VNE36(2)

VNE36(2)

பார்வையிலேயே அனைவரையும் மிரட்டிய அந்த ஷ்யாம் எங்கே போனான் என்று தேடினான் கார்த்திக்.

“சார் என்னத்தை தேடறீங்க?” என்று கேட்க,

“இல்ல மத்தியானம் ஒரு மானஸ்தன் இருந்தான்… அவனை காணலை…” என்று கிண்டலடிக்க,

“தேடாத அவன் கிடைக்க மாட்டான்… என் பொழப்பு உனக்கு சிரிப்பா இருக்கா?” சிரித்தபடி இருவருமே ஒருமைக்கு மாறியிருந்தார்கள்.

“விஜி கிட்ட கூட நீ இவ்வளவு பேசல மச்சான்…” கார்த்திக் கிண்டலாக கூற,

“அவன் மனுஷன்…” என்று சலிப்பாக கூற,

“அப்ப இந்தம்மா?” தங்கையை காட்டி சிரித்துக் கொண்டே கேட்க,

“தெய்வம்..” என்று மேலே பார்த்து கையெடுத்து வணங்கியவன், “ஏடு கொண்ட்ல வாடா…” என்று வேண்ட, யோசித்துக் கொண்டிருந்த மஹாவுக்கு ஞானோதயம் வந்து,

“டேய் அண்ணா… யார் அது விஜி?” என்று தமையனை கேட்டாள். அவள் மறந்து விட்டாள். அவனை நினைவே இல்லை.

கார்த்திக்கும் ஷ்யாமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களின் முகத்தில் மெல்லிய சிரிப்பு.

‘டேய் உன்னோட பேர் கூட அவளுக்கு தெரியாதுடா….’ என்று கூறிய ஷ்யாமின் வார்த்தைகள் கார்த்திக்கின் காதில் ஒலித்தது. தங்கையை எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறான் என்று சற்று கர்வமாக கூட இருந்தது. சிலபல தவறுகள் இருந்தாலும், இவனை காட்டிலும் இன்னொருவன் மகாவை புரிந்து கொள்ள கிடைப்பானா என்பது சந்தேகம் தான். தானே தேர்ந்தெடுத்தால் கூட, அவன் ஸ்த்ரீலோலனாக இருக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்? இவனிடம் உள்ள வெளிப்படைத் தன்மை அவனிடம் இருக்குமா? நிச்சயமாக இருக்காது என்று உறுதியாக கூறியது மனது.

அவனையும் அறியாமல் ஷ்யாமை பார்த்து சொந்தத்தோடு உரிமையாக சிரித்தான்.

“விஜி யாருன்னு உனக்கு தெரியாதா லட்டு?” கார்த்திக் கேட்க,

“இல்லையே? ஏன்? இவனோட புது கேர்ள் ஃப்ரெண்டா?” ஒருமாதிரியான குரலில் கேட்க,அவசரமாக மறுக்க முயன்ற கார்த்திக்கை தடுத்த ஷ்யாம்,

“ஆமா லட்டு… என்னோட புது கேர்ள் ஃப்ரென்ட் தான்…” என்று கூற,

“அப்படீன்னா அவளை கூட்டிட்டு போடா… என்னை ஏன் இப்படி தொந்தரவு பண்ற?” கடுப்பாக கூறினாள் மஹா.

“வாவ்… குட் ஐடியா… என்ன மச்சான்… விஜிக்கு சேலை கட்டி விட்டுடலாமா?” என்று கார்த்திக்கை பார்த்து கண்ணடிக்க,

“பண்ணாலும் பண்ணுவ மச்சான்…” என்று சிரித்தான் கார்த்திக். மகாவிடம் திரும்பியவன், “லூசு… ஷ்யாம் கூடவே இருப்பான்ல…” என்று எடுத்துக் கொடுக்க, அவளுக்கு நினைவு வந்தது.

