மூன்று
சித்ரா, வளர்மதி, நந்தினி மூவரும் வேறு வேறு டிபார்ட்மென்டாக இருந்தாலும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் மதிய உணவு நேரத்தில் கண்டிப்பாக சந்தித்து விடுவர்… சித்ரா கம்பியுட்டர் சைன்ஸ் டிப்பார்ட்மென்ட்… வளர்மதி காமர்ஸ்… நந்தினி கெமிஸ்ட்ரி!
இதில் சித்ராவும் வளர்மதியும் அளவான உயரமும் நேர்த்தியான அமர்த்தலான அழகுமாக இருக்க… நந்தினியோ சராசரியை விட சற்று உயரம்… ஆளை அடித்து வீழ்த்தும் அழகு… அவளது இடை தாண்டிய முழங்காலை தொடும் கறுத்தடர்ந்த கூந்தலுக்கும் தாழம்பூ நிறத்திற்கும் கல்லூரியில் நிறைய விசிறிகள் உண்டு… ஆனாலும் அவளை பொறுத்தவரை அவளுக்கு அவளது அழகு ஒரு பொருட்டல்ல.
கல்லூரியின் மூன்றாவது வருடத்தில் அதுவும் கடைசி செமெஸ்டர் என்பதால் மூவருக்குமே அவ்வப்போது சோகம் தலைகாட்டும்… ஆட்டோக்ராப் நோட்டில் கையெழுத்து வாங்கினாலும் கைபேசி எண்கள் பரிமாறி கொண்டிருந்தாலும்… கல்லூரி காலம் முடிவது என்பது அவர்களை பொறுத்தவரை தாங்க முடியாத ஒன்றாகவே இருந்தது.
“நீ என்ன பண்ண போற வளரு? உங்க ஆத்தா வேற நீ எப்போ காலேஜ் முடிப்பன்னு ஆர்வமா காத்துட்டு இருக்கறதா எங்க அப்பத்தா சொல்லுச்சு… எப்படியும் கல்யாணம் தானா?” சோகமே வடிவாக உணவை அளந்து கொண்டே வளர்மதியை பார்த்து கேட்டாள் நந்தினி.
“ஆமா நந்து… அப்படிதான் வீட்ல பேசிக்கிறாங்க… எனக்குத்தான் மனசே கஷ்டமா இருக்கு…” வளர்மதி சோகத்தை பிழிந்தாள்! அவளது வீட்டில் அவளும் அவன் அண்ணனும் மட்டுமே சிறியவர்கள்… அவளது அண்ணனுக்கு திருமணம் செய்ய வேண்டுமென்று அவசரமாக வளர்மதிக்கு திருமணத்திற்கு பார்த்து கொண்டிருந்தனர்… ஆனால் அவளுக்கோ ஒரு வருடமாவது வேலைக்கு செல்ல வேண்டும் என்பதும் அவளது சொந்த காலில் நிற்க வேண்டும் என்பது தீவிரமான கனவு!
“ஏன்டி அப்படி நினைக்கற? கல்யாணம் பண்ணி வெச்சா பண்ணிக்க வேண்டியதுதானே… இதுக்கு எதுக்கு முழ நீளத்துக்கு முகத்தை இழுத்து வெச்சுக்கற? செம ஜாலியான மேட்டர இப்படி சோகமா சொல்ல உங்க ரெண்டு பேர்னால தான்டி முடியும்…” சித்ரா இருவரையும் சேர்த்து வார.
“ம்ம்ம்… உன்னைய உங்க வீட்ல எம்சிஏ படிக்க சொல்லிட்ட திமிர்ல பேசறடி… எங்களை மாதிரி மாட்டி இருந்தாத்தான் புரியும்…” வளர்மதி சித்ராவை கடுப்படித்தாள்… சித்ராவின் வீட்டில் சித்ராவின் அக்கா திருமணத்திற்கு காத்து கொண்டு இருப்பதால்… சித்ராவை பொறுத்தவரை அவளுக்கு தற்போது எந்த பிடுங்கலும் இல்லை… அதனால் அவர்களது வீட்டில் அந்த கல்லூரியிலேயே எம்சிஏ சேர சொல்லியிருக்க.
“அட ச்சே… நீ வேற… நானே இன்னும் மூணு வருஷம் இந்த முசுட்டு முருகேசன் வேன் தான் நமக்கு விதியாங்கற கடுப்புல இருக்கேன்… நீ வேற…” சித்ரா வளர்மதியைபோட்டு தாக்கினாள்!
“ஆமா ஆமா அவனை முசுட்டு முருகேசன்னு சொல்லும் போதே கிக்கா சொல்றியே,... இதுல இருந்தே தெரியல… நீ அவனை சைட் அடிக்கறதெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கியா சித்து குட்டி?” குறும்பான பார்வையோடு வளர்மதி சித்ராவை போட்டு தர… நந்தினி வாயை கைகளால் மூடி கொண்டு கேட்டாள்.
“அட கருமம் புடிச்சவளே… இது எப்போல இருந்து?” சித்ராவை பார்த்து நந்தினி கேட்க… முகம் சிவந்து இருவரையும் வெட்கபார்வை பார்த்த சித்ராவோ,
“ச்சீ போடி… அதெல்லாம் ஒண்ணுமில்ல…” நாணம் சிறிதும் குறையாத குரலில் அவள் மறுக்க,
“இவ சொல்றதுல இருந்தே தெரியல… அம்மணி எப்படி மயங்கி போய் கெடக்காங்கன்னு…” வளர்மதி விடாமல் வம்பிழுக்க
“ஏய்… நான் தான் இல்லைன்னு சொல்றேன்ல…” சித்ரா பரிதாபமாக மறுத்த விதத்திலேயே அவளது கள்ளத்தனம் வெளிப்பட… நந்தினியும் வளர்மதியுமாக அவளை மொத்தி எடுத்தனர்!
