TholilSaayaVaa22B
TholilSaayaVaa22B
ரேடியாலஜி கவுண்டரில்,
“வாணி ரிப்போர்ட் ரெடின்னு போன் பண்ணீங்க?” என்று கேட்க,
அங்கிருந்த பெண் வாணியின் ரிப்போர்ட்டை அவன் கையில் தந்து, “டாக்டர பாருங்க ஈவினிங் 4 மணிக்கு வந்துடுவார்” என்று சொல்ல
ரிப்போர்ட்டை வாங்கிகொண்டு அதை புரட்டியபடி நடந்துகொண்டிருந்தவன் கால் பலவீனமாக அருகிலிருந்த சுவற்றில் சாய்ந்துகொண்டான். தன் கண்கள் குளமாக அப்படியே அமர்ந்துவிட்டான்.
‘கார்சினோமா’ என்ற வார்த்தை அவன் இதயத்தை உலுக்க, உலகமே நொடியில் இருண்டுபோனது. கண்களிலிருந்து விடாமல் கண்ணீர் வழிய, உடல் சில்லிட்டு மெல்லிய நடுக்கம் பரவத்துவங்கியது.
பைரவ் திரும்பாததால் அவனை தேடி சென்ற மாயா, அந்த தளத்தின் ஒரு எல்லையில் சுவரில் சாய்ந்து அமர்ந்தபடி கேவி கேவி அழுதுகொண்டிருந்த பைரவை கண்டு அவனிடம் ஓடினாள்.
“டேய்! என்னடா? என்னாச்சு? பைரவ் எனக்கு பயமா இருக்கு டேய்” அவனை உலுக்க,
“கேன்ச…” என்றவன் பேசமுடியாமல் உடைந்து அவள் மீது சாய்ந்து வெடித்து அழ, ஒன்றும் புரியாமல் கீழே கிடந்த ரிப்போர்ட்டை எடுத்து படித்தவள் உறைந்து நின்றாள். கேஸ்ட்ரிக் கேன்சர் என்பதைக் கண்டு பேச்சிழந்தவள், அதிர்ச்சியுடன் அழத்துவங்கினாள்.
“என்னடா இது….” அவனை அணைத்துக்கொண்டவள், “டேய் அதெல்லாம் இருக்காது, நாம வேற ஹாஸ்பிடல் போகலாம். அகைன் செக் பண்ணலாம், டேய் அழாதடா எனக்கும் பயமா இருக்கு”
கண்கள் ரிப்போர்ட்டை வெறித்திருக்க, “டேய்! ஒண்ணுமில்லடா!” அவளை மௌனமாக பார்த்தவனை உலுக்கியவள், “நான் கூட பயந்துட்டேன். இதுக்குப்போய்! சே!” ஒரு நொடி கண்களில் நீருடன் சிரித்தவள் சுதாரிக்கும் முன்பே அவளை அறைந்திருந்தான்!
“இதுக்கு போயா?’ கத்தியவன், “ஒண்ணுமில்லன்னு எப்படி சொல்லமுடியுது? இதுபெரிய விஷயம் இல்லையா? அவங்க பின்னாடியே வாணிமா வாணிமான்னு சுத்தினதெல்லாம் சும்மாவா? ச்சே!” கோவமாக கத்தியவன்,
“மாமியார் தானே அதான் உனக்கு பாசமோ அக்கறையோ இல்ல…”
அவனை பின்னுக்கு தள்ளியவள், அவன் அறைந்ததால் எரிந்துகொண்டிருந்த கன்னத்தை பிடித்தபடி, ரிப்போர்ட்டுடன் நில்லாமல் எங்கோ ஓடினாள்.
ரிப்போர்ட்டை பார்த்த அதிர்ச்சியும் மாயாவின் பேச்சில் வந்த ஆத்திரமும் அவனை பித்தனாக்கி விட்டது. அறைக்கு சென்றவன், ஓசை எழுப்பாமல் உறங்கி கொண்டிருந்த வாணியை பார்த்தபடி ஓசையின்றி அழுதுகொண்டிருந்தான்.
