அந்த மிக பெரிய கட்டிடத்தின் முன் நின்றது அந்த கார்…சுமார் நூறு வருட பாரம்பர்யம் மிக்கது அந்த நிறுவனம். பெரியவர்கள் ஆரம்பித்தது… இப்போது ஹர்ஷவர்தனின் தலைமை அலுவலகம்.
மாதத்தின் முக்கால் வாசி நாட்கள் வெளிநாட்டு வாசம்… புதிய முயற்சிகள் செய்து பார்ப்பதில் மிகுந்த ஆர்வமிருப்பதால் எந்தவொரு துறையையும் விட்டு வைத்தது இல்லை… ஆனால் அவன் மனதுக்கு மிகவும் பிடித்தது அவன் தொழில் மேலாண்மை படித்து முடித்தவுடன் ஆரம்பித்தகன்ஸ்ட்ரக்ஷன்ஸ் தான்… அவனது குழந்தையை போல் அவனது உணர்வில் கலந்ததாகையால் ஹர்ஷா நேரடியாக பார்வையிடும் தொழில்.
தனது அறையில் கோபமாக… இல்லை… மிகுந்த கோபமாக மேலாளரிடம் பேசி கொண்டு இருந்தான்… காரணம்.
ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வந்த ஷோ காஸ் நோட்டீஸ்!
எவருக்கும் இந்ததுணிவு வந்தது இல்லை… பாட்டனார் காலத்தில் இருந்தே அரசியலில் இவர்கள் குடும்பத்துக்கு மிகுந்த செல்வாக்கு உண்டு… கணக்கு பார்க்காமல் பணத்தை எல்லா கட்சிக்கும் அள்ளி தருவதால் மட்டுமல்ல… அதையும் தாண்டி சில செல்வாக்குகளை தந்தை வளர்த்து வைத்து இருந்தார்… அதனால் வேதா ஹர்ஷா என்றால் பெரிய அதிகாரிகள் மத்தியிலும் மிகுந்த செல்வாக்கு இருந்தது. ஆனால் அதை ஒரே நாளில் உடைத்தெறிய பார்ப்பவளை நினைத்து கொதித்து!
“நரேஷ் நான் அந்த அம்மாவை பார்க்க வேண்டும்! எனக்கு உடனே ஏற்பாடு செய்… கெட் மீ இம்மீடியாட்லி…”
நரேஷ் தனது செல்பேசியை உயிர்பித்துநமச்சிவாயத்தை அழைத்தான்… மலர்விழியின் பிஏ!
“இப்போ மேடம் மீட்டிங்க்ல இருக்காங்க நரேஷ்… பர்மிஷன் கொடுக்க மாட்டாங்க… மீட்டிங் முடிச்சுட்டு ஒரு ப்ரோக்ராம் போறாங்க… மத்தவங்கன்னா கொஞ்சம் தகைஞ்சு போவாங்க… இவங்க சொன்னா சொன்னதுதான்… ஈவினிங் வேணும்னா சின்னவரை கூட்டிட்டு வாங்களேன்…”
“நமச்சிவாயம் சார்… எம்டி இப்போ கிளம்பி வராங்க… வேற வழி இல்ல… நீங்க பார்த்து ஏற்பாடு பண்ணிடுங்க…” என்று அவன் முடித்து விட்டு ஹர்ஷாவிடம் திரும்பினான்!
“அவங்களுக்கு இப்போ ஒத்துகிட்ட நிகழ்ச்சி ஒன்னு இருக்காம்… பத்து நிமிஷத்துல புறப்பட்ட போய்டுவாங்களாம்…”
அவன் கூறி முடிக்கும் முன்பே கிளம்பியிருந்தான்… படு கோபமாக!
ஹர்ஷாவுக்கு இந்த அளவு கோபம் வந்து பார்த்து இல்லை என்பதால் என்ன ஆகுமோ என்று பயந்தான்!
பெண்களிடம் பழகுபவன் தான்… ஆனால் அவர்கள் பொழுதுபோக்குவதற்கு மட்டுமே என்பதில் ஐயப்பாடு இல்லாதவன்… மிகவும் ஜாலி டைப்… சீரியஸ் பிசினெஸ் ஆள்! அவன் பணத்திற்காகவும் தோற்றத்தை கொண்டும் நிறைய பெண்கள் வட்டமிட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்… அவனும் நன்றாகவே பழகுவான்… படுக்கை வரை செல்லும் அந்த பழக்கங்களை அதற்கு மேல் அவன் அனுமதிப்பததில்லை… நரேஷுக்கோ ஹர்ஷாவின் இந்த பழக்கம் மட்டும் உறுத்தும்!
