SSKN– Epilogue

எபிலாக்

 

அசைந்தாய்

அன்பே அசைந்தேன்

அழகாய்

ஐயோ தொலைந்தேன்!!!

 

ஆறு மாதங்களுக்குப் பிறகு

 

பிரபஞ்சத்தின் எழிலை எல்லாம் தனக்குள் அடக்கி, காற்றினில் குளுமையாய் இதம் கலந்து, சலசலக்கும் இசையாய் செவியினில் ஆர்ப்பரிக்கும் பேரரருவி நயாகரா நீர்வீழ்ச்சியின் நடுவில் நின்றிருந்தார்கள் கவியும் மணியும். அவர்களோடு இன்னும் பல ஜோடிகள் அந்தப் படகில்.

தனது ஆசை மனைவியை பின்னால் இருந்து அணைத்தப்படி அவள் தோளில் தன் தாடையைப் பதித்திருந்தான் மணி. தியானம் செய்பவன் போல கண் மூடி, ஆர்ப்பாட்டமாக நீர் விழும் ஓசையை தனக்குள் சேமித்துக் கொண்டிருந்தவனை மெல்ல உசுப்பினாள் கவி.

“மெடிட்டேஷன் முடிச்சிட்டியா மணி? இஸ்க்கு இஸ்க்குன்னு சத்தம் கேட்டுச்சா?”

செல்லமாகத் அவள் தலையில் கொட்டினான் மணி.

“இருந்தாலும் நீ செய்யறது எல்லாம் ஓவர்டா மணி! ஹனிமூனுக்கு காசு உள்ளவங்க சுவிஸ் போவாங்க! நம்மகிட்ட காசு இருந்தும், நோகாம நொங்கு சாப்பிடற மாதிரி உள்ளூர்ல இருக்கற நயாகராக்கு கூட்டிட்டு வந்துருக்கப்பாரு, நெஞ்சைக் கிள்ளிட்டடா!”

“போன முறை வந்தப்போ சில்லுன்னு சிலிர்க்க வைக்கற இந்த நயாகரா முன்ன நான் ஒரு சபதம் எடுத்தேண்டி பொண்டாட்டி!”

“என்னன்னு?”

“என் ஆள இங்க கூட்டிட்டு வந்துதான் ஐ லவ் யூ சொல்லுவேன்னு”

“பார்டா! ஆனா ஏற்கனவே எனக்கு ரெண்டு தடவை ரீடர்ஸ் முன்னுக்கும், பல நூறு தடவை நம்ம இனிமையான தனிமையிலும் ஐ லவ் யூ சொல்லிட்டியே!”

“நான் என்னடி செய்யட்டும்? உன்னை தனியா இங்க தள்ளிட்டு வர மாதிரியா நம்ம சிட்டுவெஷன் இருந்துச்சு! ஆனாலும் போட்ட சபதம் போட்டது தான்! சோ இங்க வச்சு உனக்கு ஸ்பேஷலா சொல்லப் போறேன்!”

“ஜொள்ளு ஜொள்ளு!”

அவள் முன் ஒற்றைக் காலை மடக்கி மண்டியிட்டான் மணி.

“டேய், என்னடா பண்ணற? எல்லாம் நம்மள பார்க்கறாங்கடா” முகம் சிவக்க பதட்டமடைந்தாள் கவி.

அவள் வாயசைப்பது மட்டும் தான் இவனுக்குத் தெரிந்தது. சத்தம் கேட்கவில்லை. அவளின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டவன், அவள் கண்களை ஆழ்ந்து நோக்கி,

“ஐ லவ் யூ மை லயனஸ்” என கத்தினான்.

நீர் விழும் சோவென்ற சத்தத்தில் அருகில் நெருங்கி நின்ற வரை பேசுவது ஓரளவு கேட்டது. நகர்ந்து அமர்ந்ததும் நீரின் ஓசையில் பேரிரைச்சல் மட்டுமே கேட்டது. அவன் கத்தியது கூட காற்றோடு கலந்து விட்டது.

“ஒன்னும் கேட்கலடா!” காதை காட்டி கத்தி சைகை செய்தாள் கவி.

“ஐ லவ் யூ லயனஸ்” என இன்னும் சத்தத்தைக் கூட்டினான்.

“ஒன்னும் கேக்கல” இப்பொழுது கேட்டாலும் வேண்டும் என்றே அவனை வம்பிழுக்க  சைகை செய்து கத்தினாள் கவி.

“ஐ லவ் யூ லயனஸ்!!!!!” இப்பொழுது இவன் மட்டும் அல்ல படகில் அவர்கள் அருகில் நின்றிருந்தவர்கள் கூட கத்தினார்கள்.

கவிக்கு வெட்கமாய்ப் போய் விட, இவன் வாய் விட்டு சிரித்தான். பின் எழுந்து அருகில் இருப்பவர்களுக்கு ஒரு சல்யூட் வைத்தான் மணி. அவர்களும் சிரித்தப்படி நகர்ந்துவிட்டார்கள்.

மீண்டும் தன் கவியை பின்னால் இருந்து அணைத்தவன், பாக்கேட்டில் வைத்திருந்த தங்க சங்கிலியை அவளுக்கு அணிவித்து விட்டான். சங்கிலியின் பெண்டனில் அழகாக கவிமணி என பொறிக்கப்பட்டிருந்தது. ஆசையாக கவி அதைத் தடவிக் கொடுக்க,

“ஐ லவ் யூ மை டியர் லயனஸ்” என காதோரம் காதலை சொன்னான் அந்தக் கலாபக் காதலன்.