“சரி சரி… விடுங்கடி… ஒத்துக்கறேன்… நான் அந்த முசுடை நான் லவ் பண்றேன்… போதுமா?” குறுஞ்சிரிப்போடு சொன்னவளை பார்த்து அதிர்ந்தாள் நந்தினி!
“என்னடி சொல்ற? எப்படிடி ஒத்து வரும்? போயும் போயும் ஒரு டிரைவரா உனக்கு கிடைச்சான்? உனக்கே இது நல்லா இருக்கா? உன் அந்தஸ்து என்ன அவன் அந்தஸ்து என்ன? நீ படிச்சவ… அவன் படிக்காத காட்டான்… உனக்கும் அவனுக்கும் ஏணி வெச்சா கூட எட்டாது…” நந்தினி கோபமாக கூற
“நந்து… லவ்ங்கறது ஜாதி… அந்தஸ்து… படிப்பு… பணம்… காசுன்னு எதையுமே பார்த்து வராதுடி… அது ஒரு யூனிக் பீலிங்… அதை அனுபவிக்கும் போதுதான் தெரியும்…” சிலாகித்தாள் சித்ரா!
“மண்ணாங்கட்டி… கண்ட சினிமாவையும் பார்த்து கெட்டு போய் கிடக்க… யுனிக்காவது ஒன்னாவது… கல்யாணத்தை கட்டினதுக்கு அப்புறம் காசில்லாம ரெண்டு நேரம் பட்டினி கிடக்கும் போது தெரியும்… பீலாவது மண்ணாவது…” சித்ராவிடம் பொரிந்து தள்ளினாள் நந்தினி.
“ஏய் கூல்… கூல்… ஏன் இந்த அளவு கோபப்படற நந்தினி… கொஞ்ச நாள் இந்த கிரஷ் இருக்கும்… அப்புறம் நாமளா இப்படியெல்லாம் பினாத்தினதுன்னு நினைச்சு அவளே சிரிச்சுக்குவா… விடுடி…” வளர்மதி நந்தினியை சமாதானப்படுத்த… நந்தினி ஒரு பெருமூச்சை இழுத்து விட்டு தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு சித்ராவை பார்த்து சிரித்தாள்… முகம் சுண்டி போன சித்ராவோ,
“ஏன்டி அவரை இந்த அளவு மோசமா நினைக்கற… கண்டிப்பா என்னோடது ஜஸ்ட் எ கிரஷ் இல்ல… நிஜமா லவ் பண்றேன்… எப்படியும் அடுத்த மூணு வருஷம் அதே வேன்ல தானே வர போறேன்… என்னோட லவ்வை சொல்லி அவரை கன்வின்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணி காட்டறேன் நந்து…” என்று கூறி இடைவெளி விட்டவள்,
“அப்புறம் நீ சொன்ன மாதிரி கஷ்டமெல்லாம் பட மாட்டோம் நந்து… நானும் படிச்சிருக்கேன்… அவர் கைலையும் தொழில் இருக்கு… பொழச்சுக்குவோம்…” மிகவும் சீரியசாக கூறிய சித்ராவை ஒன்றும் பேசாமல் நந்தினியும் வளர்மதியும் பார்த்து கொண்டிருந்தனர்… மனதில் இவ்வளவு தீவிரமாக நினைத்து கொண்டிருப்பாள் என அவர்களும் நினைக்கவில்லையே!
“உனக்கு ரியாலிட்டி புரியல சித்ரா… அதான் இப்படி பேசற… ஆஸ் எ ப்ரென்ட்ஸ் உனக்கு நல்லது சொல்லிட்டோம்… அதை தான்டி நீ போய் கிணத்துல தான் விழுவேன்னு சொன்னா என்ன பண்றது…” சங்கடமாக நந்தினி கூற,
“சித்ரா… சக்தியண்ணன் நல்லவரா இருக்கலாம்… இருக்கலாம் என்ன? ஆமா அவரை மாதிரி ஒரு நல்லவரை பார்க்க முடியாதுதான்… நந்து சொல்ற அளவு அவர கட்டிகிட்டா கஷ்டபடனும்ன்னு சொல்ற அளவெல்லாம் நான் சொல்ல மாட்டேன்… ஆனா உங்க அம்மா அப்பாவ நினைச்சு பாரு… நம்ம சொசைட்டில லவ்வுங்கறது எந்த அளவு ஏத்துக்கப்படுதுன்னு நினைச்சு பாரு… நந்து பயப்படறதும் அதுக்கு தான் சித்து…” வளர்மதி பொறுமையாக கூற… நந்தினி அவளை கையமர்த்திவிட்டு,
“சித்ரா… உன்னோட பீலிங்க்ஸ் எங்களுக்கும் புரியுது… ஆனா படிக்கற வயசு இதுடி… எங்களை மாதிரி இல்லாம உனக்கு உங்க வீட்லயே அடுத்தது படிக்க பர்மிஷன் கொடுத்துட்டாங்க… காரணம் உனக்கு முன்னாடி உங்க அக்கா இருக்காங்க… அதை சரியா யூஸ் பண்ணிக்கடி… படிப்புதான் முக்கியம்… என்னைக்கு இருந்தாலும் அதுதான் நமக்கு கை கொடுக்கும்… சொல்றதை சொல்லிட்டோம்… யோசி… யோசிச்சு முடிவெடு சித்து…”
நந்தினி கூறி முடிக்க சித்ராவின் முகம் குழப்பத்தை தழுவி இருந்தது… அதற்கு பின் அவளை மேலும் குழப்ப வேண்டாம் என்று இருவரும் விட்டுவிட… பேச்சு வேறு திக்கை நோக்கி சென்றது.
