tik 27
tik 27
கமலக்கண்ணன்… வேல்விழி திருமணம் முடிந்த பிறகு… வேறு எந்த சலசலப்பும் இல்லாமல்… குடும்பம் அமைதியாகச் சென்றுகொண்டிருந்தது…
வேல்விழி… அருகிலேயே இருக்கும் கல்லூரியில்… சேர்ந்துவிட… வழக்கம் போல கமலக்கண்ணன் கல்லூரிக்கு சென்றுவந்தான்…
முன்புவரை… அடிக்கடி பிறந்தவீடு வந்து போய்க்கொண்டிருந்த கயல்… நிரந்தரமாக… அங்கேயே தங்க ஆரம்பித்தார்…
அப்பொழுதுதான்… கயலையும்… வேல்விழியையும் பார்க்கவென அவர்கள் வீட்டிற்கு வந்துபோகத் தொடங்கினாள்… ராமலிங்கத்தின் அண்ணன்… கணேசனின் மகள் அனுபமா…
அதுவரை… மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கட்டாய பணியிட மாறுதல் காரணமாக… வேறு வேறு மாநிலங்களில் இருந்தவர்கள்… அவர் ஓய்வு பெற்றுவிட… அங்கேயே குடி வந்துவிட்டனர்…
அனைவருடனும்… கலகலப்பாகப் பழகும் அனுவை… அங்கே எல்லோருக்கும் பிடித்துப் போனது…
அம்முவும்கூட அவளுடன் நெருங்கிப் பழகத் தொடங்கினாள்…
இதற்கிடையில்… மென்பொருள் துறையில் வேலை செய்துகொண்டிருந்த… லட்சுமியின் தம்பி… சந்திரனுக்கு… நியூ ஜெர்சியிலேயே வேலை நிரந்தரமாகி… அங்கேயே குடியுரிமையும் கிடைத்துவிடவே… மேலும் அவர்களது மூத்த சகோதரன் கணபதியும் அவர்களது அன்னையுடன்… சென்னையிலேயே குடியேறிவிட… ஐயங்கார்குளத்திலிருந்த அவர்களது வீட்டை… முழுமனதுடன்… லட்சுமிக்கே கொடுத்துவிட்டனர் சகோதரர்கள் இருவரும்…
விளைநிலங்களை விற்கலாம் என அவர்கள்… முடிவுசெய்தபொழுது… ஆதியே அதற்கான தொகையை கொடுத்து அதை வாங்கிக்கொண்டான்…
இவை அனைத்துமே… பிரச்சனைகள் ஏதும் இன்றி… அவர்களுடைய வசதிக்காகவும்… அன்பின் அடிப்படையிலும் நடந்தவையே… லட்சுமியின் அண்ணி… நந்தினி மற்றும் தம்பி மனைவி அருணா… இருவருமே புரிதலுடன் நடந்துகொண்டனர்…
ஆனால் அதை ஒப்பிட்டு… நேரடியாக இல்லாவிட்டாலும்… மறைமுகமாக… சொத்துக்களைப் பிரிப்பது சம்பந்தமாக… கயல் மற்றும் சுலோச்சனாவால்… அவர்கள் குடும்பத்திலும் சலசலப்பு எழத் தொடங்கியது…
அதனால் ஒரு முடிவிற்கு வந்தவராக… அருளாளன்!! வரதன்… செல்வம்… மற்றும் மூன்று பேரன்கள் என அனைவரையும் தனியாக அழைத்து…
“சொத்துக்காக… பிரச்சினை… மனஸ்தாபம்… ஆகவேண்டாம் என நினைக்கிறேன்… அதனால் மூன்று வீடுகள்… விளை நிலங்கள் என மூன்று பேருக்குமே… சமமாகப் பிரித்துவிடலாம்… பரமேஸ்வரியின் நகைகளை… கயல் மற்றும் அம்முவிற்குக் கொடுக்கலாம் என்று முடிவுசெய்திருக்கிறேன்…” என்று நிறுத்தியவர்… தொடர்ந்து…
