TK21

TK21

தோழிமார் கதை 21

“டோண்ட் கெட் இண்டு டிரபிள்..” இந்த வார்த்தைகள் இலக்கியாவின் மனதை சுற்றி சுற்றி வட்டமிட்டன. இலக்கியா எப்போதுமே பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளும் ரகம் அல்ல. ஆனால் அவளுக்காக ஒரு தனிக் களமும், அதன் பிரச்சனைகளும் காத்திருக்கத்தான் செய்தன.

நடந்திருந்த கலோபரத்தில், திலிபாவை விடவும் குழம்பிப் போனது அர்ச்சனா தான். ஏனென்றால் அர்ச்சனாவிற்கு அரவிந்தைப் பற்றிய கவலை முற்றிலும் மறந்திருந்தது.

“இவன் திலிபாட்ட பேசினானா இல்லையா?”என்ற எண்ணம் கல்லூரிப் பேருந்தில் பயணித்த போது எழ, அதனுடனேயே, “அப்படி ஏதாச்சும் பேசியிருந்தா இன்னேரம் இவளுக ஏதாவது சொல்லியிருப்பாலுகளே….ஆனா அப்படி ஏதும் நடக்கலையே…”என நினைத்து அப்போதைக்கு சமாதானப்படுத்திக் கொண்டாள்.

ஆனால் அர்ச்சனாவிற்குத் தெரிந்திருக்க நியாயமில்லை தானே திலிபாவும், அரவிந்தும் பேசிக் கொண்டது குறித்து. ஏனென்றால் திலிபாவுடன் தான் பேசிய விஷயத்தை அரவிந்த் அர்ச்சனாவிடம் சொல்லப் போவதில்லை. அதே போன்று திலிபாவிற்கும் அர்ச்சனாவிடம் பகிர்ந்து கொள்ள விருப்பமில்லை. அர்ச்சனா யோசித்துக் கொண்டிருந்த அதே நேரம், விடுதியில் திலிபாவும் இலக்கியாவும் அர்ச்சனாவைக் குறித்தே விவாதித்துக் கொண்டிருந்தனர்.

“திலி….என்னடீ என்னென்னமோ நடக்குது? அவன் என்னடான்னா நமக்காக ஹெல்ப் பண்ணறான். சம்பந்தமேயில்லாம சப்பி மேம் ஹெல்ப் பண்ணுது…என்னடீ இதெல்லாம்…”

“ம்ம் என்னைக் கேட்டா? எனக்கெப்படி தெரியும்…நானும் உன் கூட த்தானே இருக்கேன்”

“எங்கூட இருக்கியா…எப்படி, கார்ல என்னையும் ஏத்திட்டுப் போனியே அந்த மாதிரியா…”என நக்கலாக இலக்கியா கேட்க, திலிபா கள்ளத்தனமாக கண்களைச் சிமிட்டிச் சிரித்தாள்.

“சிரிக்காத….என்ன பண்ணியிருக்கங்கற சீரியஸ்னஸ் உனக்கு இன்னமும் வரலை திலி…..அவன் ஒரு வேளை நம்மளை மாட்டிவிடனும்னு நினைச்சிருந்தான்னு வை….தீர்ந்தோம் நாம…”

“அதான் செய்யலையே….டீ இல்லு…அவனைப் பார்த்தா தாண்டீ ஒரு மாதிரி டெரரா இருக்கு…ஆனா பேச்சு நடவடிக்கையெல்லாம் அப்படி தெரியலைடீ…”

“ஏன் சொல்லமாட்ட…..வழிய வந்து ஹெல்ப் பண்ணியிருக்கான்ல….”

“ஹே….இன்னைக்கு இந்த சீன்ல முக்கியமான விஷயத்தை உங்கிட்ட சொல்ல மறந்துட்டேன் இல்லு…இந்த அரவிந்த் பையன் இருக்கான்ல….அவன் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எங்கிட்ட வந்து பேசினாண்டீ…”

“அரவிந்தா….எதுக்கு? என்ன பேசினான். ஏன் அர்ச்சனாட்ட பேசாம உங்கிட்ட வந்து பேசினான்?”

“மேட்டரே அதான். அவன் அர்ச்சனாட்டையும் என்னைப் பத்திதான் பேசியிருப்பான் போல்…”

“புரியலையே….அவ வேற மாதிரில சொன்னா…”

“ம்ம்ம் சொன்னால்ல….மேடம் சொன்னது எல்லாமே பச்சை புளுகு. அண்டப் புளுகு. அபாண்டப் புளுகு…சரியா பெருமைக் கலையம் உன் ஃப்ரெண்ட்…தெரியுமா?” என சொல்லி கலகலவென சிரித்த திலிபாவுடன் சேர்ந்து மெல்ல புன்னகைத்த இலக்கியா,

“அரவிந்த் என்ன சொன்னான்னு சொல்லு…”

“அவனா….கொஞ்சம் மென்னு மென்னு முழுங்கினான். அவ்ன சொன்னதில இருந்து எனக்கு என்ன புரிஞ்சுதுன்னா, அவன் அன்னைக்கு அர்ச்சனாகிட்ட ஹெல்ப் கேட்டிருக்கான்…எங்கிட்ட பேச…ஐ மீன் என்னைப் பத்தி தெரிஞ்சுக்க….”

“உன்னைப் பத்தியா…உன்னைப் பத்தி அவனுக்கு ஏன் தெரியனும்?”

“ஏ டியூப்லைட்டு….அவன் என்னை லவ் பண்ணறானாம் டீ….அதனால….எனக்கு அவனைப் பிடிக்குமா? எனக்கு வேற ஆள் இருக்கா? சீனியர் முகிலை லவ் பண்ணறேனான்னு கேட்டிருக்கான் அர்ச்சனாட்ட….”

“நிஜம்மாவாடி…அப்படியா கேட்டான்…ஆனா அர்ச்சு நம்மகிட்ட…”

“ம்ம்ம்…நம்ம கிட்ட நல்லவிதமா கதையளந்திருக்கா….அதை நாமளும் நம்பி பூம் பூம்  மாடு மாதிரி தலையாட்டியிருக்கோம்.”

“இல்லை திலி….ஒரு வேளை அரவிந்த் சொன்னதை தப்பா புரிஞ்சுகிட்டாளோ என்னவோ”

“நிறுத்து, நிறுத்து,,,உடனே நீ அர்ச்ச்னா பாவம் தப்பா புரிஞ்சுகிட்டான்னு புராணம் பாடாத….அவ வேணும்னே தான் மாத்தி சொல்லியிருக்கா…தெரியுமா…”

“சரி, சரி…அவகிட்டையே நேரா கேட்டுட்டாப் போச்சு….என்ன இப்ப…”

“இதப்பாரு இல்லு….அவகிட்ட இப்போதைக்கு காட்டிக்க வேண்டாம். இன்னும் எவ்வளோ தூரம் போறான்னு பார்க்கலாம். நம்மளை பார்த்தா அவளுக்கு ஈனா வானா மாதிரி இருந்திருக்கு பாரேன். எதை சொன்னாலும் நம்புவோம்னு நினைச்சிருக்கா…”

“சரி….அரவிந்துக்கு நீ என்ன பதில் சொன்ன….அதை சொல்லு முதல்ல…”

“நான் என்னடீ சொல்லப்போறேன்…. அவனை புடிக்கும் தான். ஆனா லவ்லாம் நமக்கு செட் ஆகுமான்னு தெரியலை. “

“அதனால…என்ன சொன்ன?”

