Thendral’s Kandharva Loga – 38

Thendral’s Kandharva Loga – 38

கந்தர்வ லோகா 38

பாட்டி தீயில் கால் வைத்ததும் , அவனே நெருப்பில் இருப்பது போல உணர்ந்தான். உடனே லோகாவை தன் மடியிலிருந்து எழுப்பியவன், தானும் எழுந்து கொண்டான்.

அவனால் அங்கு நிற்க முடியவில்லை.

பாட்டி ஆடிக் கொண்டே நெருப்பில் வந்தது அங்கு இருந்த அனைவரையும் சற்று மிரட்டியது. அத்தனை ஆக்ரோஷம் அவரது முகத்தில். கீழே இருந்த அந்த நெருப்பின் தணல் ஒளி அவரது முகத்தில் பட்டு இன்னும் உக்கரமாகக் காட்டியது.

பூசாரி மட்டும் அவரை கணிவுடன் பார்க்க, மற்றவர்களை பாட்டியின் தோற்றம் பயம் கொள்ள வைத்தது. நெருப்பின் மீது ஒரு ஆட்டமே ஆடினார் பாட்டி. யாராலும் அத்தனை நேரம் அந்த தீயில் நடந்து வர இயலாது.

பொதுவாக திருவிழாக்களில் தீ மிதிப்பவர்கள் கூட சட்டென ஒரே நிமிடத்தில் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்திற்கு ஓடி விடுவர். ஆனால் பாட்டி , இத்தனை நாள் மனதில் அடக்கி வைத்திருந்த அத்தனையும் வெளியே வந்தது போல அந்த சுடும் நெருப்பில் ஆடினார்.

அவரது கண்கள் வானத்தையே வெறித்தது. கையில் இருந்த வேப்பிலை கொத்து , இலைகள் ஏதுமின்றி வெறும் குச்சியே இருந்தது. அவரது ஆட்டத்தில்  அந்த இலைகள் உதிர்ந்து விட்டது.

கால்களும் கைகளும் தாளத்திற்கு ஏற்றார் போல ஆடியது. அவரது வயதிற்கும் மீறிய சக்தி அங்கு இருப்பது அனைவரும் உணர்ந்தனர். குலவை சத்தம் போட்டு சில பெண்கள் அவரை மேலும் தூண்ட , அவருக்குள் வேகம் அதிகரித்தது.

வெகு நேரம் நெருப்பில் இருப்பதை உணர்ந்த பூசாரி அவரை வெளியே கொண்டு வர அழைத்தார்.

“வா மா .. வா… வந்து அந்த பிரசாதத்தை படையல் போடு” கையில் விபூதி தட்டை ஏந்திக் கொண்டு அழைத்தார்.

“ இல்ல… நான் இந்த தீயில் வேகனும். “ பாட்டி கத்தினார்.

இத்தனை நாள் அம்மனை ஏற்காமல் விட்டதை நினைத்து அவரின் மனது பிராயச்சித்தம் தேடியது. தனக்குத் தானே தண்டனை ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பதை  பூசாரி உணராமல் இல்லை.

“ வெளிய வா ம்மா… உனக்கு நிறைய வேலை காத்திருக்கு ..” என்று நினைவூட்ட, அவரின் மனதும் அதை ஏற்று , இப்போது வேகமாக தீயிலிருந்து வெளியே வந்தார்.

அவருக்கு திருநீறு பூசி , இரு பெண்களை கூப்பிட்டு அழைத்துப் போகச் சொன்னார். அங்கிருந்த படிக்கட்டில் அமர வைத்தனர்.

ஆத்திரம் சற்று மட்டுப் பட்டிருந்தது. தன் ஆழ்மனதில் இத்தனை நாள் இருந்த அந்த உணர்வுகள் மீண்டும் உயிர் பெற்றது போல உணர்ந்தார்.

‘இது தான் நான். எனக்கு நானே இத்தனை நாள் வேலி போட்டுக் கொண்டு, எனது உணர்வுகளை மறைத்தது எத்தனை தவறு. என்னை நானாக இன்று தான் உணர்கிறேன். சாதாரண பெண்ணாக இருக்க நினைத்து என்னை நானே இழந்துவிட்டேன். இன்னிக்கு தான் மனசு லேசான மாதிரி இருக்கு. ‘மனதில் எண்ணி வருந்தினார்.

