Thozhimar kadhai 19

Thozhimar kadhai 19

தோழிமார் கதை 19

கெளசி ஆயாசமாக தன் கணவணின் நினைப்பில் தன்னை மூழ்கடித்துக் கொண்டிருந்தாள். நினைவுகளின் கதகதப்பில் சுற்றிலும் மெதுவாகப் படர்ந்து கொண்டிருந்த குளிர் கெளசிக்கு உரைக்கவில்லை.

அவளது நினைவு முழுக்க முழுக்க தனக்கு இன்னும் வாய்க்கப்பெற்றிறாத மழலைச் செல்வத்தைக் குறித்த ஏக்கத்திலேயே உழன்றுகொண்டிருந்தது.

எவ்வளவு மருத்துவ வசதிகள் வந்து விட்டபோதிலும், குறை ஆண் பெண் இருவருக்குமே இருக்கலாம் என ஆராய்ச்சிகள் பரைசாற்றிய போதிலும், தனக்கு குழந்தை இன்னமும் பிறக்காதற்குக் காரணம் தானே தான் என்ற எண்ணம் கெளசியின் மனதை நிரப்பியிருந்தது.

“உங்கிட்ட ஒண்ணும் பிரச்சனையில்ல கெளசி. நாம தான் செக்கப் போறோமே..அப்பறம் ஏன் வருத்தப்படற”என ஆறுதலாகக் கூறவேண்டிய கணவன் அசட்டையாகவே நடந்து கொண்டான். ஓரளவு சிவசுவின் மன நிலையையும் கெளசி புரிந்து கொள்ளவே முயற்சி செய்தாள்.

“பாவம் அவருக்கு டெஸ்ட் எடுக்கணும், அப்படி இப்படின்னு ஏதும் சொல்லி, தன் மேல பழி விழுந்திடுமோன்னு கவலைப்படறார்”என்னும் அளவில் கெளசிக்கு சிவசுவின் மனம் புரிந்துதானிருந்தது. ஆனாலும், இது ஒரு சக்கரம் மட்டும் கொண்டு சுற்றப்படவேண்டிய தேர் அல்லவே. இருசக்கரமும் செவ்வனே சுழலவேண்டும் அல்லவா?

தான் மட்டும் குழந்தையில்லை குழந்தையில்லை என மருத்துவ பரிசோதனை செய்து கொண்டாள் போதுமானது அல்லவே. அது இது என கூகிளின் உதவியுடன் சுயபரிசோதனை மேற்கொண்டதில் கெளசி கண்டு கொண்ட விஷயங்கள் சில உண்டு. ஆண்களுக்கு விந்து குறியபாடு அல்லது எண்ணிக்கையில் குறைபாடு இருந்தாலும் மகப்பேறு உண்டாவதில் காலதாமதம் ஆகலாம் என பல அறிக்கைகள் கூறியுள்ளன. ஆனால் “உங்களுக்கு ஸ்ப்ர்ம் கவுண்ட் கம்மியா இருக்கா கரெக்டா இருக்கான்னு செக் பண்ணலாமா சிவசு”என சிவசுப்பிரமணீயத்திடம் கேட்கும் தைரியம் கெளசிக்கு வாய்க்கப்பெறவில்லை.

அவளால் முடிந்தது தன் மேல் பாரத்தை ஏற்றிக் கொள்வது மட்டுமே. அதை கெளசி திறம்படவே செய்தாள்.

அரை மணி நேரமாகியும் பால்கனிக்குச் சென்ற மகள் திரும்பவில்லையே என கெளசியைத் தேடிக் கொண்டு அவளது அன்னை வந்து சேரும் வரை கெளசி தன்னிலை மறந்தே அமர்ந்திருந்தாள்.

“பனி பெய்யறது பாரும்மா….உள்ளற வந்து படு..”என அதட்டிய அன்னை, கையோடு கெளசியை அவளது கட்டிலில் கிடத்திய பிறகே நகர்ந்தார். மனம் முழுக்க பாரமாக அழுத்திய போதும், கெளசி அப்போதைக்கு அன்னையின் வார்த்தைகளுக்குச் செவிசாய்த்து உறங்க எத்தனித்தாள்.