“ஏன் நந்து… இவளை விடு… இப்போ உன்னோட வீட்ல என்ன சொல்றாங்க?” வளர்மதி நந்தினியை பார்த்து கேட்டாள்.
“அவங்க என்னமோ சொல்லிட்டு போகட்டும் வளரு… எனக்கு ஒரே குறிக்கோள் தான்… நான் ஐஏஎஸ் முடிக்கணும்… இந்த மாவட்டத்துக்கே கலெக்டரா வரணும்… அவ்வளவுதான்…” ஒரே வரியில் முடித்து விட்டு அவளது சாப்பாட்டில் கவனமாக.
“இதெல்லாம் எங்களுக்கு முன்னாடியே தெரியும்… அதுக்கு என்ன செய்ய போற? அதுவும் உங்க அப்பாவையும் அப்பத்தாவையும் நினைச்சாலே எங்களுக்கே பயமா இருக்கு…” சித்ரா கவலைப்பட,
“அவங்க ரெண்டு பேரும் எனக்கு ஜுஜுபி… முதல்ல இங்க பிஎஸ்சிய முடிக்கறேன்டி… அடுத்ததா மெட்ராஸ் யுனிவர்சிட்டில எம்எஸ்சி சேரனும்… அங்கேயே ஐஏஎஸ் கோச்சிங் சென்டர்ல சேர்ந்துடுவேன்… அப்புறம் எம்எஸ்சி முடிக்கும் போதே மேடம் ஐஏஎஸ் பாஸ் பண்ணிடுவேன்… எப்படி என் ப்ளான்…” கண்களில் கனவோடு கூறிக்கொண்டிருந்தவளை பார்த்து,
“ப்ளான் எல்லாம் நல்லா தான் இருக்கு… எப்படி ஒர்க் அவுட் பண்ண போற? அதை சொல்லு…” இருவரும் கோரசாக கேட்க… நந்தினி சோகமாக,
“தெரியலடி… அதான் யோசிச்சிகிட்டே இருக்கேன்… ஏதாவது ஐடியா இருந்தா குடுங்கடி… எப்படியாவது நான் ஐஏஎஸ் பண்ணியே ஆகணும்…”முகம் முழுக்க யோசனையாக அவள் கேட்க,
“நந்து… நீ பறக்கறதுக்கு தான்டி ஆசைப்படற…” வளர்மதி மெலிதான குரலில் கூற… பரிதாபமாக பார்த்தாள் நந்தினி!
“பின்ன என்ன… ஒரு வேளை இங்கயே எம்சிஏவோ என்னவோ பண்ண ஆசைபட்டா கூட உங்க அப்பா ஒத்துக்கறத்துக்கு சான்ஸ் இருக்கு… ஆனா நீ மெட்ராஸ் யுனிவர்சிட்டிக்கு ஆசைபட்டா முடியுமா? உன்னை வாங்கல்ல இருந்து கரூர் அனுப்பறதே பெரிய விஷயம்டி…” நந்தினியின் சூழ்நிலையை வளர்மதி விளக்க… நந்தினியின் முகமோ தீவிரத்தை தத்தெடுத்தது!
“இல்லடி… நான் எப்படியாவது செய்து தான் ஆவேன்… எங்க அப்பா ஒத்துக்கலைன்னா பட்டினி கிடந்தாச்சும் நான் சென்னைக்கு போயே தீருவேன்…” உறுதியான குரலில் அவள் கூற,
மிகவும் சீரியசாகவே பேசி கொண்டிருப்பதை உணர்ந்த சித்ரா,
“ஏய் போதும்டி… ஓவரா சீரியஸாவே பேசிட்டு இருக்கோம்… கொஞ்சம் ரிலாக்ஸா எதாச்சும் சொல்லுங்கப்பா…” பேச்சை மாற்ற விழைந்தாள்!
“சரி வல்லவன் படத்துக்கு நாளைக்கு போலாமா? நாம மூணு பேர் மட்டும்…” நந்தினி அசால்ட்டாக கேட்க… மற்ற இருவரின் கண்களும் விரிந்தது… மூன்று பேர் வீட்டிலும் இது நடக்கவே நடக்க முடியாத ஒன்று… பின் எப்படி இப்படி கேட்கிறாள் என்பதை நினைத்து இருவரும் சிரிக்க,
“ஹேய் நெசமாத்தாண்டி சொல்றேன்… முசுடு கிட்ட காலைலேயே சொல்லிடலாம்… நம்ம மூணு பேருக்கும் ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு… ஈவினிங் வர மாட்டோம்ன்னு… மத்தியானம் தியேட்டர் போயிட்டு ஈவினிங் எப்போவும் போல வீட்டுக்கு போய்டலாம்…” அவளது திட்டத்தை விவரிக்க,
“அவர் கிட்ட சொல்றது இருக்கட்டும்… ஏன் வேன்ல வராம பஸ் வந்தீங்கன்னு வீட்ல கேட்டா என்ன பதில் சொல்றது?” சித்ரா விவரமாக கேட்டு வைக்க,
“அங்கேயும் இதே பதிலை சொல்லிடலாம்… ஸ்பெஷல் கிளாஸ்ன்னு…” மிகவும் சுலபமாக நந்தினி கூற,
“ம்ம்ம் மேகலாவுக்கு இல்லாத ஸ்பெஷல் கிளாஸ் தான் உனக்கு இருந்துச்சான்னு எங்க ஆத்தா என்னை குடைஞ்சு எடுத்துடும்…” வளர்மதி அவளது பங்கிற்கு ஒரு பிட்டை போட,
“ஏய்… எங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் கிளாஸ்ன்னு சமாளிக்கலாம்டி… இதுதான் லாஸ்ட் செம்… இப்போ கூட என்ஜாய் பண்ணலைன்னா தெய்வ குத்தம் ஆகிடும் ராசாத்திங்களா… மறுக்கா மறுக்கா அது இதுன்னுகேட்டுட்டு இருக்காம… நாளைக்கு போற படத்தை பத்தி நினைங்கடி…” சிரித்து கொண்டே நந்தினி கூறி அதற்கு தற்போதைக்கு ஒரு முற்றுபுள்ளி வைத்தாள்!
