Thenmazhai- Uma Deepak

Thenmazhai- Uma Deepak

தேன் மழை

அத்தியாயம் ஒன்று

நீண்டு வளர்ந்து கொண்டிருந்தது அந்த ராஜபாட்டை… இருபுறமும் செழித்து வளர்ந்து நின்ற மரங்கள் அந்த காட்டிற்கு அரணாக இருக்க நடுவில் சுமங்கலி பெண்ணின் நடுவகிடு போல நேராக இருக்க … இதமான தென்றல் தவழ்ந்து வந்து அந்த புரவிகளின் மேல் பயணம் செய்து கொண்டிருந்தவர்களை தழுவியது!

“இளவரசே …!” சற்று தயங்கியவாறு அழைத்தவனை புரவியை மென்மையாக செலுத்தியவாறு திரும்பி பார்த்தான் அவன்!

என்ன ஒரு தேஜஸ் அந்த கண்களில்!

நிமிர்ந்து அவன் அமர்ந்திருந்த விதமே தனி கம்பீரத்தை தர, அந்த கருமை நிறத்தவனுக்கு ரசிகர் கூட்டமென்று நிறைய உண்டு!

மார்பை மறைக்கவென ஒரு மேலாடையும் இடுப்பில் ஒரு இறுக்கமாக கட்டியிருந்த கீழாடையும் முறுக்கிய மீசையும், முறுக்கேறிய புஜங்களும், திண்மையான மார்பும், அதிலிருந்த வடுக்களும், கூர்மையான கண்களும் அவனை மிகச்சிறந்த வீரனென கூற,
“சொல் முத்தழகா…” என்றான் ஆதித்த கரிகாலன்.
ஆம்… அருள்மொழி வர்மனுக்கு மூத்தவன்.
வரலாற்றின் சோழத்தின் பக்கங்களிலிருந்து வலுகட்டாயமாக பறிக்கப்பட்ட ஆதித்த கரிகாலன் தான் அவன்.

அந்த வரிகளை திரும்ப திரும்ப படித்துக் கொண்டு இருந்தாள் மதியழகி. ஏனோ ஆதித்த கரிகாலனை விவரித்த விதம் அவளுக்கு பிடித்து இருந்தது, காரணம் அவள் மன்னவன் கரிகாலன் அவ்வாறு இருந்தது தான்.

ஆம்! மன்னவன் தான் அவளுக்கு. அவள் வசிப்பது காரியாபட்டி என்ற கிராமத்தில், அங்கே எழுத படிக்க தெரிந்த அளவுக்கு பெண்களில் படித்து இருப்பது இவளும், இவள் தோழிகள் சிலர் தான்.

அந்த அளவுக்கு அந்த கிராமத்தில், படிக்க வைக்க அவ்வளவு வசதியும் கிடையாது, அரசு பள்ளிக்கூடமும் கிடையாது. படிப்பு ஓரளவு இவளுக்கு பிடித்து இருந்ததால், அங்கு எட்டாம் வகுப்பு வரை பக்கத்து டவுனில் படித்து முடித்து இருந்தாள்.

மேற்கொண்டு படிக்க வைக்க, அவள் வீட்டினர் விரும்பவில்லை. அவளும் அதன் பிறகு கதை புத்தகத்தில் மூழ்கினாளே தவிர பாட புத்த்கம் படிக்க அவளுக்கு அதன் பிறகு விருப்பம் இல்லை.

இப்பொழுது கூட கல்கியின் பொன்னியின் செல்வன் புத்தகத்தை வைத்துக் கொண்டு, அந்த வரிகளை தான் திரும்ப திரும்ப படித்துக் கொண்டு இருந்தாள்.

அப்பொழுது வெளியே புல்லட் வண்டியின் சத்தம் அவளின் காதை தீண்டவும், படித்துக் கொண்டு இருந்த புத்தகத்தை மெத்தையில் வைத்துவிட்டு அந்த அறையின் ஜன்னல் கதவுகளை திறந்து கொண்டு வெளியே தெருவை பார்த்தாள்.

அங்கே அந்த புல்லட் மீது கம்பீரத்துடன் வந்து கொண்டு இருப்பது மங்கை மனம் கவர்ந்த கரிகாலன். கரிய நிறம் கொண்டு இருந்தாலும், அவனின் கம்பீரம் அவனுக்கு அழகு சேர்த்தது.

அந்த கிராமத்தில் இள வயது பெண்கள் அவனின் கம்பீரத்தில் கட்டுண்டு, தேன் மொய்க்கும் வண்டாக அவர்களின் பார்வை அவனை சுற்றியே வலம் வந்து கொண்டு இருந்தது.
ஆனால் அவனின் கண்களோ, அவனின் அக்கா மகள் பூஞ்சோலை மீது மட்டுமே இருந்தது. அவனின் அக்கா பூங்கொடி இவனோடு பிறந்தவள் இல்லை, அவன் பெரிம்மா மகள்.

