோடு விட்டுப் போக முடியாது. எதையாவது சொல்லி இவர்கள் உறவுக்கு ஆப்பு வைத்து விட்டுத்தான் போவார்.

“மருமக அளவுக்கு இவன் தேற மாட்டான். சொந்தமா முடிவெடுத்து தொரையே வாங்குன ரைஸ் மில் இப்போ நட்டத்துல ஓடுது. இப்படிப்பட்ட தறுதலை எனக்குப் புள்ளையா பொறக்கனும்னு எழுதி வச்சிருக்கான் பாரு அந்த ஆண்டவன்” என சத்தமாகவே இருவர் முன்னிலையில் முனகி விட்டுப் போவார்.

அபிக்கு சகலமும் ஆடிப்போகும். இரவு ஆரம்பித்துவிடுவானே அவனது புலம்பலை. இந்த மாதிரி சமயங்களில் அவனை எப்படி சமாதானம் செய்வது என இன்னும் தெரியவில்லையே அவளுக்கு.

“உன்னை யாருடி இம்புட்டு சூட்சும புத்தியோட பொறக்க சொன்னா? என்னை மாதிரி பொறந்துருக்கலாம்ல! எங்கப்பாரு உன்னைக் காட்டி என்னைத் திட்டறப்பலாம் அப்படியே பத்திக்கிட்டு வருதுடி! உன்னை அடிச்சு மூஞ்செல்லாம் பேத்துறனும் போல வருது! ஆனா என் சந்துக்குட்டிய இங்க வச்சிருக்கேண்டி!” நெஞ்சைத் தொட்டுக் காட்டுவான்.

“உன்னை அழ வச்ச ஒவ்வொரு முறையும் என் நெஞ்சுல உதிரமே கொட்டுச்சுடி! இல்ல, என்னால முடியாது! உன்னை அழ வைக்க முடியாதுடி!” இறுக்கிக் கொள்வான் தன்னவளை. அவளால் மனதுக்குக் கிடைத்த வலியை அவளுக்குள் மூழ்கியே மறக்க முனைவான். புலம்பி புலம்பி அவன் தூங்கியதும், மெல்ல எழுந்து மொட்டை மாடிக்கு வருவாள் அபி. வெங்கி வாங்கி தந்திருந்த குட்டி டெலிஸ்கோப்பும் கையில் இருக்கும்.

அங்கிருந்த நாற்காலியை எடுத்துப் போட்டுக் கொண்டு அமர்பவள், விடிய விடிய வான் நட்சத்திரங்களைப் பார்த்தப்படி இருப்பாள். ஒவ்வொன்றின் பேரும் அவளுக்குத் தெரியும். கணவனிடம் காட்டத் தெரியாத காதலை அந்த வான்வெளிக்குக் காட்டுவாள். முகம் மலர, உதட்டில் உறைந்த சிரிப்புடன் அப்படியே டெலிஸ்கோப்பைக் கண்ணுக்குக் கொடுத்து அமர்ந்திருப்பாள். மொட்டை மாடியின் வாசலில் தன் மனைவியைப் பார்த்தப்படியே நின்றிருப்பான் பாலா.

‘எப்படிலாம் காதலைக் காட்டறேன் நான்! ஆனா என்னைப் பார்த்து முகம் மலர சிரிச்சதே இல்லையே இவ! தானா வந்து கட்டிக்கிட்டது இல்ல, முத்தம் கொடுத்தது இல்ல. பத்து வார்த்தைப் பேசனா, மூனு வார்த்தைல பதில். அதுவும் முகத்தைப் பார்த்து சொல்லறது இல்ல. என் மனசு கஸ்டத்தைப் பகிர்ந்துகிட்டா கூட, ஆறுதலா ஒரு பார்வை இல்ல. காதலின் உச்சத்துல கூட என் பெயரை வாய் விட்டு சொன்னது இல்ல! சில சமயம் நான் தொடறப்போ கூட அவ நினைவு என் கிட்ட இருக்கா, இல்ல வேற எங்கயோ இருக்கான்னு தெரியல. இப்படி பல இல்லைகளோடவே என் வாழ்க்கைப் போயிருமோ! என் மேல ஆரம்பத்துல காதல் இருந்துருக்காம போகட்டும், இப்போலாம் அவ காலடியே சரணம்னு தானே இருக்கேன்! அப்போ கூட என் காதல் புரியலையா?’ மனம் நோக தன்னவளைப் பார்த்திருப்பான் பாலா.

அவளின் மனதின் செயல்பாடுகள், மூளையின் செயல்பாடுகள் எதுவும் புரியாதவன் ஆயிற்றே அவன்! இந்தக் காலத்தில் நன்றாக படித்திருந்தும், கவியைப் பற்றி தெரிந்திருந்தும் கூட மணியால் பல சமயங்களில் அவளை சமாளிக்க முடியாமல் போய் விடுகிறதே! அந்தக் காலகட்டத்தில் அபியை பற்றி புரியாமல் தவித்த பாலாவை என்னவென்று குற்றம் சொல்ல?