“ஒண்ணுமே சொல்லலை. இப்போதைக்கு எனக்கு எந்த ஐடியாவும் இல்லை…அப்படி ஏதாச்சும் வந்தா சொல்லறேன்னு சொல்லிட்டேன்…சரிதானே….”என கண்சிமிட்டிய திலிபாவை இலக்கியா முழுவதுமாக நம்பவில்லை. நல்ல நாளிலேயே அர்ச்சனா விஷயம் என்றால் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்குச் செல்பவள், இன்று அர்ச்சனாவைப் பற்றிய அனல் செய்தியை அசால்டாக சொன்ன விதம் சற்றே நெருடியது.

“என்ன இல்லு…நம்ப மாட்டியே…..ம்ம்ம்…கரெக்ட்….அது மட்டும் நான் அரவிந்த் கிட்ட சொல்லலை. கூட ரெண்டு மூனு பிட்டை அள்ளி வீசிட்டு வந்திருக்கேன்.”

“என்ன பண்ண?”

“அதுவா? அர்ச்சனா சொன்ன பொய்யை உண்மையாக்கியிருக்கேன்….”

“புரியலை…”

“ம்ம்ம்ம் என்ன புரியலை….அர்ச்சனா அரவிந்தை ரொம்ப….ரொம்ம்ம்ம்ப டீப்பா லவ் பண்ணாறதாகவும், அதனால அரவிந்த் என் கூட பேசறது கூட பிடிக்கறதில்லைன்னு சொல்லியிருக்கேன் அரவிந்துட்ட…”

“அடிப்பாவி…எதுக்குடீ உனக்கு இந்த வேண்டாத வேலை…எதுக்கு அப்படி பொய் சொல்லியிருக்க…பாவம்டீ அரவிந்த்…ஆளாளுக்கு அவனை குழப்பறீங்க…”

“எது பொய்யு….நான் சொன்னது பொய்னா அப்போ உன் ஃப்ரெண்ட் சொன்னது என்ன?ம்ம்ம்? அவ நம்மகிட்ட சொன்ன விஷயத்தைத் தானே நான் அவங்கிட்ட சொல்லியிருக்கேன்….நானா ஒண்ணும் புரளி பேசலையே….அப்பறம் எப்படி அது பொய்யாகும்…”என தோளைக் குலுக்கிக் கொண்டு எழுந்தாள் திலிபா.

“டீ திலி….என்னடீ நீ…”

“ச்ச்ச்….இந்தப் பேச்சை விடு….அவனாச்சு அவளாச்சு….கொளுத்திப் போட்டாச்சுல்ல…இனிமே வேடிக்கை மட்டும் பார்ப்போம்….சரியா….நீயா எதும் அவகிட்ட உளறாத என்ன….”என இலக்கியாவிடம் அழுத்தமாகவே மொழிந்தாள் திலிபா.

சாதாரணமாகத் துவங்கிய அன்றைய தினம், பல விஷயங்களின் தொடக்கமாக முற்று பொற்றிருந்தது ஆச்சர்யமே.

அர்ச்சனாவும் திலிபாவும் சேர்ந்து நடத்திய திருவிளையாடல்களை மெளனமாக எடை போட்ட இலக்கியாவின் மனம், அங்கே இங்கே சுற்றி கோகுலிடம் வந்து சேர்ந்திருந்தது. அவனைப் பற்றிய எண்ணங்கள் தோன்றிய வேகத்திலேயே இலக்கியாவின் இதயம் வேகமாக துடித்ததுடன் மட்டுமல்லாது, 50 கிலோ எடை பாறாங்கல்லைத் தூக்கி மனதின் மேல் வைத்து அழுத்தத்  துவங்கியது. கண்களில் நீர் கோர்த்துக் கொள்ள, இலக்கியா தனது பெங்களூர் தினங்களைப் பற்றி எண்ணலானாள்.

இந்தப் பெண்ணைப் போல் தன் வாழ்க்கையில் பெரிதாக துன்பங்கள் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என எண்ணவோட்டம் சென்றது.

அர்ச்சனாவிற்கு அவளுக்கு பிடித்த ஆடவனுடனேயே திருமணம் முடிந்து விட்டிருந்தது, கண் நிறைய கணவனும், கைநிறைய குழந்தையும் உள்ளது. கெளசிக்கு யு.எஸ் மாப்பிள்ளை. என்ன தற்போதைக்கு குழந்தை இல்லையே என்ற கவலை இருப்பினும், இப்போது உள்ள அதிநவீன மருத்துவ தொழில்நுட்பத்தால், குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று எதுவும் இல்லை. கொஞ்சம் பணமும், சிறிது பொறுமையும் இருந்தால், டெஸ்ட்டியூப் பேபி, ஐ.வி.ஃப் என ஏகப்பட்ட சிகிச்சைகள் செய்து கொள்ளலாம்.

திலீபாவின் வாழ்க்கையோ கேட்கவே வேண்டாம். இயல்பிலேயே செல்வ செழிப்புடன் வளர்ந்தவள். இப்போது பார்த்துள்ள மாப்பிள்ளையும், லண்டனில் பெரிய ப்ரோக்கரேஜ் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். வசதி வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை. திருமணம் முடிந்து அடுத்த வாரமே லண்டன் பறந்து விடுவாள்.

ஆக, மற்ற மூவரது வாழ்க்கையைக் காணும் போது, தன் நிலைமை மட்டும் சற்றே தாழ்ந்திருப்பது போல் இலக்கியாவிற்குத் தோன்றியது.

“அப்பா உயிருடன் இருந்திருந்தால்..”

“கேம்பஸில் கிடைத்த வேலை, இல்லை என ஆகாமல் போயிருந்தால்….”

“பெங்களூர் வந்து சேர்ந்த புதிதில், அந்த சிறிய கம்பெனியில் வேலை கிட்டாமல் போய், அவனை சந்திக்கும் வாய்ப்பு அமையாமல் போயிருந்தால்…”

“அன்னைக்கு அந்த இக்கட்டான நிலைமை ஏற்படாது இருந்திருந்தால்..”என இலக்கியா தன் வாழ்வை ஆதியிலிருந்து மனதில் ஓட்டிப் பார்த்துக் கொண்டாள். எப்படி எப்படியோ போகும் என்று எதிர்பார்த்து துவங்கிய வாழ்வு, எந்த குறிக்கோளும் இன்றி ஏதோ போக்கில் சென்று சென்று கொண்டிருந்தது. இப்போதைக்கு இலக்கியாவிற்கு இருக்கும் ஒரே லட்சியம், ஓட வேண்டும், சம்பாரிக்க வேண்டும், வீட்டு செலவுகளை பார்த்துக் கொள்ள வேண்டும், தங்கையின் படிப்பு முடிந்ததும், அவளுக்கு நல்ல இடமாகப் பார்த்து திருமணம் முடித்து வைத்துவிட வேண்டும் என்பது மட்டுமே.

