SST — Epi 10

அத்தியாயம் 10

 

முஸ்லிம் அன்பர்கள் நோன்பு இருக்கும் அந்த ஒரு மாதமும் மலேசியாவில் உள்ள பல்லின மக்களும் குதூகலிக்கும் மாதமாகும். இங்கே மலாய்க்காரர்கள் ‘பஷார் ரமடான்’ என அழைக்கப்படும் உணவு சந்தை நடத்துவார்கள். நோன்பு மாதத்தில் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இந்த சந்தை நடக்கும். எல்லா இன மக்களும் முட்டி மோதி அவர்கள் விற்கும் உணவை வாங்கி உண்டு மகிழ்வார்கள்.

 

“ஹாய் ச்சேகு!”

“ஹாய் மிஸ் மிரு!” கைக்குலுக்கினான் மார்க்கஸ் கணேவின் வகுப்பு ஆசிரியன்.

பல நாட்களாக தொல்லைப் பண்ணும் கணேவின் நச்சரிப்பைத் தாங்க முடியாமல் அன்று வேலை முடிந்து அவன் ஆசிரியரைப் பார்க்க ஒத்துக் கொண்டிருந்தாள் மிரு. அவளின் ஆபிஸ் பக்கத்தில் இருக்கும் காம்ப்ளேக்சிலேயே சந்திக்கலாம் என சொல்லி இருந்தாள். மிரு வேலை முடிந்து வர, மார்க்கஸ் காபி பீன் கபேயில் அமர்ந்திருந்தான். அவனோடு கணேவும்.

மார்க்கஸ் இருவருக்கும் என்ன வேண்டும் என கேட்டு பானங்களை வாங்கப் போனான்.

“அக்கா, காபி குடிச்சதும் நான் டீ ஷர்ட் பார்க்கப் போறேன். உனக்குப் பேசறதுக்கு ஒரு மணி நேரம் போதுமா?”

“ஒரு மணி நேரத்துக்கு நான் என்னத்தடா பேச? சும்மா ப்ரேண்ட்ஸ் கூட வெளிய போயிருக்கேன், இப்படி டேட்டிங்னு சொல்லி போனது இல்லையேடா கணே!” தம்பியைப் பெரிய மனிதனாக நினைத்துக் கேள்வி கேட்டாள் மிரு.

“ஐயோ அக்கா! அவர் கேக்கற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லு. நீயும் எதாச்சும் கேக்கனும்னாலும் கேளு. கடைசியிலே என்ன பேசறதுனே தெரியாம முழிக்கற நிலைமை வந்துச்சுனா, சார் கிட்ட ஹைட்ரோசுல்பிரிக் அசிட் போர்முலா என்னன்னு கேளு, நீ அடிச்சுப் புடிச்சு ஓடுற அளவுக்கு விளக்கோ விளக்குன்னு வெளக்குவாரு. ஓன் ஹவர் பறந்து போயிரும்” என சீரியசாக சொன்னான் கணே.

மிருவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. வாய் விட்டு சிரித்தவளை பானம் வாங்க கியூவில் நின்றிருந்த மார்க்கஸ் ஆசையாகப் பார்த்திருந்தான்.

“டேய் கணே! கடைசியிலே எனக்குப் பிடிக்காத கெமிஸ்ட்ரீ கூட என்னைக் கோத்து விடப் பார்க்கற பாத்தியா! படிக்கறப்போ பார்டர்ல பாஸ் ஆன பாடம் இது மட்டும்தான்டா. உங்க வாத்தி மட்டும் கெமிஸ்ட்ரீ பத்தி பேசட்டும், டேட்டும் வேணா ஒரு மண்ணும் வேணான்னு ஓடிருவேன் பாத்துக்கோ. ஐம் டேம்ன் சீரியஸ்!” என மிரட்டினாள் மிரு.