ஏனென்றால் நரேஷ் கொள்கை பிடிப்பு உள்ளவன். ஹர்ஷா ஒரு சில விஷயங்களில் வற்புறுத்தும் போது நாசூக்காக கழண்டு கொள்வான். சில விஷயங்கள் மனைவிக்கு மட்டுமே என்பதில் தீவிரமாக இருப்பவன்… எப்படி ஹர்ஷா உன்னோட இருந்துட்டு பையன் இப்படி அநியாயத்துக்கு நல்லவனா இருக்கான் என்று நண்பர் வட்டமே அவர்களை கிண்டல் அடிக்கும்.
அப்படிபட்டவனின் கோபத்தை சம்பாதித்திருக்கும் அந்த பெண்ணை நினைத்து வருத்தப்படாமல் நரேஷால் இருக்க முடியவில்லை. பொதுவாக எதிரிகள் என்று இருந்தால் துவம்சம் செய்யாமல் இருக்க மாட்டான். அவனை அதிகபட்சமாக கோபப்படுத்தி இருப்பவளின் கதி…?
*******
குடிநீர் பிரச்சனை தொடர்பாக அதிகாரிகளிடம் மலர்விழி விவாதித்து கொண்டு இருந்தாள்… இந்த கோடையில் பின்பற்ற வேண்டிய நீர் மேலாண்மையும் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை இன்னும் ஊக்கபடுத்த செய்ய வேண்டிய வேலைகளையும் பற்றி விவாதித்து கொண்டு இருக்கையில் புயலென உள்ளே நுழைந்தான் ஒருவன்… அனுமதி இல்லாமல் உள்ளே நுழைந்தவனை பார்த்து திகைத்த மலர்… பின்னர் சுதாரித்து… கவனமாக தன் முக கடுப்பை கட்டுபடுத்தி தன் செயலரை பார்த்து முறைத்தாள்!
புயலென உள்ளே நுழைந்த ஹர்ஷா ஆட்சியர் நாற்காலியில் இருந்த மலரை பார்த்து ஒரு நிமிடம் செய்து வைத்த சிற்பமாக சமைந்தான்!
ஆட்சியர் பெண் என்பதும்… சிறு வயது என்பதும் அவன் அறிந்தது தான் என்றாலும் இப்படி ஒரு அதீத அழகியை சத்தியமாக அவன் எதிர்பார்க்கவில்லை.
எளிமையான பருத்தி புடவையுடித்தி இடை தாண்டும் கேசத்தை பின்னலிட்டு… இடது கையில் ஸ்ட்ராப் வாட்ச் வலது கையில் சிறிய பிரேஸ்லெட்… ஒப்பனை சிறிதும் இல்லாத முகத்தில் சிறு பொட்டு என்று இருந்த அதீத அழகியை பார்த்து வியந்தான்! … உள்ளே நுழைந்தவனை கோபமாக பார்த்த மலர்.
“அனுமதி கேட்டு உள்ள வர்றது நல்லது…”
குயில் கூவியது… மனதுக்குள் மழை!
“மேடம்… சார் ஹர்ஷா… வேதா க்ரூப்ஸ் சேர்மன்… பெரிய தொழிலதிபர்! OMR லேண்ட் விஷயமா உங்கள பார்க்க வந்து இருக்கார்…”
உதவியாளர் சொன்னதை கேட்டு கொண்ட மலர் ஹர்ஷாவை பார்த்து
“நீங்க இதுக்கு முறையா அனுமதி வாங்கியே வந்துதிருக்கலாமே! இந்த மாதிரி மீட்டிங்க டிஸ்டர்ப் பண்றது முறை இல்லையே…”
இதை கேட்ட ஹர்ஷாவுக்கு அப்போது தான் புலன்கள் விழித்தன.
