“எனக்கு மகாவோட வாய்ஸ் ரொம்ப பிடிக்கும் கார்த்திக்… மெஸ்மரைசிங் வாய்ஸ்… ஒரே ஒரு பாட்டு பாடுன்னு தான் கேட்டேன்… இன்னமும் போக்கு காட்டிட்டு இருக்கா…” என்று வெகு தீவிரமான குரலில் கூற, அதுவரை முறைத்துக் கொண்டிருந்த கார்த்திக், சட்டென சிரித்து விட்டான்.

“அடப்பாவி… போயும் போயும் ஒரு பாட்டுக்கு இருபது கோடியா? உங்களுக்கே ஓவரா தெரியலையா?” என்றவன், “லட்டு பாடும்ன்னு தெரியும்… ஆனா அதோட வாய்ஸ் இவ்வளவு வொர்தா என்ன?” என்று விளையாட்டாக கேட்க, ஷ்யாம் சிரித்தான்.

“வெறும் பாட்டுன்னு இல்ல… கொஞ்சம் சண்டை… உங்க தங்கச்சிக்கு வாய் கொஞ்சம் எக்ஸ்ட்ரா லார்ஜ்… நம்ம ஈகோவ ரொம்ப ஹர்ட் பண்ணிட்டா… எவ்வளவுதான் ஹர்ட் பண்ணாலும் நான் பண்ணினதும் கொஞ்சம் அதிகம்… கஸ்டடி அளவுக்கெல்லாம் போயிருக்க கூடாது… ஒன்ஸ் வேற மாதிரி போகுதுன்னு தெரிஞ்சவுடனே மகாவை அப்புறமும் வெச்சுருக்க மனசில்ல… அதான்… நானே கொடுத்து நானே வாங்கிட்டு போயிட்டு வா தாயேன்னு சொல்லிட்டேன்…”

“உங்க அப்பால்லாம் கூட திட்டினாங்களே… அப்பவாவது சொல்லி இருக்கலாமே ஷ்யாம்? நான் தான் டுவென்டி சி கொடுத்தேன்னு…”

“நான் மொக்கை வாங்கினதை தண்டோரா போட்டு சொல்லனுமா? அப்படி வேற ஆசையா?” என்றவன், சிரித்து விட்டு, “ஆனாலும் ஷீ இஸ் வெரி ப்ரீஷ்யஸ் டூ மீ… அவளோட குணத்துக்கு இருபது கோடி என்ன? இன்னும் எவ்வளவு வேண்ணாலும் கொடுக்கலாம்… ஏன்? மொத்தத்தையும் தூக்கி கொடுத்தாலும் தப்பில்ல…” என்றவனின் கண்களில் அவ்வளவு காதல்! அனைத்தையும் தூக்கிக் கொடுத்து விடுவான் என்று கட்டியம் கூறியது அவனது பார்வை. திடுக்கிட்டது கார்த்திக்கின் மனம்! ஏற்பதா வேண்டாமா என்று ஊஞ்சலாடியது.

“இப்பவும் இந்த தியேட்டரை இப்ப ரெஜிஸ்டர் பண்ற ஐடியா இல்ல… கன்ஸ்ட்ரக்ஷன் ஸ்டார்ட் பண்ணும் போது பார்த்துக்கலாம்ன்னு தான் நினைச்சேன்… ஆனா ஐடி ரெய்ட்… கணக்கை சப்மிட் பண்ணனும்… அந்த பணத்தை ரிலீஸ் பண்ணனும்… அதான் பண்ணிடலாம்ன்னு உங்களை வர சொன்னேன்…” என்று முடிக்கவும், யோசனையாக அவனை பார்த்தான்.

அவனாக இன்னமும் காதலை வெளிப்படையாக சொல்லவில்லை. தங்கையும் சொல்லவில்லை. அவளுக்கு இவன் காதல் தெரியுமா என்பது தெரியவில்லை. ஆனால் ஷ்யாம் காதல் வயப்பட்டு இருக்கிறான் என்பதை அவனது பார்வை சொன்னது. மகாவை பற்றி பேசும் போது அவனது கண்கள் கனவில் மிதந்தது.

காதல் வயப்பட்டிருந்த கார்த்திக் இதை புரிந்து கொண்டான்.