“கடையைப் பிரிப்பதை மட்டும்… என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை… அதனால் அதை ராஜாவிற்கே… கொடுத்துவிடலாம் என்று நினைக்கிறேன்… லாபத்தை மட்டும் வழக்கம்போல் மூன்று பெரும்… பிரித்துக் கொள்ளுங்கள்…” என அவர் சொல்லவும்…
செல்வம்… “உங்கள் இஷ்டம் பா… கயலும்… சுலோவும்தான் எதாவது பிரச்சினை செய்வார்கள்… ஆனால் அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம்!” என முடித்துக்கொள்ள…
கமலக்கண்ணனும்… அமைதியாய் இருக்க… விமலுடைய முகம் கறுத்து போனது…
இதெல்லாம் அமைதியாகக் கவனித்துக்கொண்டிருந்த… வரதன் மற்றும் ஆதி இருவரின் பார்வைகளும் ஒரே நேர்கோட்டில்… சந்தித்துக்கொள்ள…
“என்ன?” என்பதுபோல் வரதன் புருவத்தை உயர்த்தவும்… “சரி!!” என்பதுபோல் தலையை மட்டும் ஆட்டினான் ஆதி…
“அப்பா! நீங்க வருத்தப்படலன்னா… என் முடிவைச் சொல்லுகிறேன்…” என்ற வரதன்… தொடர்ந்து…
“நான் முன்பே… கடையைத் தம்பிக்கு விட்டுக்கொடுத்துவிட்டேன்… அவர்களும் கடையை நன்றாகவே நடத்துகின்றனர்…” என அந்த ‘அவர்களில்’ அழுத்தம் கொடுத்து… சுலோவின் அண்ணனின் தலையீட்டை… குறிப்பாகச் சொன்னவர்…
“நம்ம ராஜாவும்… வேறு தொழிலை தேர்ந்தெடுத்துவிட்டான்… கயலுடைய ஒரே மகளை வேறு… கமலுக்குக் கொடுத்திருப்பதால்… அவர்களுக்குள் பிரச்சினை வராது… அதனால் கடை ராஜாவுக்கு வேண்டாம்… அதைப் பிரிக்கவும் வேண்டாம்… அதனால் தம்பியின் பெயருக்கே மாற்றிவிடுங்கள்…” என முடிவாகச் சொல்லிவிட…
அருளாளன்… ஆதியின் முகத்தைப் பார்க்கவும்… ” அப்பாவின் முடிவுதான்… தாத்தா… என் முடிவும்!” என்று சொல்லி அவரை நெகிழ வைத்தான் ஆதி…
பிறகு ஏதோ யோசித்தவர்… “ம்… அப்படியானால்… நம்ம கடையை ஒட்டி… வாடகைக்கு விட்டிருக்கும் இடத்தை… ஆதியின் பெயருக்கு மாற்றிவிடுகிறேன்… அவன் அங்கே ஹோட்டல்… வைத்துக்கொள்ளட்டும்…” என்று கட்டளையாக சொல்லி முடித்தார் அருளாளன்…
ஆனால்… அந்த ஏற்பாட்டிலும் குறைபட்டுக்கொண்ட சுலோச்சனா… மாமியாரின் நகைகளைக் கயலுக்கும்… அம்முவிற்கும் கொடுக்கவேண்டும் என்ற ஏற்பாட்டை விரும்பாமல்… அதைச்சொன்னால் கயலை பகைத்துக்கொள்ள நேரும் என்ற பதட்டத்தில்… அந்த இடத்தை ஆதிக்குக் கொடுக்கக்கூடாது என்று சொல்ல…
“ஆதி… வேண்டாம் என்று சொல்லிவிட்டதால்தான்… கடையை நமக்கே கொடுத்துவிட்டார்… அப்பா!”
