UEJ -37(1)

உன்னோடு தான்… என் ஜீவன்..

 

பகுதி 37

 

கௌதமின் கரத்தில் வாகனம் சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்க, அவனின் பார்வையோ, தன் அருகே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த

செல்லம்மாவையே அடிக்கடி தழுவி சென்றது. கௌதமிடம், அவளின் காரணத்தை சொல்லி, இன்றோடு ஒரு மாத காலம் சென்றிருக்க, அன்று தொடங்கிய கௌதமின் ஆட்டம், இன்னும் முடிவுக்கு வராது இருந்தது.. தனது செல்லம்மாவின் பிடிவாதத்தினால்..

 

அதற்கிடையே, கௌதம் செய்து வைத்திருக்கும் செயல்களை நினைக்கும் போது, அதை அவள் எப்படி எடுத்துக்கொள்வாளோ?! என்ற எண்ணம் தோன்றினாலும், முடிவு செய்த பின், அதிலிருந்து விலகியோ, பின்வாங்கியோ பழக்கம் இல்லாத கௌதம் சக்கரவர்த்திக்கு, இந்த சவால் நிறைந்த ஆட்டமும், மிகவும் சுவாரஸ்யமாய் தான் இருந்ததோ….

 

மெல்லிய புன்னகையை இதழுள் அடக்கி, தனது ஒரு கரம் கொண்டு, அருகே இருப்பவளின் தலையை அதுரமாய் தடவியவனின் ஸ்பரிஷத்தில், அவனின் தோளில் நெருங்கி படுத்த செல்லம்மாவின் செயலில், அவனின் புன்னகை இன்னும் கூடி தான் போனது..

 

‘செல்லம்மா, மை டால்.. நீ, என்ன தான் வீம்பு பிடிச்சாலும், உன் வாய் வழியா அந்த அழைப்பை வர வைக்காம, ஓய மாட்டான்..  உன் கௌதம்…!’ என்று மனதோடு சொல்லிக்கொண்டவன்.. தன் இதழ் முத்தத்தை, தன் தோளில் சாய்திருக்கும், தன்னவளின் நெற்றியில் வைத்துவிட்டு, சாலையில் கவனத்தை பதித்தான்.

 

அப்போது கௌதமின் போன், மெல்ல தனது இருப்பை உணர்த்த, அதை தனது ப்ளூடூத் மூலம் இணைத்தவன், “சொல்லு அமுதா, எல்லாமே ரெடியா?” என்றதும்.. “எல்லாமே பக்கா அண்ணா..! நீங்க நிம்மதியா வாங்க… எல்லாமே சரியா இருக்கான்னு, ஒன்னுக்கு பல தடவை செக் பண்ணிட்டேன்.. எல்லாமே நம்ம நினச்சு திட்டம் போட்ட மாதிரியே நடக்கும்” என்றிட..

 

“ஓகே டா.. நாங்க வந்துட்டு இருக்கோம்.. ஐ திங், இன்னும் ஒன் ஹவர்ல வந்திடுவோம். அப்புறம் ஆரன்…” என கேட்க ஆரம்பிக்கும் போதே.. “அண்ணா, எல்லாரும் ரீச் ஆகிட்டாங்க!” என்றதும், “சரிடா, நாங்களும் வந்திடுறோம்..” என சொல்லி காலை கட் செய்தவன், காரின் வேகத்தை சீராக உயர்த்தினான், செல்ல வேண்டிய இடத்தை விரைவாய் அடைந்திடும் நோக்கில்..

 

கைகளும், கண்களும் அதன் வேலையை சரியாய் செய்ய, மனமோ செல்லம்மா அன்று சொன்ன காரணத்திலேயே சுழன்று கொண்டிருந்தது.