********

இலக்கியாவிற்கு அன்று ஒரு முக்கியமான மீட்டிங்க இருந்தது. கெளசியிடமிருந்தும், அர்ச்சனாவிடமிருந்தும் ஒரு முறை இலக்கியாவின் எண்ணிற்கு அழைப்பு வந்திருந்தது. இலக்கியாவால் அந்த அழைப்பை ஏற்க இயலவில்லை.

இலக்கியா இப்போது பெங்களூரில் ஒரு நடுத்தரமான பொறியியல் கம்பெனியில் வேலை செய்து வந்தாள். அவளது திறமைக்கு ஏற்ற இடம் இல்லை என்னும் போதும், நிறைய கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் இருந்தன. சிறிய கம்பெனியே ஆன போதும், பெரிய அலுவலகங்களுக்கு இணையான சம்பளம் வழங்கியதால் இலக்கியாவிற்கு இந்த அலுவலகம் பிடித்திருந்தது.

கசகசவென ஆயிரமாயிரம் பேர் வேலை செய்யும் பெரிய கண்ணாடி அடுக்குமாடிகள் இல்லாத, பெங்களூரின் சந்தடியில் இருந்து சற்றே உள்ளடங்கிய அழகியதொரு அவென்யுவில் அமையப் பெற்றிருந்த இந்த கம்பெனி பார்த்த மாத்திரத்திலேயே இலக்கியாவை கவர்ந்தது.

கல்லூரி முடித்து, கேம்பஸில் வேலையும் பெற்று மகிழ்ச்சியாக சுற்றிக் கொண்டிருந்தவளை காலம், எங்கெங்கோ இழுத்துச் சென்று இறுதியாக இன்று பெங்களூரில் நிறுத்தியிருந்தது. அலுவலக வேலைகள் முடித்து, நடை தூரத்தில் இருந்த தனது வாடகை வீட்டை நோக்கி மெல்ல நடைபயின்றாள் இலக்கியா.

மதியம் தொலைபேசியில் தோழிகள் அழைத்தது நினைவுக்கு வர, கைப்பேசியில் முதலில் அர்ச்சனாவிற்கு அழைத்தாள். அழைப்பு மணி அடித்து ஓய்ந்த பின்பும் தொடர்பு எடுக்கப்படவில்லை. அடுத்ததாக கெளசிக்கு அழைத்தாள்.

“ஹே மாமி…என்ன இந்தியா நம்பர்ல இருந்து ஃபோன்….எப்போ வந்த இங்க?”

“நான் வந்து பத்து நாளாச்சு….உனக்கு மெசேஜ் பண்ணா ஒரு ரிப்ளையும் பண்ண மாட்டேங்கற…ஃபோன் பண்ணா எடுக்க மாட்டேங்கற…என்ன தான் செய்வியோ….போ”

“ஹே இல்ல கெளசி….கொஞ்சம் வேலை ஜாஸ்தி….சாரி டீ, ஒரு மீட்டிங்கல இருந்தேன். அதான் கால் எடுக்க முடியலை.”

“பரவாயில்ல பரவாயில்ல, நீ என்ன என்னை மாதிரி வெட்டி ஆபீசரா. முக்கியமான வேலை ஆயிரம் இருக்கத்தானே செய்யும் நோக்கு..”

“ஏ…அடிவாங்கப் போற நீ… சரி சொல்லு, திலி கல்யாணத்துக்கு வர்ற தானே? உங்க வீட்டில பர்மிஷன் குடுத்துட்டாங்களா? இல்லையா?”

“அதை சொல்லத்தான் கூப்பிட்டேன். போயிட்டுவான்னு சொல்லிட்டா. ஆனா,”

“ஆனா என்ன, உன் அம்மாவையும் உங்கூட துணைக்கு அனுப்பியிருப்பாரே உங்கப்பா”

“ஹே, மந்திரவாதி..அதே தாண்டீ. எப்படிடீ நீ மட்டும் இவ்வளோ அறிவாளியா இருக்கே…100% கரெக்ட். அம்மாவையும் என்னோட சேர்ந்து போகச் சொல்லியிருக்கார். அதான் என்ன பண்ணறது? எப்படி கழட்டிவிடறதுன்னு தெரியலை.”