“என்னவோ பண்ணு! ச்சேகு ரொம்ப நல்லவரு. அதான் நான் ஒத்துக்கிட்டேன். அம்மாவுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சுச்சு என் தோலை உரிச்சுத் தொங்க விட்டுருவாங்க. அவங்களுக்கு அருள் அத்தான் தான் உன்னைக் கட்டிக்கனும்னு ஆசை”

“அட போடா! அருள் சுருள்னு கிட்டு. அன்னிக்கு குடுத்த நோஸ் கட்டுக்கு இந்நேரம் மிருன்னு பேர கேட்டாலே அரண்டடிச்சு ஓடிருவான் உங்கத்தான், சொத்தான்!” கடுப்பாக பேசினாள்.

“நீ சொன்னாலும் சொல்லைனாலும் அத்தான் லீவ் முடிஞ்சு ஆஸ்திரேலியா போயிட்டாருதான். நேத்து தான் ப்ளைட். எனக்கு போன் போட்டு பாய் சொன்னாரு. அம்மா கிட்டயும் பேசனாரு.”

“போய்ட்டானா ஆப்பிள் புடுங்க? சந்தோஷம்டா சாமி, அவனும் அவன் முழியும்!”

“அக்கா, அத்தான் உன் கிட்ட ஒன்னு சொல்ல சொன்னாரு!”

“என்னவாம்?”

“அவர் ஆப்பிள் பறிக்கலையாம், ஏரோநாட்டிகள் எஞ்சினியராம்! மறக்காம உன் கிட்ட இத சொல்ல சொன்னாரு. அதோடு சீக்கிரம் வருவேன், ரெடியா இருக்க சொல்லுன்னு சொன்னாரு”

“எதுக்கு ரெடியா இருக்கனுமாம்?”

“எனக்கு என்ன தெரியும்? உன் கிட்ட சொன்னா உனக்குப் புரியும்னு சொன்னாரு”

‘இது என்னடா புது தலைவலி? எதுக்கு ரெடியா இருக்கனும்? கல்யாணம் பண்ணிக்க ரெடியா இருக்க சொல்றானோ? அவன் வீட்டுல என்னை வேலைக்காரியாக் கூட வச்சிக்க மாட்டாங்க, இதுல கல்யாணம்னு கற்பனையப் பாரேன் எனக்கு! குடுத்த நோஸ் கட்டுக்கு பதிலடி குடுக்க ரெடியா இருக்க சொன்னான் போல! போய் தொலையறான்! இன்னிக்கு வாத்தியார் டே, அவர மட்டும் கவனிப்போம்! கண்ட நினைப்பெல்லாம் வேணா’ என அலை பாய்ந்த மனதை அடக்கி வைத்தாள் மிரு.

அதற்குள் மார்க்கஸ் காபியுடன் வந்திருந்தான். மிரு தனக்குப் பிடித்த வெனிலா லாட்டே சொல்லி இருந்தாள். அடிக்கடி இப்படி கபேயில் எல்லாம் அவளால் செலவளிக்க முடியாது. இங்கே ஒரு காபியே பதினைந்து ரிங்கிட் வரும். அந்த பணத்துக்கு கோழி வாங்கிப் போட்டால் இரண்டு நாளைக்கு வைத்திருந்து சமைப்பார் ரதி. பண விஷயத்தில் அவளது சிந்தனைகளும் எண்ணங்களும் இப்படித்தான் பட்ஜெட்டில் இருக்கும். ஆனாலும் மூன்று மாதத்துக்கு ஒரு முறையாவது இந்த பானத்தை வாங்கி அனுபவித்து அருந்துவாள்.

அதே போல கண் மூடி ரசித்து, அதன் சுவையை நாக்கில் தேக்கி அனுபவித்துப் பருகினாள் மிரு. அவள் கண் திறந்த போது அவளையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்திருந்தான் மார்க்கஸ். கணே அவனது பானத்தில் மூழ்கி இருந்தான். அவன் பார்த்ததை இவள் பார்த்து விடவும், மஞ்சளாக இருந்த அவன் முகம் சட்டென சிவந்து விட்டது.

‘அட, வெக்கத்தப் பாரேன் வாத்திக்கு. சோ க்யூட்!’