சில நிமிடங்களில் அறைக்குள் நுழைந்த மாயா, பைரவின் மடியில் ரிப்போர்ட்டை கோவமாக வைத்து, “அவங்களுக்கு வெறும் அப்பெண்டிசைடிஸ் இன்பெக்ஷன்! ரிப்போர்ட்ல பேரை பாக்கமாட்டியா? லூசு முண்டம்!”
அவள் கத்தியதில் விளங்காமல், அந்த ரிப்போர்ட்டை படித்தவன் கேள்வியாய் மாயாவை வெறிக்க,
“ரிப்போர்ட் மாத்தி கொடுத்திருக்காங்க லூசுங்க! அவதான் கொடுத்தான்னா நீயுமா செக் பண்ண மாட்ட? யார் ரிபோர்டையோ வாங்கி படிச்சுட்டு, என்னையும் பயமுடுத்தி அந்த ரெடியாலஜி இன்சார்ஜை நல்லா கிழிச்சுட்டேன்! அட்மின்ல கம்ப்ளையிண்டும் பண்ணிட்டேன்!”
அவள் சொல்லச்சொல்ல சந்தோஷத்தில் புன்னகையுடன் மீண்டும் அழைத்துவங்கியவனை,
“நிறுத்துடா எல்லாத்துக்கும் அழாத! கண்ண துடை. அவங்க எழுந்தா என்ன நினைப்பாங்க?” அவன் கண்களை துடைத்தவள்,
“குழந்தையா நீ? எல்லா டீடெயில்சும் சரியா இருக்கான்னு பாக்க மாட்டியா? கொஞ்ச நேரத்துல நெஞ்சு வெடிச்சுடும்போல இருந்துது!” அவனை அணைத்துக்கொண்டாள்.
“தேங்க்ஸ்டா! உலகமே நின்னுபோச்சு தெரியுமா?” கேவியபடி அவளை அணைத்துக்கொண்டவன் சமநிலைக்கு வர சிலநிமிடங்கள் தேவைப்பட்டது.
“டாக்டர் வந்துருப்பார் , முகத்தை அலம்பிகிட்டு போயி பார்த்துட்டுவா, இப்படியே அழுமூஞ்சியா போகாத” அவனை சமாதானம் செய்து அனுப்பிவைத்தாள்.
அவன் சென்ற பிறகு கண்விழித்த வாணிக்கு சாப்பிட, செவிலியர் கொண்டுவந்த உணவை கொடுத்தவள், அதுவரை நடந்த கூத்தை வாணியிடம் சொல்லி சிரிக்க, “அடப்பாவி பசங்களா! இதுக்குதான் நானே சமாளிச்சுக்கலாம்னு வந்தேன். எனக்குதெரியும், தலைவலின்னு சொன்னாலே பதறுவான், இதுக்குதான்… இதுக்குதான்… ”
“இல்லை வாணிமா எனக்கே எப்படி இருந்துது தெரியுமா? எல்லாமே இருட்டிக்கிட்டு வந்துது. பாவம் அவனுக்கு நீங்கதானே உலகமே… எப்படி இருந்துருக்கும்? அவன் இடத்துல இருந்து யோசிச்சுப்பாருங்க” கணவனுக்காக அவள் பரிந்துகொண்டு வர,
“நான் இல்லன்னு சொல்லல, எதுனாலும் அவன் தைரியமா ஃபேஸ் பண்ணுவான். ஆனா, எனக்கு உடம்புக்கு எதுவானாலும், இல்ல மனசு சரியில்லைன்னு உட்கார்ந்தாலும் அவன் தாங்கறதே இல்ல, விஸ்வாவ நினச்சு நான் ஃபீல் பண்ணி அவன் முன்னாடி பேசுறதுகூட இல்ல.
அவன் ஏனோ என் விஷயத்துல இப்படித்தான் இருக்கான், அதான் பயமா இருக்கு. வயத்தவலின்னு சொன்னா ஆர்பாட்டம் பண்ணுவானுதான் சொல்லாம இருந்தேன், உன்கிட்ட சொன்னா நீ அவன் கிட்ட சொல்லாம இருக்க மாட்ட வேற” புன்னகைத்தவர் மேலும்,
“விடு அப்படி சொல்லி இப்போ அப்பெண்டிசைடிஸ்ன்னு சொல்லவும் இது அவனுக்கு பெருசா தெரியாது. பெரியகோட்டுக்கு பக்கத்துல சின்னக்கோடு மாதிரி ஆகிடும்.” என்று புன்னகைத்தார்.
