TTN-FULL

TTN-FULL

தொடுவானம் தொடுகின்ற நேரம்….

1

 ‘ நெடுவட்டம் ‘ நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம். மலை வாழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. அடிப்படை வசதிகள் கூட வாய்க்கப்பெறாத கிராமம்.

அங்கு ஒரு வாரமாக நடைபெற்ற மெடிக்கல் கேம்ப்பில் கலந்து கொண்டு, இன்று அனைவரும் ஊர் திரும்பும் நாள்

மக்களுக்கு அடிப்படை சுகாதாரத்தையும் சுத்தத்தையும் வேண்டிய மட்டும் எடுத்து கூறியாகிவிட்டது. முழுமையான மருத்துவ பரிசோதனைகளும், சிகிச்சையும் செய்து முடித்து விட்டு, கேம்ப்பில் கலந்து கொண்ட அனைத்து இளம் மருத்துவர்களுக்கும் ஊர் திரும்ப முறையான ஏற்பாடுகளைச் செய்து வழியனுப்பி வைத்தான் ஆகாஷ்.

கீச்….கீச்… என்ற ஒலியுடன் தன் கூட்டுக்குத் திரும்பும் புள்ளினங்களும்,  சோம்பலாய் ஆரஞ்சு நிறத்தில், “இதோ கீழே இறங்கி விடுவேன்”  என்று கண் சிமிட்டும் சூரியனும், சற்று குளுமையேறிய மாலை நேரத்து மலைக் காற்றும், ஆகாஷை அந்த ரம்மியமான சூழலை மிகவும் ரசிக்க வைத்தது.

அந்த கேம்ப்பை ஒருங்கினைத்து, மருத்துவர்கள் தங்குவதற்கும், உணவுக்கும் உதவிகள் பல செய்தவர், அங்கே உள்ள எஸ்.எஸ்.கே. தேயிலை எஸ்டேட் ஓனர் சண்முக சுந்தரம்.

அவர் ஆகாஷிடம், “வெல்டன்! மை பாய், இந்த முறையும் வெற்றிகரமாக இந்த கேம்ப்பை முடித்துவிட்டாய். வாழ்த்துகள்” என்று கூறினார்.

“அடுத்த கேம்ப் எப்ப அங்கிள்…”

“அடுத்து இரண்டு மாதங்கள் கழித்து வைத்துக் கொள்வோம், இடமும், சரியான தேதியும் பிறகு சொல்கிறேன்” என்றார் சண்முக சுந்தரம்.

“ஓகே அங்கிள், அப்ப நானும் கிளம்புகிறேன், அத்தையிடம் சொல்லிடுங்க”

“சரிப்பா… இருட்டிக் கொண்டு வருவது போல் இருக்கிறது, நீ சீக்கிரம் மலையை விட்டு கீழே இறங்குவதுதான் நல்லது” என்று கூறியவர்,

“வீட்டில் அம்மாவையும் தங்கையையும் விசாரித்ததாகக் கூறு. கோவை வரும் போது உன்னை வந்து பார்க்கிறேன்” என்று கூறினார்.

அவரிடம் விடைபெற்றுக் கொண்டு தன்னுடைய ஹோண்டா சிவிக் வண்டியில் ஏறியவன்,  இளையராஜாவின் இன்னிசைத் தொகுப்பை ஒலிக்க விட்டு, மனதில் தாய் மற்றும் தங்கையின் நினைவுகளோடும், ஒரு வாரம் கழித்து அவர்களை சந்திக்கப் போகும் ஆவலோடும்,  சீராக மலைப்பாதையில் காரை செலுத்தினான்.

ஆகாஷ்  28 வயது வாலிபன். இளம் மருத்துவன். பொது அறுவையியல் மருத்துவமும், குழந்தையியல் சிறப்பு படிப்பும் முடித்தவன்.

கோவையில் புகழ்பெற்ற மருத்துவ மனையில் குழந்தைகள் நல மருத்துவராக பணிபுரிபவன். அன்பான அம்மா மஞ்சுளா தேவி , அழகான தங்கை அபிநயா ஆகியோரைக் கொண்ட சிறு கூட்டுக்குச் சொந்தக்காரன்.

அவனது தந்தை இராணுவத்தில் பணிபுரிந்தவர். கார்க்கில் போரின் போது வீரமரணம் அடைந்தவர். அப்பொழுது அவனுக்கு வயது 9 அவனது தங்கைக்கு வயது 3 . சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு கணவரை இழந்து தவித்த மஞ்சுளா அவரது வேதனையை மறக்கும் பொருட்டு,  வயதானவர்களையும், ஆதரவற்ற பெண்களையும் ஆதரிக்கும் ஹோம் ஒன்றை நிறுவி, அதனை நல்ல முறையில் நடத்தி வருகிறார்.

ஆகாஷின் தாய் வழி தாத்தாவும், தந்தை வழி தாத்தாவும் வசதியுடையவர்களாய் இருந்ததால், பணத்திற்காக சிரமப்படவில்லை அவர்கள்.

வீடு, கடைகளின் வாடகையும், தென்னந்தோப்பு குத்தகைப் பணமும் ஹோமை சிறப்பாக நடத்த போதுமானதாக இருக்கிறது. ஆகாஷின் வீட்டை ஒட்டி இருக்கும் ஹோமில்தான் அவனுடைய தாயின் பகல் பொழுதுகள் கழியும்.

ஹோமில் இருப்பவர்களையும் தம் குடும்ப உறுப்பினர்களாகவே கருதி பார்த்துக்கொள்வதால் , அங்கு இருக்கும் அனைவருமே மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பர்.

“ஆகாய வெண்ணிலாவே

தரை மீது வந்ததேனோ!

அழகான ஆடை சூடி

அரங்கேறும் வேளைதானோ!”

கை விரல்கள் தாளம் தட்ட பாடலை ரசித்துக் கொண்டிருந்தவன் , வைப்ரேட் மோடில் வைத்திருந்த செல்பேசி அதிரவும், பாடலை நிறுத்தி விட்டு அழைப்பது யார்? என்று  பார்த்தவனின் இதழ்கள் புன்னகை புரிந்தன. அலைபேசியை காதுக்கு கொடுத்து,

“ஹாய்! மாம்…” என்றவனை இடை மறித்தவர்,

“என்னை அம்மான்னு கூப்பிடுன்னு உனக்கு ஆயிரம் முறை சொல்லிவிட்டேன் . நான் சொல்வது எதையும் நீ காதில் வாங்குவதில்லை”

“ கூல்…கூல்… அம்மா! ஓகே … இனி மாம்ன்னு கூப்பிட மாட்டேன்”

“ மதியமே கிளம்பி இருட்டுவதற்குள் மலையை விட்டு இறங்கு என்று கூறினாலும் கேட்காமல், இப்பொழுதுதான் கிளம்பினாயா?”

கோபப்பட்டவரிடம், “ அம்மா… தாயே … மஞ்சுளா தேவி… கேம்ப் முடியவே ஐந்து மணியாகிவிட்டது. நான்தானே என்னை நம்பி வந்த அனைத்து மருத்துவர்களையும் வழியனுப்பி வைக்க வேண்டும்

“அதன் பிறகு சண்முகம் அங்கிளிடம் விடைபெற்று உடனே கிளம்பி விட்டேன்.”

“இன்னும் சிறிது நேரத்தில் மலை அடிவாரம் வந்து விடுவேன்.”

“எனக்காக காத்திருக்க வேண்டாம், நேரத்துடன் சாப்பிட்டு விட்டு மறக்காமல் மாத்திரைகளை போடுங்கள்.”

“ சரிடா… அதெல்லாம் நான் சரியான நேரத்தில் சாப்பிட்டு மாத்திரை சாப்பிட்டு விடுவேன்… ஆனால் இன்று உன்னிடம் பேசாமல் உறங்க மாட்டேன்”

“ கல்யாணப்பேச்சு எடுத்ததிலிருந்து , என்னிடம் பிடி கொடுக்காமல் இருக்கிறாய்.  இன்று எனக்கு உன் முடிவு தெரிந்தாக வேண்டும்.”

“சரிம்மா… அபி என்ன செய்கிறாள்?” பேச்சை மாற்றினான்.

“பேச்சை மாத்தாதேடா… அவள் கல்லூரி அசைன்மெண்ட் எதையோ எழுதிக் கொண்டிருக்கிறாள். நீ நிதானமா வண்டி ஓட்டிக்கிட்டு வா… நான் போனை வைக்கிறேன்”

“ஓ… அபி படிக்கிறாளா?… அதனாலதான் இங்க மழை பெய்யுதா?” என்று தங்கையை கேலி செய்தவன்,

“அவகிட்ட சொல்லிடாதீங்கம்மா… என்னை ஒருவழியாக்கிடுவா…” என்று சிரித்தான்.

“ரொம்ப பயந்தவன் தான்டா நீ… இந்த வைகாசியோட உனக்கு குருபலன் முடியுதாம், அதனால,  ஆறு மாசத்துல உன் கல்யாணத்த முடிக்கனும்ன்னு நம்ம ஜோசியர் சொல்லியிருக்காரு”

“நம்ம தரகரும் நாலைந்து ஜாதகம் கொடுத்திருக்காரு… எல்லாமே அருமையான வரன்கள்… உனக்கு யாரை பிடிச்சிருக்கோ சொல்லு, உடனே பூ வச்சிடலாம்.”

“அம்மா… சரிம்மா… நான் வீட்டுக்கு வந்ததும் பேசிக்கலாம். இப்ப போனை வைக்கிறேன்”

திருமணப்பேச்சு எடுத்ததும் பிடி கொடுக்காமல் போனை கட் செய்த மகனை எண்ணி வருத்தமுற்றவர், அவனுக்காக காத்திருக்கத் தொடங்கினார்.

2

இங்கு போனை கட் செய்தவனின் மனநிலையோ வேறாக… மனதிற்குள் பெரும் சஞ்சலங்கள்… இத்தனை நாட்கள் திருமணத்திற்கு சம்மதிக்காமல் நழுவியாயிற்று, ஆனால் இனி தப்பிக்க முடியாது… கண்டிப்பாக திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்… ஆனால் அவனின் எண்ணங்கள அலைபாய்ந்தன.

முதன்முதலில் திருமணப்பேச்சு எடுத்ததும் அவள் முகம் தனக்கு ஏன் நினைவில் வந்தது என்று அவனுக்கு இன்று வரை புரியவே இல்லை. பளீரென்று ஒளி வீசும் கண்களும், குண்டு கன்னங்களும், குழந்தைத்தனம் மிஞ்சியிருக்கும் முகமும் இத்தனை  வருடங்கள் கழித்தும் தன் மனதில் பசுமரத்தாணி போல பதிந்திருப்பது அவனுக்கு ஆச்சர்யம்தான்.

மூன்று வருடங்கள் தினமும் அவன் பார்த்து ரசித்த முகம்தான், ஆனால் அவை வெறும், ஒரு அழகிய பூவை பார்க்கும் போதும், வண்ணத்துப்பூச்சியை பார்க்கும்போதும் தோன்றும் சாதாரண ரசனை என்றே நினைத்திருக்க, இன்றோ!… அவள் முகம் நெஞ்சின் அடியாழம் வரை பரவியிருக்கும்  விதம் கண்டு செய்வதறியாது தவிக்கும் நிலை…. கல்லூரியில் படிக்கும் காலத்தில் தன்னிடம் காதலை சொன்ன எத்தனையோ பெண்களை ஒரு புன்சிரிப்புடன் கடந்தவன்தான் அவன்.

உடன் பயின்ற பெண்களின் முகங்கள் கூட தெளிவாக நினைவில்லாத போது இவள் முகம் மட்டும் நெஞ்சில் நீங்காது நிறைந்திருப்பதை ஆச்சரியத்துடன் உணர்ந்த போது, தன் உள்ளத்தில் முகிழ்த்துள்ள காதலையும் உணர்ந்து கொண்டான்.

தன் தாயிடம் இதனை சொல்லலாம்தான், அவனது விருப்பத்திற்கு முதலிடம் கொடுப்பார்தான், ஆனால்… அவள் எங்கிருக்கிறாள், என்ன செய்கிறாள் என்று எதுவும் தெரியாமல் என்னவென்று சொல்வது.

அவனும் கடந்த ஒன்றரை வருடங்களாக டிடெக்டிவ் ஏஜென்சி மூலமாக தேடி வருகிறான்தான்… ஆனால், பலன் என்னவோ இதுவரை பூஜ்ஜியமே.

“ திடீரென்று ஒரு நாள் குடும்பத்துடன் ஊரை காலி செய்து கொண்டு சென்று விட்டனர், அவர்கள் சென்ற இடம் தெரியவில்லை” இதுதான் அவனுக்கு கிடைத்த ரிப்போர்ட்.

அதற்கு மேல் அவளைப் பற்றிய விபரங்கள் ஏதும் அவனுக்கு தெரியவில்லை. அவன் அவளுடன் ஒரு முறை கூட பேசியதில்லை. அவளது குடும்ப உறுப்பினர்களைக்கூட பார்த்திருக்கிறான் அவ்வளவே.

வேறு எந்த விபரமும் அவனுக்கு தெரியாது.  அவன் எண்ணங்கள், அவளை முதன் முதலில் பார்த்த நாளுக்கு சென்றது…

அப்பொழுது அவன் வேலூரில் இளநிலை மருத்துவம் பயின்று வந்த காலகட்டம் அது. மூன்றாம் வருடம் படிக்கும் போது ஹாஸ்டல் உணவு ஒத்துவராமல், நண்பன் ஒருவனுடன்  இணைந்து வீ டு ஒன்றை வாடகைக்கு பிடித்து தங்கியிருந்தான். இரண்டாம் மாடியில் நல்ல காற்றோட்டத்துடன் கூடிய தனி வீடு அது. ஆழ்ந்து படிப்பதற்குரிய அமைதியான சூழலும், நண்பனுடன் சேர்ந்து சமைத்த சுவையான உணவும் அவனுக்கு மிகவும் பிடித்தது.

அவன் இருந்த வீட்டுக்கு எதிரே பெரிய தொட்டி முற்றத்துடன் கூடிய வீடு ஒன்று உண்டு. வீட்டின் தாழ்வாரத்தையும், முற்றத்தையும் இவன் வீட்டின் பால்கனியிலிருந்தே காண முடியும்

அன்றொரு நாள், வார விடுமுறை தினத்தில் பால்கனியில் அமர்ந்து அமைதியாக படித்துக் கொண்டிருந்தான் ஆகாஷ். உடன் தங்கியிருந்த மற்றொரு நண்பன் சுபாஷ் ‘டீ’ போட்டுக்கொண்டிருந்தான்.

அப்பொழுது, “அண்ணா!… ப்ளீஸ் அண்ணா!… எனக்கு தா அண்ணா!” என்ற குரலோசை தங்கை அபியை நினைவு படுத்த எதிர் வீட்டைப் பார்த்தான்  ஆகாஷ்.

அங்கே , பதினைந்து வயது மதிக்கத்தக்க சிறுபெண், தன் அண்ணனின் கையில் இருக்கும் காத்தாடிக்காக அவனை துரத்திக் கொண்டிருந்தாள். அந்த பலவண்ணக் காத்தாடியை கையில் வைத்திருந்தவனும் பள்ளி செல்லும் வயதில் இருக்கும் சிறுவன்தான்.

அவன் தன் தங்கையிடம், “போடி, இது எனக்கு பெரியப்பா வாங்கித் தந்தது. உனக்கு வேணும்னா அவர் கிட்ட சொல்லி  வேற வாங்கிக்கோ, நான் தரமாட்டேன்.” என்று அவளை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தான்.

அவர்களின் சேட்டையில் கவரப்பட்டு அங்கு கவனத்தைப் ைபதித்திருந்த ஆகாஷ்,  அவளின் முகத்தை காண முயற்சித்துக் கொண்டிருந்தான். இளமஞ்சள் நிறத்தவள் அவள். கருநீல பட்டுப்பாவாடையும் , சந்தன நிற சட்டையும் அணிந்திருந்தாள், தலைக்கு குளித்து முடியை விரித்து விட்டிருந்தாள்.

அது அவள் இடையைத் தாண்டி முழங்கால்களைத் தொட்டிருந்தது. அவள் தாவிக் குதித்து தன் அண்ணன் கையிலிருந்த காத்தாடியை பிடுங்க முயற்சிக்கையில் அவளது குழலும் நர்த்தனமாடி அவள் முகவடிவை மறைத்தது.

“இந்தாடா ‘டீ’ எடுத்துக்கோ” சுபாஷின் குரலில் கலைந்தவன், “ யார்டா அது எதிர் வீட்டில் திடீரென்று ஆட்கள் நடமாட்டம், வெகு நாட்களாக பூட்டியே கிடந்ததுதானே இந்த வீடு” என்றான்.

“நாம கேம்ப் போய்ட்டு வந்த இந்த மூனு நாள்ல குடி வந்திருக்காங்க மச்சி”

“வீட்டை விலைக்கு வாங்கியிருக்காங்களாம், பெரிய கூட்டுக் குடும்பம் போல, நிறைய பேர் இருக்காங்கடா” என்றான் சுபாஷ்.

அதற்குள் அவர்களின் காத்தாடி சண்டையில் இன்னும் இரண்டு வாலிபர்கள் சேர்ந்திருக்க , கூச்சல் அதிகமானதில் இவர்களது கவனம் அங்கே திரும்பியது.

“ அண்ணா, பெரியண்ணா … ப்ளீஸ் ண்ணா… அதை வாங்கிக் குடுங்கண்ணா” என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள் அவள்.

அழுகையில் உதடுகள் பிதுங்கி இதோ கண்ணீர் வந்து விடுவேன் என்றிருக்க, அவளது பெரிய அண்ணன் எட்டி தனது தம்பியிடம் இருந்து அந்த காத்தாடியை வாங்க  முற்பட, அதனை பறக்க விட்டான் சிறியவன்.

அந்தக் காத்தாடி பறந்து வந்து இவர்கள் நின்றிருந்த பால்கனிக் கம்பியில் வந்து சிக்கிப் படபடத்தது.

கிழிந்து விடாமல் அந்த காத்தாடியை விடுவித்த ஆகாஷ் எதிர் வீட்டை நோக்க , அவள் முற்றத்திலிருந்து  வேகமாக ஓடி வந்து திண்ணையிலிருந்த தூணின் அருகே நின்று நிமிர்ந்து மேலே பார்த்தாள்.

“ப்ளீஸ்… காத்தாடியை தர்றீங்களா” என்றாள்.

சின்ன சிரிப்புடன் ஆகாஷ் பார்த்துக் கொண்டிருக்க சுபாஷ் அவளிடம்,

“ம்ம்… உன் அண்ணனை மாடிக்கு அனுப்பு தர்றோம்” என்றான்.

அதற்குள் காத்தாடியை பறக்க விட்டதற்காக தனது தம்பியை கடிந்து கொண்ட அவளது மூத்த அண்ணன் சுபாஷிடம், “நான் வந்து வாங்கிக்கிறேன்பா” என்றான்.

“ இல்லண்ணா நானே வந்து தர்றேன்”  என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்க ஆகாஷின் பார்வை அவளின் சந்திர வதனத்தை ரசித்துக் கொண்டிருந்தது.

பசும்மஞ்சளை அரைத்து  பாலில் கலந்த நிறம், பளீரென ஒளி வீசும் சூரியத் துண்டுகளாய் விழிகள்,சிறு நாசி, சிவந்த செம்பவள இதழ்கள், குண்டு கன்னங்கள், சற்று பூசிய உடல் வாகு மொத்தத்தில் தங்கத்தால் செய்து வைத்த அம்மன் சிலை போல இருந்தாள்.

இவன் ரசித்து முடிப்பதற்குள் காத்தாடியை எடுத்துக் கொண்டு கீழே சென்ற சுபாஷ், அவளின் அண்ணனிடம் இவர்களைப் பற்றிய விவரங்களைக் கூறிவிட்டு அவர்களின் குடும்ப விபரங்களை அறிந்து வந்தான்.

3

“ஆகாஷ், அவங்க பெரிய கூட்டுக் குடும்பமாம்டா, அந்த குடும்பத்தில் அந்த பொண்ணோட அப்பாதான் மூத்தவராம், அவருக்கு இரண்டு தம்பிகளாம், அனைவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசிக்கின்றனர்.  பல  வருடங்கள் குழந்தையில்லாமல் தவித்தவர்களுக்கு தாமதமாக பிறந்தவளாாம் அந்த பெண்.

அவளுடைய இரண்டு சித்தப்பாவுக்கும் இரண்டிரண்டு ஆண் பிள்ளைகள்.  அனைவரும் அவளுக்கு அண்ணன்கள், குடும்பத்துக்கே மிகவும் செல்லப் பெண்ணாம்டா…  பார்க்க பெரிய பெண்போல இருந்தாலும் பத்தாம் வகுப்புதான் படிக்கிறாள்டா”  என்று ஒப்பித்துக் கொண்டிருந்தான் சுபாஷ்

அவள் மீண்டும் தென்படுகிறாளா என பார்வையால் துழாவிக் கொண்டே…  ”நான்கு  அண்ணன்களுக்குத் தங்கை , வீட்டின் ஒரே பெண் வாரிசு,, செல்லப் பெண்ணாக இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது”

“உன் சேட்டையை அங்கே காட்டிவிடாதே…  அவளின் அண்ணன்கள் உன் எலும்பை எண்ணி விடுவார்கள்”  சுபாஷிடம் கூறியவன் புன்னகை சிந்த …

” டேய், நான் இன்றிலிருந்து அவளது ஐந்தாவது அண்ணன்டா”  என்று அலறினான் சுபாஷ்.

பழைய நினைவுகளிலிருந்து வெனிவந்த ஆகாஷ், தன் மொபைல் எடுத்து சுபாஷின் எண்களை அழுத்தினான்.மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டதும்,

“ஆகாஷ்… டேய்… மச்சி… எவ்வளவுநாளாச்சுடா நாம பேசி…”  குதூகலித்தான் சுபாஷ்.  ஆகாஷுடன் இணைந்து படிப்பை முடித்தவன், சென்னையில் புகழ் பெற்ற மருத்துவமனையில் பணியாற்றுகிறான்.

இரண்டு வருடங்களுக்கு முன் சம்சார பந்தத்தில் சிக்கி  பேச்சுலர்  வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்தவன்.

அவனது துள்ளலான பேச்சைக் கேட்ட ஆகாஷின் முகத்தில் தானாக புன்னகை வந்தமர்ந்தது. ” ம்ம்… நல்லாயிருக்கியா சுபாஷ்? ஆர்த்தி,  ஜோஷி குட்டி எல்லாம் எப்படி இருக்காங்க.”

“எல்லோரும் நல்லா இருக்கோம்டா, அம்மா தங்கச்சி எல்லாம் எப்படி இருக்காங்க?”

“ம்ம்… நல்லா இருக்குறாங்க.”

“ என்னடா திடீர்ன்னு போன் பண்ணியிருக்க, ஏதாவது முக்கியமான விஷயமா?”

“ ம்ப்ச்… கங்கா பற்றி ஏதாவது விபரம் தெரிந்ததா”

” இல்ல மச்சி, அவங்க அண்ணன் வேல பார்த்த பிரைவேட் கம்பெனில போய் விசாரிச்சதுல…இரண்டு வருஷத்துக்கு முன்னாடி திடீர்ன்னு வேலையை விட்டுட்டு போய்ட்டார்ன்னு சொன்னாங்க”

“கூட வேலை பார்த்தவங்க யாருக்கும் எந்த விபரமும் தெரியலடா”

“அவங்க அப்பா சித்தப்பா எல்லாரும் சேர்ந்து வச்சிருந்த மளிகைக் கடையைக்கூட அவசரமாக வந்த விலைக்கு வித்துட்டு போயிருக்காங்க”

“இந்த விபரங்கள் எல்லாம் எனக்கு டிடெக்டிவ் ஏஜென்சி மூலமாகவே கிடைத்தது சுபாஷ், உனக்கு வேறு ஏதேனும் விபரம் தெரியுமா என்று கேட்கத்தான் போன் செய்தேன்.”

“இல்ல மச்சி… அந்த பொண்ணு , அவ அண்ணனுங்க ரெண்டு பேர் படிப்பக் கூட டிஸ்கண்டினியு பண்ணிட்டு போயிருக்காங்க டா…

இதுக்கு மேல எந்த விபரமும் தெரியல… திடீர்னு மாயமாகி இருக்காங்க…. கண்டே பிடிக்க முடியல…”

என்று கூறியவன்,  ஆகாஷின்  அமைதியை உள்வாங்கிக் கொண்டு,

“மச்சி…இன்னுமாடா அந்த பொண்ணு நினைப்போட இருக்க?…”

பெருமூச்சை வெளியிட்டவன்,  “அந்த முகத்தை என்னால மறக்கவே முடியல சுபாஷ்…

ஆனா, அம்மா ஆறு மாதம்தான் டைம் குடுத்திருக்காங்க…

அதுக்குள்ள அவளை கண்டுபிடிக்கனும்.”

“மச்சி… அவ கிடைக்கலைன்னா…”  தயக்கத்துடன் வினவினான் சுபாஷ்.

சற்று நேர அமைதிக்குப் பின், “அம்மா காட்டற பொண்ண கல்யாணம் பண்ணிக்குவேன்…

கண்டிப்பா அம்மா மனச வேதனைப் படுத்த மாட்டேன்…

அவ எனக்கு கிடைக்கனும்னா, கண்டிப்பா கடவுள் அவள என் கண்ணுல காட்டுவார்டா…”

“கவலைப்படாத ஆகாஷ்…அவ கூட  சரியா பேசுனது கூட கிடையாது, ஆனாலும் அவ மேல இவ்வளவு நேசத்தோட இருக்குற… கண்டிப்பா அவ கிடைப்பாடா…”

“ ஓகே சுபாஷ்….ஏதாவது தகவல் தெரிஞ்சா கால் பண்ணு.”

அழைப்பைத் துண்டித்தவன், தேநீர் கடை ஏதும் இருந்தால் தேநீர் அருந்தலாம் என்று பார்வையை சுற்றிப் பார்த்த படி காரை செலுத்தினான்.

ஹெட்லைட் வெளிச்சத்தில் ஒரு இளம் பெண்சாலையின் நடுவே ஓடிவருவது தெரிந்தது. திடுக்கிட்டு  காரின் வேகத்தை மட்டுப்படுத்தினான் ஆகாஷ்.

எதிலிருந்தோ தப்பித்து ஓடி வருபவள் போல தலைதெறிக்க  ஓடி வந்தவள்…பின்னே திரும்பித் திரும்பி பார்த்தபடி வந்து இவன் காரில் மோதி பக்கவாட்டில் “அம்மா…”  என்ற அலறலுடன் கீழே விழுந்தாள்.

சடன் பிரேக் போட்ட ஆகாஷ், பதட்டத்துடன் காரை விட்டிறங்கி, அந்த பெண்ணைப் பார்த்தவன் அதிர்ந்து போனான்.

கார் பலமாக மோதாத போதும் பேலண்ஸ் இல்லாமல் பக்கவாட்டில் விழுந்தவள், அருகிலிருந்த பாறையில் மோதி,  தலையில் இரத்தம் வடிய மூர்ச்சையாகி குப்புற விழுந்து கிடந்தாள்.

அசைவில்லாமல் கிடந்தவளைப்  பார்த்து அதிர்ந்து நின்றவன்,

சற்றுத் தொலைவில் ஒரு கார் வந்ததையும்,  அதிலிருந்தவர்கள் இறங்காமல், இங்கே பார்த்துக் கொண்டிருப்பதையும் உணர்ந்தவன், சட்டென்று காரின் டேஷ்போர்டில் இருந்த பாதுகாப்பிற்காக  எப்போதும் உடன் வைத்திருக்கும் பிஸ்டலை எடுத்துக் கொண்டான்.

இவன் பாதை நடுவில் காரை நிறுத்தியிருந்ததால் பின்னால் வந்த வாகனங்களில் இருந்தவர்கள் விபத்து என்பதை உணர்ந்து இறங்கி இவன் அருகில் வரவும், எதிர்ப்புறம் இருந்த கார் வேகமாக பின்வாங்கியது.

ஆகாஷின் அருகில் வந்துது நின்றவன், கீழே விழுந்து கிடந்தவளைப் பார்த்து  “  அடிபட்டிருக்கு சார்…அந்த பொண்ணு தலையிலிருந்து இரத்தம் நிறைய வருது…”  என்றான்.

சில நிமிடங்களில் இவ்வளவும் நிகழ்ந்து விட செய்வதறியாது நின்றிருந்த ஆகாஷ்,  அப்புதியவனின் குரலில் இயல்புக்கு  வந்தான்.

காரிலிருந்து மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பையை எடுத்து வந்தவன். அவளருகே முழங்காலிட்டு அமர்ந்து, அவளைத் திருப்பினான்.

முகம் முழுவதும் இரத்தம் வழிந்தோட மூர்ச்சையாகியிருந்தாள் பெண்.

பஞ்சின் மூலம்  அவளது இரத்தத்தை துடைத்தவன்,  இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்த அவள் தலையில் அழுந்த பேண்டேஜைச் சுற்றினான்.

அவளது நாடித் டிப்பையும் சரிபார்த்தவன் ,

“சாதாரண மயக்கம்தான் …. அடிபட்ட  அதிர்ச்சில மயங்கியிருக்காங்க….   காயத்துக்கு ஸ்டிச்சஸ் போடனும்…  நான் இவங்களை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்…

ஐயாம்…டாக்டர் ஆகாஷ்…. இது என்னுடைய விசிட்டிங் கார்டு…”   என்று அருகில் இருந்தவனிடம் நீட்டினான்.

“சார்… எனக்கு உங்களை நல்லா தெரியும் சார்.  போன மாதம் என் அண்ணன் பையனுக்கு காய்ச்சல்ன்னு உங்க ஹாஸ்பிடல்லதான் சேர்த்திருந்தோம்.

நீங்கதான்  ட்ரீட்மெண்ட் பார்த்தீங்க…”  என்று கூறியவன்,

“நீங்க அந்த பொண்ண கூட்டிட்டு போங்க சார்… நான் நாளைக்கு வந்து பார்க்கிறேன்…. என் பெயர் ராஜா ,  இந்தாங்க என்னுடைய விசிட்டிங் கார்டு”  என்று தந்தவன் ஆகாஷிடம் விடைபெற்றான்.

