SY2

சரி – 2

 

காலையில் கண் விழித்து, போர்வையில் இருந்து எட்டிப் பார்த்தாள் ரிது. கிழக்கு வானம் சிவக்க புதிய உதயம் ஆரம்பித்து பறவைகள் க்ரீச்சிட்ட சப்தம் இசையாக ஒலித்தது.

 

கேட்டுக்கொண்டே, மீண்டும் உள்ளுக்குள்ளேயே சுருண்டாள் ரிது என்ற ரிதுவந்திகா. செல்வ செழிப்பான குடும்பத்தில் குறைவற்று பிறந்து வளர்ந்த, வீட்டிற்கு ஒரே வாரிசான செல்லப் பெண். 

 

தந்தை ராஜசிம்மன் பெரும் தொழில் அதிபர். பல தொழில்கள் துவக்கி திறம்பட சிறப்பாக நடத்தி வந்தாலும், ஆரம்பத்தில் ராஜசிம்மனின் தகப்பனார் அரங்கநாதன் ஒரு சிறிய இனிப்புக் கடை மட்டுமே ஆரம்பித்து நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

ஆனால் அந்த கடையின் வருமானம் குடும்ப செலவிற்கு போக அதிக லாபத்தில் இயங்க ஆரம்பித்தது.  சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒரு கடையை விரைவில் மூன்று கடையாக பெருக்கினார்.  அதற்குள் ராஜசிம்மனும் வளர்ந்துவிட்டதால், தந்தையின் தொழிலை கவனிக்கத் தொடங்கினார்.

 

சிறு வயதிலிருந்தே தெரிந்த தொழில் என்பதால் மிகுந்த ஈடுபாட்டுடன் தற்கால நவீன செயல்முறைகளையும், கருவிகளையும் கையாண்டு தொழிலை மேலும் பெருக்கினார்.

 

ராஜசிம்மன் – திலோத்தமை திருமணத்திற்குப் பிறகு ஓரிரு ஆண்டுகளில், தந்தையின் இறப்பால் சற்று மனம் தளர்ந்தாலும், ரிதுவந்திகாவின் உதயத்தால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரித்திருந்தது என்றே கூற வேண்டும்.

 

ரிதுவந்திகாவின் பிறப்பிலிருந்தே வாடிக்கையாளர்கள் அதிகரித்து, வங்கிக் கடன் பெற்று, நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி, தொழில் மேலும் வளரத் தொடங்கியது. அதனால் ரிது ராசியானவள் எனவும் உறவுக்குள் பேச்சு.

 

அனைத்து கடைகளிலும் சிசி டிவி வைத்து வீட்டிலிருந்தே கடைகளை கவனிப்பதோடு, வெளி ஊர், வெளி நாடு செல்லும்போதெல்லாம் மொபைல் மற்றும் மடிக்கணினியைப் பயன்படுத்தி அனைத்து விபரங்களையும் கவனித்துவிடுவார் என்பது சில உயர்மட்ட பணியாளர்களுக்கு மட்டுமே தெரியும்.

 

கடைகள் பெருகியதும், சென்னையின் முக்கிய பகுதியில் ‘ஏஆர் மால்’ என்ற ஒன்றையும் ஆரம்பித்து, அதில் மக்களுக்குத் தேவையான அனைத்துவிதமான பொருள்களையும் வாங்கிக் குவித்தார்.

 

வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் டீலர்கள் தங்களின் உற்பத்திகளை ஏஆர் மாலுக்கு வழங்கி அதன் வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தினர்.

 

ஏஆர் மாலில் மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருள்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மளிகை பொருட்களை வாங்கவும், விற்கவும் இருந்த ராஜசிம்மன் தானே உற்பத்தியும் செய்ய வேண்டும் என்று எண்ணி ஆங்காங்கே வாங்கி வைத்திருந்த இடங்களில் சிறிய அளவில் இயற்கை விவசாயம் என்று ஆரம்பித்து, உற்பத்தியை தன் கடைக்கே பயன்படுத்திக் கொண்டார்.