அவன் பார்வையில் ஆசை இருந்தாலும் கள்ளத்தனம் இல்லாததைக் கண்ட மிரு ரிலேக்சாக அமர்ந்தாள். அதற்குள் தனது காபியை முடித்திருந்த கணே, இருவரிடமும் விடைப்பெற்றான். அவன் நகர்ந்ததும் மார்க்கஸ்,

“மிஸ் மிரு, ச்சேகுன்னு கூப்பிட வேணாமே! கணேஷுக்குத்தான் நான் ச்சேகு. உங்களுக்கு நண்பன் தான்” என்றான்.

ச்சேகு என்பது மலாயில் ஆசிரியர்களை அழைக்கும் வார்த்தையாகும். ஆசிரியருக்கு சுத்தமான மலாய் வார்த்தை குரு என்பதாகும். ஆனால் வழக்கு மொழியில் ச்சேகு என்றே அழைப்பார்கள்.

“நான் மார்க்கஸ்ன்னு கூப்பிட்டா நீங்களும் மிஸ் விட்டுட்டு மிருன்னு கூப்பிடனும்! டீலா?” என கேட்டு மீண்டும் கையை நீட்டினாள் குலுக்க. அவனும் கைக்குலுக்கி டீலை ஏற்றுக் கொண்டான்.

தங்கு தடை இன்றி அவர்களிடையே பேச்சு வார்த்தை நடந்தது. முதலில் கணேவைப் பற்றி ஆரம்பித்து, பள்ளி வாழ்க்கை, மிருவின் அலுவலகம், நாட்டு நடப்பு, வானிலை, லேட்டஸ்ட்டாக வந்தப் படம் என எல்லாவற்றையும் பேசினார்கள். மார்க்கஸ்சிடம் பேச மிருவுக்கு மிகவும் பிடித்திருந்தது. முதலில் அவள் முகத்தைப் பார்த்துப் பேச தயங்கி, கப்பையும் கபேயின் இண்டிரியரையும் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தவன் இவளின் சகஜமான பேச்சில் போக போக அவள் முகத்தைப் பார்த்துப் பேச ஆரம்பித்தான்.

மார்க்கஸ்சுக்கு மிருவைவிட கண்டிப்பாக பத்து வயதாவது அதிகம் இருக்கும். கண்ணோரத்தில் லேசான சுருக்கங்கள் இருந்தன. முகம் மாசு மருவற்று மஞ்சளாக மின்னியது. மிருவைவிட கொஞ்சம் உயரமாக இருந்தான். குட்டியாக தொப்பை இருந்தது. ஆனால் முகத்தில் படித்தக் களை சொட்டியது.

“அப்பா சின்ன வயசுலயே இறந்துட்டாரு மிரு. எல்லாமே எனக்கு அம்மாத்தான். ஒரே பையன் நான். பணத்துக்குப் பிரச்சனை இல்லை. எனக்கு அம்மா, அவங்களுக்கு நானுன்னு சந்தோஷமாத்தான் இருந்தோம்”

“இருந்தோம்னா என்ன அர்த்தம் மார்க்கஸ்?”

“இருந்தோம்னா இப்ப அம்மா இல்லைன்னு அர்த்தம்” தொண்டைக் கமற சொன்னான் மார்க்கஸ். அவனின் சோக முகம் பார்த்து இவளுக்கு உருகி விட்டது. மேசை மேல் வைத்திருந்த அவன் கையைப் பற்றிக் கொண்டாள் மிரு. அவன் கையை மெல்லத் தட்டிக் கொடுத்தவள்,

“ஐம் சாரி மார்க்கஸ்” என உணர்ந்து சொன்னாள்.

நால்வர் அமர்வது போல இருந்த அந்த மேசையில் எதிரும் புதிருமாக இருவரும் அமர்ந்திருந்தார்கள். மார்க்கஸின் கைப்பிடித்து இவள் ஆறுதல் சொல்ல அவள் பக்கத்தில் ஆள் அமரும் அரவம் கேட்டது. கணேதான் வந்து விட்டானோ என நிமிர்ந்துப் பார்த்தவள் அதிர்ந்துப் போனாள்.