“நீ இப்படி தகராறு செய்தால்… ஆதி வேண்டாம்னு சொன்னாலும்… அவன் பெயரிலேயே எழுதிவைத்தாலும்… வைத்துவிடுவார்…” எனக் கடுமையான குரலில் செல்வம் சொல்லவும்… அடங்கினாள் சுலோச்சனா…
ஆனால்… “கடையை… கமல் பெயருக்குத்தான் எழுதவேண்டும்!”
“அதுவும் தனியாக கடையை எழுதிக் கொடுத்த பிறகு… லாபத்தில் பங்கெல்லாம் பிரிக்கக்கூடாது… இல்லையென்றால் கடையை பிரித்துக்கொடுத்து விடுங்கள்!” என்று… ஒரே பிடியில் நின்றாள் கயல்…
அதேநேரம்… தனது மைத்துனனின் நிலையை எண்ணி… மனம் வருந்திய லட்சுமி… “கயல்… நீ பேசுவது… ரொம்ப தப்பும்மா… இப்ப கடையைப் பார்த்துக்கொள்வது… செல்வம் தம்பிதானே… அதனால் அவர் பெயரிலேயே கடையை எழுதிடலாம்… நீ பிரச்சினை பண்ணாதே” ஏன்றுவிட…
“தாயும்… பிள்ளையுமானாலும்… வாயும் வயிறும் வேறு வேறுதானே! சமையல் செய்வதைத் தவிர… உங்களுக்கு வேறு என்ன தெரியும்…”
“என்னை மாதிரி… சுலோச்சனாவை மாதிரி… தொழில் செய்யும் குடும்பத்திலிருந்து வந்திருந்தால் உங்களுக்குப் புரிந்திருக்கும்… இந்தக் கடையில் என் பங்கும் இருக்கு… இது என் மகளுக்கும்… மாப்பிள்ளைக்கும் மட்டுமே சேரனும்…” எனக் கட்டமாக கயல் பேசவும்…
வரதன்… லட்சுமியை நோக்கி… தீ பார்வையை வீச… அதற்குமேல் ஏதும் பேசாமல் அவர் உள்ளே சென்றுவிட்டார்…
அந்த வார்த்தைகள் ஆதியின் மனதில்… தீராத ரணத்தை உருவாக்கிவிட்டது… அந்த வலி… அன்னைக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை… ஆதிக்குள் விதைத்தது…
தனது மகளை வைத்து காரியத்தை சாதிக்க நினைக்கும்… கயலின் இந்தப் பேச்சில்… மொத்தமாக அடிவாங்கிப்போனாள் சுலோச்சனா…
மறுத்தால் மகனை விட்டுக்கொடுக்கும் சூழ்நிலை உண்டாகும் என்று தோன்றவே… வேறுவழியின்றி… கயல் சொன்ன ஏற்பாட்டிற்குச் சம்மதிக்க வேண்டியதாக ஆகிப்போனது அவளுக்கு…
உள்ளுக்குள்ளே சிரித்துக்கொண்டனர்… ஆதியும்… வரதனும்…
ஒருவழியாக… சொத்துக்கள் பிரிக்கப்பட… அதன்பிறகு… ஒரே வீட்டில் இருந்தால்… மனக்கசப்புகள் உண்டாகும் என்ற காரணத்தினால்… செல்வம் குடும்பம்… அவர்களுக்குப் பிரிக்கப்பட்ட வீட்டிற்குக் குடிபோனார்கள்…
ஒரு வழியாக… அம்மு மற்றும் லட்சுமிக்கு… கயல் மற்றும் சுலோச்சனாவின்… தொல்லைகளிலிருந்து விடுதலைக் கிடைத்தது…
அருளாளனை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொண்டார் லட்சுமி… பிள்ளைகளும் அவருக்குத் துணையாக இருந்தனர்…
