SST– EPI 18

SST– EPI 18

அத்தியாயம் 18

 

கன் புன் லியோங் எனும் மலேசிய சீனர் தான் நாட்டின் முதல் மிஸ்டர் ஆசியா பட்டத்தை வென்றவராவார். இவரை மலேசியாவின் ஃபாதர் ஆப் பாடிபில்டர்ஸ் என அழைக்கிறார்கள். 1937ல் பிறந்த இவருக்கு மலாக்கா ஜோன்கர் ஸ்ட்ரீட்டில் சிலை வைத்திருக்கிறார்கள்.

 

மலாக்காவின் ஜோன்கர் ஸ்ட்ரீட் அல்லது ஜோன்கர் வால்க் என அழைக்கப்படும் இரவு சந்தை நடக்கும் இடம் மிக பிரபலமான டூரிஸ்ட் இடமாகும். அங்கே கலைப்பொருட்களில் இருந்து, முதுகு சொறியும் மூங்கில் குச்சி வரை கிடைக்கும். வார இறுதி நாட்களில் மக்கள் வெள்ளம் நிறைந்து வழியும். சில சமயங்களில் நடந்து போகும் நம்மை மக்கள் கூட்டமே தள்ளிக் கொண்டுப் போய் மறு பக்கத்தில் விட்டுவிடும் அளவுக்கு கூட்டம் அலை மோதும். குட்டி குட்டி ஸ்டால்கள் வழி நெடுக அமைக்கப்பட்டு பல விதமான பொருட்கள் விற்கப்படும் அங்கே. நேர் பாதையாக இல்லாமல், பல கிளைப்பாதைகளும் அதன் நெடுகே கடைகளும் என அவ்விடமே ஜே ஜேவென இருக்கும்.

ரீனா ஏற்கனவே பல தடவை வந்திருந்ததால் மிருவுக்கு அவளே கைடாக மாறிப் போனாள். மேடமோ எல்லாவற்றையும் குதூகலத்துடன் பார்த்தபடி வந்தாள். பல ஸ்டால்களில் நின்று அங்கிருந்த பொருட்களை ஆராய்ந்தாள். மூன்று பத்து வெள்ளி என கிடைக்கும் குட்டி குட்டி பூ டிசைன் தோடுகள், தலைக்குக் குத்தும் கலர் கலர் பின்கள், கூடை வயரால் பின்னப்பட்டிருந்த பெரிய பேக் என விலை குறைவாகவும் அழகாகவும் இருந்தவைகளைப் பார்த்து பார்த்து வாங்கினாள் மிரு.

“ரீனா, பைனேப்பள் தார்ட் வேணுமே! எங்க கிடைக்கும்?”

“அது விக்கற கடை நிறைய இருக்கு மிரு. டேஸ்ட் பண்ணி கூட பார்க்கலாம். இன்னும் கொஞ்சம் தூரம் நடந்தா ஒரு கடை வரும். அங்க வாங்கிக்க”

பேசியபடியே வாங்கி இருந்த கோகனட் ஷேக் பானத்தை ருசித்தவாறே நடந்தனர். இரவு உணவாக அங்கங்கே இருந்த உணவு ஸ்டால்களில் கிடைத்த ஹாட்டாக், கெபாப் போன்றவைகளை வயிற்றில் அடைத்தப்படியே இருந்தார்கள் இருவரும்.

தார்ட் கடை நெருங்கவும்,

“மிரு, நீ போய் டேஸ்ட் பண்ணி வாங்கு. நான் இங்க குட்டி குட்டி தோடு இருக்கே அதப் பார்த்துட்டு இருக்கேன்.” என கடை உள்ளே வராமல் வெளியே இருந்த ஸ்டாலில் தோடு தேர்ந்தெடுக்கும் வேலையில் இறங்கினாள்.