ஆனால் அதை ஒப்புக்கொள்ள வேண்டுமா வேண்டாமா என்பது தான் புரியவில்லை.

ஷ்யாம் காதல் வயப்படலாம். ஆனால் அவனது முன்கதை சுருக்கமெல்லாம் தெரிந்த தான் எப்படி இதை ஒப்புக்கொள்ள முடியும்? தான் பிருந்தாவுக்கு உண்மையாக இருப்பதை போல, தங்கைக்கும் உண்மையான ஒருவனை தானே தேடித் தர முடியும்? ஆனால் ஷ்யாமை பற்றி அறிந்தும் தான் ஒப்புக்கொள்ள முடியுமா?

‘அவனை பார்க்கனும்ன்னா நீ நடிகையா இருக்கணும்…’

‘ஒரு அழகான நடிகையா பார்த்து அனுப்பி விடு… கொஞ்சம் லூஸ்ல விடுவான்…’

ஷ்யாமை பற்றி அவனிடம் வந்து விழுந்த விமர்சனங்கள் இப்போதும் காதில் ஒலித்தது.

இதை தங்கையால் தாங்கிக் கொள்ள முடியுமா? நாளை இன்னொருத்தியை பிடித்திருக்கிறது என்று அவள் பின்னால் சென்று விட மாட்டானா இவன்?

இருக்கும் இடம் அப்படி!

மயக்கவென்றே முற்றுகையிடுபவர்கள் அதிகம்! எத்தகைய நிலைக்கும் ஒப்புக்கொள்ளும் பெண்களும் அதிகம், புகழுக்காக, பணத்துக்காக, சுகத்துக்காக என்று! சுற்றிலும் உப்பு நீரால் சூழப்பட்ட இடத்தில் நல்ல நீரை தேட முடியுமா?

“சாரி ஷ்யாம்… நான் தான் உங்களை புரிஞ்சுக்காம…” என்றவன், “ஆனாலும் மஹா கிட்ட ரொம்ப பழக வேண்டாம் ஷ்யாம்… உங்களை கண்ட்ரோல் பண்ண முடியாது தான்… ஜஸ்ட் எ ரிக்வஸ்ட்… அவளோட லைப்… எனக்கு ரொம்ப முக்கியம்…” மிகவும் தயவான குரலில் வேண்ட, அவனை பார்த்து சிரித்தான்.

“எனக்கு பொண்ணுங்க கிட்ட ஒரே இன்டன்ஷன் தான்னு யார் உங்ககிட்ட சொன்னது கார்த்திக்?” சாதாரண குரலில் கேட்டவனை வெற்றுப் பார்வை பார்த்தான் கார்த்திக்.

“இல்ல ஷ்யாம்…” என்று தயங்க,

“எனக்கு எல்லா பழக்கமும் இருக்கு… ஐ அக்செப்ட்… ஆனா அத்தனையும் மகாவுக்கு தெரியும்… ஆனாலும் அவ என்னை நம்புவா… நான் உண்மையை மட்டும் தான் பேசுவேன்னு அவ நம்புவா கார்த்திக்… நான் அவ கிட்ட உண்மையா இருப்பேன்னு கண்டிப்பா நம்புவா… என் அம்மாவுக்கு அப்புறம் அந்தளவு என்னை நம்பற ஒரே ஆத்மா என்னோட மஹா மட்டும் தான்…” சீரிய குரலில் தீவிரமான மனோபாவத்தில் அவன் கூற, கார்த்திக் அவனது வார்த்தைகளில் அமிழ்ந்து போனாலும், அவனை இன்னமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அண்ணனாக!

“அவளுக்கு இன்னமும் வெளியுலக அனுபவம் இல்ல ஷ்யாம்…”

“அப்படி உங்க தங்கச்சியை குறைச்சு கணக்கு போட்டுடாதீங்க… ரொம்ப தெளிவு, தைரியம், துணிச்சல்… எல்லாமே உங்களை விட அதிகம்…” என்று சிரித்துக் கொண்டே, அவனிடம் இளங்கவி நீட்டிய டாக்குமென்ட்களில் கவனத்தை செலுத்தினான்.