“ஐ லவ் யூ மணி!!! நவ் அண்ட் போரேவர்!” என கண் கலங்கினாள் கவி.

“வேறு வேறு நாடான கனடாவையும் அமெரிக்காவையும் எப்படி இந்த நயாகரா இணைச்சு வச்சிருக்கோ, அதே மாதிரி வேறு வேறு குணம் கொண்ட நம்ம ரெண்டு பேரையும் நயாகராவை விட ஆழமான நம்ம காதல் என்னைக்கும் இணைச்சு வச்சிருக்கும் கவி” அணைத்துக் கொண்டான் தன்னவளை.

இவர்கள் இங்கே படகில் காதல் பயணம் போய் கொண்டிருக்க, வெங்கியும் மீராவும் சுற்றுலாப் பயணிகள் நின்றுக் கொண்டே நீர்வீழ்ச்சியைப் பார்க்கும் இடத்தில் நின்றிருந்தார்கள்.

கவிக்கு கை ஓரளவு அசைக்க முடியவும் தான் மணி இந்த ட்ரீப் ப்ளான் செய்திருந்தான். இன்னும் கனமான வேலைகள் எதுவும் செய்ய முடிவதில்லை அவளால். இவன் செய்ய விடுவதும் இல்லை. ட்ரீப் என்றதுமே வெங்கியையும் மீராவையும் அழைத்து விட்டார்கள் மணியும் கவியும். சின்னவர்களுக்குத் தனிமைக் கொடுப்பதற்காக இவர்கள் மறுக்க, அவர்கள் இருவரோ ட்ரீப்பையே கான்சல் செய்து விடுவதாக சொல்லி மிரட்டி அழைத்து வந்திருந்தார்கள்.

மீராவின் கர்ப்பத்தை முன்னிட்டு படகு பயணத்தைத் தவிர்த்து விட்டு இங்கே நின்று வேடிக்கைப் பார்த்திருந்தனர் இருவரும். அருகில் இருக்கும் பெஞ்ச் காலி ஆகவும் மீராவை அங்கே உட்கார வைத்தவர் தானும் அமர்ந்தார்.

“களைப்பா இருக்காடா மீரா?”

“இல்லங்க! கொஞ்சம் கால் வலிக்குது, அவ்வளவுதான்.”

கால் பிடித்து விடுவதற்காக கீழே குனிந்த வெங்கியின் முதுகிலேயே ஒன்று போட்டார் மீரா.

“பப்ளிக்ல வச்சு என்ன வேலைப் பார்க்கறீங்க? கொன்னுருவேன்!”

“பப்ளிக்கோ ப்ரைவட்டோ, என் பொண்டாட்டிக்கு கால் வலிக்குதுன்றப்ப எனக்கு நெஞ்சே வலிக்குதுடி!”

“இப்படி ஒவ்வொரு நைட்டும் வசனம் பேசித்தான், என்னை இப்படி வயித்த தள்ளிக்கிட்டு நிக்க வச்சிட்டீங்க! இனிமே இந்த மாதிரி பேசுவீங்க?” வெங்கியின் தொடையில் வலிக்காமல் கிள்ளினார் மீரா.

வெட்கத்துடன் புன்னகைத்தார் வெங்கி.

“இதெல்லாம் கடவுளோட கிப்டுடி மீரா! என் கையில ஒன்னும் இல்ல” பெருந்தன்மையாக சொன்னார் அவர்.

“யோவ்!

மச்சக்கன்னி ஒத்துக்கிச்சு

பச்சைத்தண்ணி பத்திக்கிச்சு

தில்லேலே போடு தில்லேலேனு

பாடிட்டு இப்போ வந்து எல்லாம் கடவுள் கையிலன்னு சொல்றதெல்லாம் சுத்த கேப்மாரித்தனம்” சிரித்தார் மீரா.

பின் சீரியசாக,

“இதோட போதும்யா! ரொம்ப சங்கடமா இருக்கு” என மனதில் இருப்பதை பகிர்ந்துக் கொண்டார் மீரா.

“போதும்டி ஒன்னு! இந்தப் புள்ளையோட ஒவ்வொரு நொடியையும் அனுபவிச்சு ரசிச்சு சந்தோஷத்துல திளைச்சுப் போறேன் மீரா! என் ஒட்டு மொத்த சந்தோசத்தையும் மீட்டுக் குடுத்துருக்க. இனிமே உனக்கு சங்கடம் வர எதையும் செய்ய மாட்டேண்டி! தாய்மைன்ற வரத்தை அனுபவிச்சுப் பார்க்கனும்னு உனக்கும் ஆசை இருக்கும்னு எனக்குத் தெரியும்! நம்ம ரெண்டு பேர் ஆசையையும் நிறைவேத்திக்கத்தான் இந்த குழந்தை. இனிமே நானும் தாத்தாவா இருக்க மட்டும்தான் விரும்பறேன். மனசுல எதையும் யோசிக்காம, சங்கடப்படாம நம்ம புள்ளய சந்தோஷமா சுமந்துப் பெத்துக் குடுடி”

சுயநலமாய் சிந்திக்காமல் தனக்காகவும் யோசிக்கும் தன் கணவனை காதலோடு நோக்கினார் மீரா.

“வெங்கி”

“என்னம்மா?”

