UEJ-37(2)

கௌதமின் வாகனம், சென்னை போக்குவரத்தில் நுழைந்து, தங்கள் வந்து சேரவேண்டிய இடத்தை அடையும் முன்பே, ஆரனும், அமுதனும் அழைத்து எங்கே இருக்கிறார்கள்? என்பதை தெளிவுபடுத்தி கொள்ள, அவர்கள் அழைப்புக்கு, கௌதம் சொன்ன பதிலை கூட உணராது அமர்ந்திருந்தாள் காயத்ரி.

 

மிகவும் பிரமாண்டமான விளையாட்டு அரங்கம் ஒன்றில் நுழைந்தவனை, வரவேற்க காத்திருந்த சதாசிவமும், அவர்கள் கம்பெனியின் மிக முக்கிய பொறுப்பாளர்களிடமும், மரியாதை நிமிர்த்தமாய் பேசியவன், புரியாது குழப்பத்தில் இருந்தவளின், கரத்தோடு தனது கரம் கோர்த்து, உள்ளே அழைத்து சென்றான் தனி பாதை வழியாக..

 

அந்த அரங்கம் முழுவதும், சக்கரவர்த்தி குழுமத்தை சேர்ந்த முதன்மை ஊழியர்கள் முதல், கடைகோடி ஊழியர்கள் வரை குடும்பத்தோடு நிறைந்திருக்க, அதோடு அனைத்து மீடியாக்களும் வரவழைக்கபட்டிருந்தது.

 

சில மாதங்களாகவே, தன் நிறுவனம் துவங்கி எழுபத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெற்றது தொடர்பாய், ஒரு பவழவிழாவிற்கு ஏற்பாடு செய்வது குறித்து சதாசிவமும், அந்த நிறுவனத்தில்  தங்களின் வரவுசெலவுகளை தொடர்ந்து கொண்டிருக்கும் சிலரும், கேட்டதை கிடப்பில் வைத்திருந்தவன், அதை தன் குடும்பத்தின் அறிமுகவிழாவாக்கிட முடிவு செய்தவன், அதில் செய்ய வேண்டிய சில முக்கிய வேலையை அமுதனிடம் ஒப்படைத்தான். அதன்படி,  விழா ஏற்பாடுகளில் ஒன்றாக, மிக முக்கிய தொலைக்காட்சி நிறுவனத்தோடு இணைந்து, இந்த நிறுவன நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டிய ஒப்பந்ததை போட்டிருந்தது.

 

இவர்கள் வரவு தெரிவிக்கபட்ட நொடி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டிருந்த, தொகுப்பாளர், சக்கரவர்த்தி குழுமத்தின் துவக்கத்தையும், வளர்ச்சியையும் பற்றி தங்கள் பாணியில் ஒரு ஏவியும்.. அதோடு அந்த குழுமத்தின் குடும்பம் குறித்த ஏவியும், இப்போது திரையில்! என்று அறிவிக்க…

 

அங்கிருந்த அனைத்து திரையிலும், அவர்கள் நிறுவனம் பற்றிய தொகுப்போடு, முதலில் சக்கரவர்த்தியும், அவரின் மனைவி, குழந்தை என துவங்கி, அடுத்து அடுத்து கௌதமின் தாயார் மற்றும் கௌதமின் குழந்தை படம் முதல், இப்போதைய புகைப்படம் வரை அணிவகுக்க, கடைசியாய் கௌதம், காயத்ரி, ஆராதனா இணைந்திருக்கும் படத்தோடு, ஆராதனாவின் குழந்தை பருவம் முதல் ஒவ்வொன்றாய் வலம்வர,

பார்த்திருந்த சதாசிவமே ஒரு நொடி திகைத்து தான் போனார்.. கௌதமின் தாயாருக்கும், ஆராதனாவிற்குமான உருவ ஒற்றுமையில்…

 

இதில் கௌதம், தன் தாயை கொண்டு பிறந்திருக்க, கௌதமும், ஆராதனாவும் இருக்கும் புகைபடத்தை பார்த்த அனைவருக்கும், குழந்தை கௌதம் சக்கரவர்த்தியுடையது தான் என்பது சொல்லாமலேயே விளங்கிவிடும் வண்ணம் இருந்தது.