“ஓ அந்த அல்லக்கையா?” என்றதும், இருவருமே குபீரென்று சிரித்து விட,

“ஓய்… என்னோட பி ஏவ பார்த்தா உனக்கு அல்லக்கை மாதிரி தெரியுதா?” என்று சிரித்துக் கொண்டே கேட்க,

“நீதான் மெச்சிக்கணும் உன்னோட அல்லக்கையை… ஆளும் அவன் மூஞ்சியும்… அவன் முழியும் சரியில்லை… பார்வையும் சரியில்லை…” என்று கடுப்பாக கூறி விட்டு, “உனக்கு வேற உருப்படியான பிஏ வே கிடைக்க மாட்டானா?” என்று கேட்க, ஷ்யாமின் முகத்தில் அத்தனை புன்னகை. அவன் கூறியதை போல விஜியை அவள் பொருட்டாக கூட நினைக்கவில்லை என்பது அவனது மனதுக்கு அவ்வளவு நிம்மதியை தந்தது.

காதலை சொல்லும் போது கூட, விஜயாக இருந்தால் மகாவை நிம்மதியாக வைத்துக் கொள்வான், தன்னுடைய காதல் அவளை கண்டிப்பாக காயப்படுத்தும் என்று தான் எண்ணினான். காதலை சொல்ல யோசித்தான். ஆனால் எப்போது முத்தமிட்டானோ அப்போது உணர்ந்து கொண்டான், மஹாவை விட்டு விட முடியாது என!

முடிவு செய்து கொண்டாலும் இப்போது வரை அந்த குற்ற உணர்வு அவனது மனதை அழுத்திக் கொண்டிருந்தது. அவன் மேல் நடவடிக்கை எடுக்க அத்தனை யோசித்தான். அவனது அத்தனை யோசனையும் மகாவுக்காக மட்டுமே. ஆனால் அவனது அத்தனை குற்ற உணர்வையும் மஹா ஒற்றை வரியில் இல்லாமல் ஆக்கியிருந்தாள்.

‘நீ இப்படி சொன்னதுக்காகவே உனக்கு என்ன வேண்ணாலும் பண்ணலாம் குல்பி…’ என்று எண்ணிக் கொண்டு,

பிருந்தாவிடம் திரும்பியவன், “பிருந்தா… ஒரு ஹெல்ப் பண்ணுமா…” என்றவன், “கொஞ்சம் கிராண்டா ஒரு டைமன்ட் நெக்லஸ்… மேச்சிங் ஆக்சசரிஸ்… எடுத்து வைமா… இந்த லூசை என்ன பண்றதுன்னு பாக்கறேன்…” என்றவன், மகாவின் கையை இழுத்துக் கொண்டு போக பார்க்க,

“ஷ்யாம்… கையை விடு…” பொது இடத்தில் வைத்து இப்படி செய்கிறானே என்ற எரிச்சலில் கடுப்பாக கூற,

“இன்னும் உன்கிட்ட கெஞ்சிட்டு இருந்தா அங்க பங்ஷன் முடிஞ்சு போய்டும்…” என்றவன், கால் மணி நேரத்தில் அவளை அழைத்துக் கொண்டு திரும்பி வந்தான். கையில், சேலையோடு!

பிருந்தாவிடமிருந்து நகைப் பெட்டியை வாங்கி அவளிடம் கொடுத்தவன், கார்த்திக்கின் தனிப்பட்ட அறையில் அவளை தள்ளிவிட்டு,

“பத்து நிமிஷத்துல கிளம்பி வர்ற மஹா… லேட் ஆகுது…” கறாராக கூறியவன், நிமிடத்துக்கு ஒருமுறை கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.

சரியாக பத்து நிமிடத்தில் அந்த பிங்க் நிற சேலையணிந்து, பிருந்தா எடுத்து வைத்த நகைகளை அணிந்து இறுக்கமாக பின்னிய தலைமுடியை தளர பின்னி, தயாராக இருந்த ஜாதி மல்லியை வழிய விட்டுக் கொண்டு, இடது கையில் அந்த வேலைப்பாடமைந்த தங்க கடிகாரத்தை அணிந்தவாறே வந்தவளை பார்த்து இப்போது மூச்சு விட மறந்தது ஷ்யாம் தான்.