“எந்த தைர்யதுல இப்படி ஒரு நோட்டீஸ் அனுப்பி இருக்கீங்க மேடம்? அந்த இடத்துல பில்டிங் கட்ட முறையா அப்ளை பண்ணி இருக்கோமே… அதுக்குள்ளே எப்படி நீங்க இப்படி செய்யலாம்? இதைபற்றி பேச வந்தவங்க கிட்டயும் நீங்க பேசலையாம்… என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? பணம் வேணும்னா கேட்டு வாங்கிகோங்க! அதுக்காக இப்படி நீங்க வெத்துவேட்டு தனமா பண்ணிட்டு இருந்தீங்கன்னா… நல்லா இல்லையே…” வெளிப்படையாக அனைவர் முன்னும் வைத்து கோபத்தில் அவன் கொதிப்பதை கண்ட மலர் மெலிதாக புன்னகைத்தாள்!
“சார் நான் சர்விஸ்ல ஜாயின் செய்ததிலிருந்து இந்த மாதிரி வெட்டி ஜம்பத்த நிறைய பாத்துட்டேன்… உங்களுக்கு எதாச்சும் மறுப்பு இருந்தா கோர்ட்ல பார்த்துகங்க… உங்க மிரட்டல இங்க வந்து காட்டாதீங்க…” குரலை உயர்த்தாமல் அதே சமயத்தில் தெளிவாக தீர்க்கமாக கூறி முடித்தவளை மனதுக்குள் வியந்தான்!
“அப்படீன்னா… வேற எந்த டீலுக்கும் நீங்க ஒத்து வர மாட்டீங்க…? ”
தன்னை பார்த்து நேரடியாக இப்படி கேட்ட ஹர்ஷா வை பார்த்து கோபம் பொங்கியது மலருக்கு!
“நோ…” ஒரே வார்த்தையில் முடித்துவிட.
“மேடம்… நானும் இப்படி துள்ளுன எத்தனையோ பேரை பார்த்துட்டேன்…” என்று கூறி இடைவெளி விட்டவன்…” சொல்லுங்க நமச்சிவாயம்…” சற்று அழுத்தமாக அழைக்க
அந்த தோரனை அவருக்கு கிலியை பரப்பியது… ஆனால் மலரோ நிதானமாக
“எனக்கு தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இல்ல… இத பத்தி நாம பேசுனது போதும்… நீங்க போகலாம்”
ஹர்ஷாவுக்கு அவள் தன்னை வெளியே போக சொன்னது ஒரு சில நொடிகள் கழித்தே உரைத்தது… அந்த பெண்ணின் தைர்யத்தை பார்த்து உள்ளுக்குள் மலைத்தாலும்… அருகில் வந்து அடிக்குரலில் மற்றவர்கள் அறியாமல்.
“தெரிஞ்சுக்கணும் டார்லிங்… இனிமே கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்… ஏன்னா இந்த அளவு டிஸ்டர்ப் பண்ற உன்னை நான் சும்மா விடுவேன்னா நினைச்சுட்ட? ”
அத்தியாயம் 4
வீட்டிற்கு வந்த ஹர்ஷாவுக்கு மலர்விழியை சந்தித்ததே மனதில் ஓடி கொண்டு இருந்தது… என்ன துணிச்சல்! இப்படி ஒரு பெண்ணை தான் பார்த்தது இல்லை… தன் ஸ்டேடஸ் என்ன என்று தெரிந்தும் தலைவணங்காமல் நின்று பேசும் ஒரு பெண்ணை இப்போது தான் பார்க்கிறான்.
“தம்பி… ரிஷி செட் பசங்ககளுக்கு கூட கல்யாணம் ஆக போகுது… நீ எதுக்கும் வளைஞ்சு குடுக்க மாட்டேங்க்றியே ஹர்ஷா… உனக்கு அப்புறம் ரிஷி இருக்கா… அவளுக்கும் முடிக்கனுமே… பார்வதி சிமெண்ட்ஸ் பொண்ணைமுடிச்சுடலாமா? அவங்க கேட்டுகிட்டே இருக்காங்க ஹர்ஷா…” உணவு வேளையில் எப்போதும் போல மீனாட்சி ஆரம்பிக்க.
சொல்லும் போதே ஹர்ஷாவின் மன கண்களில் அவள் தான் தோன்றினாள்… வேறு யார்…?
மலர் தான்!
ஒரே சந்திப்பில் இந்தளவு டிஸ்டர்ப் செய்ய முடியுமா? அதுவும் வெளியே போ என்று அசராமல் கூறியவளை!
ஹர்ஷாவின் செல்பேசி அழைத்தது.