“சரி காலைல அவர் எதுவோ உன்கிட்ட தனியா சொல்லிட்டு இருந்தாப்லையே… என்ன விஷயம்?” ரொம்ப நேரமாக மனதை அரித்து கொண்டிருந்த விஷயத்தை சித்ரா கேட்க,
“எவுரு?” முறைத்து கொண்டு கேள்வியாக சித்ராவை நந்தினி பார்க்க
“அவர் தான் சக்தி…”
“ம்ம்ம்… எல்லாரும் அண்ணா அண்ணான்னு சொல்றாங்களாம்… நீ மட்டும் என்ன சக்தி சக்தின்னு ஏலம் போடறன்னு கடிச்சுது… வேறென்ன… இதென்ன எனக்கு புதுசா…” அலட்டாமல் ராகமாக அவள் கூறுவதை பார்த்த இருவரும் சிரிக்க… சிரித்து விட்டு சித்ராவும் அதையே கூறினாள்.
“ஆமா நந்து… ஒழுங்கா அண்ணான்னு கூப்பிடு… அதுதான் நல்லது…” என்று கண்ணடிக்க… நந்தினியோ கடுப்பானாள்.
“ம்ம்ம்ம்… நான் அண்ணான்னு கூப்பிடனுமா? ஏன் நீ கூப்பிடு…”
“ஏய் முறைய மாத்தாதடி… என்னைக்காச்சும் அவங்க கிட்ட நான் பேசி பார்த்து இருக்கியா? பேசினா அண்ணான்னு கூப்பிட சொல்லுவாங்கன்னு நான் பேசினதே இல்லடி… நீ தான் தினமும் அவங்க கிட்ட மல்லுக்கு நிற்கற… அதான் அப்படி சொல்லியிருப்பாங்க…” சக்தியை விட்டு கொடுக்காமல் சித்ரா பேச… நந்தினிக்கு கொலைவெறியே வந்தது.
“ஹல்லோ… யாருக்காகவும் அவனுக்கெல்லாம் புதுசா மரியாதை தந்துட்டு இருக்க முடியாது… என்னையவா மிரட்டறான்? இருக்கட்டும்… காலேஜ் முடிஞ்சு போறதுக்குள்ள அவன் வாழ்நாள்ல மறக்கவே முடியாத மாதிரி அவனுக்கு ஆப்பு வெச்சுட்டு தான் நான் சென்னை போவேன்… பார்த்துகிட்டே இரு சித்து…”
யார் யாருக்கு ஆப்பு வைக்கிறார்கள் என்று பாரேன் என்று அருகில் அமர்ந்திருந்த விதி சிரித்தது… நந்தினியின் வாழ்கையில் விளையாட நேரம் பார்த்து கொண்டிருந்தது!
நான்கு
மதிய நேரமாகையால் கூட்டம் சற்று குறைவாக இருந்தது… டிக்கட்டை நந்தினி எடுக்க மற்ற இருவரும் பதட்டத்திலேயே இருந்தனர்… வீட்டிற்கு தெரியாமல் இதுபோல தியேட்டருக்கு வருவது முதல் முறை என்பதால் வியர்த்து கொட்டியது சித்ராவுக்கும் வளர்மதிக்கும்! நந்தினிக்கு உள்ளுக்குள் பயம் இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
“ஏய் பயமா இருக்குடி…” நந்தினியின் கையை பிடித்து கொண்டு சித்ரா புலம்ப.
“ஆமா நந்து… எப்போ யார் கண்ல விழுவோம்ன்னு திக்கு திக்குன்னு இருக்கு…” வளர்மதி அவளது பங்கிற்கு புலம்ப… இருவரையும் பார்த்து முறைத்தாள் நந்தினி!
“அம்மா பரதேவதை… கேசுவலா இருந்தா கூட யாரும் பார்க்க மாட்டாங்க… இப்படி ரெண்டு பேரும் நடுங்கிட்டு இருந்தா இது விவகாரம்ன்னு முடிவு பண்ணிடுவாங்கடி லூசுங்களா… சித்த நேரம் வாய வெச்சுட்டு சும்மா இருங்கடி… டிக்கெட் எடுத்துட்டு உள்ள இருட்டுல போய் உட்கார்ந்துட்டா யாருக்கும் ஒன்னும் தெரியாது…” மெலிதான குரலில் இருவரையும் வறுத்து எடுத்தாள்!