‘லோகாவை அவன் என்ன பாடு படுத்தறானோ’ என்று தோன்ற, சட்டென எழுந்து பொங்கல் படைக்கச் சென்றார். பூசாரி அருகில் வர,

“ எப்படி ம்மா இருக்க, உன்னை கட்டுப்படுத்தாம , உன் மனச அடக்கி வைக்காம வாழறது தான் உண்மையான வாழ்க்கை. ஒரு மனுஷனுக்கு அதில் கிடைக்கும் நிம்மதி வேற எதிலுமே இல்லை. அதை நீ புரிஞ்சுக்க இத்தனை நாள் தேவைபட்டிற்கு. “ பாட்டியின் முகத்தில் தெரிந்த நிம்மதியை வைத்துக் கூறினார்.

“ உண்மை தாங்க ஐயா! இருந்தாலும் அந்த நிம்மதியை முழுசா அனுபவிக்க முடியல, லோகாவ பத்தி தான் கவலை அதிகமா இருக்கு.” கண்ணை மூடி வருந்தினார்.

“ நீ அம்மனுக்காக செய்யற, அவ உனக்காக உன் பேத்திய காப்பாத்துவா.. முழுசா நம்பு. மனசுல சஞ்சலமில்லாம அடுத்த ஆகவேண்டிய பாரும்மா” சொல்லிவிட்டு பாட்டிக்காக தான் செய்ய வேண்டிய மற்ற வேலைகளை செய்யப் போனார்.

அடுப்பிலிருந்து பொங்கலை எடுத்துக் கொண்டு போய் படையல் வைத்தார். கையில் சூடத்தை ஏற்றி காண்பித்தார்.

 

அவருக்கு நெருப்புக் கூட சுடவில்லை. எண்ணம் முழுதும் இலக்கை அடைவது தான்.

இரவு வெகு நேரம் ஆகிவிட்டது.

விஷ்வா மீண்டும் குளித்துவிட்டு வந்தான். அடுத்த சக்கரத்தை  சீர் படுத்தும் வழி முறைகளை அவனுக்குச் சொன்னார் குருஜி.

இது இதயத்தில் இருப்பது. மனதில் இருக்கும் சோகத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும்.

காதல் அன்பு பாசம் இவை ஒருவரின் வாழ்வில் இன்றியமையாதது. நம்ம விட்டுப் பிரிந்த பாசமான உறவுகள், புது உறவுகளின் மூலம் மீண்டும் நம்மிடமே திரும்பி வரும்.

விஷ்வா தனது தாயுடன் இருந்ததில்லை. ஆனாலும் அவன் தந்தை மூலம் அவரைப் பற்றி அவ்வப்போது கேட்டுக் கொள்வான். தாயின் அன்பிற்காக அவன் ஏங்கிய நாட்கள் அதிகம். என்ன தான் ரகுபதி அவனுக்கு எந்தக் கஷ்டமும் தெரியாமல் வளர்த்தாலும் அவனுக்கு உள்ளுக்குள் அந்த சோகம் இருந்து கொண்டு தான் இருந்தது. அதை தந்தைக்காக வெளியே காட்டிக் கொள்ளாமல் இருப்பான்.

அப்போது தான் அவனுக்கு லோகாவின் வரவு வாழ்வில் சிறு இன்பத்தை கொண்டு வந்தது. அவள் அவனிடம் அதிகமாக அன்பு செலுத்தினாள். தனக்கு என்ன வேண்டும் என்பதை உணர்ந்து அவள் செய்யும் சில செயல்களில் அவன் அவளை தாயாகப் பார்த்தான்.

இப்போது தன் தாயை இழந்து விட்டதை நினைத்து அவனது கண்கள் கண்ணீர் சொரிந்தன. ஆனாலும் அந்த அதீத அன்பை தனக்காக மட்டும் பொழிய லோகா இருப்பதை நினைத்து தன் தாய்க்காக வருந்துவதை இன்றோடு விட்டான்.

அவனது இதயம் இப்போது மிகவும் லேசாக இருந்தது.

அதை உணர்ந்த குருஜி , “ விஷ்வா! உனக்கு இப்போ நிச்சயம் ஓய்வு வேணும். இது மனசு சம்மந்தப் பட்ட விஷயம். அதுனால கொஞ்சம் காலாற நடந்தோ இல்ல கொஞ்சம் தூங்கியோ மனதை சமன் படுத்திக்கோ!”

