Thanjam mannavan nenjam 22

Thanjam mannavan nenjam 22

அத்தியாயம் 22

பூங்காக்களிலும் கண்காட்சிகளிலும் சிறு குழந்தையாய் ஆட்டம் போட்டவள் ஸ்ரீசக்ர மகாமேரு ஆலயத்திற்குச் சென்ற போது ‘அந்த மதுமதி தானா இவள்’ என்று வெற்றிவேலை ஆச்சரியப்பட வைத்தாள்.கண்களை மூடி கைகளைக் கூப்பித் தியானத்தில் அமர்ந்திருந்தவளைக் கண்டு எப்போதும் போல ‘இவளுக்குத்தான் எத்தனை குணங்கள்’ என்று அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை.எல்லா நிறங்களையும் உள்ளடக்கி இருந்தாலும் தூய்மையான வெண்மை நிறமே வெளிப்படுதல் போல… பல்வேறு குணங்களைத் தன்னகத்தே கொண்டிருந்தாலும் எப்போதும் அவளிடம் இருந்து வெளிப்படும் அந்தச் சாத்வீக குணத்தை மிகவும் நேசித்தான் வெற்றிவேல்.

சேர்வராயன் மலைக்குச் சென்று விட்டு,இறுதியாக எமரால்டு ஏரிக்குச் சென்றனர்.மிதி படகு ஒன்றினை எடுத்துக்கொண்டு இருவரும் ஏரியைச்

சுற்றி வந்தனர்.படகில் எதுவும் கோளாறோ என்னவோ… ஏறியதிலிருந்தே படகு மதுமதியின் பக்கம் சற்று சாய்வாகத் தான் இருந்தது.படகில் சவாரி செய்யும் உற்சாகத்திலும்,தலைக்குமேல் தெரியும் பனிப்புகையின் குளுமைமையிலும்,கடந்து செல்லும் செடி கொடிகளை வருடுவதிலும் ஆர்வமாக இருந்துவிட்டவள்…இதனை கவனிக்கவில்லை.

கண் மூடி அந்தச் சுகானுபவத்தை ரசித்துக் கொண்டிருந்த மதுமதியின் முகத்தில் தெளிக்கப்பட்ட நீர்த்துளிகள் அவளை இவ்வுலகிற்கு அழைத்து வந்திருந்தன. கண்களைத் திறந்து தன்னை முறைத்தவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான் வெற்றிவேல்.

“ஏன்…என் மேல தண்ணி தெளிச்சு விட்டீங்க” என்றாள் முகத்தைத் துடைத்தவாறே.

“ அப்புறம்…ஏற்காட்டுக்கு தூங்கவா வந்த” என்றவனிடம்

“ நான் தூங்கல…காம்மா என்ஜாய் பண்ணிட்டு இருந்தேன்…அதக் கெடுத்து விட்டுட்டீங்கல்ல…இருங்க…இப்ப என்ன பண்றேன்னு பாருங்க…”என்று அவள் தண்ணீரைக் கைகளால் அள்ள படகின் மறுபுறம் சாய்ந்தாள்.இதனால் கணம் அவள் பக்கம் இழுக்கப்பட்டுப் படகினுள் நீர் புக ஆரம்பித்தது.

வெற்றிவேல் அவள் மேல் நீரை இறைப்பதும்,மதுமதி அவன் மீது இறைப்பதுமாக இருந்ததில் இதனைக் கவனிக்கத் தவறி இருந்தனர்.ஆனால் வெற்றிவேல் இதனைக் கவனித்த போது பெருமளவு நீர் படகினுள் புகுந்திருந்தது. விரைவாகப் படகினை அதன் இருப்பிடம் நோக்கிச் செலுத்துவதற்குத் திருப்பியிருந்தாலும்,ஏற்கனவே மதுமதி பக்கமாகச் சாய்ந்து விட்டிருந்த படகு நீர் உட்புகுந்ததன் காரணமாக அதன் இருப்பிடத்தை அடையும்போது அவளைத் தண்ணீரில் கவிழ்த்து விட்டிருந்தது.

வெற்றிவேல் எவ்வளவோ வற்புறுத்தியும் அழுக்காக, அலங்கோலமாக இருந்த பாதுகாப்பு மிதவை ஆடையையும் அணிய மறுத்திருந்தாள் மதுமதி.ஏரிக்குள் மதுமதி விழுந்த மறுநொடியே நீருக்குள் பாய்ந்தவன் அவளது கூந்தலைப் பற்றி மேலே இழுத்து வந்திருந்தான்.அதற்குள் மதுமதி பெருமளவு நீரைக் குடித்து இருந்தாள்.

அவள் வயிற்றை அழுத்தி தண்ணீரை வெளியேற்றி விட்டு,அவளது உள்ளங் கைகளையும் கால்களையும் ‘பர பர’வெனத் தேய்த்தவன் அவள் கண்களைத் திறக்கும்வரை தன் உயிரைத் தொலைத்தவனைப் போல “மது கண்ணத் திறடா…என்னப் பாரு…உனக்கு ஒண்ணும் ஆகாது…கண்ணத் தெறந்து பாரு பூனைக்குட்டி…” என்று புலம்பியவாறே தவித்துப்போனான்.