அதிலும் அந்த பிங்க் நிற ஜார்ஜெட் சேலைக்கு அவசரமாக சேர்க்கப்பட்ட அந்த சிறிய கை வைத்த தங்க நிற ப்ளவுஸ் அழகாக பொருந்தி போக, அந்த நிறத்துக்கும் அவளது நிறத்துக்கும் வேறுபாடே தெரியவில்லை.

ஒற்றையில் வழிய விட்டிருந்த புடவையில் அவன் மொத்தமாக வீழ்ந்திருந்தான்.

“கார்த்திக் கிளம்பிட்டியா?” என்றவள், அவசரமாக ஷ்யாம் புறம் திரும்பி, “என்னடா ஓகே வா?” என்று கேட்க, சொல்லாமல் கொள்ளாமல் தலையாட்டினான்.

அவன் எதுவும் கூறவில்லையே என்று நிமிர்ந்தவள், “என்னடா ஒன்னும் சொல்லலை?” என்று கேட்க, குறும்பாக புன்னகைத்தவன், கார்த்திக்கையும் ஓரக்கண்ணால் பார்த்தபடி,

“வசனமாடா முக்கியம்? படத்த பாருடா…” என்று விவேக்கின் குரலில் கலாய்க்க, கேட்ட பிருந்தாவுக்கும் கார்த்திக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. வெடித்து சிரிக்க, அவனது அந்த வசனத்தையும் அவர்களது சிரிப்பையும் கண்டு பல்லைக் கடித்தவள்,

“வேண்டாம்… கார்த்தி முன்னாடி அடி வாங்காத…” ஒற்றை விரலை காட்டி எச்சரிக்கை செய்தவளை, பார்த்து சிரித்தவன்,

“நீ என்ன கொடுத்தாலும் எனக்கு ஓகே டார்லிங்…” என்று கண்ணை சிமிட்ட, இப்போது கார்த்திக் தான் வெட்கத்தோடு சற்று தள்ளிப் போக வேண்டியிருந்தது. அதே வெட்கத்தோடு கார்த்திக்கின் அருகில் வந்த பிருந்தா,

“செம மேட்ச் ல… மகாவுக்கு…” என்று கூற,

“ம்ம்ம்… ஆமா… இதே மாதிரி எப்பவும் இருந்தா போதும்…” மனம் நிறைய கூறியவனுக்கு இன்றைய ஷ்யாம் மட்டுமே நினைவில் இருந்தான். வேறெதையும் நினைவில் வைத்துக் கொள்ளவும் அவன் விருப்பப்படவில்லை.

பிருந்தா அவளது வீட்டுக்கு கிளம்ப, அதே சிரிப்போடும் விளையாட்டோடும் விருது வழங்கும் விழாவுக்கு கிளம்பினர். பிருந்தாவை விட்டுவிட்டு விழாவுக்கு வந்துவிடுவதாக கார்த்திக் அவளை அழைத்துக் கொண்டு கிளம்ப, இவர்கள் இருவருமாக மட்டும் இவனது காரில்!

அந்த இடத்தினுள் நுழைகையில் மகாவுக்கு இதயம் படபடவென அடித்துக் கொண்டது. இது போன்ற விழாக்களுக்கு எல்லாம் பைரவி விட்டதில்லை. தந்தை மட்டும் தான் வருவது. சிறு பிள்ளைகளாக இருக்கும் போது வந்ததாக நினைவு.

இப்போது ஷ்யாம் கூறியதால் அனுமதி கொடுத்திருந்தார். ஆனாலும் இவன் எப்படித்தான் அனைவரையும் மயக்கி விடுகிறான் என்பதுதான் புரியவில்லை. வெட்டுவேன் குத்துவேன் போலீசில் கம்ப்ளைன்ட் செய்வேன் என்று குதித்த கார்த்திக் இப்போது மச்சான் பயிரை வளர்த்துக் கொண்டிருந்தது தான் ஆச்சரியம்!

வரும் வழியெல்லாம் அவளை கண்களால் மென்று தின்று கொண்டிருந்தான் ஷ்யாம், ஒரு வார்த்தையும் பேசாமல்!