அவர் சொல்வது அவனுக்குப் புரிந்தது. அவனுக்கும் மனதை அழுத்திய சோகம் தீர்ந்ததால் சற்று நேர இளைப்பாறல் தேவையாகத் தான் இருந்தது.

மறுபேச்சின்றி எழுந்து நடந்தான்.

**

லோகாஷி , அதீந்த்ரியனை குழப்பமாகப் பார்த்தாள்.

‘எதுக்காக  இப்படி சட்டென எழுப்பி விட்டான்? என்ன ஆச்சு? ‘ அவள் யோசிக்கும் போதே , அவன் ஒரு இடத்தில் நிற்க முடியாமல் திணறுவது புரிந்தது.

இப்போது அவனுக்கு நீருக்குள் மூழ்கியிருக்க வேண்டும் போல இருந்தது. தீராத எரிச்சல் உடலெங்கும் பரவுவது போல் ஒரு உணர்வு. இப்போது என்ன சொல்வது இவளிடம் என்று யோசித்தவன்,

அவளையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியே வந்தான். மாய வீட்டிற்குள்ளிருந்து லோகா அவனுடன் வெளியே வந்தாள் .

அந்த வீட்டிலிருந்து வெளியே வரக் கூடாது என்று எண்ணி இருந்தான். ஆனால் இப்போது வரும் நிலை உருவாகி விட்டது. அந்த நினைவிலேயே எரிச்சலுற்றவன் முகம் கடுகடுப்பாக மாறியது.

லோகா ஒன்றும் புரியாமல், “என்ன ஆச்சு அதீ? ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்க? எதுக்கு இந்த ராத்திரி நேரத்துல வெளிய வந்தோம்” அவனைப் பார்க்க,

“ ஒண்ணுமில்ல… நீ வா..” என்று அவளையும் இழுத்துச் சென்று அந்தக் குளத்தில் குதித்தான்.

அவள் வேண்டாம் என சொல்வதற்குள் ஆவளுடன் நீருக்குள் சென்றுவிட்டான். லோகா நீச்சல் தெரியாமல் தடுமாற , அவளுக்கு மூச்சு விடவும் சிரமமாகப் போய்விட்டது.

அதைக் கண்டவன், தன் தவறை உணர்ந்து உடனே அவளைத் தூகிக் கொண்டு வந்து கரையில் உட்கார வைத்தான்.

“ மன்னிச்சிடு லோகா. ஒரு அஞ்சு நிமிஷம் இரு!” சொல்லிவிட்டு அவள் பதிலை எதிர்ப் பார்க்காமல் மீண்டும் நீருக்குள் மூழ்கி, அந்த எரிச்சல் தீரும் வரை அமிழ்ந்தி இருந்தான்.

 குளிரில் நடுங்கியபடியே அமர்ந்திருந்த லோகா, நீருக்குள் சென்றவன் எப்போது வருவான் என்று ஆவலாக பார்த்த படியிருக்க,

அவள் அருகே மெல்ல வந்து அமர்ந்த்தது அந்தக் கருப்புப் பூனை. அவளையே அது பார்த்துக் கொண்டிருக்க, திடீரென அது நடக்க ஆரம்பித்தது. மந்திரத்திற்கு கட்டுப் பட்டது போல இவளும் அதன் பின்னே சென்றாள்.

நீருக்குள் மூழ்கியிருந்த கந்தர்வன் இன்னும் வெளியே வரவில்லை. அதற்குள் இவள் அந்தப் பூனையின் வேகத்துடன் அதன் பின்னே ஓடிக் கொண்டிருந்தாள்.

அந்த இருளிலும் தெளிவாகப் பின் தொடர்ந்தாள். அந்தப் பூனை ஒரு பழைய கோயிலின் முன் நின்றது. அந்தக் கோயிலுக்கு மண்டபம் இல்லை கூரை இல்லை. சிறு மேடு மட்டுமே. அதில் அம்சமாக ஒரு சூலம். அதன் பின்னே ஒரு வேப்பமரம்.

அதன் அருகே இருந்த ஒரு கல்லின் மீது பூனை குதிக்க, பின் லோகாவும் அந்தக் கல்லில் சென்று அமர்ந்தாள். சுற்றலும் வெறும் கருமை. ஒன்றும் புலப்படாத கருமை. லோகாவின் மனதில் சிறு பயம் ஊடுருவ ஆரம்பித்தது.