அடிபட்டுக் கிடந்தவளை அள்ளியெடுத்து கார் பின் சீட்டில் வாகாக  கிடத்தியவன், முன்புறம் வந்து காரைக் கிளப்பினான்.

‘என்ன இந்த பொண்ணு இப்படி உடைந்து விழுவதைப் போல இருக்கு, அதான் லேசாக அடிபட்டதும் மயங்கி விழுந்தவள் இன்னும் எழும்பவில்லை’

‘இந்த  காலத்துப் பொண்ணுங்க ஜீரோ சைஸ் உடம்பு வேணும்ன்னு சாப்பிடாம பட்டினி கிடந்து உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கிறார்கள்.’

மனதில் ஏதோ உறுத்த அவள் முகத்தை திரும்பி பார்த்தான், இருளில் வரிவடிவமாய் தெரிந்த அவள் முகம் மனதிற்கு பரிட்சயமாகத் தோன்ற,  இந்தப் பெண்ணை இதற்கு முன் பார்த்திருக்கிறோமா… என்று சிந்தித்தபடி காரை விரைவாக செலுத்தினான்.

4

ஏனோ  மனதிற்குள் பெரும்  சஞ்சலங்கள் சூழ ,  காரை விரைவாக ஓட்டியவனது கவனத்தை கலைத்தது அவனது அலைபேசி.  அலைபேசி அழைப்பை ஏற்றவன்,  “  ஹலோ சொல்லுங்கம்மா…”  என்றான்.

“சிட்டிக்குள்ள வந்துட்டியா?”

“ இல்லம்மா… வர்ற வழியில சின்னதா ஒரு ஆக்சிடெண்ட்…”   அவன் முடிக்கும் முன் பதறியவர்,

“ஆக்சிடெண்ட்டா… என்னாச்சுப்பா  உனக்கு ஏதும் அடிபடலயே…”  என்று  படபடத்தார்.

“அம்மா… ரிலாக்ஸ்… எனக்கு  எதுவும் அடிபடலம்மா… நான் நல்லாதான் இருக்கேன்…”

“கடவுளே…!  யாருக்கு என்னாச்சு…? நேரத்தோடு வா… இருட்டில்  கிளம்பி வராதே என்று சொன்னால் கேட்குறியா?”

“அம்மா… பதட்டப்படாதீங்க… என் வண்டிக்கு குறுக்கே ஒரு பொண்ணு வந்து விழுந்திடுச்சி… நெத்தில  சின்ன காயம்தான்… முதலுதவி பண்ணிட்டேன்… இன்னும் மயக்கம் தெளியல… அதான் என்னுடைய ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டு போறேன்…  அந்த பொண்ண அட்மிட் பண்ணிட்டு வீட்டுக்கு வந்திடுவேன்.”  என்றான்.

“பார்த்துப்பா  ரொம்ப அடி பட்டிருக்கா அந்த பொண்ணுக்கு…”

“இல்லம்மா லேசான அடிதான்… நான் பார்த்துக்கிறேன்… நீங்க தூங்குங்க…”

அலைபேசி தொடர்பை கட் செய்தவன் உடன் பணிபுரியும் பெண் தோழிக்கு அழைத்தான்.

“ஹலோ…திவ்யா…”

“ஹலோ ஆகாஷ்… கேம்ப் முடிந்ததா…எப்ப ரிட்டர்ன்?”

“வந்துகிட்டே இருக்கேன் திவ்யா… நம்ம ஹாஸ்பிடல்ல இன்னிக்கு ஓபி நைட் டியூட்டி யாரு?”

“நானும்,  சேகரும்தான்… இப்ப ஹாஸ்பிடல்லதான் இருக்கேன்.”

“ ஓகே… ஐ வில் பி தேர் இன் டுவன்ட்டி மினிட்ஸ்… என்னுடைய கார்ல அடிபட்டு ஒரு பொண்ணு மயங்கிட்டா, பர்ஸ்ட் எய்ட் பண்ணிட்டேன், இன்னும் மயக்கம் தெளியலை,  பல்ஸ் நார்மலாதான் இருக்கு,  அங்க தான் கூட்டிட்டு வர்றேன்.”

“ஓகே டாக்டர் … ஸ்ட்ரெக்ச்சர் ரெடி பண்ணிட்டு வெயிட் பண்றேன்  வாங்க.”

அலைபேசியை அணைத்தவன் காரின் வேகத்தை அதிகப்படுத்தினான். மருத்துவமனை வளாகத்தினுள் கார் நுழைந்ததும், பணியாளர்களை அழைத்து அப்பெண்ணை ஸ்ட்ரெக்ச்சரில் ஏற்றச் செய்தவன்,  பளீரென்ற மின்விளக்கு வெளிச்சத்தில் அவள் முகத்தைப் பார்த்து அதிர்ந்து போனான்.

“கங்கா…”

மருத்துவமனை வாசலில் அசையாமல் நின்றவனை உலுக்கிய டாக்டர் திவ்யா, “  ஆகாஷ்… என்ன ஆச்சு?”   அவள் உலுக்கலில் சுயம் பெற்றவன்,  “  திவ்யா அந்த பொண்ணு…”

“ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்சாச்சு… நெத்தியில சின்ன காயம்தான் ஆழமில்ல,  க்ளீன் பண்ணி இரண்டு தையல் போட்ருக்கேன். அந்த பொண்ணு ரொம்ப வீக்கா இருக்கா, அதான் மயக்கம் தெளியலை. ட்ரிப்ஸ் ஏறுது. இன்னும் ஒரு மணி நேரத்தில் அந்த பொண்ணு கண் விழிச்சிடும்.”

அவனுடன் நடந்து கொண்டே விபரங்களைக் கூறியவள் , கங்கா அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைக்குள் நுழைந்தாள்.

இரண்டு மணி நேரமாக என்னுடன் பயணித்திருக்கிறாள்.அவ்வளவு நேரமாக எப்படி கண்டுபிடிக்காமல் போனேன். மனதிற்குள்  வெகுவாக வருந்தியவன் வாடிய கொடி போல கட்டிலில் கிடந்தவளின் முகத்தை இமைக்காமல் பார்த்தான்.

அவளது  நாசிக்கும் உதட்டுக்கும்  இடைப்பட்ட பகுதியில் மின்னிய சிறு மச்சத்தைப் பார்த்தவன், ‘இது மட்டுமில்லையென்றால் கண்டிப்பாக இவளை என்னால் அடையாளம் கண்டிருக்க முடியாது ‘  என நினைத்துக் கொண்டான். ஏனெனில் அவள் அந்த அளவு உருக்குலைந்து போயிருந்தாள்.

கழுத்தெலும்பும்,  கன்னத்தெலும்பும் துருத்தி இருந்தது.  இளமஞ்சள் நிறம் மங்கி தோலெல்லாம் வறண்டு போயிருந்தது. அவனது இரு கைபிடியில் அடக்கி விடலாம் போல, அவ்வளவு மெலிந்து போயிருந்தாள். உதடுகள் காய்ந்து வெடித்து பார்க்கவே பரிதாபமான தோற்றத்தில் இருந்தாள்.

என்ன ஆயிற்று இவளுக்கு,  ஆறு வருடங்களுக்கு முன் நான் பார்த்து பார்த்து ரசித்த முகமா இது…?  கால் கூட தரையில் படாமல்  இவளைத் தாங்கும் இவளது அண்ணன்களும் குடும்பத்தவரும் எங்கே…?  இவளைத் துரத்தி வந்த காரில் இருந்தவர்கள் யார்…?  விடையறியா பல கேள்விகள் அவனுள் சுற்றிச் சுழன்றன.

அங்கிருந்த நாற்காலியை கட்டிலின் அருகே இழுத்துப் போட்டு அமர்ந்தவன் திவ்யாவிடம், “ நீங்க போங்க திவ்யா,  நான் பார்த்துக்கிறேன்.  இவங்க கண் விழித்த பிறகுதான் நான் வீட்டுக்குப் போவேன்.

இவங்க இன்னைக்கு நைட் இங்க இருக்கட்டும் . நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்”  என்றான்.

“ இந்த பொண்ணு யாரு?  இவங்க வீட்டுக்கு இன்பார்ம் பண்ணனுமே…உங்களுக்கு தெரிந்த பொண்ணா ஆகாஷ்.”

ஆமாம் என்ற பாவனையில் தலையசைத்த  ஆகாஷ், “இவங்க பேரு கங்கா. மற்ற விபரங்களை இவங்க கண் விழித்த பிறகுதான் கேட்கனும்.

அவனைக் கேள்வியாகப் பார்த்தவள், “ சரி ஆகாஷ் இவங்க கண் விழித்ததும் சொல்லுங்க சாப்பிட ஏதாவது கொடுக்கச் சொல்றேன்” என்றாள்.

சரி என்று தலையை அசைத்தவன் டாக்டர் திவ்யா  வெளியேறியதும் விழியெடுக்காமல் கங்காவின் முகத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.

மனதைக் குழப்பும் பல கேள்விகளுக்கு பதில் அவளிடமே. அவள் கண்விழித்தால்தான் எதையும் அறிய முடியும். அவள் மயக்கம் தெளிய காத்திருக்கலானான்…

மனம் அவளது கடந்த காலப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தது.

அந்த வீட்டின் செல்ல இளவரசி அவள் . இனிமையான குணங்களும் மென்மையான மனதும் உடையவள்.

பட்டம் விட்டு விளையாடிய நிகழ்விற்குப்  பின் சுபாஷ் அந்தக் குடும்பத்துடன் நெருங்கிப் பழகலானான். கங்காவின் அண்ணன்களில் மூன்றாமவன் திவாகரன் கல்லுரி படிக்கும் வயதினன் ஆகையால்  இவர்கள் சகஜமாகப் பழக ஏதுவாக இருந்தது.

நான்காவது அண்ணனான பிரபாகரனை அவள் அண்ணனாகவே மதிப்பதில்லை. இருவருக்கும் ஒரு வருடமே இடைவெளி ஆதலால்,  பெரியவர்கள் முன்னும், ஏதேனும் காரியம் ஆக வேண்டும் என்றாலோ மட்டுமே அண்ணன் என்றழைப்பவளுக்கு மற்ற நேரங்களில் பிரபாதான்.  அவனே அவளுக்கு உற்ற தோழனும் கூட.

அன்று அதுபோல பிரபாவுடன் எதிர் வீட்டுக்கு வந்தவள்,  “சுபாஷ் அண்ணா… டாக்டர் சார் …” எனறு கூவி அழைத்துக் கொண்டிருந்தாள். மேலிருந்து எட்டிப் பார்த்த சுபாஷ், “  என்ன கங்கா என்ன வேண்டும்?”  என்றான்.

“ கீழ இறங்கி வாங்க உங்க கிட்ட ஒரு சந்தேகம் கேட்கனும்”  என்றாள். கீழே இறங்கி வந்தவன் அவளிடம், “  என்ன சந்தேகம்?… உனக்கு மூளை இருக்கா இல்லயான்னு டெஸ்ட் பண்ணனுமா?”  என்றவன் சிரித்துக் கொண்டே பிரபாவிடம் ஹைஃபை கொடுத்துக் கொண்டான்.

“அண்ணா…” என்று சினுங்கியவளைப் பார்த்த பிரபா, “ அண்ணா இவள நம்பாதீங்க,  உங்க கிட்ட ஏதோ காரியம் ஆகனும் அதான் இவ அண்ணன்னு கூப்பிடறா”  என்றவனைப் பார்த்து பழிப்பு காட்டியவள்,

“ அண்ணா, எனக்கு இரத்த வகைகள், இரத்த தானம் பற்றி  பாடம் வந்திருக்கு. எனக்கும் இரத்த தானம் பண்ண  ஆசையா இருக்கு. அதுக்கு என்ன செய்யனும்னு கேட்கத்தான் வந்தேன்”  என்றாள்.

அப்பொழுது  லைப்ரரியிலிருந்து வீட்டிற்குள் நுழைந்த ஆகாஷ் இவர்களின் சம்பாஷணையைக் கேட்டு ஆச்சர்யத்துடன் அவளைப் பார்த்தவன் சுபாஷிடம்,

“யாருடா இரத்த தானம் பண்ணனும்?”

“ இதோ நம்ம கங்கா மேடம்தான்”

சிறு சிரிப்புடன் அவளை ஏறிட்டு,  “  உனக்கு எப்படி இந்த எண்ணம் வந்தது”  என்று கேட்டவன் அவளது இரத்த வகையையும் கேட்டான்.

“ என்னுடையது கொஞ்சம் அரிதான இரத்த வகை ஏபி நெகட்டிவ்.  கவர்ண்மெண்ட் ஹாஸ்பிடல்ல  பதிஞ்சு வைக்கலாம்ன்னு எங்க மிஸ் சொன்னாங்க,  அதான் எப்படி பண்ணனும்ன்னு உங்ககிட்ட கேட்க வந்தேன்”  என்றாள்.

“ வெரிகுட்… கண்டிப்பா  பதியலாம் , இப்ப இல்ல . உனக்கு பதினெட்டு வயசு முடிஞ்சதும் பதியலாம். இரத்தம் தேவைப்படும் போது உன்னைத் தொடர்பு கொள்வாங்க. பதியும் போது உன் பெற்றோர் அல்லது பாதுகாவலர் சைன் வேணும். உங்க அப்பாவ கூட்டிட்டுப் போ”  என்றான்  ஆகாஷ்.

அதற்கு பிரபா அவனிடம் ,”சரியா போச்சு போங்க… எங்க கங்கா இரத்த தானம் பண்ணப் போறேன்னு சொன்னாப் போதும், எங்க அப்பா பெரியப்பா எல்லாம் இரத்தக் கண்ணீர் விட்ருவாங்க. அவளுக்கு உடம்பு சரியில்லாம ஊசி போட்டாலே நாலு நாளைக்கு எல்லாரும் அழுவாங்க.  இதைக் கேட்டா அவ்வளவுதான்”  என்றான்.

இதைக்கேட்டதும் கங்காவின் முகம் சுருங்கிப் போனது. அவளது வாட்டத்தைக் கண்ட சுபாஷ்,  “ ஹேய்  வாலு… இதுக்கெல்லாம் யாராவது முகத்தைத் தூக்கி வச்சுப்பாங்களா? உனக்கு இன்னும் மூனு வருஷம் டைம் இருக்கு,

இரத்ததானம் பற்றிய விபரங்களையும் , அதன் அவசியத்தையும் அவங்க கிட்ட எடுத்து சொல்லி கன்வின்ஸ் பண்ணு. நீ சொன்னா உங்க வீட்ல கேட்பாங்க. அதுமட்டுமில்ல இரத்தம் குடுக்கனும்னா நீ சத்தானதா சாப்பிட்டு ஆரோக்கியமா இருக்கனும்”  எனறான்.

அதனைக் கேட்டவள் துள்ளலுடன்,”  கண்டிப்பா நான் அப்பா சித்தப்பா எல்லாரையும் கன்வின்ஸ் பண்ணிடுவேன். இனிமே சாப்பிட அம்மாவையும் சித்தியையும் படுத்தவே மாட்டேன்”  என்றவள்,  அதே துள்ளலுடன் பிரபாவை அழைத்துக் கொண்டு அவளது வீட்டுக்கு  ஓடிப்போனாள்.

அவளையே விழியகலாமல் பார்த்திருந்த ஆகாஷ்,  “ நல்ல பொண்ணுடா… இந்த சின்ன வயசிலேயே எவ்வளவு ஹெல்ப்பிங் மைண்ட் பார்த்தியா?  இவ பெரிய ஆளா வருவாடா”  என்றான்.

நிதர்சனத்திற்கு மீண்டு  வந்தவன் ‘  எந்தப் புள்ளியில் என் வார்த்தை மாறிப் போனது?   இவளை இந்நிலையில் சந்திப்பேன் எனக் கனவிலும் நினைக்கவில்லையே’ என்றெண்ணி வருந்தியவன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டான்.

அவளிடம் மெல்லிய அசைவு தென்பட்டது.  விழிகள்  மெல்ல இமைகளுக்குள் உருண்டன. உடனே பரபரப்பானவன் அவள் முகத்தருகே குனிந்து, “ கங்கா…”  என்று மென்மையாக அழைத்தான்.

மெதுவாக இமைகளைத் திறந்தவள் எதிரில் நிற்பவனைக் கண்டு ஒரு நொடி கண்களைச் சுருக்கி,  பின் விழிகளில் சிறு மலர்ச்சி தோன்ற இதழ்களைச் சிரமப்பட்டு மெதுவாகப் பிரித்து,  “  டாக்டர் சார்…”  என்றாள்.

5

நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது.  ‘  மேட்டுப்பாளையம்’  நீலகிரி மலையின் அடிவாரம்.  ஊரை விட்டு சற்று ஒதுங்கி இருந்த ரிசார்ட் அது.   அங்கிருந்த ஆடம்பரமான அறைகளில் ஒன்றில்,   இரவின் ஏகாந்தத்தையும்  பனிக்காற்றின் குளுமையையும் மீறி , மனதில் பொங்கிய எரிச்சலுடனும் ,  எதிரில் இருப்பவர்களை எரித்து சாம்பலாக்கி விடுமளவு  இருக்கும் கோபத்துடனும் ஆங்காரமாக முறைத்தபடி அங்கிருந்த சோபாவில் அமர்ந்திருந்தார் எழுபத்தைந்து வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர்.

அவருக்கு இருபுறமும் ஆஜானுபாகுவாக நினறிருந்தவர்களுக்கு ஐம்பது   வயது  மதிக்கலாம். அவர்களது தோற்றமும் அப்பெரியவரையே  ஒத்து இருந்தது. அப்பெரியவரின் இரு மகன்களே அவர்கள். அவர்களுக்கு எதிரே தம் கரங்களை பின்னே கட்டியபடி ஐந்து பேர் நின்றிருந்தனர்.

அப்பெரியவர் எதிரே நின்றிருந்தவர்களை கடுமையான வார்த்தைகளால் விளாசிக் கொண்டிருந்தார்.

“ இரண்டு வருஷமா கண்டுபிடிக்க முடியாம ஆட்டம் காட்டிட்டு இருந்தவள நேர்ல பார்த்தும் இப்படி தப்பிக்க விட்டுட்டு வந்திருக்கீங்களேடா… அறிவு கெட்ட முட்டாப் பசங்களா…  என்ன செய்வீங்களோ?  ஏது  செய்வீங்களோ?  எனக்குத் தெரியாது,  இன்னைக்கு ஒரு நாள் உங்களுக்கு டைம் தரேன் அவ செத்துட்டான்னு செய்தியும்,  அவ டெட் பாடியும் எங்கிட்ட வந்து சேரனும்.  இல்ல உங்க அம்புட்டு பயலையும் தொலைச்சு புடுவேன்”  மூச்சிரைக்க கத்தியவர் அங்கிருந்த தண்ணீரைப் பருகினார்.

எதிரில் இருந்தவன் பணிவுடன்,  “ ஐயா,  அவள ஊட்டில பார்ப்போமுன்னு நினைக்கவே இல்லீங்கய்யா…  எதிர்பாராம பார்த்ததும் போட்டுத் தள்ளனும்னு துரத்திப் போயும் எப்படித் தப்பிச்சான்னே புரியலைங்க .  சரின்னு உங்களுக்குத் தகவலை சொல்லிட்டுத் திரும்பி வரும் போது ,  வர்ற வழியில மறுபடியும் பார்த்ததும் காரையேத்தி கொன்னுடலாம்ன்னு துரத்திப் போனோமுங்க…

எதிர்ல வந்த கார்ல மோதி விழுந்தவ எழும்பலங்க. அநேகமா செத்து போயிருப்பான்னு தான் நினைக்குறேனுங்க.

ஒருத்தன் ரெண்டு பேர்னா இறங்கி போயி சமாளிச்சிருப்போமுங்க ஆனா நிறைய பேரு விபத்துன்னதும் இறங்கி வரவும் ,உங்களுக்கு பிரச்சனை எதுவும் வரக்கூடாதுன்னு  திரும்பி வந்துட்டோமுங்க.

அப்படியும் கொஞ்ச நேரம் பதுங்கியிருந்துட்டு திரும்பவும் அங்க போயி பார்த்தோமுங்க, அங்கன யாரும் இல்ல அந்த கார்க்காரன்தான் அவள தூக்கிட்டு போயிருக்கனும். நிறைய இரத்தம் கீழ இருந்துச்சிங்க.” என்றான்.

“இப்ப என்ன செய்யனும்ன்னு ஐயா சொன்னீங்கன்னா செய்யறோமுங்க. அவளத் தவற விட்டது தப்புத்தானுங்க.  அவ அடையாளமே தெரியாத அளவு மோசமா இருந்தாங்க. கார்ல மோதினதெல்லாம் தாங்க மாட்டாங்க . எப்படியும் செத்துப் போயிருப்பாங்க”

தொண்டையை கணைத்துக் கொண்ட அந்தப் பெரியவர், “ செத்துப் போயிருந்தா ஏன்டா அந்த கார்க்காரன் தூக்கிட்டு போகனும்? அங்கன போலீசுதான் வந்திருக்கும்.   கண்டிப்பா  அவ செத்துப் போயிருக்க மாட்டா.  இங்க சுத்தியிருக்கற எல்லா ஆசுபத்திரியிலயும் தேடுங்க. அவளப் பார்த்ததும் அவ கதைய முடிச்சிட்டு என்கிட்ட சொல்லுங்க.” என்றார்.

“சரிங்க ஐயா …” என்று கும்பிட்ட அந்த அடியாட்கள் மீண்டும் தாங்கள் வந்த வண்டியில் ஏறி அவளைத் தேடச் சென்றனர்.

அந்தப் பெரியவரின் மகன்களில் ஒருவர், “ அப்பா, இரண்டு வருஷமா  நமக்கு பயந்துகிட்டு ஒளிஞ்சு இருந்தவ ,இனிமேலும் நம்மள என்ன பண்ணிடுவா?  அவ போலீசுல சின்னதா  ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுத்தாக் கூட போதும் நம்ம கதை முடிஞ்சது. ஆனா அவ இப்பவும் நம்ம பார்த்து பயந்து ஓடதான் செய்யறா .  எதுக்கு தேவையில்லாம இப்ப அவளக் கொல்லனும். அதுவும் எலெக்ஷன்ல நிக்கலாம்னு நினைச்சிருக்க நேரத்துல எதுக்கு தேவையில்லாம ஒரு கொலை” என்று சற்றுத் தயக்கத்துடன் கூறினார்.

மற்றொருவரும் அவர் கூற்றை ஆமோதிப்பது போல அமைதியாக இருந்ததால் எரிச்சலின் உச்சத்திற்கு போன அப்பெரியவர், “ எவன்டா அவன்,  கூறுகெட்ட பயலா இருப்பான் போல,  அவ உயிரோட இருக்கறது என்னைக்கு இருந்தாலும் நமக்கு ஆபத்துதான்டா.  அவ மட்டும் நினைச்சா நம்ம எல்லாரையும் கூண்டோட ஜெயில்ல களி திங்க வைக்க முடியும்.  அதனால அவளக் கண்டுபிடிச்சி போட்டுத் தள்ற வேலைய பாருங்க.

பொட்டக்குட்டிய பார்த்ததும் அப்படியே பாசம் பொங்குதோ… டேய் நீங்க எல்லாம் கஷ்டமே படாம வளர்ந்தீங்க …  ஆனா நான் அப்படியில்ல ஊர்ல இருக்கற அத்தனை பயகிட்டயும் பேச்சும் ஏச்சும் வாங்கி, அசிங்கப்பட்டும் அவமானப்பட்டும் வளர்ந்தவன். அதெல்லாம் நான்  சாகுற வரை என் மனசுல இருக்கும்டா.  வார்த்தையாடாம நான்  சொன்னதை முடிக்கற வழியப் பாருங்க” என்றார்.

அவர் கூறியதைக் கேட்ட இருவரும் , கங்காவைத் தேடி மேட்டுப்பாளையத்தில் ஒவ்வொரு மருத்துவமனையாக அலசத் துவங்கினர்.

மருத்துவமனையில்,

அவளது டாக்டர்  சார்  என்ற  அழைப்பைக் கேட்டதும் தன்னைமீறி ஒரு புன்னகை ஆகாஷின் முகத்தில் வந்தமர்ந்தது. கனிவுடன் அவள்  முகத்தைப் பார்த்து,  “  என்னம்மா, என்னைத் தெரிகிறதா ?”  என்றான்.  அவள்  சற்று சோர்வுடன் ஆமாம் என்று தலையை அசைத்தாள். பின்  சற்று பயத்துடன்  சுற்றிப்  பார்த்தவள்,   “நான் எப்படி இங்க வந்தேன்?”  என்றாள்.

“நீ என் கார்ல தான் மா வந்து விழுந்து அடி பட்டு மயங்கிட்ட . இது நான் வொர்க் பண்ற ஹாஸ்பிடல்.

என்ன ஆச்சும்மா உனக்கு?  ஏன் இப்படி மெலிஞ்சு ஆளே அடையாளம் தெரியாத அளவு  மாறிப்போய் இருக்க?”

அவளிடம் பதில் தரவிரும்பா மௌனம்.

“,உன்ன துரத்திகிட்டு வந்தவங்க யாரு?”, மீண்டும் வினவினான்.

எனக்குத் தெரியாது என்பது போல லேசாக உதட்டைப் பிதுக்கி தலையசைத்து விட்டு,  ஆயாசமாக விழிகளை மூடிக்கொண்டாள்.

அவளது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, அவளைத் தொந்தரவு  செய்ய  விரும்பாதவன், அவளிடம், “  ரொம்ப வீக்கா இருக்க… கொஞ்சம் சாப்பிட்டுட்டு  படுத்துக்கோம்மா”  என்றான்.

“அப்பா,  அண்ணன் நம்பர் சொல்லுமா  அவங்களுக்கு தகவல் சொல்றேன்.”

யாரும் இல்லை என்பதுபோல தலையை அசைத்தவளின் மூடிய விழிகளில் இருந்து கண்ணீர் கோடாக வழிந்தது.

அன்றைய நாளின் இரண்டாவது முறையாக அதிர்ந்தவன், பதட்டத்துடன், “ என்னம்மா? … என்ன சொல்ற  நீ??  அவங்களுக்கு என்ன ஆச்சு?” என்றான்.

“ப்ளீஸ் சார்…  இப்ப என்ன எதுவும் கேட்காதீங்க… “  குரல் தழுதழுக்கக் கூறி, அவள் இறைஞ்சவும் அமைதியானவன் , கங்காவுக்கு உணவு தரும் படி திவ்யாவை அழைத்துக் கூறினான்.

ஒரே ஒரு இட்டலியைச் சாப்பிட அவள் படும் சிரமத்தைக் கண்டவன் மனது மிகவும் பாரமாக உணர்ந்தது.  திவ்யாவை அழைத்து இரவில் அவளை கவனித்துக் கொள்ளுமாறு கூறி விட்டு தனது வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றான் .

அவளைத் தனியாக விட்டுவிட்டு அவளது பெற்றோர் எங்கு சென்றனர்??. ஒருவேளை அவர்கள் இந்த உலகத்திலே  இல்லையோ?? என்று எண்ணியவனின் விழிகள் தன்னவளின் துயரத்தை எண்ணிக் கலங்கியது. வரும் வழியெல்லாம் தனது தாயிடம் கங்காவைப்  பற்றிய விபரங்களைக்கூறி அவளைத் தன்னருகிலேயே, கண்ணுக்குள் வைத்து பாதுகாத்துக் கொள்ளத்தான் தோன்றியது.

அவனுக்காக வாசலிலேயே காத்திருந்த மஞ்சுளா சோர்வாக நடந்து வரும் மகனைக் கண்டதும், “என்னாச்சுப்பா? ஏன் இவ்வளவு சோர்வாக இருக்கிறாய்? அடிபட்ட பெண்ணுக்கு இப்ப எப்படி இருக்கிறது, அவள் நன்றாக இருக்கிறாளா?” என்றார்.

தாயின் ஆதரவு கலந்த கனிவான  வார்த்தைகளைக் கேட்டவன், அவரது மடியில் தலைசாய்ந்து படுத்து கங்காவை முதன்முதலில் பார்த்தது, தன் மனதில் முதன்முறை காதல் முகிழ்த்தது, மற்றும் தற்போதைய அவளது நிலை அவ்வளவும் மூச்சுவிடாமல் கூறி முடித்தான்.  அவரின் பதிலை எதிர் பார்த்து அவரது முகத்தைப் பார்த்திருந்தான்.

சற்று அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்துடன் அவனைப் பார்த்தவர்,  “ இவ்வளவு நாள் இதையெல்லாம் நீ சொன்னதே இல்லயேடா?” என்றார்.

“இல்லம்மா… கிட்டத்தட்ட ஒன்றரை வருஷமா அவள தேடிகிட்டுதான் இருக்கேன். ஆனா நேத்துதான் ம்மா அவளை பார்த்தேன். அவளுக்கு வாழ்க்கையில  என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியல ம்மா. ஆனா… பாவம்மா அவ… எனக்கு அவளை ரொம்பப் புடிக்கும்மா.”  என்றான்.

“ஆகாஷ்,  கண்டிப்பா உனக்கு பிடித்த பொண்ணு தான் இந்த வீட்டு மருமகள் .  நாளைக்கு ஹாஸ்பிடல் போகும் போது நானும் உன் கூட வரேன்.  அவளைப் பற்றிய விபரங்களை கேட்டுவிட்டு , அவளை நம்மோடு அழைச்சிட்டு  வந்திடலாம்” என்றவர்,  “ இப்ப போய் கொஞ்ச நேரம் தூங்குப்பா” என்று அனுப்பி வைத்தவர் தானும் உறங்கச் சென்றார்.

இரவு முழுவதும், மேட்டுப்பாளையத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், விபத்தில் காயமுற்ற கங்கா இருக்கிறாளா  எனத் தேடி அலைந்தவர்கள்,  விடியலின் துவக்கத்தில் கோயம்புத்தூரில் உள்ள மருத்துவமனைகளில் தேடத் துவங்கினர்.

6

அதிகாலையிலேயே கண்விழித்து காலைக் கடமைகளையும்  உடற்பயிற்சியையும் முடித்தவன், மருத்துவமனை செல்ல ஆயத்தமாகி வந்தான்.

அவனுக்கு முன் தயாராக இருந்த தாயைப் பார்த்ததும், “ நீங்களும் கிளம்பிட்டீங்களா ம்மா,  நான் போயிட்டு உங்களுக்கு கார் அனுப்பலாம்னு நினைத்தேன்” என்றான்.