உள்ளே போன மிருவை கடைக்காரர் எல்லா பலகாரங்களையும் டேஸ்ட் செய்ய சொல்லி ஒவ்வொன்றாக சாம்பிள் கொடுத்துக் கொண்டே இருந்தார். அதற்கிடையில் ரீனா அடுத்தக் கடைக்குப் போகிறேன் என கத்தி சொன்னது கூட இவளுக்கு விளங்கவில்லை. ஒரு வழியாக கடைக்காரரின் ஓவர் கவனிப்பு தாளாமல் குட்டி டப்பாவுக்கு பதிலாக பெரிய தார்ட் டப்பாவை வாங்கிக் கொண்டு தப்பித்து வெளியே வந்தாள் மிரு. தோடு கடையில் ரீனாவைக் காணாமல், கொஞ்சம் முன்னே நடந்துப் போய் தேடினாள் மிரு. கூட்ட நெரிசலில் இவளால் ரீனாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ரொம்ப தூரம் நடந்து தேடியும் கூட இவள் கண்ணுக்கு ரீனா அகப்படவில்லை.

போன் எடுத்து அவளுக்கு கால் போட்டாள். போன் அடைத்து வைத்திருப்பதாக மேசேஜ் வந்தது.

‘டுடே மை டேன்னு போனை அடைச்சுப் போட்டுட்டு என்னை இப்படி நடு வீதியில நிப்பாட்டிட்டாளே!’ சிரிப்புதான் வந்தது மிருவுக்கு. பஸ் ஓட்டுனர் பன்னிரெண்டு மணிக்குள் வந்து விட வேண்டும் என சொல்லி இருந்தார். பஸ் பார்க் செய்த இடத்தையும் இவள் ஓரளவு கவனித்து வைத்திருந்தாள். ஆகவே பயப்படாமல், வந்த வழியே திரும்பி நடந்தாள். ஆனாலும் பஸ்சை கண்டுப்பிடிக்க முடியாமல் அந்த வீதியையே சுற்றி சுற்றி வருவது போல இருந்தது மிருவுக்கு. காலும் இடுப்பும் வேறு வலிக்க ஆரம்பித்து விட்டது. பணி பனிரெண்டை நெருங்க பயம் அப்பிக் கொண்டது அவளுக்கு. கொஞ்சம் காட்டுப்பகுதியில் இருந்த ரிசார்டுக்கு தனியாக கிரேப்பிலோ டாக்சியிலோ போகும் எண்ணமே பயத்தைக் கொடுத்தது.

குருவின் ஞாபகம் சட்டென வர, கை தானாகவே தொலைபேசியில் இருந்த குருவின் எண்ணுக்கு அழைக்க ஆரம்பித்துவிட்டது.

“பாஸ் நான் செசாட்(வழி தவறி விட்டேன் மலாயில்) ஆகிட்டேன். என்னைக் கண்டுப்பிடிச்சு கூட்டிப் போங்க பாஸ்”

அவள் குரலில் இருந்த பதட்டத்தைக் கவனித்தவன்,

“ரிலாக்ஸ் மிரு! செசாட் ஆனாலும் மலேசியா உள்ள தானே இருக்க! அப்புறம் என்ன பயம்? நான் இப்போ வரேன்! எங்க நிக்கற நீ?” என கேட்டான்.

“வாட்டர் மெலன் ஜீஸ் விக்கற கடைப் பக்கத்துல இருக்கேன் பாஸ்”

“எல்லாப் பக்கமும் தான் வாட்டர் மெலன் ஜீஸ் விக்கறாங்க மிரு. சுத்திலும் பாரு, எதாவது லாண்ட்மார்க் இருக்கா?”

“நான் நிக்கற இடத்துக்கு கொஞ்சம் தள்ளி உங்கள மாதிரி ஒரு பாடி பில்டர் சிலை இருக்கு பாஸ்”

மறுபக்கம் குரு புன்னகைத்தான்.

“என்னை மாதிரி இருக்கற அந்த பாடிபில்டர் பக்கத்துல போய் நில்லு. இன்னும் பத்து நிமிஷத்துல நான் அங்க வந்துருவேன் மிரு” என்றவன் நடையை எட்டிப் போட்டான்.

அவன் அவ்விடத்தை அடைந்தப் போது மிரு, சிலையின் அருகே நின்று அதற்கு எத்தனை பேக் இருக்கிறது என எண்ணிக் கொண்டிருந்தாள்.