அபியும் பாலாவின் மேல் உயிரையே வைத்திருந்தாள். ஆனால் அதை வெளிப்படுத்தத்தான் தெரியவில்லை அவளுக்கு. முதலில் கடனே என வாழ வந்தாலும், பாலாவின் அதிரடியான அன்பில் மயங்கித்தான் போனாள் அபி. தனக்குள் சுரக்கும் அன்பை அவனிடம் காட்ட மனம் ஏங்கும். மனதில் தோன்றும் அனைத்தையும் பேசித் தீர்க்க மனம் ஆசைப்படும். ஆனால் எல்லாவற்றுக்கும் பயம். எங்கே வாயைத் திறந்தாள் தம்பியிடம் பேசுவது போல வான் வெளி, கோள்கள், கண்டம் என பேசிவிடுவாளோ என பயம். அப்படி பேசி இந்த முரடன், ஓஹோ நீ பெரிய புத்திசாலியா என மீண்டும் ஆரம்பித்து மனதை வதைத்து விடுவானோ என பயம். வெங்கியைக் கூட அதிகம் தொட்டுப் பழகியவள் இல்லை அபி. ஆகவே கணவனைத் தொட்டு தன் காதலைக் காட்ட வெட்கம் வந்து தடுத்தது. இண்ட்ரோவெர்ட் எனப்படும் தனிமை விரும்பும் பழக்கம் உடையவள், மற்றவர்களுடன் கலந்து பழக அஞ்சுபவளுக்கு கொண்ட கணவனிடமும் கூட்டை விட்டு வெளி வந்துப் பழக முடியவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக தனது கூட்டில் இருந்து வர முயற்சித்தாள். அந்த முயற்சியோ ஆமை வேகத்தை விட மெதுவாக இருந்தது. கட்டிப்பிடித்து காதல் செய்பவனை, இப்பொழுதுதான் தொட்டுப் பார்க்கவே ஆரம்பித்திருந்தாள். படபடவென பேசுபவனிடம் பாந்தமாக பதில் அளிக்கத் தொடங்கி இருந்தாள்.

இப்படியே போய் கொண்டிருந்த வாழ்க்கையில் தான் அபி கருவுற்றாள். அங்கே கீதாவும் கருத்தரித்திருந்தாள் எனும் செய்தி இரு வீட்டுக்கும் இரட்டை மகிழ்ச்சியைக் கொடுத்தது. அமெரிக்கா போகும் முன் தனது அக்காவைப் பார்த்து போக வந்தான் வெங்கி. முகம் தெளிவாக, கொஞ்சம் சதை வைத்து அழகாக இருந்த தன் தமக்கையைப் பார்த்து அகமகிழ்ந்துப் போனான் வெங்கி.

“சந்தோஷமா இருக்கியா அக்கா?”

“ஆமாடா வெங்கி. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்! நீ நிம்மதியா போய் படிச்சுட்டு வா! எது நடந்தாலும் படிப்புல கவனத்த விட்டுறக்கூடாது. இந்த படிப்புத்தான் நான்! அக்கா மேல உள்ள பாசத்த, ஒழுங்க படிச்சு முடிச்சு இந்தத் துறையில முன்னுக்கு வந்து நீ நிரூபிக்கனும்”

“கண்டிப்பா செய்வேன்கா” என உறுதி தந்துப் புறப்பட்டான் வெங்கி.

கருத்தரித்திருந்த அபியை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினான் பாலா. ஏற்கனவே ஒல்லி உடல் வாகு அவளுக்கு. எந்த வேலையும் செய்ய விடாமல் கண்ணுக்குள் பொத்தி வைத்திருந்தான் அபியை. ஆனாலும் அவன் தூங்கியதும் மொட்டை மாடிக்குப் போய், வான் நட்சத்திரங்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதை விடவில்லை அபி. விழித்தெழும் பல சமயங்களில், மாடிக்குப் போய் அவளைக் கடிந்து கீழே அழைத்து வருவான் பாலா.

“அறிவிருக்காடி? பேய் நடமாடுற நேரத்துல மொட்டை மாடியில போய் நிக்கற! வயித்துப் புள்ளைக்காரிடி நீ! காத்து கருப்பு அடிச்சிட்டா என்ன செய்யறது?” என கடிந்துக் கொள்வான். அப்பொழுதாவது அவள் சொல்லி இருக்கலாம், என் சுகதுக்கங்களைப் நான் பகிர்வது அந்த நட்சத்திரங்களிடம் தான் என. அவள் அமைதி இவனை கொல்லாமல் கொல்லும்.

“வாயத் திறந்து பேசிடாத, முத்து சிந்திரும்” என முனகிக் கொள்வான். நிமிர்ந்துப் பார்த்து அழகாகக் புன்னகைப்பாள் அபி.