ஆதி… தாத்தா கொடுத்த இடத்தில்… “அமிர்தம் ரெஸ்டாரண்ஸ்!” என்ற உணவகத்தைத் தொடங்கினான்… அது நன்றாக வளர்ச்சி அடைய… அடுத்தடுத்து… இரண்டு… மூன்று என முக்கியமான இடங்களில்… கிளைகளையும் தொடங்கி… முழுமூச்சுடன் உழைக்கத் தொடங்கினான் ஆதி…
அதுவரை சமையல்கட்டிலேயே தன் வாழ்க்கையைத் தொலைத்த… அவனது அம்மாவின் சுமையை குறைக்கவென… ராணியைச் சமையலுக்கும்… அவரது மகள் அன்னத்தை உதவி வேலைகளுக்கும் என ஏற்படும் செய்தவன்…
அம்மாவின் உபயோகத்திற்கும்… அம்மு பள்ளிக்கூடம் போய் வருவதற்கு எனவும்… புதிய கார் ஒன்றை வாங்கி… கோபாலை ஓட்டுநராகச் சேர்த்தான்…
பதினொன்றாம் வகுப்பில் அடியெடுத்து வைத்திருந்தாள் அம்மு… சசியின் தம்பி… சரவணனும்… அவள் படிக்கும் வகுப்பிலேயே சேர்ந்திருந்தான்…
சிறு வயது முதலே சரவணன்… அவளது தோழன்தான் என்றாலும்… அங்கே ஒன்றாகப் படிக்க ஆரம்பித்த பிறகு… அவர்களது நட்பு… மேலும் வளர்ந்தது…
அவர்களது ஊரைச் சுற்றி இருக்கும் கிராமப்புறங்களில்… அதுவும்.. சிறு குழந்தைகளுக்கான பிரத்தியேக.. மருத்துவ வசதி குறிப்பிட்டு சொல்லும்படி… நன்றாக இல்லாமல் இருக்கவே… அந்தத் துறையை தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும் என்பது… இருவரது லட்சியமாகவும் இருந்தது…
அந்தச் சமயம்தான்… உயர் ரத்த அழுத்தத்தால்…வரதனின் உடல்நிலை… பாதிக்கப்பட்டது…
சிறு வயதிலிருந்தே ஈடுபட்டு வந்த ஜவுளித் தொழிலை விட்டுக்கொடுத்ததுதான்… வரதனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தது… உள்ளூரிலேயே… போட்டிக்காகவேணும்… அதே தொழிலைச் செய்ய அவர் மனம் இடம் கொடுக்கவில்லை… ஆதி வேறு தொழிலை தேர்ந்தெடுத்ததும் அதே காரணத்திற்காகத்தான் என்றாலும்… தந்தையின் மனம் அவனுக்குப் புரிந்தது…
அதற்கு ஏற்றார்போல்… தி-நகரில்… சிறிய அளவிலான… ஒரு துணிக்கடை… விலைக்கு வர…
அதைப் பற்றி யோசித்த ஆதி… அதுவரை தான் வாங்கி வைத்திருந்த நிலங்கள்… அவனுடைய உணவகம் அனைத்தின் பெயரிலும்… வங்கியில் கடன் பெற்று… லட்சுமி மற்றும் அம்மு இருவரையும் பங்குதாரராக… வைத்து… அந்தக்கடையைத் தொடங்கினான்…
அம்முவின் பெயரைக் கொண்டு… ஏற்கனவே… உணவகங்களை நடத்தி வருவதால்…ஆதிலட்சுமி… என்ற பெயரில்… அந்தக்கடையைத் தொடங்க அவன் நினைக்க…
“‘ஆதி டெக்ஸ்டைல்ஸ்’ என்று இருவரின் பெயருக்கும் பொதுவாக அதை ஆரம்பிக்கச் சொல்லிவிட்டார் வரதன்…”
அதன்பின்… சென்னை கடையை… முழு திருப்தியுடன் ஆதியுடன் இணைந்து…வரதன் கவனித்துக்கொள்ள…
இரண்டு தொழில்களிலும் ஆதிக்கு ஏறுமுகம்தான்… அவனது வளர்ச்சி பல்கிப்பெருக்கிக் கொண்டிருந்தது…