 

காயத்ரிக்கு நடப்பது அனைத்தும் கனவு போன்று இருக்க, அந்த தொகுப்பு முடிந்ததும், அடுத்து அந்த நிறுவனத்தின் சீ ஈ ஓ என்ற முறையில் கௌதம் சக்கரவர்த்தி பேச அழைக்கப்பட… எழுந்த கரவொலி அடங்கவே சில நிமிடம் ஆனது.. தாங்கள் கேட்காமலேயே, பல நலத்திட்டங்களையும், சலுகையையும் அளிக்கும் தங்கள் முதலாளியை நேரில் பார்த்ததே அவர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்க..  மேடை ஏறிடும் போது, அம்முவை தூக்கி கொண்டவன், காயத்ரியின் கரம் பற்றி மேலே வர, அனைவருக்கும் அவ்வளவு நிறைவாய் இருந்தது அந்த தருணம்…

 

குடும்பமாய் மேடையில் நின்றவனிடமிருந்து பார்வையை விலக்கிட இயலாது இருந்தவர்களே அதிகம் அங்கே.. கௌதம் போட்டிருந்த வெண்ணிற கோட் சூட்டிற்கு ஏற்ப, காயத்ரியும் வெண்மை நிறத்தில் பட்டு உடுத்தி, முத்துக்களால் ஆன நகையை அணிந்திருக்க, ஆராதனாவோ.. தாய், தந்தை போலவே வெண்ணிற கவுனில் குட்டி ஏஞ்சலாய் தெரிந்தாள். கௌதம், ஆராதனாவின் ப்ரௌன் நிற விழிகளில் இருந்த மகிழ்ச்சி, பெரிய திரையில் தெளிவாக காட்டப்பட… மீடியாக்களின் ப்ளாஸ் வெளிச்சம் கண்ணை கூசிட செய்தது.

 

கரத்தில், தனது மகளை வைத்த வண்ணமே மைக்கை பெற்றுக்கொண்டவன், முதலில் தனது நிறுவனம் இவ்வளவு தூரம் நல்ல முறையில் நடக்க காரணமான தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் மனமார்ந்த நன்றியை சொன்னவன், அவர்களுக்கான புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும், சலுகையையும் சொல்ல.. ஆரவாரமும் சந்தோஷ கூச்சலும் அடங்கவே பல நிமிட நேரம் ஆனது.

 

பேச்சோடு பேச்சாக, தன் மனைவி, மகளை எல்லாருக்கும் அறிமுகம் செய்வது போன்று சொல்லிட, காயத்ரியின் மனதில், இதுவரை இருந்த கவலை மெல்ல கரைய துவங்கியது. அடுத்து அனைவருக்கும் உணவு வழங்கப்பட… கூட்டம் கலைய துவங்கியதும், காயத்ரியை நெருங்கி பேசியவர்கள் யாரும், வேறு எந்த கேள்வியும் கேட்காது போக, அதுவே பெரும் நிம்மதியை விதைத்தது காயத்ரிக்கு..

 

முக்கிய விருந்தினர்கள் அனைவரிடமும் காயத்ரியையும், ஆராதனாவையும் அழைத்து சென்று தனிப்பட்ட முறையில் அறிமுகம் செய்ய, ‘எங்கே தன்னை பற்றிய கேள்வி வந்திடுமோ..? திருமணம் நடந்தது குறித்த கேள்விகள் எழுமோ?!’ என்ற காயத்ரியின் கவலைக்கு வேலையே இல்லாது, அதை விடுத்து.. “அப்பாடா, ஒருவழியா இப்படியாவது, உன் பேமிலிய எல்லாருக்கும் காட்டின கௌதம்..! எங்கே, உன்னை மாதிரியே உன் மனைவியையும், மகளையும் வெளியுலகத்திற்கு காட்டாமையே போயிடுவியோன்னு  எல்லாரும் நினச்சோம்” என்றிட, சிறு புன்னகையை பரிசாக்கியவன், அனைவரையும்  கவனித்து அனுப்பும் வேலையில் மூழ்கி போனான்.

 

சதாசிவமும், காயத்ரியிடம் தனிப்பட்ட முறையில், தனது தவறான புரிதலுக்கு மன்னிப்பை யாசிக்க, “அங்கிள், யாருமே தெரிஞ்சு எதையும் செய்யல.. நடந்த எதையும் மாற்ற முடியாது.. விடுங்க..!” என்றிட, அவளின் பெருந்தன்மையா பதிலில் நிம்மதி பெருமூச்சோடு, தனது பணியை தொடர சென்றார்.

 

ஆரன், அமுதன் இருவரும் மற்ற ஏற்பாடுகள் சரியாக நடக்கிறதா? என்பதை பார்த்திருக்க, ஹரிணியும், சச்சும்மா, தேவி, ஹரிணியின் அன்னை, சாம்பவி அனைவரும் காயத்ரியோடு இணைந்து கொண்டனர் அவளுக்கு துணையாக…

 

அந்த விழாவின் போட்டோக்களும், வீடியோவும் அனைத்து டிவி பேப்பர்களிலும், சோசியல் மீடியவிலும் வலம் வர, ஒரே நாளில்  சக்கரவர்த்தி குழுமத்தின், அடுத்த வாரிசு என்ற தலைப்போடு, ஆராதனாவின் புகைப்படம் வைரலாகி போனது..