“உன் திருமணம்” என மனதின் ஏதோ ஒரு மூலையில் சுவர் மேல் அமர்ந்திருந்த மனசாட்சி, மெல்லிய குரலில் வினவியது. “ஆமா, இருக்கற பிரச்சனையில, அந்த பிரச்சனை ஒண்ணு தான் பாக்கி…மொதல்ல இருக்கற கடமைகளை முடிப்போம்”என்று அதற்கும் ஒரு பதில் சொல்லியிருந்தாள்.

இலக்கியா தன் தங்கையின் திருமணத்தைப் பற்றி யோசிப்பது போல், அவளது அன்னை இலக்கியாவின் திருமண்ம குறித்து யோசிக்க மாட்டார்களா என நமக்குத் தோன்றுகிறது தானே. என்றுமே அடுத்தவர் வாழ்வினை தூர நின்று விமர்சிப்பதும், அறிவுரைகள் அள்ளி வழங்குவதும் மிகச்சுலபம். ஆனால் அந்த இடத்தில் இருந்த அவரவர் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால் ஒழிய நம்மால் அடுத்தவரின் பிரச்சனைகளை புரிந்து கொள்ள இயலாது.

அதே போல் தான் இலக்கியாவின் வாழ்வும். அவளாக அவளைப் பற்றி, அவளது துயரங்கள் பற்றி என விவாதிக்க ஒரு போதும் விளைந்ததில்லை. எப்போதாவது அவளிடம் உரையாடும் தோழிகள் கூட, தங்களது மனக்குமுறல்களை கொட்டுவார்களேயன்றி,”உனக்கு என்ன பிரச்சனை இல்லு, எல்லாமே ஒ.கே தானே”என வினவமாட்டார்கள்.

அவர்களைப் பொருத்தவரையில் இலக்கியா என்பவள், புத்திசாலி, படிப்பாளி, பெங்களூரில் நல்ல வேலையில் இருக்கிறாள், எந்தக் கவலையும் இல்லாமல் தினமும் வேலைக்குச் சென்று வருகிறாள். அவளது வாழ்வை செம்மையாக வடிவமைத்துக் கொள்ள தெரிந்த புத்திசாலிப் பெண். அவ்வளவு மட்டுமே.

இலக்கியாவைப் பற்றி, அவளது கஷ்டநஷ்டங்கள் பற்றி யோசித்தது அவளது அன்னையை அடுத்தாற் போல் அவன் மட்டுமே. அவனைப் பற்றிய நினைவுகள் எழுந்ததும் கண்கள் தானாகவே குளமாகிப் போயின.

திடீரென எங்கிருந்தோ வந்தான். இலக்கியாவின் மேல் அன்பு மழைப் பொழிந்தான். அதில் நனைந்து இலக்கியா இளைபாறும் முன்னர், வந்த வேகத்திலேயே காணாமலும் போய்விட்டான்.

இலக்கியா அப்போது பெங்களூரில் வேலைக்குச் சேர்ந்திருந்த புதிது. அர்ச்சனாவுடன் பெங்களூர் வந்திருந்த போதும், அர்ச்சனா அவளது அலுவலகத்தில் மாற்றல் காரணமாக, பெங்களுர் வந்து சேர்ந்த மூன்றாம் மாதமே சென்னை சென்றுவிட்டிருந்தாள்.

இலக்கியாவிற்கு அவளது புதிய அலுவலகம் பிடித்திருந்தது. அலுவலகத்தை விடவும், அதில் வேலை செய்யும் அவனை மிகவும் பிடித்திருந்தது. “இவன் என்ன இப்படி உத்து உத்துப் பார்க்கறான்..அவ்வளோ கண்ராவியாவா டிரஸ் பண்ணியிருக்கோம்”என முதல் தடவை அவன் பார்த்த போது மனம் கேள்வி கேட்டது. ஆயினும் அவனிடம் பேசவேண்டும் என்றோ, சிரிக்க வேண்டும் என்றோ ஒரு நாளும் தோன்றவில்லை.

அவ்வப்போது அலுவலகத்தில் அவனது கண்கள் இலக்கியாவின் கண்களை சந்திக்கும். ஒரு சில நொடிகள் தான். பின்பு இவளும் தலையை உலுக்கிக் கொள்வாள். அவனும் வேறு பக்கம் கண்களை சுழலவிட்டுவிடுவான். ஆயினும் அந்த சில நொடி நேர கண்மோதல்கள் இலக்கியாவினுள் பல ரசாயன மாற்றங்களை தருவித்தன.

வேறு ஒரு டீமின் மேலதிகாரி அவன் என்ற அளவிலேயே இலக்கியா அவனை எடைபோட்டிருந்தாள். அவன் கவனிக்காத போது இயல்பாக நோட்டம்விடுவது போல் அவனை கண்காணித்திருந்தாள். நல்ல சதுர வடிவ முகம், அதில் ஒரு பக்கமாக வகிடெடுத்து சீவப்பட்டிருந்த கற்றை முடி. இரண்டு நாள் சவரம் செய்யாத தாடி, சிரிக்கும் போது மட்டும் அல்லாமல், சாதாரணமாக பேசும் போது கூட குழியும் கன்னம், அழுத்தமான உதடுகள், அதன் மேல் கச்சிதமான ஒரு மீசை என இலக்கியாவின் மனம், அவளைக் கேட்காமலேயே அவனை அளவெடுத்திருந்தது.

இத்தனை நடந்த போதும், அவன் பேர் என்னவென்றோ, அவன் ஊர் என்னவென்றோ  எதையும் இலக்கியா தெரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. இவளின் இந்த விட்டேத்தியான போக்கு அவனை மேலும் அவளிடம் நெருங்கி அழைத்து வந்திருந்தது.

அவன் தானாக வந்து இலக்கியாவுடன் பேசிய அந்த தினம், பசுமரத்தாணி போல அப்படியே இலக்கியாவின் நினைவில் தங்கிவிட்டிருந்தன. அன்று, தீபாவளி விடுமுறைக்காக பெங்களூர் நகரம் தன்னை தயார் செய்து கொண்டிருந்தது. இலக்கியா தனது ஊருக்குச் செல்ல ஏற்கனவே பேருந்திற்கு முன்பதிவு செய்துவிட்டிருந்தாள். நிலையத்தில் தோள்பையை சுமந்து கொண்டு கைப்பேசியில் கண்களையும் புலங்களையும் செலுத்தியபடி காத்து நின்றவளை நோக்கி, தீர்கமாக நடந்து வந்த அவனது கால்களைத் தான் முதலில் கவனித்தாள்.

பல நாட்கள் பரிட்சயமான அதே காலணிகளைக் கண்டவள், திடுமென முகத்தை உயர்த்திப் பார்க்க, கண்களில் சற்றே குறும்பு மின்ன, ஒரு கள்ளச் சிரிப்புடன் அவன் நின்றிருந்தான். கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவளிடம்,

“ஹாய்…ஊருக்கா?”என நீண்ட நாட்கள் பழகியவன் போல் உரிமையாக பேசவும், இலக்கியா ஒரு கணம் பேச்சற்றுப் போனாள். “ஷலோ…உங்களைத்தான்”என அவளது முகத்தின் முன்பு சொடுக்கிட்ட அவனது கைவிரல்களை இலக்கியாவை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தன.