“அடிப்பாவி…அவங்க வந்தா உனக்கு என்னடி பிரச்சனை. அவங்க உனக்காத்தானே வர்றாங்க…”

“பிரச்சனைன்னு இல்லைடீ. நாம ஃப்ரீயா பேச முடியாது. அவங்க என்ன பண்ணறாங்கன்னு பார்த்துண்டே இருக்கணும்.”

“ஒண்ணு பண்ணலாம். நைட் ரிசப்ஷன் முடிச்சிட்டு, நாம எல்லாரும் மண்டபத்தில தங்கிக்கலாம். உங்க அம்மாவை ஹோட்டல தூங்க சொல்லிக்கலாம். உன் அம்மா அங்க தங்கிகட்டும், நாம மண்டபத்தில இருந்துக்கலாம். என்ன சொல்லற.”

“ஹே சூப்பர்டீ.. நான் அம்மாட்ட பேசி சம்மதிக்க வச்சிடறேன்”

“இரு இரு. அவசரப்படாத. இப்பவே சொல்லணும்னு அவரசம் இல்லை. மெதுவா சொல்லலாம். இந்த அர்ச்சனா என்ன ப்ளான்னு சொல்லவேயில்லை. வராளா இல்லையான்னும் தெரியலை. அவளும் மதியானம் கூப்பிட்டிருந்தா கெளசி. நான் தான் எடுக்கலை. இப்போ கூட அவளுக்கு ட்ரை பண்ணேன். ரிங்க் போகுது, ஆனா எடுக்கலை.”

“ம்ம்..பிசியா இருப்பாளோ என்னவோ. அவ எப்படியும் அரவிந்த் கூட தான் வருவா. சோ, அவங்க ஹோட்டல் ரூம்ல தங்கிப்பாங்க…ஆமா, நாம மண்டபத்திலையா தங்கறோம், திலி ஹோட்டல்ல ரூம் பேசறேன்னுல சொன்னா.”

“ம்ம்…ஆமா ஹோட்டல்ல ரூம் போடறாதான். மண்டபத்திலையும் ரூம்ஸ் இருக்காம். சோ, நமக்கு எது வசதியோ அப்படி தங்கிக்க சொன்னா…அதெல்லாம் அங்க போய் பார்த்துக்கலாம். சரியா. “

“ம்ம்ம்..ஒ.கே டி இல்லு. ஆபீஸ் முடிஞ்சுதா? எங்க இருக்க இப்போ”

“இப்போ தான் வெளிய வந்தேன். வீட்டுக்கு நடந்துட்டு இருக்கேன். போறவழியில நைட்டுக்கு டின்னர் செய்ய திங்க்ஸ் வாங்கிட்டுப் போகணும்.”

“ஓ, நீ ஹாஸ்டல்ல இல்லையா? தனியா வீடு எடுத்து இருக்கியா?”

“ம்ம்ம்…ஆமா டீ, நான், அப்பறம் ஆபீஸ் கலீக்ஸ் ஒரு மூனு பொண்ணுக சேர்ந்து வீடு எடுத்திருக்கோம். ஹாஸ்டல் சாப்பாடுலாம் ஒத்து வரலை. இந்த வீடு எங்க ஆபீஸுக்கு ரொம்ப பக்கம்.”

“ம்ம்ம்ம்..சரி டீ இல்லு…நீ பார்த்து போ. நா அப்பறமா கூப்பிடறேன். அர்ச்சனாகிட்ட பேசிட்டு, அவ ப்ளான் என்னன்னு கேட்டுட்டு அப்பறமா நாம டிசைட் பண்ணிக்கலாம்.டீ, கல்யாணத்துக்கு சாரி தான கட்டுவ?”