 

சில புல்லுருவிகள், காயத்ரியின் கடந்தகாலத்தை தோண்டி துருவ, சரியாக அதேநேரம் வெளிவந்தது, துஷ்யந்த் கோர்ட்டில் அளித்த வாக்குமூலம்.. பல்வேறு விசயத்திற்கு நடுவே, சக்கரவர்த்தி குழுமம் உருவாக்கிய பைனான்ஸ் கம்பெனியால், தங்களின் வட்டி தொழில் பாதிக்கப்பட்ட கோபத்தில், கௌதம் சக்கரவர்த்தியின் மனைவியையும், பிரண்ட் ஆரன் சாமுவேலையும், ஒரு ஹோட்டலுக்கு கௌதம் வெளிநாடு சென்றிருந்த நேரத்தில் வரவைத்து, தான் செய்து வந்த போதை மருந்து கடத்தலால், வைத்திருந்த போதை மருந்தை, அவர்களுக்கே தெரியாமல் கொடுத்து, அவர்களுக்கிடையே தகாத உறவு இருப்பதாக சித்தரித்து, அவனின் வளர்ச்சியை தடுக்க நினைத்ததும் சொல்லப்பட்டிருக்க.. அன்று நடந்த நாடகம் அம்பலமானது அழகாய்….

 

நம்பிக்கையில்லாமல் பேசும் சிலரும் இருந்த போதிலும், தன் மேல் விழுந்த பழியை போக்கவும், தங்களின் மகளை, இந்த சமுதாயத்திற்கு மத்தியில் கௌரவமான நிலையில் நிறுத்தியிருக்கும், கௌதமின்  செயலிலும், மொத்தமாய் கவிழ்ந்து தான் போனாள் அவனின் செல்லம்மா..

 

அவனிடம், அதை வெளிப்படுத்த நினைத்து காத்திருக்க, இரண்டு நாட்கள், அவளின் கண்ணில் சிக்காமல் கண்ணாமூச்சி ஆடியவனின் மீது, ஏக கடுப்பில் இருந்தவள், ‘இனி வந்து, செல்லம்மா… ஏன்னா..!!! சொல்லுன்னு கேட்டா… இருக்கு அவருக்கு…!’ என்று மனதில் அவனோட சண்டையிட்டவள், ஹரிணி வந்து வெளியே செல்ல கேட்ட போது, எங்கே செல்கிறோம் என்று கூட கேட்காமல் கிளம்பினாள், காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சியை அறியாமலே….

 

சென்னை ஏர்போர்டிலிருந்து, திருச்சி வரை வந்த போதும், காயத்ரி இருந்த மனநிலையில், கண்ணில் பதிந்த எதுவும் கருத்தில் பதியவே இல்லை… ஏர்போர்ட்டிலிருந்து நேராக காரின் மூலம், ஸ்ரீரங்கம் வந்தவர்கள், காயத்ரியின் அக்ரஹாரத்தில் நுழைய, அப்போது தான் சுற்றம் உணர்ந்தவளுக்கு, இது மிகப்பெரிய அதிர்ச்சியாகவே இருந்தது.

 

அவர்கள் வந்த வாகனம், காயத்ரியின் வீட்டிற்கு நேர் எதிர் வீட்டில் நிற்க, குழப்பத்தோடு இறங்கியவளுக்கு விடையாய், அந்த வீட்டில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் அமைந்தது. காயத்ரி வந்ததும் அங்கு வந்த கௌதம், புதிதாக மாற்றி அமைக்கப்பட்டு, கிரகபிரவேசத்திற்கு தயாராய் இருந்த இல்லத்தில் காயத்ரியோடு நுழைய, வெளியே பட்டாசும், வானவேடிக்கையும் என தூள் கிளப்பி கொண்டிருந்தனர் ஆரனும், அமுதனும்..

 

நடந்த கலோபரத்தில், வெளிவந்த அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு, சட்டென ஆரனை அடையாளம் தெரியாது இருந்தாலும், காயத்ரியை பார்த்த பின், அவனை நன்கு தெரிய, சில நாட்கள் முன்பு டிவியிலும், பேப்பரிலும் ஓயாமல் வந்த செய்திகளின் விளைவாக, அனைத்து விசயமும் ஒரளவுக்கு தெளிவாகி இருந்ததால், அவர்களின் செயலில் அதிருப்தி கொள்ளாமல் விலகியே நின்றனர்.