“அதெல்லாம் தெரியாது, இனிமே ஒழுங்கா உடம்ப பாத்துக்கணும், எதுனாலும் மறைக்க கூடாது. ப்ளீஸ்! வி லவ் யு வாணிமா!” வாணியின் கைகளை பற்றிக்கொண்டாள்.
“லவ் யு போத் டியர்!” என்றவர், ஏனோ அவள் கன்னத்தை வருடி கலங்கிய கண்களை மறைக்க கண்களை மூடிக்கொண்டார்.
டாக்டரை பார்த்துவிட்டு திரும்பிய பைரவ், மறுநாள் அப்பெண்டிக்ஸ் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருப்பதை தெரிவித்துவிட்டு வாணியுடன் பேசியபடி அவர் கைகளை பிடித்தவாறே அமர்ந்துவிட்டான்.
கிருஷ்ணன், கீதா. மாதவன் மூவரும் வாணியை பார்க்க மாலை வந்துவிட, அவர்களிடம் நடந்ததை சொல்லி வாணி சிரிக்க, வெட்கத்துடன் சிரித்தபடி மாயாவை பார்த்த பைரவ்,
கோவத்தில் அவளை அறைந்ததை இப்பொழுதுதான் நினைத்துப்பார்த்தான்.
தன் செயலில் வெட்கியவன், நொடியும் தாமதிக்காமல், அனைவர் முன்னனிலையிலும் மாயாவிடம் “சாரிடா” என்று அவளை நெருங்க, அவன் சொல்ல வருவதை உணர்ந்தவள்,
அவனை தடுத்து, “டேய்! டெமோ கேன்சல் ஆனதுக்கா சாரி சொல்லுவே” வாயில் வந்ததை சொல்லி சமாளித்து,
“நாங்க கேன்டீன்ட்லேந்து டின்னர் வாங்கிட்டு வரோம்!” என்று அவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறினாள்.
“அதுக்கில்லடா நான் கோவத்துல உன்ன…” வார்த்தைகள் முட்ட தான் அறைந்த கன்னத்தை மெல்ல வருடியவன், “சாரி டா…” என்று கண்கலங்க,
“தெரியும், அவங்க எதிரே உளறிவைப்பேன்னு தான் கூட்டிகிட்டு வந்தேன்” அவன் கையை இறுக்கமாக பிடித்தபடி நடக்க,
“அதுனால என்ன? பப்லிக் பிளேஸ்ல உன்னை… ச்சே என்னை மன்னிச்சுடுடா” தலை கவிழ்ந்தவன், அவளை பார்க்கவும் தயங்க,
“லூசு! இதெல்லாம் நமக்குள்ள! அவங்ககிட்டலாம் சொல்லணும்னு இல்ல, நீ கொடுக்கற கிஸ் மாதிரி இதுவும் நமக்குள்ள சீக்ரெட்!” கண்சிமிட்டி சொன்னவள் மீது, தன்னையும் மீறி காதல் பொங்கிவரதான் செய்தது.
அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய வாணியை விடுமுறை எடுத்து கூடவே இருந்து கவனித்துக்கொண்டாள் மாயா. மருந்துக்கும் மேலாக பிள்ளைகளின் பாசம் வாணியை விரைவாகவே குணப்படுத்தியது.
***
வாரங்கள் உருண்டோடிட நாட்கள் வழமைக்கு திரும்பியது, இரவு அவன் வருகைக்கு காத்திருந்தவள், வேகமாக அவனிடம், “வாங்கிட்டியா? எடு சீக்கிரம்!” அவசர படுத்த,
“எஸ்! இரு இரு… இருடா பேக்ல இல்ல, பேண்ட் பேக்கெட்ல வச்சுருக்கேன்” அவள் தேடியதை அவளிடம் கொடுக்க,
“நீயும் வா எனக்கு டென்ஷனா இருக்கு!” கால்கள் தரையில் நிற்காமல் அவள் குதிக்க,
“நா எப்படி?” அவன் தயங்க,
“வரியா இல்லையா?” அவள் முறைக்க அவளுடன் குளியலறைக்கு சென்றான்.