 

ஓரிரு இடங்களில் பால் பண்ணை ஆரம்பித்து அதிலிருந்து பாக்கெட் பால் முதல் பால்கோவா வரை உற்பத்தியை துவக்கினார். அதுவும் அவரின் அடுமனை தொழிலுக்கு நன்றாக கைகொடுத்தது. அவையும் நாளடைவில் வெளி சந்தைக்கும் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்தன.

 

பால் உற்பத்திக்காக வாங்கப்பட்ட நல்ல நாட்டு மாடுகளான கிர், சஹிவால், தர்பார்கர், ராத்தி, காங்கேயம் போன்ற மாடுகளில், பசுக்களையும், காளைகளையும் உற்பத்தி செய்யும் பண்ணைகளாகவும் உருவெடுத்தன. அதைச் சார்ந்தே கோழிப்பண்ணையும் வளர்ந்தது.

 

தன்னந்தனியே தொழிலை பல விதமாக பெருக்கினாலும்,  குடும்பத்தையும் கவனிக்கத் தவறியதில்லை ராஜசிம்மன்.

 

செழிப்பான குடும்ப சூழலில், பிறப்பிலிருந்தே வளர்ந்தாலும், பணக்காரத்தனம் சிறிதளவும் இல்லாமல் வளர்ந்தாள் ரிது. காரணம் ஓரளவு படித்த அவளது தாயார் திலோத்தமை.

 

திலோ பிறந்து வளர்ந்த வீடு நடுத்தர குடும்பமேயாதலால் பணத்தின் அருமை தெரிந்து கணவரின் உழைப்பையும் வீணாக்காமல், வெட்டி பந்தா இல்லாமல் குழந்தையும், கணவனையும் அரவணைத்து அன்பு காட்டி இனிய இல்லத்தரசியாய் மிளிர்ந்தார்.

 

கையில் அலைபேசியை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்த திலோ, மகள் விழித்தும் புரண்டு புரண்டு மீண்டும் தூங்க முயல்வதை பார்த்து அதட்டினார்.

 

“ரிது, எந்திரி! முழிச்சா எந்திரிக்கணும். காலைத் தூக்கம் குடும்பத்துக்கு ஆகாது. ஒனக்கு அப்ப இருந்து கால் வந்துகிட்டே இருக்கு பாரு!”

 

‘கால்’ என்ற வார்த்தையை கேட்டதும் சரேலென போர்வை முழுவதும் விலக்கப்பட்டு மலர்ந்தாள் ரிது.

 

“மொபைல் கீழயா இருந்துச்சு?”

 

“ஆமா, ராத்திரிகூட ரெண்டு கால் வந்துச்சு. நாந்தான் எடுக்கல!”

 

அலைபேசியை வாங்கிப் பார்த்தாள். அதில் இரவு அழைத்திருந்தது யாஷிகாவும், சம்யுவும்தான் என்று உறுதிப்படுத்திக்கொண்டாள். ஆனால் இப்பொழுது வந்த அந்த அழைப்பு புதிதாக இருந்தது.

 

“நாந்தாம்மா அதுக ரெண்டும் வீட்டுக்குப் போனதும் கால் பண்ணச் சொல்லிருந்தேன். அதான் வேற ஒன்னுமிருக்காது. ஆனா இந்த மூனாவது கால் யாரோடது!”, ரிது சற்று குழம்பினாள்.

 

முதலில் தன் தோழிகள் இருவருக்கும் போன் செய்து குட் மார்னிங் கூறி, இரவு அலைபேசியை கீழேயே வைத்துவிட்டு அயர்ந்து தூங்கிவிட்டதாக கூறி, ஒப்புக்கு ‘சாரி டீ’ என்றாள். அவர்கள் இருவரும் புறப்பட்டு வீட்டிற்கு வருவதாக கூறினார்கள்.

 

அடுத்ததாக அந்த புதிய எண்ணிற்கு அழைத்தாள்.

 

“ஹலோ, வணக்கம் மேடம்”, என்றது எதிர் முனை.

 

“வணக்கம், நீங்க?, என்று இழுத்தாள் ரிது.

 

“நாந்தான் மேடம்… ரிசப்ஷனிஸ்ட் மேகா! நேற்று கிளினிக் வந்திங்கல்ல!”