முழுவதுமாக பார்த்து விட்டு, கையெழுத்தை போட்டு, கார்த்திக்கிடம் நீட்ட, அவன் வாங்கி மேலோட்டமாக பார்த்துவிட்டு கையெழுத்திட முயன்றான்.

“முழுசா படிச்சு பாருங்க கார்த்திக் மச்சான்…” என்று அவனை ஊக்க,

“ம்ம்ம்… என்கிட்ட நீங்க என்ன மொத்த சொத்தையா எழுதி வாங்கிட போறீங்க? அப்படியே வாங்கினாலும் என்ன? அது தங்கச்சிக்கு தானே போகும்…” என்றவன், கையெழுத்திட, அவனது வார்த்தைகளை கேட்ட ஷ்யாமின் முகம் புன்னகையில் மிதந்தது.

“நீங்க கற்பூரம் மச்சான்…” என்று சிரிக்க,

“வேற வழி? விதி…” என்று சலிப்பாக கூறியவன், “உங்களை எந்தளவு நம்பறான்னு தான் நானும் பார்க்கிறேனே… அவ பிடிவாதம் பிடிச்சா அப்பா வேண்டாம்ன்னா சொல்ல போறாங்க? இல்ல அம்மா வேண்டாம்ன்னு சொல்ல போறாங்களா? நம்மளை மதிக்க ஆளிருக்கா என்ன?” என்று பெருமூச்சு விட,

“நான் இருக்கேன் உங்களுக்கு…” என்று ஷ்யாம் சிரிப்போடு கூற,

“ரொம்ப முக்கியம்…” என்று கடுப்பானவன், “ ஆனா எனக்கு மகாவோட கண்ல என்னைக்கும் கண்ணீரை பார்க்க கூடாது… அப்படி பார்த்தன்னா உங்களை கொலை செய்ய கூட தயங்க மாட்டேன்…” என்று முடித்துக் கொண்டு எழுந்து விட்டான்.

“என்னை அழ வைக்காம இருக்க சொல்லி அவளுக்கு அட்வைஸ் பண்ணுங்க மச்சான்…” என்று சிரிக்காமல் கூறியவனின் தொனியில் உண்மையிலேயே கார்த்திக் சிரித்து விட்டான்.

அதே சிரிப்போடு மதிய உணவையும் உண்டு முடித்துவிட்டு வர, இயக்குனர் மதியும், பிரானேஷும் வந்திருந்தனர்.

கார்த்திக்கின் தயாரித்துக் கொண்டிருக்கும் படத்தில் நாயகனாக நடிப்பவன் பிரானேஷ். அந்த படத்தை இயக்குபவர் மதி.

இருவரையும் ஆச்சரியமாக பார்த்தான் கார்த்திக்.

ஏகப்பட்ட பிரச்சனைகளை செய்து விட்டு மதி படத்தை விட்டு ஒதுங்கி இருந்தார். தயாரிப்பு செலவுகளை இழுத்து விட்டதோடு, தேவையில்லாத காட்சிகள், சரியான இயக்கம் இல்லாதது என்பதற்கும் பொறுப்பில்லாத பதில். அதோடு ப்ரானேஷின் தொந்தரவு வேறு. கொடுத்த கால்ஷீட்டில் வேறு படத்தில் நடிக்க போக, கார்த்திக் பொறுமை இழந்து போய் தான் படத்தை கிடப்பில் போட்டுவிட்டான்.

பணம் மொத்தமாக முடங்கி கிடக்கிறது தான். ஆனாலும் என்ன செய்வது?

மீண்டுமாக இன்னொரு பிரச்சனையில் சிக்க கார்த்திக் தயாராக இல்லை. அதுவும் இப்போதுதான் முருகானந்தமும் தேறி வந்திருக்கிறார் எனும் போது பிரச்சனைகளை இழுத்து விட்டுக் கொள்ள முடியாது.

கை கழுவி விட்டு, டவலால் கையை துடைத்தபடி வந்தவனிடம், அவசரமாக டவலை வந்து வாங்கினான் மகேந்திரன்.

“மட்டன் பிரியாணி கலக்கிட்ட மகி… சூப்பர்…” என்று மகேந்திரனை பாராட்ட, அவனது முகத்தில் அத்தனை சந்தோஷம்.