ஒருவழியாக டிக்கட் எடுத்து கொண்டு உள்ளே ஓரமாக சென்று அமர… எந்த எந்த நாற்றமோ கலந்து கட்டி அடிக்க… எப்படியோ சமாளித்தார்கள்… படம் ஆரம்பித்தது… அனைத்தையும் மறந்துவிட்டு ரசிக்க ஆரம்பித்தார்கள்! சிறிது நேரம் போக… வளர்மதிக்கு பின்னே ஏதோ ஊர்வது போல தெரிய… அவஸ்த்தையாக நெளிய ஆரம்பித்தாள்.
“ஏய் சித்ரா… ஒரு சீட் தள்ளி உட்காரேன்…” நந்தினி நடுவில் அமர்ந்திருக்க சித்ராவிடம் கிசுகிசுப்பாக கூறினாள்!
“ஏய்… ஏன்டி…” நந்தினி கேட்க… இவளிடம் கூறினால் ரசாபாசம் ஆகிவிடுமென பயந்து,
“ஒன்னுமில்லடி… எனக்கு மறைக்குது… அதான்…” வேறு ஒன்றும் சொல்லாமல் ஒரு சீட் மூவரும் மாற்றி அமர்ந்தனர்… இப்போது சித்ராவுக்கு பின்னால் எதுவோ நெளிய… அவஸ்தையாக வளர்மதியை பார்த்தாள். அவளும் என்னவென்று சைகையால் கேட்க… சித்ரா மீண்டும் அவஸ்தையாக நெளிய… பேசாமல் இன்னொரு சீட் மாற்றி அமர்ந்தனர்.
“ஏன்டி படுத்தறீங்க…” இருவரையும் திட்டிவிட்டு சீட் மாறி அமர்ந்த நந்தினி சிறிது நேரம் தடங்கலில்லாமல் படத்தை பார்க்க… பின் அவளுக்கும் பின்னே ஊர்வது போல இருந்தது… என்னவென்று குனிந்து ஆராய பின்னால் அமர்ந்திருந்த நபர்களில் யாரோ ஒருவனது கால் சீட்டின் பின் வழியாக விட்டு அவளது பின்பக்கத்தை தடவி கொண்டிருப்பது தெரிய… நந்தினியின் முகம் கோபத்தில் சிவந்தது… ஒன்றும் பேசாமல் தன் தோழிகள் இருவரையும் பார்க்க அவர்களும் சங்கடமாக ஆமென்றனர்.
அதே கோபத்தோடு பின்னால் திரும்பிய நந்தினி,
“ஹலோ… உங்களுக்கு கால் வைக்க இடமில்லைன்னா வாங்க… இப்போவே தியேட்டர் மேனேஜர் கிட்ட சொல்லி தனி சீட் வாங்கி தரேன்… இன்னொரு தடவை கால் இந்தப்புறம் வந்துதுன்னா மரியாதை இல்ல… சொல்லிட்டேன்…” அவள் கடுப்பாக கூறியதை கேட்ட அவன்… பதில் பேசாமல் காலை எடுத்துவிட… பின்னர் அந்த தொல்லையின்றி மூவரும் படத்தை பார்த்து விட்டு வெளியே வந்தபோது மணி ஐந்தே காலாகி இருந்தது.
அவசரம் அவசரமாக பேருந்து நிறுத்தத்தை நோக்கி வேக நடையிட்டவர்களுக்கு பேருந்து கிடைக்க வேண்டுமே என்ற பயம் இருந்தது.
“ஏய் நந்து… உனக்கு எந்த பஸ்ல ஏறணும்ன்னு தெரியுமாடி?” வளர்மதி அப்பாவியாக கேட்க,
“தெரியும் வளரு… வா…” அசால்ட்டாக கூறிவிட்டு நடையை துரிதப்படுத்தினாள்… அந்த நிறுத்தத்தில் போய் மூவருமாக நிற்கும் போதே இன்னும் சிலர் பேருந்துக்கு காத்திருந்தனர்.
“மணி வேற ஆகிட்டே இருக்குடி… பயமா இருக்கு… இவ்வளவு நேரமாகி நாம போனதே இல்ல…” சித்ரா பயந்து கொண்டே கூறினாள்.
“ஏய் புலம்பிட்டே இருக்காதடி…” நந்தினி கடித்தாள்… அவர்கள் நின்றுகொண்டிருந்த பேருந்து நிறுத்தத்திற்கு பின்னே தான் அந்த மொத்த மளிகை விற்பனை கடை இயங்கி கொண்டிருந்தது… அங்கு லோடு இறக்க வந்திருந்த சக்திவேலின் பார்வையில் பட்டனர் இந்த மூன்று பேரும்… அவர்களுக்கு இருந்த பதட்டத்தில் யாரையும் கவனிக்காமல் பேருந்து வருகிறதா என்று பார்த்து கொண்டிருக்க… சக்திவேல் யோசனையில் முகத்தை சுருக்கினான்!
“இந்த பொடுசுங்க மூணும் ஸ்பெஷல் கிளாஸ் இருக்குன்னு காலைல சொல்லுச்சே… இங்க என்ன பண்ணிட்டு இருக்குதுங்க…” அவன் ஏற்றி வந்த லோடை கடையாட்கள் இறக்கி கொண்டிருக்க… கடை ஓனரிடம் கணக்கை கூறிவிட்டு வெளியே வந்தவனின் பார்வையில் மூவரும் பட்டிருந்தனர்!
அவர்களை யோசனையாக பார்த்து கொண்டிருக்கும் போதே… அந்த ஓனர் கேட்டார்,
“என்ன சக்தி… பார்வை எல்லாம் எங்கயோ இருக்கு போல…” இடக்காக கேட்டவரை பார்த்து சிரித்தான்.