 

*****

 

“ஏன் செல்லம்மா, என்னை நீ, எப்பவும் கூப்பிடற மாதிரி கூப்பிடல…?!” என்றதும், சில நொடி கௌதமின் முகத்தையே பார்த்தவள், எதுவும் சொல்லாது, தங்கள் அறையை நோக்கி செல்ல,

 

அவளின் பார்வைக்கு என்ன அர்த்தம்? என்பதும், இப்போது ஒதுங்கி போக வேண்டிய தேவை என்ன? என்ற குழப்பமும் ஒன்று சேர, அதை அறிந்து கொண்டே ஆகவேண்டும், என்ற தீவிரத்துடன், அவளை நாடி சென்றவன், அவளின் கலங்கிய முகத்தை கண்டு துடித்து தான் போனான்.

 

“செல்லம்மா, என்னடா..  ஏன் இப்படி..?! எதுக்காக இப்படி இருக்க..?! சொல்லு.. ! எதுவானாலும், மனசுல வச்சுகாதீங்கன்னு.. எனக்கு சொல்லிட்டு… நீ, எதையோ மனசுல வச்சிட்டு மருகி போறது சரியா..?! சொல்லும்மா..” என்ற படியே அவளை நெருங்கியவன் நெஞ்சில் தஞ்சமடைந்தவள், ஒரு கரத்தால் அவனின் மார்பில் அடித்தபடியே, கண்ணில் நீர் ஊற்றாக பெருகிட,  

 

அழுகை கலந்த குரலில்.. “எதை சொல்ல சொல்றீங்க கௌதம்…? நம்ம அம்மு, என் வயித்துல இருந்த சமயத்துல, நீங்க எப்பவும் சொல்வீங்களே..  ‘என்னை நினச்சாதும், வந்து நிற்பேன்னு..!’ அத மனசுல வச்சிட்டு, தினம் தினம் ஒவ்வொரு நிமிஷமும், ‘ஏன்னா.. வாங்க, எனக்கு உங்கள பார்க்கணுமுன்னு’ நிதம் நிதம் கூப்பிட்டேனே, பைத்தியகாரி மாதிரி..  அத சொல்றதா..?!

 

இல்ல, அந்த நேரத்துல ஒரு தாய்கிட்டையும், கணவன் கிட்டையும் தேட வேண்டிய ஆறுதலையும், அணைப்பையும் எதிர்பார்த்து ஏங்கி போனத சொல்லவா..?!

 

இல்ல, குழந்தையோட ஒவ்வொரு அசைவுக்கும், பயந்து போய் ஏதாவது ஆகிடுமோன்னு, துடிச்சத சொல்லவா…?!

 

என சிறு குழந்தை கோபத்தில் தாக்குவது போல, மலர் கரம் கொண்டு அடித்தபடி, அவள் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும்..  பதில் என்பதே இல்லாத போது, அவள் அளிக்கும் தண்டனையை மௌனமாய் ஏற்று நின்ற கௌதமிற்கு, இன்னும் அவள் மனதை அழுத்தும் விசயம் அனைத்தும் வெளிவந்து விட்டால் போதும், என்பதே எண்ணமாய் இருந்தது.

 

அதனால், முடிந்தவரை அவளை இடையூறு செய்யாமல், அவளின் போக்கிலேயே பேச விட்டவன் கரம் மட்டும், அவளின் தலையை ஆறுதலாய் தடவிய வண்ணம் இருந்தது. அந்த ஆறுதலே அடுத்தும், அவளின் மனதில் இருந்ததை வெளியேற்றிட, நல்ல வழியாகி போக, மெல்ல அனைத்து ஆதங்கத்தையும் கொட்டி கவிழ்த்தாள் கௌதமின் செல்லம்மா..

 

“கௌரவமா, நா போய் நிற்க வேண்டிய மண்ணுல தலைகுனிஞ்சு நின்னதும், யாருமில்லா அநாதையா ரோட்டுல கிடந்ததுக்கும், என்ன காரணம் கௌதம்…? அப்ப மட்டும் ஆரன்னு ஒருத்தர் வராம போயிருந்தால், இந்த செல்லம்மா இல்லாமலே போயிருப்பா..!