“ம்ம்ம் ஆமா…”

“ஓ.கே ஒ.கே …நான் அம்மா சாரி தான் கட்டறேன். நாளைக்கு போய் ப்ளவுல் ஆல்டர் பண்ணிட்டு வரணும். நிறைய வேலை இருக்கு..பை டீ”என மொழிந்த கெளசல்யா கைப்பேசியை அணைத்துவிட்டிருந்தாள்.

இலக்கியா தனக்குள்ளே மென்மையாக சிரித்துக் கொண்டவள், கெளசியின் பேச்சை மென்மையாக அசைபோட்டவண்ணம் நடந்தாள். இந்தப் பெண்ணைப் போல் தன் வாழ்க்கையில் பெரிதாக துன்பங்கள் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என எண்ணவோட்டம் சென்றது.

அர்ச்சனாவிற்கு அவளுக்கு பிடித்த ஆடவனுடனேயே திருமணம் முடிந்து விட்டிருந்தது, கண் நிறைய கணவனும், கைநிறைய குழந்தையும் உள்ளது. கெளசிக்கு யு.எஸ் மாப்பிள்ளை. என்ன தற்போதைக்கு குழந்தை இல்லையே என்ற கவலை இருப்பினும், இப்போது உள்ள அதிநவீன மருத்துவ தொழில்நுட்பத்தால், குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று எதுவும் இல்லை. கொஞ்சம் பணமும், சிறிது பொறுமையும் இருந்தால், டெஸ்ட்டியூப் பேபி, ஐ.வி.ஃப் என ஏகப்பட்ட சிகிச்சைகள் செய்து கொள்ளலாம்.

திலீபாவின் வாழ்க்கையோ கேட்கவே வேண்டாம். இயல்பிலேயே செல்வ செழிப்புடன் வளர்ந்தவள். வசதி வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை. திருமணம் முடிந்து அடுத்த வாரமே லண்டன் பறந்து விடுவாள்.

ஆக, மற்ற மூவரது வாழ்க்கையைக் காணும் போது, தன் நிலைமை மட்டும் சற்றே தாழ்ந்திருப்பது போல் இலக்கியாவிற்குத் தோன்றியது.

“அப்பா உயிருடன் இருந்திருந்தால்..”

“கேம்பஸில் கிடைத்த வேலை, இல்லை என ஆகாமல் போயிருந்தால்….”

“பெங்களூர் வந்து சேர்ந்த புதிதில், அந்த சிறிய கம்பெனியில் வேலை கிட்டாமல் போய், அவனை சந்திக்கும் வாய்ப்பு அமையாமல் போயிருந்தால்…”

“அன்னைக்கு அந்த இக்கட்டான நிலைமை ஏற்படாது இருந்திருந்தால்..”என இலக்கியா தன் வாழ்வை ஆதியிலிருந்து மனதில் ஓட்டிப் பார்த்துக் கொண்டாள்.

கெளசியுடன் பேசிக் கொண்டே தனது வீட்டிற்கு வந்து சேர்ந்தவள், தனது அறைக்குள் சென்று கட்டிலில் தொப்பென விழுந்தாள். விழிகள் விட்டத்தை வெறிக்க, தனது கல்லூரியில் தோழிகளை விட்டுச் சென்ற பஸ் குறித்து எண்ணங்கள் நீண்டன. இலக்கியாவின் உதட்டோரத்தில் இயல்பாக மலர்ந்துவிட்ட புன்னகையுடன், “பஸ் போயிருச்சா?”என மதனின் கரகரகுரல் ஓசையை நினைவு கூர்ந்தாள்.

*********

*********

புழுதியை கிளப்பிக் கொண்டு சென்று விட்டிருந்த கல்லூரிப் பேருந்தை தோழிகள் நால்வரும் பார்த்துக் கொண்டு நிற்க, “பஸ் போயிருச்சா?”என அவனது குரல் கேட்டு முதலில் சுதாரித்தவள் இலக்கியவே.

“இப்படி என்னடீ பண்ணறது?”என அர்ச்சனாவும், கெளசியும் சற்றே பதட்டப்படத் துவங்க மதனின் சிரித்த முகத்தை கண்ட திலிபா சற்றே எரிச்சலடையத் துவங்கினாள்.

