Thagam 3

Thagam 3

                             தாகம்  ( பகுதி – 3 )

மணி காலை நான்கு.

                அலாரம் பழக்கம் எல்லாம் இவர்களுக்கு கிடையாது. சேவல் கூவினால் எழுந்து விடுவார்கள். பாக்கியம் கண் விழித்துக்கொண்டாள். கையில் இரண்டு குடமும்  ஆறு ரூபாயும் எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள். இன்னும் அங்கு இருள் சூழ்ந்திருந்தது.

அவளை போல் , குடத்தோடு அங்கு சில பெண்கள் நடந்து கொண்டிருந்தனர். அவர்களுxக்கு அது பழகிய பகுதி என்பதால் எளிதாக நடந்தனர்.

 வழக்கமாக தண்ணீர் பிடிக்கும்  இடத்திற்கு வந்தனர். அங்கு பாக்கியத்திற்கு முன்பே வந்து ஆண்களும் பெண்களும் காத்திருக்க  கூட்டத்தை இடித்துக்கொண்டு பாக்கியம் உள்ளே சென்றாள்.

” ஏய்!  இவ்வளவு  பேர்  இங்க நிக்கறோம் கண்ணு தெர்ல..”, என்று கேட்டான் ஒருவன்.

” ஒரே  ஒரு குடம் “, என்று மெதுவாக கூறினாள் பாக்கியம்.

“என்னா  இடிச்சிகிட்டு முன்னாடி வந்துட்டா  தண்ணி  கிடைச்சிருமா..?, என்று கேட்டாள் ஒரு வயதான பெண்மணி.

” என்ன கைல ரெண்டு குடம் வச்சிக்கிட்டு ஒரு குடம்ங்கிற..? எங்களுக்கு என்ன ஏழு கையா  இருக்கு? நாங்க மட்டும் என்ன எட்டு குடம் பத்து குடம்னா தூக்கிட்டு போக போறோம்.. உன்னை மாதிரி ரெண்டு குடத்துக்கு  தானே நிக்கறோம் “, என்று சண்டைக்கு வந்தாள் ஒரு நடுத்தர வயது  பெண்மணி..

 குடத்தை கீழே வைத்துவிட்டு., தன் கொண்டையை சரி செய்து கொண்டாள் பாக்கியம்

“இப்ப எனா  கேட்டுட்டேனு  இப்படி தய்யா தக்கா னு குத்திக்கற..? நீயும் தண்ணீ இல்லாம நடு தெருவுல நிக்கற … நானும்  தண்ணிக்காக நடு தெருவுல  நிக்கிறேன்.. இதுல நீ என்ன உசத்தி நான் என்ன கம்மி “, என்று சண்டைக்கு போனாள் பாக்கியம்

 

” அது எப்படிம்மா?  நாங்க முன்னாடியே  வந்து காத்து நிக்கறோம்.. நீ இடிச்சிக்கிட்டு முன்னாடி வந்தா கேட்க மாட்டோமா..?”, என்று அந்த நடுத்தர வயது   பெண்மணிக்கு ஆதரவாக பேசினார் ஒருவர்..

“தண்ணீ வேணும்னா அப்படி இப்படி தான் பிடிப்போம் என்னா  பண்ணுவ..? “, என்று பாக்கியம் எகிற.

” தண்ணீ  இன்னக்கி வராது.. “, என்று வாட்டர் மணியின் குரல் ஓங்கி ஒலித்தது. அவன்  பெயர் மணிகண்டன்.  வாட்டர், வாட்டர் என்று கூவி கொண்டே அந்த பகுதியில் அவன் சுற்றுவதால் அவன் வாட்டர் மணி ஆகிவிட்டான்.

 

இவர்கள் தங்கள் சண்டையை விட்டுவிட்டு வாட்டர் மணியிடம் தங்கள் கவனத்தை திருப்பினர்.

“நீ தண்ணீ கொண்டு வந்து ரெண்டு நாள் ஆச்சு… இன்னைக்கும் நீ தண்ணீ இல்லன்னா  என்ன அர்த்தம்..”, என்று கேட்டனர்.