 

பிறந்தது முதல், வளர்ந்து ஆளான வரை, பார்த்திருந்த எங்க வீட்டில கூட என்னை என்ன நடந்துச்சுன்னு கேட்கல..?! அந்த சூழ்நிலையில, எனக்குன்னு யாருமே பேச வரல கௌதம்…! அதனாலையே, அந்த இடத்தை வெறுத்தேன்.. அவங்க எண்ணத்தை.. அவங்க கொடுத்த எல்லாத்தையும் வெறுத்தேன்.. என்னை முழுசா மாத்திக்க நினச்சேன்.. அதோட உங்கள பத்தின நினைப்பையும் அழிக்க நினச்சேன்..

 

ஆனா, காயத்ரியா எல்லாத்தையும் ஜெயிக்க முடிஞ்ச என்னால, உங்க செல்லம்மாவ ஜெயிக்க முடியல… அவ எப்பவும், உங்கள விட்டு கொடுக்க மாட்டங்கறா.. அதனால தான் நீங்க வந்ததும், உங்ககிட்ட கோபத்த காட்டாம முழுசா உங்ககிட்ட சரணடைஞ்சிட்டா….! என்றவளின் வார்த்தையில், தன் மீதான அவளின் காதலுக்கும், தன் செயலால் வந்த கோபத்திற்கும் இடையே, அவளின் அலைப்புறுதல் நன்கு புரிந்தது கௌதமிற்கு..

 

“இது அத்தனைக்கும் மூல காரணம் என்ன கௌதம்..!  நீங்க உங்க துணைக்கே தெரியாம செஞ்ச கல்யாணம்.. ஊர் உலகத்துல, அம்மா, அப்பா, சொந்த பந்தம், நட்பு ன்னு யாருக்கு வேணுமின்னாலும் தெரியாம ஒரு கல்யாணம் நடந்திருக்கலாம்…! ஆனா..  முதல் முறை, அந்த திருமணத்திற்கு சம்மந்தப்பட்ட பொண்ணுக்கே தெரியல…!” என்ற போது வந்த அவளின் விரக்தி சிரிப்பு, தன் தவறை நன்கு உணர்த்த, அவளை தன்னோடு இன்னும் இறுக்கியவனின், முகம் கருத்து சிறித்தும் போனது..

 

“அப்படி, அது தெரியற மாதிரி நீங்க நடத்தியிருந்தா.. அத்தனை பிரச்சனையையும், முடிந்தவரை தவிர்த்து இருக்கலாமே!!! ன்னு, ஆதங்கம் உங்க மேல எனக்கு இருக்க கூடாதா கௌதம்…?!” என்க, அவளின் கேள்வியில் உள்ள நியாயத்தால், அமைதி காத்தான் கௌதம் சக்கரவர்த்தி…

 

ஆனாலும், அன்று.. தான் வந்த போதே, இதை கேட்டிருக்கலாமே, தன் தவறை அவள் நியாயப்படுத்தி தானே பேசினாள்?! என்ற கௌதமின் எண்ணத்தை உணர்ந்தது போல,

 

“அன்னைக்கி, நீங்க வந்த போது உங்ககிட்ட, நா, இது நீங்க செய்ததற்கு  பின் எதாவது காரணம் இருக்குமின்னு சொன்னது, உங்கள தேத்தினது உங்க காதல் மனைவியா.. உங்க செல்லம்மாவா.. !!  அவளால உங்களோட வேதனையையோ, கலக்கத்தையோ தாங்கிக்க முடியாது.. நீங்க வந்ததும் ஒதுக்கி வச்சிருந்தா வேதனை படப்போறது, உங்களோட சேர்ந்து செல்லம்மாவும் தான்..