ஆனால் அவளது பார்வையில் “இவனுக்கெல்லாம் பதில் சொல்லனுமா என்ன?”என்ற எகத்தாளம் ஏகத்துக்கும் அப்பியிருந்தது. “ச்ச்ச்”என மதனின் கேள்வியை அலட்சியம் செய்த திலிபாவின் அசட்டையான முகத்தைக் கண்ட மதன் அடுத்து கேள்வி கேட்காமல் அமைதியாக கைகளை முன்னால் நீட்டினான்.

அவனது விரல்களில் ஒரு வண்டியின் சாவி ஊசலாடிக் கொண்டிந்திருந்ததைக் கண்ட திலிபா “என்ன செய்கிறான்?”என கண்களை குறுக்கிக் கொண்டு அவனை ஏறிட்டாள்.

வார்த்தைகளால் ஏதும் சொல்லாவிடினும், நீட்டிய கைகளை திலிபாவின் பக்கம் காட்டியபடிக்கு நின்றிருந்தவன் “ம்ம்ம்ம்” என உதட்டுகளைப் பிரிக்காமல் சிரிப்புடன், ஒரு வித சவால்விடும் தன்மையுடன் கைகளை மீண்டும் திலிபாவின் பக்கம் நீட்டினான்.

புதிர் செல்லியாயிற்று, பிரச்சனைக்கான விடையும் கைகளில் காட்டிவிட்டேன். ஆனால் அதை நடைமுறைப்படுத்தும் தைரியம் உனக்கு உள்ளதா என திலிபாவை கேட்காமல் கேட்பது போல் சாவியை மெல்ல முன்னும் பின்னும் ஆட்டிய மதனின் கள்ளச் சிரிப்பு, அவனது உதட்டை விட்டு மெல்ல பிரித்து இப்போது கண்களில் குடிகொண்டிருந்தது.

“என்ன சொல்லவருகிறான் இவன். வண்டி சாவி தருகிறான். டூவிலரில் சென்று பேருந்தை மடக்கிப் பிடித்து தோழிகளை ஏற்றி விட முடியுமா என்ன? பேருந்து செல்லும் வேகத்திற்கு, இருசக்கர வாகனத்தில் சென்று பிடிக்க முடியுமா? ”என இலக்கியா யோசித்துக் கொண்டிருக்கும் போதே திலிபா அவனது கைகளில் ஆடிக் கொண்டிருந்த வண்டியின் சாவியை தன் கைகளில் பிடித்திருந்தாள்.

“திலி என்ன பண்ணற? சாவிய எதுக்கு வாங்குன….திருப்பிக் குடு அவங்கிட்ட….மேம்ட்ட பேசி, ரெண்டு பேர்த்தையும் ஹாஸ்டல்லையே தங்க வைக்கப்பார்க்கலாம். பஸ் மிஸ்ஸாகிருச்சுன்னு உண்மையை சொல்லலாம். கழுத்தை பிடிச்சா வெளிய தள்ளீருவாங்க…ப்ளீஸ் அவசரப்படாத..” என இலக்கியா தன் போக்கில் பேசிக் கொண்டிருக்க, திலிபாவின் செவிகளில் அந்த வார்த்தைகள் ஏதும் சென்று சேர்ந்திருக்கவில்லை என தெளிவாகப் புரிந்தது.

“வண்டி எங்க இருக்கு?”என அடுத்த கேள்வியை மதனிடம் கேட்டே விட்டிருந்தாள்.

“ஏ திலி…வேண்டாம்…சொன்னாக் கேளு…அவன் நம்மளை வம்புல மாட்டிவிடப் பார்க்கறான். ஹாஸ்டல் கேர்ல்ஸ் 7ஓ கிளாக் மேல கேம்பஸ் விட்டு வெளிய போனா டிசிப்ளினரி ஆக்ஷன் எடுப்பாங்கன்னு உனக்குத் தெரியும்ல…” என இலக்கியா ஒருபக்கம் வாதாட,

“திலி….மேம்ட்ட போய் பேசலாம்….நாங்க நைட் இங்கையே ஸ்டே பண்ணிக்கறோம். வேற டிபார்ட்மெண்ட் பொண்ணுக கிட்ட யுனிஃபர்ம் சாரி வாங்கி நாளைக்கு மேனேஜ் பண்ணிக்கலாம். சரியா”என அர்ச்சனா தன் பங்கிற்கு கூறினாள்.