பூங்கொடியின் கணவன் ஒரு சாலை விபத்தில் இறக்க, கை குழந்தையுடன் இங்கு வந்தவர் தான். இந்த இருபது ஆண்டுகள் தன் சிற்றனையின் துணையோடு, மகளை வளர்த்து விட்டார்.

இப்பொழுது அவளுக்கு வரன் பார்க்க நினைக்க, அவளோ மாமன் கரிகாலன் மீது மையல் கொண்டு உள்ளதை அன்னையிடம் உறைத்தாள்.

“என்னடி சொல்லுத! என் தம்பியையா விரும்புத! வேனாண்டி, நமக்கு இங்க அவிக அடைக்கலம் கொடுத்து இருக்காவ. அப்படி எல்லாம் சட்டுனு கேட்டுட முடியாது”.

“நீ மனசை மாத்திக்க ராசாத்தி, நமக்கு அதேன் நல்லது. ஆத்தா சொல்லுதேன், உனக்கு நல்ல மகாராசனா பார்த்து கண்ணாலம் கட்டி வைக்கிறேன் பூவு” என்று வாஞ்சையுடன் கூறியவரை வேதனையாக பார்த்தாள்.
பார்த்து பழகிய முகமா, அல்லது அவனின் கரிசனமா எது என்று பேதையவளுக்கு தெரியவில்லை. மாமன் மீது பூ பெய்திய நாளில் இருந்து, கொள்ளை பிரியம் வைத்து விட்டாள்.

அது காதலா என்று தெரியாது, ஆனால் அவனோடு தன் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று எண்ணினாள் பூஞ்சோலை. புல்லட் சத்தம் காதை தீண்டவும், மாமனின் வருகையை உணர்ந்து அவள் வாயிலுக்கு ஓடினாள்.

புல்லெட்டை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு, அங்கு இருந்த வாளியில் தண்ணீர் எடுத்து மோண்டு தன் கை கால்களை களுவிக் கொண்டு நிமிர்ந்தான்.

அங்கே அவனின் மனம் கவர்ந்தவள் அவனை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். அவனுக்கு அவளின் இந்த பார்வை புதிது, ஏனெனில் தான் இருக்கும் பக்கம் இதுவரை தலை காட்டாமல் ஒரு ஓரமாக அவனின் அக்கா பின் தான் எப்பொழுதும் ஒளிந்து கொள்ளுவாள்.

இன்று அவனை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் அவள், அவனுக்கு புதிதாக தெரிந்தாள்.

“என்ன சோலை, இங்கின யாருக்காக காத்துகிட்டு இருக்குத? எப்போவும் என் முன்னாடி வர அம்புட்டு யோசிப்ப, இப்போ எதும் கேட்கணுமா என் கிட்ட” என்று அவளை புரிந்தவனாக கேட்டான்.

“என்னை கல்யாணம் பண்ணிக்கி்டுறீகளா மாமா, ஆத்தா எனக்கு மாப்பிள்ளை பார்க்க போறேன் சொல்லிட்டு இருந்துச்சு. எனக்கு உம்புட்டு மேல தான் ஆசை, சொல்லுங்க மாமா என்னை கட்டிகிடுறீகளா?” என்று பூஞ்சோலை கேட்டாள்.

அவன் இன்று எப்படியாவது தாயிடம் விஷயத்தை சொல்லி, இவளிடம் சம்மதம் கேட்க நினைக்க, அவளே தன்னிடம் சம்மதம் கேட்டு நிற்கவும் அவனுக்கு அப்படி ஒரு ஆனந்தம்.

உடனே தாயிடமும், தன் அக்காவிடமும் பேசி கல்யாணத்திற்கு நாள் குறித்து விட்டான். இந்த செய்தி மதியழகி காதுக்கு எட்ட, அவள் கண்ணீர் உடைத்தாள் யாருமறியாமல்.

காதலை சொல்லி இருக்க வேண்டும் என்று அவளுக்கு நேரம் கடந்து ஞணயோதயம் பிறக்க, உள்ளுக்குள்ளே தன் காதலை பூட்டி வைத்து நடை பிணமாக நடந்து கொண்டு இருந்தாள்.

அவளுக்கு அவள் வீட்டில் அவளின் நிலையை பார்த்து, வரன் பார்க்க ஆரம்பிக்க எதையும் கண்டுகொள்ளும் நிலையில் அவள் இல்லை. அவனின் திருமணத்திற்கு செல்ல இவளை அழைக்க, அவளோ அவனை மணக்கோலத்தில் காண முடியாது என்பதால், வரவில்லை என்று விட்டாள்.