 

ஆனா, இப்பவும் அந்த செல்லம்மாவ, முழுசா வெளிய வரவிடாம தடுக்கற, இந்த காயத்ரிய  தாண்டி வர முடியாம தவிக்கறேனே… என்ன செய்ய சொல்றீங்க கௌதம்..?!” என்று கேட்பவளுக்கு, பதிலை தேட முயற்சித்தவனுக்கு, அது தான் சிக்கவில்லை..

                

“காயத்தை கொடுத்ததும் நீங்க தான்…! அதே நேரம், அந்த காயத்துக்கு மருந்தும் நீங்க தான்..! நிச்சயமா அதுவும் மாறும், மறையும்..” என்றதும், அவளின் அன்றைய சூழ்நிலையின் தன்மை பூதகரமாக எழுந்து நிற்க, கடந்தகாலத்தை மாற்ற யாராலும் இயலாதே, ஆனால் அவளுக்கு இப்போதைய தேவை என்ன என்பதை, அவள் வாயாலேயே வர வைத்து, அதை இனி சரியாக செய்திடும் நோக்கில்…

 

“அப்ப, அந்த கல்யாணமும், நம்ம வாழ்க்கையும் என்னோட  சுயநலத்துக்காகவும், சந்தோஷத்திற்காகவும் மட்டும், முடிவு  செஞ்சு செயல்படுத்தியிருப்பேன்னு சொல்றீயா, செல்லம்மா!” என்றிட..

 

அவன் எண்ணம் போலவே… “நிச்சயமா இல்ல… நீங்க வளர்ந்த விதத்துல, அடுத்தவங்கள கேட்டோ, அல்லது அடுத்தவங்க சொல்லியோ, நீங்க முடிவு எடுத்ததே இல்ல. உங்க வாழ்க்கையில எல்லா முடிவும், நீங்க மட்டுமே எடுத்து, நீங்களே செயல்படுத்தி பழகிட்டீங்க. அதனால, உங்களுக்கு நீங்க செஞ்சது நிச்சயம் சரியானதா தான் இருக்கும்….! தொழில் ரீதியான முடிவுக்கு வேணுமானால், எல்லாமே சரியா வரலாம். ஆனால், குடும்பம் அப்படின்னா கணவன், மனைவி இருவருக்கும் இடையில எந்த ஒழிவும் மறைவும் இருக்க கூடாது!

 

நீங்க உங்க சுகத்துக்காவும், என்னை நெருங்கவும் மட்டுமே, இதை செய்திருந்தா, இந்த கல்யாணம் ரிஜிஸ்டர் ஆனது என்னோட பிறந்தநாளுக்கு இருபது நாளுக்கு முன்னாடி.. அதுக்கு பின்னாடி எத்தனையோ தடவை, நம்ம சந்திச்சிருக்கோம். என் பிறந்தநாள் கிப்ட்டா தான், நீங்க அதை கொடுத்தீங்க.. நம்ம சேர்ந்ததும், நா அங்க வந்ததால தான்.. இதுல நிச்சயமா, உங்க சுயநலம் இல்லவே இல்ல…” என்று அவனின் செயலை சரியாய் கணித்தவள், தொடர்ந்து..

 

“கௌதம், இவ்வளவு வருஷம் கழிச்சி, ஒரு மூனு வயசு குழந்தையோட அப்பாவா, சமுதாயத்துக்கு உங்களால அறிமுகம் ஆகிட முடியுமா?! அதுல எவ்வளவு கேள்வி வரும் தெரியுமா, உங்களுக்கு?! அம்முவோட பிறப்புல இருந்து, எல்லா விசயத்தையும் தோண்டி, பிரேதபரிசோதனை செய்யாம விடமாட்டாங்க…! அவளுக்கு, நீங்க நியாயம் செய்யல கௌதம்..

 

அதே மாதிரி, என்னை தப்பா நினச்சவங்க முன்னாடி, இன்னும் அதே எண்ணம் தான் இருக்கு.. அது மாறாம, என்னோட காயம் எப்படி முழுசா குணமாகும் சொல்லுங்க..?!