கீழ்தள லைப்ரரியில் புத்தகம் படித்துக்கொண்டிருந்த வாணி, மாடியில் பிள்ளைகள் இருவரும் ஏற்படுத்திய கூச்சலில் பதறி புத்தகத்தை கீழே போட்டுவிட்டு, மாடி படியை நோக்கி நடக்க, எதிரே வேகமாக ஓடிவந்த பைரவை பார்த்து, “என்னடா? எல்லாம் ஓகேவா?” என்று பதற,
“மா!” என்று படிகளை வேகமாக கடந்து வந்தவன் வாணியை இறுக்கமாக அணைத்துக்கொள்ள,
“என்னடா? விஷயத்தை சொல்லுடா” மகனை மெல்ல விலக்க, அவனோ முகமெங்கும் பல்லாக,
“வாணிமா! இல்ல நீ இனிமே பாட்டிமா!” என்று குதிக்க, சில நொடிகள் தேவை பட்டது வாணிக்கு விஷயம் புரிய,
“ஹை! கங்கிராட்ஸ்!” அவரும் வயதை மறந்து குதித்தபடி, அவனுடன் படியேறி வேகமாக அவன் அறைக்கு செல்ல, மாயாவோ, அதிர்ச்சியிலிருந்து மீளாமல், கைகளில் இருந்த ப்ரெக்னென்ஸீ டெஸ்ட் கிட்டில் ரிசல்ட்டை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.
முகமெங்கும் சிரிப்புடன் மருமகளை அணைத்துக்கொண்டு வாணி, “என் செல்லம்!” கண்கலங்க, “அப்போ நானு?” என்றபடி அவர்களை நெருங்கிய பைரவை, “நீயும்தான்டா” என்றபடி அவனையும் அணைத்துக்கொண்டார்.
மாயா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அவள் வீட்டினருக்கு தெரிவிக்க மொபைலை எடுத்துக்கொண்டு வாணி பால்கனிக்கு சென்றுவிட, இப்பொழுதும் அதிர்ச்சியில் இருந்த மாயாவை அணைத்துக்கொண்டான்.
“டேய் நம்புடா! நீ அம்மா ஆகப்போற… நான் அப்பா!” அவனால் சந்தோஷத்தை கட்டுப்படுத்த முடியவில்லை, நொடிக்கொருமுறை அவள் கன்னத்தில் முத்தம்பதித்து கொண்டேயிருந்தான்.
மெல்ல கண்கள் கலங்கியவள், தன் வயிற்றில் கையை வைத்தபடி, “தேங்க்ஸ்டா!” என்று அவன் மார்பில் சாய்ந்துகொண்டாள்.
***
மாயாவின் கர்ப்பத்தை அறிந்த அவள் பெற்றோரும் மாதவனும் காலையே அவளைப் பார்க்க இனிப்புப் பழங்கள் என்று அவளுக்குப் பிடித்ததை அள்ளிக்கொண்டு வந்துவிட்டனர்.
பெரியவர்கள் மனதார இருவரையும் வாழ்த்த, மாயாவிற்கு மோதிரம் ஒன்றை அணிவித்த மாதவன், பைரவிற்கு தங்க சங்கிலி ஒன்றைப் பரிசளிக்க,
“எனக்கு எதுக்கு இதெல்லாம்?” பைரவ் மறுக்க,
“ஹலோ நீயும் ஈக்குவலா உழைச்சுருக்கே! இது உன்பங்கும் இருக்கு மச்சி! கங்கிராட்ஸ்!” அவனை வற்புறுத்திச் சங்கிலியை அணிவித்து,
“பொண்ணுங்களையே கொஞ்ச வேண்டியது, மாப்பிள்ளையையும் கவனிக்கணும்ல” என்று கண்ணடிக்க,
“அதெல்லாம் இல்ல என் கவனிப்பெல்லாம் இனி மாயாக்கு தான்!” வாணி மாயாவின் பக்கம் சாய, “ஏன் நாங்க கவனிக்க மாட்டோமா?” பைரவ் வாணியை வம்புக்கிழுக்க,
“நாங்க பைரவ தான் கவனிப்போம்” மாதவன் பைரவின் பக்கம் சாய, கீதாவின் கண்கள் பணித்தது.