“ஆ…ஆமா”என பதிலுரைத்தவளுக்கு அடுத்து என்ன கேட்கவேண்டும், ஏதேணும் கேட்க வேண்டுமா என்று கூடத் தோன்றவில்லை.வெறுமனே அவனை பார்த்துக் கொண்டு நின்றவளிடம், “என் பேர் கோகுல் ஆனந்த்..உங்க பேர் இலக்கியா கரெக்டா”என மெல்லமான சிரிப்புடன் அவன் மொழிந்த போதே இலக்கியா விழுந்துவிட்டாள். இவன் வாய் வார்த்தையில் ஒலிக்கும் போது என் பெயர் கூட எவ்வளவு இனிமையாகக் கேட்கிறது என மடத்தனமாக எண்ணவும் செய்தவள், “என் பேர் உங்களுக்குத் தெரியுமா?”என அவன் பெயர் தெரிந்து வைத்திருந்தது ஏதோ பெரிய குடுப்பினைப் போல அந்தக் கேள்வியையும் கேட்டுத் தொலைத்தாள்.

இதற்கும் அவனிடம் இருந்து ஒரு மெல்லிய சிரிப்பு மட்டுமே பதிலாகக் கிடைத்தது. பேருந்து கிளம்புவதற்காக ஆயத்தங்கள் துவங்கிவிட, இலக்கியா பேருந்தில் ஏறிக் கொண்டாள். பின்னுடே அவனும்.

இலக்கியா பதிவு செய்திருந்தது, ஒற்றை ஆள் படுத்துக் கொள்ள ஏதுவான, சிங்கிள் பெர்த். அவளது எண்ணை தேடி, அந்த இருக்கையில் கைப்பையை வைத்துக் கொண்டாள். நல்லகாலமோ, கெட்ட காலமோ, அவனுக்கு, இலக்கியாவின் படுக்கைக்கு எதிர்படுக்கையில் இடமாகிப்போனது.

பேருந்து கிளம்பிய சற்று நேரத்திற்குள், இலக்கியா, அந்த இருக்கையின் திரைசீலைகளை நன்றாக இழுத்துவிட்டுக் கொண்டு படுத்துக் கொண்டாள். அவள் இருந்த மனநிலையில், இதயம் தொண்டைக் குழியில் நின்று துடித்துக் கொண்டிருந்தது. “அவன், அவனா? என்னுடன் ஒரே பேருந்திலா? பெயர் என்ன சொன்னான்… கோகுல்..அழகான பெயர்…இலக்கியா கோகுல்..இதுவும் அழகாக இருக்கிறது” என சகட்டுமேனிக்கு எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன.

நன்றாக மூடிக்கொண்டிருந்த திரை சீலையை, மெல்ல, அவளது கண்கள் மட்டும் தெரியும் சிறிய அளவு திறந்து வைத்துக் கொண்டு கள்ளத்தனமாக எதிர் இருக்கையை பார்த்துக் கொண்டிருந்தவள், சில நிமிடத்தில் எதிர் இருக்கையில் இருந்தும் சிறிய துவாரம் உருவாகியிருப்பதைக் கண்டு, படக்கென எழுந்து அமர்ந்தாள். எழுந்த வேகத்தில், தலை மேல்அடுக்கில் இடித்துக் கொள்ள, சத்தம் கேட்டு, “என்னாச்சு”என அவன் எதிர் படுக்கையில் இருந்து குரல் எழுப்பினான்.

தலை இடித்துக் கொண்ட வலியை விடவும், அவனது “என்னாச்சு” இலக்கியாவினுள் நிறைய வலியைக் கொடுத்திருந்தன. பதிலேதும் சொல்லாமல், அவளது இருக்கையில் பக்கவாட்டில் திரும்பி, ஜன்னலை பார்த்துக் கொண்டு படுத்தாள்.

“இதென்ன சின்ன பொண்ணு மாதிரி. இல்லு…பிகேவ் யுவர்செல்ஃப். அவன் யார் என்ன ஏதுன்னு ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது. ஒரே ஆபீஸ். இப்போ ஒரே பஸ். அவ்வளோ தான். சும்மா வீண் கற்பனை பண்ணி சுத்திட்டு இருக்காத.”என மூளை எச்சரிக்க, “ஒரே பஸ்னா, ஒருவேளை திருச்சி பக்கம் ஏதாவது ஊரா இருக்குமோ. இந்த பஸ் தஞ்சாவூர் வரைக்கும் போகுதே. அப்போ ஒரு வேளை தஞ்சாவூர்காரனோ.”என மனம் ஆசையாகக் கேட்க, மூளையும் சற்றே மழுங்கித் தான் போயிற்று.

“நான் துவக்குடி. அவன் தஞ்சாவூர்…ரெண்டு பேரும் வேலை பார்க்கறது பெங்களூர்ல…செம…சொல்லும் போதே எவ்வளோ ஹேப்பியா இருக்கு”என மனதிற்குள் குதுகலமாக எண்ணிக் கொண்டே எப்போது தூங்கினோம் என்று தெரியாமல் உறங்கிப் போயிருந்தாள்.

“திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட்…திருச்சி சத்திரம்”என்று பேருந்தின் நடத்துனர் குரல் கொடுக்க, மெல்ல இலக்கியாவின் உறக்கம் கலைந்தது. கண்விழித்ததும் முதல் வேலையாக எதிர்படுக்கை எண்ணவாயிற்று என திரையை விலக்கிப் பார்த்தாள். திரைசீலைகள் இறுக்கமாக மூடப்பட்டிருக்க, தனது படுக்கையில் இலகுவாக அமர்ந்து கொண்டாள்.

தலையை ஒதுக்கி, கைப்பையில் வைத்திருந்த வெட் டிஷ்ஷுவில் முகம் துடைத்துக் கொண்டு, உடையை சீராக்கிக் கொண்டாள். சத்திரம் பேருந்து நிறுத்தம் கழிந்து அடுத்த பதினைந்து நிமிடத்தில் துவக்குடி வந்துவிடும். கைப்பையினுள் கைப்பேசி இருக்கிறதா என சரிபார்த்துவிட்டு, மெல்ல மேல் படுக்கையில் இருந்து இறங்கும் நேரம், “எந்த ஊரு?”என எதிர் இருக்கையில் இருந்து அவனது கரகர குரல் மொழிந்தது.

இது எந்த ஊர் என்று கேட்கிறானோ என்ற நினைப்பில், “திருச்சி”என பதிலளித்தாள். “இது திருச்சின்னு தெரியுது. நீ எந்த ஊர்ன்னு கேட்டேன்.”என சின்ன சிரிப்புடன் அவன் மொழிய, தலையை மெல்ல சரித்து, “துவக்குடி”என பதிலளித்தாள். அவனது ஊர் எது என்று கேட்க வாயை திறக்கும் முன்னர், “எனக்கு தஞ்சாவூர்”என அவனாகவே மொழிந்தான். இலக்கியா ஆமோதிப்பாக தலையை மட்டும் அசைத்துக் கொண்டாள். அவளது தோள்பையை எடுத்துக் கொண்டு நகரவிருந்த சமயம், “ஹே எப்போ ரிட்டர்ன்?”என அவசியமில்லாமல் அந்தக் கேள்வியை அவன் கேட்க, “நாளான்னைக்கு”என அதற்கும் பதிலுரைத்தாள்.