அங்கே மணவறையில் பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக கரிகாலன் அமர்ந்து இருக்க, அவனின் அருகே அப்பொழுது பதுமையென வந்து அமர்ந்தாள் பூஞ்சோலை.

இருவர் முகத்திலும் கல்யாண களை அப்பட்டமாக தெரிந்தது, காரணம் அவர்களுக்கு பிடித்த வாழ்க்கை அல்லவா அவர்களுக்கு அமைந்தது. இங்கே இவர்கள் மகிழ்ந்து இருக்க, அங்கே மதியழகி தனக்குள்ளே உழன்று கொண்டு கண்ணீர் வடிய படுத்துக் கிடந்தாள்.

காதலை சொல்லி, திருமணம் செய்து கொண்ட இருவர் ஒரு புறம். காதலை சொல்லாமல், அதை மறக்க முடியாமல் திருமணத்திற்கு சம்மதம் கூற முடியாமல்
தத்தளிக்கும் மதி ஒரு புறம் என்று இருந்தனர்.

கரிகாலனும், பூஞ்சோலையும் திகட்ட திகட்ட காதல் சொல்லி தேன் மழையில் நனைவது போல், மதிக்கும் அவளை கவர்ந்த ஒருவன் வந்து தேன் மழையில் நனைய வைப்பான் என்று நம்புவோமாக.

அத்தியாயம் 2

கதை எழுதி முடித்த கையோடு, அதை தன் தோழிக்கு வாட்ஸ் அப் அனுப்பி வைத்தாள் மதியழகி. அவளின் தோழி சுகன்யா அதை படித்துவிட்டு, தோழிக்கு அழைத்துவிட்டாள்.

“என்னடி இது? இப்படி சப்புன்னு முடிச்சிட்ட. ஆமா, நீ ஏன் டி இப்படி எழுதி வச்சு இருக்க? பிரியாணி கூட இல்லை இதுல, என்ன டி பிரச்சினை உனக்கு?” என்று கேட்டாள்.

“ஏன் உனக்கு தெரியாதா! சும்மா கேள்வி கேட்காத டி, கல்யாணம் முடிஞ்சு ரெண்டு வருஷம் ஆகிடுச்சு, இன்னும் இந்த ஆதி அந்த சொப்புன சுந்தரியை நினைச்சுகிட்டு இருந்தா என்ன அர்த்தம்?”.

“நானும் தான் இவனை லவ் பண்னேன், என்னை கண்டுக்க கூட மாட்டேங்குறான். அவ காதலை சொன்ன கையோட மேல போய் சேர்ந்துட்டா, இங்க நான் காதலை சொல்ல கூட முடியாம உட்கார்ந்துகிட்டு இருக்கேன்”.

“நானும் அவன் கிட்ட பேச முயற்சி பண்ணுறேன், பாவி பேச கூட பிரியம் இல்லை அப்படின்ற மாதிரி, முகத்தை தூக்கி வச்சுட்டு திரிரான் டி” என்று பொரிந்து தள்ளி விட்டாள்.

“அது சரி, நீ ஏன் டி உங்க பாட்டி கிட்ட விஷயத்தை சொல்லி, அவரை சரி பண்ண கூடாது” என்று தோழி கேட்கவும், அவள் பல்லை கடித்தாள்.

“அந்த கிழவி தான, கேடி கிழவி அது. ஊருக்கே டமாரம் அடிச்சிட்டு தான், ஓயும். அதுவும், அதுக்கு மட்டும் பேரனுக்கு பிடிக்காம கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க அப்படினு தெரிஞ்சது, வந்து சாமியாடி தீர்த்திடும்” என்று அவள் கூறிக் கொண்டு இருக்கும் பொழுதே, வீட்டின் வெளியே காலிங் பெல் சத்தம் கேட்கவும் எட்டி பார்த்தாள் யார் வந்து இருக்கிறார்கள் என்று.

அங்கே இவள் பாட்டி, இப்பொழுது இவள் சொன்ன கேடி கிழவி தான் அங்கே நின்று கொண்டு இருந்தார்.

“அடியே சுகி! அந்த கிழவி பத்தி பேசி முடிக்கல அதுக்குள்ள மூக்குல வேர்கிற மாதிரி வந்து நிக்குது டி. அப்புறம் பேசுறேன் நான், அது என்ன ஆட்டம் ஆட வந்து இருக்கு தெரியலையே” என்று நொந்து கொண்டே போய் கதவை திறந்தாள்.

“வாங்க பாட்டி! எப்படி இருக்கீங்க? ஊருல எல்லோரும் சௌக்கியமா?” என்று இழுத்து வைத்த புன்னகையுடன் அவரை வரவேற்றாள் மதி.

