Thendral’s Kandharva Loga 37

கந்தர்வ லோகா  37

விஷ்வா இப்போது லோகாவின் நினைவு வர, அவள் என்ன செய்து கொண்டிருப்பாளோ என்று கண்ணை மூடி அவளை நினைக்க ஆரம்பித்தான். எப்போதும் அவளது எண்ணங்களை படிக்க முடிந்த அவனால் இப்போது மனதும் செயலும் ஒன்றும் மனதிற்கு எட்ட வில்லை.

மறுபடி தாங்கள் விளையாடும் அந்த விளையாட்டைப் போல அவள் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்று எண்ணங்களால் அவளைத் துழாவ, எதுவும் அவனுக்குப் பிடிபடாமல் இருந்தது.

ஏன் இப்படி நடக்கிறது என்று மனதில் குழம்பிக்கொண்டிருந்தான். ஒரு நாளும் இப்படி ஆனதில்லை. அவள் கல்லூரியில் இருக்கும் போது கூட இவன் கம்பனியில் இருந்து கொண்டு அவளை நினைத்தால், அவள்  விளையாட்டுத் தனமாக பாடத்தை கவனிக்காமல் மனதில் பாட்டுப் பாடுவது கூட அவனுக்குத் தெரியும்.

அந்தக் குறும்புடன் சுற்றித் திரியும் லோகா அவன் மனதிற்கு எப்போதும் மயில் தோகை தீண்டியது போல ஒரு இதத்தைக் கொடுப்பாள். ஆனால் இன்று அவளின் நிலை அறியாமல் அவன் போராடிக் கொண்டிருந்தான்.

அவனின் மனக்கலக்கம் அன்று உண்பதற்கு பழங்களைக் கூட பறிக்க மறந்து ஓரிடத்தில் அவனை அமர வைத்திருந்தது. நேரம் ஆனதால் அவனைத் தேடி வந்த குருஜி, அவன் நிலை கண்டு அவன் மனதைப் படிக்க,

அவருக்கு நன்றாகப் புரிந்தது. லோகாவின் தற்போதைய நிலையையும் அவர் அறிந்தே இருந்தார். ஆனால் நடப்பவை நடந்தே தீரும், விஷ்வாவிடம் இப்போது இதைச் சொல்வதினால் , தெளிந்த நீரோடை போல் ஆகிக் கொண்டு வரும் வரும் அவனது மனோசக்திகள் அனைத்தும், ஒரே நிமிடத்தில் மீண்டும் கலங்கிய குளம் போல ஆகிவிடும் என்பதையும் அவர் அறிவார்.

லோகாவினைக் காக்க பாட்டி இப்போது வேறு வழியில் முயற்சிப்பதும் அதனால் அந்த கந்தர்வன் சற்று குழம்பிய நிலையில் இருப்பதையும் அவர் உணரத் தவறவில்லை.

ஆகவே இப்போது விஷ்வாவை தனது குறிக்கோளில் வெற்றியடைய வைப்பதே சாலச் சிறந்தது என்ற முடிவிற்கு வந்தார்.

அவன் அருகே சென்று அவனை தட்டி எழுப்ப,

“ குருஜி! “ தெளிவில்லாமல் விளித்தான்.

“என்ன விஷ்வா! நீண்ட யோசனையா? “ லேசான புன்னகையுடன் அவர் கேட்க,

“ இல்ல குருஜி! உங்களுக்குத் தெரியாததா… லோகாவைப் பத்தி தான் நினச்சுட்டு இருந்தேன். ஆனா அவள மனத்தால நெருங்க முடியல. அது தான் ஒரே குழப்பமா இருக்கு. எப்போது நினச்சாலும் அவள என்னால உணர முடியும். ஆனா இனிக்கு ஏதோ வித்தியாசமா இருக்கு. எனக்கு அவளைப் பத்தி கொஞ்சம் பத்தட்டமாவே இருக்கு. உங்களுக்குக் கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். சொல்லுங்க குருஜி!” அவனது இந்த நேரடிக் கேள்வியில் என்ன சொல்வது என்று புரியாமல் திணறினார் குருஜி.