“இதே பஸ்ஸா?” என விடாமல் மொழிந்தான். “ம்ம்ம்”என்று மட்டும் ஆமோதிப்பாக தலையசைத்தவளின் கையில் பிடித்திருந்த கைப்பேசியை நோட்டம் விட்டவன், “உன் செல் நம்பர் கிடைக்குமா?”என எப்படியும் கொடுத்துவிடுவாள் என்ற அபார நம்பிக்கையில் வினவ, இலக்கியா அவனது துணிச்சலை எண்ணி சில நொடி மலைத்த போதும், அவளது கைப்பேசி எண்ணை அவனுக்கு அவசரமாக மொழிந்தாள்.

பேருந்து துவக்குடி நிறுத்தத்தில் தேங்கி நின்றது. இலக்கியா பேருந்தை விட்டு இறங்குவதற்கு முன்னரே, “இது என்னோட நம்பர். சேவ் பண்ணிக்கோ”என அவனிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துவிட்டிருந்தது.

இலக்கியாவின் அந்த வருட தீபாவளி, அவனது குறுன்செய்திகளுடனும், அவன் நினைவுகளுடனும் இனிமையாக, மறக்க முடியாததாக கழிந்தது. விடுமுறை முடிந்து திரும்ப பெங்களூர் செல்ல அதே பேருந்தில் முன்பதிவு செய்திருந்தாள். துரதிஷ்டவசமாக அவனுக்கு இடம் கிடைக்கவில்லை என செய்தி அனுப்பியிருந்தான்.

இலக்கியாவின் மனவேதனை செல்லி மாளாது. அவன் இல்லாத பேருந்தில் நொடி நேரம் கூட இருக்கப்பிடிக்காமல், பயணம் செய்து பெங்களூர் வந்து சேர்ந்தாள். “கவர்மெண்ட் பஸ்ஸில வந்தேன். ரொம்ப டையர்டா இருக்கு. இன்னைக்கு ஆபீஸ் வரமாட்டே இல்லு”என அடுத்து அவனிடமிருந்து வந்திருந்த குறுன்செய்தி இலக்கியாவை மேலும்  வேதனைக்குள்ளாக்கியது. இத்தனை நாட்கள் அவனுடன் பேசாமல், எப்படி நேரம் கடந்தது என எண்ணும் அளவிற்கு இலக்கியா வேதனைப்பட்டாள்.

“இது என்ன யோசனை. காதலா? அன்பா? நட்பா?”என்ற விவாதத்திற்கெல்லாம் இலக்கியா தயாரக இல்லை. அவளைப் பெருத்தவரையில், அவனுடன் பேசவேண்டும். சிரிக்கவேண்டும். அவன் கண்பார்வையில் நனைய வேண்டும் இது மட்டுமே வாழ்வின் குறிகோளாக மாறிப்போனது.

அடுத்து வந்த சில வாரங்களும், நாட்களும், இறக்கை கட்டிக் கொண்டு பறந்தன. அவனுக்காகவே கண்ணுறங்கி, அவனைக் காணப்போகிறோம் என்ற ஆர்வத்திலேயே கண்விழித்து என இலக்கியாவின் வாழ்வுடன் அவ்வளவு ஒன்றிப்போய்விட்டிருந்தான்.

அலுவலகம் முடிந்ததும் சேர்ந்து வெளியே செல்வது, பெங்களூரை சுற்றிப் பார்ப்பது, ஃபொரம் மால், ஸ்கான் கோவில் என ஒன்றுவிடாமல் சுற்றித் திரிவது. வார இறுதியில், சேர்ந்து ஊருக்குச் செல்வது, ஊருக்குச் செல்லாத சமயங்களில், லால்பாக், கபன் பார்க் என கைகோர்த்துக் கொண்டு திரிவது என இலக்கியாவின் வாழ்வு உல்லாசமாகவே கழிந்தது.

தன் தோழிகளிடம் கூட கோகுல் பற்றியோ, அவளது காதல் பற்றியோ மூச்சு கூட விடவில்லை. “இப்போ என்ன அவசரம்? சொல்லலாம்…சொல்லலாம்”என நாட்களை கடத்தியிருந்தாள்.

இலக்கிய செய்த ஒரே நல்ல விஷயம் அவனிடம் தன்னை முழுவதுமாக இழக்காதது மட்டுமே. கபன் பார்க்கின் இருட்டில் திருட்டுத்தனமாக அவன் கொடுத்த முத்தம் ருசிக்கத்தான் செய்தது என்றபோதும், எந்த தருணத்திலும் அவனிடம் தன் கட்டுப்பாட்டை இழக்கவில்லை.அவனும் இலக்கியாவுடன் ஒரு நேர்மையிடனேயே பழகிவந்தான்.

அவ்வப்போது சில உரல்கள், நெஞ்சம் படபடக்க, ரத்தவோட்டம் பலமடங்காக அதிகரித்திருக்கும் தருணங்கள் ஏற்பட்ட போதும் இருவருமே தன்னிலை இழக்கவில்லை. “இந்த தடவை வீட்டில பேசிடனும்” என்றோ, “உன் அம்மா என்ன சொல்லுவாங்க”என்றோ அப்போதைய படபடப்பை நேராக்கிவிடுவான்.

வாழ்க்கை இன்பமயமாக இப்படியே சென்று கொண்டிருந்த போது தான் அவனது பிறந்த தினம் வந்தது. இலக்கியா அவனது பிறந்த நாளை பெரிதாக கொண்டாட வேண்டும் என பலதிட்டம் தீட்டினாள். காலையில் எழுந்ததில் இருந்து இரவு வரை என்ன என்ன செய்யவேண்டும் என பெரிய பட்டியலே தயாரித்திருந்தாள். ஆனால அவனோ, “எனக்கு சர்பிரைசிங்கா பெருசா எதுவும் தேவையில்லை இல்லு. இந்த ஒரு நாள் முழுக்க உங்கூடவே நான் ஸ்பெண்ட் பண்ணனும். எப்பவும் ஊர்ல கொண்டாடுவேன். இந்த வருஷம் உன்கூட சரியா”என இலக்கியாவின் மனதை கரைத்திருந்தான்.

அடுத்த தினம், பிறந்த நாள் என்ற நிலையில், முந்தின இரவு, “ஓரு நாள் முழுக்க, உங்கூட இருக்கணும் இல்லு. நாளைக்கு ஒரு நாள் நானும் நீயும் ஹஸ்பெண்ட் அண்ட் வைஃப். நம்ம வீட்டில நாம, கல்யாணத்துக்கு அப்பறம் எப்படி இருப்பமோ, அப்படி ஒரு நாள் வாழனும்”என காதல் கசிந்துருக அவன் மொழிய, ஒரு நொடி இலக்கியாவும் உருகித்தான் போனாள்.