“கதவை திறக்க இம்புட்டு நேரமா ஆகுது டி ஆத்தா உனக்கு? அப்படி என்ன வெட்டி முறிக்கிற வேலை பார்க்கிற நீ இப்போ?” என்று வந்தவுடன் அவளின் கேள்விக்கு பதில் அளிக்காமல், அவளை பிடி பிடியென்று பிடிக்க தொடங்கினார் பாக்கியம் பாட்டி.

“கிழவி! வந்த உடனேயே ஆரம்பிச்சிடுச்சு, இந்த தடவை பேரனை விட்டே உன்னை விரட்டுறேன் கிழவி” என்று மனதிற்குள் சூளுரைத்துக் கொண்டு, அவருக்கு பதில் அளிக்க தொடங்கினாள்.

“பின்னாடி பால்கனி ல துணியை காய போட்டு இருந்தேன் பாட்டி, அது எடுக்க போனேன் அதுக்குள்ள நீங்க பெல் அடிச்சு கூப்பிடீங்க” என்று இப்பொழுதும் இழுத்துக் கொண்டே பதில் அளித்தாள்.

“சரி, சரி என் பேரன் வர நேரம் தான, நீ என்ன இப்படி தலைய கூட ஒழுங்கா வாராம நிக்குற. போ முதல ஒழுங்கா தலையை சீவி, முகம் கழுவிட்டு வந்து விளக்கு ஏத்து” என்று வந்தவுடன் அவளை வேலை வாங்க தொடங்கினார்.

அவருக்கு முகத்தை காட்டாமல் பல்லை கடித்துக்கொண்டு அவர் சொன்ன வேலை எல்லாம் செய்ய தொடங்கினாள். செய்து முடித்துவிட்டு அவருக்கு பிடித்த விதத்தில் காபி போட்டு கொடுத்துவிட்டு, கொரிக்க இரண்டு நாள் முன்பு தாய் செய்து கொடுத்த முறுக்கை எடுத்து வந்து வைத்தாள்.

பேசிக் கொண்டு இருக்கும் பொழுது, காலிங் பெல் சத்தம் கேட்கவும் எட்டி பார்த்தவள் அங்கே ஆதி நிற்கவும் கதவை திறந்து கொண்டு, வாங்க டார்லிங் என்று கூறிக் கொண்டே அவனை கட்டி அணைத்தாள்.

அவனோ அதிர்ந்து, கோபத்துடன் எதோ சொல்ல எத்தனிக்க அவளோ ரகசியமாக அவனின் காதில், பாட்டி வந்து இருக்கும் விஷயத்தை எடுத்து கூறினாள்.

பல்லை கடித்துக் கொண்டு, அவளை முறைத்து விட்டு அவளிடம் இருந்து விலகி நேராக அவன் பாட்டி முன் சென்று அவரை நலம் விசாரித்தான்.

“நல்லா இருக்கேன் பேராண்டி, நீ என்னய்யா இப்படி இலைச்சு போய்ட்ட! ஏய் என் பேரனுக்கு சாப்பாடு ஒழுங்கா போடுறதை விட உனக்கு என்ன வேலை இங்க? அதை கூட ஒழுங்கா செய்ய மாட்டியா?” என்று மதியை பிடிபிடித்தார்.

ஏற்கனவே கணவன் தன்னை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் இருக்கிறான் என்று வருத்தத்தில் இருந்தவள், பாட்டியின் இந்த பேச்சில் கொதித்து விட்டாள்.

“முழு சாப்பாடே உன் பேரனுக்கு கொடுக்க நான் ரெடி, ஆனா உங்க பேரனுக்கு தான் சாப்பிட இஷ்டம் இல்லை. வேணும்னா உங்க பேரன் கிட்ட கேட்டுக்கிங்க, நான் மாடிக்கு போறேன் கொஞ்ச நேரம்” என்று சிடுசிடுத்துவிட்டு சென்று விட்டாள்.

இத்தனை நாள் பொறுமையாக இருக்க வேண்டும், இருக்க வேண்டும் என்று மனதில் உரு போட்டது எல்லாம், அவரின் பேச்சில் துள்ளிக் கொண்டு சென்று விட்டது பொறுமை எல்லாம்.

மனதில் இருந்ததை வெளியே கொட்டி விட்டதாலோ என்னவோ, அழுது கறைந்தாள் மதி. மழை வேறு வலுக்க ஆரம்பிக்க, அதில் நனைய தொடங்கினாள்.

வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமே, அவளிடத்தில் இல்லை. எவ்வளவு நேரம் சென்றதோ, அங்கே அவளை தேடி ஆதி வந்தான். அவளை அவன் அழைக்க, அவளோ அவனை முறைத்துவிட்டு அங்கேயே நின்றாள்.
நின்று பார்த்தவன், அவள் வருவது போல் தெரியவில்லை எனவும் அவளை அப்படியே தூக்கிக் கொண்டான். அவளோ, அவனின் இந்த செய்கையில் வாயை பிளந்தாள்.

error: Content is protected !!