“குட் ஈவ்னிங் மிரு” குருவின் பார்வைக் கோர்த்திருந்த அவர்கள் இருவரின் கையில் இருந்தது. அதிர்ச்சி சட்டென கோபமாக மாறினாலும்,

“குட் ஈவ்னிங் பாஸ்!” என சாதாரணமாக சொன்னாள் மிரு.

அவன் பார்வை அவள் முகத்தையும் அவர்கள் கையையும் மாறி மாறிப் பார்த்தது. இவளும் அதை கண்டும் காணாதது போல சிரித்த முகமாக அமர்ந்திருந்தாள். வேண்டும் என்றே கையை அப்படியே வைத்திருந்தாள். வேற்று ஆள் தங்கள் மேசையில் அமரவும், கையை மெல்ல இழுத்துக் கொண்ட மார்க்கஸ் கேள்வியாக மிருவை நோக்கினான்.

“மார்க்கஸ், நீங்க என் தம்பிக்கு ச்சேகுன்னா இவர் எனக்கு ச்சேகு. ரொம்ப நல்லா பாடம் சொல்லிக் குடுப்பாரு. பெயர் கூட குருதான். என்னோட பாஸ். பாஸ், இவர் மார்க்கஸ் என்னோட பாய்ப்ரேண்ட்” நல்லா எனும் வார்த்தையை இழுத்து சொல்லி இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள்.

பாய்ப்ரேண்ட் என்ற வார்த்தையில் லேசாக அதிர்ந்த மார்க்கஸ், பின் புன்னகை முகமானான். குருவோ எந்த உணர்வையும் காட்டாமல், மார்க்கஸ்சின் கைப்பிடித்துக் குலுக்கி நட்புப் பாராட்டினான்.

‘இத்தனை இடம் காலியாத்தானே இருக்கு! எதுக்கு எங்க மேசையில வந்து உட்கார்ந்து இருக்கான் இவன்? என்னமோ இவன் மார்க்கஸ் கூட டேட்டிங் வந்த மாதிரி சிரிச்சு சிரிச்சுப் பேசறான் பாரேன்’ கடுப்பில் ஓரக்கண்ணால் அவனை முறைத்தப்படி அமர்ந்திருந்தாள் மிரு. அன்று லிப்டில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு ஐயா இன்று தான் வந்து அவளிடம் பேசுகிறார். இவளும் அவனைக் கண்டால் விஷ் மட்டும் செய்து விட்டு நகர்ந்து விடுவாள். முகம் கொடுத்துப் பேசுவது இல்லை. அவ்வளவு கடுப்பில் இருந்தாள் குருவின் மேல்.

‘இப்ப மார்க்கஸ் கையைப் புடிச்சி குலுக்கற மாதிரிதான் அன்னிக்கு என் கையையும் புடிச்சிருந்தான். இறுக்கிப் புடிச்சதுல செம்ம வலி. என்ன கடுப்போ ஏதோ தெரியல, அத என் கையில காட்டிட்டான். ஸ்டீயரிங் வீல் புடிக்கற கையை கொஞ்சம் விட்டா உடச்சிப் போட்டுருப்பான் பாவி!’

சிரித்த முகத்துடன் மார்க்கஸ்சுடன் பேசிக் கொண்டிருந்த குருவை முகத்தில் ஒட்ட வைத்த சிரிப்புடனும் மனதில் கடுப்புடனும் பார்த்திருந்தாள் மிரு.

“ஷீ இஸ் மை கேர்ள்! ஸ்டே அவே!” என அன்று அவன் சொன்னதும் அதன் பிறகு நடந்ததும் அவளையும் மீறி மனக்கண் முன் வந்தது.