“இன்னது கேட்கிறான்”என மனம் புரிந்து கொள்ளும் முன்னர், “ம்ம்ம்”என வாய் சம்மதம் தெரிவித்திருந்தது. “தேங்கஸ் இல்லு…தேங்கியூ சோ மச். இதை நீ எப்படி எடுத்துக்குவன்னே தெரியலைம்மா…நிஜமா எனக்கு எவ்வளோ டென்ஷனா இருந்துச்சு தெரியுமா…?”என தன் மகிழ்ச்சியை பலப்பல முத்தத்தின் மூலம் கைப்பேசியில் தெரிவித்தான்.

இலக்கியாவும் ஒருவித போதை நிலையிலேயே அன்றைய தினத்தைக் கழித்தாள். அடுத்த தினம் தனக்கு எப்படி கழிப்போகிறதோ? இது தவறா? தவறில்லையா என பலவாறாக குழம்பிக் கொண்டே அடுத்த தினத்தை நோக்கி சின்ன எதிர்பார்ப்புடன் இருந்தவளுக்கு தலையில் இடி போன்று அவளது அறைத்தோழி அந்தச் செய்தியைக் கூறினாள்.

“இலக்கியா. நான் ஒரு விஷயம் சொல்லுவேன். உனக்கு இது முதல்லையே தெரிஞ்சிருக்கலாம். இன்னும் சொல்லப்போன எனக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? என் வேலையைப் பார்த்துட்டு நான் சும்மா இருக்கவேண்டிய விஷயம்னு கூட நீங்க நினைக்கலாம். பட், என்னால சொல்லாம இருக்க முடியலை. ஒருவேளை உங்களுக்கு விஷயம் தெரியாதோன்னு தான் சொன்னேன்.”என பீடிகையுடனேயே ஆரம்பித்தாள்.

இந்த அலுவலகத்தில் வேலைக்கு வந்து முழுவதாக நான்கு மாதங்கள் கூட முடிந்திருக்கவில்லை. அலுவலகத்திற்குப் பக்கமாக எனக் இந்த பேயிங்க கெஸ்ட் வாடகை வீட்டில் வந்து வாழத்துவங்கி, இரண்டு மாதங்கள் கூட முடியப்பெறவில்லையாதலால், வீட்டில், அவளது அறைத் தோழி ராதிகாவைத் தவிர, மற்ற பெண்களைப் பற்றி எந்தவொரு விஷயமும் இலக்கியாவிற்குத் தெரியாது. வீட்டில் மொத்தம், ஏழு பெண்கள் இருக்கின்றனர் என்று மட்டுமே இலக்கியா அறிவாள்.

அதிலும் இப்போது இலக்கியாவுடம் பேசிய பெண்ணிடம், முன்பின் பழக்கமில்லை. இவள் ஏன் என்னிடம் பேசுகிறாள்?எதைப் பற்றிப் பேசப்போகிறாள் என்று துணுக்குற்ற போதிலும், இலக்கியா அந்தப் பொண்ணின் வார்த்தைகளுக்குச் செவிசாய்த்தாள்.

“ஆக்சுவலி, உங்ககிட்ட இதுபத்தி சொல்லலாமா வேண்டாமான்னு கூட எனக்குத் தெரியலை. உங்களை பார்க்கறப்போ நீங்க கொஞ்சம் இன்னொசண்டா தெரியறீங்க…உங்க பர்சனல் விஷயம்..நான் ஏன் கவலைப்படனும்னு யோசிக்கமாட்டீங்கன்னு நம்பி சொல்லறேன்…என்னை தப்பா நினைக்காதீங்க…”என பலமான பீடிகை கொடுத்த இந்த நிதர்ஷனாவை இலக்கியா மலங்க மலங்க பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

“இலக்கியா, என்னோட பழைய ரூம்மேட் ஒருந்தி இருந்தா. அப்போ நான் மடிவாலால ஒரு பி.ஜில இருந்தேன். அவ பேரு ரூபா. அவ ஒரு பையனை ரொம்ப சின்சியரா லவ் பண்ணிட்டு இருந்தா… இன்ஃபாக்ட், இன்னைக்கு உங்களை தெருமுனையில் பைக்ல கொண்டு வந்து விட்டுட்டுப் போனானே. அவன் தான் அவ லவர்.”என அந்த அணுகுண்டைத் தூக்கி இலக்கியாவின் தலையில் இறக்கினாள்.

இலக்கியா சற்றே சுதாரித்து அடுத்து பேசும் முன்னர், நிதர்சனா தன் பேச்சைத் தொடர்ந்தாள். “ அவன், ஐம் சாரி டி சே திஸ்…பட் அவன் ஒரு பக்கா ப்ளேபாய் இலக்கியா. என் ஃப்ரெண்ட் ரூபாவும் உங்களை மாதிரி தான். ஊர் சைட் பொண்ணு. கொஞ்சம் பார்க்க அப்பாவியா இருப்பா. யார் என்ன சொன்னாலும் நம்புவா. இவனோட பேச்சில அவ மயங்கிப் போனதில தப்பேயில்லை. ஏன்னா அவ்வளவு தத்ரூபமா பேசுவான். எனக்குத் தெரியும். ரூபா கூட நல்லா ஊர் சுத்திட்டு, கொஞ்சி குலாவி இருந்துட்டு ஒரு நாள், இது ஒத்து வராது. எனக்கு உன்னை பிடிக்கலைன்னு கைகழுவிட்டான். பாஸ்டர்ட்” என நிஜமான ஆத்திரத்துடன் பேசிய நிதர்சனாவின் பேச்சை எப்படி எடுக்கொள்ள என இலக்கியாவிற்குத் தெரியவில்லை.

“நிதர்சனா…” என மெல்லிய குரலில் இலக்கியா அழைத்ததை அவள் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.

“இதெல்லாம் நடந்து ஒன்னரை வருஷத்துக்கு மேல இருக்கும். இந்த இன்சிடெண்டுக்கு அப்பறம், அவனை நான் பார்க்கவேயில்ல. ரூபாக்கும் வேற ஒருத்தர் கூட மேரேஜ் ஆகிடுச்சு. அவ அப்ராட் போயிட்டா…இப்போ, ரெண்டு நாள் முன்னால உங்களை ரோட் முனையில இறக்கிவிட்டப்போ ஹெல்மெட்டை கழட்டினான் இல்லையா. அப்போ தான் அவனை மறுபடியும் பார்த்தேன். எனக்கு பக்னு ஆகிருச்சு. அப்பவே உங்ககிட்ட சொல்லனும் நினைச்சேன்…ப்ளிஸ் இதெல்லாம் நான் சொல்லறன்னேன்னு என்னை தப்பா நினைக்காதீங்க…எது நல்லது கெட்டதுன்னு யோசிச்சு நீங்களே முடிவெடுத்துக்கோங்க..என் ஃப்ரெண்ட் ரூபா, அவனாக ரொம்ப மனசு வேதனைபட்டா…கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துகோங்கன்னு சொல்லனும்னு நினைச்சேன்….அதும் முக்கியமா ஏன்னா…என் ஃப்ரண்டை அவன் சும்மா விட்டுட்டுப் போல…அவ வயித்தில அவனோட குழந்தையோட விட்டுப் போனான். அதுக்கப்பறம், ரூபா அவனுக்காக அழுத அழுகையும், அந்த குழந்தைய என்ன செய்யன்னு யோசிச்சு வருத்தப்பட்டதும் வார்த்தையால சொல்ல முடியாது. ஏன்னா அவ்வளவும் நான் கூட இருந்தேன் இலக்கியா.