“நான் உங்களை செம்மையா டாவடிக்கறேன்”

“நானும்தாண்டி, டாவு டாவா அடிக்கறேன். இது அந்த ப்ளேக்..” ஹோல் மேல் சத்தியம் என சொல்ல வந்தவர் வாயைப் பொத்தினார் மீரா.

“ப்ளேக் ஹோலை இன்னும் ஒரு தடவை இழுத்தீங்க, இந்த வெங்கிய வெள்ளாவி இல்லாம வெளுத்து விட்டுருவேன்!” என மிரட்டினார் அவர்.

சிரிப்புடன் தன் மனைவியின் தோள் மேல் ஒரு கையைப் போட்டு இன்னொரு கையால் நன்றாக உப்பித் தெரிந்த மீராவின் வயிற்றைத் தடவிக் கொடுத்தார் வெங்கி. தன் அப்பாவின் கைப்பட்டதும், உள்ளிருந்தே தன் கையால் ஹை பை கொடுத்தான் பையன். இன்னொரு ஜீனியஸ் ஆன் தி வே!

மூன்று நாட்கள் ஓய்வெடுத்து ஒன்றாக சுற்றித் திரிந்து சந்தோஷமாக தங்கள் நேரத்தை செலவு செய்தார்கள் பெரிய ஜோடியும் சின்ன ஜோடியும். நான்காவது நாள் மாலை மிஷிகனில் இருந்த வெங்கியின் வீட்டை இவர்கள் நால்வரும் அடைந்த போது மணி ஐந்தடித்திருந்தது. கவியும், மணியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து ஜாடை செய்துக் கொண்டு, மெல்ல வீட்டின் கதவைத் திறந்தனர்.

இருட்டாக இருந்த வீடு இவர்கள் உள்ளே நுழையவும் ஒளிப்பெற்றது. கூடவே,

“சர்ப்ரைஸ்!” எனும் கூச்சலும் காதைப் பிளந்தது.

வெங்கியும் மீராவும் நிஜமாகவே சர்ப்ரைஸ் ஆகி அதிர்ந்து நின்றார்கள். உள்ளே ஒரு பட்டாளமே இவர்களுக்காகக் காத்திருந்தது. பிரகாஷ் அண்ட் பேமிலி, சிவா அண்ட் பேமிலி மற்றும் சேண்ட்ரா அண்ட் பேமிலி தான் அவர்கள் எல்லோரும்.

வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. மணி தன் மாமனாரை அவர் அறைக்கு அழைத்துக் போக, சித்ராவும் நிலாவும் மீராவை அவரது பழைய அறைக்கு அழைத்துப் போனார்கள். அவர்கள் இருவரும் திரும்பி வரும் போது, நடு வீட்டில் நாற்காலி போட்டு அழகாக சீமந்தம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சித்ரா வாங்கி வந்திருந்த அழகிய மாம்பழ நிற புடவையில், கண்களில் கண்ணீர் நிறைந்திருக்க, உதட்டில் சிரிப்புடன் வந்தார் மீரா. மீராவின் நிலையில் தான் இருந்தார் வெங்கியும். அழகாக பட்டு வெட்டியில், மாம்பழ நிற ஜிப்பாவில் அம்சமாக இருந்தார். கவி அதே நிறத்தில் சுடிதார் அணிந்திருக்க, மணியும் அதே நிற ஜீப்பாவுடனும் நீல நிற ஜீன்சுடனும் நின்றிருந்தான்.

கவியும் மணியும் தான் மீராவுக்கு வளைக்காப்பு செய்யத் திட்டமிட்டு இந்த அரேஞ்மெண்டை செய்திருந்தார்கள். வந்திருந்தவர்கள் முகத்தில் எல்லாம் சந்தோஷம் மட்டுமே. பிள்ளைகள் ஹேரியுடன் ஓடி விளையாட, தீபாவும் தீபியும் கவியின் வாலைப் பிடித்து அலைந்துக் கொண்டிருந்தார்கள்.

சித்ராவும், நிலாவும் மீராவை மனையில் அமர்த்தி செய்ய வேண்டிய சடங்குகளை செய்தனர். முகத்தில் சந்தனம் பூசி, நெற்றியில் குங்குமம் இட்டு, வளை அடுக்கினார்கள். பூரிப்பில் முகம் மின்ன வெட்கம் பிடிங்கித் தின்ன தலை குனிந்து அமர்ந்திருந்தார் மீரா. வெங்கி சொல்லியது போல சங்கடப்படக்கூடாது என தனக்குள் அறிவுருத்திக் கொண்டவர் பின் நிமிர்ந்து அமர்ந்தார். அவர் பார்வை வட்டத்தில் வெங்கி விழுந்தார். வாய் பிரகாஷிடம் பேசிக் கொண்டிருந்தாலும் கண்கள் மீராவையே பார்த்திருந்தன. அவர் கண்கள் கூட லேசாக கலங்கி இருந்தன. மீரா வெல்லிய புன்னகை ஒன்றை அவர் புறம் அனுப்பவும், அவர் முகமும் மலர்ந்தது.

கடைசியாக வெங்கி முறை செய்ய அழைக்கப்பட்டார். தன் அப்பாவை நெருங்கிய கவி அவர் கைகளில் இரு வைர வளையல்களைத் திணித்தாள்.

“என்னோட மீரா அம்மாவுக்கு என்னோட கிப்ட். போட்டு விடுங்கப்பா!”