” சொற்ப குடம் தண்ணீ  வச்சி எப்படி காலத்தை ஓட்ட முடியும்?”, என்று அங்கலாய்த்தார்கள் சில பெண்மணிகள்.

” இருபது  ரூபாய் குளியல் தண்ணியும் கிடையாதா..?”, என்று வினவினாள் இளம் பெண் ஒருத்தி.

“”இங்க குடிக்க , சமைக்கவே தண்ணீ இல்லை, இதுல குளிச்சா என்ன? குளிக்கலனா  என்ன ?”, என்று அங்கலாய்த்தாள் பாக்கியம்.

” கரண்ட் இல்லை . மோட்டார் ஓடல..  தண்ணீ  பிடிக்க முடியல….  அதனால் எந்த தண்ணியும் இன்னக்கி வராது  ” , என்று கூறிவிட்டான்  வாட்டர் மணி.

” அது எப்படி கரண்ட் வந்த உடனே தண்ணிய புடிச்சி ஊத்திட்டு போ…”, என்று கூறினாள் பாக்கியம்.

“அது தான் சரி” என்று கூறினாள் அந்த நடுத்தர வயது  பெண்மணி.

சண்டை சரியாகி இந்த சில நிமிடத்தில் அவர்களுக்குள் தோன்றிய  நட்பு , நம்மை போல்  வாட்டர் மணிக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது.

தண்ணீர் வராது என தெரிந்த பின் அங்கு நின்று என்ன பயன்..

அனைவரும் தங்கள் வெற்று குடங்களோடு வீடு திரும்பினர்.

இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பின் தண்ணீர் இல்லாமல் வீடு திரும்பினாள் பாக்கியம்.

  தீபா பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்ததுடன் சீக்கிரம் எழுந்து கொண்டாள்.

“பாண்டி எந்திரி டா…”  , என்று அவனை  எழுப்பினாள் தீபா.

“ஏன் இப்படி ராத்திரியே எழுப்பற..?”, என்று திரும்பி படுத்தான் பாண்டியன்.

” டேய்.. விடிஞ்சிருச்சு டா. “, என்று பதில் கூறியபடியே வெளியே வந்தாள் தீபா.

“வெற்று குடங்களோடு வந்த பாக்கியம் , என்னடி எல்லாரும் எந்திரிச்சிட்டாங்களா..?”, என்று கேட்டாள்.

“நான் முழிச்சிட்டேன்.. தண்ணி இல்லாம பல் கூட துலக்கல .. நேரம் ஆச்சு .. பள்ளிக்கு போகணும் “,  என்றாள்  தீபா.

” தண்ணி இல்ல டி.. எப்படி பள்ளி கூடத்துக்கு போவ..?”, என்று கடுப்பாக கேட்டாள்  பாக்கியம். “பரவாயில்லை அம்மா…, கூவம் தண்ணீல முகம் கழுவிக்கிறேன்..  நான் படிச்சா தானே தண்ணி இருக்குற வூட்டுக்கு போக   முடியும்னு சொன்ன..?”, என்று அப்பாவியாக வினவினாள் தீபா.

“கூவத்துல எது குப்பை ,எது தண்ணின்னு நீ பிரிக்கவே முடியாது.”, என்று சலிப்பாக  கூறினாள் பாக்கியம்.

“அம்மா, இது நமக்கு பழக்கம் தானே …”, என்று வாதிட்டாள் தீபா.

” ஏய் !!! ஒரு தடா சொன்னா  புரியாது… இன்னக்கி எப்படியாவது தண்ணி வாங்கணும்.. நீ போய்ட்டா, நான் எத வச்சி சமையல் பண்றது? பள்ளிக்கூடம்  எங்க போகப் போகுது…? நாளைக்கி கூட போய்க்கலாம்…”, என்று சத்தமிட்டாள் பாக்கியம்.

 

” நீ கணக்கா தண்ணி வச்சிருக்கணும்.. அத வுட்டு போட்டு படிக்கணும்னு சொல்ற புள்ளைய  ஏன் திட்டற..?” , என்று பஞ்சாயத்துக்கு வந்தார் பக்கத்து வீட்டு வயதான பெண்மணி.