அந்தப் பூனை சத்தம் போடாமல் அங்கிருந்து சென்றது. இதமான காற்று வீசிக் கொண்டிருக்க, இருட்டில் எதையோ தேடி களைத்துப் போனாள் லோகா. காற்று அவளுக்கு தூக்கத்தை கொடுத்தது. அந்த இடத்திலேயே அவளையும் அறியாமல் உறங்க ஆரம்பித்தாள்.

குளத்திலிருந்து வெளியே வந்த கந்தர்வன், லோகா அங்கு இல்லாததைக் கண்டு அதிர்ந்தான்.

“லோகா…. லோகா” சுற்றி அலைந்தான். அந்தப் பகுதி முழுவதும் தேடினான். அவளைத் தவற விட்டுவிட்டான்  என்பது உரைக்க, தன் மீதே கோபம் வந்தது.

‘அவளை வெளியே அழைத்து வந்தது முதல் தவறு. அடுத்து அவள் நீருக்குள் தவிக்கிறாளே என்று வெளியே தனித்து அமரவைத்தது.

அவளைக் காக்க தன்னைச் சுற்றி நிறைய வேலைகள் நடக்கிறது என்று அறிந்திருந்தும் இவ்வாறு செய்தது மிகப் பெரிய தவறு.’

“அதீ நீ முட்டாளாக நடந்து கொண்டு விட்டாய். அதுவும் லோகா விஷயத்தில் ஏமாறப் போகிறாய்! ஆஆஆஆ…..!!” அவனால் தாங்க முடியாமல் அந்த இடமே அதிரும்படி கத்தினான்.

அவள் இருக்கும் இடம் அறிய தன் ஞானத்தால் தேடினான். அவள் ஒரு கோவிலில் படுத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. விரைந்து அந்த இடத்தை அடைந்தான்.

லோகா சிறு பிள்ளை போல உறங்கிக் கொண்டிருந்தாள். சுற்றிலும் பார்க்க, அங்கே ஆள் அரவமற்று இருந்தது.

லோகாவின் அருகில் சென்று அவளைத் தூகிக் கொண்டு போக முயற்சித்தான். அவளைத் தொடப் போக, தன் கைகளை நீட்டினான்.

எங்கிருந்தோ வந்த அந்த கருப்புப் பூனை அவன் மேல் பாய்ந்தது. அவனைக் கீழே தள்ளி விட்டது. அவன் உடலெங்கும் காயப் படுத்தியது.

எந்தக் காயமும் அவன் உடலில் ஏற்படவில்லை. ஆனால் அந்தப் பூனை தொட்ட இடமெங்கும் அவனுக்கு தாங்க முடியாத எரிச்சல் வந்தது.

வெறியுடன் பூனையைப் பார்த்தான். யார் இந்தப் பூனை. இத்தனை நாள் இல்லாமல் ஏன் இப்போது மட்டும் வந்து தன்னை தாக்க வேண்டும் என்று யோசிக்க,

அந்தப் பூனையை உற்று நோக்கினான். அந்தக் கோயிலில் இருக்கும் சூலம் போல அந்தப் பூனையின் உருவம் தெரிந்தது. அப்போது தான் விளங்கியது.

அது அந்த ஊரின் காவல் தெய்வம். ஊரின் அம்மனுக்கு உதவும் அந்தக் காவல் தெய்வம் . அதனால் தான் பாட்டியை வழி நடத்திச் சென்றது என்று அவனுக்கு விளங்கியது.

அதன் சக்தி செயல் படாத இடம் வேண்டும் என்றால் அது இந்த ஊரை விட்டு வெளியே சென்றால் தான் முடியும். அதற்கு முதலில் வழி தேட வேண்டும் என்று யோசித்தான்.

மீண்டும் லோகாவை நெருங்க அந்தப் பூனை அவனை நோக்கி மேலும் நகர்ந்தது. இரண்டடி பின்னால் நகர்ந்தான். பின்பு யோசிக்காமல் திரும்பி நடந்தான்.

**

பாட்டியை அன்றிரவு கோயில் மண்டபத்தில் உறங்கச் சொன்னார் பூசாரி. ஆயிரம் அறிவுரைகள் கூறினார்.

“ உன்னை சோத்திக்கவே இந்த இரவு பயபடுத்தப் படும். நீ அம்மனை வேண்டாம்னு சொல்லிட்டு போய்ட்ட. நீ திரும்பி வருவன்னு அவளுக்கு நல்லா தெரியும். இருந்தாலும் அவளை இத்தனை நாள் காக்க வெச்சதுக்கு உன் மேல கோபம் இருக்கும். அதை போக்கிக்க அவ ருத்ர தாண்டவம் செய்வா. அதையெல்லாம் பொறுத்துப் போ.