அவனை மேலும் சில நிமிடங்கள் பயமுறுத்தி விட்டுத் தான் கண் விழித்தாள் மதுமதி.அவள் கண்விழித்ததும் அவளை வாரி அணைத்துக் கொண்டான் வெற்றிவேல்.அவன் தலை முடியில் இருந்து வழிந்த நீர்த்திவலைகளோடு அவன் கண்ணீரும் கரைந்து போனது.

அவள் இருமல் சத்தம் கேட்கவே அவளுக்கு இப்போது நல்ல காற்றோட்டம் தேவை என்பதை உணர்ந்து அவளை விட்டு விலகினான்.

அங்குக் கூடியிருந்த மக்களுள் ஒரு வயதான பெண்மணி,”அம்மாடி…உன் புருஷன் தான் ரொம்பத் தவிச்சுப் போயிட்டான்.நீ கண்ண முழிக்கிற வரைக்கும் அவன் உசுரு அவங்கிட்ட இல்ல…நீங்க ரெண்டு பேரும் பிரியாமல் இதேபோலப் பாசமா,சந்தோசமா இருக்கணும்…”என்று விட்டுச் சென்றார்.

முதலில் புரியாமல் விழித்தவள் பின்பு ‘ஓ…இவங்க எங்களை ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்னு நினைச்சுட்டாங்க போல’என்று எண்ணியவள் அங்கிருந்தவர்களின் நல விசாரிப்புகளுக்குப் பதிலிறுத்துவிட்டு வெற்றிவேலைத் தேடினாள்.

அவன் அங்கே அவளுக்கு முதுகு காட்டி நின்று எங்கோ தூரத்தில் தெரிந்த மலைமுகட்டை வெறித்துக் கொண்டிருந்தான்.இன்னமும் அவனது உடல் நடுங்கிக் கொண்டு தானிருந்தது. சுமார் 47 அடி ஆழம் உள்ள ஏரியில் அவள் விழுந்த அந்த நொடி அவன் மனதை விட்டு அகலாமல் அவன் உடலை அதிரவைத்துக் கொண்டிருந்தது.அதனை நினைத்து நினைத்து கலங்கி போயிருந்தான் வெற்றிவேல்.

“வெற்றி மாமா…கிளம்பலாமா”என்ற மதுமதியின் குரல் அவனைக் கலைத்தது. “ம்ம்ம்”என்று நடக்கத் துவங்கியவனிடம் “தேங்க்ஸ்” என்றாள் மதுமதி.’எதற்கு’ என்று புரியாமல் பார்த்தவனிடம்

“என்னைத் தண்ணிக்குள்ள குதிச்சு காப்பாத்தினீங்கல்ல அதுக்குத்தான்” என்றாள்.

“ம்ப்ச்…ஏய் லூசு…காப்பாத்தாம என்ன செய்வாங்க…கைக்கு வாய் தேங்க்ஸ் சொல்லுமா” என்றான் அவளை முறைத்தவாறே.

“அந்தக் கையும் வாயும் வேற வேற உடம்புல இருந்தா தேங்க்ஸ் சொல்லித்தான் ஆகணும்” என்று இலகுவாகச் சொல்லிக் கொண்டிருந்தவளைத் திருப்பி நொடிப்பொழுதில் கட்டியணைத்து அவள் கைகளைப் பிணைத்து இருந்தான் வெற்றிவேல்.

“ இப்பச் சொல்லுடி…நீயும் நானும் வேற வேறயா…”

சட்டென்று நிகழ்ந்துவிட்ட அந்த நிகழ்வை அவளால் நம்பவே முடியவில்லை.அதற்கும் மேலாகக் காற்றுக் கூடப் புக முடியாத அளவு நெருக்கத்தைத் தந்திருந்த வெற்றிவேலின் ஸ்பரிசத்தில் அவளுள் இருந்த பெண்மை விழித்துக்கொண்டது… அதை விட அவனது ஸ்பரிசத்தை… அந்த அணைப்பை…அவள் உடலும் மனமும் விரும்பியேற்றது அவளுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தைத் தந்தது…ஏற்கனவே ஈர உடையில் நடுங்கிக் கொண்டிருந்தவள் அவனது இந்தச் செய்கையால் மேலும் தடதடத்த தேகத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“இன்னுமாடி புரியல…என் மனசு உனக்கு இன்னுமா புரியல…என்னால நீ வேற நான் வேறன்னு நினைக்க முடியலையேடி…நீயே சொல்றது போல நம்ம ரெண்டு பேருக்கும் உடம்பு தனித்தனியாய் இருந்தாலும் நீ தண்ணிக்குள்ள விழுந்ததும் எனக்கு வலிச்சுச்சே…உயிரே போன மாதிரி வலிச்சுச்சே…இதுக்குப் பேரு என்னன்னு உனக்குத் தெரியலையா…சொல்லுடி தெரியலையா…” என்று அவளை உலுக்கினான்.

error: Content is protected !!