அவனது அந்த பார்வை, அவளுக்குள் ஏதேதோ செய்தது.

தோழமை தான் என்று அவனிடம் பிடிவாதம் பிடித்த மனது இப்படியெல்லாம் எண்ணலாமா என்று அவசரமாக அந்த நினைவுகளை அழிக்க முயன்றாள்.

அவனுக்கும் தனக்கும் எந்த விதத்திலும் சரி வரவே போவதில்லை என்று மீண்டும் மீண்டுமாக கூறிக் கொண்டாள்.

‘எனக்கு ஒரு தடவை பார்த்துட்டா சலிச்சு போய்டுது… எதுவா இருந்தாலும்…’ என்று கூறிய ஷ்யாமை வலுகட்டாயமாக நினைத்துப் பார்த்தது மனது. திக்கென்று இருந்தது!

ஆனால் இன்னொரு மனமோ, ஏரியில் வைத்து அவன் தனக்கு கொடுத்த ஆழமான முத்தத்தையும், ‘இன்னைலருந்து நான் உன் ப்ராபர்ட்டி…’ என்றதையும் நினைத்தது.

அவளையும் அறியாமல் அவளது உடல் கூசி சிவக்க, அவளை கண்களால் தின்று கொண்டிருந்தவனை நிமிர்ந்து பார்க்க கூச்சமாக இருக்க, வேறு புறம் திரும்பிக் கொண்டு தன்னை சமன் செய்து கொண்டாள்.

அவன் கூறியதை போல தான் தோழமை என்ற லிமிட்டில் இல்லையோ?

‘ஹிப்போக்ரட்… ஃப்ரெண்டுன்னு சொல்லாத… அந்த லிமிட்ல நீயும் இல்ல… நானும் இல்ல…’ மீண்டும் மீண்டுமாய் அவளது காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

வெட்கத்தில் சிவந்த அந்த முகத்தை அவனுக்கு பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது.

விழா நடக்கும் வென்யுவில் வண்டியை நிறுத்தியவன், அவள் புறம் திரும்பி,

“மஹா…” கிசுகிசுப்பாக அழைத்த அவனது குரலில் தான் எவ்வளவு மயக்கம்!

அந்த மயக்கத்தை அவளுக்கு கடத்தியிருந்தான் அந்த ஷ்யாமளன்!

“ம்ம்ம்…” என்றவாறு அவன் புறம் திரும்ப,

அவளுக்கு அருகில் வந்து, அவளது முகத்தை கையில் ஏந்தி, “ஐ ஃபீல் லைக் கிஸ்ஸிங் யூ…” என்று கிறக்கமாக கூற, இவள் கூச்சத்தில் நெளிய, கைகள் சில்லிட்டது. கண்கள் தாமாக மூடிக் கொள்ள, அதற்கும் மேல் நிதானிக்க முடியவில்லை அவனால்!

உதட்டை எடுத்துக் கொண்டவன், கொஞ்சமும் அவசரப்படாமல், நிதானமாக சுவைக்க, மூச்சுக்காற்றுக்கு தவித்தாள் அவள்!

அவனுக்குள் பூகம்பம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அவளது வெட்கத்தை முழுவதுமாக தின்று தீர்த்து விடும் வேகம் அவனுக்கு. வெறும் முத்தம் யுத்தம் செய்யக் கூடுமா?

அவனுக்குள் நடந்ததே!

சத்தமில்லாமல் ஒரு யுத்தம்!

மெதுவாக அவளை விட்டவன், புருவத்தை உயர்த்தி மென்மையாக புன்னகைத்து, “கொஞ்சம் சரி பண்ணிக்கடி…” என்றவன், தானும் தன்னை ஆராய்ந்து கொண்டு,

“மஹா…” என்றழைக்க, அவளால் நிமிர்ந்து அவனை பார்க்க முடியவில்லை.

“போலாமா?” என்று கேட்க, மெல்ல தலையாட்டினாள்.