அம்மு மற்றும் சரவணன் இருவரும்… பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியிருக்க…அவர்களுடைய மருத்துவ படிப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவைத்திருந்தான் ஆதி…
அந்தச் சமயம்தான்… வைகாசி மாதத்தில் நடைபெறும்… கருடசேவை உத்சவத்திற்கென… வரதனும்… லட்சுமியும் அம்முவுடன்… அதிகாலையிலேயே காஞ்சிபுரம் வந்துவிட… கணேசனும்… அவரது மனைவி… மற்றும் மகள் அனுபமாவுடன்… அங்கே வந்திருந்தார்…
பொதுவாக… வரதன்… கணேசன் இருவரும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருக்க… “அனுவின் படிப்பு முடிந்துவிட்டதால்… அவளுக்குத் திருமணத்திற்கு பார்க்கிறோம்… ஆதிக்குப் பொருந்திவந்தால்… உங்களுக்கும் சம்மதம் என்றால்… மேற்கொண்டு பேசலாமா?” எனக் கணேசன் கேட்கவும்…
தந்தையிடமும்… ஆதியிடமும் பேசிவிட்டு பதில் சொல்வதாகச் சொல்லிவிட்டு வந்தார் வரதன்…
ஆதி சம்மதித்தால்… தனக்கும் சம்மதமே… என்று சொல்லிவிட்டார் ஆருளாளன்…
ஆதி வீட்டிலிருக்கும் நேரம்… லட்சுமி அவனிடம்… விஷயத்தைச் சொல்லவும்… “இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்…” என எப்பொழுதும் சொல்லும் வார்த்தைகளையே ஆதி சொல்லவும்…
“இப்பவே… இருபத்தி எட்டு வயது ஆகப் போகிறது… தொழிலும் நன்றாகப் போகிறது… இனிமேல் நீ மறுப்பது சரியில்லை…” என்று லட்சுமி அங்கலாய்க்கவும்…
அவன் அனுவை… அவர்கள் வீட்டிற்கு அவள் வரும்போதெல்லாம் பார்த்திருக்கிறான்… சில சமயங்களில் பேசியும் இருக்கிறான்… பார்ப்பதற்கும்… நன்றாகவே இருக்கிறாள்… அனைத்தையும்விட… வீட்டில் அனைவருடனும் நட்புடன் பழகுகிறாள்… என்ற காரணங்கள் மனதில் தோன்றவும்… ஆதி திருமணத்திற்கு சம்மதித்துவிட…
அதுவரை எதோ சிந்தனையில் இருந்த அம்மு… “அம்மா அண்ணாவிற்கு… இந்த அணு வேண்டாம்மா… வேறு பெண்ணை பார்க்கலாம்…” என்க…
அவளைப் பார்த்து முறைத்த லட்சுமி… “அவனே… ஒருவழியா… இப்பதான் கல்யாணத்திற்கு… சம்மதம் சொல்லியிருக்கான்… நீ எதையாவது பேசி கெடுத்துவிடாதே..” என அவளை லட்சுமி அடக்க…
“அம்முவிற்கு பிடிக்கலைன்னா… வேண்டாம்மா… என்கனவே… நம்ம குடுப்பதில் பார்த்துக்கொண்டுதானே இருக்கோம்… எல்லாரோட நிம்மதியும் முக்கியம்…” என ஆதி கூற…
“அவதான் சின்ன பொண்ணு… புரியாம பேசுறான்னா… நீயும் இப்படிச் சொன்னால் எப்படி?” என்று மகனைக் கடிந்துகொண்டவர்…
“உனக்கு… அனுவை பிடிச்சிருக்கா… இல்லையா… அதை மட்டும் சொல்லு?” என்று கேட்க…