“அவளோட நல்ல காலமோ என்னவோ, அந்த குழந்தை அடுத்த ரெண்டு வாரத்தில தானா கலைஞ்சிருச்சு…ஓருவேளை அப்படி நடந்திருக்கலைன்னா, ரூபா என்னவாகியிருப்பான்னு என்னால யோசிக்க கூட முடியலை இலக்கியா. நான் சொல்லறதை நீங்க முழசா நம்பறீங்களா இல்லையான்னு எனக்குத் தெரியலை. ஆனா இதை சொல்லாம என்னால இருக்க முடியலைங்க..இன்ஃபாக்ட் உங்க பேர் கூட இப்போ தான் கேட்டு தெரிஞ்சுகிட்டேன். நான் சொல்ல வந்ததை சொல்லிட்டேன்….அதுக்கு மேல உங்க இஷ்டம்..டேக் கேர்”என படபடவென பொரிந்துவிட்டு அவளது அறைக்குச் சென்றுவிட்டாள் நிதர்சனா.

இலக்கியா தொப்பென தனது கட்டிலின் மேல் அமர்ந்தாள். இலக்கியாவிற்கு சில நிமிடங்கள் முன்பு வரை தான் இருந்த மனநிலை என்ன, இப்போது இருக்கும் மனநிலை என்ன என்பது குறித்தெல்லாம் எண்ணிப்பார்க்க நேரமில்லை. நிதர்சனா சொல்லிச் சென்ற விஷயங்கள் எந்த அளவு உண்மை, எது பொய் என மனம் குழம்பித் தவித்தது.

நேரே கோகுலிடம் இதைப் பற்றி கேட்டுவிடலாமா என்றுகூட யோசித்தவள், “வேண்டாம். முதல்ல இது எவ்வளவு தூரம் உண்மைன்னு கண்டுபிடிக்கணும்.” என ஒருபக்கம் மூளை குறுகுறுக்க, மறுபக்கமோ,”இதெல்லாம் உண்மையா இல்லைன்னா?ஒரு நல்லவனை எல்லாரும் தப்பா புரிஞ்சுகிட்டிருந்தா?” என  அவன் மேல் பரிதாபப்பட்ட இலக்கியாவின் மனம், “இது எவ்வளவு தூரம் உண்மைன்னு தெரியாம, அடுத்து ஒரு அடி அவனைப் பார்த்து எடுத்து வைக்ககூடாது”என மனதில் தீர்க்கமாக உறுதி பூண்டாள்.

அடுத்த தினம், ஆவலுடன் தன்னைக் காண வந்தனிடம் சரிவர பேசாமலேயே நேரம் கடத்தியவள், ஒரு கட்டத்தில் அவன் கோபமுற்று, “என்னதாண்டி ஆச்சு உனக்கு. கை பிடிச்சா தட்டி விடற. ஒழுங்கா முகம் கொடுத்து பேச மாட்டேங்கற, என் கண்ணைப் பார்த்துக் கூட பேசமாட்டேங்கற, ஆசையா முத்தம் குடுக்க வந்தா முகத்தை திருப்பிக்கற…என்ன தான் உன் பிரச்சனை”என நேரடியாகவே வினவினான்.

அன்றைய காலையில் இருந்தே, “என் ஃப்ரெண்டோட வீடு இருக்கு. அங்க போலாமா? ப்ளீஸ்”என கெஞ்சிக் கொண்டு திரிந்தவன், இலக்கியா தீர்மானமாக “வரமாட்டேன்”என மறுத்துவிட்ட பின்னர், சற்றே சூடாகித்தான் போனான். அமர்ந்திருந்த அந்த ஐஸ்க்ரீம் கடையில் சுற்றும் முற்றும் பார்க்கிறார்கள் என்பது கூட மறந்து கத்தத் துவங்கியிருந்தான்.

இலக்கியாவும் அவனது கோபத்திற்காக காத்திருந்தவள் போல, சற்றும் அசராத குரலில், “ரூபா யாரு?”என மெல்ல வினவினாள். ஒரு நொடி இருண்டு போன அவனது முகம், அடுத்த சில நிமிடங்களிலேயே தெளிந்தது.

“என்ன கேட்ட?” என ஏதோ முடிவெடுத்து விட்டவன் போல அமைதியான குரலில் எதிர்கேள்வி கேட்டான்.

“ரூபா யாருன்னு கேட்டேன். அவங்களுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?” என கண்களை அவன் முகத்தில் இருந்து இம்மியளவு கூட அசைக்காமல் வினவினாள்.

“ரூபாவா? எந்த ரூபா?உனக்கு யார் சொன்னா?”

“யாரு சொன்னாங்கறது முக்கியாமா? இல்லை விஷயம் முக்கியமா? என்னை பொருத்தவரைக்கும் விஷயம் தான் முக்கியம்னு நான் சொல்லுவேன். நீங்க இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவேயில்லையே? ரூபா யாரு?”என தன் குரலை சற்றும் உயர்தாமல் மீண்டும் வினவியவளை அதுநாள் வரையிலும் காட்டாத ஒரு முகத்தை அப்போது அவளிடம் காட்டினான் கோகுல்.

அந்த புது முகத்தில், தான் என்ற ஒரு வெற்றிக் களிப்பும், இவள் கேள்விக்கு நான் பதில் சொல்ல வேண்டுமா என்ற கொதிப்பும், நிரம்பி வழிந்த போதும், இந்த உணர்ச்சிகளை மீறி, இலக்கியாவால் அவன் எண்ணங்களை கண்ணாடி போல் துல்லியமாக கணிக்க முடிந்தது. இது நாள் வரையிலும் காதல் என்னும் மீளாப்போதையில் கட்டுண்டு கிடந்தவளின் மூளை, முந்தையை இரவின் அதிர்ச்சியில் சட்டென விழித்துக் கொண்டது.

பழைய இலக்கியாவாக, எல்லாரையும் அளவிடும், முடிந்த வரையில் சரியாக கணித்துவிடும் அறிவாளி இலக்கியாவை முந்தின அதிர்ச்சி மனதின் ஆழத்தில் இருந்து இழுத்து வந்திருந்தது. அதனாலோ என்னவோ, அந்த கோப முகத்திரைக்குப் பின்னர், மெல்லிய அளவில் நீரோட்டம் போல் ஓடிக் கொண்டிருந்த கோகுலின் பயத்தையும்,”இவளுக்கு எப்படித் தெரியவந்தது? முழுதும் தெரிந்துவிட்டிருக்குமோ” என்ற சந்தேகத்தையும் இலக்கியாவால் உணரமுடிந்தது. இதைவிடவும் அவனிடம் இருந்து எதிர்பட்ட அந்த வைப்பிரேஷன். அந்த ஒரு “நெகடிவ் எனர்ஜி” என்று சொல்லப்படும் தீய எண்ணவலைகளை இலக்கியா சத்தியமாக உணர்ந்தாள்.