இவளே வலிய போய் பேசி இருந்தும் கண்டு கொள்ளாமல் இருந்த குரு, திடீரென கையைப் பிடித்து மை கேர்ள் என சொல்லவும் மிருவுக்கு திகு திகுவென கோபம் தீப்பற்றி எரிந்தது. திட்டலாம் என வாயைத் திறந்தவளை,

“அவன் இறங்கற வரைக்கும் வாயத் திறக்காம இப்படியே நில்லு மிரு. எதுவா இருந்தாலும் அவன் இறங்கனதும் பேசிக்கலாம்.” என தமிழில் சொன்னவனின் வார்த்தைகள் அவள் வாயைக் கட்டிப் போட்டது.

அந்த வெள்ளையனோ சரண்டர் என்பது போல ஒற்றைக் கையை மேலே தூக்கியவன்,

“சாரி மேன்! உன்னோட ஆளுன்னு தெரியாம மூவ் பண்ணிட்டேன். சாரி அகைய்ன்! பை தெ வே, ஷீ இஸ் சோ ஹோட்! யூ ஆர் டேம்ன் லக்கி” என ஒரு மாதிரியாக கண்ணடித்தவன் அடுத்த தளத்தில் இறங்கி விட்டான். இறங்கும் முன் மிருவைப் பார்த்து லேசாக கண் சிமிட்டவும் தயங்கவில்லை.

அவன் கண் சிமிட்டி செல்ல, இவன் பிடி இன்னும் இறுகியது.

“விடுங்க பாஸ், கை வலிக்குது!” என இவள் சத்தம் போடவும் தான் கையை விட்டான் குரு. அடுத்த தளத்தில் மீண்டும் சிலர் ஏறவும், இவர்களின் சண்டை அத்தோடு நின்றது. இவர்கள் தளம் வரவும், இருவரும் லிப்டில் இருந்து வெளியேறினார்கள்.

“மிரு, மை கேபின்! நவ்!” என கோபமாக சொன்னவன் விடுவிடுவென தனதறைக்குப் போய் விட்டான்.

தனது இடத்துக்குப் போய் ட்ராவரில் பேக்கை வைத்துப் பூட்டியவள், அவளின் டீம் லீடரிடம் ரிப்போர்ட் செய்யப் போனாள்.

“மிரு, பாஸ் உன்னைப் பார்க்கனுமாம்! நீ முதல்ல போய் பார்த்துட்டு வா! அதுக்கப்புறம் என்ன வேலை இன்னைக்குன்னு சொல்லுறேன்” என அறிவித்தான் அவளின் லீடர்.

தலையை ஆட்டியவள், செம்ம கடுப்பில் அவன் அறையை நோக்கிப் போனாள்.

‘இப்ப இவன் எதுக்குக் கோபமா போனான்? என் கையைப் புடிச்சு ஒடைக்கற மாதிரி அமுக்கனதுக்கு நான் தான் கோபப்படனும்! மரியாதையா நாக்கப் புடுங்கிட்டு சாகற மாதிரி நாலு கேள்வி கேட்டுட்டு வரேன் பாரு! மரியாதையா பேசுனா நாக்கைப் புடுங்கிக்குவாங்களா? மரியாதை இல்லாம இவன் முன்னுக்குப் பேச வேற முடியாதே!’ என மனதில் புலம்பிக் கொண்டே கதவைத் தட்டிவிட்டுத் திறந்தாள்.

உள்ளே நுழைந்தவளுக்குப் பேச கூட முடியவில்லை. இவளைப் பேச விடாமல் சரமாரியாகப் போட்டுத் தாக்கிவிட்டான் குரு.

“யூனிவெர்சிட்டி வரைக்கும் படிச்சிருக்கத்தானே? எந்த சிட்டுவேஷன்ல எந்த மாதிரி நடந்துக்கனும்னு அறிவு இல்லை? அவனப் பார்த்தாலே தெரியுது அவனோட நோக்கம் என்னன்னு, அதுக்கூட புரியாம கையை நீட்டற! பாக்கற பார்வையிலேயே உன்னைப் பிச்சித் தின்னுருவான் போல இருக்கு அவன் முழி! சென்ஸ் இல்ல? தெரியாமத்தான் கேட்கறேன், அன்னைக்கு நான் பார்த்ததுக்கு அந்த எகிறு எகிறுனே! இன்னிக்கு எவனோ ஒருத்தன் தப்பான நோக்கத்தோட பார்க்கறான்ற சுரணை கூட இல்லாம ஈன்னு கையக் குடுக்கற! ஆர் யூ அவுட் ஆப் யுவர் ப்ளேடி மைண்ட்?” சுத்த தமிழில் ஆரம்பித்து சூடான ஆங்கிலத்தில் தொடர்ந்தது அவனது சாட்டையடிகள்.