“நானும் கிளம்பிட்டேன் தம்பி. மருமகளை பார்க்க போறோம்ன்னதும் நைட் சரியா தூக்கமே  இல்ல. அவளை இங்க வீட்டுக்கு கூட்டிட்டு  வந்தாதான் எனக்கு தூக்கமே வரும்.

அப்போது அங்கு தூங்கி எழுந்து வந்த அபி, “ என்ன மருமக? யாருக்கு மருமக? என்னம்மா உளறிகிட்டு இருக்கீங்க? “

அவளை முறைத்துப் பார்த்தவரைப் பார்த்து, “ அண்ணா, ஒழுங்கா  காலா காலத்துல  கல்யாணம் பண்ணிக்க  இல்லைன்னா  அம்மா புலம்பிப் புலம்பியே ஒரு வழியாகிடுவாங்க, பாரு காலைலயே இல்லாத மருமகள  கூப்பிடப் போறேன்னு கிளம்பி நிக்கறத”

சிரிப்புடன் கூறியவளின்  தலையில் செல்லமாகக் கொட்டியவர், “ அடியே நான் ஒன்னும்  புலம்பல ,  நிஜமாவே நம்ம வீட்டு மருமகள  கூட்டிட்டு  வரத்தான் நானும் உங்க அண்ணனும் போறோம்” என்றார்.

“என்னம்மா சொல்ற ??? பொண்ணு பார்க்க போறோமா? நேத்தே சொல்லியிருந்தா காலேஜுக்கு லீவ் போட்டிருப்பேன்ல . இவ்வளவு காலையிலயே போனா பொண்ண காட்டுவாங்களா?” படபடவென பொறிந்தவளை, அமைதிப்படுத்தியவர். அவளது அண்ணனின் ஆசையைக் கூறினார்.

ஆச்சர்யம் விலகாத முகத்துடன் தன் அண்ணனைக் கண்டவள் துள்ளிக் குதித்தபடி, ” அண்ணா… நீயாடா? ஊமைக்கோட்டான் மாதிரி இருந்துட்டு இத்தனை வருஷமா எங்ககிட்ட சொல்லாம மறைச்சிட்ட இல்ல?  இரு அண்ணி மட்டும் வீட்டுக்கு வரட்டும் , இரண்டு பேரும் சேர்ந்து உன்னை வச்சி செய்யறோம்.

அம்மா,  ம்மா ப்ளீஸ் அண்ணிய பார்க்க நானும் வரேன்மா. ப்ளீஸ்… ப்ளீஸ்”  என்று கெஞ்சியவளை தோளோடு அணைத்தவன்,

“நீ இல்லாமையா? போ சீக்கிரம் கிளம்புடா.  அபி… எனக்கு மட்டும்தான் அவ மேல விருப்பம் இருக்கு , இது எதுவும் அவளுக்குத் தெரியாதுடா.  அவ முதல்ல  நார்மலா ஆகட்டும், அவ மனசுல இருக்கற கஷ்டத்திலிருந்து அவ வெளிய வரனும் அப்புறம்தான் என்னோட அன்பை புரிய வைக்கனும்.  அதுவரைக்கும் எதையும் வெளிக்காட்டிக்க வேணாம்டா.”

“ஆமா அபி, அண்ணன் சொல்றதுதான் சரி, நீ அண்ணின்னு கூப்பிட்டு அவன மாட்டி விட்றாத சரியா?”

“ம்ம்… யோசிக்கறேன்… ஆனா அதுவா ப்ளோல வந்தா என்ன குத்தம் சொல்லக்கூடாது.  அதனால நீ என்ன பண்ற,   எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உன்னோட லவ்வ சொல்லி அவங்கள  கல்யாணம் பண்ற ஓகே”.

“நான்  சீக்கிரம் குளிச்சு கிளம்பி வர்ரேன்.  அம்மா  நீங்க டிபன் எடுத்து வைங்க”.

அவள் செல்வதை சிரிப்புடன் பார்த்திருந்தவர், “எல்லாம் நல்லபடியா நடக்கும் பா கவலைப் படாத”.என்றார்.

மௌனமாக கேட்டுக் கொண்டான்.

அபி கிளம்பி வந்ததும் , காலை உணவை முடித்துக் கொண்டு  கங்காவைப் பார்க்க மருத்துவமனைக்கு சென்றனர்.

இவர்கள், கங்கா தங்கியுள்ள அறையினுள் நுழைந்த போது,  சோக சித்திரமாக அமர்ந்து ஜன்னல் வழியே வெளியே வெறித்துக் கொண்டிருந்த கங்காவைக் கண்டு ஆகாஷ்,

“கங்கா…”

தலையைத் திருப்பியவள்,  அவனருகே நிற்பவர்களைப்  பார்த்து கேள்வியாக அவனை ஏறிட்டாள்.

“இவங்க என் அம்மா மஞ்சுளா, இது என் தங்கை அபி.” எனறான். அவள் முகத்தில் சற்று மலர்ச்சியோடு கூடிய புன்னகை வந்தமர்ந்தது.

“எப்படிம்மா இருக்கு உடம்பு , நைட் நல்லா தூங்குனியா?” என்றவன்,  அவளது உடலைப் பரிசோதித்து பின் ,”இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க “ என்று அருகில் நின்ற டாக்டர் திவ்யாவிடம் கூறினான்.

அதுவரை அமைதியாக நின்றிருந்த அவனது தாய்,  கங்காவின் அருகே வந்து தலைக் கோத, அபி அவளது கரங்களைப் பற்றிக் கொண்டாள்.  இருவருக்குமே கங்காவின் தோற்றத்தைப் பார்த்து சற்று அதிர்ச்சிதான். அவளது இயல்பான பழைய அழகு அவர்களுக்குத் தெரியாதல்லவா?

என்ன இந்த பெண் இப்படி இருக்கிறாள் என்றே எண்ணினர் . ஆனால் அவள் முகத்திலிருந்த அளவுகடந்த சோகம், அவர்களின் மனதை வாட்டியது.

டிஸ்சார்ஜ் செய்தவுடன் எங்கே போவது ஊட்டியில் முன்பு இருந்த ஹோம்க்கு இனி போக முடியாது. ஸிஸ்டர் சாண்ட்ரா  இருந்த வரைத் தன்னைக் குழந்தை போல பாவித்து கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டார்.  அவர் இறந்த பின் அங்கே இருக்க முடியாமல் வெளியே வந்துதான் , தன்னை அவர்கள் துரத்தியதும், தான் இங்கு வந்த நிகழ்வும் நடந்தது.

அடுத்து எங்கு செல்வது என்று புரியாமல் குழப்பத்துடன் இருந்தவள், ஆகாஷின் தாயைக் கண்டதும்  மெதுவாக, “மேடம்… சார என்னை ஏதாவது நல்ல ஹோம் ல சேர்த்துவிட சொல்றீங்களா?” என்றாள்.

வாஞ்சையாக அவளது தலையைத் தடவியவர், “ ஹோம் எதுக்குமா? நீ நம்ம வீட்டுக்கு வந்திடேன். நான் உன்னை நல்லா பார்த்துக்கறேன். உனக்கு பழகறதுக்கு அபியும் இருக்கா, என்னம்மா சொல்ற?”

பதட்டமாக தலையை அசைத்து மறுத்தவள், “ வீட்டுக்கெல்லாம் வேண்டாம் மேடம்,  ஏதாவது ஹோம் இருந்தால் சேர்ந்துக்கிறேன். அங்க இருக்கறவங்களுக்கு தேவையான உதவிய செஞ்சிட்டு அங்கேயே இருந்துப்பேன்.”

அவளது பதட்டத்தையும் பயத்தையும் கண்டவன், “ ஓகே ஓகே… ரிலாக்ஸ் கங்கா… எங்க அப்பா பேர்ல ஆரம்பிச்ச ட்ரஸட் இருக்கு நீ அங்க வந்து இரும்மா. அங்க நாற்பது பேர் இருக்காங்க,  அவங்களோட நீயும் தங்கிக்கலாம் சரியா?”என்றான்.

“ஊட்டில எங்க தங்கியிருந்த? உன்னோட பேரண்ட்ஸ் க்கு என்ன ஆச்சு கங்கா?” மஞ்சுளா கேட்டதும்,

சற்று நேர அமைதி அந்த அறையை நிறைத்தது . தன் கைவிரல் நகங்களையே பார்த்திருந்த கங்கா மெதுவாக, “நாங்க எல்லாரும் குடும்பத்தோட வேன்ல போகும் போது ஆக்ஸிடன்ட் ஆகி எல்லாரும் இறந்துட்டாங்க. நான் பின் சீட்ல  படுத்திருந்ததால தலையில கொஞ்சம் அடிபட்டதோட தப்பிச்சிட்டேன்.

இந்த மோசமான உலகத்துல என்னை மட்டும் தனியா விட்டுட்டு எல்லோரும் போயிட்டாங்க” என்று கூறியவள் முகத்தை மூடிக் கதறி அழுதாள்.

கண்களில் நீர் கோர்க்க அவளைத் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள் அபி. சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்ட கங்கா,

“அங்க பக்கத்துல இருந்த ஹாஸ்பிடல்ல தான் அடிபட்டிருந்த எனக்கு ட்ரீட்மண்ட் நடந்துச்சி. அங்க இருந்த ரோசிங்கற நர்ஸ்தான்  ஊட்டில இருந்த ஸாண்ட்ரா  சிஸ்டர் ஹோம்க்கு என்னை அனுப்பி வச்சாங்க. இரண்டு வருஷம் அங்க தான் இருந்தேன். போன வாரம் ஸாண்ட்ரா சிஸ்டர் இறந்துட்டாங்க. அதுக்கப்புறம் அங்க இருக்கப் பிடிக்காம வெளிய வந்தேன்.” என்று கூறி முடித்தாள்.

அவளது குடும்பத்தினர் இறந்துவிட்டனர்  என்று அவள் கூறக்கேட்டதும், அவளின் துயரத்தைப் போக்கி தன் கண்ணில் வைத்து பார்த்துக்கொள்ளத் தோன்றியது.

இருப்பினும்  அவள் கூறியதைக் கேட்ட ஆகாஷின் உள்ளத்தில் ஏகப்பட்ட குழப்ப முடிச்சுகள். ‘இரண்டு வருஷத்துக்கு முன்னாடி  திடீர்னு ஊரை காலி பண்ணிட்டு படிப்பைக் கூட டிஸ்கண்டினியு பண்ணிட்டு எதுக்காக இவங்க போனாங்க?  இத எப்படி இவகிட்ட கேட்கறது.

இந்த விஷயம் உங்களுக்கு எப்படித் தெரியும்னு கேட்டா,  என்ன பதில் சொல்றது?’  என்று மனதினுள் எண்ணியவன், சரி இதையெல்லாம் பிறகு விசாரித்துக் கொள்ளலாம் முதலில் இவளை நம் வீட்டிற்கு கூட்டிச் செல்ல வேண்டும் என முடிவெடுத்தான்.

ஆறுதலாக அவளை அணைத்திருந்த அபியும், “அழாதிங்க… உங்களுக்கு யாரும் இல்லைன்னு நினைக்காதீங்க நாங்க இருக்கோம்.” என்றாள்.

ஒரு வழியாக அவளைச் சமாதானப்படுத்தி , உணவு உண்ண வைத்து, அவளை மருத்துவமனையில் இருந்து டிஸசார்ஜ் செய்து அழைத்துக் கொண்டு வந்தனர்.

வரும்வழியில் அவளுக்குத் தேவையான உடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றை வாங்கிக் கொண்டவர்கள் அவர்களது வீட்டை அடைந்தனர்.

அவள்தான் வீட்டு மருமகள் என்று முடிவான பின்பு அவளை ஹோமில் விட யாருக்கும் மனதில்லாத போதும், அவளது மனநிலையைக் கருத்தில் கொண்டு அவளை ஹோமிற்கு அழைத்துச் சென்று அங்கிருந்தவர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தனர்.

வீடும் ஹோமும் அருகருகே இருந்ததால் அவள் உறங்கும் நேரம் தவிர யாரேனும் ஒருவர் அவளருகே இருக்கும்படி பார்த்துக் கொண்டனர். ஆனால் என்ன முயன்றும் அவளது கூட்டிலிருந்து அவளை வெளிக்கொணர்வது சற்று சிரமமாகத்தான் இருந்தது அவர்களுக்கு.

அபி மட்டும் அவளை ‘மச்சி’  என்றழைத்துக் கொண்டும், அவளைச் சீண்டிச் சிரிக்க வைத்துக் கொண்டும் சற்று நெருங்கியிருந்தாள்.

ஆகாஷ் அபியிடம், “ ரொம்ப பிரண்ட்ஸ் ஆகிட்டீங்க போல அவள மச்சின்னு கூப்பிடுற?”

“பொறாமைப்படாத ண்ணா… அவங்க இப்போதைக்கு என்கிட்டதான் கொஞ்சம் பேசறாங்க. என்னை விட பெரியவங்க பேர் சொல்லி எப்படி கூப்பிடறது? அண்ணின்னும் கூப்பிட முடியாது. அக்கான்னு கூப்பிட்டா நீ அடிப்ப…  அதான் மச்சின்னு கூப்பிடறேன்” என்றாள்.

உண்மையில் கங்காவும், மஞ்சுளா மற்றும் ஆகாஷிடம் வெறும் புன்னகை மட்டுமே , அவளிடம் ஏதேனும் கேட்டாலும் ஒரு சிறு தலையசைப்பு அல்லது அமாம், இல்லை என்ற ஒற்றை பதில் மட்டுமே… அபியிடம் மட்டும்  சற்று தயக்கமின்றி பழகினாள்.

ஆகாஷும் அவளிடம் தன் நேசத்தை சொல்ல தருணத்தை  எதிர்பார்த்திருந்தான்.  அவளின் மனக்காயம் சற்றே ஆறட்டும் என்று காத்திருந்தான்.

மஞ்சுளாவின் முழுநேர வேலையே கங்காவை வேளாவேளைக்கு சத்தான உணவுகளைச் சாப்பிட வைப்பதே. ஹோமில் இருப்பவர்கள் அனைவரிடமும் உறவினர்கள் போலவே அவர் பழகுவதால் அவளுக்கு அவர் மீது அளவுகடந்த மரியாதையும்  பாசமும் இருந்தது.

அவளும் தன்னால் முடிந்த உதவிகளை  ஹோமில் இருப்பவர்களுக்குச் செய்து , தன் சோகத்திலிருந்தும் தனிமைப்படுத்திக் கொள்வதிலிருந்தும் மெல்ல வெளிவரத் துவங்கினாள்.

மேட்டுப்பாளையம்…

அந்த ஊருக்கு ஒதுக்குப் புறமான ரிசார்ட்டில்,  அப்பெரியவரின் வார்த்தைக்காக  அமைதியாக அவர் முகத்தைப் பார்த்தவாறு  நின்றிருந்தனர் அவரது மகன்கள். நெற்றியில் சுருக்கம் விழுமாறு சிந்தித்துக் கொண்டிருந்தவர்  அவர்களை ஏறிட்டுப் பார்த்து , “ அந்த டாக்டருக்கும் அவளுக்கும் ஏதாச்சும் சம்பந்தமிருக்கா? இல்ல… வெறும் பரிதாபத்துல கூட்டிட்டு போய் அவன் வீட்ல வச்சிருக்கானா?

“இல்லீங்க ஐயா , அவன் ஏதோ அனாதை இல்லம் மாதிரி வச்சி நடத்துறான், அங்கதான் கூட்டிட்டு போய் வுட்ருக்கான்.  நம்ம பயலுக கோயமுத்தூர் பூராவும் அவளத் தேடி அங்க போறதுக்குள்ள அவ அங்க போயி அடைக்கலமாயிட்டா.

இப்ப என்ன பண்ணலாம்னு சொல்லுங்க?  அவள அங்க உள்ள புகுந்து தூக்கறதா? இல்ல அவ வெளிய  வர்றப்ப பார்த்துக்கலாமா?”

சற்று நேரம் சிந்தித்தவர், “ நீ என்ன பண்ற நம்ம ஆளுங்க அஞ்சாறு பேர ரெடி பண்ணி நைட் அங்க திருடப் போற மாதிரி போய் அவள் போட்டுத் தள்ளச் சொல்லு. அங்க இருக்கறவங்க பூரா பொம்பளைங்களும் கிழவனுங்களுந்தான எதிர்த்து யாரு வந்தாலும் வெட்ட சொல்லு. சத்தம் கேட்டு அவனுங்க வர்றதுக்குள்ள போன வேலையை முடிச்சிட்டு தப்பி வரச் சொல்லு. ஜாக்கிரதை எவனும் மாட்டிக்கிடக் கூடாது. அப்படியே மாட்டிக்கிட்டாலும் நம்ம பேரு வெளியே வரக்கூடாது” என்றவர் ‘போ’ என்பது போலத் தலையசைத்தார்.

7

ஒரு வாரம் கடந்து விட்டது, கங்கா அங்கு வந்து சேர்ந்து.  இந்த ஒரு வாரத்தில் இந்த சூழலுக்கு சற்று பழகியிருந்தாள் கங்கா. பெரும்பாலான பொழுதுகள் மஞ்சுளாவுடனும், ஹோமில் உள்ளவர்களுடனும் கழிந்தாலும். அபியுடன் பேசிக் கொண்டிருக்கும் மாலை வேளையையும், அபியுடன் ஆகாஷும் இணைந்து அவளை கலகலப்பாக வைத்திருக்க முயற்சி செய்யும் காலை வேளையையும் அவள் மனம் இயல்பாக எதிர்பார்க்கத் தொடங்கியிருந்தது.

நெற்றியில் இருந்த காயம் வெகுவாக ஆறிவிட்டிருந்தது.  இந்த ஒரு வாரமாக தினமும் மருத்துவமனைக்கு செல்லும் முன் , அவளது காயத்திற்கு மருந்திட்டு செல்பவன் அவளுடன் கலகலப்பாக பேசிச் சிரிக்க வைத்துவிட்டுதான் செல்வான். உடன் அபியும் சேர்ந்து விட்டால் அவள் அண்ணனுடன் அடிக்கும் கொட்டத்தில் கங்காவின் அகமும் புறமும் புன்னகையில் நிறைந்திருக்கும்.

உடல்நிலையில் பெரிதாக மாற்றமில்லாமல் இருந்தாலும் , அவளிருக்கும் பாதுகாப்பான இந்தச் சூழல் முகத்தில் தெளிவையும், சற்று மலர்ச்சியையும் கொண்டுவந்திருந்தது.   மாலையாகும் போது அபியின் வரவுக்காய் காத்திருப்பாள்.  அபி வந்ததும் அவள் கல்லூரியில் நடந்த கலாட்டாக்களைச் சுவைபடக்  கூறுவதைக் கேட்டிருக்கும் போது, மனம் பழைய நினைவுகளைத் தேடி ஓடினாலும், அபியுடன் கழியும் கணங்களை அவள் மனது பெரிதும் விரும்பும்.

இந்த ஒரு வாரத்தில் ஹோமில் இருந்த அனைவரின் நன்மதிப்பையும் பெற்றிருந்தாள் கங்கா.

ஹோமில் உள்ள வயதானவர்களுக்கு  அன்றைய நாளிதழ் செய்திகளை வாசித்துக் காட்டுவதில் தான் துவங்கும் கங்காவின் காலைப் பொழுது. அன்று ஞாயிறு விடுமுறை தினமும் கூட. அபியும் கங்காவும் காலையிலேயே ஹோமில் உள்ள  வயதானவர்களுக்குத் தேவையான அனைத்துப் பணிவிடைகளையும் செய்துவிட்டு சற்று ஓய்வாக  அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்..

அபி அவளின் கல்லூரி கலாட்டாக்களைக் கூறிக் கொண்டிருந்தாள்.  கங்கா அதனை ரசனையுடன் கேட்டுக் கொண்டிருந்தாள். வீட்டின் முன்புறம் இருந்த தோட்டத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர் இருவரும்.  அப்போது அங்கு வந்த ஆகாஷ் இருவரும் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் அமர்ந்திருந்த சிமெண்ட் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

தலைக்குக் குளித்து, காயாத முடியை விரித்து விட்டிருந்தாள் . காதோரத்தில்  இரு கற்றைக்  குழல்களை எடுத்து பின்புறம் சிறு கிளிப்பில் அடக்கியிருந்தாள்.  முன்பிருந்தது போல இடை தாண்டிய  கூந்தல் இல்லாவிட்டாலும், தோளைத் தாண்டிப்  படர்ந்திருந்தது. இதழ்கள் சிறு புன்னகையில் விரிந்திருக்க, அவனைக் கண்டதும் இதழ்களின் புன்னகை கண்களை எட்டச் சிரித்தவளை ரசனையுடன் தழுவிக் கொண்டன அவனது விழிகள்.

“கங்கா, நீ தமிழ் இளங்கலை தானே எடுத்த? முதுகலை முடிச்சிட்டியா?” அவள் தனது படிப்பைத் தொடரவில்லை என்று தெரிந்திருந்தாலும், ஒருவேளை ஊட்டியில் தொடர்ந்திருப்பாளோ என்ற எண்ணத்துடன் வினவினான்.

“இல்லை… முதுகலை முதல் வருடம் மட்டுமே படித்தேன் பிறகு தொடரவில்லை. தொடரும் மனநிலையிலும் அப்போது நான் இல்லை.”

“ அதனால் என்ன கங்கா? நீ விருப்பப் பட்டா  இப்பக்கூட தொடரலாம். அபி படிக்கிற கல்லூரில சேர்த்து விடட்டுமா?”

“ எனக்கு விருப்பம் இல்ல டாக்டர் சார்”

“ இல்லம்மா நீ இப்படியே வீட்ல அடைஞ்சு கிடக்கக் கூடாது. படிக்கறது உனக்கு வெளி உலக அனுபவத்தை தரும்” என்றான்.

பதில் கூறாமல் சங்கடமாக அமைதியாக அமர்ந்திருந்தாள்.  அவன் மீண்டும், “ இல்ல கங்கா , நான் என்ன சொல்றேன்னா..” என்று ஆரம்பிக்கவும் இடைமறித்த அபி,

“ அட ட டா…! உன் தொல்லை தாங்க முடியலயே!  என்னைதான்  வம்படியா படிச்சே ஆகனும்னு தொல்லை பண்றன்னு பார்த்தா, இவங்களையுமா…?”

“ மச்சி,  இவன் நல்லா படிச்சதால வாழ்க்கையில நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?  எங்க ஸ்கூல் டீச்சர்ல ஆரம்பிச்சு டியூஷன்ல, அக்கம் பக்கத்து வீட்ல இருக்கறவங்க, சொந்தகாரங்க எல்லாரும் அண்ணன மாதிரி படி ,அண்ணன மாதிரி படி ன்னு  ஒரே டார்ச்சர்.

வராத படிப்ப வா வான்னு சொன்னா எப்படி வரும்? அதில இவன் தொல்லை பெரிய தொல்லை. அந்த மேஜர் எடு இந்த மேஜர் எடுன்னு.  நான் ஈசியா கஷ்ட படாம ரசித்து படிப்பேன்னு தமிழ் இலக்கியம் எடுத்து படிக்கிறேன். இப்ப உங்ககிட்ட ஆரம்பிச்சிட்டான்.”

“ நானும் உன்ன மாதிரிதான் அபி.” என்று கங்கா சிரிக்கவும் , இருவரும் ஹைஃபை கொடுத்துக் கொண்டனர்.

“ ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்துட்டீங்களா?  சுத்தம்…  இவ வெளிய  போய் தைரியமா எல்லாம் ஃபேஸ் பண்ணனும்னு தான் சொன்னேன்.”

“ அதுக்கு  படிக்கதான் போகனும்னு அவசியம் இல்ல… நாங்க எம்ப்ராய்டிங் , யோகா , இல்லைன்னா குக்கரி கிளாஸ் போறோம் . ஓகே வா மச்சி!”  என்றாள்.

“ இல்ல அபி… நான் எங்கயும் வரல… எனக்கு அதிலெல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல… எனக்கு வெளில போகவே பிடிக்கல. நான் இங்க ஹோம்ல இருக்கறவங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இப்படியே இருக்கிறேன். நீ வேணும்னா போய்ட்டு வா.” அமைதியாகச் சொன்னவளை கூர்ந்து கவனித்த ஆகாஷ் , “ உன் பரதத்தையாவது நீ தொடரலாம் இல்ல? அது உனக்கு பிடித்தது தானே?” என்றான்.

“ மச்சி சொல்லவேயில்ல உனக்கு பரதம் ஆடத் தெரியுமா?”

“ அவ  பத்தாவதிலேயே  அரங்கேற்றம் பண்ணிட்டா. அவளுடைய டான்ஸ் பர்பார்மென்ஸ் நான் பார்த்திருக்கிறேன். நல்லா ஆடுவா.” என்றான்.

“அப்புறம் என்ன மச்சி , நீங்க பரதத்தில் மாஸ்டர்ஸ் பண்ணலாமே?  ப்ளீஸ் மச்சி  எனக்காக ஏதாவது ஒரு பாட்டுக்கு ஆடிக் காட்டுங்க மச்சி”

“ஹையோ வேணாம் அபி … எனக்கு எல்லாம் மறந்து போச்சு.”

“ கத்துகிட்ட கலை எப்படி  மறந்து போகும்?  அடுத்த மாதம் ஆரம்பத்தில் இருந்து , மருத்துவமனைக்கு பக்கத்தில் இருக்கும் ஸ்கூல்ல டான்ஸ் டீச்சரா  வருவன்னு சொல்லியிருக்கேன். ஸ்கூல் நிர்வாகி அம்மாவுக்கு பழக்கம்தான், ரொம்ப நல்லவங்க. யாராவது டான்ஸ் டீச்சர் வேணும்னு அவங்க  கேட்டப்ப உன் நியாபகம்தான் வந்தது.  நீ கண்டிப்பா வருவன்னு சொல்லிட்டேன்.”

அவள் மறுக்க முடியாதவாறு அழுத்திக் கூறியவனை இயலாமையாகப் பார்த்தவள்,  சரி என்பது போல தலையை அசைத்தாள். அப்போது மஞ்சுளாவின் அழைப்பைக்  கேட்ட கங்கா எழுந்து செல்லவும், அபி ஆகாஷிடம்,

“ஏன் ண்ணா இவ்வளவு கட்டாயமா சொன்ன? அவங்க முகமே மாறிடுச்சி . நீ சொல்றியேன்னுதான் அவங்க சரின்னு சொல்லிட்டு போறாங்க. அவங்களுக்கு விருப்பமே இல்ல.”

“இங்க வந்தப்ப இருந்த கங்காவுக்கும் இப்ப இருக்கற கங்காவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கில்லயா?  அவ சின்ன குழந்தைகளோடு பழகும் போது  இன்னும் நார்மலா மாறிடுவா.  அவ எவ்வளவு கலகலப்பா இருந்தவ தெரியுமா? அந்த வீட்ல அவளுடைய சிரிப்பு சத்தமும் பேச்சு சத்தமும் கேட்டுகிட்டேதான் இருக்கும்.

அந்த அளவு இல்லாட்டியும் அவள கொஞ்சமாவது பழையபடி மாத்தனும் அபி. அவளுடைய இழப்பு பெரியதுதான் ஆனா அவ அதிலிருந்து மீண்டு வரனும்னு தான் இந்த ஏற்பாடு.”

“அதுமட்டுமில்லாம ஸ்கூல்க்கு என்கூட தானே  வந்தாகனும். அப்போ  அவகூட கொஞ்சம் பேசிப் பழகலாம்ல அதான்”  என்று கண்களைச் சுருக்கிச் சிரித்தான்.

“ டேய்…  அதானே பார்த்தேன், சோழியன் குடுமி சும்மா ஆடுமா?  நீ நடத்து மகனே… எப்படியோ சீக்கிரம் அண்ணி மனசுல இடம் பிடிச்சிட்டு எனக்கு பெரிய ட்ரீட் குடு.” என்று கலகலத்தவளைப் பார்த்து சிரித்தவனின் முகத்தில் அழகான வெட்கம்.

அப்போது தேநீர் கோப்பைகளை ஏந்தியவாறு அங்கே வந்தனர் மஞ்சுளாவும் கங்காவும்.  அனைவரும் தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போது நினைவு வந்தவனாக,

“ அம்மா, சொல்ல மறந்துட்டேன். சுபாஷ் அவன் குடும்பத்தோட  இன்னும் இரண்டு நாள் கழிச்சு வரானாம். இன்னைக்கு காலையில் போன் பண்ணும் போது சொன்னான்.”

“ அப்படியா? ரொம்ப சந்தோஷம் பா.  ஜோஷி பிறந்தப்ப பார்த்தது. ஒரு வருஷம் இருக்குமில்ல?”

“ ஆமாம் ம்மா, இங்க அவங்க அம்மா வீட்ல ஜோஷி முதல் பிறந்த நாள் கொண்டாடதான் வராங்க.”

“ ஹையோ! சுபா ண்ணா வராங்களா ஜாலி.  அப்ப உன் பிரண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிட்டு கெட்டுகெதர் வைப்ப. இந்த வாரம் முழுக்க வீடே களைகட்டும். எனக்கு ஜாலிதான்.”

“கங்கா, உன்னையும் சுபாஷ் விசாரிச்சதா சொல்ல சொன்னான்.”

“சுபாஷ் அண்ணா நல்லா இருக்காங்களா?”

“ம்ம்ம்… நல்லா இருக்கான். சென்னையில் எம்எம்எம் ஹாஸ்பிடல்ல வேலை பார்க்குறான்.”

“ மச்சி,  மத்த நாள்ல தான் இவங்க டாக்டர் பந்தா எல்லாம் , இவங்க பிரண்ட்ஸ் க்ரூப் ஐந்து பேர் இருக்காங்க எல்லாரும் ஒன்னா கூடினா விடிய விடிய ஒரே ஆட்டம் பாட்டம் தான்.

இவங்க ரெண்டு பேரும் டாக்டர், ஒரு அண்ணா இங்க கோயம்புத்தூர்ல டி.எஸ்.பி யா இருக்காங்க, ஒரு அண்ணா  சேலத்துல பிஸ்னஸ் பண்றாங்க,  இன்னோருத்தர் ஊட்டில எஸ்டேட் வச்சிருக்காங்க,

கடைசியாகப் பேசும் போது அபியின் கன்னங்கள் சிவப்பதை ஆச்சர்யத்துடன் கவனித்த கங்கா அவளைக் கேள்வியாக நோக்கினாள்.