“சொல்லு நரேஷ்…”
“சீக்கிரம் கிளம்பி பேப்பர் மில்லுக்கு வா ஹர்ஷா! ”
“ஏன்… என்னாச்சு? ”
“சின்ன ஆக்சிடென்ட்… ஈடிபி ஸ்லஜ்ல ஐந்து பேர் விழுந்து இறந்துட்டாங்க…”
“வாட்…? ” வேதனையை காட்டியது முகம்… சிறு விபத்துக்கள் நடப்பது இயல்பானது என்றாலும் ஐந்து உயிர்கள் ஒரு சேர போவது என்றால்… மனம் கனத்தது!
“அம்மா… அவசரம்… நைட் வர மாட்டேன்… காத்துட்டு இருக்காதீங்க… நம்ம பேப்பர் மில்லுல ஸ்லட்ஜ்ல விழுந்து அஞ்சு பேர் இறந்துட்டாங்களாம்…”
வீட்டினரை எச்சரிக்கையாக இருக்க கூறிவிட்டு விரைந்தான்.
*******
அந்த இரவு நேரத்தில் அந்த இடமே பரபரப்பாக இருந்தது. ஆம்புலன்ஸ் வண்டிகளும் போலிஸ் வண்டிகளும் பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தன. மீடியாவுக்கு விஷயம் கசிய… படையாக திரண்டு வந்தவர்களை சமாளிக்க முடியாமல் நிர்வாகிகள் திணறினர். உத்தரவுகளை பிறப்பித்து கொண்டே இருந்தான் ஹர்ஷா. மீதம் இருப்பவர்களையாவது காப்பாற்ற முடியுமா என்று மனம் கலங்கி போய் இருந்தான். ஒவ்வொன்றும் உயிராயிற்றே!
பேப்பர் மில்லில் இருந்து வெளியேறும் நீரை சுத்தபடுத்தி தான் வெளியேற்ற முடியும்… அதற்கான இடம் தான் ETP. அங்கே வந்து சேரும் கழிவு நீரை sludge என்று சொல்வார்கள். அதை நிறைய வழிகளை உபயோகித்து சுத்தபடுத்துவார்கள். அந்த தொட்டியை சுத்தபடுத்த போனவன் அங்கேயே விஷவாயு தாக்க மயங்கி விழ… அவன் விழுந்ததை பார்த்த மேலே இருந்தவர்களும்குதிக்க… இந்த சூழ்நிலையை சமாளிக்க தெரியாமல் மயங்கிய அவர்கள் உயிரை விட்டு இருக்கின்றனர்.
மில் அமைந்து இருந்த கிராம மக்களும் நிர்வாகிகளை சூழ்ந்து கொள்ள எந்த நேரமும் என்ன வேண்டுமானாலும் ஆகும் என்ற உச்சகட்ட பதட்டத்தில் இருந்தது தொழிற்சாலை!
அப்போது அதிகபட்ச வேகத்தில் வந்து நின்றது மலர்விழியின் கார்… தன் உதவியாளரிடம் விசாரித்து கொண்டே ETP நோக்கி போனாள்.
“எத்தனை பேர் இது வரைக்கும்…? ”
“மேடம்… அஞ்சு பேர் இறந்துட்டாங்க… இன்னும் அஞ்சு பேர் ஜிஎச்ஐசில இருக்காங்க…”
“safety measures பத்தலை போல இருக்கே சார்… மாசு கட்டுபாட்டு வாரியத்துல க்ளியர் பண்ணிட்டாங்களா? ”
“போன முறை PCBல கொடுத்து இருந்த ரிப்போர்ட் நல்லா தான் இருக்கு மேடம்…”
“அப்புறம் எப்பிடி சார் இப்படி ஆச்சு? நிர்வாகம் என்ன சொல்லுது? ”
“ஹர்ஷா சார் இங்க தான் மேடம் இருக்காங்க… அவங்க இதை எதிர்பாக்கலை… காம்பன்செட் பண்ணிடறோம்னு சொல்றாங்க…”
“அதெப்படிங்க காம்பன்செட் பண்ணா மட்டும் போதுமா? போன உயிருக்கு என்ன மதிப்பு? இதுகிரிமினல் அபென்ஸ்… லீகல் ஆக்சன் கண்டிப்பா உண்டு…”
கேட்டு கொண்டே வந்த மலர்… பேசிகொண்டிருந்த ஹர்ஷாவை பார்த்தாள்… பார்வை ரெண்டும் மோதியதில் மின்னல் தெறித்தது.