இலக்கியாவின் நியாயமான கேள்வியை கண்டுகொள்ளவேயில்லை. இதே நேரம் அவன் தவறு செய்யாதவனாக இருந்திருக்கும் பட்சத்தில், ரூபாவைப் பற்றி “என் முன்னாள் காதலி..சிறு நாட்கள் காதலித்தோம்.. ஒத்துவரவில்லை.. பிரிந்துவிட்டோம்”என்ற மட்டிலாவது ஏதேணும் உரைத்திருக்க வேண்டுமே.

ஆனால் அவன் வாயில் இருந்து அப்படிப்பட்ட எந்த வார்த்தையும் வரவில்லை. அதற்கு பதிலாக வந்துவிழுந்த வார்த்தைகளும், அதன் வீரியமும், இலக்கியாவிற்கு கோகுல் ஆனந்த் யார் என இன்னமும் தீவிரமாக உணர்த்தியது.

“சும்மா என்ன பெரிய போலீஸ் காரி மாதிரி கேள்வியா கேட்கற? இப்பவே இப்படி சந்தேகப்படறவா, நாளைக்கு கல்யாணம் காட்சின்னு ஆனதுக்கு அப்பறம் எப்படிலாம் கேள்வி கேட்டு என்னை டார்ச்சர் பண்னுவ..ஐயோ அம்மா…நல்லவேளை..இப்பவே உன் சுயரூபம் தெரின்சதே..”என பேசத் துவங்க, கோகுலின் வார்த்தைகளைக் கேட்ட இலக்கியாவிற்கு கோபத்தை மீறி ஒருவித சன்னமான நக்கல் சிரிப்பே வெளிப்பட்டது.

“நான் சொல்லவேண்டிய டயலாக்கை என்னை முந்திகிட்டு நீ சொல்லறதால, நீ நல்லவனாகிட முடியாதுடா”என தான் சொல்ல நினைத்ததை வார்த்தைகளாக வடிக்காமல், அந்த நக்கல் முழுவதையும் கண்களில் தேக்கி அவனை ஏறிட்டாள். இலக்கியாவின் இந்த அமைதியான எண்ணவோட்டம் கோகுலை மேலும் சூடாக்கியது.

“என்ன ஒரு திமிருடீ… சந்தேகப்பட்டு, கேள்வி கேட்டு என்னை டார்சர் பண்ணறதும் இல்லாம, நக்கலாவா பார்க்கற…கவனிச்சுக்கறேன்..இந்த நக்கல் சிரிப்புக்கு நீ வருத்தப்படுவடீ…”என சூளுரைத்துவிட்டு அவ்விடம் விட்டு அகன்றான். இலக்கியா இன்னமும் அந்தச் சன்னச் சிரிப்பை உதட்டில் ஒட்டிக் கொண்டே, எதிரில் மீதமிருந்த ஐஸ்கிரீமை மெல்ல ரசித்து உண்டாள்.

“நிதர்சனாவுக்குத் தான் தேங்கஸ் சொல்லனும். அந்தக் கோடு காட்டாம இருந்திருந்தா, இவனை நல்லவன்னு நம்பி நம்பியே நான் உட்கார்ந்திட்டிருந்திருக்கணும். முடிஞ்சா நிதர்சனாவை இந்த ஐஸ்கிரீம் பார்லருக்கு கூட்டிட்டு வந்து ட்ரீட் கொடுக்கணும்”என எண்ணம் கொண்டாள்.

அடுத்த இரு தினங்கள் அலுவலகத்திற்கு கோகுல் வரவில்லை. வந்திருந்தாலும் இலக்கியா அவனிடம் பேசியிருக்க மாட்டாள் தான். ஆனால் அவன் வரவில்லை என்ற செய்தி இன்னமும் நிறைவாக இருந்தது. அவன் வராது போனாலும், அவன் அலுவலகத்தில் செய்து வைத்த காரியங்களின் வீரியம் இலக்கியாவை வந்து சேரத்தான் செய்தன.

அவன் கோப மிகுதியில் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், இலக்கியா அவனுக்கு ஆசையாக முத்தமிடும் போது எடுத்த புகைபடம், காதலுருகி அனுப்பிய குறுஞ்செய்திகள் என முடிந்த அளவு பர்சனலான விஷயங்களை அலுவலக நண்பர்கள் சிலரின் மெயில் முகவரிக்கு அனுப்பியிருந்தான். கூடவே, “என்னை ஏமாற்றிவிட்டாள். என்னை காதலித்து ஊர் சுற்றிவிட்டு, இப்போது என்னை வேண்டாம் என்கிறாள். என்னை அவளுடன் சேர்த்து வையுங்கள்”என்னும் ரீதியில் பலபல செய்திகளையும் உடன் சேர்ந்து அனுப்பியிருந்தான்.

இருவரும் சேர்ந்து வெளியே செல்லும் விஷயமும், காதலிக்கிறார்கள் என்ற விஷயமும் அரசல் புரசலாக அலுவலகத்தில அனைவருக்கும் தெரிந்துதான் இருந்தது. ஆயினும், இப்படி அவமானமாக மாறிப்போகும் என இலக்கியா எதிர்பார்க்கவில்லை. அந்த மெயிலைப் படித்தவர்கள் முடிந்த அளவு இலக்கியாவை ஒதுக்க ஆரம்பித்தனர். இவள் ஏதோ செய்யக் கூடாத மாபாதக செயலை செய்துவிட்டவள் போல் நடந்து கொண்டனர். கோகுல் ஏற்படுத்திய அவமானத்தை விடவும், அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்கள் காட்டிய அந்த ஒதுக்கமும், புறம் பேசுதலும் இலக்கியாவின் மனதை வாட்டின.

அதனாலேயே, அவசர அவசரமாக வேறு வேலை தேடிக் கொண்டாள். வேறு பி.ஜி மாறிக் கொண்டாள். பழைய அலுவலகத்தில் இருந்த எல்லா நட்பையும் துண்டித்துக் கொண்டாள். அவளது நல்ல நேரமோ என்னவோ தற்போது வேலை செய்யும் அலுவலகத்தில், முன்னை விட நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது.

இப்படி அவனைப் பற்றிய சிந்தனைகளையும், அதனால் தனக்கு ஏற்பட்ட மனவருத்தத்தையும், அதை விடவும் மேலாக, உண்மையிலேயே அவன் நல்லவனா கெட்டவனா என கடைசிவரை அறிந்து கொள்ள முடியாமல் போய்விட்டதும் அவ்வப்போது இலக்கியாவை உறுத்தும்.

“ஒரு வேளை நல்லவனா இருப்பானோ. அவசரப்பட்டு சந்தேகப்பட்டுட்டேனோ. அந்த நிதர்சனா சொன்னதை நல்லா தீர விசாரிக்காம ஒரு நல்லவனை தப்பா நினைச்சுட்டேனோ”என்பன போன்ற எண்ணங்கள் இலக்கியாவின் மனதை சிறிது சிறிதாக ஆக்கிரமித்து, ஒருகட்டத்தில் நீங்கா இடம் பிடித்துக் கொண்டன.

அவனைப் பற்றி எண்ணங்களை வலுவாக மனதின் மூலைக்குத் தள்ளியவள், அடுத்தவாரம் தனது தோழிகளைக் காணப்போகும் ஆவலில் லயித்தாள்.

 

error: Content is protected !!