“அந்தப் பையனத்தான்மா  அபிக்கு பேசி முடிச்சிருக்கு. இவ படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் வைக்கறதா இருக்கோம்.”

 

கண்கள் சந்தோஷத்தில் மலர, வாய் கொள்ளா சிரிப்புடன் “ ஹேய்!  வாழ்த்துகள் அபி… எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அந்த அண்ணா பேர் என்ன? அவங்களையெல்லாம் பார்க்க எனக்கும் ஆசையா இருக்கு. அதானா அவங்களை பத்தி பேசும் போது உன் கன்னம் அப்படி சிவந்துச்சி ? ரொம்ப அழகா இருக்க அபி நீ.”  என்று கூறவும்.

“ சும்மா இருங்க மச்சி…” என்று வெட்கி சிரித்தவள் உள்ளே ஓடிப்போனாள்.

“ அவன் பேரு நந்த குமார். நாங்க ஐந்து பேரும் ஸ்கூல்  பிரண்ட்ஸ். “

சந்தோஷமாக அபியைப் பார்த்திருந்த மஞ்சுளா ஆகாஷிடம், “அப்படியே உனக்கும் ஒரு கல்யாணத்தை முடிச்சிட்டா நான் நிம்மதியா இருப்பேன்”என்றார்.

“ என் மனசுக்கு பிடிச்ச பொண்ணத்தான் நான் கல்யாணம் பண்ணுவேன். அவசரப்படாம  இருங்கம்மா. அபி கல்யாணத்தை முதல்ல முடிக்கலாம்”

“ உங்க மனசுக்கு பிடித்த பொண்ணு யாரு டாக்டர் சார்? பார்த்துட்டீங்களா அவங்களை?” என்று சிரிப்புடன் வினவினாள் கங்கா.

அவளை ஆழ்ந்து பார்த்தவன்,” பார்த்துகிட்டே இருக்கேன். கூடிய சீக்கிரம் சொல்றேன்” என்று கூறிவிட்டு எழுந்து சென்றான்.

அவன் கூறிச் சென்ற வார்த்தைகளின் அர்த்தமும், அவன் பார்த்த பார்வையின் பொருளும் புரியாமல் அவன் போன திசையைப் பார்த்தவாறு உறைந்து போய் அமர்ந்திருந்தாள் கங்கா.

இரண்டு நாட்களுக்குப் பிறகு ,  ஆகாஷின் வீட்டிற்கு  குடும்பத்துடன் வந்தான் சுபாஷ்.  அவன் மனைவி ஆர்த்தியும் நன்கு பழகும் இயல்பு உடையவளாக இருந்ததால் இளையவர்களின் கொண்டாட்டத்திற்கு குறையில்லாமல் போனது.

நலம் விசாரிக்கும் படலம் முடிந்ததும், கங்காவைக் கண்ட சுபாஷ், “ பழையதை எல்லாம் மறக்க முயற்சி பண்ணு கங்கா. உன் சோகத்தில் இருந்து நீ மீண்டு வந்து ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சிக்கனும். அதுதான் இந்த அண்ணனோட ஆசை சரியா” என்றான்.

சுபாஷின் குழந்தையைப் பார்த்த அபி ஆசையுடன் அள்ளிக் கொண்டாள். அருகில் முகம் மலர சிரித்தபடி,  கொள்ளை அழகுடன் மனதை மயக்கிய  குழந்தையை ஆசையாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் கங்கா.

“ நீங்களும் தூக்குங்க மச்சி” என்றவள் கங்காவிடம் குழந்தையை தர முயற்சித்தாள். பதறி விலகிய கங்கா “ வேணாம் அபி நீயே வச்சிக்க “ என்றாள்.

வித்தியாசமாகப்  பார்த்த அபியிடம், “ இல்ல எனக்கு குழந்தையை தூக்க தெரியாது” என்றாள்.

ஆர்த்தி,” ஒரு வயசு ஆகிடுச்சி  பயப்படாம தூக்கு கங்கா” என்றாள்.

“இல்லக்கா, வேணாம் … நான் போய் எல்லாருக்கும் ஜூஸ் எடுத்துட்டு வரேன்” என்று விலகிப் போனவளையே பார்த்திருந்த ஆர்த்தியிடம், “என்னன்னு தெரியல குழந்தைய தூக்க ரொம்ப பயப்படறாங்க. ஆனா ரொம்ப நல்லவங்க ஆர்த்தி க்கா” என்றாள்.

தான் கங்காவைத் தவறாக எண்ணி விடக் கூடாது என்று அபி எண்ணுவதைப் புரிந்து கொண்ட ஆர்த்தி, “உங்க சுபா ண்ணா  கங்காவ பத்தி எல்லா விஷயமும் என் கிட்ட சொல்லி இருக்காங்க. அவங்களைப் பார்க்கனும்  ஆறுதல் சொல்லனும்னு தான் நாங்க இங்க வந்ததே.” என்றாள்.

அப்போது அங்கு வந்த நண்பர்கள் இருவரும், “ எல்லாரையும் இன்வைட் பண்ணியாச்சு, இன்னைக்கு நைட் இங்க நம்ம வீட்ல பிரண்ட்ஸ் பார்ட்டிக்கு.  நாளைக்கு ஜோஷி பர்த் டே  அவங்க வீட்ல செலிபரேஷன்.”

“ஆக மொத்தம் ரெண்டு நாள் ஜாலிதான்”

அன்றிரவு நண்பர்கள் ஐவரும் மொட்டை மாடியில் அமர்ந்து பழைய பள்ளிப் பருவ கதைகளைப் பேசி ஒருவரை ஒருவர் கிண்டலடித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது.

மாலையில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டவர்கள் சென்ற பின் அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு பெண்களும் வீட்டினுள் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். ஹோமில் உள்ள அனைவரும் உறங்கச் சென்று விட்டதால் அப்பகுதி அமைதியாக இருந்தது.

மாடியில் கைப்பிடிச் சுவரில் சாய்ந்து நின்று நண்பர்களை கலாய்த்துக் கொண்டிருந்த ஆகாஷ் ‘தொம்’ என்ற சத்தம் கேட்டு , சத்தம் வந்த திசையில் கீழே கூர்ந்து பார்த்தவன் விழிகளில் அதிர்ச்சி பரவியது.

8

  நள்ளிரவு நெருங்கும் நேரம்.  மூன்றாம் பிறை நிலவு மெலிந்து சோகையாய் ஒளி வீசிக் கொண்டிருந்தது. ஏகாந்தமான அந்தப் பொழுதில் நண்பர்களுடன் மொட்டை மாடியில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தவனின் காதுகளை எட்டியது யாரோ குதித்தது போன்ற சப்தம். சப்தம் வந்த திசையில் பார்வையைக் கூர்மை ஆக்கியவனின் விழிகளில்,  காம்பௌண்டு சுவர் ஓரத்தில் இருந்த குற்றுச் செடிகளின் அருகே நின்றிருந்த இருவர் புலப்பட்டனர்.

வாயைக் குவித்து ஷ்ஷ்… என்று மெல்லிய சப்தம் எழுப்பியவாறு நண்பர்களை சைகையில் அருகே அழைத்தவன் பார்வையை மீண்டும் அந்த அந்நிய ஆடவர்கள் மீது பதித்தான்.  அப்போது மேலும் இருவர் அந்த சுற்றுச் சுவரைத் தாண்டிக் குதித்து பின் பதுங்கி நின்று அப்பகுதி முழுவதும் பார்வையை ஓட்டி நோட்டம் விட்டனர்.

சற்று மங்கலாக எரிந்து கொண்டிருந்த விடி விளக்கு வெளிச்சத்தைத் தவிர வேறு வெளிச்சமில்லை. அது கழிவு நீர் தொட்டி இருந்த பகுதி. சற்று மேடான பகுதி.  ஆகவே மாடியில் இருந்து பார்த்தவனுக்குத் தெளிவாக தெரிந்தனர் பதுங்கி இருந்தவர்கள்.

அதற்குள் ஆகாஷின் அருகே வந்திருந்த அவனது நண்பர்கள், அவன்  பார்வை ஓடிய திசையில் பார்த்து அதிர்ந்தனர்.

“ யார் டா  இவனுங்க?  திருட்டுப் பசங்களா?…” என்று  மெல்லிய குரலில் கேட்டான் சுபாஷ்.

“அப்படித்தான் நினைக்கிறேன்.     டேய் அவனுங்க ஹோம் பக்கம் போறானுங்க. ரஞ்சன் நீ போலீஸ்க்கு ஃபோன் போடு.”  என்று கூறியபடி விடுவிடு வென்று மாடியில் இருந்து வீட்டினுள் செல்லும் படிக்கட்டு வழியாக இறங்கினான்.

அவனைப் பின் தொடர்ந்து இறங்கிய  சுபாஷும் நந்த குமாரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பெண்களிடம், “ அபி யாருன்னு  தெரியல , நாலு பேரு இங்க வீட்டு காம்பௌண்டுக்குள்ள திருட்டுத் தனமா நுழைஞ்சிருக்காங்க. நீ வாசல்ல செக்யூரிட்டிக்கு போன் போட்டு அலர்ட் பண்ணு.”

“ஆர்த்தி, கங்கா ரெண்டு பேரும் வீட்ல கதவையெல்லாம் நல்லா மூடியிருக்கீங்களா செக் பண்ணுங்க. அம்மா நீங்க ஹோம்க்கு போன் பண்ணி ப்ரண்ட் டோர் குளோஸ்  பண்ண சொல்லுங்க.”  விரைவாகக் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டே அங்கிருந்த ஹாக்கி மட்டைகளைத் தேடி எடுத்துக் கொண்டனர்.

மிகவும் பதட்டமடைந்த அபி செக்யூரிட்டிக்கு போன் செய்து,” வீர், இங்க வீட்டுக்குள்ள திருடனுங்க நுழைஞ்சிட்டாங்களாம். நீங்க கேட் லாக் பண்ணிட்டு ஹோம் கிட்ட போங்க” என்றாள். பிறகு ஹோமில் இருக்கும் பெண் உதவியாளருக்கு போன் செய்து ஹோமின் முன்புற பின்புற கதவுகளை தாழிடச் சொன்னவள் பதட்டத்துடன், “ சுபா ண்ணா பார்த்து ஜாக்ரதை அண்ணா” என்றாள்.

அறைக்குள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிக் கொண்ட ஆர்த்தி பின்புறக் கதவு தாழிடப் பட்டுள்ளதா என்று சரி பார்க்கச் சென்றாள்.

கங்கா முன்புறக் கதவை பூட்டிவிட்டு, மாடியில் இருந்த அறையின் பால்கனி கதவுகளைத் தாழிடச் சென்றாள். அனைவரிடமும் பதட்டமும் பயமும் நிறைந்திருந்தது.

அதற்குள்  ஆகாஷ் அவனது கைத்துப்பாக்கியை எடுத்து வந்தான். பெண்களிடம் வீட்டை உள் பக்கமாகத்  தாழிடச் சொல்லி விட்டு மூவரும் வெளியேறினர்.

அப்போது  மாடியில் இருந்த ரஞ்சன், அன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு அழைத்து உடனடியாக ஆகாஷின் வீட்டு முகவரியைக் கூறி வரச் சொன்னான். அவர்களும் அருகேதான் இருப்பதாகவும் ஐந்து நிமிடங்களில் வந்து விடுவதாகவும் கூறினர்.

உடனடியாக ராஜாவும் ரஞ்சனும் மாடியிலிருந்து வெளிப்புறமாகச் செல்லும் படிக்கட்டு வழியாக இறங்கி, தோட்டத்தை அடைந்தவர்கள், அங்கிருந்த கட்டைகளில் ஒன்றை ஆளுக்கொன்றாக உருவிக் கொண்டு , சத்தமில்லாமல் அக்கயவர்களைப் பின் தொடர்ந்தனர் .

அக்கயவர்கள் நால்வரும் ஹோமிற்கு சென்று உள்ளே நுழைய தோதான வழியைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.அதில் இருவர் பின்பக்கமாக ஏதேனும் வழியில் எளிதாக நுழைய முடியுமா என்று பார்க்கச் செல்ல, அவர்கள் ரஞ்சனின் பார்வையில் பட்டனர். அந்த நேரத்தில் ஆள் நடமாட்டத்தை எதிர்பார்க்காத இருவரும் சற்றுத் தடுமாறிப் பின் தங்கள் ஆயுதத்தை எடுக்க, ரஞ்சன் தன் கையில் வைத்திருந்த கட்டையை அரிவாள் வைத்திருந்தவன் கையைக் குறிபார்த்து எறிந்தான்.

அவன் கையில் வைத்திருந்த அரிவாள் தெறித்து இருளில் எங்கோ போய் விழுந்தது. சுதாரிக்கும் முன் விரைவாக நடந்த இந்த தாக்குதலால் அரிவாளைத் தவற விட்டவன் தடுமாறிப் பின் நின்றிருந்தவனையும் இடித்துக் கொண்டு கீழே விழுந்தான். இவர்களது கவனம் சிதறிய சில நொடிக்குள், தன் பிஸ்டலை எடுத்த ரஞ்சன் அவர்களுக்கு குறி வைக்க, இதனை எதிர் பார்க்காத இருவரும் திகைத்து நின்றனர்.

அங்கே ஹோமின் முன்புறம் நின்றிருந்த இருவரும் இவர்களின் சப்தம் கேட்டு சுதாரித்து பின்புறம் செல்ல எத்தனிக்க, அவர்களைச் சுற்றி வளைத்திருந்தனர் ஆகாஷ், சுபாஷ், நந்து மூவரும். இவர்களின்   வருகையை  எதிர்பார்த்திராத அடியாட்கள் இருவரும் தம் ஆயுதங்களோடு தாக்கத் தயாராகினர்.  ஆகாஷ் தன் துப்பாக்கியை அவர்களுக்கு குறி வைத்தபடி நிற்க சுபாஷும் நந்துவும் ஹாக்கி மட்டைகளை கையில் ஏந்தியவாறு அவர்களைத் தாக்கத் தயாராக நின்றனர்.

அப்பொழுது காவல்துறையினர் வந்த வாகனத்தின் சைரன் ஒலியைக் கேட்டவர்கள்,  தாங்கள் வசமாக சிக்கிக் கொண்டதை உணர்ந்தனர். இப்போது இந்த இடத்தில் இருந்து தப்பித்தால் போதும் என்று எண்ணியவர்கள்,  ஒருவன் தம் கையில் வைத்திருந்த அரிவாளை ஆகாஷின் கைகளைக் குறி வைத்து வீச, மற்றவன் சுபாஷின் புறம் வீசியிருந்தான். சுபாஷ் அவனை நோக்கி வரும் ஆயுதத்தில் இருந்து தப்பிக்க சற்று விலகினான். ஆகையால் அவனைத் தாண்டிச் சென்று விழுந்தது அந்த அரிவாள்.

ஆனால் ஆகாஷ் சற்று சுதாரிக்கும் முன் அவனது கைகளை லேசாக உரசிச் சென்றது மற்றையவன் வீசிய அரிவாள். ஆகாஷின் தோள் பகுதியில் காயத்தை ஏற்படுத்திய ஆயுதம் அவனைச் சற்று தடுமாறச் செய்ததில் அவனது கையில் இருந்த துப்பாக்கி நழுவி விழுந்து விட்டது.

“ஆகாஷ்…”

நந்துவும் சுபாஷும் ஆகாஷின் புறம் பதட்டமாகத் திரும்பிய இடைவெளியில் அந்த அடியாட்கள் இருவரும் ஓட்டம் பிடித்தனர்.

முன்புறம் நடந்த இந்த களேபரங்களால் பிரச்சனையைப் புரிந்து கொண்டனர் பின்புறம் இருந்தவர்கள். காவல்துறை வாகன சத்தத்தையும் கேட்டவர்கள், எக்காரணம் கொண்டும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று அவர்களுக்கு கொடுக்கப் பட்ட கட்டளையின் படி கையில் இருந்த  அரிவாளை ரஞ்சனை நோக்கி வீசி விட்டு ஓட்டமெடுத்தனர். தங்களை நோக்கி வந்த ஆயுதத்திலிருந்து சற்று விலகிச் சுதாரித்துப் பின் அவர்களைத் துரத்தத் துவங்கினர் ரஞ்சனும் ராஜாவும் .

பின்புறம் இருந்த கழிவு நீர்த் தொட்டியின் மீது ஏறி ஒருவன் குதித்துத் தப்பிவிட. மற்றவன் ஏறும் போது அவன் கால்களைக் குறி பார்த்து  சுட்டான் ரஞ்சன். “ஆ…” என்ற அலறலுடன் கீழே விழுந்தவன் வலியுடன் எழுந்து மீண்டும் தப்பிக்கப் பார்க்க, அவனை ஓடிச் சென்று பிடித்தவன் நையப் புடைத்து முன்புறம் இழுத்து வந்தான்.

வீட்டினுள் நுழைந்த காவல் துறையினர் மற்றும் வாட்ச் மேன் ஆகியோர் முன்புறம் தப்பி ஓடியவர்களை பிடிக்கும் முன் அங்கிருந்த தாழ்வான மரக்கிளையில் ஏறி காம்பௌண்டு சுவரைத் தாண்டிக் குதித்து ஓட்டம் பிடித்தனர் இருவரும்.

காலில் அடிபட்டவனை இரத்தம் சொட்ட இழுத்து வந்த ரஞ்சன், அங்கிருந்த காவலரிடம்  ஒப்படைத்து விட்டு, காவல் துறை வாகனத்தில் ஏறி, தப்பியோடியவர்களைத் தேடிச் சென்றான். ராஜாவும் தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு ரஞ்சன் சென்ற திசைக்கு எதிர்புறம் தேடிச் சென்றான்.

காவல்துறை வாகனத்தின் சத்தம் கேட்டு வெளியே வந்திருந்த அபியும், கங்காவும்  ஆகாஷின் அடி பட்ட கையைப் பார்த்ததும் அதிர்ந்து போய் ஓடி வந்தனர்.

அபி அழுகையுடன்,”என்ன ண்ணா? என்ன ஆச்சு ? இப்படி அடிபட்டிருக்கு… “

“ம்ப்ச்… ஒன்னும் இல்லடா. லேசான காயம் தான்”

“லேசான காயமா? எவ்வளவு இரத்தம் வருது? வா ண்ணா ஹாஸ்பிடல் போகலாம்” என்று அபி துடித்துக் கொண்டிருந்தாள்.

கங்காவின் உடல் வெளிப்படையாக நடுங்கிக் கொண்டிருந்தது. கண்கள் அவனது தலை முதல் பாதம் வரை ‘வேறு எங்கும் காயம் பட்டுள்ளதா?’ என்று ஆராய்ந்தது. கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது. பேச்சே எழும்பாமல் பயத்தில் வாயடைக்க நின்றிருந்தாள்.

உடனடியாக அவனுக்கு முதலுதவி செய்த சுபாஷ் ,தையல் போடும் அளவு காயம்  ஆழமாக இல்லாததால் மருந்து வைத்து பேண்டேஜைச் சுற்றினான்.

அதற்குள் வெளியே வந்திருந்த மஞ்சுளாவும் ஆர்த்தியும் பதட்டத்துடன் நடந்தவைகளை கேட்டுத் தெரிந்து கொண்டனர்.

மஞ்சுளா அவன் கையில் இருந்த காயத்தைப் பார்த்து கண்ணீருடன், “ பார்த்து ஜாக்ரதையா இருந்திருக்கக் கூடாதா ஆகாஷ்”  என்று துடித்துப் போனார்.

அதற்குள் ஹோமில் இருந்தவர்களும் வெளியே வந்து நடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இத்தனை  வருடங்களில் இது போன்றதொரு நிகழ்வு நடைபெற்றதில்லை, ஆகையால் அனைவரும் பலத்த அதிர்ச்சியில் இருந்தனர்.

தப்பிச் சென்றவர்களைப் பிடிக்க முடியாமல், காவல் துறையினரை  வேறு பக்கம் தேடச் சொல்லி விட்டு, வீட்டிற்கு திரும்பிய ரஞ்சன், குண்டடிபட்டு அரை மயக்க நிலையில் இருந்தவனிடம் விசாரணையைத் துவக்கினான்

“யார் டா நீங்க?”

இனி தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டவன், “திருட வந்தோம் சார்” என்றான்.

“யார் கிட்ட கதை விடற? திருட வந்தவனுங்க ஏன்டா அத்தனை பேரும் கையில அரிவாளோட வந்தீங்க? யார் அனுப்பியது உங்களை?”

“அதெல்லாம் இல்ல சார்… திருடத் தான் வந்தோம் சார்.”   கண்கள் அரைமயக்கத்தில் சொருகியது அவனுக்கு. அருகே நின்றிருந்த சுபாஷ், “ ரஞ்சன் அவனுக்கு ப்ளட் ஹெவியா போகுது. அப்புறம் அவன் உயிருக்கே ஆபத்தாயிடும்.  முதல்ல அவன ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ. அப்புறமா விசாரணை பண்ணு” என்றபடி தற்காலிகமாக  இரத்தத்தைக் கட்டுப் படுத்த காலில் பேண்டேஜைச் சுற்றினான்.

ரஞ்சனும் அங்கிருந்த காவலர்களிடம், குண்டடிப் பட்டவனை வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பணித்து விட்டு, ஓய்வாக அமர்ந்திருந்த ஆகாஷிடம் வந்தான்.

அபி தன் அண்ணன் அருகே அமர்ந்து அவன் காயத்தை வருடிக் கொண்டிருக்க, கங்கா பதட்டம் குறையாதவளாய், இன்னும் கண்ணீரோடு அவனருகே நின்றிருந்தாள். மஞ்சுளா அவனுக்கு குடிக்க ஏதேனும் தரலாம் என்று சமையல் அறையில் தயாரித்துக் கொண்டிருந்தார்.

அங்கு வந்த ரஞ்சன், “ வந்தவனுங்களை எங்கயாவது இதுக்கு முன்னாடி பார்த்திருக்கியா?”

“இல்ல ரஞ்சன்.”

“நல்லா யோசிச்சி பாரு ஆகாஷ். அவனுங்க கண்டிப்பா திருட வந்தவனுங்க இல்ல. இங்க யாரையோ டார்கெட் பண்ணிதான் வந்திருக்கானுங்க. இத என்னால உறுதியா சொல்ல முடியும்.”

“இல்லடா… இங்க டார்கெட் பண்ணி கொல்ற அளவு யார் மேல பகையிருக்கு சொல்லு? எனக்கு தெரிஞ்சு எங்க குடும்பத்துக்கு யாரும் பகையாளி இல்ல. ஹோம்ல இருக்கறவங்க எல்லாருமே ஆதரவு இல்லாம இங்க வந்தவங்க தான். அவங்களுக்கு என்ன பகையிருக்கும்?

அவனுங்க திருட வந்தவனுங்களாதான் இருக்கும். வீடுன்னு நினைச்சி ஹோம் பக்கம் போயிருப்பானுங்க. யாராவது எதிர்த்து வந்தா தாக்கறதுக்கு ஆயுதங்கள எடுத்துட்டு வந்து இருப்பானுங்க.”

ஆகாஷ் கூறியதை நம்ப மறுத்தது ரஞ்சனின் போலீஸ் மூளை. “ சரிடா அவன் போட்டோவ எல்லா ஸ்டேஷன்க்கும் அனுப்பியிருக்கேன். கூடிய சீக்கிரம் எல்லாவனும்  மாட்டுவானுங்க பாரு. இப்ப நீ ரெஸ்ட் எடு நாளைக்கு காலையில வந்து ஒரு கம்ப்ளைண்ட் கொடு. நான் இப்ப அவன் கண்டிஷன் எப்படி இருக்குன்னு பார்த்திட்டு  வரேன்.” என்றவன் கிளம்பினான்.

கங்கா மனதளவில் பலத்த அதிர்ச்சியில் இருந்தாள். இங்கு வந்தவர்கள் கண்டிப்பாக அவளைக் கொல்லத்தான் வந்திருக்க வேண்டும். இன்று பிடிபட்டவன் அன்று காரில் துரத்தி வந்தவர்களுள் ஒருவன் தான் என்று அவளுக்கு உறுதியாகத் தெரிந்தது. ஆனால் இவ்வளவு வஞ்சம் வைத்துக் கொல்லும் அளவு தான் செய்த தவறு என்னவென்று அவளுக்குப் புரியவில்லை.

குடும்பத்தோடு இருந்தபோதும் எந்த பிரச்சனையும் அவள் அறிந்திருக்க வில்லை. சொத்துப் பிரச்சனை, கோர்ட் கேஸ் என்று ஏதேனும் அவர்கள் பேசும் போது, அவள் காதில் விழுந்து  விளக்கம் கேட்டாலும், யாரும் சொன்னதில்லை அவளிடம்.

“ உனக்கு எதுக்கு ராஜாத்தி இந்த பிரச்சனை எல்லாம்? இதெல்லாம் அப்பாவும் சித்தப்பாவும் பார்த்துக்குவோம். நீ சந்தோஷமா இரு டா…” என்று அவளை சமாதானம் செய்து விடுவர்.

திடீரென்று ஒருநாள் , நாம நம்ம சொந்த ஊருக்கு போகலாம் என்று சொல்லி அவசர அவசரமாக கிளம்பியதும்,  சாமான்களையெல்லாம் லாரியில் ஏற்றி அனுப்பிவிட்டு, அனைவரும் ஒரே வண்டியில் ஏறி சென்றதும் நிழலோவியமாய் மனதுக்குள் வந்தது. யாரிடமும் சொல்லிக் கொள்ளக் கூட அவகாசமில்லாமல் கிளம்பியது ஏன்? என்று பலமுறை யோசித்ததுண்டு.

அப்பொழுது நடந்த விபத்தில் அனைவரும் இறந்த பின், இரண்டு நாட்கள் சுய நினைவின்றிக் கிடந்ததும், பின் ஊட்டிக்குச் சென்றதும் நினைவில் வந்தது. ஊட்டியில் இருந்த போது சிஸ்டர் ஸாண்ட்ரா அவளை எங்கும் வெளியே அனுப்பியதில்லை. அப்போது வெளி உலகை கவனிக்கும் நிலையிலும் அவள் இல்லை. பிறகு அவள் அந்த ஆசிரமத்தை விட்டு வெளியேறியதும்,  அவளைக் கொல்லத் துரத்தியதும், பின்  இங்கு வந்து சேர்ந்ததும் அனைவரும் அறிந்ததே.

 

இப்போது என்ன செய்வது என்ற பெரும் குழப்பம் கங்காவின் மனதில். ‘இப்போது தன்னை நோக்கியுள்ள ஆபத்தைக் கூறுவதா? வேண்டாமா?  இதனைக் கூறுவதால் தன்னைப் பற்றிய விபரங்கள் இவர்களுக்குத் தெரிய வருமே!  அதன்பின் தன்னால் இங்கிருக்க முடியுமா? தன்னை அன்பாக பார்த்துக் கொள்ளும் மஞ்சுளா, பாசத்துடன் பழகும் அபி, ஆகாஷ் இவர்களைப் பிரிந்து இருக்க முடியுமா?

விதி என்னை விடாமல் துரத்துவது ஏன்?’  மன அழுத்தத்தைத்  தாள முடியவில்லை அவளால். ஆனால் தனக்கு நேர வேண்டிய ஆபத்து ஆகாஷைத் தாக்கியதில் பெரிதும் அதிர்ந்து போயிருந்தாள். என்ன செய்வது  என்றே விளங்கவில்லை அவளுக்கு. மன உளைச்சல் அதிகரித்து ஜுரம் வந்தது போல உடல் கொதித்தது.

அப்பொழுது கங்காவை கவனித்த ஆகாஷ் அபியிடம், ”அவளை உள்ளே கூட்டிட்டு போய் படுக்க வை அபி. இங்க நடந்ததைப் பார்த்து ரொம்ப பயந்து போய் இருக்கா” என்று கூறியவன், அனைவரையும் ஓய்வெடுக்க அனுப்பிவிட்டு தானும் படுக்கச் சென்றான்.

விடிய விடிய உறங்காமல் மனதைக் குழப்பிக் கொண்டிருந்த கங்கா, ஆகாஷின் மீது தான் அளவு கடந்த நேசம் வைத்திருப்பதை உணர்ந்து வேதனையுடன் விதியை நொந்து கொண்டாள். இந்த ஒரு வாரத்தில் வந்த நேசமில்லை இது என்பதில் தெளிவாக இருந்தாள்.

ஆகாஷ் தனது படிப்பு முடிந்து ஊரை விட்டுச் சென்றதும் கங்கா வெகுவாக தவித்துப் போனாள். அவனை இனிக் காண முடியாது என்பது அவளைச் சோர்வுறச் செய்தது. ஆனால் ‘அந்த சிறு வயதில் அனைவருக்கும் வரும் ஈர்ப்பு தான் இது என்பதையும், காதல் மற்றும் திருமணத்திற்கான வயது இது அல்ல’ என்பதிலும் தெளிவாக இருந்தவள்,  தன் மனதை படிப்பு மற்றும் நாட்டியத்தின் புறம் திருப்பி வெற்றியும் கண்டாள்.

கிட்டத்தட்ட அவனை மறந்து விட்டதாக எண்ணிக் கொண்டவளுக்கு, ஊட்டி யில் இருந்த காலகட்டங்களில் அவன் நினைவு சுத்தமாக இல்லை என்பது உண்மையே. ஆனால் அவனை அப்படி ஒரு சூழ்நிலையில் மீண்டும் சந்திப்போம் என்று எண்ணியிராதவள், அவனைக் கண்டதும் ‘காடு மேடெல்லாம் அலைந்து திரிந்தவன் தன் கூட்டை அடைந்தது போல’ ஆசுவாசம் அடைந்தாள்.

மறந்ததாக எண்ணிக் கொண்ட நேசம் இந்த ஒரு வார காலத்தில் மெதுவாக எட்டிப் பார்த்தது. அதிலும் இரத்தம் வழிய நேற்று இரவு அவன் நின்றிருந்த கோலம், உயிரை யாரோ உருவி வெளியே எடுப்பது போல வலி கொடுத்தது.