 

அப்பொழுதுதான், தான் கிளினிக்கில் ரிசப்ஷனிஸ்டிடம் தன் நம்பரை கொடுத்து ஏதும் தேவை என்றால் தன்னை தொடர்புகொள்ளுமாறு கூறியது ஞாபகத்திற்கு வந்தது.

 

“ஓ, ஆமா சொல்லுங்க இப்ப எப்படி இருக்காங்க! ஏதும் பிரச்சனையா?”, ரிது.

 

“பிரச்சனை ஒன்னுமில்ல மேடம். அவங்க எந்த தொந்தரவும் கொடுக்கல! எங்கள கான்டாக்டே பண்ணல! நாங்கதான் ரெண்டு தடவ போய் பாத்துகிட்டோம்”, மேகா.

 

“ம், அப்பறம்!”

 

“நான் டூட்டி முடிஞ்சு கிளம்பரேன் மேடம். ஒங்க நம்பரை அடுத்து டூட்டிக்கு வர்றவங்கட்ட கொடுத்துட்டு கிளம்பவா? இது ஒங்க பர்சனல் நம்பர்னு சொன்னீங்க மேடம், அதான் கேட்டேன்!”, மேகா.

 

“வேண்டா வேண்டாம்! நான் நேரமிருந்தா நேர்ல வந்து பாத்துக்கிறேன்”

 

“இனி நா நாளைக்குதான் வருவேன். நாளைக்கு பகல் டூட்டி மேடம்”

 

“பரவால்ல நாளைக்கு பாத்துக்கலாம்”

 

“சரி மேடம்.  நா கிளம்பறேன்”

 

“ஓகே மா!”

 

‘நேரில்’ சென்று பார்க்க வேண்டும் என்பதை, எப்போதோ முடிவு செய்திருந்ததை அவளிடம் ஏன் தெளிவாகக் கூற வேண்டும் என்றுதான் ‘நேரமிருந்தால்’ என்ற வார்த்தையை சேர்த்துப் பேசினாள் மேகாவிடம்.

 

அலைபேசியை அணைத்தவள், அதுவரை அருகில் நின்றுகொண்டிருந்த தாயாரை அப்போதுதான் கவனித்தாள்.

 

“என்னம்மா, ஏதும் பிரச்சனையா?”, திலோ.

 

“அதெல்லாம் ஒன்னுமில்லைமா!”, ரிது.

 

“ஏய், மறைக்காம சொல்லு!”, என்று தாயாருக்கே உரிய உரிமை மற்றும் கண்டிப்புடன் கேட்டார் திலோத்தமை.

 

“இல்லம்மா! ரெண்டு நாள் கழிச்சு சொல்லலாம்னு இருந்தேன்! ஒங்கட்ட மட்டுமில்ல அப்பாட்டையுந்தான்!”, என்றாள் புதிராக.

 

“என்னடீ சொல்ற! எனித்திங் சீரியஸ்?”

 

“சீரியசா இருக்காதுன்னு நெனக்கிறேன்!”, என்றாள் மீண்டும் புதிராக.

 

ஆனால் தாயார் விடவில்லை. அனைத்து விபரங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டுதான் அவளை அறையைவிட்டே அகல விட்டார்.

 

காலையில் பல்துலக்கி, வழக்கமாக செய்யும் யோகா, குளியல் என அனைத்து சுய வேலைகளையும் முடித்து சாப்பிட டைனிங் டேபிளுக்கு வந்தமர்ந்தாள்.

 

தந்தையும் மகளும் பெரும்பாலும் அங்குதான் தினமும் முதல் சந்திப்பை ஆரம்பிப்பார்கள். சில நாட்கள் அதுவே அன்றைய கடைசி சந்திப்பாகவும் இருந்திருக்கின்றன. அவர் வேலை அப்படி.

 

அன்று ரிது வரும்வரை காத்திருந்த திலோத்தமை மகள் அமர்ந்தவுடன் அருகில் வந்து,

 

“ரிது, அப்பாட்ட இப்போதைக்கு எதையும் சொல்ல வேண்டாம்!”, என்றார் சற்று தணிவான குரலில்.

 

ராஜசிம்மன் அறையில் இருந்து வெளிப்படுகிறாரா என்று அந்தப் பக்கமும் ஒரு கண் வைத்துக்கொண்டாள்.

 

“ஏம்மா?”

 

“அப்பறம் சொல்லிக்கலாம்!”