 

பட்டாசு சத்ததில் வெளிவந்த ராமையும், சங்கரையும் பார்த்த ஆரனுக்கு, அன்றைய நாளின் கோபம் மீண்டும் ஊற்றெடுத்தாலும் முயன்று கட்டுப்படுத்தியவன், “என்ன பெரியமனுஷா… சௌக்கியமா இருக்கீங்களா…?! பார்த்தாலே தெரியுதே, ஜம்முன்னு இருக்கீங்கன்னு…!!” என ஆரம்பிக்க.. சரியாக அந்த நேரம் மீண்டும் வெளியே வந்த கௌதம்… “ஆரா.. என்ன இது மரியாதை இல்லாம.. போ, போய் உள்ள வேலைய பாரு” என்றிட..

 

“டேய் கௌதம், உனக்கு தெரியாதுடா அன்னைக்கி..” என்றவனை மேலும் பேசவிடாது.. “ஆரா, சொன்னத செய்.. உள்ள போ முதல்ல.. அமுதா, நீ அவன கூட்டிட்டு போ..!” என்றதும், வேண்டா வெறுப்பாய் உள்ளே சென்றாலும், திரும்பி அங்கிருந்தவர்களை முறைக்கவும் தவறவில்லை ஆரன் சாம்வேல்…

 

அவர்கள் சென்றதும், நேராக காயத்ரியின் தந்தையிடம் வந்தவன், “மன்னிச்சிடுங்க.. அன்னைக்கி நீங்க நடந்துட்ட முறைய வச்சு, அவன் இப்படி பேசிட்டான்..” என்று தன்மையாய் பேசியவனின் மீது, முதன் முறை நன்மதிப்பு தோன்றியது அனைவருக்கும்.. அவனின் உயரம் பற்றி, ஏற்கனவே அறிந்திருந்ததால், நிச்சயம் அவனிடம் இந்த நடத்தையை எதிர்பார்க்கவில்லை யாரும்…

 

அவர்கள் முகத்தில் திருப்தியை காட்டியதும், அதை உணர்ந்தவன், “சார், உங்கிட்ட ஒண்ணு கேட்கலாமா…?!” என்று காயத்ரியின் தந்தையிடம் கேட்க, ‘சரி..!’ என தலையசைத்த சங்கரை பார்த்தவன்,

 

“காயத்ரி பிறந்தது முதல், இருவது வருஷம் வளர்த்த உங்களுக்கு, அவ தப்பு செஞ்சிருக்க மாட்டான்னு, ஒரு செக்கண்ட் கூடவா தோணல…?! ஆரனை பத்தி தான், உங்களுக்கு தெரியாது..? ஆனா, அவளை நம்பி, ஒரு வார்த்தையாவது கேட்டிருக்க வேணாமா…?!

 

நா, அவளோட பழகினது வெறும் ஒரு வருஷம் தான்.. அந்த ஒரு வருஷ பழக்கத்துல, அவள அந்த கோலத்துல பார்த்த போது, எனக்கு தோனாத சந்தேகம், உங்களுக்கு எப்படி வந்துச்சு…?! யாரால, அவ இப்படிபட்ட நிலையில நிற்க வேண்டி வந்துச்சோ.. அவளுக்கு உதவி செய்ய, நா இல்லாம போயிட்டேனே ன்னு தான், தினம் தினம் மறுகி போனேன்!

 

நீங்க விசயம் கேள்விபட்ட போதும் போகல.. அவளா தேடி வந்த போதும், கேவலப்படுத்தி அனுப்பினதோட, குத்துயிரா கிடந்தவளுக்கு, ஒருவாய் தண்ணி கூட கொடுக்காம, ஈவு இறக்கத்த மறந்த அரக்கனா மாறி போனது, எப்படி சார்…? கொஞ்சம் கூடவா, பெத்த மனசு தவிக்கல…..?!

 

நீங்க மட்டும், அவகிட்ட ஒரு தடவ நடந்தத கேட்டிருந்தா, அவ இத்தன வருஷம் தவிக்க வேண்டியே இருந்திருக்காதே.. ஒருத்தர், தான் பிறந்த வீட்டையே வெறுத்து போய், ஒதுக்கறது எவ்வளவு பெரிய விசயம் சார். அதை அவள செய்ய வச்சிட்டீங்க.!!!