“இல்லண்ணே… தெரிஞ்ச பசங்க… நம்ம வேன்ல தான் வருதுங்க… இப்போ போய் இங்க என்ன பண்ணிட்டு இருக்குங்கன்னு தெரியல… அதுவும் காலேஜ் யுனிபார்ம்ல…”
“இப்போல்லாம் இது காலேஜ் புள்ளைங்களுக்கு சகஜம் சக்தி… இப்போ மணி என்ன?... அஞ்சே கால்… பக்கத்து தியேட்டர்ல மேட்னி பார்த்துட்டு பஸ்ஸுக்கு வெயிட் பண்ணுதுங்க… அதான் மேட்டரு…” சுலபமாக அவர் கூற,
“இல்லண்ணே… எனக்கு நல்லா தெரியும்… மூணு பேருமே நல்ல பிள்ளைங்க…” என்று அவன் கூறி கொண்டிருக்கும் போதே நான்கு பேர் கொண்ட குழு மூவரின் பக்கத்தில் போய் நின்றது… நால்வருமே பார்க்க நல்ல அபிப்ராயம் வரும்படி இருக்கவில்லை… அவர்களில் ஒருவன் வேண்டுமென்றே நந்தினியை இடித்து விட்டு அந்த புறமாக போக… நந்தினி கோபமாக அவர்களை முறைப்பது தெரிந்தது.
அவசரமாக அவர்களை நோக்கி போவதற்குள் இன்னொருவனும் நந்தினியை இடித்து விட்டு.
“தியேட்டர்ல பெரிய இவளாட்டம் சவுண்டு குடுத்த… இப்போ குடு பார்க்கலாம்…” என்று கூறி கொண்டிருந்தான்.
நந்தினி மிகவும் ரவுத்திரமாக கையை ஓங்க… அவசரமாக சென்று அவளது கையை இறுக பற்றினான் சக்திவேல்.
யார் தன் கையை இவ்வளவு இறுக்கமாக பிடித்திருப்பது என்று கோபம் மாறாத முகத்தோடு திரும்பி பார்க்க… பின்னால் நின்று கொண்டிருந்தது சக்திவேல்… ஒரே நிமிடத்தில் கோபம் அனைத்தும் வடிந்து அந்த இடத்தில் பயம் சூழ்ந்து கொண்டாலும்… அந்த சூழ்நிலையில் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தாள் நந்தினி… பதட்டத்தோடு நின்று கொண்டிருந்த மற்ற இருவரின் நிலையும் அதே!
பற்றிய கையை விடாமல்.
“என்னம்மா பிரச்சனை…” என்று மூவரையும் பார்த்துகேட்கவும், வளர்மதி அவசரமாக கூறினாள்.
“அண்ணா… நாங்க மூணு பேரும் படம் பார்க்கலாம்ன்னு வந்தோம்… இவனுங்க அங்கேயே பிரச்சனை பண்ணானுங்க… நந்தினி திட்டி விட்டுட்டா… இப்போ இங்கவும் பிரச்சனை பண்றானுங்கண்ணா…”
சக்திவேலிடம் திட்டு வாங்கினாலும் பரவாயில்லை என்று வளர்மதி கடகடவென உண்மைகளை ஒப்புவிக்க… இதுதான் உங்க ஸ்பெஷல் கிளாஸ் லட்சணமா என்று ஒரு கோபப்பார்வை அவர்களை பார்த்தவன்… உங்களை பிறகு கவனிக்கிறேன் என்று முறைத்து விட்டு… அந்த நால்வரிடம் திரும்பினான்.
“என்ன விஷயம்… என்னடா இங்க பண்ணிட்டு இருக்கீங்க?” கோபமாக அவர்கள் நால்வரையும் பார்த்து கேட்க.
“என்ன சாமி… நீ தான் வக்காலத்தா இவுளுங்களுக்கு?” நந்தினியை இடித்தவன் நக்கலாக கேட்க… சக்தி பளாரென அறைந்தான் அவனது கன்னத்தில்!
“எங்க வீட்டு பொண்ணுங்களை இடிச்சது மட்டுமில்லாம நக்கல் மயிறு வேற கேக்குதாடா உனக்கு… நாயே… ஒழுங்கா திரும்பி பார்க்காம ஓடிடு… இன்னும் ஒரு நிமிஷம் கண்ணு முன்னால நின்னுட்டு இருந்த தொலைச்சுருவேன் தொலைச்சு…” இடித்ததும் இல்லாமல் மரியாதை இல்லாமல் பேசியவனிடம் சக்திவேல் காட்டிய ரவுத்திரத்தில் நால்வருமே அதிர்ந்தனர்.
“சாரி சார்… உங்க வீட்டு பொண்ணுங்களா?... தெரியாம இடிச்சுட்டோம்…” அவர்களில் இன்னொருவன் மன்னிப்பு கோர,
“என்கிட்டே இல்ல… இவங்க கிட்ட கேளு…” நந்தினியை காட்டினான்… அதுவரையுமே அவளது கையை விடவில்லை… அந்த இறுக்கத்தை அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
“இவனுங்களை நானே நாலு சாத்து சாத்தியிருப்பேன்… அதுக்கு விடாம…” முக சுளிப்போடு கையை அவனிடமிருந்து பிடுங்கி கொள்ள முயற்சித்து கொண்டு அவனுக்கும் கேட்பது போல முனுமுனுத்தவளை பார்த்து கனல் பறக்க முறைத்தான்.
“சாரிக்கா… சாரி…” மூவரிடமும் மன்னிப்பு கேட்டவர்கள் ஓட்டமும் நடையுமாக ஓடினர்… அதற்கு பின்னரே அவளுக்கு விடுதலை கிடைத்தது… நந்தினி சிவந்து கன்றி போன தனது கையை ஆராய்ந்து கொண்டிருக்க… சக்திவேல் கைபேசியை எடுத்து செந்திலை அழைத்து இருந்தான்.