 

“சரிம்மா”

 

“என்ன அம்மா சொல்றதுக்கு சரின்னுல்லாம் எம்பொண்ணு சொல்லுது!”, என்று ஆச்சரியப்பட்டவாறே அங்கு வந்தார் ராஜசிம்மன்.

 

“இன்னக்கி ஷாப்பிங் வேணாம்னு சொன்னாங்கப்பா!”, என்று வெகுவாக சாமாளித்தாள் ரிது.

 

“ஏம்மா! அவளுக்கு ஏதும் வேணும்னா நீயே கூட ஒரு ரவுண்டு போய்ட்டு வந்துற வேண்டியது தானே?”, என்று திலோவைப் பார்த்துக் கேட்டார் ராஜசிம்மன்.

 

“அம்மா ஏற்கனவே ரவுண்டாதானப்பா இருக்காங்க!”, ரிது.

 

“ஏய்!”, என்று மகளை அதட்டிவிட்டு, “அதான் சொல்லிட்டிருந்தேன்! நாளைக்கு போனா நானும் வருவேண்ணு!”,  என்று கணவனைப் பார்த்துச் சொன்னார் திலோ.

 

“ஃப்ரண்ட்ஸ் வரேன்னு சொல்லியிருக்காங்கப்பா!”, ரிது.

 

“நேத்துத்தான போய்ட்டு வந்தீங்க!”, தன் குடும்பத்தின் நடவடிக்கைகளை சரியாக கவனத்தில் வைத்திருப்பதை ஊர்ஜிதப்படுத்தினார் ராஜு.

 

மாதத்தில் ஓரிரு நாள்கள்தான் ஷாப்பிங் போகலாம் என்பது அந்த வீட்டின் எழுதப்படாத சட்டம்.

 

“எனக்கு இன்னும் ஒன்னு ரெண்டுதான் வாங்கணும்பா! ஆனா யாஷிகா ஃபீனிக்ஸ் போகணும்னு சொன்னா. அதான் அம்மாட்ட சொன்னேன், அவங்களும் ஏதோ வாங்கணுமாம், வரேன்னுட்டாங்க. ஆனா நாளைக்காம்; அதான் இன்னைக்கு ப்ரோக்ராம் நாளைக்கு தள்ளிப் போயிருச்சு!”, ரிது.

 

பேச்சினூடே சப்பாடு முடிந்தது.  ராஜசிம்மன் வழக்கம்போல் கிளம்பிவிட்டார்.

 

“ஏம்மா அப்பாட்ட சொல்ல வேண்டான்னுட்டீங்க!”, ரிது.

 

“சொல்ல வேண்டான்னா சொன்னேன்? இப்ப வேண்டான்னுதான் சொன்னேன் மகளே! சரியா கவனிக்கலையோ?”, காலையிலேயே மகளுக்கு பல்பு கொடுத்தார் தாய்.

 

ஆச்சரியமாய் அவரையே பார்த்தாள் மகள்.

 

“என்ன பாக்கற, நீம்பாட்டுக்கு காலைலயே அவர மூட் அவுட் பண்ணிட்டு, அப்பறம் யாரு திண்டாடுறது?”

 

“…”

 

“சொன்னவொடனே அவரு நேரா கிளம்பி கிளினிக் போவாரு! அப்புறம் என்னென்ன ஆகுமோ, யாரு கண்டா!?”

 

“ஏம்மா இப்படிப் பேசறீங்க?”

 

“நா ஒன்னும் பேசலடீ! நீந்தான் ஒரு வார்த்தைகூட சொல்லாம ஒன் இஷ்டத்துக்கு இவ்வளவு வேல பாத்துருக்க? அதுவும் வீட்டுக்கு பக்கத்துலயே நடந்திருக்கு!”

 

“அதான் சொல்லிட்டேன்லமா?”, கெஞ்சும் குரலில் ரிது.

 

“எப்ப, எப்படீ? எல்லாத்தையும் ஒன் மூப்புக்கே முடிச்சுட்டு வந்து காலைல அதுவும் அங்கருந்து போன் வந்ததுக்கப்பறம்ல சொல்ற!”