தன் ஆசை மகளை இறுக்கமாக அணைத்து விடுவித்தார் வெங்கி. மனைவியை நெருங்கி அன்பாகவும் காதலாகவும் சந்தனம் பூசி பொட்டிட்டு வளையலைப் போட்டுவிட்டார் அந்த அன்புக் கணவர்.

பின் மீராவை எழுப்பி சோபாவில் அமர்த்திய நிலா,

“ஹோய் பல்செட்! வா, வந்து மனையில உட்காரு” என அதிகாரமாக அழைத்தாள். நிலாவைப் பார்த்தாளே பம்மும் கவியும் மணியைப் பாவமாகப் பார்த்தாள்.

“ஆரம்பிச்சுட்டாடா உங்கக்கா அலப்றைய! இனிமே உன் பொண்டாட்டிய யாராலும் காப்பாத்த முடியாது” என சிரித்தான் சிவா.

சிரிப்புடன் வந்த சித்ரா ஆதரவாக கவியின் கைப்பிடித்துக் கூட்டிப் போய் மனையில் அமர்த்தினாள்.

“நிலா உன்னை கலாட்டா பண்ணறா கவிம்மா! பயப்படாத! பயந்தன்னு வை, அப்புறம் நம்ம சிவா சார் மாதிரி டம்மி பீஸ் ஆகிருவ” என சிவாவைக் கலாய்தாள் சித்ரா.

“சகலை, இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்! உங்க வைப் என்னை ரொம்ப டேமேஜ் பண்ணுறாங்க! சொல்லி வைங்க என்னப் பத்தி” என பிரகாஷிடம் முறையிட்டான் சிவா.

“அங்க என்ன சத்தம்? பையன் முட்டிப் போட்டுட்டு கிச்சனுக்குப் போறான் பாருங்க! போய் தூக்குங்க” என நிலா கொடுத்த சவுண்டில்,

“தோ, போறேன்மா!” என பம்மியவாறே நகர்ந்தான் அவன். அங்கே ஒரு சிரிப்பலை வெடித்துக் கிளம்பியது.

“அடுத்த வருஷம் நீயும் எங்க வீட்டுக்கு ஒரு வாரிசைப் பெத்துக் கொடுக்கனும்” என வாழ்த்தியவாறே வளை அடுக்கினாள் சித்ரா. குனிந்து முகம் நிறைய சிரிப்போடு வளை அடுக்கும் தன் மனைவி சிமியை காதலோடு பார்த்திருந்தான் பிரகாஷ்.

“மேரி பியாரி சிமி!” மெல்ல முணுமுணுத்தான்.

“ஹ்கும்! இன்னும் பியாரிதானா? எங்க வீட்டுல எல்லாம் பியாரி பிசாசா மாறி பல நாளு ஆச்சு” என நொடித்துக் கொண்டான் சிவா.

“ஓஹோ! என் மக நிலாவ பிசாசுன்னு சொன்னத அவ கிட்டப் போட்டுக் குடுக்கவா?” என சிரிப்புடன் கேட்டான் பிரகாஷ்.

“வை பாஸ் வை? இந்த ட்ரீப்ப சாக்கு வச்சு இன்னொரு ஹனிமூன் போடலாம்னு வந்த என் நினைப்புல மண்ணைப் போட்டுறாதீங்க. நீங்க சைட்டடிக்கறத கண்டினியூ பண்ணுங்க ப்ளிஸ்” என ஜகா வாங்கினான் சிவா.

சித்ராவுக்குப் பிறகு வளை அடுக்க வந்தாள் நிலா. மெல்லிய குரலில் யாருக்கும் கேட்காதவாறு,

“பல்செட்டு, எப்படி குட்டி பல்செட்டுப் பெத்துக் குடுக்கப் போற? என் தம்பிய வச்சு நீ ஒன்னும் காமடி கீமடி பண்ணலல?” என கேட்டாள்.

“அது வந்து நிலாக்கா..” என மென்று முழுங்கினாள் கவி.

“க்கா! அவ இன்னும் அண்டர் மெடிகேஷன்ல தான் இருக்கா! அதோட இன்னும் பிசியோ போயிட்டு இருக்கு. நான் தான் இப்போ எதுவும் வேணான்னு தள்ளிப் போட்டுருக்கேன்!” என கவியின் உதவிக்கு வந்தான் மணி.

“உன் கிட்ட பேசுனாலே இவனுக்கு மூக்கு வேர்த்துருமே! என்னவோ போ, போன தடவை மாதிரி இல்லாம ரெண்டு பேர் முகமும் இப்போ நல்லா தெளிவா இருக்கு. குட் நியுஸ் சீக்கிரம் வரும்னு நம்பறேன்” என சிரித்தப்படியே போனாள் நிலா.

அன்று இரவு தங்கள் மகனை நெஞ்சில் போட்டுப் படுத்திருந்த பிரகாஷின் மற்றொரு பக்கம் வந்து நெருங்கிப் படுத்தாள் சித்ரா. தன் கைகள் ஈரமாவதைப் பார்த்து பதறி எழுந்தான் பிரகாஷ்.

“என்னம்மா சிமி? எதுக்கு அழற?”

“மனசு நெறைஞ்சுப் போயிருக்கு கப்பூரு! ஆனந்தக் கண்ணீர் இது!”