அன்று அலுவலகத்தில் அவள் பக்கத்தில் வந்து
“உன்னை விட மாட்டேன் டார்லிங்”என்று கூறிய போது மனது படபடவென அடித்து கொள்ள… உடல் நடுங்கியது! ஆனால் வெளியே காட்டி கொள்ளாமல் இருக்க மிகவும் முயன்று… வெற்றியும் பெற்றாள்… எப்படி தைர்யமாக சொல்லி விட்டான்… பணம் இருக்கும்திமிர்.
முகத்தில் எந்த உணர்வுமில்லாமல் தன் நிர்வாகிகளோடு உரையாடி கொண்டு இருந்தான்… மலரை பார்த்த ஒரு கணம் அவன் முகம் ஒளிர்ந்தது… பின் சகஜமாகி அவளை பார்த்து
“வாங்க…” பொதுவாக அழைத்தான்.
“நிறைய சேப்டி மெஷர்ச அலட்சியப்படுத்தி இருக்கீங்க… நிறைய கம்ப்ளைன்ட்ஸ் பைல் ஆகி இருந்து இருக்கு…” அவள் கோபமாக ஆரம்பிக்க முகத்தில் உணர்வை காட்டாமல் கேட்டுகொண்டான்!
“முதல்லயே கழிவு நீர நேரடியா பாலாற்றுல விடறிங்கன்னு கம்ப்ளைன்ட்! இப்போ இந்த விஷயம்… ஏன் சார் நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? நீங்க பணம் சம்பாரிக்க ஊர்ல இருக்கவன் எல்லாரும் சாகணுமா? பாதுகாப்பு வழிமுறை சொல்லி தர யாருமில்லாம… பாதுகாப்பு கவசம் இல்லாம எப்படி ETP ல இறங்க விடலாம்? உங்களுக்கு தேவை சீப் லேபர்… அதுக்காக நீங்க அவங்க வாழ்க்கைல விளையாடுறது எந்த விதத்துல நியாயம் இப்போ அவங்களுக்கு நீங்க கம்பன்ஷேசன் எவ்ளோ வேணும்னாலும் கொடுத்துடலாம்… ஆனா போன உயிரை திருப்பி தர முடியுமா? போன உயிர் போனது தானே…” மலர் கோபத்தில் பொரிய நிதானமாக ஆரம்பித்தான் ஹர்ஷா!
“மேடம்! பேசி முடிச்சிடீங்களா? முதல்ல கம்ப்ளைன்ட் வந்தது எப்போன்னு பாருங்க… ஒரு வருஷத்துக்கு முன்னாடி… இப்போ ஸ்லட்ஜ் க்ளியர் பண்ண RO பிளான்ட் போட்டாச்சு… இப்போ கழிவு நீர் ஆற்று நீரோட கலக்குறது இல்ல… RO ப்ரோசெஸ் பண்ணி பின்னாடி இருக்கற 250 ஏக்கர் நிலத்துக்கு பாயுது… அது PCB certified தண்ணீர்… வேணும்னா அந்த தண்ணீர நீங்க டெஸ்ட் பண்ணலாம்…” என்று இடைவெளி விட்டவன்.
“இப்போ இவங்க இறந்த விஷயம் வருத்தம் தான் இருந்தாலும் இதுல மொத்தமா மேனஜ்மென்ட முழுசா குற்றம் சொல்ல முடியாது… அந்த தொட்டிய சுத்தம் செய்ய தான் போய் இருக்காங்க… கெமிக்கல் ரியாக்ஷன்… அதை நாங்க விசாரிக்கறோம்… நீங்க சொல்றத என்னால முழுசா ஏத்துக்க முடில… ஒரே தப்பு லேபர்ஸ்க்கு ட்ரைனிங் இல்லாதது தான்… ஆனா விஷயம் என்னன்னா அவங்க எல்லாருமே ட்ரைனி தான்…”
அதை கேட்டு கொண்டு இருந்த மலர்,
“நீங்க என்ன வேணும்னாலும் கோர்ட்ல சொல்லிக்கங்க… இப்போ மில்லை லாக்அவுட் பண்ண போறோம்… லேபர் கோர்ட்ல போய் அவங்க காம்பன்செஷன் முடிங்க… PCBல NOC வாங்குங்க… அப்புறம் தான் பேக்டரி ஓபன் பண்ண முடியும்…”
அவள் சொல்வதை உள்ளே கணன்று கொண்டு இருந்த கோபத்தோடு கேட்டு கொண்டு இருந்தவன்… அந்த கோபத்தை நிதானமான வார்த்தைகளால் மென்று துப்பினான்!