எப்பொழுதும் மரியாதையாக பேசுபவனுக்கு அன்று மட்டும் அது மறந்துப் போயிருந்தது. ஸ்டூப்பிட்டில் ஆரம்பித்து, இடியட்டில் தவழ்ந்து, யூஸ்லெஸ்சில் நடந்து, டேம்மிட்டில் ஓடி, ஷிட்டில் வந்து முடிந்தது அவனின் வசவுகள். நிற்க வைத்தேப் பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தான். அவசரமாக அவன் அருகில் போனாள் மிரு. பேசுவதை நிறுத்திவிட்டு என்ன என்பதைப் போல பார்த்தான் அவன்.

அவன் அருகில் இருந்த தண்ணீர் கிளாசை எடுத்து மடமடவென குடித்தாள் மிரு. வாய் ஓரமாக வழிந்த நீரை புறங்கையால் துடைத்தவள்,

“போதும் பாஸ், விட்டுருங்க! இதுக்கு மேல ஒரு வார்த்தை உங்க வாயில இருந்து வந்தாலும் மிரு மண்டை கிரு கிருன்னு சுத்திரும். ப்ளீஸ்!” என கெஞ்சினாள்.

முறைப்புடன் அவளைப் பார்த்திருந்தான் குரு.

“ஆபிஸ் ரோமெண்ஸ்லாம் நாட் அலாவுட் ஹியர். எம்ப்ளொயீ ரூல்ஸ் புக்ல படிச்சிருப்பியே! சோ இந்த  ஆபீஸ்லயும் இந்த கட்டடத்துலயும் இருக்கற வரைக்கும் வேலையத் தவிர மனச அலைபாய விடாம இருக்கறது உனக்கு நல்லது. வெள்ளைக்காரன் கைக்குடுத்தான், சீனாக்காரன் கார்ட் குடுத்தான்னு என் ஆபிஸ் வேலை நேரத்த வேஸ்ட் பண்ணக்கூடாது! டூ யூ அண்டர்ஸ்டேண்ட்?”

“என்னாது? நான் மனச அலைபாய விட்டேனா? அந்த வெள்ளைக் குரங்குகுக்கு நான் ஒன்னும் ஆசைப்பட்டு கைக்குடுக்க போகல பாஸ். எங்க கைக்குடுக்கலனா மேனர்ஸ் தெரியாதான்னு நீங்க கிளாஸ் எடுத்துருவீங்களோன்னு பயந்துதான் கைக்குடுக்கப் போனேன். ஆபிஸ்ல ரொமாண்ஸ் பண்ணறதெல்லாம் என் லிஸ்ட்லயே இல்ல. இங்க எந்த மூஞ்சாச்சும் பார்த்ததும் பத்திக்கற மாதிரி இருக்கா? இல்ல தெரியாமத்தான் கேக்கறேன்? எல்லாமே பாதி கிழவனுங்க, இவனுங்கள பாத்து நான் காதல் கடலுல தொபுக்கடீர்னு விழுந்துட்டாலும்!”

“நானும் பாதி கிழவனா மிரு?”

“அப் கோர்ஸ்! முப்பதுக்கு மேல போயிட்டாளே இந்த மிரு டிக்‌ஷனரில அங்கிள் கேட்டகிரி தான்.”

“ஓஹோ!”