“மணி ரொம்ப சந்தோஷமா இருக்கான் சிமி. அவங்க ரெண்டு பேரும் நிறைவா வாழ ஆரம்பிச்சிட்டாங்க. நிலாவும் சந்தோஷமா இருக்கா! ஒரு அக்காவா உன் தம்பி தங்கச்சிக்கு நல்ல வாழ்வ அமைச்சிக் கொடுத்துட்ட. இனிமே இந்தக் கண்ணுல இருந்து கண்ணீர் வரக்கூடாது. புரியுதா?”

“இதெல்லாம் உன்னால தான் சாத்தியமாச்சு ப்ரௌனி! அவங்களுக்கு  அப்பா ஸ்தானத்துல இருந்து வாழ்க்கையை அமைச்சுக் குடுத்தது நீதான். இன்னும் கூட அவங்களுக்குப் பக்கபலமா இருக்கறதும் நீதான் ப்ரௌனி! எங்க லைப்ல நீ வந்தது பெரிய வரம்” உணர்ச்சி வசப்பட்டாள் சித்ரா.

“இல்ல, இல்ல! என் லைப்ல நீங்க வந்தது தான் கடவுள் எனக்குக் கொடுத்த வரம் சிமி”

“சரி விடு! உனக்கு நான் வரம், எனக்கு நீ வரம்! இப்ப ரெண்டு பேரும் போவோம் சம்சார சாகரம்” என சொல்லி தன் கணவனின் உதட்டை முற்றுகையிட்டாள் சித்ரா. கணவன் சொல்லிக் கொடுத்த எல்லா முத்தப் பாடத்தையும் இத்தனை வருஷத்திற்குள் கரைத்துக் குடித்து கரை ஏறி இருந்தாள் ப்ரௌனியின் சிமி.

 

இரண்டு வருடங்களுக்குப் பிறகு

 

மீராவின் குலதெய்வம் மண்டப் கருப்பன் கோயிலில் பொங்கல் வைத்து கெடா வெட்டும் ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப் பட்டிருந்தன. கவியின் கை முற்றிலும் குணமடைந்திருக்க, தான் வைத்த வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக எல்லோரையும் அழைத்து வந்திருந்தார் மீரா. ஏற்கனவே மணியின் குடும்பத்தை சென்னையில் பார்த்து விட்டுத்தான் கிராமத்துக்கு வந்திருந்தார்கள். பள்ளி நாளாக இருக்கவும் அவர்கள் யாரும் கிராமத்துக்கு வரமுடியவில்லை.

தன் மகனை இடுப்பில் வைத்துக் கொண்டே பொங்கல் வைப்பதற்கான வேலைகளில் இறங்கினார் மீரா. கவிக்கு இப்பொழுது ஆறாவது மாதமாக இருக்கவும், அவளை ஒன்றும் செய்ய விடாமல் கோயில் தரையில் பாய் விரித்து அமர வைத்திருந்தான் மணி. வெங்கி மீராவுக்கு உதவிக் கொண்டிருந்தார். மணி கோயிலுக்குப் பின்னால் நடக்கும் கெடா வெட்டும் நிகழ்வை மேற்பார்வைப் பார்த்திருந்தான்.

அப்பொழுது அங்கே ஒரு கார் வந்து நின்றது. யாரென நிமிர்ந்துப் பார்த்த மீரா, சட்டென உடல் விறைத்தார். படபடவென பேசிக் கொண்டிருந்த மீராவின் திடீர் அமைதியைப் பார்த்த வெங்கி அவள் பார்வைப் போன திசையைப் பார்த்தார்.

அந்தக் காரில் இருந்து ஒரு வயதான பெண்மணியும், சின்ன வயசுப் பையன் ஒருவனும், நடுத்தர வயசு ஆண் ஒருவனும், இன்னொரு பெண்ணும், குழந்தைகளும் இறங்கினர்.

“உன் பேமிலியா மீரா?” என கேட்டார் வெங்கி. ஏற்கனவே போட்டோவில் மீரா காட்டி இருக்கிறார். அதுவும் அந்த பாபுவை இவருக்கு நன்றாக ஞாபகம் இருந்தது. அவன் போட்டோவை மட்டும் இவர் போனில் போட்டோ எடுத்து அனுப்ப வேண்டிய இடத்துக்கு அனுப்பி செய்ய வேண்டியதை கச்சிதமாக செய்தவராயிற்றே! தாங்கி தாங்கி நடந்து வந்த பாபுவைப் பார்த்து நன்றாக முகத்தில் முறுவல் மலர்ந்தது வெங்கிக்கு.

‘பெர்பெக்ட்!’ என மனதில் சொல்லிக் கொண்டார்.

ஆத்திரமாக அவர்களை முறைத்து நின்ற மனைவியின் தோள் மேல் கைப்போட்டுக் கொண்டார் வெங்கி.

“சிரிடி! முகத்த இப்படி வச்சு அவங்களுக்கு வெற்றியைக் குடுக்காத! சந்தோஷமா வேலையைப் பாரு! நான் சமாளிக்கறேன்” என்றபடி மகனை வாங்கிக் கொண்டார்.

“வாங்க! வாங்க” என அவர்களை வரவேற்றார் வெங்கி.

யாரோ கிழவனைக் கட்டி இருக்கிறாள்! இப்பொழுது பொங்கல் வைக்க ஊருக்கு வருகிறாள் என மகன் மூலமாக அறிந்த மீராவின் அம்மா நன்றாக மீராவை நாலு வார்த்தைக் கேட்கலாம் என புறப்பட்டு வந்திருந்தார்.