“லுக் மிஸ் மலர்விழி! அவங்க ட்ரைனின்ற ஒரே விஷயம் போதும்… கேஸ் இல்லாம போக… அவங்களை சேர்க்கும் போது வாங்குன பாண்ட் இருக்கு… அத வெச்சு மனிதாபிமானம் இல்லாம நான் நடந்துக்க முடியும்… ஆனா நான் அப்படி நடந்துக்க விரும்பல… இறந்தவங்க குடும்பத்துக்கு தகுந்த காம்பன்செஷன் போய் சேர்ந்துடும்… ஆனா பாக்டரிய லாக்அவுட் பண்ண நினைச்சீங்கன்னா என்னோட இன்னொரு முகத்தை பார்க்க வேண்டியிருக்கும்… சரி இல்ல… OMR விஷயமாவே உங்க கிட்ட எச்சரிக்கை செய்து இருந்தேன்…”
“அதுல தான் ஸ்டே வாங்கீட்டீங்கல்ல… உங்கள மாதிரி ஆளுங்களுக்காகவே சட்டத்தை வளைக்கற ஆளுங்க இருப்பாங்களே! அப்புறம் என்ன மிரட்டுறீங்க? ஓகே… இப்போ இந்த இடத்த க்ளியர் பண்ணுங்க! மில்லுக்கு சீல் வைக்கணும்…”
அவளை பொறுத்தவரை சட்டத்திற்கு புறம்பான விஷயத்தை அனுமதிக்க முடியாது… ஹர்ஷாவை பொறுத்தவரை இது கௌரவ பிரச்சனை… பாரம்பரியமான குடும்பத்தின் மில்லை சீல் வைக்க எவ்வளவு தைர்யம் இருக்க வேண்டும் இந்த பெண்ணுக்கு என்ற உச்ச கட்ட கோபத்தில் இருந்தான் ஹர்ஷா… ஆனால் அந்த தைர்யம் தான் தன்னை வசீகரித்து கொண்டிருக்கிறது என்பதை உணர மறந்தான்.
“மலர்விழி! இதுக்கு நீங்க பதில் சொல்லியே தான் ஆகணும்… இது என்னோட மரியாதை சம்பந்தபட்ட விஷயம்… ஒரே நிமிஷத்துல இப்போவே இத என்னால மாத்த வைக்க முடியும்… அந்த அளவு போக வைக்காதீங்க…”
“ஜஸ்ட் கோ அஹெட்…” அசராமல் தீர்மானமாக சொல்லி முடித்தவளை பார்த்து அயர்ந்து தான் போனான்… ஆனாலும் காட்டிக்கொள்ளவில்லை.
இவளிடம் கொஞ்சம் விளையாடி பார்த்தால் என்ன? அருகில் வந்தான்… மிக அருகில்… சிறிதும் பயமில்லாமல் அவனை நிமிர்ந்து முறைத்தவளை பார்த்து.
“டார்லிங்… இதே இந்த இடத்துல ஒரு ஆம்பிளை இருந்திருந்தா என்னோட மூவ் வேற மாதிரி இருந்திருக்கும்… ஆனா பொண்ணா… அதுவும் செம்ம அழகான பொண்ணா வேற இருக்க? உன்னை என்ன பண்ணலாம்ன்னு நீயே சொல்லேன்…” புருவத்தை உயர்த்தி மிரட்டியவனின் தோரணையை பார்த்து உள்ளுக்குள் அதிர்ந்தாள்!
“நான் என்ன செய்வேன் தெரியுமா? ” என்று கேட்டு நிறுத்தியவளை புருவத்தை சுருக்கி பார்த்தான்… அவளது பார்வை போன இடம் அவளது பாதம்… செருப்பணிந்திருந்த பாதம்.
“செருப்பு பிஞ்சுடும்…”
திரும்பியும் பாராமல் நடந்து காரில் ஏறினாள்!
Leave a Reply
Please use the coupon code DISC20 for 20%discounts on all products Dismiss