“ஆமா பாஸ்! சோ இனிமே இப்படி காரணம் இல்லாம கைப்பிடிக்கறது, தேவை இல்லாம திட்டறது எல்லாம் வேணா. நீங்க குடுத்த ரூல்ஸ் புக்க பெர்பெக்டா ஃபோலோ பண்ணி நடந்துக்குவா இந்த மிரு. இதுக்கு மேல ஒன்னும் இல்லைனா நான் வேலையப் பார்க்கப் போறேன்” என கதவு வரைப் போனவள், அவனைத் திரும்பிப் பார்த்து,

“இத்தனை வருஷமா இந்த மிரு தனியாளத்தான் எல்லாரையும் சமாளிச்சு டிக்னிட்டியோட இருக்கா! இனி மேலும் இருப்பா! நீங்க எனக்கு, என்னோட மானத்தைக் காப்பாத்திக்க கத்துக் குடுக்க வேணாம் பாஸ்! அந்த வெள்ளைக்காரன நானே சமாளிச்சிருப்பேன்! தேவை இல்லாம என்னைக் காப்பாத்தறேன்னு உங்க தகுதியில இருந்து இறங்கி வந்து என் கையைப் புடிச்சிட்டீங்க. கையை நல்லா சோப் போட்டு கழுவிருங்க பாஸ்” என அவன் கண்களைப் பார்த்து நேராக சொன்னவள் கதவைத் திறந்து வெளியேறிவிட்டாள்.

‘தகுதி, தராதாரம், அந்தஸ்த்து!!!!!மை ஃபூட்!’ தலையைப் பிடித்தப்படி அமர்ந்திருந்தான் குரு. அவன் கண்ணில் மிரு குடித்து வைத்துப் போன தண்ணீர் கிளாஸ் பட்டது. கால் வாசி தண்ணீர் மீதம் இருந்த கிளாசை கையில் எடுத்துப் பார்த்தப்படியே இருந்தான்’

“தகுதி, தராதாரம், அந்தஸ்த்து” வாய் விட்டு சொன்னவன், கிளாசில் இருந்த மீது தண்ணீரை மெல்ல ரசித்து ருசித்து அருந்தினான். விண்ணென தெறித்த தலைவலி காணாமல் போயிருந்தது.

குருவின் வாய் பாட்டுக்கு பேசிக் கொண்டிருந்தாலும், மனம் மிருவைப் போலவே அன்று நடந்த தங்களின் சண்டையை அசைப்போட்டப்படி இருந்தது. அவன் பார்வை முறைத்தப்படி அமர்ந்திருந்த மிருவை மெல்லத் தொட்டு தடவிப் போனது.

அவன் தன்னைப் பார்ப்பதை அறிந்து அருகில் நெருங்கி வந்தவள்,

“பாஸ்!” என அழைத்தாள்.

“சொல்லு!”

“உங்களுக்கு வேற கபேவே கிடைக்கலையா? நான் போற இடத்துக்குத்தான் வரனுமா?”

“நான் தினமும் வேலை முடிஞ்சு காபி குடிக்க வர இடம் இதுதான் மிரு. உன்னைப் பார்க்கவும் ஒரு ஹலோ சொல்லலாம்னு வந்தேன்”

“இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல? ஹலோ சொல்லியாச்சுல, எழுந்து வேற இடத்துக்குப் போங்க பாஸ். கரடி மாதிரி எங்க முதல் டேட்டிங்ல வந்து நடுவுல உட்காரறது எல்லாம் வேற லெவல்! அதோட ஆபிஸ் ஹவர் முடிஞ்சது, உங்க ஆபிஸ் பில்டிங்ல கூட நான் இல்ல. இங்க யார் கூட வேணும்னாலும் நான் பேசிப் பழகலாம். உங்க ரூல் புக் என்னைத் தடுக்க முடியாது. சோ ப்ளீஸ், இடத்தைக் கழுவுங்க” என சிரித்தப் படியே தன் கடுப்பை மார்க்கஸ்சுக்குக் காட்டாது தமிழில் சொன்னாள் மிரு.

குருவும் சிரித்தப்படியே எழுந்தான்.