 

நா, உங்கள பார்த்து, மன்னிப்பும், தேங்க்ஸ் ம் சொல்ல வேணுமேன்னு தான் வந்தேன்.. எதுக்குன்னு பார்க்கறீங்களா…! உங்களோட சம்மதம் இல்லாம, உங்க மகளை கல்யாணம் செஞ்சதுக்கு மன்னிச்சிடுங்க… அதே நேரம், தேவதை மாதிரி ஒரு பொண்ணை பெத்து, குணவதியா வளர்த்து, எனக்கு கொடுத்ததுக்கு.. தேங்க்ஸ்..!!” என்றவன், அதோடு பேச்சு முடிந்தது, என்னும் வண்ணம் அங்கிருந்து நகர, அவனின் ஒவ்வொரு கேள்விக்கும், தங்கள் அன்று உணராத, குற்றஉணர்வை இப்போது, தாங்கி நிற்க இயலாது, தலைகுனிந்து நின்றனர் காயத்ரியின் பிறந்தவீட்டினர்…

 

அவர்களோடு பேசி முடித்து கௌதம் உள்ளே வர.. அவனை எரிக்கும் பார்வையோடு எதிர் கொண்டாள் அவனின் சகதர்மிணி…

 

அவளின் பார்வையை தயங்காமல் எதிர் கொண்ட கௌதமிற்கு, அவளின் முறைப்பு, அச்சத்திற்கு பதிலாக சிரிப்பையே கூட்ட, “செல்லம்மா, என்ன லுக்கு பலமா இருக்கு..?!” என்று சிரித்தபடியே நக்கலாய் வினவ..

 

ஏற்கனவே கௌதம் சென்று அவர்களோடு பேசியதிலும், இங்கு இத்தகைய ஏற்பாடு செய்து வரவைத்தை சொல்லாத கோபமும் சேர, அனைவரின் முன்பும், “யார் போய், அவங்கிட்ட பேச சொன்னா உங்கள…? அவங்க முகத்தையே பார்க்க கூடாதுன்னு இருந்தேன்.. என்னைய இங்க வரவச்சதும் இல்லாம, போய் அவங்க கூட உறவாடிட்டு வர்றீங்க.. உங்களா….?!” என்று கத்தி பேசிட…

 

அம்மு முதல் அத்தனை பேர் மத்தியிலும் வைத்து, இவ்வாறு பேசிவளின் மீது வந்த கோபத்தை, அவளை போன்று அங்கேயே காட்டாது, அருகே இருந்த அறைக்குள் இழுத்து வந்தவன், “என்ன பேசற செல்லம்மா…?! அம்மு முன்னாடி பேசறோமுன்னு கொஞ்சமாச்சும் அறிவு வேணாம்.. குழந்தை என்ன நினைப்பா…?!

ஆயிரம் இருந்தாலும், உன்னை பெத்து வளர்த்தவங்க அவங்க.. அம்முவோட தாத்தா, பாட்டி உறவு.. அவ நாளைக்கி, அவங்க கூட பேச வேண்டி வந்தா, அதுக்கு இப்ப நீ காட்டற கோபம், தடையாகிட கூடாது..

 

அதோட, அவங்களுக்கு தெரியாம நம்ம செஞ்சது சின்ன காரியம் இல்ல, முதல்ல அத புரிஞ்சுக்க… அவங்க தப்பு செஞ்சாங்க தான், இல்லன்னு சொல்லல.. அதே நேரம் நம்மளும் தப்பு செஞ்சிருக்கோம்.. அதையும் மறக்காம இருக்கறது தான் சரி… இப்பவும் நா போய் உறவு கொண்டாடிட்டு வரல… அவங்க செஞ்ச தப்பை சுட்டிகாட்டிட்டு, நம்ம தப்புக்கு மன்னிப்பு கேட்டுட்டு  வர தான் போனேன்…!” என்றதும் ..

 

கௌதம் சொல்வதில் உள்ள நியாயம் புரிந்ததை விட, அவன் கேட்ட மன்னிப்பே பிரதானமாக அவளுக்கு தெரிய,

“ஏன்னா….. நீங்க எதுக்கு, அவங்ககிட்ட மன்னிப்பு கேட்கனும்..?! அந்த அளவுக்கு நீங்க, இறங்கி போகணுமின்னு அவசியம் இல்ல…!” என்றவளுக்கு,

 

தனக்காக அவனின் உயரம் மறந்து இறங்கிபோய், மன்னிப்பை யாசித்தவனின் மீதான நேசத்தின் வெளிபாடாக, இரு தினங்களாய் போட்டிருந்த கோபத்திரை விலகிட, அவனின் பிரத்தியேக அழைப்பு, அவளையும் அறியாது வெளிவந்தது…  

 

கௌதம் இதுநாள் வரை  எதிர்பார்த்திருந்த, தன்னவளின் அழைப்பு மட்டுமே நெஞ்சத்தையும், செவியையும் நிறைக்க, அவனின் கண்கள் சந்தோஷத்தில் ஜொலித்தது..