சிரித்தபடியே கார்த்திக்குடன் சேர்ந்தவாறு ஹாலுக்கு வர, அவனை கண்டு எழுந்து நின்றனர் மதியும் பிரானேஷும்.

புன்னகையோடு கார்த்திக்கை பார்த்து, புருவத்தை உயர்த்தினான் ஷ்யாம். கார்த்திக்கின் முகத்தில் லேசான குழப்பம். எதற்காக இவர்கள் வந்திருகிறார்கள் என்று!

அவர்களை பார்த்து புன்னகை புரிந்த கார்த்திக் வேறு எதுவும் பேசாமல் நீள சோபாவில் அமர, ஷ்யாம் அவனுக்கு அருகில் அமர்ந்தபடி,

“வாங்க…” என்றழைத்தவன், “மகி” என்று குரல் கொடுத்தான்.

மகி அவசரமாக வந்து நிற்க, இருவரின் புறமும் திரும்பியவன்,

“என்ன சாப்பிடுறீங்க?” என்று கேட்க,

“பரவால்ல ஜி…” என்று தயங்கியபடியே மறுத்தான் பிரானேஷ். அதே பதில் தான் மதியிடமும். இன்னமும் அவர்கள் நின்று கொண்டிருப்பதை கண்டு, “உக்காருங்க…” என்ற ஷ்யாமின் வார்த்தைக்கு, சோபாவின் நுனியில் அமர்ந்தான் பிரானேஷ். மதி விழுந்து விடுவதை போலதான் அமர்ந்திருந்தார்.

அத்தனை பயம் அவனிடம்!

அவர்களுக்கு மட்டுமல்ல… பீல்டில் இருக்கும் அனைவருக்குமே ஹைதராபாத் ஷ்யாம் என்றால் சிம்மசொப்பனம் தான்!

அவனிடமிருந்து அழைப்பு என்றாலே நடுங்குபவர்களும் இருக்கின்றனர்! கார்த்தியை பொறுத்தவரை இந்த பீல்டுக்கு புதிது என்பதால் அவ்வளவாக பரிட்சயமில்லை.

கார்த்திக்கிடம் அத்தனை பேசியிருந்தனர் அந்த இருவரும்!

ஆனால் இங்கே பம்முவதை பார்த்தால் கார்த்திக்கு சிரிப்பு தான் வந்தது.

“ரெண்டு காபி மகி…” என்று மகேந்தரனிடம் கூறிவிட்டு, “கார்த்தி மச்சான், உங்களுக்கு?” என்று கார்த்தியை பார்த்து கேட்க,

“பிரியாணி டேஸ்ட் போய்டும் மச்சான்…” என்ற சிரித்துக் கொண்டே கூறிய கார்த்தியின் ரசனையை கண்டு, “அடடா… என்ன ரசனை…” என்று வாய்விட்டு சிரித்தான்.

மகேந்திரனின் புறம் திரும்பியவன், “ரெண்டு போதுன்டா…” எனவும் அவன் தலையாட்டிவிட்டு அவசரமாக அகன்றான்.

“அப்புறம்? எப்படி போயிட்டு இருக்கு மதி?” என்று எப்போதும் போல ஆரம்பிக்க,

“சாரோட படம் தான் பண்ணிட்டு இருக்கேன்…” என்று தயங்கியவாறு கூற, திரும்பி பிரானேஷை பார்த்தான் ஷ்யாம். அவன் கேட்பதற்கு முன் முந்திக்கொண்ட பிரானேஷ், “சாரோட படம் தான் பண்ணிட்டு இருக்கேன்ஜி…” என்று கூற,

“ம்ம்ம் அப்படியா?” என்று நெற்றியை சுரண்டியவன், “ஏதோ பிரச்சனைன்னு மச்சான் சொன்னாரே…” என்று கார்த்திக்கை பார்த்தவாறே கேட்க, உள்ளுக்குள் சிரிப்பு பொங்கியது கார்த்திக்கு.

தன்னிடம் அத்தனை சவடால் விட்ட இந்த இருவரும் இப்படி பயந்து கொள்வதை பார்க்கும் போது ஏதோ நாடகத்தை பார்ப்பது போல தோன்றியது.