கொஞ்சமே கொஞ்சம் திருமண ஆசை துளிர்விட்டிருக்க… “பிடிச்சுதான் இருக்கு… ஆனால்…” என்று ஆதி இழுக்க… “அப்படின்னா… நீ சும்மா இரு… மற்ற விஷயங்களை அப்பா பார்த்துக்கொள்வார்…” என்று முடித்தார் லட்சுமி…
பின்பு…வரதன் குடும்பத்துடன்… சம்பிரதாயத்திற்காக… பெண்பார்க்கவென… கணேசனின் வீட்டிற்குச் சென்று… திருமண பேச்சை தொடங்கினார்கள்…
உடனே நாட்கள் ஏதும் சரியாக இல்லாமல் போகவே… ஜூன் மதம் பதினைந்தாம் தேதி என… அவர்களது… நிச்சயதார்த்தத்திற்கு நாள் குறித்தனர்…
ஏற்கனவே… சுலோச்சனாவுடன் சிறு சிறு உரசல்கள் ஏற்பட… வரதன் வீட்டில் இருக்கும் உரிமைகூட… செல்வத்தின் வீட்டில் இல்லாமல் போகவே… கொஞ்சம்… அடங்கியிருந்த கயல்… மைத்துனன் மகளை ஆதிக்குக் கொடுப்பதால்… மிகவும் மகிழ்ச்சியில் இருந்தார்…
அம்மு மட்டுமே… உற்சாகமின்றி இருக்க… அவளது தேர்வு முடிவுகள் குறித்த பயத்தில் இருக்கிறாள் என எண்ணினான் ஆதி…
அவள் மல்லியை வைத்து அழகு பார்க்க… நினைத்த இடத்தில்… வேறு ஒரு பெண் வருவதை ஏற்க முடியாமல்தான் அம்மு தவிக்கிறாள் என்பது அன்றைய நிலையில் அவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை…
கன்னிகாதான முறைப்படி திருமணம் செய்ய முடிவெடுத்திருந்ததால்… திருமணத்தைப் பெண் வீட்டில் நடத்தும் முறை என்பதால்… நிச்சயதார்த்தத்தை… அவர்களே… தடபுடலாக… நடத்த எண்ணி… அதற்கான வேலைகள்… மும்முரமாக நடந்துகொண்டிருந்தது…
இதற்கிடையில்… அனுவை நேரில் சந்தித்து பேச நேரம் கிடைக்காமல்… கைப்பேசியில் அவளுடன்… தினமும் பேசிக்கொண்டிருந்தான் ஆதி…
அதேநேரம்… தாம்பரத்தில்… ஆதி டெக்ஸ்டைல்ஸின் புதிய கிளை ஒன்றை நிறுவும் வேலையில் ஆதி தீவிரமாக ஈடுபட்டிருந்ததால்… அதிசயமாக எப்பொழுதாவது அவன் வீட்டில் இருக்கும் நேரமும் கூட… அவனது தொழில் சம்மந்தப்பட்ட அழைப்புகளுடன் சேர்ந்து… அனுவிடமிருந்தும் அழைப்பு வந்துவிட… கைப்பேசியும் கையுமாக இருந்த அண்ணனைப் பார்த்து நொந்தே போனாள் அம்மு…
ஒரு நாள்… அண்ணனுடன் பேசுவதற்காக… அம்மு காத்திருக்க… நெடுநேரம் ஆகியும்… ஆதி… மறைமுகமாகச் சொல்லிப்பார்த்தும்… அழைப்பைத் துண்டிக்காமல்… அணு பேசிக்கொண்டே இருக்க… அதில் கடுப்பான அம்மு… அவனது கைப்பேசியை பிடுங்கி… “அனு… நான் ராஜா அண்ணாகிட்ட கொஞ்சம் பேசணும்… நீ ஒரு அரைமணி நேரம் கழித்து கால் பண்ணு!!!” என்று… உள்ளே இருக்கும் எரிச்சலைக் காட்டாமல்… தேன் தடவிய குரலில் சொல்லிவிட்டு… அவளது பதிலைக்கூட எதிர்பார்க்காமல்… அழைப்பைத் துண்டித்தாள் அம்மு…