 

“அம்மா அதுவரைக்கும் நா எந்திரிக்கவே இல்லையேமா? அப்பறம் எப்படி கனவுலயா வந்து சொல்ல முடியும்?”, சற்று செல்லமாக குரல் உயர்த்தினாள் மகள்.

 

“ராத்திரியே சொல்லிருக்கனும்னு நா எதிர்பார்க்கிறேன்மா, அவ்வளவுதான்!”, அமைதியாக ஆனால் கண்டிப்பு மாறா குரலில் தாய்.

 

“அம்மா, அம்மா சாரிமா!”, என்றாள் இறுதி கெஞ்சலாக.

 

தாயும் இதற்குமேல் கண்டித்தால் செல்ல மகள் மனம் கோணுமே என்று விட்டு விட்டார்.

 

“சரி விடு, இப்ப அடுத்து என்ன செய்யப் போற?”

 

“அதுக ரெண்டும் வர்றேன்னு சொல்லிருக்குக! வந்ததும் ஒரு எட்டு கிளினிக் போய் பாத்துட்டு நேரா வீட்டுக்கு வந்திர்றேன்மா, அவ்ளோதான்!”

 

இவர்கள் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே ஆளுக்கொரு ஆக்டிவாவில் வந்து இறங்கினர் யாஷிகாவும், சம்யுக்தாவும்.

 

“ஹாய் ஆன்ட்டி”, யாஷிகா.

 

“ஹலோ ஆன்ட்டி குட்மார்னிங்”, சம்யுக்தா.

 

“வாங்க, நேத்து ஈவினிங் ரொம்ப குட்டா(Good) இருந்துச்சு போலயே?”, திலோ.

 

“ஆமா ஆன்ட்டி. அதான் ஷாப்பிங் முடிஞ்சு வீட்டுக்குக் கூட வராம அப்படியே கிளம்பிட்டோம்”, சம்யு.

 

“என்ன ஆன்ட்டி கோபமா?”, யாஷிகா.

 

“இருக்காதாப் பின்னே? ஒரே வீட்டுல பிறந்த புள்ளைங்க கூட வேறவேற மாதிரி இருக்குதுங்க! ஆனா நீங்க மூனு பேரும் ஒரே மாதிரில்ல யோசிக்கிறீங்க!”, திலோ.

 

“கோச்சுக்காதிங்க ஆன்ட்டி! அவளுக்கு கொஞ்சம் பதட்டம் ஆகிருச்சு, அதான்…!”, என்று இழுத்தாள் யாஷிகா.

 

“பதட்டமா?  அப்ப எதுக்கு யோகால்லாம் கத்துட்டு பண்ணிட்டிருக்கா?, எல்லாமே சும்மாதானா?”, என்று கொஞ்சம் இளகுவாக பேசினார் திலோ.

 

யாஷிகா அந்த இடைவெளியை சரியாக பயன்படுத்திக்கொண்டாள், “அந்த நேரத்திலெல்லாம் யோகா பண்ண முடியாது ஆன்ட்டி”

 

“விடுங்கம்மா ரொம்ப நேரமா சீரியசாவே பேசிட்டிருக்கீங்க!”, ரிது.

 

“சரி விடு! நாளைக்கு ஃபீனிக்ஸ் போறீங்களா?”, திலோ.

 

“போறோம்”, என்றாள் ரிது.

 

“நா வர்றேன்னு சொல்லவே இல்லையே!”, திலோ.

 

“அப்பா சொன்னாங்களே!”, ரிது.

 

“அது அப்ப சொன்னது!”, திலோ.

 

“அப்ப இப்ப?”, சம்யு.

 

“எப்பவுமே நா வரலப்பா! ஒங்ககூட நா வந்தா என்ன கிறுக்காக்குறதுக்கா?”, திலோ.

 

“இப்ப அப்படில்லாம் நடக்காது ஆன்ட்டி”, யாஷிகா.

 

“அப்ப… அப்ப கிறுக்காக்கிட்டீங்களா?”, திலோ.

 

“அம்மா, அம்மா போதும்மா!”, என்று என்டு கார்டு போட்டாள் ரிது.

 

ஒருவழியாக திலோவிடம் அனுமதி பெற்று மூவரும் கிளினிக் கிளம்பினர். யாஷிகாவின் பில்லியனில் ரிது அமர்ந்து வந்தாள்.