கெளசி மட்டுமே திலிபாவிற்கும், மதனிற்கும் இடையில் நடந்து கொண்டிருந்த பார்வை வீச்சுகளை தன் மூளையில் பதிவெடுக்கும் வேலையே செய்து கொண்டிருந்தாள்.

இருவருக்கும் இடையில் ஒரு மெளன பேச்சுவார்த்தையே நடந்து கொண்டிருப்பது போல் கெளசிக்குத் தோன்றியது. ஆச்சர்யமும், கள்ளத்தனமும் மிளிர நின்றிருந்த மதனும், அவனது எண்ணவோட்டத்தைப் புரிந்து கொள்டவள் போல் சளைக்காமல் அவனது பார்வைக்கு ஈடுகொடுத்து முகத்தில் வண்டி வண்டியாக அலட்சியத்தை தேக்கியபடிக்கு நின்றிருந்த திலிபாவும் கெளசிக்கு விசித்திரமாகத் தோன்றியது.

“எப்படி வீடு செல்லப்போகிறோம்?”என்ற கவலை சிறிதும் இன்றி, பயங்கர ஆர்வத்துடன் ஆவென வாயை பிளந்து கொண்டு இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் கெளசி.

“திலி…இவன் மாட்டிவிடப் பார்க்கறான்..டிசிப்ளினரி ஆக்ஷன் எடுத்தா ப்ளேஸ்மெண்ட் அட்டெண்ட் பண்ண முடியாம போக சான்ஸ் இருக்கு…ப்ளீஸ் அவசரப்படாத”என இலக்கியா திரும்ப மொழிய, அதற்கு பதிலாக, இலக்கியாவிடம் திரும்பிய மதன், “இப்படி யோசிச்சுட்டே இருந்தா பஸ் ரொம்ப தூரம் போயிரும்…அவ்வளோ பயமா இருக்குன்னா..பரவாயில்லை…வேண்டாம் ?இட்ஸ் ஃபைன்…”என தோளைக் குலிக்கியவன், வேண்டுமென்றே “பயம்”என்ற வார்த்தையை பிரயோகித்தான் என அறியாமல் போல இலக்கியா ஒன்றும் முட்டாள் அல்லவே.

அன்று கணிணீ லேபுல்,”பயமெல்லாம் இல்லை…”என தெனாவெட்டாகக் கூறிய திலிபாவை சீண்டும் பொருட்டே வார்த்தைகளை வீசுகிறான் என இலக்கியா உணர்ந்த போதும், திலிபா ஏற்கனவே அவனது போட்டியை ஏற்றுக் கொண்டது போலத் தான் தோன்றியது.

“திலி, அந்த ஷன்முகப்பிரியா மேம் வேற இவனோட செட்டு. வேணும்னே நம்மளை மாட்டி விட்டுடுவான். வேண்டாம்…” என அர்ச்சனா ஏதோ தன் பங்கிற்கு பேசிய போதும், அவளது கவனம் மதனிடமே குவிந்திருந்தது.

அவன் நின்றிருந்த பாங்கு, தலையை லேசாக சாய்த்துப் பேசியவிதம், எல்போ அளவில் மடித்து விடப்பட்டிருந்த அந்த கருப்பு சட்டை, வலது கையை இறுக்கப்பிடித்திருந்த செம்புக் காப்பு, என மதனின் உருவத்தை ஏனென்று தெரியாமலேயே மனதில் படமெடுத்துக் கொண்டிர்ந்தாள் அர்ச்சனா. நடக்கப் போகும் விவகாரங்கள் குறித்து யாரேணும் முன்னரே சொல்லியிருந்தால் தேவலாம் போல். ஆனால் நடப்பவை எல்லாம் நாடகமே என்ற கூற்றுப்படி, தன்னையும் அறியாமல் நாடகத்தில் ஒரு பாத்திரமாகிப் போனாள் அர்ச்சனா.