இங்கே வந்து வெங்கியைப் பார்த்தவர் வாயடைத்துப் போய் நின்றார். படித்தக் களை சொட்ட, கம்பீரமாக ஆழுமையுடன் நின்றிருந்த வெங்கியைப் பார்த்ததும் அவருக்கு நாக்கு புரளவில்லை பேச.

“விசேஷத்துக்கு வந்தது ரொம்ப சந்தோஷம். இருந்து சாப்பிட்டுட்டு தான் போகனும்” என கேட்டுக் கொண்டார் வெங்கி.

பாபுவின் பார்வையோ மீராவையே சுற்றி சுற்றி வந்தது.

“நல்லாயிருக்கீங்களா? கால் என்னாச்சு? நொண்டி நொண்டி வரீங்க?” என விசாரித்தார் வெங்கி.

“மெக்கானிக் ஷாப்புல புகுந்து நாலு பேரு யாருடா பாபுன்னு கேட்டு அடிச்சு போட்டுட்டானுங்க. இந்தக் காலுல தான் செம்ம அடி. ரொம்ப நாளு ஆஸ்பத்திரில இருந்தேன். அதுல இருந்து இப்படித்தான் தாங்கி தாங்கி நடக்கறேன் சகல” வாய்ஸ் இவரிடம் இருந்தாலும் ஐஸ் மீராவிடம் இருந்தது.

பாபுவை நெருங்கி நின்ற வெங்கி,

“இன்னும் கொஞ்ச நேரம் என் பொண்டாட்டிய உத்துப் பார்த்தீனா, இன்னொரு காலும் இழுத்துக்கும்! என்ன பரவாயில்லயா?” என அழுத்தமாகக் கேட்டார்.

“என்னது? இத பண்ணது நீங்களா?” பார்வை வெங்கியிடம் வந்திருந்தது.

“நானேத்தான்! உன்னை என் கையாலயே அடிச்சு துவைக்கனும் மாதிரி வருது. ஆனா உன்னைத் தொட்டுட்டா என் பொண்டாட்டி அப்புறம் அவ கிட்டயே என்னை விட மாட்டா! அதான் பார்க்கறேன்! எங்க பாதுகாப்புக்கு ஆள் கூட்டி வந்துருக்கேன்! சோ ஏதாச்சும் வீரத்தைக் காட்டறேன்னு இங்க சீன் போடாம கம்முனு போடறத சாப்டுட்டு கிளம்பி போய் கிட்டே இரு”

சுற்றிலும் பார்த்த பாபு பாடிகாட் மாதிரி கூட்டத்தில் நின்றிருந்த நான்கு பேரைப் பார்க்கவும் மெல்ல நடந்துப் போய் உட்காரும் இடத்தில் தன் பிள்ளைகளுடன் அமர்ந்துக் கொண்டார். மீராவின் அம்மாவோ அவளிடம் பேச வர,

“இங்க பாரும்மா! நான் ஏற்கனவே சொன்னதுதான். நீ உசிரோட இருக்கற வரைக்கும் மறக்காம காசு குடுக்கறேன். அவ்வளவுதான் உனக்கும் எனக்கும் உள்ள உறவு. மகளே மீரான்னு பாச சீன் ஓட்டுன, குடுக்கற காசையும் நிப்பாட்டிருவேன்.” என ஒரே போடாக போட்டு விட்டாள். அதற்கு மேல் அங்கு நிற்பாரா அவர், அவரும் போய் அமர்ந்துக் கொண்டார். அவரோடு நீலாவும். தம்பியிடம் மட்டும் சிரித்து நாலு வார்த்தைப் பேசினாள் மீரா.

அமோகமாக பொங்கல் வைத்து, கெடா வெட்டி சாமி கும்பிட்டார்கள் எல்லோரும். உணவு முடித்து மீராவின் குடும்பம் போய் விட, இன்னொரு கார் வந்து நின்றது.

இப்பொழுது திகைத்து நிற்பது வெங்கியின் முறையாயிற்று. காரில் இருந்து ஒத்தை ஆளாக இறங்கினார் பாலகணபதி. முடி லேசாக நரைத்திருக்க, தேகம் கொஞ்சம் ஒடுங்கி இருந்தாலும் அதே கம்பீரத்துடன் நடந்து வந்தார் அவர்.

“மாமா!”

“என்னை எதிர்பார்க்கலையா வெங்கி? என் மருமக என்னைத் தேடிப் பிடிச்சுப் போன் போட்டாப்பா! இங்க வர சொன்னதும் அவதான். எங்க அவ?”

“அவளா? அவளா வர சொன்னா?”

“ஆமாடா! அவ குரல போனுல கேட்டதும் என்னால முடியாதுன்னு சொல்ல முடியல. அப்படியே என் சுந்தரி குரலு”லேசாக கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டார்.

“மாமா! இன்னும் அக்காவ மறக்கலையா நீங்க?” தொண்டையை செருமிக் கொண்டு கேட்டார் வெங்கி.

“உன் அக்கா தெய்வமா ஆகிட்டாடா! முன்னாள் பொண்டாட்டிய நினைச்சா தான் இப்ப உள்ள பொண்டாட்டிக்கு செய்யற துரோகம். தெய்வத்தை நினைக்கறது துரோகமில்லைடா!”

“மாமா” என பாலாவைக் கட்டிக் கொண்டார் வெங்கி.