 

அவள் பேசி முடித்த பின்பு, அவன் கண்ணில் தெரிந்த ஒன்றில் தான், அவள் அவனை அழைத்த விதம் நினைவில் வர, தன் நாக்கை கடித்தபடி, ஒற்றை கண் சிமிட்டி, மாட்டிக்கொண்ட பாவனையில் நின்றவளை பார்த்தவனுக்கு, முதன்முறை சந்தித்த போது கண்ணாடியில் கண்ட அதே தோற்றம் நினைவில் எழ.. அவனை தன்னோடு சேர்த்து அணைத்தவன், அவளின் இதழை, தன் இதழ் கொண்டு சிறை செய்திருந்தான், அன்று செய்தது போலவே…

 

அன்று போல இல்லாது, உரிமையோடு நடந்த இதழ் தீண்டல் என்பதால், நேரம் கடப்பதை உணராது, தன்னிலை மறந்திருந்தவர்களை, மீட்டது அம்முவின் அழைப்பு…

 

அம்மு கதவை தட்டிய சத்தத்தில், அவசரமாக பிரிந்தாலும், இருவரிடமும் அதன் தாக்கம் பிரதிபலிக்கவே செய்தது..

கௌதம் உடனே தன்னை சரியாக்கி கொள்ள, அவனால் சிவந்திருந்த முகத்தையும், இதழையும் சீர்படுத்த, செல்லம்மா மிகவும் பிரயத்தனம் செய்ய, அவளின் செயல் அவனுக்கு சிரிப்பையே தந்தது..

 

அவளை பார்த்து சிரித்தவனை, முறைக்க முயன்று தோற்றவள், “போங்கன்னா.. எல்லாம் உங்களால தான்…! இப்ப எப்படி அம்முவ பேஸ் பண்ணுவேன்.. அவ கேட்கற கேள்விய நினச்சாலே, பயமா இருக்கு..!” என்று சினுங்கினாலும், அவளின் வார்த்தையில் இருக்கும், உண்மை புரியாமல் இல்லை.. ஏனெனில் அம்முவின் கேள்விகளால், பலமுறை இதே போன்று முழித்த ஆரனையும், ஹரிணியையும் கண்டிருக்கிறானே…  

 

“டோன்ட் வொரி, செல்லம்மா.. உன்னோட கௌதம் இருக்க பயம் ஏன்..? முதல்ல நா போய், அவள கூட்டிட்டு மொட்டை மாடி போயிடுறேன்.. நீ, கொஞ்ச நேரம் கழிச்சு வா..” என்றவன், சொன்னது போலவே அம்முவோடு மாடிக்கு செல்ல, ஆரனும், அமுதனும் அவர்களோடு இணைந்து கொண்டனர்..

 

மாடிக்கு வந்ததும், அம்மு, அமுதனோடு ஐக்கியமாகிட, ஆரனும், கௌதமும் அங்கிருந்த திட்டில் அமர்ந்தபடி அவர்களை பார்த்திருந்தனர். அப்போது, “கௌதம், எனக்கு ஒரு டவுட்…” என்ற ஆரனை, ‘என்ன..?’ என்பதாய் ஒரு பார்வை பார்த்த கௌதமிடம்,

 

“அந்த துஷ்யந்த், எப்படிடா, இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்தான்?! அவன் செஞ்ச, எல்லாத்துக்கும் காரணமே வேற..” என்றவனுக்கு,

 

“அதுவா, அவன அப்படி தான் சொல்லணுமின்னு, சொல்லி தானே கோர்ட்டுக்கே கூட்டிட்டு போக வச்சேன்” என்று கூலாக சொன்ன கௌதமின் பதிலில்,

 

“வாட்…!! என்னடா சொல்ற..?!” என்று ஆரன் அதிர்ந்து கேட்க,

 

“ஆமாம்டா.. ஹரிணி இன்ஸ்ஷிடென்ட் நடந்த அன்னைக்கி, நாங்க அவன பாலோ பண்ணி தான், பெங்களுரே வந்தோம்.. உன்னோட கம்பெனிக்கு எதிராவும் சில விசயத்தை செய்ய போறது அப்போ தான் தெரியவந்திருந்த நேரம்.. அதனாலையே சீக்கரமா அவனோட ஆட்டத்திற்கு முடிவு கட்ட அவனை விடமா தொடர்ந்துட்டு இருந்தோம்…

 

அப்ப அவனோட கார் பக்கத்துல இருந்த டைம்லேயே, உன்னையும், காயுவையும் சிக்னல்ல பார்த்தேன்.. மனசு அதுக்கு அப்புறம் ஒரு மாதிரி இருக்க.. அமுதனையும், பாதுகாப்புக்காக கூட வச்சிருந்த சிலரையும், அவன பாலோ பண்ண வச்சிட்டு, நா போயிட்டேன். அவங்க கூட, ஜாயின் ஆக வர்ற நேரத்துல தான், ஹரிணிய பார்த்து காப்பாத்தினது..