“வண்டி எங்க?”என திலிபாவின் பேச்சிற்கு பதிலாக, மதன் வலது பக்கம் நோக்கி தலையை அசைக்க, திலிபா சற்றும் தாமதிக்காமல் கையில் பிடித்திருந்த சாவியினை அசைக்க, வலது பக்கம் படர்ந்திருந்த இருளைக் கிழித்துக் கொண்டு அந்த சிறிய சிவப்பு நிற ஸ்விஃப்ட் வண்டி “டப் டப்” “நான் இங்கிருக்கிறேன்” என்பது போல பதிலளித்தது

“ஏ அவனோட கார்ல….மாட்டுனோம் தீர்ந்தோம்…”என அர்ச்சனா மொழிய, கெளசியோ, “திலி…உனக்கு கார் ஓட்டத் தெரியுமா?” என அத்தியாவசியமான அந்தக் கேள்வியினைக் கேட்டாள்.

இதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு திலிபா அங்கே நின்றிருக்கவில்லை. நேரே காரின் அருகே சென்றவள், லாவகமாக சீட்டில் ஏறி, காரினை மெல்ல ரிவர்ஸ் எடுத்தாள்.

திலிபா காரை சாதாரணமாக கையாளுவதைக் கண்ட களிப்பில் கெளசி ஆர்வமாக அவளது பையை எடுத்துக் கொண்டு வண்டியின் பின்னால் ஏறிக் கொள்ள.அர்ச்சனாவுமே ஏதோ ஒரு அசட்டுத் தைரியத்தில் கெளசியுடன் காரினுள் ஏறினாள்.

காரை கல்லூரியின் வாயில் நோக்கி அழகாகத் திருப்பிய திலிபா, பார்க்கிங் அருகில் அசையாது நின்றிருந்த மதனின் அருகே உரசும் படிக்கு காரினை கொண்டு சென்று நிறுத்தினாள்

“சே, படத்தில ஹீரோவும் வில்லனும் மோதிக்கர மாதிரியே இருக்குல்ல அர்ச்சு…இப்போ இந்த இடத்துக்கு திலி ஏதாவது பஞ்ச் டயலாக் பேசினா நல்லா இருக்கும்….”நான்லாம் 4 வயசுலையே காரில நாலாவது கீர்ல பறந்தவ…மைண்ட் இட்…இப்படி ஏதாவது சொல்லுவான்னு நினைக்கறேன்….நீயா இருந்தா, “ஒரு தென்றல் புயலாகி வருதேஏஏஏஏ” ந்னு பி.ஜி.எம் போட்டிருப்ப….” என சம்பந்தமில்லாமல் மொழிந்த கெளசியை அர்ச்சனா கவனிக்கவில்லை. மாறாக, கண்ணாடியின் வழியே திலிபா மதனிடம் பேசிய வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டிருந்தாள்.

“பயமா இல்லைன்னு நான் ஃப்ரூவ் பண்ணிட்டேன். உங்களுக்கு பயமா இல்லைன்னா, டிராப் பண்ண வரலாமே…திரும்பி வர்றபோ நான் மட்டும் தனியா வரணுமே” என மொழிந்த திலியை கண்களின் கிண்டல் சற்றும் குறையாமல் ஏறிட்டான் மதன்குமார்.

“அப்போ என்னை கூட்டிட்டுப் போகமாட்டியா என்ன? என்னடீ நடக்குது இங்க?”என மனதில் கேள்வியுடன் சற்றே ஒதுங்கி நின்றிருந்த இலக்கியாவின் கேள்வி வாயை எட்டவேயில்லை.

அதற்குள், மதனையும் ஏற்றிக் கொண்ட அந்த சிவப்பு ஸ்விஃப்ட் கல்லூரியின் வாயில் நோக்கி வேகமாக முன்னேறியிருந்தது.

error: Content is protected !!