“டேய்… காலேஜ் டிரிப்பெல்லாம் முடிச்சுட்டியாடா?” சக்திக்கு இறக்கும் வேலை இருக்கும் போது காலேஜ் டிரிப்புகளை செந்தில் தான் பார்த்து கொள்வான்!
“முடிஞ்சிடுச்சுண்ணா… ஏன்ணா கேக்கறீங்க?”
“இப்போ எங்க இருக்க?”
“டவுன்ல தான்னா இருக்கேன்… சிடி வாங்கிட்டு போயிடலாம்ன்னு வந்தேன்…”
“டேய்… கூமுட்டை… சிடி வாங்க உனக்கு பெரிய வண்டி கேக்குதா?” அந்த நிலையிலும் செந்திலை கடிக்க.
“இல்லண்ணா புது பாட்டு எதுவுமே இல்ல… அதான்…” செந்தில் இழுக்க.
“சரி… அப்படியே பஸ் ஸ்டேன்ட் வந்துரு… ராஜா ஸ்டோர்ஸ் பக்கத்துல…”
“சரிண்ணா… இன்னும் ரெண்டே நிமிஷத்துல வந்துடறேன்…”
கைபேசியை வைத்துவிட்டு மூவரையும் முறைத்தான்.
“இதுதான் உங்க ஸ்பெஷல் கிளாஸ் லட்சணமா?” அவன் சரியாக கேட்டாலே பதில் கூறுவது கடினம் எனும் போது… இப்படி கோபமாக கேட்டவனை நடுங்கி கொண்டு பார்த்தனர் மூவரும்.
“இல்ல… லாஸ்ட் செம்… ஒரே ஒரு படம் மட்டும் பார்க்கலாம்ன்னு…” வார்த்தைகள் தந்தியடிக்க சித்ரா கூற.
“ஏம்மா அதுக்குன்னு இப்படித்தான் வம்புல மாட்டிக்கறதா? இதுக்கு யாரு ஹெட்டு? இந்தா இங்க நிக்கறாங்களே… இந்த அதிகப்ரசங்கியா?” நந்தினியை காட்டி அவன் கேட்க.
“நான் அதிகபிரசங்கியா?” கடுப்படித்தாள் நந்தினி.
“பின்ன… ஒழுங்கா இருக்க புள்ளைங்களையும் கெடுக்கறதே நீ தான… வேன்ல தான் உன் வேலைய காட்டிகிட்டு இருந்த… இப்போ தியேட்டர் வரைக்குமா? ஒழுங்கா காலேஜ் போக முடியலைன்னா வீட்ல இருந்துக்க வேண்டியதுதானே… ஏன்மா மத்தவங்களையும் கெடுக்கற?”
“வேணாம்… உனக்கு இதுக்கு மேல மரியாதை இல்ல… இதோட நிறுத்திக்க… நீ ஒன்னும் எனக்கு அட்வைஸ் பண்ண தேவையில்லை…” நந்தினி கடுப்பில் எண்ணையிலிட்ட கடுகாக பொரிய,
“நீ இப்படியே பேசு பொண்ணு… உங்க அப்பா கிட்ட சொல்லிடறேன்… உங்க பொண்ணு ஒழுங்கா காலேஜ் போகுதா வருதான்னு நீங்களே பார்த்துக்கங்க… என்னைய கேக்காதீங்கன்னு சொல்லிடறேன்…” நந்தினியின் வீக் பாய்ண்டில் சரியாக அடிக்க அதற்கு மேல் பேச முடியாமல் வேறு புறத்தை நோக்கினாள்!
“சரி இங்க நிற்காதீங்க… வேன் வர்ற வரைக்கும் அங்க கடைல உக்காருங்க… யாராச்சும் பார்த்தா நல்லா இருக்காது…” கூறிவிட்டு முன்னே செல்ல… மூவருமாக அந்த மளிகை கடைக்கு சென்றனர்… சுற்றியும் பார்த்து கொண்டே.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் செந்தில் வேனை ஒட்டி வர… மினி லாரியை அவனிடம் ஒப்படைத்து விட்டு அவன் வேனை எடுத்து கொண்டான்.
“அந்த இரும்பு கடை லோடை முடிச்சுட்டு ஊரு வந்து சேருடா… ஒழுங்கா பார்த்து ஓட்டிட்டு வா…” என்று கூறிவிட்டு வேனை ஸ்டார்ட் செய்ய… நிம்மதி பெருமூச்சுடன் மூவரும் வேனில் ஏறினர்!
*******
வளர்மதியை இறக்கி விட்டு சித்ராவின் வீட்டிற்கு வர அவளின்வீட்டின் முன் கணிசமான கூட்டம் கூடியிருந்தது!… கூடியிருந்தவர்களின் முகம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக இருக்க… இந்த கூட்டம் தன்னால் தானோ என்று ஒரு நிமிடம் அரண்டு போய் நந்தினியை பார்த்தாள்… வேன் நின்றும் இறங்காமல் பயத்தில் வெளிறி போயிருக்கும் சித்ராவை பார்த்த சக்திவேல்… தான் டிரைவர் சீட்டில் இருந்து இறங்கி… என்ன பிரச்சனையென்று அங்கிருந்த ஒருவரிடம் கேட்க.