 

உங்க செல்லம்மா, உங்களுக்கு முழுசா கிடைக்க, நீங்க அவளுக்கும், அவளோட குழந்தைக்குமான கௌரவம் திரும்ப கிடைக்க வைக்கறதுல தான் இருக்கு…!” என்று, தனது தேவையை எடுத்து சொன்னவளின் வார்த்தையில் இருக்கும் நியாயம் புரிய..

 

“செல்லம்மா, இப்ப உனக்கு, நா ப்ராமிஸ் பண்றேன். நம்ம அம்மூ, என்னோட பொண்ணுன்னு இந்த சமுதாயத்துல, நா நிறுத்தும் போது, சந்தேகத்தோட யாரும் ஒரு கேள்வியும் கேட்க மாட்டாங்க.. அத எப்படி செய்யணுமின்னு, எனக்கு நல்லா தெரியும்.. அடுத்து, உன்னோட கௌரவத்தையும் மீட்டு கொடுக்க வேண்டியதும், என்னோட பொறுப்பு…” என்றவன்,

 

சில கணங்கள் கண்களை இறுக மூடி திறந்து, “ஆனா, அதையும் தாண்டி, நீ பட்ட கஷ்டத்துக்கு, நிச்சயமா என்னால, எந்த மாற்றும் செய்திட முடியாது… இனி, இந்த மாதிரி நடக்காம நிச்சயம் பார்த்துக்கறேன்னு சொல்லறத தவிர…!” என்று, தனது தொண்டையில் அடைத்த துக்கத்தை, விழுங்கியவனின் குரல் மாற்றத்தில், இதுவரை இருந்த நிலை மாறி..

 

“சாரி, கௌதம் … நா, எதையும் வெளிப்படுத்தி, உங்கள கஷ்டப்படுத்திட கூடாதுன்னு நினச்சேன்..! ஆனா, நீங்க அத கேட்டதும், என்னால கண்ட்ரோல் செய்ய முடியாம சொல்லிட்டேன்..!” என்று பதறி, அவனிடம் மன்னிப்பை யாசித்தவளின், மீதான காதலுக்கு தான் செய்ய வேண்டியதை விரைவாக செய்திட வேண்டும், என்று மனதில் உறுதியான முடிவை எடுத்தவன்,

 

“செல்லம்மா, நீ சாரி சொல்லி, என்கிட்ட இருந்து விலகி போகாதே…! என்னை கேள்வி கேட்க மட்டுமில்ல, தேவைபட்டா அடிக்க கூட உனக்கு மட்டும் தான் அதிகாரமும், உரிமையும் இருக்கு..!” என்றவன் அவளின் மனதை மாற்றும் நோக்கில்,

 

“ஆனா, இப்ப அடிச்ச மாதிரி அடிச்சா என்னோட உடம்பு தாங்காதும்மா.. அடியா அது.. ஒவ்வொன்னும் சும்மா இடி மாதிரி… ஏதோ.. என்னோட எலும்பு ஸ்ராங்கா இருக்க, நெஞ்சு கூடு ஒடையல.. இல்ல…!” என்று, அவளின் மென்மையான அடியை ரசித்தவன், வெளியே கிண்டல் தோனியில் சொல்லிட,

 

அதுவரை அழுகையோடு அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தவள், அவனை முறைத்தவாறே விலகி, “உங்களுக்கு வலிக்குமேன்னு பார்த்தா, என்னையவே கிண்டல் செய்யறீங்க, உங்கள….” என்ற படியே, அறை முழுவதும் பார்வையால் அலசியவளின், எண்ணத்தை உணர்ந்த கௌதம்…

 

“செல்லம்மா வேணாம்.. நிஜமா எதையாவது தூக்கி அடுச்சிடாத..!” என்று சொல்லும் போதே, கையில் கிடைத்த பொருளையெல்லாம், அவன் மீது வீச துவங்கியிருந்தாள் அவனின் செல்லம்மா..