“எஞ்சாய் யுவர் காபி” என இருவரையும் பார்த்து சொன்னவன், தனது காபியை வாங்க சென்றான். அதற்குப் பிறகு மிரு, குரு என ஒருத்தன் கொஞ்சம் தள்ளி அமர்ந்திருப்பதையே கண்டுக் கொள்ளாமல் மார்க்கஸ்சிடம் பேசிக் கொண்டிருந்தாள். இவர்கள் பேசிக் கொண்டிருக்க, குரு காபி அருந்தி கிளம்பிவிட்டான். போகும் முன் மிருவைப் பார்த்து தலை அசைக்கவும் தவறவில்லை. இவள் போடா, போடா என்பது போல அமர்ந்திருந்தாள்.

சரியாக ஒரு மணி நேரத்தில் கணேவும் வர, மார்க்கஸ்சிடம் இருந்து விடைப் பெற்றாள் மிரு.

“மறுபடி எப்போ பார்க்கலாம் மிரு?”

“கண்டிப்பா பார்க்கலாம் மார்க்கஸ்! எப்போன்னு நானே மேசேஜ் பண்ணுறேன்” என சிரித்தப்படி பதிலளித்தாள் மிரு.

மார்க்கஸ் கிளம்பியதும்,

“க்கா! ரெண்டாவது டேட்டுக்கு ஓகே சொல்லிட்டே, சாரைப் பிடிச்சிருக்கா?” என கேட்டான் கணே.

“சார் ரொம்ப நல்லவருடா! நீ சொன்ன மாதிரி ரொம்ப டீசண்ட். முதல்ல பழகி பாக்கறேண்டா! அப்புறம் பாப்போம் வெறும் ப்ரேண்டா பாய்ப்ரேண்டான்னு”

“அக்கா!” குரல் குழைந்து வந்தது. உஷாரானாள் மிரு.

“என்னடா? என் கிட்ட காசு இல்ல இப்பவே சொல்லிட்டேன்!”

“ம்ப்ச், போக்கா! பார்க்சன்ல அழகான டீஷர்ட் பார்த்தேன். 120 வெள்ளிதான் அப்டர் டிஸ்கவுண்ட். வாங்கி தாக்கா!”

“நூத்தி இருபதா? டேய் விளையாடறியா? எனக்கு இன்னும் சம்பளம் கூட போடல! இப்போ ஐம்பது வெள்ளிதான் வச்சிருக்கேன் கணே! இன்னொரு நாளைக்கு வாங்கித் தரேன்”

“அதுக்குள்ள டிஸ்கவுண்ட் எடுத்துட்டு முன்னூரு வெள்ளிக்கு வந்துரும். சரி விடு! வா அந்த டீ ஷர்ட காட்டுறேன்! நான் போட்டுப் பார்க்கறேன், நீ படம் எடு! அது போதும்” என மிருவை இழுத்துக் கொண்டுப் போனான் கணே.

அங்கே பார்க்சனில், வரிசையாக இருக்கும் ஆண்கள் ட்ரையல் அறை வெளியே நின்றிருந்தாள் மிரு. டீ சர்டுடன் கணே உள்ளேப் போயிருந்தான். அவன் வெளியே வந்ததும் போட்டோ எடுக்கலாம் என காத்திருந்தாள் இவள்.

போனில் இவள் ரெடியாக இருக்க வெளியே வந்ததோ குரு. அதுவும் மேற்சட்டை இல்லாமல். இவள் தனது பாஸின் ஜிம் பாடியை வாய் பிளந்துப் பார்த்து நிற்க, அவள் ரியாக்‌ஷனில் கண்களில் சிரிப்பு மின்ன நின்றான் குரு. அவளை நெருங்கி, அவள் பின்னால் இருந்த கூடையில் ட்ரை செய்த சட்டையைப் போட்டவன், அவள் காதருகில் மெல்லக் குனிந்து,

“அங்கிள் கேட்டகரில இருக்கறவங்கள இப்படித்தான் வாய் பிளந்து பார்த்துட்டு நிப்பியா மிரு?” என கேட்டான்.

(தவிப்பான்)