கண்களை கசக்கி கொண்டு நின்றாள் தீபா.

“அழாத புள்ள.. பொம்பள புள்ளைங்க அழ கூடாது.. தைரியமா இருக்கனும். உன்ன  மாதிரி புள்ளைங்க ஏரோபிளான் ஓட்டுதாம் … நீ என்னனா ஆத்தா எதோ சொன்னான்னு கண்ண கசக்குற..””, என்று கூறினார் பக்கத்து வீட்டு வயதான பெண்மணி.

 

” புள்ளைய திட்டாத  பாக்கியம் ஒம்போது படிக்குற புள்ள மாதிரியா நடந்துக்கறா?  அவ எவ்வளவு பக்குவமா நடந்துக்கறா.. குடும்ப கஷ்டம் தெரிஞ்சி அனுசரணையா நடந்துக்கற புள்ளையா  திட்டாத… என் வூட்டாண்ட ஒரு குடம் தண்ணி இருக்கு.. எனக்கு பாதி குடம் வச்சிட்டு நீ பாதி குடம் எடுத்துக்கோ.”, என்று தாராள மனதுடன் கூறினார் அந்த பக்கத்து வீட்டு பெண்மணி.

அந்த வயதான பக்கத்து  வீட்டு பெண்மணி பாக்கியம் கண்ணிற்கு வருண பகவானை விட பரந்த மனம் கொண்டவராய் தெரிந்தார்.

“அம்மா, அலமேலு ஆயா ரொம்ப நல்லவங்கல்ல?”,  என்று கூறினாள் தீபா.

ஆமோதிப்பது போல் தன்  தலையை அசைத்தார் பாக்கியம்.

“தீபா , ரெண்டு தெரு தள்ளி சிமெண்ட் வீடு இருக்கும்.. அங்க யார் வூட்டுக்காவது போய் தண்ணி வாங்கிட்டு வா டி..”, என்று கூறினார் பாக்கியம்.

“அம்மா.. அவங்க நம்மள ஒரு மாதிரி பார்ப்பாங்க.. ஏதேதோ  பேசுவாங்க ..’, என்று கூறினாள் தீபா.

“நம்ம நிலமை அப்படி..”, என்று தன்மையாக கூறினார்  பாக்கியம்.

“பாண்டி, அக்கா கூட துணைக்கு போ …”, என்று பாண்டியிடம் கூறினார் பாக்கியம்.

தீபா குடத்தை தூக்கி கொள்ள, தூக்க கலக்கத்துடன்  தீபாவுடன் நடந்தான் பாண்டியன். சுமார் ஏழு மணி , குடத்தை தூக்கி கொண்டு தீபா, பாண்டியன் இருவரும் சிமெண்ட் வீடு தேடி நடந்தனர். சிமெண்ட் வீடுகள் இருக்கும் தெருவை அடைந்து விட்டனர்.

“அக்கா, அங்க பாரு அந்த வீட்ல கேக்கலாமா..?”, என்று ஆர்வமாய் வினவினான் பாண்டியன். எந்த வீட்டில் கேட்கலாம் என்று தயக்கமாய் நடந்து கொண்டிருந்தாள் தீபா.

 

ரோடு ஓரமாய் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் கீழே கிடந்தது. ” நேத்துல இருந்தே தண்ணி தாகம் .. ஆயா  குடுத்த தண்ணியையும் குடிக்காமலே வந்துட்டேன்.. ” என்று புலம்பிக்கொண்டே அந்த தண்ணீர் பாட்டிலை வாயில் வைத்தான் . இரண்டு சொட்டு தண்ணீர் தான் இருந்தது. ” நாக்கு தான் ஈரமாச்சு..”, என்று வெறுப்பாய் பாட்டிலை தூக்கி எறிந்தான்.

“அக்கா , எதாவது ஒரு வீட்டில் கேளு “, என்று கோபமாக கூறினான் பாண்டி.

” தண்ணி வேணும் என்று “, ஒரு வீட்டு வாசலில் நின்றனர்.

“ஏய்..!!  போ.. போ..”, என்று விரட்டினார் முதியவர்.