 

“அச்சோ.. செல்லம்மா.. வேணாம்டீ.. வலிக்குதுடீ…!” என்று அவன் மீது விழும் பொருட்களையெல்லாம், அருகே கிடைத்த தலையனை கொண்டு தடுத்தபடியே அவளை நெருங்கியவன், அவளின் இரு கரத்தையும், தன்னோடு சேர்த்து சிறை செய்தவன், மேலும் அவளை பேசவும் விடாது, அவளை அந்த உலகிலேயே இல்லாதபடி பார்த்துக்கொண்டான்.

 

காயத்ரி உறங்கியதை உறுதியாக்கி கொண்டவன், மெதுவாக அவளை விட்டு விலகி, தன்னை சரி செய்து கொண்டு கீழே வர, ஆரன் மட்டும் இன்னுமும் ஹாலில் இருப்பதை கண்டு, அவனிடம் விரைந்தான்.

 

ஆரனும், அவனின் வரவை எதிர்பார்த்திருந்தது போல, அவன் வந்ததும், “சாப்பிட்டு காயத்ரிக்கு கொண்டு போறையா?! இல்ல ரெண்டு பேருக்கும், எடுத்துட்டு போறையா?!” என்றிட..

 

“டேய் ஆரா, ஏன்டா எல்லாரும் என்னை கில்ட்டியா ஃபீல் பண்ண வைக்கறீங்க..?! எதுக்காக நீ இவ்வளவு தூரம் காத்திருக்கனும்.. உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருந்தும், அத விட்டு என்னை எதிர்பார்த்துட்டு ஏன் இருக்க?!

 

அவளும் சரி, நீயும் சரி ஏன், இப்படி என் மேல பாசமா இருக்கீங்க..? அதுக்கு தகுதியானவனா, நான்னு இருக்கு..!” என்று சொன்னபடி, தலையை தனது கரம் கொண்டு தாங்கி அமர…

 

“கௌதம், என்ன பேசற நீ? எந்த விதத்துல நீ அந்த தகுதிய இழந்துட்டேன்னு நினைக்கிற..?! அப்போ, நீ காட்டின பாசத்தை, இப்போ நாங்க காட்டறோம்.. ‘அன்பு மட்டும் தான், நம்ம கொடுத்ததை தாண்டி பலமடங்கா திரும்ப கிடைக்குமின்னு’ சாமு அடிக்கடி சொல்வாறு. அது நம்ம விசயத்தில நூறு சதவீதம் உண்மை…!” என்றவனின் பேச்சில் இருக்கும் நிஜம் புரிய, இது கலங்கும் நேரமல்ல.. இன்னும் இருக்கும் சிக்கலை சரியான விதத்தில் தீர்க்கும் நேரம், என்பதில் உறுதியான நொடி, மீண்டும் அவனுள் இருக்கும் தொழிலதிபனை மீட்டவன், அதன்படி ஆரனோடு சேர்ந்து சில திட்டத்தை வகுத்தான்.

 

ஆரனும், அவன் சொல்வதே சரியென பட,  அடுத்த சில மணிநேரத்தில் இருவரும், தங்கள் திட்டத்தை சரியாய் தீட்டி முடித்து, நிம்மதியோடு உறங்க சென்றனர். அம்முவை பற்றி கேட்ட கௌதமிற்கு, சச்சும்மா இன்றும் அழைத்து சென்றிருப்பதாய் சொல்ல, நிம்மதியோடு மேலே சென்றான், அடுத்த நாள் முதல், செய்ய வேண்டியதை மனதில் பட்டியலிட்டபடியே..