‘எதிர்காலமே இல்லாத இந்த நேசம் தனக்கு எதற்கு வந்தது?’ என்று எண்ணி எண்ணி இரவெல்லாம் மருகிக் கிடந்தாள். ‘அவனை மனதால் நினைக்கும் தகுதியாவது தனக்கு இருக்கிறதா?’ என்று தனக்குள்ளே கலங்கியவள், விடியலின் பொழுதில்,’ தன் மனதில் நிறைந்தவனை  அருகில் பார்த்துக் கொண்டிருப்பதே போதும், இங்கு இருப்பவர்களுக்கு  எந்த ஆபத்து வந்தாலும் தன் உயிரைக் கொடுத்தாவது காக்க வேண்டும்’ என்று எண்ணிக் கொண்டு உறக்கத்தை தழுவினாள்.

 

மறுநாள் காலை, தோட்டத்தில் அமர்ந்து வீட்டைச்  சுற்றி கேமரா பொருத்துவதற்கும், தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் இருந்து பாதுகாப்பு பணிக்கு ஆட்களை வரச் சொல்வதற்கும் அலைபேசியின் மூலம் பேசி ஏற்பாடு செய்தான்.  சுபாஷும் ஆர்த்தியும் அப்போதுதான் அவனது  வீட்டிற்குச் செல்லக் கிளம்பிக் கொண்டிருந்தனர்.

அபி அனைவருக்கும் தேநீர் தயாரித்து எடுத்து வந்தாள்.

“ கங்கா அண்ணிக்கு கடுமையான ஜுரம் அடிக்குது ண்ணா.  அவங்களை  இப்பதான் எழுப்பி ப்ரெஷ் பண்ணிட்டு வரச்சொன்னேன்.”

சோர்வாக அங்கு வந்த கங்கா தனக்கான கோப்பையை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள். கண்களும் உதடுகளும் சிவந்திருந்தது. வெகுவாக வாடிப் போய் இருந்தாள் .

அவளது சோர்ந்த தோற்றத்தைக் கண்ட ஆகாஷ், “இனிமே இந்த மாதிரி நம்ம வீட்ல நடக்காது மா; வீடு முழுக்க கேமரா பொருத்த சொல்லியிருக்கேன்.  தனியார் செக்யூரிட்டிக்கும் ஏற்பாடு பண்ணியிருக்கேன். இனி பயமில்லாம இருக்கலாம். இப்ப சாப்பிட்டு ஃபீவர் க்கு மாத்திரை போட்டுக்கோ” என்றான்.

அவனை இமைக்காமல் பார்த்தவள் ‘சரி’ என்பது போல தலையாட்டினாள்.

சுபாஷும் ஆர்த்தியும் மாலை பிறந்த நாள் விழாவுக்கு அனைவரையும் அழைத்து விட்டு கிளம்பிச் சென்றனர்.

_____ _____ ______ ______ _______ _______ ______ _________ __________

கோயம்புத்தூரில் உள்ள உயர் ரக பார் ஒன்றில் அமர்ந்திருந்தனர் இருவர். அவர்கள், கங்காவைக் கொல்ல ஆள் அனுப்பிய பெரியவரின் மகன்கள்  சுந்தரமும் சுகுமாறனும்.

“நேத்திலேர்ந்து மனசு பக்பக்குன்னு இருந்துச்சி ண்ணே, ஆளை அனுப்பிட்டேனே ஒழிய எனக்கு அந்த புள்ளய கொல்ல மனசே இல்ல ண்ணே.”

“எனக்கு மட்டும் அந்த புள்ளைய கொல்லனுன்னு வெறியா என்ன?  ஐயா சொல்றத மீற முடியாம தான ஆளை அனுப்பி விட்டோம்”

“ மூனு பேரு தப்பிச்சிட்டானுங்க, ஒருத்தன் மாட்டிகிட்டான். நம்ப பேர சொல்லிடுவானோ?”

“அதெல்லாம் சொல்ல மாட்டான்… இருபது வருஷமா விசுவாசமா இருந்தவன். அவ்வளவு சீக்கிரம் வாயத் திறக்க மாட்டான்.”

“ஐயா தான் கொஞ்சம் டென்சனாயிட்டாரு.  இந்த பிரச்சனையெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்னு சொல்லி, அவர சமாதானப் படுத்தி ஊருக்கு அனுப்பறதுக்குள்ள  ரொம்ப கஷ்டமாயிடுச்சி அண்ணே.”

“அந்த புள்ளய இந்த ஊர விட்டு எங்கயாவது போகச் சொல்லனும்.”

“அவ வீட்டவிட்டு தனியா எங்கயாவது வந்தா பார்த்து பேசலாம் ண்ணே. நம்மை அடையாளம் தெரியுமா அவளுக்கு”

“சின்ன புள்ளையில பார்த்தது அடையாளம் தெரியுமோ என்னவோ?  தெரியலையே.”

அவள் வெளியில் வரும் போது அவளிடம் பேச வேண்டும் என்று இவர்கள் காத்திருக்க,  அங்கு அவள், ஒருவருக்கும் தெரியாமல் எப்படி வெளியே செல்வது என்று சந்தர்ப்பத்திற்கு காத்திருந்தாள்.

9

 சுபாஷ் ஆர்த்தி இருவரும் தங்களின் மகள் பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்து ஊருக்குச் சென்றிருந்தனர். விழாவுக்கு வந்திருந்த நந்தகுமாரின் பெற்றோர், அபிக்கும் நந்துவுக்கும் எளிமையாக நிச்சயம் செய்யலாம் என்றும் அபி படிப்பு முடிந்ததும் திருமணம் செய்யலாம் என்றும் பேசி முடிவு செய்திருந்தனர். நல்ல நாள் பார்த்துச் சொல்கிறோம் என்று கூறி விட்டு சென்றவர்கள், போன் செய்து ஒரு வாரம் கழித்து வரும் முகூர்த்தம் அருமையாக இருப்பதாகவும், அன்று நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம் என்று கூறி இருந்தனர்.

அபியும் நந்துவும் இந்த உலகத்திலேயே இல்லை. ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரங்கள் போதவில்லை அவர்களுக்கு. போனும் கையுமாக அலையும் அபியைப் பார்க்கப் பார்க்க அவ்வளவு சந்தோஷமாக இருந்தது கங்காவுக்கு. அபியை கிண்டல் செய்து முகம் சிவக்க வைத்து ரசிப்பதில் கங்காவுக்கு மிகுந்த ஆனந்தமாக இருந்தது. அபி நந்து நிச்சயதார்த்தத்தை வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்ததால், வீட்டை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

அன்று காலையில் ஆகாஷ் அவனது ஸ்டெதஸ்கோப்பைக் காணவில்லை என்று வீட்டையே தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டு மருத்துவமனைக்குச் சென்றிருந்தான். அபிக்கும் அன்று கல்லூரி விடுமுறையாதலால் இருவரும் பேசிச் சிரித்தபடியே வீட்டை ஒட்டடை அடித்து ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தனர்.

“பரம சிவன் கழுத்துல இருக்கற பாம்பு மாதிரி கழுத்துலயே மாட்டிகிட்டு திரிவான். எங்க வச்சான்னே தெரியலயே இந்த ஸடெதஸ்கோப்பை”

“ஹாஸ்பிடல்லயே வச்சிட்டு வந்துட்டாரோ என்னவோ? இங்க இவ்வளவு நேரம் தேடியும் கிடைக்கலையே.” பேசிக் கொண்டே வேலையை முடித்தனர்.

“மச்சி, இங்க கீழ ஹால்ல க்ளீன் பண்ணி முடிச்சிட்டோம், அடுத்து மாடிக்கு க்ளீன் பண்ண போகலாம். நீங்க ராதாம்மாவ கூப்பிட்டு கீழ பெருக்கித் துடைக்க சொல்லுங்க. நான் எல்லாருக்கும் டீ போட்டு எடுத்துட்டு வரேன்.”

வீட்டில் வேலை செய்யும் ராதாம்மாவை அழைக்க சென்றாள் கங்கா. அங்கே தோட்டத்தில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அது மட்டுமல்லாமல் வீட்டைச் சுற்றி கேமரா அமைக்கும் பணியும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மஞ்சுளா அங்கிருந்து அவற்றை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.

ஹோம் விரிவாக்கம் செய்யும் போது, கட்டிடக் கழிவுகள் , செங்கல், ஜல்லி அனைத்தும் பின்புறம் ஓரமாக குவிக்கப் பட்டிருந்தது.  அவற்றையும் ஆகாஷ் ஆட்களை வர வைத்து அப்புறப் படுத்தச் சொல்லியிருந்தான். அந்த வேலையும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

வேலையாளை அழைத்து வீட்டைப் பெருக்கித் துடைக்கச் சொல்லி அனுப்பியவள், அங்கு வேலை செய்பவர்களுக்கு அபி எடுத்து வந்த டீ யை கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்கிருந்த மரக்கிளை ஒன்றிலிருந்து சிறிய அணில் குஞ்சு ஒன்று கீழே விழுந்தது. அதைக் கண்டு அங்கிருந்த பூனை  ஒன்று, அதனைக் கவ்விக் கடிக்கப் பாய்ந்தது.

அந்தப் பூனையை விரட்ட அபி குனிந்து கல்லை எடுப்பதற்குள், அந்த அணில் குஞ்சை ஓடிச் சென்று தூக்கியிருந்தாள் கங்கா.

“ ஹேய்… ப்ளீஸ் மியாவ்… இது ரொம்ப குட்டி அணில். பாவம்ல… விட்டுடு பா… உனக்கு நான் நிறைய பால் வைக்குறேன்”

அந்தப் பூனை தனது இரையைத் தவற விட்டக் கடுப்பில் சீறிக் கொண்டிருந்தது.   பூனையைக் கல்லால் விரட்ட வந்த அபியைத் தடுத்தவளைக் கண்டு வியந்த அபி,

“மச்சி… நீங்க என்ன , பூனையக் கல்லக் கொண்டு அடிச்சி விரட்டறத விட்டுட்டு, அது கூட பேச்சு வார்த்தை நடத்திட்டு இருக்கீங்க?”

“ஹையோ… பூனையும் பாவம் பா… அதுக்கு பசி. அதனால தான இந்த அணில சாப்பிட வந்துச்சி. நாம பால் வச்சா சமத்தா குடிச்சிட்டு போய்டும் பாரேன். நீ இந்த அணில் குட்டிய பிடி. நான் போய் பால் எடுத்துட்டு வரேன்”

பாலை சிறு கிண்ணத்தில் கொண்டு வந்து வைத்ததும், அழகாக அதனைக் குடித்து விட்டு ஓடிச் சென்றது பூனை.

“ மச்சி, நீங்க நிஜமாவே வித்தியாசமான ஆளுதான். இந்த அணில் குட்டிய நாமே வளர்க்கலாமா?”

“ம்ம்ம்… வளர்க்கலாம் ஆசையாதான் இருக்கு. ஆனா அதோட அம்மா அணில் பாவம்ல . அது குட்டிய  தேடுமே.”

அந்த அணில் அவள் கைகளில் வாகாகச் சுருண்டிருந்தது. கீழே விழுந்த அதிர்ச்சியில் சற்று நடுங்கிக் கொண்டிருந்தது.

“ பாருங்க மச்சி, இது ரொம்ப நடுங்குது. இப்ப இத மரத்துல விட்டாலும் திரும்ப விழுந்திடும். அப்புறம் பூனையோ காக்காவோ தின்னுடும். அதனால நாம கொஞ்ச நாள் வளர்க்கலாம். அப்புறம் அது பெருசானதும் மரத்துல விட்டுடலாம் சரியா?”

சிறு அட்டைப் பெட்டியில் மெத்தென்று துணிகளை விரித்தவர்கள், அந்த அணிலைத் தூங்க வைத்து விட்டு.  அதற்கு என்ன உணவு தரலாம் என்று இணையத்தில் தேடித் தெரிந்து கொண்டனர்.

மாடியில் உள்ள அறைகளையும் சுத்தம் செய்தவர்கள், அன்று முழுவதும் அணிலுடனே பொழுதைக் கழித்தனர்.

இரவு உணவின் போது அன்றைய தினம் நிகழ்ந்ததை ஆகாஷிடம் கூறிக் கொண்டிருந்தாள் அபி, “அண்ணா… அண்ணிக்கு இரக்க குணம் அதிகம் ண்ணா. அந்தப்  பூனைய அடிக்கவே விடலையே. அணில் குட்டியையும் நைட் நான் பார்த்துக்கறேன்னு சொல்லி தூக்கிட்டு போயிட்டாங்க.”

“அவங்க வீட்டுக்குள்ள நுழைஞ்ச பாம்பையே அவ அடிக்க விடல, இந்தப் பூனையவா அடிக்க விடுவா?”

“என்ன ண்ணா , சொல்ற… பாம்ப அடிக்க விடலையா?”

“ ஆமா, நாங்க வேலூர்ல இருந்தப்ப அவங்க வீட்டுக்குள்ள பெரிய நல்ல பாம்பு புகுந்திடுச்சி. வீட்ல இருந்தவங்க எல்லாரும் பயந்து வெளியே  வந்துட்டாங்க. நான்,சுபாஷ், அவ அண்ணனுங்க ரெண்டு பேரு எல்லாரும் அந்த பாம்ப அடிக்கலாம்னு கழி, கம்பெல்லாம் எடுத்துட்டு போனால்…  வாசல்ல நின்னுட்டு யாரையும் உள்ள விடமாட்டேன்னுட்டா.”

“ செல்லம்,  வழிய விடுடா… பெரிய பாம்பு, கடிச்சிட போகுது… போடா… அம்மாகிட்ட போய் நில்லுடா.” கெஞ்சிக் கொண்டிருந்தான் அவளது அண்ணன்.

“முடியாது ண்ணா,  அது பாவம் ண்ணா… வழி தெரியாம நம்ம வீட்டுக்குள்ள வந்திடுச்சி. அத அடிச்சி கொல்ல நான் விட மாட்டேன்”

கடுப்பான அவளது அம்மா, “ பாப்பா, என்னடா இது?  இப்படி பண்ற. அது நம்மள கடிச்சிருந்தா என்ன செய்யறது? அத வெளியவாது விரட்ட வேணாமா? யாரையும் உள்ள விட மாட்டேன்னா என்ன அர்த்தம். நகரு பாப்பா.” என்றார்.

“முடியாது, இவங்க உள்ள போனால், அது பயத்துல சீறும் இவங்க அத கண்டிப்பா அடிச்சிடுவாங்க.”

“பிரபா… நேத்து நியூஸ் பேப்பர்ல வனவிலங்கு ஆர்வலர் போன் நம்பர் போட்டிருந்தாங்க. அந்த நம்பருக்கு போன் பண்ணி வரச் சொல்லுடா” என்றாள்.

பிரபா அந்த தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து தகவல் சொன்னதும் விரைந்து வந்த வனவிலங்கு ஆர்வலர், அந்தப் பாம்பைப் பிடித்து காட்டினுள் விட ஏற்பாடு செய்தார். மேலும் கங்காவையும் பாராட்டிவிட்டுச் சென்றார்.

கங்காவைப் பற்றிப் பேசியதில் தன் அண்ணன் முகத்தில் தென்பட்ட காதலைக் கண்ட அபிக்கு மனம் வெகுவாக நிறைந்திருந்தது. இவ்வளவு காதலை வைத்துள்ள தன் அண்ணனுக்கு ஏற்ற துணைதான் கங்கா என்று எண்ணிக் கொண்டாள்.

“ அவங்க கிட்ட உன் லவ்வ சொல்லு ண்ணா. கண்டிப்பா அவங்க மறுத்துப் பேச மாட்டாங்க. அவங்களுக்கும் உன்னைப் பிடிக்கும்னு தான் நினைக்கிறேன்.”

கேள்வியாகப் பார்த்தவனிடம், “இன்னைக்கு மாடியில உன்னோட ரூம் சுத்தம் பண்ண போனோம். அங்க இருந்த உன்னுடைய போட்டோ ஆல்பத்தை அவ்வளவு ஆசையா பார்த்தாங்க.  அதுவும் நீ குழந்தையா இருந்தப்ப எடுத்த போட்டோவ அப்படி ரசித்து பார்த்திட்டு இருந்தாங்க.

உங்க காலேஜ் போட்டோவும் அதுல இருந்துச்சி. அது நீ ஏதோ டூர் போனப்ப எடுத்த போட்டோன்னு நினைக்கிறேன். அதுல உன்கூட நிக்கற பொண்ணுங்களை எல்லாம் யார்னு கேட்டுக் கிட்டு இருந்தாங்க. அப்ப அவங்க முகத்தை பார்க்கனுமே, அவ்வளவு கடுப்பு அவங்களுக்கு.”

கேலியாக சிரித்தவளின் தலையில் செல்லமாக தட்டிய ஆகாஷ், “ நாளைக்கு நான் தானே அவள ஸ்கூல் கூட்டிட்டு போகனும்,  இனி என் மனசுல இருக்கறத கொஞ்சம் கொஞ்சமா அவளுக்கு  புரிய வைக்கிறேன் அபி.

அவ இப்ப யாருமே இல்லாம இருக்கறா அபி.  இப்ப என்னை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கேட்டால், ஒருவேளை, அவள  யாரும் இல்லாத இந்த சூழ்நிலையில, வற்புறுத்தறதா நினைச்சிட்டா என்ன பண்றது. ஒரு நண்பனா அவளுக்கு என்னைப் பிடிக்கும்.  ஆனா   ஒரு காதலனா அவ மனசுல பதிய கொஞ்சம் டைம் வேணாமா அபி?”

“இல்ல ண்ணா நீ பயப்படறதுல அர்த்தமே இல்லை. அவங்க உன்னை கண்டிப்பா வேண்டாம்ன்னு சொல்ல மாட்டாங்க.

உன்ன சின்ன வயசிலேயே பார்த்து பழகியிருக்காங்க. இப்பவும் அவங்களுக்கு வந்த ஆபத்திலிருந்து நீ தான் காப்பாத்தியிருக்க. நம்ம வீட்டுக்கு வந்தப்ப எப்படி யார்கூடவும் பேசாம ஒடுங்கி போய் இருந்தாங்க? இப்ப அப்படியா இருக்காங்க?  எவ்வளவு இயல்பா எல்லார் கூடவும் ஒன்றி பழகுறாங்க? அவங்களுக்கு நம்ம அம்மாவையும் என்னையும் உன்னையும் ரொம்ப பிடிக்கும் ண்ணா. நீ கல்யாணம் பண்ணிக்க கேட்டா சரின்னுதான் சொல்லுவாங்க.”

“ஒழுங்கா சீக்கிரம் அவங்க கிட்ட சொல்ற. என் கல்யாணத்தை நீங்க ரெண்டு பேரும் ஜோடியா நின்னு  நடத்தறீங்க புரியுதா.”என்று  கூறியவள் படுக்கைக்குச் சென்றாள்.

 

தனது அறைக்கு வந்தவனது எண்ணத்தில் கங்காவின் நினைவுகள். ‘எனக்கு மட்டும் ஆசையில்லயா? அவளைப் பார்த்ததிலிருந்து அவளிடம் தன் நேசத்தைக் கூற மனம் துடித்துக் கொண்டிருப்பது எனக்குத் தானே தெரியும்.  இனியும் காலம் கடத்தாமல் சொல்லி விட வேண்டும்’ என்று எண்ணியவன்  அவளின் நினைவுகளோடு உறங்கிப் போனான்.

மறுநாள் காலையில் பள்ளிக்குச் சென்று அவளை அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு ஹாஸ்பிடலுக்குச் சென்றான். அவளுக்கு அரை வேளை மட்டுமே வேலை நேரம், ஆகவே அவளை மதியம் வந்து அழைத்துக் கொள்வதாக கூறிச் சென்றான்.

காரில் சென்று வரும் இருவருக்குமான அந்த தனித்த பொழுதுகளை கங்காவும் ஆகாஷும் பெரிதும் விரும்பினர். இருவருக்கும் பிடித்தது பிடிக்காதது, பள்ளி நாட்களில் நடந்த பழைய கதைகள் ஆகியவற்றை பேசிக் கொண்டு வருவதில் ஆகாஷுக்கும் கங்காவுக்கும் அந்த பத்து நிமிட பயண நேரம் பல வருடங்கள் பழகிய உணர்வைத் தந்தது.

இடையே அபி நிச்சயத்திற்கு தேவையான பொருட்களை வாங்கவும் அடிக்கடி வெளியே சென்று வந்தனர்.  கங்காவின் உள்ளுணர்வுக்கு யாரோ தன்னை பின் தொடர்வது போலத் தோன்றவும், கூர்ந்து கவனிக்கலானாள்.  இரண்டு மூன்று நாட்களாக, தான் வெளியே வருவதிலிருந்து மீண்டும் வீட்டுக்கு வரும் வரை, ஒரு காரில் இருவர் பின்தொடர்வதை கவனித்தாள்.

அவ்விருவரையும் ஏற்கனவே பார்த்தது போலத் தோன்றினாலும் யார் என்று தெரியவில்லை அவளுக்கு.  அவள் பள்ளியில் இருக்கும் போதும் இருவரும் உள்ளே நுழைய முயற்சி செய்ததும் அவளுக்கு தெரியவில்லை.  அவளுக்கும் அவர்களிடம் சென்று தன்னை பின் தொடரக் காரணம் என்ன? என்று கேட்கும் எண்ணம் இருக்கிறது. ஆனால் அவர்களைப் பார்த்து சற்று பயமும் இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல், அபியும் ஆகாஷும் அவளைத் தனித்து வெளியே விடுவதில்லை.

இப்படியே நாட்கள் நகர்ந்தன.  நிச்சயதார்த்தத்திற்கு இன்னும் மூன்று தினங்களே இருக்கும் நிலையில் அபி தனது நிச்சய புடவையின் பிளவுஸ் தைக்க கொடுத்ததை வாங்க கல்லூரியில் இருந்து நேராகச் சென்றிருந்தாள். அது கொஞ்சம் பரபரப்பான ரோடு. நான்கு புறமும் பிரியும் சாலையும் நடுவில் ரவுண்டானாவும் இருக்கும்.

அந்த மாலை வேளையிலும் சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்தது.  அபி தனது  வேலையை முடித்துக் கொண்டு ஆட்டோ ஏறலாம் என்று வந்தவள், அந்த சாலையின் எதிர் புறம் அவசர அவசரமாக பஸ் நிறுத்தத்தை நோக்கி செல்லும் கங்காவைப் பார்த்தாள்.

கங்கா இருந்த திசையில் அரசு மருத்துவமனை தவிர எதுவும் இல்லை. அவள் மருத்துவமனைக்குதான் சென்றிருக்க வேண்டும். அவளைப் பார்த்த அபி இந்த பகுதியில் கங்காவுக்கு என்ன வேலை என்று மிகவும் குழம்பி போனாள். கவனமாக சாலையைக் கடந்த அபி, கங்காவை எட்டிப் பிடித்ததும், யாரோ என்று பயத்தில் அரண்டு ‘அம்மா…’ என்று கத்தியபடி திரும்பினாள் கங்கா.

நெஞ்சில் கை வைத்து தடவி ஆசுவாசப் படுத்திக் கொண்டே, “ அபி நீ எங்க இங்க?”

“அத நான் கேட்கனும் மச்சி,  நீங்க எங்க இந்த பக்கம்?” என்று ஜிஹெச் ஐ பார்த்தபடி வினவினாள்.

“அ…அ…அது, சு…சும்மா… உன்னோட பங்சனுக்கு ஏதாவது கிப்ட் வாங்கலாம்னு வந்தேன்” அபியை பார்த்த பயத்தில் வாய்க்கு வந்ததை சொன்னாள். அதற்குள் பயத்தில் வேர்த்து விட்டிருந்தது.

அவளை விசித்திரமாகப் பார்த்த அபி, “ கிப்ட் வாங்கவா?  அதுக்கு ஏன் இந்த பக்கம் வந்தீங்க?”  அவள் கைகளை ஆராய்ந்தவாறு, “ வாங்கிட்டீங்களா?” என்றாள். கங்காவிடம் சிறு கைப்பை தவிர வேறொன்றும் இல்லை.

“இல்ல அபி, எனக்கு ஒன்னும் பிடிக்கல அதான் வீட்டுக்கு கிளம்பிட்டேன்.”

“ஓ… சரி வாங்க மச்சி, ரொம்ப வெயிலா இருக்கு ஏதாவது ஜூஸ் குடிச்சிட்டு ஆட்டோல போய்டலாம்.”

சரி என்று தலையாட்டிய படி திரும்பிய கங்கா, சாலையின் எதிர்ப்புறம் சற்று தூரத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த காரில் இருந்து இறங்கிய சுந்தரம், சுகுமாரன் இருவரும் அவளை நோக்கி வருவதைப் பார்த்தாள். பயத்தில் உடல் தடதடத்தது.

அபி வேறு உடனிருக்கிறாள். எனக்கு எந்த ஆபத்து வந்தாலும் பரவாயில்லை, அபியை உடனடியாக கூட்டிச் செல்ல வேண்டும் என்று உள்ளம் பட படக்க,  அவளருகே வந்த ஆட்டோவை கை காட்டி நிறுத்தி அவசரமாக அபியை உள்ளே திணித்து தானும் ஏறிக்கொண்டாள்.

“என்ன மச்சி? என்ன ஆச்சு?… தாகமா இருக்கு ஏதாவது குடிச்சிட்டு போலாம்னு சொன்னேன். ஏன்? இப்படி அவசரமா இழுத்துட்டு வரீங்க.”

ஆட்டோகாரர் போக வேண்டிய அட்ரஸ் கேட்கவும், “ஒன்னும் இல்ல அபி. ஆட்டோகாரர் அட்ரஸ் கேட்கரார் பாரு. அவர்ட்ட வழி சொல்லு” என்றவள் பதட்டமாக திரும்பி திரும்பி பார்த்தபடி வந்தாள்.

கங்கா சட்டென்று ஆட்டோவில் ஏறுவாள் என்று எதிர்பார்க்காத இருவரும் காரை எடுத்துக் கொண்டு பின் தொடர்ந்தனர். ஆனால் ட்ராபிக் காரணமாக  அவர்களால் தொடர்ந்து வர முடியவில்லை.

சிறிது நேரம் திரும்பி திரும்பி பார்த்தபடி வந்தவள், அவர்கள் தொடர்ந்து வரவில்லை என்றதும் சற்று ஆசுவாசமாக அடக்கி வைத்திருந்த மூச்சை வெளியிட்டாள்.  அவளையே வித்தியாசமாக பார்த்திருந்த அபி, “என்னாச்சி மச்சி? ஏன் பதட்டமாவே இருக்கீங்க? யாரத் திரும்பி திரும்பி பார்த்துட்டே வர்றீங்க?”

“அதெல்லாம்  ஒன்னும் இல்ல  அபி,  சும்மாதான்… யாரோ தெரிஞ்சவங்க மாதிரி இருந்தது. அதான் பார்த்தேன்.”

அப்பொழுது அபியின் அலைபேசி ஒலித்தது. ‘அம்மா தான்’ என்று  கூறியபடி ஆன் செய்து காதில் வைத்தாள்.

எதிர்புறம் மஞ்சுளா பதட்டத்துடன், “அபி, கங்காவ இன்னும் காணோம் டா. மதியம் கொஞ்சம் கண் அசந்து படுத்திருந்தேன். என்கிட்ட எதுவும்  சொல்லாம வெளியே போயிருக்கா. வீர் தான் ஆட்டோ பிடிச்சி குடுத்திருக்கான்” என்றார்.

“அம்மா… பதட்டப் படாதீங்க. மச்சி என் கூடதான் இருக்காங்க. நாங்க வீட்டுக்குதான் வந்துகிட்டு இருக்கிறோம்” என்று தாயை சமாதானப் படுத்தியவள் கேள்வியாக கங்காவை நோக்கினாள்.

“அம்மாட்ட சொல்லிட்டு வரலயா மச்சி?  அவங்க நீங்க இன்னும் வரலன்னு பயந்துகிட்டு இருக்காங்க. மத்யானமே வந்திருக்கீங்க இவ்வளவு நேரம் ஷாப்பிங் பண்ணீங்களா?”

“சும்மா பக்கத்துல தானேன்னு அப்படியே கிளம்பிட்டேன். சஸ்பென்ஸா இருக்கட்டும்னு யார்கிட்டயும் சொல்லல. ஆனா இவ்வளவு நேரம் தேடியும் ஒன்னும் மனசுக்கு பிடிக்கல அதான் வாங்கல” எங்கே தான் கூறும் பொய்யை, அபி கண்டுபிடித்து விடுவாளோ என்று, பார்வையை அவள் முகத்தில் பதிக்காமல் கூறி முடித்தாள்.

அதன் பின் அபியும் ஒன்றும் கேட்கவில்லை. வீட்டிற்கு வந்ததும் மஞ்சுளாவிடம் சொல்லாமல் சென்றதற்கு மன்னிப்பு கேட்டவள் ஹோமில் தனது அறைக்குள் சென்று முடங்கி விட்டாள்.  உடல் முழுவதும் கொதிப்பது போல இருந்தது.  உணவும் வேண்டாம் என்று மறுத்தவள் சோர்வுடன் படுத்திருந்தாள்.

அன்றிரவு,  வீட்டிற்குள் வரும்போதே “கங்கா எங்கே அபி?”  என்று கேட்டவாறே வந்தான் ஆகாஷ்.

“ஏன் ண்ணா? அவங்க ஹோம்ல இருக்காங்க. என்னன்னு தெரியல சீக்கிரம் படுக்க போறேன்னு போயிட்டாங்க”

“கூப்பிடு அபி.  நான் இப்ப சாப்பிட்டு திரும்ப ஹாஸ்பிடல் போறேன். நைட் ஒரு ஆபரேஷன் இருக்கு. மேஜர் ஆபரேஷன். எட்டு வயசு பையனுக்கு. அவன் ப்ளட் குரூப் ரேர் குரூப். கங்காவுக்கும் அதே குரூப் தான். ஏற்கனவே ப்ளட் குடுக்க  ரெண்டு பேர் ரெடி பண்ணியாச்சு. இருந்தாலும் ஏதாவது எமர்ஜென்சி சிட்சுவேஷன்னா தேவைப் படலாம். அதான் அவள  கூட்டிட்டு போலாம்னு வந்தேன்.”

“சரி ண்ணா…” என்றவள் கங்காவை அழைத்து வந்தாள்.

வெகுவாக சோர்ந்து போன தோற்றத்துடன் வந்தவளைப் பார்த்தவனின் புருவங்கள் மேலேறின. “ என்னாச்சு, உடம்பு சரியில்லயா?”

“மதியம் ஷாப்பிங் போறேன்னு  கடைக்கு போன பிள்ளை , சாயங்காலம் வரை அலைஞ்சு திரிஞ்சிட்டு வந்திருக்கு. அதான் சோர்ந்து போயிட்டா” என்றார் மஞ்சுளா.