“எண்ணி முடிச்சிட்டியா மிரு?” என அவள் பின்னால் இருந்து குரல் கேட்கவும் திரும்பிப் பார்த்தாள் மிரு.

“ஓ, எண்ணிட்டேன் பாஸ்! எப்படி எண்ணினாலும் உங்கள விட இவருக்கு அதிகமாத்தான் இருக்கு பாஸ். நீங்க இன்னும், இன்னும் முயற்சி பண்ணனும்” என சொல்லி சிரித்தாள்.

“அதுக்கென்ன, பண்ணிருவோம்! உன்னை அடிக்கடி தூக்கறதுக்கும், தாங்கறதுக்கும் ஸ்ட்ரேங்த் வேணும்ல, பாடிய டெவலப் பண்ணிதான் ஆகனும். ஷப்பா என்ன கனம்டா!” என சொல்லி கண் சிமிட்டினான் குரு.

“குண்டா இருக்கேன் நானுன்னு தெரியுதுல, அப்புறம் எதுக்கு தூக்குனீங்க பாஸ்? ரீனா அத சொல்லி சொல்லி என்னை ஓட்டி எடுத்துட்டா!”

“டீம் போண்டிங் வந்துட்டு கம்பெனி பாஸ் ஆன நானே எப்படி செல்பீஷா நடந்துக்கறது மிரு? அதான் டீம் வோர்க்னா என்னன்னு காட்ட உன்னைத் தூக்கனேன். பாரம்தான் ஆனா சுகமான பாரம்”

“வேணா பாஸ்! அப்பறம் நான் நல்லா திட்டி விட்டுருவேன்! ஸ்டேட்ட விட்டு ஸ்டேட் வந்துருக்கேன், உங்க உதவி தேவைப்படுதேன்னு சும்மா விடறேன்” என மிரட்டினாள்.

பேச்சை மாற்ற ரீனாவைப் பற்றி கேட்டு என்ன நடந்தது என அறிந்துக் கொண்டான்.

“பாஸ் ஒரு ஹெல்ப்!” என கேட்டாள் மிரு.

“என்ன வேணும் மிரு?”

“இந்த பாடி பில்டர் கூட என்னை ஒரு போட்டோ எடுக்கறீங்களா?” என கேட்டவள் தனது போனை அவனிடம் கொடுத்தாள்.

அந்த சிலை முன் அவரைப் போலவே இரு கைகளையும் மேலே தூக்கி ஸ்டைல் காட்டியவள்,

“ஹ்ம்ம் இப்போ எடுங்க பாஸ்” என்றாள்.

சிரிப்புடன் அவள் கேட்டதை செய்தான் குரு. அவனையும் அதே போல செய்ய சொல்லி அவன் போனில் படம் பிடித்துக் கொடுத்தாள் மிரு.

“மிரு, எனக்கு ஒரு வாட்டர்மெலன் ஜீஸ் வாங்கிட்டு இரு. நான் ஒரு கால் பண்ணிட்டு வரேன்”

அவள் அங்கே நகர்ந்ததும், பஸ் ட்ரைவருக்குப் போன் செய்து ரீனா வந்தால் ரிசார்ட்டுக்குப் போகும் படியும், மிருவைத் தான் அழைத்து வருவதாகவும் தகவல் கொடுத்தான்.

ஜீஸுடன் வந்த மிரு,

“இந்தாங்க குடிங்க! குடிச்சுட்டு என்னை பஸ் கிட்ட விட்டுருங்க பாஸ். மணியாகுது” என்றாள்.

“எனக்குப் பசிக்குது மிரு”

“நீங்க இன்னும் சாப்படலையா பாஸ்? மணி பனிரெண்டு ஆகப்போகுது” என கடிந்துக் கொண்டாள்.

“என் கூட இன்னிகாச்சும் சாப்படறியா மிரு?”

“பஸ் விட்டுட்டுப் போயிருமே பாஸ்!” தயங்கினாள் மிரு.

“நான் கூட்டிட்டுப் போக மாட்டேனா மிரு?”