 

*****

 

சென்னையில் தனது இல்லத்திற்கு வந்ததும், அவளின் தூக்கம் கலையாது, மெல்ல தனது கரத்தில் ஏந்தியவன், வீட்டினுள் செல்ல போக, அவனை வாசலிலேயே தடுத்த ஹரிணி, கையிலிருந்த ஆரத்தியை சுற்றிய பிறகு செல்ல அனுமதிக்க, சிறு புன்னகையோடு அவளை ஏந்திய படியே, தன் இல்லத்தினுள் நுழைந்தான் கௌதம்…

 

அவளை படுக்கையில் விட்டுவிட்டு, கீழே வர ஆரனும், அமுதனும் தங்கள் செய்திருக்கும் ஏற்பாடுகள் பற்றி சொல்ல, தன் திட்டம் நல்லபடியாக நடந்திடும் என்ற எண்ணம், இன்னும் தெம்பை கொடுத்தது கௌதமிற்கு….

 

“ஏன்டா ஆரா, உன்ன ஹனிமூனுக்கு போயிட்டு வான்னு சொன்னா, அதுகூடவே, இங்க இவனோட சேர்ந்து, எக்ஸ்ட்ரா வேலை பார்த்து வச்சிருப்ப போலவே..!” என்றதும்,

 

தான் சொல்ல கூடாது என்று ரகசியமாய் செய்த ஏற்பாட்டை சொன்ன அமுதனை முறைத்தவன், “எட்டப்பா, நீ தான் போட்டு கொடுத்த, எப்படியும், என் தயவு உனக்கு தேவைபடும், அப்ப வச்சுக்கறேன்!” என்று சூட்சகமாக சொல்ல, புரிந்து கொண்ட அமுதன் திருட்டு முழி முழித்தான் எனில், கௌதமிற்கு குழப்பம் தான் எஞ்சியது…

 

அதனால், “ஆரா, என்ன சொல்ற.. என்ன தயவு.. என்னடா விசயம்?!” என்றதும்… “கௌதம், முதல்ல உன் மேட்டரை முடிப்போம்.. அடுத்து அவனோட பார்க்கலாம்!” என்று அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகே அமுதனுக்கு நிம்மதியானது. ஆனாலும், தன் மனதை கௌதமிடம் சொல்லும் போது, எதாவது தடை வந்திடுமோ?! என்ற அச்சமும் மனதின் ஓரம் எழாமலும் இல்லை அவனுக்கு…

 

நேரம் நள்ளிரவை தொட்டிருக்க, அதன் பின் அனைவரும் உறங்க சென்றனர், மறுநாள் அனைவருக்கும் நல்லவிதமாய் விடிய வேண்டும் என்ற எண்ணத்தோடு….

 

காலை கண்விழித்த காயத்ரிக்கு, நேற்று காரில் பயணம் செய்தது மட்டுமே நினைவில் இருக்க,  இது எந்த இடம், தான் எப்படி இங்கே?! என்பதை உணர சில நிமிடம் பிடித்தது.. புரிந்த போது கண்ணில் சிறு பதட்டமும், பரிதவிப்பும் எழுவதை, அவளாலேயே தவிர்க்க தான் இயலவில்லை. அவள் விழித்தது முதல் அவளை பார்த்திருந்த கௌதமிற்கு மனம் வலித்தாலும், எப்படியும் அவள் வந்து சேர வேண்டிய இடம் தானே.. என்பதில் உறுதியாய் இருந்தவன்..

 

“செல்லம்மா எழுந்திட்டையா..? சீக்கிரம் ப்ரஷ் ஆகிட்டு வா.. ஆரன், ஹரிணி நைட்டே வந்துட்டாங்க…” என்று, அவள் இங்கே வருவதற்கு தெரிவித்த மறுப்பு தெரிந்தும், தெரியாதது போல இயல்பாய் பேசி, அவளை கிளப்பி கீழே அழைத்து வந்தவன், பின் அவளை கண்டு கொள்ளவே இல்லை.