“கங்கா… இப்ப சாப்பிட்டு என் கூட ஹாஸ்பிடல் வா. ஒரு எமர்ஜன்சி ஆபரேஷன் நைட்டு.  உன்னோட ப்ளட் தேவைப்பட்டாலும் தேவைப்படும். அங்க எனக்கு ரூம் இருக்கு நீ அங்க ரெஸ்ட் எடுத்துக்கலாம். ப்ளட் தேவைப்பட்டா உன்னை கூப்பிட்டுக்கறேன்.”

அவன் கூறியதைக் கேட்டதும் பதற்றமானவள், “இல்ல சார்… நான் வரல. எனக்கு ஊசி ன்னா பயம்”

“நீ என்ன சின்ன பிள்ளயா? ஊசிக்கு பயப்பட. சின்ன வயசுல அவ்வளவு ஆர்வமா இருப்ப இரத்தம் குடுக்கனும்னு. இப்ப என்னாச்சு?”

“இல்ல சார் … நான் வரல. ப்ளீஸ் என்னை கம்பெல் பண்ணாதீங்க” சொல்லும் போதே கண்களின் ஓரங்களில் கண்ணீர் துளிர்த்தது அவளுக்கு.

“டேய்… அவளுக்கு விருப்பமில்லைன்னா விடு. ஏற்கனவே சத்தே இல்லாம இருக்கறா. இவ எங்க இரத்தம் குடுக்க முடியும்.” மஞ்சுளாவும் கங்காவுக்கு சப்போர்ட் பண்ணவும் கடுப்பானவன்.

இரத்தம் கொடுக்க மேலும் ஒருவர் கிடைத்து விட்டதாக தகவல் வரவும், கங்காவை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்து விட்டு மருத்துவ மனைக்கு கிளம்பினான்.

செய்வதறியாது அவன் போன திசையை பார்த்தபடி நின்றாள் கங்கா.

10

வீடே விழாக் கோலம் பூண்டிருந்தது.  அபிக்கும் நந்தகுமார்க்கும் நிச்சயதார்த்தம் நடைபெற சில மணி நேரங்களே உள்ள நிலையில் வேர்க்க விறுவிறுக்க வேலை செய்து கொண்டிருந்தாள் கங்கா.

“ பூ வைக்க வர்றவங்களுக்கு கொடுக்க தனியா பூ எடுத்து வச்சிட்டியா?”

“எடுத்து வச்சிட்டேன் மா. அபிக்கும் தனியா நெருக்க கட்டி எடுத்து வச்சிருக்கேன்”

“குத்து விளக்கு, தாம்பாளம் எல்லாம் ஹால்ல எடுத்து வந்து வச்சிடு.”

“சரிம்மா, ஹால்ல பூ அலங்காரம் முடிக்கப் போறாங்க. ஜமுக்காளத்தை விரிச்சிட்டு, எடுத்து வந்து வச்சிடறேன்”

“அபிக்கு மேக்கப் பண்ணி நேரத்தில முடிக்க சொல்லு லேட் பண்ணிட போறாங்க”

“அதெல்லாம் முடிச்சிடுவாங்க நீங்க பதட்டப் படாம உட்காருங்க ம்மா”

“எல்லா வேலையும் நீயே செஞ்சி முடிச்சிட்ட… எனக்கு என்னம்மா பதட்டம்? பங்சன் நல்லபடியா முடிஞ்சு, வர்றவங்களை நல்லா கவனிச்சு அனுப்பனும். அவ்வளவு தான்”

“அதெல்லாம் நல்லபடியா முடியும் மா. கவலைப்படாதீங்க. நிச்சயதார்த்தம் முடிய நிறைய நேரம் ஆகும் அபி டயர்ட் ஆகிடுவா. நான் அவளுக்கு ஜூஸ் எடுத்துட்டு போறேன். உங்களுக்கும் கொண்டு வரேன்.”

அபிக்கும் மஞ்சுளாவுக்கும் பழச்சாறு பிழிந்து கொடுத்துவிட்டு, வெளியே வாழைமரம் கட்டவும், ஷாமியானா பந்தல் போடவும் வந்திருந்த ஆட்களை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த ஆகாஷுக்கும் பழச்சாறு கொண்டு போனாள்.

இரண்டு நாட்களாக அவளிடம் ஒன்றும் பேசாமல் மௌனமாக இருப்பவனை, என்ன செய்வது என்றே புரியவில்லை அவளுக்கு.  அவனிடம் சமாதானமாகப் பேச எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.

அவள் மீது அவனுக்கு கோபத்தை விட வருத்தமே அதிகமாக இருந்தது. சிறு குழந்தைக்கு என்று கூறியும் வர மறுத்து விட்டாளே என்ற ஆதங்கம் இருந்தது. அந்த குழந்தைக்கு நல்லபடியாக ஆபரேஷன் நடந்து சிறுவன் குணமானதில் சற்று சமாதானமாகியிருந்தான்.

பழச்சாறு நிறைந்த கோப்பையை ஏந்தியவாறு தன்னை நோக்கி நடந்து வருபவளைப் பார்த்தான். மாசு மருவற்ற முகமும் இதழ்களில் உறைந்திருந்த புன்னகையும்  ‘இவளிடம் கோபப்படக் கூட முடியுமா?’ என்ற எண்ணத்தை தோற்றுவித்தது.

காலை எழுந்ததில் இருந்து வெளியில் வேலையாக வெயிலில் நின்று கொண்டிருந்ததில் அவனும் வேர்த்து வடிந்து நின்றிருந்தான். அவனிடம் வந்து பழச்சாறை நீட்டியவள்,

“டாக்டர் சார், அன்னைக்கு எனக்கு காய்ச்சல் இருந்தது. அதனாலதான் நான் வரலைன்னு சொன்னேன். சாரி சார்… என்கிட்ட ஏன் பேச மாட்டேங்குறீங்க? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ” முகத்தைச் சுருக்கி பாவமாக கேட்டாள்.

தான் அவளிடம் பாராமுகமாக இருப்பது அவளை பாதிக்கின்றது என்பதை உணர்ந்தவனுக்குள் பெரும் கொண்டாட்டம். அவளை ஆழ்ந்து பார்த்தவன்,

“நான் உன் கிட்ட பேசலைன்னா என்ன? உனக்கு ஏன் கஷ்டமா இருக்கு கங்கா?”

“பின்ன, கஷ்டமா இருக்காதா? எனக்குன்னு இப்ப இருக்கறதே நீங்க அபி அம்மா மட்டும்தான். நீங்களும் பேசலைன்னா நான் என்ன செய்றது?”

தன்னையும் தன் குடும்பத்தையும் அவளுக்கு நெருக்கமாக நினைக்கிறாள் என்ற நினைவு அவனை வானத்தில் பறக்க வைத்தது. உள்ளத்தின் உவகை முகத்தில் தெரிய நகைத்தவன்,

“உன் மேல எனக்கு கோபமெல்லாம் இல்லம்மா… சின்ன வருத்தம்தான், இப்ப அதுவும் இல்ல ஓகே வா?”

அவளது கையில் காலி கோப்பையைக் கொடுத்தவன், “கங்கா, நான் இப்ப நந்து ஃபேமிலிய ரிசீவ் பண்ண போகனும். மாடியில போய் என் ஷர்ட் ஒன்னு எடுத்துட்டு வா” என்றான். அவன் போட்டிருந்த சட்டையைக் கழட்டி அவளிடம் கொடுத்தவன், “இதை துவைக்கப் போட்டு விடு” என்றான்.

அவன் தன்னிடம் பேசிவிட்ட மகிழ்ச்சியில் அவனுடைய சட்டையை கையில் வாங்கிக் கொண்டவள், துள்ளலுடன் அவனுக்கு மாற்றுடை எடுக்க ஓடினாள்.

சிறிது நேரத்தில் நந்தகுமார்,அவனது பெற்றோர், மற்றும் உறவினர்கள் புடைசூழ வந்திரங்கினான். அவர்களை வரவேற்று உபசரித்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்க வைப்பது வரை அனைத்து வேலைகளையும் முகத்தில் புன்னகை மாறாமல் செய்த கங்கா அங்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தாள்.

விழாவுக்கு வந்திருந்த நந்தகுமாரின் சித்தப்பா மகளான அருந்ததி, தனது பண்பான பேச்சாலும், இயல்பாக மற்றவரிடம் பழகும் இனிமையான குணத்தாலும் கங்காவைக் கவர்ந்தாள். வந்த சிறிது நேரத்தில் தன்னுடன் இனிமையாக பேசிப் பழகும் அருந்ததியை கங்காவுக்கு மிகவும் பிடித்துப் போனது.

சம வயதினராய் இருந்ததால் இருவரும் உடனடியாக நட்பு பாராட்டி பழகிக் கொண்டனர்.

கங்காவும் அருந்ததியும் சேர்ந்து நிச்சயதார்த்தத்திற்குத் தேவையான பொருட்களைக் கொண்டுவந்து ஹாலில் அடுக்கியவர்கள், அபியை அழைத்து வரச் சென்றனர்.

“அபி அண்ணி, எவ்வளவு அழகா இருக்கீங்க தெரியுமா? எங்க நந்து அண்ணா இன்னைக்கு மயங்க போறாங்க”

“ஆமாம் அருந்ததி,  நந்து அண்ணா அபிய பார்த்ததும் இன்னைக்கே கல்யாணத்தை வச்சிக்கலாம்னு சொல்லப் போறாங்க பாருங்களேன்”

வெட்கத்தில் சிவந்த அபி, “சும்மா இருங்க மச்சி” என்று சினுங்கியவள் அருந்ததியிடம்,

“வாங்க அருந்ததி, உங்க அம்மா அப்பா எல்லாம் நல்லா இருக்காங்களா?”

“அடேங்கப்பா இப்பவே புகுந்த வீட்டு ஆளுங்களை நலம் விசாரிக்கறதை பாரேன்!” என்று கிண்டலாகப் பேசிய கங்கா அபிக்கு திருஷ்டி பொட்டு ஒன்றை வைத்தாள்.

அபியும் அருந்ததியும் வெகுவாக வற்புறுத்தவே, தானும் அபி கொடுத்த புடவையை உடுத்தி தயாரானாள்.

பெண்ணை அழைத்து வரச் சொல்லி குரல் கேட்டதும் அபியை அழைத்து சென்று அமர வைத்தனர்.

நந்தகுமாரின் பார்வை அபியை விட்டு நகர மறுத்தது. சுபாஷ் தன் குழந்தைக்கு உடல் நலமில்லாததால் வரவில்லை. மற்ற நண்பர்கள் நந்துவை கலாய்த்து கொண்டிருக்க அந்த இடமே கலகலப்பாக இருந்தது.

தன்னவளை முதன் முதலில் சேலையில் பார்த்த ஆகாஷும் உறைந்து நின்றான். அவள் செல்லுமிடமெல்லாம் அவன் பார்வை அலைபாய்ந்தது.

ஆகாஷின் பார்வையைக் கண்ட கங்கா,’,என்ன இது இப்படி பார்க்குறாங்க’ என்று எண்ணியவள், கூடிய வரை அவன் பார்வையில் படாமல் ஒதுங்கி நின்றாள்.

மாப்பிள்ளை வீட்டினர் ஒவ்வொருவராக வந்து பூ வைத்து திருமணத்தை உறுதி செய்தனர்.

விருந்து உண்டு முடித்து அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இளையவர்கள் ஒரு புறமும், பெரியவர்கள் ஒரு புறமும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஆகாஷின் பெரியப்பா ஒருவர் மஞ்சுளாவிடம், “ அபிக்கு நல்ல இடமா அமைஞ்சிடுச்சி, அடுத்து ஆகாஷுக்கும் நல்ல பொண்ணா பார்த்து முடிச்சிட்டா உன் கடமை முடியும்மா” என்றார்.

“ஆமாம் மாமா. அடுத்து ஆகாஷுக்குதான் முடிக்கனும்.”

அப்பொழுது நந்தகுமாரின் அம்மா,“பொண்ணு ஏதும் பார்த்து வச்சிருக்கீங்களா ஆகாஷ்க்கு?  எங்க அருந்ததிக்கும் மாப்பிள்ளை  பார்க்குறோம். ஆகாஷுக்குன்னா கண்ண மூடிட்டு குடுக்கலாம். உங்களுக்கு விருப்பம் இருந்தால் ஜாதகம் பரிமாறிக்கலாமே!” என்றார்.

முகத்தில் எதிர்பார்ப்பு மின்ன ஆசையாக கேட்பவரிடம் எப்படி மறுத்து பேசுவது என்று புரியாமல் திகைத்துப் போனார் மஞ்சுளா.

ஆகாஷின் பெயர் அடிபடவும் இவர்களது பேச்சை கவனித்த கங்காவின் முகம் ஒரு நொடி சுருங்கி பின் இயல்பானது.  ஆகாஷும் இவர்களது பேச்சை கவனித்துக் கொண்டுதான் இருந்தான். மஞ்சுளா ஏதாவது சொல்வார் என்று பார்த்தவன், அவரிடம் இருந்து எந்த பதிலும் வராததால், எழுந்து அவர்கள் அருகே சென்று,

“இல்ல ஆண்ட்டி, நான் ஏற்கனவே ஒரு பொண்ண விரும்பறேன். அவளைத்தான் கல்யாணம் செய்ய ஆசைப்படறேன்” என்றான்.

சற்று ஏமாற்றமாக இருந்தாலும், உடனே சமாளித்துக் கொண்டவர் உண்மையான சந்தோஷத்துடன், “யார் ஆகாஷ் அந்த லக்கி கேர்ல்?” என்றார்.

அங்கு சூழ்ந்திருந்த ஆகாஷின் உறவினர்களும், நண்பர்களும் ஒருவித எதிர்பார்ப்புடன் ஆகாஷை பார்த்திருக்க,  மெல்ல நடந்து சென்று கங்காவின் கரத்தைப் பற்றி அவளை எழுப்பியவன், அவளது மிரண்ட விழிகளைக் கூர்ந்து பார்த்தவாறு, “கங்காவதான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன் ஆண்ட்டி”  என்று கூறினான்.

அதிர்ச்சியில் வாயடைத்துப் போயிருந்த கங்காவுக்கு பேச்சே எழும்பவில்லை. விழியகலாமல் அவனைப் பார்த்திருந்தவள், அனைவரது வாழ்த்துகளையும் கேட்டு சுயநினைவுக்கு வந்தாள்.

அத்தனை பேர் நிறைந்த சபையில் தன் காதலைக் கூறியவன், பூரிப்பின் உச்சத்தில் அனைவரது வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொண்டான். அபியும் அருந்ததியும் கங்காவுக்கு வாழ்த்து கூறினர்.

அவ்வளவு சந்தோஷமான தருணத்தில் திளைத்திருக்கும் ஆகாஷைப் பார்த்தவள், தான் இப்போது ஏதாவது மறுத்துக் கூறினால் அது ஆகாஷுக்கு தலையிறக்கமாகப் போய்விடக் கூடும் என்று கருதி, அமைதியாக வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டாள்.

விழா நல்லபடியாக முடிந்து அனைவரும் கிளம்பிய பின், யார் முகத்தையும் ஏறிட்டு பார்க்காமல் அமைதியாக தனதறைக்குள் சென்று முடங்கிக் கொண்டவள் மனம், வேதனை தாளாமல் வெதும்பி வருந்தியது. கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்து தலையணையை நனைத்தது.

மனம் நிறைய ஆசையிருந்தும், தன் மனம் கவர்ந்தவன் தன்னை விரும்பியிருந்தும் அதனை மறுக்கும் நிலையில் தன்னை வைத்த விதியை அறவே வெறுத்தாள்.  அவனிடம், தனது காதலை மறைத்து, பொய்யாக அவனைப் பிடிக்கவில்லை என்று கூறும் தைரியத்தைக் கொடு என்று கடவுளை வேண்டிக் கொண்டாள்.

விடிய விடிய உறக்கம் வராமல் விழித்திருந்தவள், மனம் தன் குடும்பத்தை எண்ணி ஏங்கியது. ‘அவர்களுடனே தானும் இறந்து போயிருக்கலாம். தனக்கு வாழ்க்கை இன்னும் என்னென்ன சோதனைகளை வைத்திருக்கிறதோ தெரியவில்லை’ என்று அவள் மனம் மருகியது.

அங்கே ஆகாஷோ தன்னவளிடம் தனது காதலைக் கூறியது மட்டுமல்லாமல், அத்தனை பேர் நிறைந்த சபையில் திருமணத்தையும் உறுதி செய்து விட்ட திருப்தியில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.

கங்கா மறுத்து எதுவும் கூறாத காரணத்தால் அவளுக்கும் இதில் விருப்பம் என்றே அனைவரும் நினைத்திருக்க, கங்காவோ இவர்களைப் பிரிந்து செல்வதற்கான வழிகளை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

***********

மறுநாள் காலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில், அவளைப் பள்ளியில் இறக்கி விட்ட ஆகாஷ், புன்னகையுடன் அவளைப் பார்த்து தலையசைத்து விட்டு, மருத்துவமனை சென்றான்.

அங்கு முக்கியமான மருத்துவ கலந்தாய்வுக்கு இவனைச் செல்லும்படி பணிக்க, மருத்துவமனையில் இருந்து கலந்தாய்வு நடைபெறும் ஹோட்டலுக்குச் சென்றான். கலந்தாய்வை வெற்றிகரமாக முடித்து விட்டு, அனைவருக்கும் அங்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்த பஃப்பே முறையிலான விருந்தில் கலந்து கொண்டான்.

தேவையான உணவுகளைத் தட்டில் வைத்துக் கொண்டவன், அங்கு நீச்சல் குளத்தையொட்டி சீராக அமைக்கப்பட்டிருந்த புல்வெளியின் இடையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து, சக மருத்துவர்களுடன் உணவருந்திக் கொண்டே பேசிக் கொண்டிருந்தான்.

அவன் அமர்ந்து இருந்த இடத்திற்கு எதிர்புறம்  கண்ணாடித் தடுப்பினாலான அறைகள் நீச்சல் குளத்தைப் பார்க்கும் வண்ணம் கட்டப்பட்டிருந்தது. சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தவனின் விழிகளில் எதிர்புறம் இருந்த அறையில் கங்காவும், அவளுடன் இருந்த மூவரும் பட்டனர்.

ஆகாஷுக்கு ஆச்சர்யத்தில் புருவங்கள் மேலேறின. ‘இந்த இடத்தில் கங்காவுக்கு என்ன வேலை, அவளுடன் இருப்பவர்கள் யார்? ஒன்றும் புரியவில்லை அவனுக்கு.

அவளுடன் பேசிக் கொண்டிருக்கும் பெரியவர் அவளது இரு கைகளையும் பிடித்து முகத்தில் வைத்து குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தார். அவளும் அழுது கொண்டிருப்பது அவன் கண்களுக்கு தெரிந்தது.

அவள் கால்களில் விழப்போன பெரியவரைத் தடுத்தவள், அவரது கரங்களைப் பிடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள். அவள் அருகில் நின்றிருந்த இருவரில் ஒருவர் அவளது தலையை ஆதரவாகத் தடவுவதும், ஒருவர் அவளுக்கு குடிக்கத் தண்ணீர் தருவதையும் பார்த்தவன் மிகவும் குழம்பிப் போனான்.

‘யார் இவர்கள்? அந்தப் பெரியவர் ஏன் கங்காவின் கால்களில் விழ வேண்டும்? பள்ளியில் இருக்க வேண்டியவள் இந்த நேரத்தில் இங்கு எதற்கு வந்தாள்?’ விடையறியாத பல கேள்விகள் அவனுக்குள்.

அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் அவர்களுடன் கிளம்பி காரில் ஏறிச் சென்று விட்டாள். அவனும் உடனே அனைவரிடமும்   விடைபெற்று வீட்டிற்கு வந்தவன் நேராக ஹோமில் இருந்த அவளது அறைக்குச் சென்றான்.

“இப்ப எங்க போய்ட்டு வர?”

அவனது முகத்தில் இருந்த பாவனையை புரிந்து கொள்ள முடியாமல் வாய் தானாக பதில் கூறியது. “ஸ்கூல்க்குதான் ஏன் கேட்கறீங்க?”

புருவங்கள் நெறிபட அவளைக் கூர்ந்து பார்த்தவன், “எப்ப இருந்து பொய் சொல்ல கத்துகிட்ட கங்கா? இப்ப உன்னை ஹோட்டல் லீ மெரிடியன்ல பார்த்தேன். அங்க யார் கூட பேசிகிட்டு இருந்த? உன் கால்ல விழப் போறாரு அந்தப் பெரியவர். யார் அவர்?”

இவர்களின் பேச்சு சத்தம் கேட்டு உள்ளே வந்தனர் மஞ்சுளாவும் அபியும்.

“என்ன ஆகாஷ்? என்னப் பிரச்சனை?”

“ம்ப்ச்…  என்ன பிரச்சனைன்னு இதோ நிக்குறாங்களே இந்த மேடம்தான் சொல்லனும்”

அவ்வளவு எளிதாக யாரிடமும்  கோபப்பட்டு பேசாத தன் அண்ணன், இப்போது கங்காவிடம் கோபப் படுவதற்கான காரணம் புரியாமல் அபி,  “அண்ணா, எதுவா இருந்தாலும் கோபப் படாம பேசுண்ணா.”

ஆழ்ந்து பெருமூச்சை வெளியிட்டவன், “கோபமெல்லாம் இல்ல அபி, இவள ஸ்கூல்ல இறக்கி விட்டுட்டு நான் ஒரு கான்ஃபெரன்ஸ்காக லீ மெரிடியன் போயிருந்தேன். அங்க இவ கூட மூனு பேர் பேசிட்டு இருந்தாங்க. அதுல ரொம்ப வயசானவரா இருந்த பெரியவர் அழுதுகிட்டே இவ கால்ல விழப் போறார். இவளும் அழுதுகிட்டு இருந்தா.

நான் அவ கிட்ட போகலாம்னு நினைக்கறதுகுள்ள எல்லாரும் கிளம்பிட்டாங்க. அதான் வீட்டுக்கு வந்து கேட்டா இவ ஸ்கூல்க்கு போயிருந்தேன்னு என் கிட்ட பொய் சொல்றா.”

பேசிக் கொண்டிருந்தவன் விழிகள் அறையின் மூலையில் அழகாக பேக் செய்து வைக்கப் பட்டிருந்த அவளது பேக்கை கண்டது. அவளது அலமாரியில் இருந்த பொருட்கள் அனைத்தும் பேக் செய்யப்பட்டு இருந்தது.

விழிகள் இடுங்க அவளைக் கண்டவன், “சோ, மேடம் எங்கயோ கிளம்பிட்டீங்க… எங்ககிட்ட சொல்லிட்டு போகலாம்னு இருக்கீங்களா? இல்ல சொல்லாம போக ப்ளான் போடுறீங்களா?” கோபமும் நக்கலும் கலந்து வந்தது அவனது கேள்வி.

அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் கண்களில் கண்ணீர் வழிய நின்றிருந்தாள் கங்கா.

“மச்சி என்னது இது? ட்ரெஸ்லாம் ஏன் பேக் பண்ணி வச்சிருக்கீங்க? பதில் சொல்லுங்க.”

மஞ்சுளாவும், “ என்னம்மா… என்னடா பிரச்சனை உனக்கு? ஏன் எங்கள விட்டு போக முடிவு பண்ணியிருக்க?”என்று கேட்க.

சற்று நேரம் மனதை திடப் படுத்திக் கொண்டவள் தலையை மெதுவாக நிமிர்ந்து பார்த்து கண்களில் கண்ணீர் வழிய, “ எ…எனக்கு டாக்டர் சாரை க…க…கல்யாணம் பண்ணிக்க இ…ஷ்டம் இல்ல”

சொல்லி விட்டாள்… இமைக்காமல் கூர்ந்த பார்வையுடன் விரைத்து நிற்கும் ஆகாஷையும், வாயில் கை வைத்து மூடி கண்கள் அதிர்ச்சியால் விரிந்திருக்க விழியோரத்தில் நீர்க்கசிய நின்றிருந்த அபியையும், குழப்பமான முகத்துடன் நின்றிருந்த மஞ்சுளாவையும் பார்ப்பதைத் தவிர்த்தவள்,

“எ…எ…என்னால டா…டா…க்டர் சார க…க…கல்யாணம் பண்ணிக்க முடியாது.  எனக்கு அ…அவர பிடிக்கலை. அதனாலதான் இங்க இருந்து போயிடலாம்னு நினைச்சேன்.”

.இவ்வளவு நேரமாகப் பேசும் போது தன் கண்களைச் சந்திக்க மறுக்கும் கங்காவைப் பார்த்தவன் அவள் முகத்தை தன்புறம் திருப்பி,

“என் முகத்தை பார்த்து சொல்லு கங்கா… உங்களை நான் விரும்பலைன்னு என் கண்ணைப் பார்த்து சொல்லு”

கண்களில் கண்ணீர் ஆறாக ஓட திடமாக அவனை நிமிர்ந்து பார்த்தவள், “எனக்கு உங்களை பிடிக்கல, என்னால உங்களை கல்யாணம் பண்ண முடியாது” என்றாள்.

கண்மண் தெரியாத கோபம் வந்தது அவனுக்கு. எங்கே அவளை அடித்து விடுவோமோ என்று பல்லைக் கடித்து, தலையைக் கோதி கோபத்தை அடக்கியவன், விடிவிடுவென்று சென்று அறையின் மூலையில் இருந்த அவளது பேக்கை எடுத்து வந்தான். அதனைத் திறந்து தலைகீழாகக் கொட்டினான்.

அந்த பேக்கில் இருந்து அவளது உடமைகளோடு சேர்ந்து ஆகாஷ் உபயோகப்படுத்திய தேநீர் கோப்பை, கைக்குட்டை, அவன் ஏதோ எழுதி கசக்கி எறிந்திருந்த பேப்பர், அவனது வியர்வை வாசம் வீசும் சட்டை, இறுதியாக அவனது ஸ்டெதஸ்கோப் அனைத்தும் வெளியே வந்து விழுந்தது.

“இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் கங்கா?”

அப்பொருட்களை எல்லாம் பார்த்து வாயடைத்து போய் நின்றிருந்தனர் அபியும் மஞ்சுளாவும்.

அவன் திடீரென்று அவள் சேர்த்து வைத்த அத்தனைப் பொருட்களையும் கீழே கொட்டவும் அதிர்ந்து போனவள்,  அவனுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும் என்றெண்ணி மலைத்துப் போனாள்.

“என்ன பார்க்குற? இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்னா? அன்னைக்கு உன்கிட்ட கழட்டிக் கொடுத்த சட்டைய துவைக்கப் போடாம உன் ரூம்க்கு எடுத்துட்டு போறத பார்த்தேன். அங்க எதுக்கு எடுத்துட்டு போறன்னு பார்க்க உன் பின்னாடி வந்தேன். நான் வந்தத பார்க்காம நீ அந்த சட்டைய போட்டு கண்ணாடி முன்ன நின்னு ரசிச்சதையும் பார்த்தேன்.”

“நீயும் என்னை விரும்புறன்னு அப்பதான் எனக்குத் தெரிஞ்சது. உனக்கும் என்னைப் பிடிக்கும்ன்ற தால்தான் அன்னைக்கு அத்தனை பேர் முன்னாடி தைரியமா உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்னேன்.”

“இப்ப என்ன பார்த்து  சொல்லு, உனக்கு என்னை  பிடிக்கலைன்னு” அவன் முகத்தில் அடக்கப்பட்ட கோபம்.

கண்களில் வழிந்த நீரோடு  ஒன்றும் பேசாமல் கீழே மண்டியிட்டு அமர்ந்து, அவனது பொருட்களை மீண்டும் பையினுள் எடுத்து வைத்தாள்.

அவளது முழங்கையைப் பற்றித் தூக்கி நிறுத்தியவன், “ பதில் சொல்லுடி… அதெல்லாம் உயிரில்லாத ஜடம் டி… உயிரும் உணர்வுமா உன் முன்னாடி நிக்குறேனே எனக்கு பதில் சொல்லு

“உனக்கு என்ன பிரச்சனைன்னாலும் என்னால சரி பண்ண முடியும் கங்கா. நீ என் மேலே உயிரே வச்சிருக்கன்னு எனக்கு தெரியும். எதுவா இருந்தாலும் சொல்லு. நீ எனக்கு வேணும் கங்கா…”.

கண்களின் ஓரம் நீர்க்கசிய கேட்டவனைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டு அழுதவள், “ என்னை எதுவும் கேட்காதீங்க… ப்ளீஸ்… நான் உங்களுக்கு வேணாம்…என்னை இப்படியே விட்டுடுங்க…”

“அப்படியெல்லாம் விட முடியாது கங்கா. எட்டு வருஷமா எனக்குள்ள இருக்கற நேசம் இது. உன்னைத் தேடி இரண்டு வருஷமா அலைஞ்சவன்டி நான். கடவுளே உன்னை என் கண்ணுல காட்டினதா நினைச்சிட்டு இருக்கேன். எனக்கு பதில் சொல்லாம உன்னை நான் விடமாட்டேன்.”

“என்னம்மா உனக்கு பிரச்சனை? என் புள்ள எல்லாம் சரி பண்ணிடுவான். அவன் உன் மேல உயிரே வச்சிருக்கான் கங்கா. சொல்லும்மா…”

“மச்சி நாங்க எல்லாரும் உங்களுக்கு இருக்கிறோம். எங்கள விட்டு போக உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சி? என் அண்ணன் பாவம் மச்சி. உங்கள நல்லா பார்த்துக்கும். எதா இருந்தாலும் அண்ணன்ட்ட சொல்லுங்க” என்று தேம்பினாள் அபி.

“இவ்வளவு பேர் கேட்கறோம் இல்ல சொல்லுடி” அவளைப்  பிடித்து உலுக்கியவன்,

“நான் சொல்றேன் தம்பி…” என்று தழுதழுத்த குரலைக் கேட்டு திரும்பினான்.

வாசலில் நின்றிருந்தனர் சுந்தரம், சுகுமாறன், அந்த பெரியவர் மூவரும். அவர்களைப் பார்த்தவன், இவர்களைத்தானே ஹோட்டலில் பார்த்தோம் என்று எண்ணிக்கொண்டே, “நீங்க யாரு?” என்றான்.