“இல்ல, ரீனா எனக்கு பஸ்ல வேய்ட் பண்ணாலும் பண்ணுவா!”

“பண்ணமாட்டா!”

“அது எப்படி உங்களுக்குத் தெரியும்?”

“ட்ரைவர் கிட்ட பேசிட்டேன்! அவர் சொல்லிருவாரு”

அவனை முறைத்தவள்,

“ஏற்கனவே எல்லாம் ப்ளான் பண்ணி செஞ்சிட்டு, எதுக்கு சாப்பிட வரியான்னு கேக்கறீங்க? சாப்பிட வான்னு அதிகாரமா கூப்பிட வேண்டியது தானே பாஸ்!” என கடுப்பில் கேட்டாள் மிரு.

“எனக்குப் பசி மயக்கத்துல காது கூட கேக்கல மிரு! ப்ளீஸ் சாப்பிட வா! இல்லைனா வா ரெண்டு பேரும் கிளம்பி பஸ்க்கு போலாம்” என பாதி குடித்த ஜீஸை கூட கோபமாக தூக்கித் தூர போட்டான் குரு.

“ம்ப்ச்! ஏன் இப்ப தண்ணிய தூக்கிப் போட்டீங்க? சரி வாங்க சாப்பிடலாம். பசியா இருந்தா இப்படித்தான் கோபம் வரும்!”

முகம் சட்டென மலர,

“உனக்கு சாப்பிட என்ன வேணும் மிரு? வெஸ்டர்ன் ஆர் சைனீஸ்?” என கேட்டான்.

“மலாக்கா ஸ்பேஷல் என்ன பாஸ்? அது வாங்கிக் குடுங்க”

“சரி வா! சிக்கன் ரைஸ் பால்(chicken rice ball) சாப்பிடலாம்” என ரோட்டோரமாக இருந்த ஒரு ஸ்டாலுக்கு அழைத்துப் போனான் குரு.

சோயா சாஸ் கோழி, லேசாக குழைத்து உருண்டையாக பிடிக்கப்பட்ட சோறு, சூப் என சுட சுட உணவு நன்றாக இருந்தது. அதன் சுவையும் மிருவுக்குப் பிடித்திருந்தது. அவள் தட்டில் கோழி துண்டுகளை முடிய முடிய நிரப்பினான் குரு. சோறு எடுத்துக் கொள்ளாமல் கொஞ்சமாக கோழியையும் சூப்பையும் மட்டும் உண்டான் அவன்.

“இப்படி சாப்படறதுக்குப் பேருதான் பசி மயக்கமா? இதுக்கு வெறும் பச்சை தண்ணிய குடிச்சுட்டு படுத்துருக்கலாம் நீங்க!” சலித்துக் கொண்டாள் மிரு.

“இதுல கலோரி அதிகம் மிரு. கலோரிய குறைக்கறதுக்கு ஹெல்ப் பண்ண கூட பக்கத்துல யாரும் இல்ல” என சொல்லி குறும்பாக நகைத்தான் குரு.

கேவலமாக ஒரு லுக் விட்டவள்,

“அதான் சாப்பிட்டாச்சுல்ல, இடத்தைக் கழுவலாம்(கிளம்பலாம்) வாங்க.” என அழைத்தவாறே எழுந்தாள். உட்கார்ந்து எழவும் கால் வலி பிடுங்கி எடுத்தது. வலியில் முகத்தை சுளித்தாள் மிரு.

“என்னாச்சு மிரு?” பணம் செலுத்திவிட்டு வந்தவன் கேட்டான்.

“ஒன்னும் இல்ல பாஸ்”

“சொல்லு மிரு!”

“இந்த ரீனாவால ஓவரா நடந்துட்டேன் இன்னிக்கு. பாதம் ரொம்ப வலிக்குது. நடக்க நடக்க சரியாகிரும் பாஸ்” என்றவள் மெல்ல அடி எடுத்து வைத்தாள். அவளது தாராள நெஞ்சத்தினால், இடுப்பு வலி கால் வலி போன்ற உபாதைகளால் அடிக்கடி அவதிப் படுவாள் மிரு. அதுவும் நீண்ட நேர நடை, ஓட்டம் எல்லாம் அவளுக்கு ஆகவே ஆகாது.