அவளது செயலில்… சிரிப்பே வந்துவிட்டது ஆதிக்கு…
பிறகு… ஆதியிடம்… சசி… நிவி… மற்றும் சரவணனுடன் சேர்ந்து… அவள் புதிதாகப் பார்த்த திரைப்படத்திலிருந்து தொடங்கி… சரவணனிடம் அவள் போட்ட சண்டை… தெருநாய் குட்டி போட்டது வரை சொல்லி முடித்தவள்… தயக்கத்துடன்… “நான்… கோபாலை!” என்று எதோ சொல்ல வர… அப்பொழுது அங்கே வந்த லட்சுமி… தன் கையில் வைத்திருந்த மோதிரத்தைக் காண்பித்து… “இது… அப்பா எனக்கு முதன்முதலில்… வாங்கிக்கொடுத்த மோதிரம்…” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அதை அன்னையின் கையிலிருந்து வாங்கிய அம்மு… “அதுதான் தெரியுமே…” என்க…
அதற்கு லட்சுமி… “அதில்ல அம்மு! இதை பாலிஷ் போட்டுக்கொண்டு வந்தால்… நம்ம அனுவிற்கு கொடுக்கலாம்னு நினைக்கிறேன்!” என்று சொல்லி முடிக்கவில்லை…
“என்னையெல்லாம் பார்த்தால்… உங்களுக்கு எப்படி இருக்கு… இதை எனக்கு கொடுக்கணும்னு உங்களுக்கு தோணலயா? என்னை விட அவள்தான் உங்களுக்கு முக்கியமாக போய்ட்டாளா? இப்பவே அண்ணாவையும் உங்களையும்… என்கிட்டேயிருந்து பிரிச்சுட்டா அந்த அனு… இதே என் ஃப்ரண்ட் எனக்கு அண்ணியா வந்தா… இப்படி நடக்குமா?” என்று தன் இயல்பிற்கு மாறாகப் பேசி… அம்மு அழத்தொடங்கவும்…
அப்பொழுதுதான்… அவளது மனநிலை ஆதிக்குப் புரிந்தது… பிறகு இதமாக அவளது தலையை வருடியவன்… அந்த மோதிரத்தை அவளது விரலில் மாட்டிவிட்டு…
“அம்முமா! அம்மா சும்மாதான் அப்படி சொன்னாங்க… இந்த மோதிரம் உனக்குத்தான்… இப்படியெல்லாம் நீ நினைக்கக்கூடாது… அண்ணா உனக்கு எப்பவுமே சப்போர்ட்டா இருப்பேன்…” என்று அவன் ஆறுதல் சொல்லவும்… அதில் கொஞ்சம் தெளிந்தவள்… “இல்ல ணா… இதை என் அண்ணிக்குத்தான் கொடுக்கப்போறேன்…” என்று தீவிரக் குரலில் சொன்னவள்…
“அண்ணா! என் ஃப்ரண்ட் மல்லியைப் பற்றி… விசாரிக்கிறீங்களா… ப்ளீஸ்!” என்று சில வருங்களுக்குப் பிறகு… முதன்முறையாக மல்லியைப் பற்றி ஆதியிடம் பேசினாள் அம்மு…
ஆனால்… அம்மு அதுவரை… ஒரு முறையேனும் மறந்தும் கூட அனுவை அண்ணி என்று சொன்னதில்லை என்பதை உணராத ஆதி… அதுவும் அந்த நேரத்தில்… சம்பந்தம் இல்லாமல்… அவள் மல்லியைப் பற்றி ஏன் பேசுகிறாள் என்றும் யோசிக்காமல்…
“நிச்சயமா… உனக்காக… விசாரிக்கறேன் அம்மு” என்றான்… மனதிலிருந்து…
ஆனால் அமிர்தவல்லி… உயிருடன் இருக்கும்பொழுதே…அவன் சொன்னபடி… அவனால் செய்ய முடியாமல் போகும் எனக் கொஞ்சமும் அறிந்திருக்கவில்லை தேவாதிராஜன்…