அவளிடம் தெரிந்த சின்ன சின்ன மாற்றங்களைக் கண்டு கொள்ள முடியாமல் போனது யார் குற்றம்? தலைக் குனிந்தே இருப்பவள், முகம் பார்த்து புன்னகைக்கும் அளவு முன்னேறியதை அறியாமல் போனது யார் குற்றம்? அவனைக் கண்டாலே பயந்து நடுங்குபவள், அவனுக்குத் தேவையான ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வதைப் புரிந்துக் கொள்ளாமல் போனது யார் குற்றம்? தான் மாறி வருவதை உணர்த்தாமல் போன அபியின் குற்றமா? பெரிய மாற்றங்களை எண்ணி ஏங்கி சிறு மாற்றங்களைக் கவனிக்கத் தவறிய பாலாவின் குற்றமா?

வாழ்க்கை தெளிந்த நீரோடையாகப் போய் கொண்டிருந்தது. அடிக்கடி நிகழும் தந்தை மகன் பூசலும், அதற்குப் பிறகு அவன் அபியின் தலையை உருட்டுவதும் எப்பொழுதும் போல நடந்துக் கொண்டுதான் இருந்தது. ஆனால் அபி தன்னவனின் மேல் கொண்ட காதலால் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்துக்கு வந்திருந்தாள்.

அன்று சோவென மழை அடித்து ஓய்ந்திருந்தது. கணவனின் அணைப்பில் குளிர் காய்ந்துக் கொண்டிருந்தவள், திடுக்கிட்டு எழுந்தமர்ந்தாள். வயிற்றில் குழந்தை அசைவது போல இருந்தது. மனமெல்லாம் பூரித்துப் போனது அவளுக்கு. தனது சந்தோஷத்தைத் தூங்கிக் கொண்டிருக்கும் தன் கணவனிடம் மெல்லிய குரலில் சொன்னாள் அபி.

“மாமா, பாப்பா அசையறா மாமா. அடிக்கடி என் வயித்தப் புடிச்சுகிட்டு எப்ப அசைவா நம்ம மக அப்படின்னு கேப்பீங்களே! இப்போ அசையறா!” என சொல்லியவளுக்கு அதற்கு மேல் படுக்க முடியவில்லை. மொட்டை மாடிக்குப் போக சொல்லி கால்கள் பரபரத்தன. சத்தம் செய்யாமல் மெல்ல கட்டிலை விட்டு இறங்கியவள், டெலெஸ்கோப்பை எடுத்துக் கொண்டு படியேறினாள். ஈர தரை வழுக்கியது. மெல்ல அடி வைத்து நடந்தாள்.

மழை இருட்டில் வானத்தில் என்ன தெரியும்? நிலவோ நட்சத்திரமோ எதுவும் தெரியவில்லை. குளிர் காற்று வேறு உடலைத் துளைத்தது.

வானத்தைப் பார்த்து பேச ஆரம்பித்தாள் அபி.

“இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்! என்னை மாதிரி கொடுத்து வச்சவங்க யார் இருக்க முடியும்? காதலக் கொட்டிக் கொடுக்கற என் மாமா  பக்கத்துல இருக்கற வரைக்கும் அந்த வானைத்தையே வசப்படுத்திட்ட உணர்வுதான் எனக்கு. ஆஸ்ட்ரோபிசிக்ஸ் படிச்சாதான் வானம் வசப்படும்னு யார் சொன்னது? காதல படிச்சிகிட்டா வானம் மட்டும் இல்ல இந்த பிரபஞ்சமே வசப்படும்! அதுக்கு ஒத்த சாட்சி நாந்தான். இன்னொரு சாட்சி என்னோட வயித்துல இருக்கற பாப்பா” அவள் சொன்ன நிமிடம் குழந்தை அசைந்து தன் இருப்பைக் காட்டியது. முகம் மலர வயிற்றைத் தடவிக் கொடுத்தாள் அபி.

காற்று இன்னும் வேகமாக வீச சடசடவென மழைக் கொட்ட ஆரம்பித்தது.

“ஐயோ நனைஞ்சிட்டுப் போனா மாமா திட்டுவாங்களே!” என பதட்டம் அடைந்தவள், அவசரமாக நடந்தாள். மழை நீரால் நனைந்திருந்த ஈரத்தரை வழுக்க, படாரென கீழே விழுந்தாள் அபி. விழும் போது அவள் கத்திய ஒரே வார்த்தை,

“மாமா” என்பதுதான்!

எங்கோ தூரத்தில் கேட்ட சத்தத்தில் திடுக்கிட்டு விழித்த பாலா, பக்கத்தில் மனைவியைக் காணாமல் பதறி போனான். அடிக்கடி மொட்டை மாடியை அவள் தஞ்சம் அடைவது தெரிந்தாலும் வெளியே தூறிய பேய் மழை பயத்தை கொடுத்தது.

அடித்துப் பிடித்து அவன் மொட்டை மாடிக்கு ஓட, அங்கே கண்ட காட்சியில் அதிர்ந்துப் போய் நின்றான்.

மழைநீர் அடித்துக் கழுவ கழுவ, அவள் தொடை வழியே ரத்தம் விடாமல் வழிந்துக் கொண்டே இருந்தது.

“சுந்துக்குட்டி!!!!” அவன் அலறிய அலறல் மழை சத்தத்தையும் மீறி எதிரொலித்தது.

 

(கொட்டும்)