“யாரும் வேணான்னு போய்ட்டேன்! ஆனா உங்கள எல்லாம் நினைக்காத நாளில்லடா! வயசு ஓடிச்சிருச்சு! ரெண்டு புள்ளைங்க ஆச்சு! நான் நல்லா இருக்கறத பார்த்து உங்கக்கா சந்தோஷமா இருப்பால்ல மேலுலகத்துல?”

“மாமா, அவங்க ஏன் அப்படி செஞ்சாங்கன்னு..”

“வேணாண்டா! ஒன்னும் சொல்ல வேணாம்! என் கிட்ட ஒன்னும் சொல்லக் கூடாதுன்னு அவ சொல்லியிருப்பா! அதான் நீ இது வரைக்கும் ஒன்னும் சொல்லல, என்னைத் தொடர்பும் கொள்ளல. இத்தனை வருஷம் கழிச்சு அவளுக்கு குடுத்த சத்தியத்த மீற வேண்டாண்டா வெங்கி. அவ ஆசைப்பட்டப்படி நான் சந்தோஷமா இருக்கேன். என்னை நம்பி வந்தவளையும் சந்தோஷமா வச்சிருக்கேன்! விட்டுருடா!”

“கவிம்மா! உன்னைப் பார்க்க யார் வந்துருக்காங்க பாரு” என அழைத்தார் வெங்கி.

கோயிலில் இருந்து மணியுடன் மெல்ல அசைந்து நடந்து வந்தாள் கவிலயா. அவளைப் பார்த்து அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டார் பாலா. கண்களில் அருவியாய் கண்ணீர் சுரந்தது.

“சுந்துக்குட்டி” வாய் முணுமுணுத்தது.

“பாலாப்பா! இவ உங்க சுந்துக்குட்டி இல்ல என்னோட கவிக்குட்டி!” என சொன்னான் மணி.

“உன்னோட கவிக்குட்டிதான்பா!” என முகம் புன்னகையில் விரிய கவியின் முகத்தைக் கை நடுங்கத் தடவிப் பார்த்தார் பாலா.

பின் இறுக்கமாக தன் மருமகளை அணைத்துக் கொண்டார் அவர்.

“நல்லாயிரும்மா கவி! சீரும் சிறப்புமா நல்லா இருடா” என கண் கலங்க வாழ்த்தினார்.

“அப்பா, கொஞ்சம் மெதுவா கட்டிப் புடிங்க! வயிறு இடிக்குது. என் மக மூச்சுக்குக் கஸ்டப்படறா பாருங்க!”

தன் தாய்மாமனைக் கூட நெருங்க விட்டாமல் அட்டகாசம் செய்யும் மணியை முறைத்தாள் கவி.

“அடங்கமாட்டியாடா நீ” மெல்ல அவனைப் பார்த்து கோபமாக முணுமுணுத்தாள் அவள்.

“மகனே! சத்தியமா இது உன் பொண்டாட்டி கவிதான்! என் சுந்தரி பேசற சத்தம் கூட வெளிய வராது. அதுவும் இந்த வாடா போடாலாம் சத்தியமா வராதுப்பா” என வாய் விட்டு சிரித்தார்.

“என் தங்கச்சி மவ போன் போட்டான்னு எல்லா வேலையும் விட்டுட்டு ப்ளைட் எடுத்து வந்தேன். பொண்டாட்டி புள்ளைங்கள கூட கூட்டிட்டு வரல. அடுத்த முறை கண்டிப்பா எல்லோரும் வீட்டுக்கு வரனும். கவிம்மா நீ கண்டிப்பா வரனும்”

சற்று நேரம் கலகலப்பாக பேசியவர், சந்தோஷமாக விடைப் பெற்று சென்றார்.

 

சில வருடங்களுக்குப் பிறகு…

“ஆப்பிள மேசையில இருந்து தூக்கிப் போட்டா ஏன் கீழ விழுது சொல்லு?” என தன் அக்கா மகளிடம் கேள்வி கேட்டான் வெங்கியின் தவப்புதல்வன் ஆறு வயதான ராகவ ப்ரசாத்.

“இது பத்தி நியூட்டன் தாத்தா சொல்லிருக்காறே ராகவ்! பூமிக்கு ஈர்ப்பு விசை இருக்காம். சோ எந்தப் பொருள தூக்கிப் போட்டாலும் அது தரைய தொட்டிருமாம்” அழகாக பதில் சொன்னாள் கவி மணியின் ஜீனியஸ் வாரிசு பவிலயா.

இவர்களின் பேச்சு வார்த்தையைக் கேட்டுக் கொண்டு சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருந்தனர் மணியும் மீராவும்.

“மீராம்மா”

“சொல்லு மணி”

“உங்க கையில ஆப்பிள குடுத்தா என்ன செய்வீங்க?”

“வெட்டி ஜீஸ் போட்டுருவேன். நீ என்ன செய்வ மணி”

“கடிச்சு சாப்பிட்டுருவேன்” என அவன் சொல்ல இருவரும் வாய் விட்டு சிரித்தார்கள்.