“பிச்சை எடுக்க கூடாது.. உழைச்சு  தான் வாழணும்னு பேசும்.. ஆனால் இன்னக்கி தண்ணிக்காக அனுப்பிருச்சு ..”, என்று மனதுக்குள் நொந்து கொண்டாள் தீபா.

அங்கிருந்து இருவரும் கிளம்பினர்.

“அக்கா , இவ்வளவு  பெரிய வீட்டிலும் தண்ணீர் இல்லையா..?”, என்று அப்பாவியாக வினவினான் பாண்டி.

பதில் ஏதும் பேசாமல் நடந்து கொண்டிருந்தாள் தீபா..

ரோட்டில் ஒருவர்..

“நீங்க யார்? ஏன் இந்த பக்கம் சுத்தறீங்க..? “, என்று கேட்டார் ஒருவர்.

“குடத்தை எடுத்துட்டு தண்ணி கேக்கற மாதிரி வந்து நோட்டம் விடுவாங்க .”, என்று கூறினாள் பெண்மணி ஒருத்தி.

 

” கொஞ்சம் தண்ணி குடுக்கறீங்களா? வீட்ல  குடிக்க கூட தண்ணி இல்லாம ரொம்ப கஷ்டமாயிருக்கு  “, என்று தயங்கி தயங்கி கூறினாள் தீபா.

“குடத்தை குடு..”, என்று வாங்கினாள் ஒருத்தி

தோட்டத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். “இனி இந்த பக்கம் வர கூடாது “, என்று  எச்சரித்து அனுப்பினாள்.

 

அங்கு பட்ட அவமானத்தில் , வேகமாக திரும்பி நடந்தாள் தீபா.

 

” ஏன் அக்கா ஓடுற ?”, என்று கேட்டுக் கொண்டே வேகமாக நடந்து வந்தான் பாண்டி..

” சீக்கிரம் வா. நேரமாச்சு..”, என்று கூறினாள் தீபா..

எதுவும் பேசாமல் இருவரும் வீட்டை வந்தடைந்தனர்.

“கண்ணு .., தண்ணி கொண்டுவந்துட்டியா..”, என்று சந்தோஷப்பட்டார் பாக்கியம்.

“ஆமாம் “.., என்று கூறி விட்டு கோபமாக உள்ளே சென்றாள் தீபா.

என்ன நடந்திருக்கும் என்று பாக்கியத்தால்  கணிக்க முடியாதா???

“அம்மா கஞ்சி போடு பள்ளிக்கூடத்துக்கு போகணும்.. “, என்று கூறி கொண்டே சீருடை அணிந்து கொண்டு பள்ளிக்கு தயாரானாள்..

பாண்டியும் , தீபாவும் கஞ்சி குடித்து விட்டு பள்ளிக்கு  கிளம்பினார்கள்.

அவர்கள் வசிக்கும்  பகுதிக்கு எதிர் பக்கம் தான் பள்ளிக்கூடம் .. அந்த சாலையை கடந்து சாலை ஓரமாக நடந்தனர்.

 

“அக்கா அங்க பாரேன்..”, என்று கூறினான் பாண்டி.

இருவரும் வாயைப்பிளந்து பார்த்தனர்.

அங்கு அழகுக்காக செயற்கை நீரூற்று வைக்கப்பட்டிருந்தது.

“காலைல இங்கயே தண்ணீ புடிச்சிருக்கலாம்..” , என்று ஆலோசனை கூறினான் பாண்டி..

“நம்மள உள்ளேயே விட மாட்டாங்க ..” , என்று கூறினாள் தீபா.

“ஏன் ? “, என்று கேட்டான் பாண்டி.

இதற்கெல்லாம் பதில் தெரியாத தீபா அமைதியாக நடந்தாள்.

“அக்கா நேத்து பார்த்த கார் …”, என்று கூறினான் பாண்டி.

“இப்ப நீ வரியா? வரலையா?”, என்று கோபமாக கேட்டாள் தீபா..

“அக்கா இவ்வளவு பெருசா இருக்கே என்னது இது? நீ தான் நல்லா படிப்பியே , என்ன எழுதிருக்கு னு பார்த்து சொல்லு.”, என்று கேட்டான் பாண்டி.