“என்ன மச்சான்?” என்று கார்த்தியை கேட்க, தோளை குலுக்கிய கார்த்திக், “நீங்களாச்சு அவங்களாச்சு…” என்று முடித்துவிட,

“என்ன மதி?” என்று மதியை பார்த்து ஷ்யாம் கேட்க,

“ஐயோ… பிரச்சனைல்லாம் ஒன்னும் இல்லங்க ஜி…” என்று பதறினார் மதி.

“அப்புறம் ஏன் படம் அந்தரத்துல நிக்குது? பணம் என்ன உங்க வீட்டு மரத்துல காய்க்குதா?” கத்தியை சொருகுவது போல ஷ்யாம் கேள்வியை சொருக,

“அய்யா தான் பணம் இல்லைன்னு….” என்று மதி இழுக்க,

“என்ன பணம் இல்லைன்னு? ஃபர்ஸ்ட் காபி பேஸ்ல தானே படம் பண்ண ஒத்துக்கிட்டீங்க?” என்றவனின் கேள்விக்கு அவரது தலை தானாக தலையாடியது.

“ஆமாஜி…”

“எவ்வளவு?”

“பன்னிரண்டு சி… ஆர்டிஸ்ட் சம்பளம் இல்லாம ஜி…” குரல் சிறியதாகி விட்டிருந்தது.

“மச்சான் கொடுத்தாரா?” இறுக்கமாக கேட்க,

“கொடுத்தாங்க ஜி…” இன்னமும் கீழே போய்விட்டிருந்தது.

“அப்புறம் ஏன் நீங்க முடிக்கல?” நியாயமான கேள்வி தான். ஆனால் மதி எப்படி பதில் சொல்வார்? அவர் நல்ல இயக்குனர் தான். முதல் காப்பி கையில் கொடுக்கும் வரைக்குமாக தான் அவர் ஒப்பந்தம் போடுவதும் ஆனால், அந்த தொகைக்குள் அவர் படத்தை முடித்ததாக வரலாறு இல்லை. இரண்டு மடங்காக செலவை இழுத்து விடுவதில் மன்னன்.

சரியாக திட்டமிடாதது, நேர விரயம் செய்வது, நடிகர்களின் கால்ஷீட்டை வீணடிப்பது, ஸ்பாட்டிலேயே பணியாளர்களிடம் பிரச்சனை செய்வது என அனைத்தும் உண்டு.

மகேந்திரன் காபியை கொண்டு வந்து இருவருக்கும் தர, நடுக்கத்தோடு எடுத்து கொண்டார்கள் இருவருமே!

“கொஞ்சம் இழுத்துட்டு போய்டுச்சு ஜி…” என்று மதி பம்மினார்.

“கொஞ்சம் இழுத்துட்டு போகல… பன்னிரண்டு, இருபத்தியஞ்சு ஆகியிருக்கு…” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறினான்.

இவனுக்கு தெரியாதது என்ன தான் இருக்கிறது என்று ஷ்யாமை ஆச்சரியமாக பார்த்தான் கார்த்திக்.

“தப்பு தான் ஜி….” உடனே ஒப்புக் கொண்டார் மதி.

“அதை எப்படி சரி செய்வீங்கன்னு எனக்கு தெரியாது மதி… நீங்க தான் சரி செய்தாகணும்…” என்று கறாராக ஷ்யாம் கூற, அவர் விழித்தார்.

“எப்படின்னு…” என்று அவர் இழுக்க,

“இன்னும் பணமெல்லாம் கொடுக்க முடியாது… நீங்க படத்தை முடிச்சு கைல கொடுக்கறீங்க…” கொஞ்சமும் தயங்காமல் கூற,

“அவ்வளவு பணம்…” என்று இழுத்தார் மதி. எப்படியும் முடிக்க இன்னுமே ஒன்றாவது தேவைப்படும் என்று கார்த்தியிடம் கூறியிருந்தார். அதனால் தான் படமாவது ஒன்றாவது என்று கிடப்பில் போட்டிருந்தான் கார்த்திக். ஒன்று கொடுத்தால் இன்னுமொன்று என்று கேட்பார் மதி.