 

“என்னங்கடீ லீவா”, ரிது.

 

“ஆமா டீ! நா சிஎல், அவளுக்குத்தான் கம்பெனில வேலை அதிகமாம். மதியம் கம்பெனிக்கு போகணும்”, சம்யு.

 

சம வேகத்தில் வண்டிகளிரண்டும் கிளினிக் நோக்கிப் பறந்தன.

 

vvv

 

கிளினிக் அறை…

சித்துவும் யோகியும் காலை சிற்றுண்டியை கையில் வைத்துக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

 

“என்ன மச்சி, நேத்து சண்டேன்னு என்னன்னமோ யோசிச்சிருந்தோம். எல்லாம் ஊத்திக்கிச்சேடா!”, சித்து.

 

“என்ன செய்ய, எல்லாம் அந்த ரிதுவாலத்தான?”, யோகி.

 

“விடு மச்சி. அதப்பாத்தாலும் பாவமாத்தான் இருக்கு! ஒனக்கு கம்பெனில லீவு கொடுத்துட்டாங்களா?”

 

“ஆமாடா, ஒரு வாரம் கேட்டேன். ஆனா மூனுநாள்தான் கொடுத்திருக்காங்க. அப்பறம் வேணும்னா எக்ஸ்டன்ட் பண்ணிக்கோன்னுட்டாங்க”

 

“லாஸ் ஆஃப் பேயா மச்சி?”

 

“அதெல்லாம் ஒன்னுமில்லடா. நாந்தான் சொன்னேன்ல லீவு நிறைய வச்சிருக்கேன்னு”

 

“கம்பெனிலா என்ன சொன்ன?”

 

“என்ன சொன்னவா? ஆருயிர் நண்பனுக்கு அடிபட்டு ஆஸ்பத்திரியில அட்மிட்டாயிருக்கான். அவனுக்கு இங்க என்னவிட்டா யாருமில்லன்னு சினிமா டயலாக் மாதிரி கொட்டிட்டேன்ல…!”

 

“…”, லேசாக சிரித்துக்கொண்டான் சித்து

 

“ஸ்ட்ரைட்டா நம்ம தலைக்கு போன் போட்டேன். நேத்து ஒங்க வீட்டுக்கு வந்துட்டு போகும்போதுதான் இப்படி ஆயிருச்சுன்னேன். மனுசன் கொஞ்சம் கவலைப்பட்ட மாதிரி இருந்துச்சு!”

 

“நாந்தான் உள்ளயே வரலையே!”

 

“நீ வண்டி பக்கத்துல நின்னு மொபைல்ல பேசிக்கிட்டிருந்தத நாங்க ரெண்டுபேருமே ஜன்னல் வழியா பாத்துக்கிட்டுதான் இருந்தோம்”

 

“ஓ”

 

“அப்பவே அவர் கேட்டாரு, யாரது ஒன் ஃப்ரெண்டானு”

 

இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே பெண்கள் மூவரும் வந்துவிட்டனர். அதை இருவரும் எதிர்பார்க்கவில்லை. எதிரில் சித்துதான் அமர்ந்திருந்தான்.

 

“வாங்க”, என்றான்.

 

அறை சற்று விசாலமாக இருந்ததால் மூவரும் வந்தவுடன் சொல்லாமலேயே அமர்ந்துவிட்டனர். இருவரும் காலை உணவை அவசரமாக முடித்தனர்.

 

“இப்ப எப்படி இருக்கு? நைட் நல்லா தூங்குனீங்களா?”, ரிது.

 

“ம், ரொம்ப நாளைக்கு அப்பறம் இன்னக்குத்தான். எல்லாம் நம்ம அனந்தராமன் உபயம்தான்”, என்றான் சித்து சற்று புன்னகைத்துக் கொண்டே.

 

“ஏன் நார்மலா சரியா தூங்க மாட்டீங்களா?”, யாஷிகா.

 

“ஆமா ரூமுக்கு வந்தப்பறம் கூட கம்பெனி மூலமா கிளையன்ட் யாராவது போன் பண்ணிருவாங்க. அவங்க டவுட்ட கிளியர் பண்ண சில சமயம் லேட்டாயிரும்”, சித்து.