 

அப்பவே, பல முக்கியமான எவிடென்ஸ் அவனுக்கு எதிரா கலெக்ட் பண்ணிட்டோம்.. அதெல்லாம் வெளி வந்தா, அவனோட உயிருக்கு ஆபத்து.. அத காட்டி, மிரட்டி தான் கோர்ட்ல அப்படி சொல்ல வச்சேன்..!” என்றதும், ‘தனக்கு தெரியாமல், இன்னும் எத்தனை செய்திருக்கிறானோ!’ என்ற எண்ணத்தில்…

 

“இத்தன நாள் கூடவே தானேடா இருந்தேன்… ஒருவார்த்தை இதபத்தி சொல்லவே இல்ல…?” என்றிட..

 

“நீ மட்டும், எல்லாத்தையும் சொல்லிட்டா செஞ்ச..? இந்த வீடு வாங்கி, ஆல்டர் பண்ணற வரைக்கும், யாருக்கும் தெரியாம தானே செஞ்ச.. கடைசி நேரத்தில, அமுதன் ஹெல்ப் தேவை பட, அவன் மூலமா விசயம் எனக்கு தெரிஞ்சுது..!” என்றவனிடம்,

 

“கௌதம், அன்னைக்கி காயத்ரி, இதே வீதியில ரோட்டுல கிடந்த அந்த காட்சி என்னால எப்பவும் மறக்க முடியாதுடா…அவ, எப்படி பட்டவனோட மனைவி.. எப்படிபட்ட ராஜவாழ்க்கை வாழறான்னு, இங்க இருக்கறவங்க ஆச்சர்யப்படற, மாதிரி கூட்டி வந்து நிறுத்தனுமுன்னு, எனக்கு அப்பவே ஒரு வெறிடா.. அதுக்கான சந்தர்ப்பம் இப்ப தான் எனக்கு கிடச்சிருக்கு…!” என்றவனின் வைராக்கியத்திற்கு பின்னால், தங்களின் மீதான பாசமே நிறைந்திருப்பதை உணர்ந்த கௌதம்.. தனது கரம் கொண்டு, அவனின் கரத்தை பற்றி, ‘நீ நினைப்பதை செய்.. துணையாக நான் இருப்பேன்.. என்னாளும்…’ என்றான் சூட்சகமாய்….

 

அவனின் மனதை மாற்றிட வேண்டி, “ஆமா ஆரா, நானும் கேட்க மறந்துட்டேன்.. அன்னைக்கு, இந்த வீடு பத்தி பேசும் போது.. அமுதனை எதோ சொல்லி மிரட்டினையே.. என்னடா விசயம்…?” என்றிட,

 

கௌதமை பார்த்து தனது கண்ணை சிமிட்டிவிட்டு, அமுதனை ஜாடையால் காட்டியவன், “அதுவா சாருக்கு கல்யாண ஆசை வந்திடுச்சு.. அவரே பொண்ணெல்லாம் பார்த்து வச்சிருக்காரூ.. தெரியுமா?!” என்றுவிட்டு சிரிக்க..

 

“வாட்..  என்னடா சொல்ற.. அவன் என்கூட தானே இருக்கான். எங்க போய் தனியா பொண்ணு பார்த்து பேசி பழகினான்…” என்று அதிர்வது கௌதம் முறையாகி போனது…

 

“வெளிய எல்லாம் தேடல… அவனுக்கு நம்ம சாம்பவி மேல ஒரு க்ரஸ்… அவன் எங்க கல்யாண சமயத்தில இருந்தே, கொஞ்சம் ஒவரா அவள கவனிக்கற மாதிரி இருந்துச்சேன்னு, நோட் பண்ணினேன்.. பயபுள்ள வசமா மாட்டிக்கிச்சு ஒருநாள்…!” என்று ஆரன் அமுதனை கண்டு கொண்டதை சொல்லிட,

 

சிறு யோசனைக்கு பின், “சாம்பவிக்கு ஏத்த ஆள் தான் அமுதன்.. பட், அத்தை என்ன சொல்லுவாங்க ஆரா..?!” என்று சந்தேகத்தை கேட்க,

 

“கௌதம், அவங்கள பொறுத்த வரை, நீ பார்த்த பையன்னு சொன்னா, நிச்சயம் மறுக்க மாட்டாங்க. ஆனா, இப்ப அவ படுச்சிட்டு இருக்கா, அதான் யோசனை” என்றிட,

 

அதை ஆமோதித்த கௌதமும், “அவளோட படிப்பு முடியட்டும் ஆரா.. இப்ப தான், ஹரிணி கல்யாணத்த முடுச்சிருக்காங்க.. உடனே, அடுத்த பொண்ணுக்கு கல்யாணமுன்னா அவங்களுக்கும் சிரமம்….!