“அதெல்லாம் கொடுக்க முடியாது மதி… போட்ட அக்ரீமென்ட் படி டுவல்வ் சி ல நீங்க முடிச்சு இருக்கணும்… அதுக்கு மேல உங்களால மச்சானுக்கு லாஸ்… இதுக்கும் மேல உங்களுக்கு கொடுக்க முடியாது… படத்தை முடிச்சு கொடுக்கறீங்க… அவ்வளவு தான்…” என்று வெகு தீவிரமாக கறாரான குரலில் கூறி முடிக்க, அங்கு வந்து நின்றனர், விஷ்ணுவும் இளங்கவியும்!

“இல்லைன்னா நீங்க பண்ண லாஸ்க்கு கார்த்தி மச்சானுக்கு காம்பன்சேஷன் கொடுக்கறீங்களா?” என்று ஷ்யாம் தொடர்ந்து கேட்க, மதி விழி பிதுங்கினார்.

“முடிச்சு கொடுத்துடறேன் ஜி…” வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டார் மதி. இளங்கவி நீட்டிய காகிதங்களை விழி பிதுங்க பார்த்தார்.

அவர் ஒப்புக்கொண்டதை எழுத்து வடிவில் கொடுத்திருந்தார்கள்.

“சைன் பண்ணுங்க மதி…” என்றவன், “இன்னும் பத்து நாள்ல கைக்கு ஃபர்ஸ்ட் காபி வந்தாகணும்…” என்று முடிக்க,

“சரிங்க ஜி…” என்றபடி கையெழுத்திட்டார் மதி.

திரும்பி பிரானேஷை ஷ்யாம் பார்க்க,

“கேக்கற டேட்ஸ கொடுத்துடறேன் ஜி…” என்று அவசரமாக கூறினான் அவன்.

“அதிகமா சம்பளம் கேக்கறதா சொல்றாங்களே…” என்று ஷ்யாம் நெற்றியை சுரண்ட,

“அப்படியெல்லாம் இல்லஜி…” என்று இன்னமும் அவசரமாக் கூறினான்.

“ஓகே…” என்று முடித்து விட, காபியை அவசரமாக குடித்து முடித்தவர்கள், அதை காட்டிலும் அவசரமாக இடத்தை காலி செய்தனர்!

“இவனுங்களை எல்லாம் ரெண்டு வெச்சு வேலை வாங்கறதை விட்டுட்டு, எனக்கு இந்த பீல்டே வேண்டாம்ன்னு ஓடுவீங்களா மச்சான்? அப்புறம் நமக்கு என்ன மரியாதை இருக்கு?” என்று ஷ்யாம் கேட்க, பதில் கூற மறந்து போய் அவனையே பார்த்திருந்தான் கார்த்திக்.

உண்மையிலேயே அதிர்ந்து தான் போயிருந்தான்.

இது போன்ற அடாவடிகளுக்கு அவன் சற்றும் பழக்கமில்லாதவன்!

அவனுண்டு, அவனது நகைக் கடையுண்டு என்றிருந்தவன்!

திரைப்படம் தயாரிப்பதை அவன் எப்போதும் நினைத்துக் கூட பார்த்ததில்லை. அத்தனை அவனது தந்தையின் பொறுப்பு மட்டுமே என்று இருந்தவன்.

ஷ்யாமை கண்டவனுக்கு உள்ளுக்குள் குளிரெடுத்தது என்பதுதான் உண்மையாக இருக்கும். இவனது அடாவடிகளை தங்கையால் சமாளிக்க முடியுமா என்று விழி பிதுங்கி போயிருந்தான்.

ஆனால் மஹாவை சமாளிக்க முடியாமல் திணறும் ஷ்யாமுக்காக ஒருநாள் தான் வாதாட வேண்டியிருக்கும் என்று அவன் அறியவில்லை!

மேலிருப்பவர்கள் மேலேயே இருப்பதில்லை… கீழிருப்பவர்கள் கீழேயே இருப்பதும் இல்லை. கீழிருப்பவன் மேலே போவதும் மேலிருப்பவன் கீழே வருவதும் தான் இயற்கையின் விதி!

அந்த விதி… ஷ்யாமின் வாழ்க்கையை சூறையாட காத்திருப்பதை யார் உரைப்பார்கள்?


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!