அமைதியாக உள்ளே வந்தனர் மூவரும். அந்தப் பெரியவர் கரகரப்பான குரலில், “ என் பெயர் காசிராஜன். கங்காவின் தாத்தா…” என்றார்.

11

கங்காவைத் தன்னுடன் அழைத்துச் சென்று விடலாம் என்ற நோக்கத்துடன் ஆகாஷின் வீட்டுக்கு வந்தார் காசிராஜன். உள்ளே நடைபெற்றுக் கொண்டிருந்த காரசாரமான விவாதத்தில் பேத்தி படும் துயரைக் கண்டவர் மனம் பதறி உண்மையைக் கூற வந்தார்.

இதனால் தான் சிறைக்குச் சென்றாலும் பரவாயில்லை என்றுதான் அவருக்குத் தோன்றியது.

“வேணாம் தாத்தா… எதுவும் சொல்லாதீங்க…” என்று கெஞ்சிய கங்காவை ஆதரவாக அணைத்துக் கொண்டவர்,

“என் பாவங்களை எந்த கங்கையில் மூழ்கினாலும் கரைக்க முடியாதும்மா. கடைசி காலம் வரை உன் முகத்தைப் பார்த்துகிட்டு இருந்தாலே எனக்கு போதும். என்னைச் சொல்ல விடு. இதனால் எனக்கு என்ன தண்டனை கிடைக்குமென்றாலும் பரவாயில்லை” என்றவர், எழுபத்தைந்து வருடங்களுக்கு முன்பு நடந்ததிலிருந்து கூறத் தொடங்கினார்…

உடன்குடியுடன் சேர்ந்த குலசேகரப்பட்டினம் தான் கங்காவின் பூர்வீகம். அந்த ஊரின் பெரும் பகுதி நிலத்தை தன்வசம் வைத்துக் கொண்டு, ஊரின் முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடிய அளவு செல்வாக்கான மனிதர்  சந்தனபாண்டியன்.  அவரது இல்லத்தரசி லஷ்மி.

ஊர் மக்களுக்கு பல நல்ல காரியங்களைச் செய்திருந்தாலும், சந்தனபாண்டியன் பெண்கள்  விஷயத்தில் மிக மோசமானவர்.  கிராமத்து சொலவடை ஒன்று உண்டு,  “கிளி போல பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு போல ____” என்று. இவர் சுத்தி இருந்த அத்தனை ஊர்களிலும் ஊருக்கொரு குரங்கு வைத்திருந்தார்.

அவர் முகத்தின் முன் புகழ்பவர்கள் கூட அவருக்கு பின் இகழ்ந்துதான் பேசினர். லஷ்மி பெயருக்கு ஏற்றவாறு மிகவும் சாந்தமானவர். கணவரது  தவறுகள் தெரிந்தாலும் தட்டிக் கேட்க முடியாத கோழை அவர். கணவரை மீறி எதையும் செய்யும் தைரியமின்றி அனைத்தையும் தனக்குள்ளே போட்டுப் புழுங்கும் சாதாரணப் பெண்மணி அவர்.

திருமணமாகிப் பல வருடங்கள் கழித்துதான் அவர்களுக்குக் குழந்தை பிறந்தது. தன் மகனுக்கு தர்ம ராஜன் எனப் பெயரிட்டு வாழ்வின் ஆதாரம் இனி தன் மகனே என்று எண்ணி வளர்த்தார். அவன் தந்தையிடம் இல்லாத ஒழுக்கத்தையும் நற்பண்புகளையும்  தன் மகனுக்குத் தாய்பாலுடன் சேர்த்துப் புகட்டினார்.

தர்ம ராஜனுக்கு ஒரு வயதாகும் போது, அவ்வூரில் உள்ள கோவிலுக்குச் சென்று வரலாம் என்று குழந்தையுடன் சென்றார் லஷ்மி. குழந்தையின் பெயரில் அர்ச்சனையை முடித்துவிட்டு வெளியே வந்தவரின் கால்களில் வந்து விழுந்தாள் ஒரு பெண்.

“என் வாழ்க்கையே நாசமாப் போச்சு ம்மா… எனக்கு ஒரு வழிய சொல்லுங்கம்மா…” என்று கதறி அழுதாள்.

பதறிய லஷ்மி, “,அம்மாடி, என்ன ஆச்சும்மா? என் கால்ல ஏன் வந்து விழற.”

அவள் கூறிய விஷயங்கள் லஷ்மியை அதிர்ச்சியின் உச்சத்திற்கே அழைத்துச் சென்றது. இதுவரை கணவனின் லீலா வினோதங்கள் தெரியாதவரல்ல; இருந்தாலும் வலுக்கட்டாயமாக யார் வாழ்க்கையையும்  அழித்ததில்லை, என்று எண்ணியிருக்க ; சிறு பெண் என்றும் பாராது , இவளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட கணவனை வெட்டிப் போடும் வெறி எழுந்தது.

கையில் குழந்தையோடு தானும், வயிற்றில் குழந்தையோடு இவளும் இருக்கும் நிலையை எண்ணிக் கண்ணீர் வடித்தார்.  அவளைக் கையோடு அழைத்துச் சென்று அவரிடம் நியாயம் கேட்க, திமிரான பதிலே கிடைத்தது.

“ஏய்… என் கூட இருந்தவளுக்கெல்லாம் நான் தாலி கட்டனும்னா, இந்த வீட்ல இடமே பத்தாதுடி. அப்புறம் நீயும் உன் பிள்ளையும் தெருவுக்குத்தான் போகனும்.”

“பெண் பாவம் பொல்லாததுங்க. அந்தப் பொண்ணு வயித்துல உங்க வாரிசு வளருதுங்க”

“அட ச்சீ… எவடி இவ, என் வாரிசு இதோ இருக்கானே என் புள்ள தர்மன், இவன்தான்டி. ஒரு நேரம் படுத்து எந்திரிச்ச சாதி கெட்டவ பெத்ததெல்லாம்  என் வாரிசாகுமா?”

“போய், அஞ்சோ பத்தோ  காசக் குடுத்து அவள பத்தி விடற வழியப் பாருடி. பெருசா எனக்கு புத்தி சொல்ல வந்துட்டா…”

மேலும் வாதாடிய லஷ்மிக்கு கிடைத்தது அடியும் உதையும் மட்டுமே. அது மட்டுமில்லாமல் அந்தப் பெண்ணையும் தகாத வார்த்தைகள் கூறி அடித்து விரட்டினார் சந்தன பாண்டியன்.

அந்தப் பெண் வயிற்று பாட்டுக்கு ஆடுகள் மேய்க்கும் பெண்.  அவள் பெயர் சந்திரா. தாய் தந்தையை இழந்த அவளுக்கு சொந்தம் என்று சொல்லிக் கொள்ள ஒரு பாட்டி மட்டுமே. ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை அந்த வழியாகச் சென்ற சந்தன பாண்டியன் பார்த்து ஆசை கொண்டு,  அவள் வாழ்க்கையை நாசப்படுத்தியது மட்டுமல்லாமல், நடந்ததை யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டியும் சென்றார்.

வயிற்றில் குழந்தை வளரவும் செய்வதறியாது தவித்தவள், லஷ்மியைத் தஞ்சமடைந்திருந்தாள். மானத்தையும் இழந்து, வாழ்க்கையையும் இழந்து, வயிற்றில் பிள்ளையோடு அடித்து விரட்டப்பட்ட சந்திரா,  இந்த வாழ்க்கையை முடித்துக் கொள்வோம் என்று கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளப் போனாள்.

கணவரிடம் ஆனமட்டும் போராடிப் பார்த்துவிட்டு, அந்தப் பெண்ணின் வாழ்வாதாரத்திற்காவது  ஏதேனும் செய்வோம் என்று, சந்திராவைத் தேடி வந்த லஷ்மி பார்த்தது, ஊர் கிணற்றில் விழத் தயாராக நின்றிருந்த சந்திராவைத்தான்.

ஓடிச் சென்று அவளைத் தடுத்த லஷ்மி, “என்ன காாரியம் செய்யப் போற சந்திரா? உன் வயித்துல வளர்ற குழந்தை என்ன பாவம் பண்ணுச்சி? அதுவும் உன்னோட சேர்ந்து அழியனுமா?”

கதறி அழுத சந்திரா, “நான் பாவப்பட்ட ஜென்மம் ம்மா… பெத்தவங்க இல்லாம அநாதையா, கால் வயித்து கஞ்சிக்கு கஷ்டப் பட்டாலும், மானத்தோட இருந்தேன். இப்ப கழுத்துல தாலியேறாம, வயித்துல பிள்ளையோட மானம் போய் வாழறதுக்கு சாகறதே மேல்”

“ஆனா, என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்குன உங்க புருஷனோட வம்சமே நல்லாயிருக்காது. அவர் பெத்த பொண்ணுக்கு இப்படி ஒரு கொடுமை நடந்தா சும்மா இருப்பாரா?”

கையைக் கூப்பி கண்ணீர் விட்டு அழுத லஷ்மி, “ஐயோ… சாபம் விடாதம்மா… உன் கால்ல விழுந்து கேட்குறேன். உன்னையும் உன் பிள்ளையையும் நான் பார்த்துக்கறேன். ஏற்கனவே யார் விட்ட சாபமோ எங்க வம்சத்தில இதுவரை பெண்பிள்ளையே பிறந்ததில்லை. இன்னோரு சாபத்தைக் குடும்பம் தாங்காதும்மா” என்று கதறினார்.

ஒருவாறாக சந்திராவை சமாதானப்படுத்தி அழைத்து வந்த லஷ்மி, அவளது பாட்டியுடன் அந்த ஊரின் ஒதுக்குப் புறமாக இருந்த வீட்டில் குடிவைத்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தார்.

பிரசவத்தின் போது சந்திரா இறந்துவிட, குழந்தையை பாட்டியின் பொறுப்பில் விட்டு வளர்த்தார். அந்தக் குழந்தைக்கு காசிராஜன் எனப் பெயரிட்டார். தனது மகனிடமும் காசியை உனது தம்பி என்று கூறி, அவனை நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி வளர்த்தார்.

இவையனைத்தும் ஊர்மக்களுக்கு அரசல் புரசலாகத் தெரியவரவும், காசிராஜனை இகழ்ந்து பேச ஆரம்பித்தனர். விபரம் அறியாத வயதில் இவையெல்லாம் புரியாவிட்டாலும், சற்று விபரம் வந்த பிறகு பெரிதும் அவமானமாக உணர்ந்தார் காசி.

இதற்கிடையில் காசியைப் பார்த்துக் கொண்ட பாட்டியும் இறந்துவிட தனித்து இருந்த காசியின் எண்ணங்களில் சாத்தான் வாசம் செய்யத் தொடங்கினான்.

தர்ம ராஜன், தம்பி என்று காசியின் மீது பாசமாக இருந்தாலும், காசிக்கு தர்மனின் மீது பெரும் வஞ்சம் இருந்தது. ஒரே தகப்பனுக்குப் பிறந்திருந்தும், தர்மனுக்கு கிடைத்த மாளிகை வாசமும் , பெரிய வீட்டுப் பையன் என்ற அந்தஸ்தும், வசதி வாய்ப்புகளும் தனக்குக் கிடைக்காததில் உள்ளுக்குள் பழிவெறி தாண்டவமாடியது.

பிள்ளைகள் இருவரும் வளர்ந்து வாலிபம் அடைந்தனர். லஷ்மி சந்திராவின் குழந்தையை வளர்க்கப் பணம் கொடுப்பது சந்தன பாண்டியனுக்கும் தெரியும். தன்னைத் தொந்தரவு செய்யாத வரை அவர் எதையும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

ஆனால் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும்,  லஷ்மியை நம்ப முடியாமல், சீர் கெட்டு வரும் தன் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, தனது அனைத்து சொத்துக்களுக்கும் ஏகபோக வாரிசு தர்மனே என்று, உயில் எழுதி வைத்திருந்தார்.

சந்தன பாண்டியனின் மறைவிற்குப் பிறகு வெளிவந்த இந்த உயில், காசியை மேலும் கடுப்பேற்றியது. லஷ்மி தனது தாய் வீட்டு சீதனமாக வந்த சொத்துகளை இரண்டு பாகமாகப் பிரித்து தர்மனுக்கும் காசிக்கும் எழுதி வைத்தார்.

காசியையும் தங்கள் வீட்டுக்கே அழைத்து வந்து, இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தர்மரிடம் கேட்டுக் கொண்டார் லஷ்மி.

இருவருக்கும் பெண் பார்க்கும் போது மீண்டும் சிக்கல் துவங்கியது. தர்மனுக்கு பெண் கொடுக்க முன் வந்தவர்கள் காசிக்குத் தரத் தயங்கினர். இதனால் வேற்று இனத்தைச் சேர்ந்த  ஏழைப் பெண்ணான விஜயாவை காசிக்கும், தங்கள் இனத்துப் பெண்ணான புவனாவை தர்மனுக்கும் மணமுடித்து வைத்தார் லஷ்மி.

இதன் காரணமாகவும் தர்மனின் மீதான காசியின் துவேஷம் அதிகரித்தது.

தர்மனுக்கு மூன்று ஆண் பிள்ளைகளும், காசிக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் பிறந்தன. தன் வம்சத்தில் பெண் வாரிசு அற்றுப் போனதே என்ற கவலையிலேயே லஷ்மியின் உயிர் பிரிந்தது.

தர்மன் காசியைத் தனது வலது கை போல எண்ணியிருந்தார். தம்பியைக் கேட்காமல் எதுவும் செய்வதில்லை அவர். ஊராரின் பேச்சுக்கள் சற்று அடங்கியிருந்தாலும், தர்மனுக்குக் கிடைப்பது போல மதிப்பும் மரியாதையும் காசிக்குக் கிடைப்பதில்லை.

காசி கொஞ்சம் கொஞ்சமாக, அண்ணனை ஏமாற்றி பெருவாரியான சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றி இருந்தார். வெகுளியாக இருந்த தர்மரும் தன் தம்பி போடச் சொன்ன இடத்திலெல்லாம் கையெழுத்தைப் போட்டுக் கொடுத்தார்.

கடைசியாக பரம்பரை பரம்பரையாக குடி இருந்த பெரிய மாளிகையும் தர்மனின் கையைவிட்டு காசியின் புறம் சென்றபோது  இருவரது வாரிசுகளும் வாலிபப் பருவத்தை அடைந்து திருமணம் முடித்திருந்தனர்.

தர்மனின்  மூத்த பிள்ளைக்கு வெகு காலமாக குழந்தையில்லாமல் இருந்து, பிறகு பிறந்தவள் தான் கங்கா. மற்ற அனைவருக்கும் ஆண் வாரிசுகளே.

பல தலைமுறைகளுக்குப் பிறகு பிறந்த ஒற்றைப் பெண் வாரிசு கங்கா. அவளைத் தரையில் விடாமல் தாங்கினர் அனைவரும். வீட்டின் அனைவருக்கும் செல்ல இளவரசியாக வளர்ந்தாள்.

கங்காவுக்கு ஐந்து வயதாகும் போதுதான், தனது தம்பி தன்னை ஏமாற்றி அனைத்துச் சொத்துகளையும், அவனது பெயருக்கு மாற்றிக் கொண்ட விபரம் தர்மருக்குத் தெரிய வந்தது. தனது தம்பி தன்னை ஏமாற்றி விட்ட அதிர்ச்சியில் அவரது உயிரும் பிரிந்தது.

அதன் பிறகு தயவு தாட்சண்யம் இல்லாமல், தர்மரின் வாரிசுகள் அனைவரையும் வீட்டை விட்டு வெளியேற்றினார் காசிராஜன். சொந்த மண்ணில் சொத்துக்கள் இல்லாமல்,  ஏமாந்து போன அவமானத்தோடு வாழ முடியாமல், ஊரை விட்டு வெளியேறினர் கங்காவின் அப்பா சித்தப்பா அனைவரும்.

எங்களது தந்தையை ஏமாற்றி பிடுங்கியது இந்த சொத்துகள் அனைத்தும்.  எல்லா சொத்துகளுக்கும் நேர் வாரிசு எங்கள் தந்தை தர்மரே. காசி முறையற்று பிறந்தவர் என்று கோர்ட்டில் கேஸ் ஒன்றைப் போட்டுவிட்டு, வேலூர் வந்து சேர்ந்தனர்.

அண்ணன் தம்பிகள் மூவரும்  மளிகைக் கடை ஒன்றை வைத்து  கடுமையாக உழைத்தனர். பின்னர் வேலூரில் ஆகாஷ் தங்கியிருந்த வீட்டுக்கு எதிர் வீட்டை வாங்கி அதில் குடியேறினர்.

பழைய பிரச்சனைகளைச் சற்று மறந்து, சந்தோஷமாக சென்று கொண்டிருந்த அவர்களது வாழ்வில் மேலும் சந்தோஷத் திருப்பமாக,  கோர்ட்டில் அவர்கள் போட்டிருந்த கேஸ் அவர்கள் புறம் தீர்ப்பாகியது.

இனி எந்தக் கஷ்டமும் இல்லை, கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக நடைபெற்ற வழக்கு சாதகமாக முடிந்தது, இனி நம்முடைய பூர்வீக வீட்டில் வசிக்கலாம் என்று சந்தோஷமாக எண்ணினர்.

ஆனால் காசியோ வெறியின் உச்சத்தில் இருந்தார். வழக்கில் தோற்றுச் சொத்துக்களை இழந்தது மட்டுமில்லாமல், முறையற்று பிறந்தவர் என்று நிரூபணமானதில் அனைவரையும் கொன்று விடும் அளவு ஆங்காரத்தோடு இருந்தார்.

தர்மராஜன் இருந்த காலத்தில் இருந்து அந்த வீட்டில் கணக்குப்பிள்ளையாக இருந்தவர் வரதன் என்பவர். தர்மரிடம் விசுவாசமாக இருந்தவர், அவரது பிள்ளைகள் வஞ்சிக்கப் பட்டதை எண்ணி மிகவும் வருந்தியவர் அவர்.

பெரிய வீட்டில் காசி செய்யும் அத்தனை செயல்களையும் கங்காவின் அப்பாவுக்குச் சொல்வதும்,  வழக்குக்கு தேவையான ஆவனங்களை காசிக்குத் தெரியாமல் எடுத்துத் தருவதுமாக உதவியாக இருந்தார். வழக்கில் வென்றதும் வேலூருக்கு கங்காவின் பெற்றோர்களைப் பார்க்க வந்தார்  வரதன்.

“ஐயா, வழக்குல நீங்க ஜெயிச்சதுல, சின்னவரு(காசி) வெறி வந்தாப்புல இருக்காருங்க. நீங்க மறுபடி ஊருக்குள்ள வந்துரக் கூடாதுன்னும், உங்க வம்சத்துல யாரும் உசிரோட இருக்கக் கூடாதுன்னும் மவனுங்கள்ட்ட பேசிகிட்டு இருந்தாருங்க.”

“ஐயா, இனி நீங்க வெளியூருல இருக்கறது அவ்வளவு உசிதமில்லீங்க. நம்ம ஊருக்குள்ள வந்துட்டீங்கன்னா அவரால ஏதும் செய்ய முடியாதுங்க. அதனால இரண்டு மூனு நாள்ல இந்த ஊர காலி பண்ணிட்டு நம்ம ஊருக்கு வந்துருங்கய்யா” என்று கூறிச் சென்றார்.

அவர் கூறுவதும் சரி என்று படவே, கடையை நம்பகமான ஒருவருக்கு மாற்றிக் கொடுத்துவிட்டு, வீட்டையும் அவரிடமே விற்றுவிட்டனர். பிள்ளைகள் படிப்பைக் கூட அங்கு சென்று தொடர்ந்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர்.

அனைத்து சாமான்களையும் லாரியில் ஏற்றி அனுப்பிவிட்டு, குடும்பத்தினர் அனைவரும் ஒரு வண்டியில் குலசேகர பட்டினத்துக்கு கிளம்பிச் சென்றனர்.

ஆனால், இவர்களது நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த காசி, அவர்கள் செல்லும் வண்டிக்கு விபத்தை ஏற்படுத்த ஆட்களை ஏற்பாடு செய்தார். அப்போது நடந்த விபத்தில் அனைவரும் இறந்து விட்டதாக அவருக்கு தகவல் போனது.

ஆனால் தலையில் அடிபட்டு உயிருக்குப் போராடிய கங்காவை அருகிலிருந்த ஹாஸ்பிடலில் சேர்த்த விபரம் அவருக்கு சற்றுத் தாமதமாக் கிடைத்தது. விரைந்து வந்தவர், தன் அண்ணனின் வாரிசுகள் இறந்துவிட்டனர் என்று பொய்யாக அழுது நாடகமாடி,  அனைவரது உடல்களையும் முறையாகப் பெற்று அடக்கம் செய்தார்.

விபத்தை ஏற்படுத்திய டிரைவர் சரணடைந்ததால், போலிஸும் இதனை விபத்து என்றே முடிவு செய்தனர். கங்காவை அனுமதித்திருந்த மருத்துவமனை ஊழியரைப் பணத்தைக் காட்டி தன் வசம் சாய்த்த காசி, மருத்துவமனையிலேயே அவளைக் கொன்றுவிட ஏற்பாடு செய்தார்.

ஆனால், அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர் ரோசி, கங்காவைக் கொல்ல நடக்கும் சதியை அறிந்து மனம் வருந்தியவர்,  தன்னுடைய கணவரின் துணைகொண்டு, ஊட்டியில் இருந்த ஸிஸ்டர் ஸாண்ட்ராவிடம் அனைத்து விபரங்களையும் கூறி கங்காவை அனுப்பி வைத்தார்.

ஊட்டியில் கங்காவுக்கு மேற்கொண்டு சிகிச்சை செய்து அவளை மீண்டு வரச் செய்தார் ஸாண்டரா ஸிஸ்டர். அவள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாலேயே அவளை வெளியே எங்கும் விடாமல் பார்த்துக் கொண்டார்.

அவரது மறைவுக்குப் பின் அங்கே இருக்க முடியாமல் வெளியே வந்த கங்கா, காசியின் ஆட்கள் கண்ணில் பட்டாள். அவளைக் கொல்லத் துரத்தும் போது ஆகாஷின் காரில் விழுந்தாள்  என்று பழைய கதையைக் கூறி முடித்தார் காசி.

 

கங்காவின் விசும்பலைத் தவிர வேறு சத்தமில்லாமல் அறையே மௌனமாக இருந்தது. கேவலம் சொத்துக்காக தன்னை ஆளாக்கிய குடும்பத்தையே அழித்த காசியின் மீது அடக்க முடியாத கோபம் கணன்றது அனைவருக்கும்.

“இந்த விபரமெல்லாம் நாங்க சொல்லிதான் இந்த பிள்ளைக்கு தெரியும். ஆனா அப்பவும் எம் மேல கோபப்படாம மன்னிச்சுவிட்ட என் பேத்தி முன்னாடி நான் கூனிக்குறுகி நிக்கறேன். காலமெல்லாம் அவ காலடியில சேவகம் செஞ்சாலும் என் பாவம் தீராது…” என்று கதறி அழுதார் காசி.

ஒரு குடும்பத்தையே வேரோடு அழித்த காசியின் மீது அனைவருக்கும் வெறுப்பே எஞ்சியிருந்தது. ஆனால் பாதிக்கப்பட்டவளே அவரை மன்னிக்கும் போது, இதைவிட சிறந்த தண்டனையை அவருக்குத் தந்துவிட முடியாது என்றே தோன்றியது. காலமெல்லாம் செய்த தவறை எண்ணிக் கூனிக்குறுகி நிற்பதே பெரிய தண்டனை அல்லவா?

கங்காவை ஆறுதலாக அணைத்துக் கொண்டாள் அபி. கங்காவை நினைத்து பெரிதும் ஆச்சர்யமாக இருந்தது அவளுக்கு. தன்னால் இப்படி ஒரு மன்னிப்பை எதிரிக்குத் தர முடியுமா என்றால், முடியாது என்றே தோன்றியது. அவளுக்கு எந்த கஷ்டமும் வரவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தோன்றியது.

ஆனால் தன் அண்ணனை ஏன் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கங்கா கூறினாள் என்கிற விஷயம் மட்டும் புரியவில்லை அவளுக்கு. அதையே ஆகாஷ் கேள்வியாக எழுப்பினான்.

அவள் அருகே வந்தவன்,

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல… உனக்கு இருக்கற பெருந்தன்மை எனக்கு கிடையாது கங்கா…”

அவளது கைகளைப் பிடித்துக் கொண்டவன்,  “இனி எந்த கஷ்டமும் உன்னை நெருங்காம என்னால பார்த்துக்க முடியும். நாம கல்யாணம் பண்ணிக்கலாம் கங்கா”

மெல்ல கரங்களை விடுவித்துக் கொண்டவள் கண்களில் கண்ணீரோடு  விரக்தியாகச் சிரித்துக் கொண்டாள்.

அவள் சிரிப்பின் அர்த்தம் புரியாமல் பார்த்தவனை நோக்கி, “கடவுள் என் வாழ்க்கையில நிறைய சோதனைகளை தந்திருக்காரு  சார். நீங்க நினைக்கறது இந்த ஜென்மத்துல நடக்காது…

அடுத்து ஜென்மம்ன்னு ஒன்னு இருந்தா நம்ம ரெண்டு பேரோட ஆசையும் நிறைவேறனும்னு  நான் கடவுள்ட்ட வேண்டிக்கறேன்”  என்றவளின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது.

அவளுடன் நின்றிருந்த காசி, சுந்தரம் சுகுமாறன் மூவருக்குமே அடக்க முடியாத அளவு அழுகை பொங்கியது.

பெரிதாக ஏதோ வரப்போகிறது என்று அவன் இதயம் தாளம் தப்பித் துடிக்க, உள்ளத்தின் நடுக்கத்தோடு கேட்டான், “என்ன சொல்ற…?” “ஏன் என்னாச்சு…?”

ஆகாஷ், அபி, மஞ்சுளா மூவரும் அவள் முகத்தையே பார்த்திருக்க, இறுகக் கண்களை மூடித் திறந்தவள் மெல்லிய குரலில், “ நான் என்னுடைய வாழ் நாட்களை எண்ணிகிட்டு இருக்கேன்.”

“எனக்கு எயிட்ஸ் இருக்கு”

“வாட்…?”

“என்னது…?”

“என்னம்மா சொல்ற…?”

ஏக காலத்தில் குரல்களை எழுப்பினர் மூவரும். ஆகாஷ் அதிர்ச்சி மாறாமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க,  மஞ்சுளாவின் விழிகள் நீரால் நிறைந்தது. அபியோ தலையை மறுப்பாக ஆட்டியவாறு,

“நான் நம்ப மாட்டேன் மச்சி… நீங்க பொய் சொல்றீங்க… அதெல்லாம் மோசமான ஆளுங்களுக்குத்தான் வரும். உங்களுக்கு அதெல்லாம் இருக்காது…” என்று கதறி அழுதாள்.

துக்கம் தொண்டையை அடைக்கத் தலையில் அடித்துக் கொண்டு அழுத காசி, “ என் பேத்தி சொக்கத் தங்கம் மா… அவளோட இந்த நிலமைக்கும், பாழாப்போன இந்த படுபாவிதான்மா காரணம்.”

“ஐயோ … என் உசுரு இந்த பூமிக்கு பாரமா இன்னும் இருக்கே… “ என்று கதறி அழுதவர் தன்னால் தன் பேத்திக்கு நடந்த கொடுமையைக் கூறத் தொடங்கினார்.

“அந்த ஆசுபத்திரியில என் பேத்தி உயிருக்கு என்னால ஆபத்துன்னு தெரிஞ்சதால, அவசரஅவசரமா  அவளுக்கு வைத்தியம் நடந்துச்சி. அப்ப அவளுக்கு ரொம்ப கஷ்டபட்டுதான் இரத்தம் கிடைச்சிருக்கு.

அவசரத்துல கவனக்குறைவா சரியா சோதனை பண்ணாத இரத்தத்தை ஏத்திட்டாங்க.  இந்தப் படுபாவியால என் பேத்தியோட வாழ்க்கையே போச்சும்மா…”

அவரது கைகளைப் பிடித்துக் கொண்ட கங்கா, “ஊட்டிக்கு போய் ஒரு வருஷம் எனக்கு எந்த அறிகுறியும் பெருசா தெரியல. என் குடும்பத்தோட இழப்புல நான் உடைஞ்சு போயிருந்த காலகட்டம் அது.

நாளைடைவுல என்னைக் கொஞ்சம் தேத்திக்கிட்டு அங்க இருந்த குழந்தைகளுக்கு என்னால முடிஞ்ச உதவிகளைச்  செய்துகிட்டு இருந்தேன். அப்ப, எனக்கு அடிக்கடி ஜுரம் வந்து உடம்பும் வீக் ஆனதும், ஸிஸ்டர் என்ன ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனாங்க.

இரத்தப் பரிசோதனைகள்ல தான் எனக்கு எயிட்ஸ் இருக்கற விஷயம் தெரிய வந்தது.  எனக்கு எப்படி வந்திருக்கும்னு யோசிச்சப்பதான், அந்த விபத்துல   இரத்தம் ஏத்தினதாலதான் இருக்கும்னு டாக்டர்ஸ் சொன்னாங்க.

விஷயம் தெரிஞ்சு ரோசி ஆண்ட்டியும் ஊட்டிக்கு வந்து ஒரேடியா உடைஞ்சு போயிட்டாங்க. தன்னோட அலட்சியத்தாலதான் எனக்கு இப்படி ஆகிடுச்சின்னு அழுதவங்க,  அவங்க வேலையை  விட்டுட்டாங்க.”

விரக்தியாகப் புன்னகை செய்தவள், “இதுல நான் யார் மேலயும் குத்தம் சொல்ல விரும்பல. எந்த ஜென்மத்துல யார் விட்ட சாபமோ எனக்கு இப்படி ஆகிடுச்சி.

ஸாண்ட்ரா ஸிஸ்டர் இறந்த பிறகு, என்னை அங்க இருக்கறவங்க ரொம்ப இழிவா பேசினாங்க. சின்ன குழந்தைகளுக்கும் என் நோய் பரவிடும்னு என்னை ஒதுக்கி வச்சாங்க. அதனாலதான் அங்க இருந்து வெளியில வந்தேன்.” என்று கூறியவாறு அவளுடைய மருத்துவ அறிக்கைகளை எடுத்து ஆகாஷிடம் கொடுத்தாள்.