அவள் சுளித்த முகத்தைப் பார்த்தவன்,

“கால் மசாஜ் போகலாமா மிரு?” என அக்கறையாக கேட்டான்.

“இல்ல,இல்ல வேணாம் பாஸ்!”

“வா மிரு, அரை மணி நேரத்துல மசாஜ் பண்ணிருவாங்க!” என சொல்லி அவள் கையைப் பிடித்துக் கொண்டான் குரு.

அவள் கையை உருவிக் கொள்ள முயல,

“கூட்டத்தப் பார்த்தல்ல! மறுபடியும் தொலைஞ்சி போகனுமா? என் போனுல வேற பேட்டரி ரொம்ப லோவா இருக்கு. அப்புறம் என்னைக் கூட காண்டேக்ட் பண்ண முடியாது மிரு” என சொல்லியவன் கையை விலக்கிக் கொண்டான்.

அவன் அப்படி சொல்லியதும் மிருவே அவன் கையோடு தன் கையைக் கோர்த்துக் கொண்டாள். முகம் முழுக்க பரவ பார்த்த புன்னகையை கஸ்டப்பட்டு அடக்கினான் குரு. அவள் மறுக்க மறுக்க ஃபூட் ரிப்ளெக்சோலோஜி என அழைக்கப்படும் கால் மசாஜ் செண்டருக்கு அழைத்துப் போனான். இந்த மாதிரி இடங்கள் மலேசியாவில் மூலைக்கு நான்கு இருக்கும்.

உள்ளே நுழைந்தவர்களை சீன பெண்மணி ஒருத்தி வரவேற்றாள்.

“டூவா ஓராங்(இரண்டு பேர் மலாயில்)” என குரு சொன்னான்.

“பாடான் அத்தாவ் காக்கி?”(உடம்பா அல்லது காலா –மலாயில்)

“காக்கி சாஜா” (கால் மட்டும்தான்) என அவசரமாக மிரு பதிலளித்தாள்.

அவர்கள் இருவரையும் பக்கம் பக்கமாக போடப்பட்டிருந்த நீள நாற்காலியில் அமர வைத்தவர் தன்னிடம் வேலை செய்பவர்களை அழைக்க உள்ளே சென்று விட்டார்.

“பாஸ்! இந்த மாதிரி மசாஜ்லாம் நான் வந்தது இல்ல! பயமா இருக்கு”

“ஒன்னும் இல்ல மிரு! சும்மா காலை அழுத்திப் பிடிச்சு விடுவாங்க. நாளைக்கு தூங்கி எழுந்தா ரொம்ப ப்ரெஸ்சா இருக்கும். வலிலாம் பறந்து போயிரும்” தைரியமூட்டினான் குரு.

இரண்டு இந்தோனேசிய ஆடவர்கள் வந்தார்கள் இவர்களுக்கு கால் பிடித்து விட. மிருவுக்குப் பிடித்து விட பெண் இருந்தால் தாங்கள் மசாஜ் செய்து கொள்வதாகவும், இல்லையென்றால் இருவருக்குமே வேண்டாம் என சொல்லி விட்டான் குரு. முதலாளி பெண்ணே மிருவுக்குப் பிடித்து விட வந்தாள்.

அதன் பிறகு தான் ஆரம்பித்தது கூத்து. முட்டி வரை மிருவின் ஜீன்சை மடித்து விட்ட அந்தப் பெண் எண்ணெய்யைத் தடவும் வரை சிரித்த முகமாக அமர்ந்திருந்தாள் மிரு. அவள் பிடித்து விட ஆரம்பித்ததும் ஆவ்வ்வ்வ் என கத்தினாள் அவள். பக்கத்தில் அமர்ந்திருந்த குரு மட்டும் இல்லை பிடித்து விட்டவளும் பயந்துப் போனாள்.

“என்ன மிரு? வலிக்குதா?”

“இல்ல பாஸ்! கூசுது, ரொம்ப கூசுது” நெளிந்தாள் மிரு.

இவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும். போக போக சரியாகிரும் மிரு” என அவன் சொல்ல தலையசைத்து மறுபடி ஆரம்பிக்க சொன்னாள் மிரு. ஆனால் அந்த பெண் மசாஜ் செய்த அரை மணி நேரமும் ஆவ், ஆவ், ஆவ் என வித விதமான மோடுலேஷனில் மிருவின் சத்தம் ஓயவேயில்லை. குருவின் சிரிப்பும் அடங்கவேயில்லை.

அந்த அரை மணி நேர டார்ச்சருக்குப் பிறகு மெல்ல எழுந்து நின்றாள் மிரு. கால் வலி குறைவதற்குப் பதில் அதிகமாகியது போலிருந்தது. நடக்கவே சிரமப்பட்டவள், குருவின் கையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டாள். பாதி பாரத்தை அவன் மேல் சாய்த்தவள் அவனை ஒட்டியே நடந்தாள்.

“எத்தனை நாளா என்னைப் பழி வாங்கனும்னு நினைச்சீங்க பாஸ்? சீனத்தி என் கால ஒடச்சி கைல குடுத்துட்டா!”

இவனுக்கு சிரிப்புதான் வந்தது. அவள் தோளில் கைப்போட்டு அணைவாக பிடித்து நடக்க வைத்து அழைத்துப் போனான் குரு. போக போக வலி குறைந்தது போலிருந்தது அவளுக்கு. மெல்ல அவனிடம் இருந்து விலகிக் கொண்டாள்.

அதன் பிறகு இருவரும் ஒரு டாக்சி பிடித்து ரிசார்ட்டு வந்து சேர்ந்தார்கள். வரும் வழியிலேயே ரீனா போனைத் திறந்து விட்டதாகவும், ட்ரைவர் சொல்லியதால் கிளம்பி ரூமுக்கு வந்து விட்டதாகவும் மேசேஜ் செய்திருந்தாள்.

அவர்கள் குடிலுக்கு நடக்கும் வழியிலும் மிருவின் கைப்பற்றிக் கொண்டான் குரு.

“இங்க கூட்டம் இல்ல பாஸ்!” என கையை உருவிக் கொண்டாள் மிரு. கையை விட்டவன், அமைதியாகவே நடந்தான். இரவு நேர குளிர் காற்றும், பௌர்ணமி நிலவின் வெளிச்சமும் ரம்மியமான சூழலை சிருஷ்டித்திருந்தது அங்கே!

குருவின் குடில் தான் முதலில் வந்தது.

“மிரு”

“யெஸ் பாஸ்!”

“உள்ள வரியா?”

“இல்லல்ல! வேணாம்” என அவசரமாக மறுத்தாள் மிரு.

அவளை ஆழ்ந்துப் பார்த்தவன்,

“ஏன் மிரு, இத்தனை நாள் பழக்கத்துல உன்னை எத்தனை தடவை கையப் பிடிச்சு இழுத்திருக்கேன்?” என கொஞ்சம் கோபமாகக் கேட்டான்.

அவள் அமைதியாகவே நின்றாள்.

“சொல்லு மிரு! அது இதுன்னு பேசிருக்கேன் தான்! ஆனா தப்பா நடந்துருக்கனா?”

இல்லையென தலையாட்டினாள் அவள்.

“அப்புறம் ஏன் இந்த தயக்கம்? ஐ நீட் டூ டால்க் டூ யூ மிரு. டெஸ்பெரட்லி!” என்றவன் குடிலின் கதவைத் திறந்துவிட்டு அவள் வருவாளா என அவளையேப் பார்த்தப்படி நின்றான்.

தயக்கம் இருந்தாலும், அவன் மேல் இருந்த நம்பிக்கையில் உள்ளே நுழைந்தாள் மிரு. கதவு தானாக மூடிக் கொண்டது. மூடிய கதவை இவள் பார்த்தப்படி நிற்க, பின்னிருந்து அவளை அணைத்திருந்தான் குரு.

 

(தவிப்பான்)

error: Content is protected !!