மறுபடி அவளை பார்த்து பயந்து வேண்டான்னு சொல்லிடாத. மனசை திடமா வெச்சிக்கோ. இதைக் கடந்துட்டா உனக்கு நிச்சயம் வெற்றி தான்.” அவர் சொல்லும்போதே அன்றிரவு பயங்கரமாக இருக்கும் என்று உணர்ந்தார் பாட்டி.

“எதுவாக இருந்தாலும் இனி அவ தான் எனக்கு துணை. முழுசா அவ கிட்ட போகப் போறேன். அப்பறம் நான் எதுக்கு பயப் பட போறேன். நீங்க தைரியமா போங்க ஐயா.. காலைல வாங்க!” சொல்லிவிட்டு அங்கிருந்த மண்டபத்தில் தீபம் ஏற்றிக் கொண்டு அருகிலேயே படுத்தார்.

பூசாரி அர்த்த ஜாமப் பூஜையையும் முடித்து விட்டு , கோயில் கதவைப் பூட்டிக் கொண்டு தன் வீட்டிற்கு சென்றார். வரும் வழியெல்லாம் மனதில் வேண்டிக் கொண்டே வந்தார்.

‘ உன்னோட சோதனைய அந்த வயசானவ கிட்ட அதிகம் காட்டாத ம்மா.. அவ உன்ன நம்பி வந்துட்டா. நீ தேர்ந்தெடுத்தவ தான் அவ. கால தாமதம் ஆனாலும் உங்கிட்ட சரணடைய வந்துட்டா. மன்னிச்சு ஏத்துக்கோ ம்மா’ தன் தாயிடம் சொல்வது போல சொல்லிக் கொண்டார்.

உடல் களைப்போ நெருப்பில் நடந்த வலியோ மண்டபத்தில் படுத்ததும் தூங்கி விட்டார் பாட்டி. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து மீட்டது அந்த ஒலி.  காற்று பலமாக வீசும் ஒலி மட்டும் கேட்டது. ஆனால் அந்த இடத்தில் துளியும் காற்றில்லை. சுற்றிலும் இருட்டு.

அப்போது தான் ஏற்றி வைத்த விளைக்கைத் தேட, அது வைத்த இடத்தில் இல்லை. தடவிக் கொண்டு எதைத் தேட, உறக்கமும் தொலைந்தது.

தலைக்கு மேல் அந்த காற்றின் ஒலி கேட்பது போலத் தோன்ற மேல பார்க்க,

அந்த விளக்கு தான் அவரின் தலைக்கு மேலே சுற்றிக் கொண்டிருந்தது.

பயந்து எழுந்தார் பாட்டி. விளக்கும் அவருக்கு நேர் எதிரே வந்து நின்றது. அவரின் கண்ணுக்கு சற்று தூரத்தில் இருந்தது அந்த விளக்கு.  அவரையே அது உற்று நோக்குவது போன்ற பிரம்மை.

பாட்டியும் அதையே பார்க்க, சட்டென அது பாட்டடியை ஒரு சுற்று சுற்றிவிட்டு , வேகமெடுத்து அந்த மண்டபத்தை சுற்ற ஆரம்பித்தது. விளக்கு மட்டும் அந்த இடத்தில் அந்தரத்தில் பறந்து கொண்டிருந்தது.

சற்று நடுங்கினார் பாட்டி. இருந்தாலும் தைரியத்தை மனதில் வைத்து, மனதிற்குள் அபிராமி அந்தாதி சொல்ல ஆரம்பித்தார்.

காற்று பலமாக வீசியது. அந்த சிறு விளக்கு அத்தனை காற்றை கொண்டுவந்தது. ஒரு நூறு முறையாவது அந்த விளக்கு சுற்றியிருக்கும். பாட்டி சொல்லி முடித்துவிட்டு கண் திறக்க அவரின் முன் தான் அது நின்றது. பயந்து இரண்டடி பின்னால் நகர, அந்த ஒளியை உற்று நோக்கினார்.

புலிமேல் பன்னிரண்டு கைகளுடன் , வாளும் வேலும் வைத்து, நாக்கை தொங்கவிட்டுக் கொண்டு படு உக்கிரமாக காளி ரூபம் தெரிந்தது.