அவனும் இப்போது எல்லாவற்றிலும் தேர்ச்சி பெறுகிறான், அதனால் அவனுக்கு சிலது நன்றாவே புரிந்தது. அவனுக்கு சமாதனம் சொல்ல,

“ ஏன் விஷ்வா குழப்பம். லோகா பத்திரமா இருக்கா. அவளுக்கு இப்போதிக்கு ஆபத்து இல்லை. நீ உன்னோட பயிற்ச்சியை முடிக்க , அஞ்சு சக்கரங்களைத் தெளிவாக்கணும். அதுக்கப்பறம் அந்த கந்தர்வனை மீறி உன்னை நினைக்க வைக்கற சக்தி உனக்கு வந்துடும். அதுனால இப்போ அதுல மட்டும் கவனமா இரு.” அவனைத் திசைத் திருப்ப,

“ எனக்கு அவ்வளவு நாள் பொறுமையா இருக்க பயமா இருக்கு. நிச்சயம் அந்த கந்தர்வன் நம்ம செயல தெரிஞ்சிகிட்டு இருப்பன். அதுனால இந்த நேரத்தை தான் லோகா வை கைப்பற்ற தக்க தருணமாக நினைத்திருப்பான். இன்னும் அஞ்சு நாள்ல என்ன வேணா நடக்கலாம். எனக்கு கிடைக்கற சக்தி பயன்படாமலே போய்டக் கூடாதுன்னு நினைக்கறேன். “ அவன் மிக தெளிவாகவே யோசித்தான்.

அவன் சொல்வதும் சரியென்றே பட்டது குருஜிக்கு. ஆனாலும் இந்தப் பயிற்சி அவன் எளிதில் வென்றாலும், முழுதாக ஒரு நாள் அவனது மனமும் மூளையும் ஓய்வு எடுத்தால் தான் அந்த சக்கரத்தின் வீரியம் அவனைத் தாகாமல் இருக்கும். இல்லையென்றால் அவனுக்கு மூளையில் அதிக எண்ணங்கள் ஓடி அதை செயல்படாமல் செய்துவிடுமோ என்று அஞ்சினார். அதை அவனுக்கு விளக்கவும் செய்தார்.

 “ நீ சொல்றது எனக்குப் புரியுது விஷ்வா.  இருந்தாலும் இதை ஒரே மூச்சில் செய்வது மிகவும் ஆபத்தானது. உனோட மூளைய தான் பாதிக்கும். ஒரு அளவிற்கு மேல மூளைய ஓய்வெடுக்க வைக்கணும். அதை நீ புரிஞ்சுக்கோ.” அவர் சொல்ல, விஷ்வாவின் முகம் போன போக்கு அவன் அதை ஏற்க மறுப்பான் என்பதை சொல்லாமல் சொல்லியது.

“ எனக்கு லோகா முக்கியம் குருஜி! நாம இத சீக்கிரம் முடிக்கணும். என் மூளைக்கு ஒன்னும் ஆகாது. நான் தூங்காம இருந்து இதை செய்யக் கூட தயாரா இருக்கேன். எனக்கு லோகாவை அங்கே தனியா தவிக்க விட்டு தொடர்பே இல்லாம இருக்க ரொம்ப கஷ்டமா இருக்கு. உண்மைய சொல்லணும்னா உடல் மட்டும் தான் இங்க இருக்கு. என் உயிர் எப்பயும் அவளைத் தேடித் தான் சுத்துது. இது ரொம்ப கொடுமையான விஷயம். நாம நேசிக்கறவங்க என்ன செய்யறாங்க , எங்க இருக்காங்கன்னு கூட தெரியாம இருக்கறது.

ப்ளீஸ் குருஜி! என்னை நம்புங்க. என் மூளைக்கு அதிக ஸ்ட்ரெஸ் குடுக்காம நான் பாத்துக்கறேன்.” அவன் கஷ்டத்தை சொல்லி காலில் விழாத குறையாக கெஞ்சிக் கொண்டிருந்தான்.

அவருக்கும் அவனது நிலைமையும் லோகாவின் நிலைமையும் இப்போது மனதைச் சுட , அவனுக்கு சம்மதம் சொன்னார்.

“ சரி விஷ்வா! ஆனா எப்படியும் இதை நீ முழுமையா முடிக்க  ரெண்டு நாள் ஆகும். இனிக்கு ரெண்டு , நாளைக்கு ரெண்டு. சரி போய் குளிச்சுட்டு வா” அவனை அனுப்பிவிட்டு, அவர் மானசீகமாக அவரது குருவிடம் விஷ்வாவின் நலனுக்காக வேண்டிக் கொண்டார்.

***

லோகா இப்போதும் தான் யார் என்ற ஆராய்ச்சியில் இறங்காமல் அதீந்த்ரியனின் மயக்கத்தில் தான் இருந்தாள்.

அவனது உபசரிப்பில் அவனிடம் காதல் தோன்றுமாறு நடந்துகொண்டான் அதீ.

“ அதீ என்ன செய்யற..?”

“ உனக்கு பசிக்குமே லோகா.. உனக்கு பிடிச்ச சாப்பாட எல்லாம் செஞ்சு தரேன். “ அவனது கையால் அறுசுவை உணவை செய்து கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் வந்து அவன் செய்வதை வாசம் பிடித்துக் கொண்டிருந்தாள் லோகா.