மகளை அம்மாவும் பிள்ளையும் போட்டிபோட்டுக்கொண்டு கவனிப்பது ஒரு தாயாய் கீதாவுக்கு நிம்மதியையும் சந்தோஷத்தையும் ஒரு புறம் தர, எங்கே வேலை, தள்ளிபோடுகிறோமென்று குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போட்டு விடுவார்களோ என்ற பயம் இருந்தும் அவர்களை வற்புறுத்துவது நாகரீங்கமல்ல என்று கிருஷ்ணன் கண்டித்ததால் அமைதியாக இருந்தவர், இன்று மனநிறைவாக உணர்ந்தார்.
***
மாயா தன் நண்பர்களிடம் “இன்னிக்கி சாப்பிட ஹோட்டல் போகலாம் என் ட்ரீட்” ஆர்வமாகச் சொல்ல,
வினோத், “ஹலோ! நீ சமைச்சு தான் ட்ரீட் தரேன்னு பேச்சு! எதோ வாணிமேடம் உடம்பு முடியாம இருந்தாங்கன்னு உன்னை மன்னிச்சுவிட்டோம்…அதுக்காக ஏமாத்திக்கிட்டே போவியா?”
பத்மா,”அதான? ஹோட்டல் எல்லாம் செல்லாது, நீ தான் சமைக்கிற”
தலையை சொறிந்தவள், “சமைச்சுடலாம்னு தான் சொன்னேன்…பைரவ் தான் சொன்னான்…’உன் பிரெண்ட்ஸ் நீ சமையல்ன்னு என்ன கொடுமை செஞ்சாலும் பொறுத்துப்பாங்க ஆனா ஜூனியர் பாவம், சோ கொஞ்ச மாசத்துக்கு ரிஸ்க் எடுக்காதான்னு…” என்று உதட்டைக் கடித்தபடி இமை தாழ்த்த, விஷயத்தை முதலில் புரிந்துகொண்டது பத்மா தான்,
“ஹேய் கங்கிராட்ஸ்!” என்றவள் மாயாவின் கன்னத்தில் முத்தம்தர, வெங்கட் வினோத் சந்தோஷமாக வாழ்த்தினர்.
சிலநொடிகளில் வினோத் தீவிரமான யோசனையில் மூழ்க, மாயா, “என்னடா ஹேப்பி இல்லையா? ஏன் சைலெண்டா இருக்க?”
“சேச்சே ரொம்ப ஹேப்பி தான்…”
“என்னடா?”
“வாணிமேடம கவனிச்சுக்கத்தானே லாங் லீவ்ல போன? பைரவ் சார தான் விழுந்து விழுந்து கவனிச்சிருக்க போல இருக்கே!”
“டுபுக்கு!” அவனைக் கையில் கிடைத்த நோட்டால் அடிக்க,
அவனோ “பின்ன என்ன? எங்களுக்கு சமைச்சுப்போடணும் அக்கரைல சமைக்க கத்துக்கிட்டு இருப்பேன்னு நெனச்சேன் நீ என்னடான்னா….சரி சரி அந்த பாப்பாக்காக உன்ன மன்னிச்சு விடறேன்.”
“ம்ம் வினோத் என்ன இது?” அவனை முறைத்த வெங்கட், மாயாவிடம்,
“அதெல்லாம் வேண்டாம்டா, நீ ஹெல்த்தை பாத்துக்கோ. இந்த நேரத்துல புதுசா சமைக்கலாம் செய்யாத, நாங்க எங்க போறோம், பொறுமையா குழந்தை பிறந்த அப்புறமா பாத்துப்போம்.”
பத்மா, “அவன் கெடக்கான்! எங்களுக்கு சோறு கண்டிப்பா வேணும்! தள்ளித்தான் போடுறோம் சொல்லிட்டேன்” என்று சிரித்தவள், “இனிமே உன் வேலைல எப்போ ஹெல்ப் வேணும்னாலும் எங்களை கேளு ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்காத” மாயாவின் கையை பற்றிச் சொல்ல,
“ஆமா” என்ற வினோத், எந்த ஹெல்ப் நாளும் அவளை கேளு அவதான் இப்போதைக்கு வெட்டி பீஸு” என்றுவிட்டு, பத்மாவின் முறைப்பை பரிசாகப் பெற்றான்.
****