“உங்க மகன், மாமா வீட்டுக்கு வரப்போ எனக்கு மேஞ்சிப்ரா இண்டிக்கா வாங்கிட்டு வாங்கன்னு கேட்டான் நேத்து. என்னடா இதுன்னு கூகள் போட்டுப் பார்த்தா மாங்கான்னு காட்டுது. ஆறு வயசுல நானெல்லாம்  மாங்கா மரத்தப் பார்த்தா கல்லு விட்டு அடிச்சு திருட்டு மாங்கா சாப்பிடுவேன். உங்க மகன் என்னடான்னா அதோட சயிண்டிபிக் பேர் சொல்லி கேக்கறான்”

“உன் மக மட்டும் என்னவாம்! பாட்டி எனக்கு எச் டூ ஓ குடுங்கன்னு கேக்கறா! ஏன் தண்ணி குடுங்கன்னு கேட்டா இவங்களாம் குறைஞ்சிப் போயிருவாங்களா?” என சிரித்தார் மீரா.

“நம்ம குடும்பம் ஜீனியஸ் குடும்பம் மீராம்மா”

“என்ன பஞ்சாயத்து இன்னிக்கு?” என வந்தார் வெங்கி. பிள்ளைகளுக்கு பிட்சா வாங்கி வர சென்றிருந்தவர் அப்பொழுதுதான் உள்ளே நுழைந்தார்.

அவரைப் பார்த்ததும் இரண்டு வாண்டும் ஓடி வந்து அணைத்துக் கொண்டன. சோபாவில் தலை சாய்த்துப் படுத்திருந்த கவி எழுந்து வந்தாள். இன்னும் இரு குடும்பமும் தனி தனியாகத்தான் இருக்கிறார்கள். விடுமுறைக்காக மணியின் குடும்பம் வெங்கி வீட்டுக்கு வந்திருந்தார்கள்.

“எட்டப் போங்க பசங்களா! இது எங்கப்பா! எனக்குத்தான் முதல் உரிமை!” என அவர்களைத் தள்ளி விட்டு தன் தகப்பனை அணைத்துக் கொண்டாள் கவி.

ராகவ் பவியைப் பார்த்து கண் அடித்து ஜாடை காட்ட,

“சரி அது மம்மி அப்பா! இது என் அப்பா” என மணியை ஓடிப் போய் கட்டிக் கொண்டாள் அவள்.

“ஏய், அது என்னோட ஹஸ்பெண்ட்! நீ நகர்ந்துப் போ!” என மகளிடம் வம்புக்குப் போனவள், அவளை செல்லமாக விலக்கி விட்டு தன் மணியைக் கட்டிக் கொண்டாள்.

ஹை பை கொடுத்துக் கொண்ட ராகவ்வும் பவியும் மீண்டும் ஓடிப் போய் வெங்கியிடம் சரண் அடைந்தார்கள்.

“யப்பா! பாரேன் என்னை ட்ரீக் பண்ணி அப்பாவ விட்டு விலக வச்சி, இதுங்க போய் கட்டிக்கிச்சுங்க. ரெண்டுக்கும் உள்ள மூளைக்கு நாசாவையே நாசமாக்கிருங்க” என சிரித்தாள் கவி.

“பின்ன யாரு இதுங்க ரெண்டும்? கவி தெ ஜீனியசோட தம்பியும், மகளுமாச்சே! அவளோட கேப்மாரித்தனமும், மொள்ளமாரித்தனமும் கொஞ்சமாச்சும் இல்லாமலா போயிடும்” என முணுமுணுத்தான் மணி.

“நான் கேப்மாரியா? மொள்ளமாரியா? கவிம்மா, தாகமா இருக்கு பால் பாயாசம் குடிக்கலாமான்னு கேளு இனிமே! விஷத்தைக் கலக்கறேன். அப்புறம் இன்னிக்கு போலிஸ் யூனிபார்ம் போட்டுக்க, பைலட் யூனிபார்ம் போட்டுக்க, ஃபயர் மேன் யூனிபார்ம் போட்டுக்கன்னு ரோல்ப்ளே கூப்பிடு, வெளக்கமாற தூக்கறேன்!” என சின்னக் குரலில் மிரட்டினாள் கவி.

பிள்ளைகள் விளையாட போய் விட, அடுப்பில் வேலையாய் இருந்த மீராவிடம்,

“ஜீராம்மா ஐ மீன் மீராம்மா, காபி கிடைக்குமா?” என வந்து நின்றார் வெங்கி.

“எட்டப்போய் நில்லுங்க வெங்கி அவர்களே! பொண்ணு வீட்டுக்கு வந்துருக்கா! அடக்கி வாசிங்க. வயசு அம்பது ஆச்சு இன்னும் ஜீரா வேணுமாம் ஜீரா! கொன்னுருவேன்” என மிரட்டினார் மீரா.

“ஹே மீராக்குட்டி, ஜீரா சாப்ட வயசேதுடி? அதுவும் இந்த வயசுல சாப்டாலும் சத்தியமா எனக்கு செரிச்சுரும்டி. பிகாஸ் ஐம் ஜஸ்ட் பிப்டி ப்ளஸ்!”  என தனது சிக்நேச்சர் வசனத்தை எடுத்து விட்டார் வெங்கி.

மீரா வாய் விட்டு சிரிக்க, அவருடன் வெங்கியும் இணைந்துக் கொண்டார். சிரிக்கும் தன் அப்பாவையும் மீராம்மாவையும் ஆசையாகப் பார்த்திருந்தாள் கவி. புன்னகை முகத்துடன் தன் மடியில் அமர்ந்திருக்கும் தன் மனைவியை காதலுடன் பார்த்திருந்தான் மணி.

 

(முற்றும்)