அவள் விஷ்வாவுடன் சாப்பிட்ட எதையும் நினைவு படுத்தாதவாறு பார்த்துக் கொண்டான். ஒரு ஸ்பூனை வைத்து அவன் சமைத்த அனைத்தையும் ருசி பார்த்தாள்.

“ ம்ம்ம்.. யம்மி … டேஸ்ட் அள்ளுது.. நான் குளிக்கணும். அப்பறம் தான் நல்லா பசிக்கும். அப்பா தான் இதெல்லாம் ஃபுல்லா சாப்பிட முடியும். நான் குளிச்சுட்டு வரேன்.” என்று பாயசத்தை சுவைத்துத் திரும்ப,

“ ஹே! இரு ! “ அவளது கையைப் படித்து இழுத்து காதலாக அவளது உதட்டையே பார்க்க, இரண்டு நொடிகளுக்கு மேல் அப்பார்வையை தாங்க முடியாமல், வேறு எங்கோ பார்த்தாள்.

“விடு அதீ.. “ வார்த்தைகள் தொண்டைக்குள்ளே சிக்கிக் கொள்ள,

“ ம்ம்.. என்ன சொன்ன.. சரியா கேட்கல.. “காதை அவளது வாயின் அருகே கொண்டு செல்ல, அவனது தலைமுடி அவளது கன்னத்தில் பட்டுக் கூசியது. அவள் சிலிர்த்துத் திரும்ப, அவளை நகர விடாமல் இடையைப் பற்றினான்.

அவளது குனிந்த முகத்தை ஒற்றைக் கையால் நிமிர்த்தி, அவளது இதழின் ஓரம் ஒட்டியிருந்த அந்த பாயசத்தை கட்டைவிரல் கொண்டு அவளது உதட்டோடு பிடித்துத் துடைத்து அதை தன் வாயில் வைத்து சுவைத்தான்.

அவனது செயலில் வெட்கம் வர, அவன் கையிலிருந்து விடுபட்டு அங்கிருந்து ஓடினாள்.

அதை ரசித்தவன், அவள் பின்னே ஓட , அவன் கைக்கு அகப் படாமல் சிறிது நேரம் போக்குக் காட்டி ஓடினாள்.

அன்று ஒரு நாள் அதீ அவளுடன் ஓடி விளையாடுவேன் என்று சொன்னது இன்று நிறைவேறியதை நினைத்து மனதில் அவளிடம் ,

‘ என் விருப்பம் கொஞ்சம் கொஞ்சமா நடக்குது பாரு!’ சொல்லிக் கொண்டான்.

சிறிது நேரம் ஓடிக் களைத்தவள் , ஓரிடத்தில் சரிந்து விழப் போக, வேண்டுமென்றே அவளைப் பிடிக்க முடியாமல் ஓடுபவன் போல போக்குக் காட்டிக் கொண்டிருந்த அதீ, ஒரே எட்டில் அவளைப் பிடித்தான். நிலை தடுமாறி அவன் மேலேயே சரிந்து விழ, அவளை சுகமாய்த் தாங்கினான்.

மூச்சு வாங்கிக் கொண்டு அவன் மேல் கண்மூடிப் படுத்திருந்தாள்.  அவனது கைகள் அவளது முதுகை வருடிக் கொடுக்க, அவன் சுதாரிப்பதற்குள் எழுந்து ஓடி பாத்ரூமிற்குள் புகுந்தாள்.

சிரித்துவிட்டு அவளுக்கான உணவுகளை எடுத்து வைக்கச் சென்றான்.

**

பாட்டி இப்போது தனது விரதத்தை ஆரம்பிக்க கோயில் உள்ளே அமைந்த கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்தார். அவருடைய வீட்டில் வேலை செய்த பெண்கள் வந்து அவருக்குத் தலையில் நீர் ஊற்றி ஆரம்பிக்க, அந்த ஈரப் புடவையுடனேயே கோவிலை சுற்றி அடிப்பிரதர்ஷனம் செய்ய ஆரம்பித்தார்.

பூசாரி தனது மகனை இரண்டு நாட்கள் வீட்டில் இருக்குமாறு சொல்லிவிட்டு, அவரே கோயில் வேலைகளை செய்ய ஆரம்பித்தார். தன்னுடைய தெய்வம் மீண்டும் வந்து காட்சி கொடுக்கப் போகும் மகிழ்ச்சியில் அனைத்தையும் செய்தார்.

பாட்டி தன் உடல் நிலையைப் பற்றிக் கூட கவலைப் படாமல், அந்த மாலை வேளையில் சில்லென்ற காற்றில் உடல் நடுங்க, ஒவ்வோறு அடியையும் பக்தியுடன் எடுத்து வைத்தார்.