விளக்கு பட்டென கீழே விழுந்து நொருங்கியது.

விழுந்த அடுத்த நொடி, மண்டபம் முழுவதும் சிரிப்பொலி. பாட்டியின் ஈரக்குலையே நடுங்கி விட்டது. அங்குமிங்கும் கால்கள் தடுமாற, அருகில் இருந்த தூணைத் தேடினார். சிறுது நேரம் காற்றில் துழாவிய பின் கையில் தட்டுப் பட்டது அந்தத் தூண்.

ஏதோ பெரிய துணை கிடைத்தது போல இறுக்கமாகப் பற்றிக் கொண்டார்.

சிரிப்பொலி அருகில் நெருங்கி வந்தது. தூணின் பின்னால் கேட்ட ஒலி தூண் அருகில் வந்ததும் நின்றது.

ஏதோ ஒன்று அருகில் நிற்பது போன்று தோன்ற, பாட்டி அந்த தூணில் சாய்ந்த படியே அமர்ந்தார். பக்கத்தில் இருந்த உருவம் கூடவே அமர்ந்தது.

பாடிக்கு பயம் அதிகரித்தாலும், தான் அம்மனுடனே ஐக்கியமாகப் போவதை நினைத்து இனி என்ன நடந்தாலும் பரவாயில்லை என தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொண்டார். நீண்ட நேரத்திற்குப் பிறகு, மூச்சு விடும் சத்தம் கேட்க,

“ அம்மா! தாயே ! நான் உன்ன அப்போ ஏத்துக்காம போனது தப்புத் தான். ஆனா அப்போ என்னோட மனநிலை உனக்கு நல்லா தெரியும். என் மகளே என்னைப் பார்த்து பயந்ததை பார்த்து எனக்கு ரொம்ப சங்கடமா இருந்தது. ஒரு தாயா என் நிலை உனக்கு நல்லா புரியும்.

இப்போ தான் இத்தனை நாள் நான் நானா இல்லைன்னு புரிஞ்சுது. இப்போ என்னை நீ ஏத்துக்கோ ம்மா… உங்கிட்ட ஐக்கியமாக ஒவ்வொரு நிமிஷமும் துடிக்கறேன். ஆனா என் பேத்திய மட்டும் அந்த கந்தர்வன் கிட்டேந்து காப்பாத்திடு. அது போதும் எனக்கு. உன் அருள் கிடைக்க நான் என்ன இப்போ என்ன செய்யணும் சொல்லு மா”

அழுது கொண்டே சொல்ல,

அருகில் இப்போது வெற்றிமாக உணர்ந்தார். சற்று தூரத்தில் சலங்கை ஒலி கேட்க, அந்தத் திசையில் அவர் முகம் திரும்பியது. உடைந்த விளக்கு மீண்டும் தானாக எரிய,

அந்த ஒளி பிரகாசமாக இருந்தது. அது மெல்லிய ஒலியுடன் பேசத் தொடங்கியது.

“ எனக்கு உன்மேல் கோபம் தான்.. எப்போ நீ என்னை ஏத்துக்காம போனியோ, அப்பவே உன் மாங்கல்ய பலம் குறைந்தது. உன் மகளோட கல்யாணம் வரை நான் பொறுமையா இருந்தேன். அதுவே அதிகம் தான்.

ஏன்னா .. அதுக்குள்ள உன் மனச மாத்திக்கிட்டு என்ன ஏத்துப்பன்னு எதிர்பார்த்தேன். அது நடக்கல. உன் விதி இது தான்.

இப்போ உன் மேல என்னால இறங்க முடியாது. நீ என் காலடில ஐக்கியமாகறது மட்டும் தான் உன் விதி.

உன்னோட பக்திக் காக உன் பேத்திய நிச்சியம் நான் காப்பாத்தறேன். விஷ்வாவுக்கு அந்த சக்திய கொடுத்து அவன் மூலமா தான் அவ வெளிய வருவா.

அதுக்கு முன்னாடி நீ என்கிட்ட வரணும். “ அசரிரியாக அந்த விளக்கு சொன்னது.

அதைக் கேட்டதும் பாட்டியின் கண்களில் கண்ணீர் பெருகியது.

“தாயே! நீயே துணை. எனக்கு இது போதும்மா. “ கீழே விழுந்து வணங்கினார்.

 

Tell Your Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!