 

முதல்ல சென்னைக்கே, உன்னோட கம்பெனி ஹெட் ஆப்பீஸ் கொண்டு வந்திட்டு, எல்லாரும் ஒரே இடத்துல இருக்கற மாதிரி செஞ்சிட்டு.. அதுக்கு அப்புறம், அவங்க விசயத்தை பார்க்கலாம்.. அதுவரை, எனக்கு விசயம் தெரியுங்கற மாதிரி, நீ காட்டிக்க வேணாம்… எனக்கு தெரியாதுன்னா, கொஞ்சம் அடங்கி இருப்பான் சரியா?!” என்ற கௌதமின் வார்த்தையில் இருக்கும் விசயம் நன்கு புரிய… சரியென சம்மதித்தவன், அடுத்து தங்களின் தொழில் சம்மந்தமான பேச்சுவார்த்தையில் மூழ்கி போயினர்..

 

மறுநாள் திட்டமிட்ட படியே, காலை வேளையில், கணபதி ஹோமம் நடத்தி, பால் காய்ச்சி முடிக்கும் வரை பொறுமையாய் இருந்த காயத்ரி.. அதோடு, அங்கிருந்து செல்ல வேண்டும் என பிடிவாதம் செய்ய.. அவளின் மனதில் உள்ள வலியை உடனே சரி செய்திட முடியாது… காலம் எல்லாவற்றையும் மாற்றும் திறன் கொண்டது… என்பதை மனதில் கொண்டு…

 

சச்சும்மா, தேவி, அமுதன், ஹரிணியின் தாய், சாம்பவி ஆகியோரை மட்டும் அங்கே, இரு தினங்கள் இருக்கும் படி விட்டுவிட்டு, மற்ற இரு ஜோடிகளும் தங்கள் பயணத்தை தொடங்கினர் தங்களின் இல்லம் நோக்கி…

 

கௌதம், காயத்ரி முன் இருக்கையில் அமர, ஆரன், ஹரிணி அம்முவோடு பின்இருக்கையில் தஞ்சமடைந்தனர்.. போக்குவரத்து நெரிசல் தாண்டி, ஹெய்வே அடைந்த நேரம், அம்மு உறங்கியிருக்க, இசைஞானியின் மெல்லிசை மட்டும், அந்த வாகனத்தில் ஒலிக்க துவங்கியது…

 

“நெஞ்சில் என்னை நாளும் வைத்து

கொஞ்சும் வண்ணத் தோகை ஒன்று

மஞ்சள் மாலை மேளம் யாவும்

கண்ணில் காணும் காலம் இன்று

பூவைச் சூடி பொட்டும் வைக்க

மாமன் உண்டு மானே மானே

உள்ளம் தன்னைக் கொள்ளை கொண்ட

கள்வன் இங்கு நானே நானே

 

உன்னோடுதான்.. என் ஜீவன்..

 

ஒன்றாக்கினான் நம் தேவன்

நீதானம்மா என் தாரம்

மாறாதம்மா என்னாளும்

இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க….”

 

என்ற வரிகளை கேட்ட கௌதம் நெகிழ்வோடு, கண்ணில் காதல் வழிய, தனது செல்லம்மாவின் கரத்தில், தனது இதழ் பதிக்க, பின்னிருந்து பார்த்த ஆரன்…

 

“நாங்களும் பொண்டாட்டியோட தான் வந்திருக்கோம்.. நாங்களும் ரொமான்டிக் லுக்கு விடுவோம்.. இப்படி கிஸ் கூட அடிப்போம்..” என்ற படி, கௌதம் செய்த அனைத்தையும் செய்ய, பெண்கள் இருவரின் முகமும் அந்திவானமாய் சிவக்க, அந்த பயணம் முழுவதும் சிரிப்பொலிக்கும், கேலிக்கும் பஞ்சமின்றி தொடர்ந்தது…

 

எந்நாளும் இந்த பந்தமும், சொந்தமும் நீங்காது தொடரும்.. என்ற நினைவு தந்த நிம்மதியோடு…  தங்கள் இணையின் கரம் பற்றி, வாழ்க்கையின் மீதி தூரத்தையும் சேர்ந்து பயணிக்க தயாராகினர், அந்த இரு ஜோடிகளும்…

 

நிறைந்தது.