 

மற்ற அனைவரும் மகிழ்ச்சியாய் இருக்கும் தருணத்தில், தான் ஒன்றவும் முடியாது, விலகி செல்லவும் முடியாது தவித்தவளின் செயல் புரிந்தாலும், யாரும் அதை பொருட்படுத்தாமல், அவரவர் பங்கிற்கு அவளின் எண்ணத்தை திசைமாற்ற வேண்டியதை செய்து கொண்டே இருந்தனர்.

 

ஆரன், ஹரிணி இருவரும் பத்து நாட்கள் வெளிநாடு சென்று வந்ததால், பிரிந்திருந்த பொழுதை சரி கட்டும் நோக்கில், அம்மு சிறிதும் ஆரனை விட்டு விலகாது இருக்க.. ஹரிணி தாங்கள் வாங்கி வந்தவை பற்றியும், சென்ற இடங்கள் பற்றியும் பேசி, அவளை வேறு சிந்தனையில் ஆழ்ந்துவிடாது பார்த்துக்கொண்டாள்.

 

மாலை வரை, காயத்ரியோடு இருந்தவர்கள், மெல்ல அவளை விட்டு விலகி செல்ல, தனிமையை நாடி தங்கள் அறைக்கு வந்தவளிடம் வந்த கௌதம், “செல்லம்மா, நம்ம ஒரு இடத்துக்கு போகணும். சோ, இதுல இருக்கற புடவை, நகைய போட்டு தயாராகிடு..” என்றதும்..

 

“இல்ல கௌதம், நா எங்கையும் வரல.. நீங்க போயிட்டு வாங்க..!” எனும் போதே, அவள் இங்கு இருந்த போது எத்தனை விதமான பேச்சிற்கு ஆளாகி இருந்தால், சாதாரணமாக வெளியே செல்லவே, இப்படி தயங்குவாள்?! என்பது புரிய இதயம் கணத்து போனாலும், இது அவளை மீட்கும் நேரம் என்பதால் தன்னை திடப்படுத்தியவன்..

 

“காயத்ரி…. நா, உன்னை வர்றியான்னு கேட்கல… வந்து தான் ஆகணுமின்னு சொல்றேன்! இன்னும் பதினைந்து நிமிஷத்துல நீ ரெடி ஆகிற.. இல்ல நானே உன்னை ரெடி செய்ய வேண்டி வரும்..!” என்று கடுமையான குரலில் சொல்லி வெளியேற…

 

அவன் தன் பெயர் சொல்லி அழைத்ததிலேயே, அவன் சொன்னதை செய்தே தீரவேண்டும் என்ற உத்தரவு இருப்பது புரிய, அவனின் பிடிவாதம் உணர்ந்து.. தன்னை தயார் செய்யதுவங்கினாள்.

 

சொன்னபடி சரியான நேரத்தில் வந்தவன், அவள் தயாராகி இருப்பதை பார்த்து, மனதில் மெச்சிக்கொண்டவன், அதை வெளிப்படுத்தினால், மீண்டும் அவள் அதே புராணத்தை துவங்குவாள் என்பதால், கடினமான முகத்தோடே, “வா.. போலாம்!” என்று கீழே அழைத்து வர இவர்களை தவிர யாரும் அங்கு இருப்பதற்கான அறிகுறியே இல்லை.

 

கேள்வியாய் கௌதமின் முகம் பார்க்க, “அவங்க அம்முவோட வெளிய போனாங்க. நம்மளும் போயிட்டு வரும் போது, அவங்களும் நம்மோட ஜாயின் ஆகிடுவாங்க..!” என்றிட,

 

ஆமோதிப்போ, எதிர்ப்போ எதுவும் இல்லாது இயந்திர கதியில் சென்று வாகனத்தில் ஏறியவளிடம், ‘கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ செல்லம்மா, நீ கேட்டத, நா உனக்கு கொடுக்க போற தருணம் வந்திடுச்சு..!’ என்று மனதால் பேசியவன், கைகள் வாகனத்தை இயக்கி செல்ல வேண்டிய இடம் நோக்கி பறந்தது.