 

“அப்ப கம்பெனில அடுத்த நாள் லீவோ அல்லது பெர்மிஷனோ கொடுக்க மாட்டாங்களா?”, சம்யு.

 

“அதென்ன கவர்ன்மென்ட் ஆஃபீஸா!” என்று சித்து ‘கவர்ன்மென்ட்’டில் அழுத்தம் கொடுத்து சிலாகித்தான்.

 

அவர்கள் இருவரும் சித்துவிடம் பேசிக்கொண்டிக்கையில் அமைதி காத்த யோகியை நோக்கினாள் ரிது. ‘பயபுள்ள கோவமாத்தான் இருக்கும்போல!’

 

“டாக்டர் என்ன சொன்னார்? காலைல வந்தாங்களா?”, ரிது.

 

“ஆர்த்தோ இன்னும் வரல. பட் சீனியர் டாக்டர், அதான் உங்க அங்கிள், அவர் வந்துட்டுப் போனாரு”

 

“-“

 

“வலி கொஞ்சம் பரவாயில்லைன்னு நெனக்கிறேன். அல்லது பெயின் கில்லர் ஹெவி டோசோ என்னமோ தெரியல. பய நல்லா தூங்கிட்டான்”, கொஞ்சம் சகஜமாக பேசினான் யோகி.

 

“உங்க வேலை என்ன, சாஃப்ட்வேரா? கிளையன்ட், அன் டைம்னெல்லாம் சொல்றாரு!”

 

“நான் ஒரு மால்ல சேல்ஸ் மேனேஜரா இருக்கேன். அவந்தான் சாஃப்ட்வேர் அட்மினா இருக்கான்”

 

“மால்னா, எந்த மால்?”

 

“நுங்கம்பாக்கம் பக்கத்துல… ‘ஏஆர் மால்

 

‘ஏஆர் மால்’ என்ற வார்த்தை யோகியின் வாயிலிருந்து வெளிப்பட்டதுதான் தாமதம்… சித்துவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்த யாஷிகாவும், சம்யுவும் ஒருசேர ரிதுவைப் பார்த்தனர். அவளும் இவர்களைப் பார்த்தாள்.

 

“இவ்ளோ தூரம், இங்க வந்திருக்கீங்க?”, என்று ரிது தொடர்ந்தாள்.

 

“இங்க பக்கத்துலதான் என்னோட பாஸ் வீடு. அவர்தான் வரச் சொன்னார். கம்பெனி விசயமா பேசிட்டு வரும்போதுதான்…!”, என்று இழுத்தான்.

 

லேசாக ரிதுவின் முகம் மாரியதையும், அவளையே மற்ற இருவரும் பார்த்துக்கொண்டிருப்பதையும் சித்துவும் கவனித்தான்.

 

“சரி, ஆர்த்தோ வந்தா பாத்துக்குவார். நாங்க கிளம்பறோம்”, ரிது.

 

“சாப்பிட வச்சிக்கோங்க…!”, என்று தன்னிடம் இருந்த பார்சலை, பையுடன் கொடுத்தாள் சம்யு.

 

இதை ரிது எதிர்பார்க்கவில்லை. ஆனால், யாஷிகாவிடம் முன்னரே தெரிவித்திருந்தாள் சம்யு.

 

“என்னது!”, சித்து.

 

“ஒன்னுமில்ல! அம்மாட்ட நடந்ததச் சொல்லி கொஞ்சம் டிபன் கேட்டேன். சப்பாத்தி செஞ்சு கொடுத்தாங்க!”, சம்யு.

 

ஆண்களிருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தமுடன் புன்னகைத்துக்கொண்டனர்.

 

“சாரி, கொஞ்சம் லேட்டாயிருச்சு!”, சம்யு.

 

“பரவாயில்ல!”, யோகி.

 

“வச்சு சாப்பிடுவோம்!”, சித்து.

 

“ஓகே, டேக் கேர்”, ரிது.

 

“பை, சியு”, யாஷிகா.

 

“பை”, சம்யு.

 

மூவரின் அந்த திடீர் புறப்பாட்டை, இருவரும் சற்று வித்தியாசமாக உணர்ந்தனர்.

 

உணர்வுகள் உணர்ச்சிகளாகுமோ!

©©©