“வெல்கம் டு விக்ரம் ஆட்டோமொபைல்  இண்டஸ்ட்ரீஸ்.. இது தான் போட்ருக்காங்க.”, என்று கூறினாள் தீபா.

“இவங்களுக்கு கரண்ட் இருக்கு பாரேன்”, என்று கூறினான் பாண்டி.

“அவங்க பணக்காரங்க “, என்று ஒற்றை வார்த்தையில் முடித்தாள் தீபா.

“கரண்ட் , தண்ணி எல்லாமே காசு இருக்கிறவங்களுக்கு மட்டும் தானா? “, என்று கேட்டான் பாண்டி..

“ஆம்.. நல்லாபடி.. நல்ல வேலைக்கு போலாம்… நிறைய காசு கிடைக்கும் .. தண்ணி, கரண்ட் னு எல்லாமே வாங்கலாம் “, என்று கூறினாள் தீபா.
பள்ளிக்கூடத்திற்கு செல்பவர்களை தொந்திரவு செய்யாமல் விக்ரம் இண்டஸ்ட்ரிக்குள் செல்வோம்.

 

விழாவிற்கான ஏற்பாடு மிகவும் விமரிசையாக இருந்தது. விக்ரமின்  தாய் கம்பீரமாக முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். அங்கு நடப்பவற்றை உன்னித்து கவனித்து கொண்டிருந்தார். விக்ரம் கோட்சூட் அணிந்து பிரமாதமாக காட்சி அளித்தான்.. ரமேஷ் அங்கும் இங்கும் சுறுசுறுப்பாக அலைந்து கொண்டிருந்தான்.

திவ்யா ஜீன் – டீ ஷர்ட்டோடு வந்திருந்தாள். தலை முடி அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தது,

“ரமேஷ், உண்மையா வேலை பாக்கறியா..இல்ல சும்மா அங்க இங்க சுத்திகிட்டு இருக்கியா..?”, என்று கேட்டாள் திவ்யா.

அவளிடம் சண்டைக்கு தயாரானான் ரமேஷ்.

” இத்தனை பேர் வர இடத்துக்கு நல்ல டிரஸ் போட்டுட்டு வர கூடாதா?”, என்று வினவினான்.

“இதோ பார்.. எனக்கு அட்வைஸ் பண்ற வேலையெல்லாம் வச்சிக்காத.. என் வசதிக்கு ஏற்ப தான் உடை அணிய முடியும்.”, என்று கறாராக கூறினாள் திவ்யா.

“நேத்து எப்படி கரண்ட் வந்துச்சு..? இன்னும் அந்த பகுதிக்கு வந்த மாதிரி தெரியலியே..”, என்று கேட்டாள் திவ்யா.

“இது உனக்கு இப்ப தேவையா? போ. போய் வேடிக்கை பாரு..”, என்று கூறினான் ரமேஷ்.

“ரமேஷ்”, என்று அழைத்தான் விக்ரம்.

பெண்களோடு அவ்வளவு பேசாத ரமேஷ் ஒரு பெண்ணோடு பேசுவது விக்ரமுக்கு ஆச்சரியத்தை அளித்தது.

அதற்கு மேல் சிந்திக்க விக்ரமிற்கு நேரமில்லை.

“ரமேஷ்  எல்லாம் சரியா போயிட்டு  இருக்கா..?”, என்று வினவினான் விக்ரம்.

 

“எஸ் சார்” , என்று உறுதியாக தலை அசைத்தான் ரமேஷ்.

“பத்திரிகையாளர்கள் வர நேரம் ஆகிருச்சு.. நேத்து விஷயம் எதுவும் வெளிய தெரியாம பாத்துக்கோ”, என்று கூறினான் விக்ரம்.

“சரி “, என்றான்  ரமேஷ்.

நடக்கும் அனைத்தையும் அங்கு இருக்கும் தூணிற்கு பின் நின்று கேட்டுக் கொண்டிருந்தாள் திவ்யா.

“ஏன்? விக்ரம் அப்படி கூறுகிறான்”,  என்று சிந்தித்தாள் திவ்யா…

நாமும் அதே சிந்தனையுடன் காத்திருப்போம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!