போகப் போக அவருக்குள் ஒரு புது தெம்பு தோன்ற ஆரம்பித்தது. சோர்வாக இருந்த கண்கள் இப்போது புத்தொளியில் மின்னியது . கால்கள் வேகம் கூடியது.

பூசாரி கோயிலில் உடுக்கை அடிக்க, அவருக்கு உடல் முறுக்கேறியது. மேளம் அடிக்க ஆரம்பித்தனர். லோகா தான் பொங்கல் வைக்க வேண்டும்; அவள் இல்லாததால் பாட்டி அதனைச் செய்ய வேண்டும் என்று புதுப் பானை, அடுப்பு மற்ற உணவுப் பொருட்கள் அனைத்தையும் தயாராக வைத்திருந்தனர்.

அதே நேரம் அங்கே கந்தர்வன் , லோகாவிற்கு தான் சமைத்த உணவை

ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தான்.

அவனும் அனைத்தும் அறிந்து தான் இருந்தான். இருப்பினும் ஒரு அசாத்திய தைரியம் அவனை ஆட்கொண்டிருந்தது. எப்படியும் லோகாவை அன்றிரவே தனதாக்கிக் கொள்ள திட்டமிட்டிருந்தான்.

லோகா கனவுலகில் மிதப்பது போல எதையும் பற்றி நினைப்போ கவலையோ இன்றி அந்த நொடியை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.

மறுபுறம் விஷ்வா, தனது வயிற்றுப் பகுதியில் இருக்கும், நெருப்புக் சக்கரத்தை தூய்மையாக படுத்திக் கொண்டிருந்தான்.

இதனால், பட்ட அவமானங்களை தூக்கி எரிய வேண்டும் என்று குருஜி சொல்ல,

இப்போது அந்த கந்தர்வனால், காதலியை அவனிடம் விட்டு வைத்திருப்பதே பெருத்த அவமானமாக தோன்றியது. இதைக் கடந்து வருவது அவனுக்கு சற்று கடினமானதாகவே இருந்தது. முயன்றான், முயன்றான்….

அனைத்தையும் துடைத்து எரிந்து விட்டு சுரணையற்று வாழ்வதாய் ஒரு நொடி நினைக்க, அனைத்தும் சென்று விட்டது.

இது சற்று வலியைத் தந்தாலும் கடந்து வந்தான்.

குருஜி அவனை மெச்சினார். தூங்காமல் இருந்து அடுத்த சக்கரத்தை திறக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். அது இதயத்தில் இருப்பது. அதற்கும் சளைக்காமல் தயாரானான்.

**

பாட்டி இப்போது பொங்கல் வைத்துக் கொண்டிருந்தார். அவருடைய வயதிற்கு சாப்பிடாமல், ஈரப் புடவையுடன், இதை செய்வது கடினமாகவே இருந்தது. இதற்குப் பிறகு தனக்கு என்ன நேர்ந்தாலும் கவலைப் படப் போவதில்லை என்பதால் , முழு மூச்சுடன் அனைத்தையும் செய்து கொண்டிருந்தார்.

பொங்கல் பதமாகப் பொங்கியது.

“அதை அம்மனுக்குப் படைக்கப் போவதற்கு முன், தீயில் இறங்கி இத்தனை நாள் செய்த பாவங்களைப் போக்கிக் கொள்ள வேண்டும் “ பூசாரியின் குரல் அவருக்கு கட்டளை விதித்தது.

 

“ நிச்சயமாக செய்யறேன்” பாட்டியும் சளைக்காமல் பதில் கொடுத்தார்.

அம்மனே பூசாரியின் உருவத்தில் சொன்னது போல உணர்ந்தார் பாட்டி. தீயை மூட்டி பாதை அமைத்திருந்தனர்.

மேளமும், மற்ற வாத்திய சப்தங்களும் பாட்டியை உசுப்பேத்தியது. எழுந்து ஆட வேண்டும் போல இருந்த உணர்வுகள் இப்போது எழுந்தன.

இத்தனை நாள் அவற்றை அடக்கி வைத்திருந்தாலும், இன்று ஏனோ கட்டுக்கடங்காமல் கால்கள் ஆடத் துடித்தன. தன்னிலையை மறக்காமல் இருக்க முயன்று கொண்டிருந்தார் பாட்டி.

அதீந்த்ரியன் லோகாவை தூக்கி தனது மடியில் அமரவைத்து அவளுக்கு இப்போது ஊட்டிக் கொண்டிருக்க,

அதற்ககு மேலும் பொறுக்க முடியாமல் , பாட்டி கால்களை தரையில் ஓங்கிப் பதித்து ஆடியபடி தீயில் முதல் அடியை எடுத்து வைத்தார்.

அந்த நொடியே லோகாவை தனது மடியிலிருந்து எழுப்பிவிட்டான் அதீந்த்ரியன்.

Comments Here