“இந்த புனிதா பொண்ணு கீழ தெரு பையனை கல்யாணம் மூச்சுட்டு வந்திருச்சு தம்பி… அநியாயத்தை பாரு… ரெண்டும் எப்படி சட்டமா நிக்குதுங்க…”
புனிதா சித்ராவின் தமக்கை… படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்தவளுக்கு அவர்களது சமூகத்திலேயே திருமணம் பேசி வைத்திருக்க… புனிதாவோ தான் ஆசைப்பட்ட தங்கவேலை திருமணம் செய்து முடித்து விட்டு ஆசி வாங்க வீட்டிற்கு வந்திருந்தாள்… இதை இந்த பெண் வீட்டில் கூறி பெற்றோர்களின் சம்மதத்தை பெற்றே செய்திருக்கலாமே என்று அவரிடம் அவன் கேட்க… அதற்கு அவர் ஒரு கேவலமான லுக்கை விட… தான் என்ன தவறாக கேட்டு விட்டோம் என்று புரியாமல் அவரிடமே கேட்டான் சக்திவேல்!
“ஏங்க? நான் கேட்டதுலஎன்ன தப்பு?”
“என்ன தப்பா? அதுக காலனி சனம் தம்பி… அதுக்கு எப்படி ஒப்புக்க முடியும்? நாளமின்னி நம்ம தெருவுலையே இவுங்க பொண்ணை கட்டியிருக்கேன்னு மிதப்பா ஷோ காட்டிகிட்டு வருவானுங்க… இது தேவையா?” என்று அவனிடம் கடுப்படித்த அந்த பெரியவர் அதையே சபையிலும் கொட்ட… அவருக்கு ஆதரவாகவே பெரும்பாலான அவர்களது உறவினர்கள் கூறினர்.
சப்தமில்லாமல் உள்ளே வந்த சித்ராவை பார்த்து… பெரியவர் ஒருவர்.
“எப்பா வேலுச்சாமி… இன்னைக்கு ரவைக்கு சித்ரா புள்ளைய உன் வூட்டுல வெச்சுக்க… மிச்சமீதிய நாளைக்கு பார்க்கலாம்…”
ஓரமாக அமர்ந்து சித்ராவின் தாய் வேணி அழுது கொண்டிருக்க… வேலுச்சாமி சித்ராவை பார்த்து கேட்டார்.
“ஏன் கண்ணு… வேன் இன்னும் நிற்குதா? நம்ம பாப்பா உன் கூடத்தானே வந்திருக்கும்…”
“ஆமாங் மாமா… நந்து வேன்ல இருக்கா… ஸ்பெஷல் கிளாஸ் அதான் லேட் ஆகிருச்சு…” கீழ்பார்வையாகவே அவள் கூற
“சரி கண்ணு… நீ பாப்பா கூட நம்ம வீட்டுக்கு போய்டு… சக்திய கூப்பிடு…”
அவளது தாயின் முகத்தை பார்த்து போவதற்கு தயங்கி கொண்டு அவரை பார்க்க… வேலுச்சாமியோ கறாராக கூறினார்.
“போ கண்ணு… சக்திய கூப்பிடு…”
“சரிங்க மாமா…” தயங்கிபடியே போனவள் சக்திவேலை அனுப்ப
“சக்தி… நீ நம்ம பாப்பாவோட சித்ரா பாப்பாவையும் நம்ம வீட்லயே இறக்கி விட்டுடு… அப்புறம் ஒரு வாரத்துக்கு சித்ரா பாப்பா காலேஜ் வராது சக்தி…”
ஏனென்று கேட்காமல் சரியென்று தலையசைத்து விட்டு சென்றான் சக்தி… நடப்பவைகளை பார்த்தால் நல்லதுக்கென்று அவனால் நினைக்க முடியவில்லை… மனதை பிசைய இருவரையும் நந்தினியின் வீட்டில் இறக்கி விட்டு அவனது வேலைகளை கவனிக்க சென்றான் அதை மறந்தும் போனான்.
அடுத்த நாள் அதிகாலையில் சந்தைக்கு காய்கறி லோடு ஏற்ற செல்லும் போது மாரப்பன் தோட்டத்தில் மூட்டைகளை ஏற்றி விட்ட அவரது மகன் சக்திவேலிடம் கேட்டான்.
“சக்தி உனக்கு தெரியுமா? அந்த புனிதா அதான்ப்பா முத்துவேல் பொண்ணு… வெஷம் குடிச்சிருச்சாம்…” மிக சாதரணமாக செய்தியாக அவனிடம் கூறப்பட்டபோது அதிர்ந்தான்.
“கடவுளே… எப்படி குமாரு?”
“ஏதோ ரொம்ப வயித்து வலியாம் சக்தி… நைட் அதை தாங்க முடியாம வெஷத்தை குடிச்சிருச்சாம்…”
“என்ன குமாரு சொல்ற… நேத்து சாயங்காலம் பார்த்தேனே… பஞ்சாயத்து பேசிட்டு இருந்தாங்களே…”
“அதெல்லாம் இல்லப்பா… அந்த பையன் இந்த பொண்ணை சுத்தி சுத்தி வந்துருப்பான் போல இருக்கு… இது முடியாதுன்னு கறாரா சொல்லிருச்சாம்… அதனால நேத்து நைட்டு புல்லா தண்ணிய போட்டுட்டு காவேரில குதிச்சுட்டான் சக்தி… இந்த புள்ளை செத்தது வயித்து வலியாம்…” கட் அன்ட் ரைட்டாக இதுதான் உண்மையென எழுதி வைத்ததை படிப்பது போல அவனிடம் கூறிய குமாரை வெறித்தான் சக்திவேல்.
நெஞ்சு பொறுக்குதில்லையே.
இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்து விட்டால்.