பார்க்கிங்கிலிருந்து இறங்கி நடந்து வந்தவர்களை கேமராக்கள் சூழ்ந்து கொண்டது… வெளிச்சங்கள், மின்னி மின்னி மறைந்தது…

உண்மையில் அவள் பயந்து போனாள். அந்த கேமரா வெளிச்சம் புதிது… மிகவும் புதிது… அதிலும் மேலே வந்து விழுந்து விடுவதை போல படம் பிடிக்க, அதில் அவள் இன்னுமே பயந்து பின்னடைய பார்க்க,

திரும்பி அவளைப் பார்த்தவன், கையை பிடித்து இழுத்து, அவளது இடையை தன்னோடு வளைத்துக் கொண்டான். அவளை பாதுகாப்பாக அழைத்து போக வேண்டும் என்பது மட்டுமே அந்த செயலில் தொக்கி நிற்க, அவள் இன்னும் நடுங்கிப் போனாள்.

அதோடு அவளை நடந்தி செல்ல, பார்த்த ஒவ்வொருவரின் புருவமும் உயர்ந்தது.

எத்தனை பழக்கங்கள் இருந்தாலும், பகிரங்கமாக யாரையுமே அழைத்து வந்தது இல்லை. முதன் முறையாக ஒரு பெண்ணோடு ஷ்யாம் வந்திருக்கிறான் என்பது அந்த விழாவில் தலைப்பு செய்தியானது.

“சர்… மேடமை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்…” மகாவை காட்டி நிருபர்கள் கேட்க, பதில் கூறாமல் புன்னகையோடு கடந்து செல்ல முயன்றான்.

“சர்… எப்ப கல்யாணம்?” என்ற வகையான கேள்விகளுக்கும் அவன் பதில் கூறவில்லை.

“சர்… சௌஜன்யா அவ்வளவு தானா?” ஒரு நிருபர் கோக்குமாக்காக கேட்டு வைக்க, சௌஜன்யாவா? அது யார் என்று தான் எண்ணினான்.

“சௌஜன்யாவா, அது யார் பாஸ்?” என்று பதிலுக்கு இவன் கேட்க, தலைகுனிந்தபடி இதை கேட்டுக் கொண்டிருந்த மகாவுக்கு உண்மையில் அந்த கேள்வியால், அவள் அடுப்பின் மேல் அமர்ந்ததை போல இருந்தது. இன்னொரு பெண்ணோடு அவனது பெயர் சேர்ந்து ஒலிப்பதை கூட அவள் விரும்பவில்லை. அவளிடம் அவன் எதையுமே மறைக்காமல் கூறியிருந்தாலும், அந்த களம் அவளுக்கு பதட்டத்தை கொடுத்தது. பிடிக்கவில்லை. தனக்கு மட்டுமே சொந்தமான பொருளை விட்டுக் கொடுக்க முடியாத, விட்டுக் கொடுப்பதையும் நினைக்க முடியாத நிலையில் இருந்தாள் மஹா!

“என்ன சர்… இப்படி கேட்டுட்டீங்க?” என்று அந்த நிருபர் வியக்க,

“பாஸ்… நம்ம ஹோம் மினிஸ்ட்ரி பக்கத்துல இருக்காங்க… குடும்பத்துல கும்மி அடிக்க பார்க்கறீங்களே…” என்று சிரித்தவனை பார்த்து அங்கிருந்த அனைவருமே சிரிக்க, மெல்ல அங்கிருந்து நழுவினான்.

கேமராக்களிடமிருந்து தப்பித்து இருக்கையை நோக்கி வந்தவனை, பார்ப்பவர்கள் அனைவருமே மரியாதையாக எழுந்து நின்று வணக்கம் தெரிவிக்க, அனைத்தையும் சிறு புன்னகையோடு ஏற்றுக் கொண்டு சென்றான். அனைத்தையும் ஒரு ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்த மகாவுக்கு ‘சௌஜன்யா’ என்ற பெயர் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

விழா அமைப்பாளர்கள், அவசரமாக வந்து அவர்களது இருக்கைக்கு அழைத்துப் போக, ஷ்யாம் மகாவின் கைகளை விடாமல் பற்றியபடி இருந்தான்.

அவர்கள் இருவரையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்,

சௌஜன்யா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!