“அன்னைக்கு எனக்குத் தேவையான மாத்திரைகளை வாங்கத்தான் ஜி.ஹெச். போனேன்” என்று அபியைப் பார்த்தாள்.

அவளுடைய மருத்துவ அறிக்கையைப் படித்தவனது மனம் கணத்துப் போனது.  அடைத்தத் தொண்டையைச் செருமி சரி செய்து கொண்டவனின் கண்கள் கலங்கிச் சிவந்திருந்தது.

“இந்த ஜென்மம் மட்டுமில்ல, எந்த ஜென்மத்துலயும் நம்ம பிரியக் கூடாது கங்கா. எனக்கு நீதான் மனைவி. இதை நான் மாத்திக்கறதா இல்ல.”

“சந்தோஷத்தக்  கூட இருந்து பங்கு போட்டுக்கறது மட்டுமில்லை காதல். கஷ்டத்திலயும் வேதனையிலயும் கூட இருந்து பங்கெடுத்துக்கறதுதான் உண்மையான காதல். நம்ம லவ் உண்மையானது கங்கா.”

“இப்ப மெடிக்கல் ஃபீல்டு நிறைய முன்னேறியாச்சு. நாம கண்டிப்பா ஒரு நல்ல வாழ்க்கைய வாழ முடியும் கங்கா.”

“இல்ல  டாக்டர் சார்…இதெல்லாம் சரி வராது…

ப்ளீஸ், என்னை என் போக்குல விட்ருங்க”

“எதையும் இனிமே மறுத்து பேசாத கங்கா. நான் சொல்றதைக் கேளு.”

“அம்மா… இந்த வாரத்திலயே இருக்கற மாதிரி ஒரு முகூர்த்த தேதி பிக்ஸ் பண்ணுங்க.  கல்யாணத்தை சிம்பிளா கோவில்ல முடிச்சிட்டு, ரிஜிஸ்டர் பண்ணிடலாம்”

கங்காவின் தாத்தாவைப் பார்த்தவன், “எனக்கு உங்களைப் பார்க்கக் கூட விருப்பமில்லை. ஆனா அவளுக்கு இருக்கற ஒரே சொந்தம் நீங்கதான். அதனால கல்யாணம் வரை இங்க இருங்க, அதுக்கப்புறம் இந்தப் பக்கம்கூட வந்திராதீங்க” என்று கோபமாகக் கூறியவன்,  விடுவிடுவென்று அறையை விட்டு வெளியேறினான்.

அன்றிரவு அனைவரும் உறங்கிய பின், யாருக்கும் தெரியாமல் ஆகாஷ் வீட்டை விட்டு வெளியேறினாள் கங்கா. அவளது அறையில் அவள் எழுதி வைத்திருந்த கடிதம் ஆகாஷிற்காக படபடத்துக் காத்திருந்தது.

12

ஐந்து வருடங்களுக்குப் பின்…

தெலங்காணா மாநிலம், செகந்திராபாத், விக்ரமபுரி…

அதரம் பவுண்டேஷன்… ஆதரவற்றோருக்கான இல்லம்.  சுபாஷ் அங்கு உள்ளவர்களுக்குக் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தப் பொருட்களை, அங்கிருப்போரின் எண்ணிக்கைக் கேற்ப பிரித்துக் கொண்டிருந்தான்.

நந்தகுமார் இல்லத்து நிர்வாகியுடன் உரையாடிக் கொண்டே, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவு வகைகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.

“இல்லத்துல இருக்கறவங்க எல்லாரும் வந்துட்டாங்களா சார்?”

“யாரையும் மிஸ் பண்ணிடாதீங்க. எல்லாருக்கும் அவர் கையால பொருட்களைக் கொடுக்கனும்னு நினைப்பாரு”  என்று தெலுங்கில் உரையாடியபடி, சற்று தூரத்தில் கைகளைக் கட்டிக்கொண்டு,  அங்கிருந்த மரத்தில் சாய்ந்தபடி, சுற்றுப் புறத்தைத் தன் பாரவையால் அலசியவாறு நின்றிருந்த ஆகாஷைக் காட்டினான்.

“எல்லாரும் வந்துட்டாங்க சார். இங்க தங்கியிருக்கவங்க, வேலை செய்யறவங்க யாரையும் விடாம அழைச்சிட்டு வந்திருக்கோம் சார்” தெலுங்கில் பதில் கூறினார் அந்த நிர்வாகி.

ஆகாஷ் அருகே வந்த சுபாஷ்,

“எல்லாம் ரெடி ஆகாஷ்.  இப்ப கொடுக்க ஆரம்பிச்சா சரியா இருக்கும். அப்புறம் சாப்பாடு போடனும்ல.”

“ஆகாஷ்… எல்லாரும் ஹால்ல கூடியிருக்காங்க, வா  பொருட்களைக் கொடுத்து முடிச்சிட்டு, சாப்பிட அனுப்பலாம்” என்று அழைத்தான் நந்து.

சரி என்று தலையசைத்தவன் அவர்களுடன் நடந்தான். ஒவ்வெருவருக்கும் தலா ஒரு உடை, ஒரு வருடத்திற்குத் தேவையான சோப்பு, தேங்காய் எண்ணெய், ஷாம்பு போன்ற பொருட்கள், ஒரு ஜோடி காலணி,  சிறுவர்களுக்குத் தேவையான நோட்டுப் புத்தகங்கள் அனைத்தும் அடங்கிய கவரை, இல்லத்து நிர்வாகி பேர் வாசிக்க வாசிக்க ஒவ்வொருவருடைய முகத்தையும் பார்த்துக் கொண்டே கொடுத்து முடித்தான் ஆகாஷ்.

‘இங்கயும் அவ இல்ல…’

அனைவருக்கும் கொடுத்து முடித்து, அவர்களைச் சாப்பிட அனுப்பிய பின், அங்கிருந்த சேரில் தளர்ந்து அமர்ந்தவனின் அருகே வந்தான் நந்தகுமார்.

“மச்சான், தளர்ந்து போகாதடா… கண்டிப்பா கங்காவ கண்டுபிடிக்க முடியும்டா.”

அவன் முகம் தெளியாததைக் கண்டு, “கங்கா  எங்க இருந்தாலும் கண்டிப்பா நல்லா இருப்பாடா. நீ இப்படி வருத்தப் படறது தெரிஞ்சா கண்டிப்பா அவளும் வருத்தப்படுவா” எதைச் சொன்னால் அவன் தெளிவானோ, அதைச் சொன்னதும் நிமிர்ந்து அமர்ந்தான் ஆகாஷ்.

“நான் வருத்தப் படலை மச்சான், எங்க இருந்தாலும் அவ நல்லா இருக்கனும். அதான் எனக்கு வேணும்”

என்று கூறியவன் நந்துவுடன் உணவருந்தும் இடத்திற்குச் சென்றான்.

மேலும் அங்கு அருகில் இருந்த இரண்டு இல்லங்களுக்கும் சென்று, அங்கிருப்பவர்களுக்குத் தேவையான பொருட்களைத் தந்தவர்கள், ஊருக்குத் திரும்பி காரில் வந்தனர்.

காரில் கணத்த மெளனம்,  இளையராஜா இசையில் சின்னக்குயில் மனதைப் பிழிந்து பாடிக் கொண்டிருந்தார். சுகராகம் என்றும் சோகம்தானே!

“மறந்தால் தானே நினைக்கனும் மாமா…

நினைவே நீதானே நீ…தானே

மனசும் மனசும் இணைஞ்சது மாமா…

நினைச்சுத் தவிச்சேனே நான்தானே.”

காரை சுபாஷ் ஓட்டிக் கொண்டிருக்க, நந்து முன்னிருக்கையில் அமர்ந்திருந்தான். ஆகாஷ் பின்னிருக்கையில் தலைசாய்த்துக் கண்களை மூடியிருந்தான்.

ஆகாஷை எண்ணி மனம் கணத்துப் போயிருந்தது நண்பர்களுக்கு. ஐந்து வருடங்களாக தொடரும் தேடல்.  தொடுவானம் என்று தெரியாமல், தொட்டுவிடக் கைநீட்டி ஏமாந்து போன குழந்தையின் தேடல்…

கங்கா என்று பெயர் கொண்ட பெண்கள் தங்கியிருப்பதாகத் தகவல் வந்தால், அந்த ஊரில் இருக்கும் அத்தனை ஆதரவற்ற இல்லங்களிலும் போய்ப் பார்த்து விடுவான்.

கண்டிப்பாக எங்கோ ஓரிடத்தில் நலமாக இருக்கிறாள் என்பது உறுதியாக புத்திக்கு தெரிகிறது. ஆனால் அவள் முகத்தை ஒரு முறையாவதுப் பார்த்து, அவளது நலனைத் தெரிந்து கொள் என்கிறது காதல் கொண்ட இதயம்.

தளராமல் தேடிக் கொண்டிருக்கிறான்…

நந்துவின் அலைபேசி ஒலித்தது. பாடலை நிறுத்தியவன் அழைப்பை ஏற்றான்.அபிதான் அழைத்திருந்தாள்.

“ஹலோ… ஒரு போன் கூட போடமாட்டீங்களா? நானும் போன் வரும்னு எவ்வளவு நேரம் வெயிட் பண்றேன்?”

“அச்சோ… சாரி அபி… இப்பதான் முடிச்சிட்டு கார்ல ஏறினோம். உனக்கு போன் போடுவோம்னு நினைச்சேன், நீ போட்டுட்ட…”

“கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆச்சு, இன்னும் இந்த டையலாக்க மாத்தல நீங்க…

சரி, போன விஷயம் என்ன ஆச்சு?”

“ம்ப்ச்…  இங்க இல்ல அபி.”

எதிர்ப்புறத்தில் சற்று நேர அமைதி, “அண்ணா எங்க?”

“பின்னாடி படுத்திருக்கான்.”

அதற்குள் மறுமுனையில்,  “போன என்கிட்ட குடு… அத்த என்கிட்ட குடு…” சுகமான இரைச்சல்.

“ஹப்பா… ராட்சசி… இருடி தரேன்… உங்க மாமா பேசறாங்க”

“ஹலோ… மாமா… எப்ப வருவீங்க?  எங்க அப்பா எங்க?”

“செல்லக்குட்டி, மாமா வந்துகிட்டே இருக்கேன். உங்க அப்பா பின்னாடி உட்கார்ந்து இருக்கான்.”

மழலைக் குரலில் டாண் டாணென்று பேசும் தன் குழந்தையின் குரலைக் கேட்டதும், ஆகாஷின் கரங்கள் போனை வாங்கத் தாமாக நீண்டன.

“இந்தாங்க… உங்க அப்பாட்ட பேசுங்க.”

அலைபேசியைக் காதில் பொருத்தியதும் கேட்ட முத்தச் சத்தத்தில் ஆகாஷுக்கு மனம் நிறைந்து, ஆனந்தப் புன்னகை நெளிந்தது உதட்டில்.

தானும் முத்தமிட்டவன், “ பாப்பு… மிஸ் யூ டா…”

“அப்பா எப்ப வருவீங்க?” தந்தையிடமும் அதே பல்லவியைப் பாடியது சின்னச் சிட்டு.

“நாளைக்கு வந்திடுவேன்டா செல்லம்.”

“கங்காம்மா  பார்த்தீங்களா?”

மகளின் கேள்வியில் மனம் கசிந்தது. கரகரத்தக் குரலைச் சரி செய்து கொண்டு, “சீக்கிரம் பார்த்துடுவேன்டா.”

“அம்மா எங்கடா பாப்பு?”

“அம்மா சாமி பாக்க போய்ட்டு இப்பதா வந்தா. கீழ இருக்கா.  இருங்க அம்மாட்ட தரேன்” என்றபடி ஓடியது சுட்டி.

“அருந்ததீ… அப்பா பேசறா…” என்று மகள் கூவியதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டான்.

“அடியேய்… பார்த்து இறங்கு. அம்மாவ பேர் சொல்லி கூப்பிடுற நீ… எல்லாம் அண்ணி தர்ற செல்லம்.”

அபியின் குரல் தேய்ந்து ஒலித்தது கேட்டது அவனுக்கு. அபிக்கு கங்கா மீது சற்று கோபம்தான். அத்தனை பாசமாகப் பழகியும் விட்டுச் சென்றுவிட்டாளே என்று.

அருந்ததியை நினைத்ததும் மனம் கனிந்தது ஆகாஷுக்கு. எத்தனை அருமையான பெண்.

கங்கா சென்றபின் முழுதாக ஆறு மாதங்கள் அவளைப் பைத்தியக்காரனைப் போலத் தேடி அலைந்தவனை அபிதான் தேற்றிக் கொண்டுவந்தாள்.

மகனது நிலையைக் கண்ட மஞ்சுளாவின் உடல்நிலையும் சீர்கெட்டது.

கங்காவின் கடிதத்தை காரணமாகச் சொல்லியும், மஞ்சுளாவின் சீர்கெட்ட உடல்நிலையைக் காரணம் காட்டியும் அவனைத் திருமணத்திற்குச் சம்மதிக்க வைப்பதற்குள் அபியைத் தலையால் தண்ணீர் குடிக்க வைத்தான் ஆகாஷ்.

முழுதாக ஒரு வருடம் ஆனது அவனுக்கு, அருந்ததியுடன் இயல்பான குடும்ப வாழ்க்கை வாழ. திருமணமானதிலிருந்து இன்றுவரை அவனைப் புரிந்துகொண்டு, அவன் மீது கரைகாணாக் காதலைக் காட்டும் அவள் மீது இயல்பாக நேசத்தைப் பொழிந்தது அவன்  மனது.

“அருந்ததி… இந்தா … அப்பா பேசறா…”

அலைபேசியை காதுக்கு கொடுத்தவள் மெல்லிய குரலில்,  “ஆகாஷ்…, கங்கா அங்க இருக்காங்களா?”

“ம்ப்ச்…  இல்லமா…”  அவனது குரலில் என்ன கண்டாளோ… ஆறுதலாக, “கண்டிப்பா கிடைப்பாங்க.  நம்பிக்கைய விடாதீங்க”

அவனது பெருமூச்சு மட்டுமே கேட்டது.

“எப்ப வருவீங்க?”

“நாளைக்கு வந்துடுவோம்மா.  அம்மா என்ன பண்றாங்க?”

“கோவிலுக்கு போய்ட்டு வந்தோம். பூஜை ரூம்ல இருக்காங்க. நீங்க சாப்பிட்டீங்களா?”

“சாப்பிட்டேன்மா, நீயும் நேரத்தோட சாப்பிடு, அம்மாவையும் சாப்பிட்டு மாத்திரை போடச் சொல்லு.”

“ம்ம்… நீங்க பார்த்து பத்திரமா வாங்க.”

“ஓகேமா…டேக் கேர்.”

அலைபேசியை அணைத்து நந்துவிடம் கொடுத்தவன், தலையைத் திருப்பி காரின் ஜன்னல் வழியே, வெளியில் ஓடும் மரங்களையும் கட்டிடங்களையும் வெறித்தபடி வந்தான்.

அவனது உள்ளம் ஐந்து ஆண்டுகளுக்கு முன் கங்கா அவனை விட்டுச்சென்ற நாளுக்குச் சென்றது.

அன்று காலையில் எழுந்த அபி, கங்காவுக்கும் தனக்கும் காபியைக் கலந்து கொண்டு அவளை எழுப்பிவிடச் சென்றாள்.

கங்காவின் அறை வெறுமையாக இருக்கவும் துணுக்குற்றவள், அவளின் உடைமைகளும் இல்லாததைக் கண்டு பதறிப் போனாள். வீடு முழுக்கத் தேடியும் கங்காவைக் காணாமல், அழுது கொண்டே தன் அண்ணனைத் தேடிப் போனாள்.

இரவெல்லாம் தூங்காமல் கங்காவின் மருத்துவ அறிக்கையை நம்பகமான மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெற்றவன், வெகுநேரம் கழித்தே உறங்கியிருந்தான்.

“அண்ணா… மச்சிய காணோம்…”

திடுக்கிட்டு எழுந்தவன், “என்ன சொல்ற அபி?”

அபியின் குரலைக் கேட்டு எழுந்து வந்த மஞ்சுளாவும் காசியும் அதிர்ந்து நின்றனர். அபி அழுகையுடன்,

“ஆமாண்ணா வீடு பூரா தேடிட்டேன், அவங்க இல்ல.”

சட்டென்று காசியைத் திரும்பிப் பார்த்தவன், கொத்தாக அவர் சட்டையைப் பிடித்திருந்தான், “யோவ், மரியாதையா என் கங்கா எங்கன்னு சொல்லிடு… வயசானவன்னு பார்க்க மாட்டேன், கொன்னு புதைச்சிடுவேன் உன்ன…”

அவனது கரங்களைப் பிடித்தவர் அழுகையுடன், “ஐயோ… சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது தம்பி. அவளைக் கொல்லனும்னு பழிவெறியோட சுத்தினவன்தான் நான்,

ஆனா… என்னைக்கு எம்பேத்தி அவளுக்கு வந்திருக்கற நோயப் பத்திச்  சொல்லி, என்னைக் கொன்னு நீங்க பழியேத்துக்க வேணாம் தாத்தா, நானே சீக்கிரம் செத்துப் போய்டுவேன்னு என் கையப் பிடிச்சிட்டுக் கதறி அழுதாளோ, அன்னைக்கே என் அகங்காரமெல்லாம் அழிஞ்சு போச்சு தம்பி.

அவள என்கூடவே கூட்டிட்டு போய், என் கடைசி காலம் வரை அவ பாதத்தை என் கண்ணீரால கழுவி, என் பாவத்தைக் கரைக்கனும்னுதான், இங்க உங்க வீட்டுக்கே வந்தேன்.

ஆனா, உங்க மூலமா எம்பேத்திக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கப் போகுதேன்னு சந்தோஷமாதான்யா இருந்தேன்.

ஐயா… எம்பேத்தி  உன் மேல உசிரையே வச்சிருக்காய்யா. என்னால உனக்கும் உன் குடும்பத்துக்கும் எந்த ஆபத்தும் வந்துரக் கூடாதுன்னுதான் அவ எங்களைப் பார்க்க வந்ததே.”

“அவளுக்கு என்னாச்சுன்னு பாருய்யா…” என்று கதறி அழுதார்.

மஞ்சுளாவும், “பதட்டப்படாம அவ எங்க போனான்னு தேடு ஆகாஷ்.”

உடனடியாக செக்யூரிட்டியிடம் விசாரித்தான். அவருக்கும் எந்தத் தகவலும் தெரியாததால், சிசிடிவி பதிவுகளைப் பார்த்தான். அதில் நள்ளிரவில் கங்கா , செக்யூரிட்டி அசந்த நேரம் வீட்டைவிட்டு வெளியேறுவது தெரிந்தது.

பதற்றமடைந்தவர்கள் அவளுடைய அறைக்குச் சென்று பார்க்க அங்கு வீற்றிருந்தது, அவள் ஆகாஷுக்கு எழுதிய கடிதம். கைகள் நடுங்க அதை எடுத்துப் பிரித்துப் படித்தான்.

‘அன்புள்ள டாக்டர் சார்,

முதல்ல நீங்க எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க, உங்க யாரையும் பிரிய மனசில்லாமதான் நான் பிரியறேன்.

உங்க எல்லாரோட அன்புலயும் பாசத்துலயும் நனைஞ்சுகிட்டு சுகமா வாழ்ந்திடனும்னுதான் நான் நினைச்சேன். ஆனா என்னைக்கு நீங்க என்னை விரும்புறீங்கன்னு தெரிஞ்சுதோ, அன்னைக்கே உங்களை விட்டுப் போகனும்னு முடிவு பண்ணிட்டேன்.

நீங்க,  நம்ம கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கனும்னு சொன்னதும் எனக்கு வேற வழி தெரியல. என்ன மன்னிச்சுடுங்க.

உலகத்துல பூக்குற எல்லா பூவும் பூஜைக்கு போறதில்லை. அதுமாதிரிதான் நானும் பூஜைக்கேத்த பூ இல்ல, எதுக்கும் பயன்படாத காகிதப் பூ.

உங்ககூட இருந்தா கண்டிப்பா என்னை சந்தோஷமா வச்சுப்பீங்க. உலகத்தின் ராணியே நான்தான்னு என்னை ஃபீல் பண்ண வைப்பீங்க. ஆனா அதே சந்தோஷத்தை என்னால உங்களுக்கு கொடுக்க முடியாது. குற்றஉணர்ச்சில நான் செத்துடுவேன்.

காதல்ங்கறது  சந்தோஷத்துல மட்டுமில்ல துக்கத்திலயும் பங்கு போட்டுக்கனும்னு சொன்னீங்க. உண்மைதான், ஆனா காதல் தன்னோட இணையை எப்பவும் சந்தோஷமா வச்சிருக்கனும்னுதான் நினைக்கும். என்னைக் கல்யாணம் பண்ணா உங்களுக்கு எந்த சந்தோஷமும் கிடைக்காது.

தாம்பத்தியம் மட்டும் திருமணவாழ்க்கைக்கு முக்கியமில்லதான் அது எனக்கும் புரியுது. அதைத் தாண்டி எவ்வளவோ இருக்கு, ஆனால் தாம்பத்தியம், சந்ததிகள்  இல்லாத திருமணவாழ்க்கை உயிர்ப்போட இருக்காது.

உங்களுக்கு உலகத்துல இருக்கற எல்லா சந்தோஷமும் கிடைக்கனும். நீங்க கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கனும் சார். குடும்பம் குழந்தைகள்னு நீங்க முழுமையான வாழ்க்கை வாழ்ந்தாதான் என்னுடைய மனசுக்கு நிம்மதி கிடைக்கும்.

நான், உங்களைப் பத்தி எல்லாம் தெரிஞ்சுக்க முடியற தூரத்துலதான் இருப்பேன். நீங்க சந்தோஷமா இருக்கீங்கன்னு தெரிஞ்சாதான் என்னுடைய மீதி காலங்களை, நான் நிம்மதியா கழிக்க முடியும்.

கங்கான்னு ஒருத்தி உங்க வாழ்க்கைல வந்தத மறந்துடுங்க சார். அபிகிட்டயும் மஞ்சும்மா கிட்டயும் மன்னிப்பு கேட்டேன்னு சொல்லிடுங்க.

பின்குறிப்பு:

தாத்தாவுக்கு,

இந்த பிறவியில நம்மோட பிறந்த சொந்தங்கள், அடுத்த பிறவியில நம்மகூட பிறப்பாங்களான்னு தெரியாது தாத்தா. அப்படி இருக்கும் போது அவங்க மேல பகையோ, கோபமோ  காட்டறதுல என்ன அர்த்தம் இருக்கு.

நீங்க உங்க கூட என்னை வரச் சொன்னீங்க. அது என்னால முடியாது தாத்தா. உங்ககூட நான் வந்தா, என் சொந்தங்களை நான் இழந்த விதத்தை எனக்கு மீண்டும் மீண்டும் நினைவு படுத்தும். அதையெல்லாம் நான் மறக்க நினைக்கிறேன் தாத்தா.

தெரிந்தோ தெரியாமலோ நீங்க செய்த செயலால எங்க குடும்பமே அழிஞ்சு போச்சு. இப்ப நான் உங்க முன்னாடி இருந்தா, என்னைப் பார்த்து பார்த்து, உங்களுக்கும் குற்றஉணர்ச்சி அதிகரிக்கும் தாத்தா.

நீங்க எனக்காக ஏதாவது செய்யனும்னு நினைச்சா, ஆதரவற்ற எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உரிய மருத்துவமும், பாதுகாப்பும் தரக்கூடிய காப்பகம் ஒன்னு ஏற்படுத்துங்க தாத்தா.

என்றும் உங்கள் நினைவுகளோடதான் இருப்பேன். என்னைத் தேட வேண்டாம்.

__கங்கா.

கண்ணின் ஓரம் நீர்க் கசிய சாய்ந்து அமர்ந்திருந்தவனை எழுப்பிய நந்து.

“ஆகாஷ், இறங்குடா சாப்பிடலாம்.” எங்கோ பார்வையைப் பதித்தவனின் தோள்களை அழுத்தியவன்.

“கங்கா நினைப்புல நீ இப்படி உருகறத அவளே விரும்ப மாட்டா ஆகாஷ்.  இப்ப நீ வாழ்ந்துட்டு இருக்கற வாழ்க்கைதான் உன்னுடையது. கங்கா தொடுவானம் என்னைக்குமே உன்னால தொடமுடியாது.  ரிலாக்ஸ் பண்ணிட்டு சாப்பிட வா”

“எனக்கும் இதெல்லாம் புரியுது நந்து. அவ நல்லா இருக்காளான்னு தெரிஞ்சுக்கனும். நான் குடும்பத்தோட சந்தோஷமா இருக்கேன்றதைப் பார்த்து அவ மனசு நிம்மதியடையனும் அவ்வளவுதான். கண்டிப்பா என்னைக்காவது ஒருநாள் அவளைப் பார்ப்பேன்னு நம்பறேன்.”  என்றவன் இறங்கி நந்துவோடு நடந்தான்.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். மாடிச் சுவரின் கைப்பிடியைப் பிடித்து நின்றுகொண்டு தூரத்தில் தெரிந்த திருவண்ணாமலை கோவில் கோபுரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் கங்கா.

ஒற்றை அறையைக் கொண்ட சிறு வீடு அது. மாடியாகையால் மலைக்காற்று குளிர்ந்து வீசியது. கையில் உள்ள பையைத் தூக்க முடியாமல் தூக்கி வரும் வரதனைக் கண்டதும் ஓடிச்சென்று பையை வாங்கிக் கொண்டாள்.

“குரல் கொடுத்திருந்தா நான் வந்திருப்பேன்ல, நீங்க கஷ்டப்பட்டு தூக்கிட்டு வரனுமா தாத்தா”

“காய்கறிப் பைதான த்தா. கனமெல்லாம் இல்ல. நாளைச் சமையலுக்கு நிர்வாகி குடுத்தனுப்பினாரு.”

தனது தாத்தா தர்மனுக்கு கணக்கு பிள்ளையாக இருந்த வரதன் சிறுவயதில் இருந்தே கங்காவுக்கு பிரியமானவர்.  கங்காவின் தந்தையைப் பார்க்கப் போகும் போதெல்லாம் தன் முதலாளியின் ஆசைப் பேத்தியுடன் நேரம் செலவழிக்காமல் சென்றதில்லை அவர்.

காசி கங்காவைக் கண்டுபிடித்துவிட்டதை அறிந்தது முதல் அவளைக் காப்பாற்ற துடித்துக் கொண்டிருந்தார். அபியின் நிச்சயம் முடிந்த அன்று கங்காவைச் சந்தித்து அவளது உயிருக்கு ஆபத்து இருப்பதைக் கூறி, தன்னுடன் வந்துவிடுமாறும், அவளைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்வதாகவும் கூறினார்.

மறுநாள் ஆகாஷ் , கண்டிப்பாகத் திருமணம் நடக்கும் என்று கூறியதும் அன்றிரவு அவருடன் கிளம்பி வந்தவள் நேராகத் திருவண்ணாமலை வந்து,  வீடெடுத்துத் தங்கி அருகில் உள்ள முதியோர் இல்லத்திற்கு சமைத்து தருகிறாள். அவ்வப்போது ஊருக்குச் சென்று வரும் வரதன் அங்கிருக்கும் தகவல்களை அவளிடம் சேர்ப்பிப்பார்.

“தாத்தா ஊருக்கு போய்ட்டு  வந்தீங்களே ஏதும் தகவல் இருக்கா?”

“ம்ம்… போன வாரம், உன் பேர்ல ஆரம்பிச்சாங்கள்ல அந்த ட்ரஸ்ட்டுக்கு நான்காவது ஆண்டுவிழாவாம். ஊருக்கே சாப்பாடு போட்டுச் சிறப்பா செஞ்சிருக்காங்க.

ஆகாஷ் தம்பியும் குடும்பத்தோட வந்திருந்தாராம். காசி ஐயா இன்னும்  படுத்த படுக்கையாதான் கிடக்குறாரு. என்னைப் பார்த்ததும் ஒரு பாட்டம் புலம்புனாரு.

அவரு அம்மா விட்ட சாபம்தான் பலிச்சு போச்சு, அவர் செய்த பாவத்துக்கு மன்னிப்பே கிடையாது,  கண்ண மூடறதுக்குள்ள உன்னைப் பார்த்தாதான்  அவரு ஆத்மா சாந்தி அடையும்னு விடாம புலம்பிட்டு இருக்காரு.

மத்தபடி எல்லாம் நல்லா இருக்காங்க. போன தடவையே ஆகாஷ் தம்பியோட பிள்ளய பார்க்கனும்னு ஆசைபட்டல்ல, இந்தா என் பேத்தி இந்த போனுல போட்டோ பிடிச்சி குடுத்துருக்கா.” அலைபேசியை நீட்டவும் ஆவலுடன் வாங்கினாள்.

ஆகாஷின் அருகே அருந்ததி நின்றிருக்க, இருவரின் பார்வையோ வேறெங்கோ இருந்தது. அருந்ததி கையில் இருந்த துறு துறு குழந்தை கேமராவைப் பார்த்திருந்தது. கெள்ளை அழகாக பார்பி டால் போல இருந்த குழந்தையை கண்களில் நிரப்பிக் கொண்டாள்.

“குழந்தை ரொம்ப அழகுல்ல தாத்தா?”

“ம்ம், ரொம்ப சுட்டியும் கூடவாம். டாண் டாண்னு பேசுதாம். ஸ்ருதின்னு பேர் வச்சிருக்காங்க. கூடவே அபிம்மாவும் அவங்க பிள்ளை யஷ்வந்த்தும் இருக்காங்க பாரு.”

அடுத்தடுத்த புகைப்படங்களில் இருந்த ஆகாஷ், அருந்ததி, ஸ்ருதி, அபி, நந்து, அவர்களுடைய பையன் யஷ்வந்த் , மஞ்சுளா அனைவரையும் பார்த்தவளின் உள்ளம் நிறைந்தது.

“ சரி தாத்தா நான் மதிய சமையலுக்கு தயார் பண்றேன். நீங்க பன்னிரெண்டு மணிக்கு போன் பண்ணி சாப்பாடு எடுத்துப் போக வண்டி வரச் சொல்லிடுங்க.”

நெஞ்சில் நிறைந்த நிம்மதியுடன், வாழும் காலம் வரை மற்றவருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தன் பயணத்தை தெடர்கிறாள் கங்கா.

**********நிறைவு**********

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!