UEU5

UEU5

அத்தியாயம் 9
அன்று ஓய்வுக்காக தோட்ட வீட்டில் இருந்தான்… எப்போதும் மிக அதிக வேலைகளை முடித்த பின்னோ அல்லது மனது ஓய்வு தேடும் நேரத்திலோ அவன் வரும் இடம் இதுதான்… ரிஷியும் அம்மாவும் சேர்ந்து வருவதானாலும் இல்லை தனியாக வருவதானாலும் சிறு வயது முதல் ஹர்ஷாவுக்கு மிகவும் பிடித்தது அந்த தோட்ட வீடு.
சிறுவனாக இருக்கும் போது ஹர்ஷா, ரிஷி, நரேஷ் சேர்ந்து வந்து கொட்டமடிப்பர். இப்போதும் கூட விடுமுறை தினங்களில் அனைவரும் சேர்ந்தால் அந்த வீடு அவ்வளவுதான், நண்பர் குழாமும் சேர்ந்து கொள்ள கேட்கவும் வேண்டுமோ?
ஆனால் இப்போது அந்த கொண்டாட்ட மனநிலையில் அவன் அங்கு வந்து இருக்கவில்லை. சுயஅலசல் தேவைப்பட்டது. ஹர்ஷாவிடம் இருக்கும் பழக்கங்களில் ஒன்று.! தான் தவறு என்று என்னும் ஒன்றை என்ன செய்தாலும் செய்ய வைக்க முடியாது ஆனால் அவனுக்கு சரி எனபட்டதை அது எப்படிப்பட்ட காரியமாக இருந்தாலும் மற்றவர்களால் தடுக்க முடியாது.
********
செல்பேசியை வைத்து விட்டு அமர்ந்த ஹர்ஷாவுக்கு வெற்றி கொண்ட களிப்பு இல்லை. எதிரியை வீழ்த்திய மகிழ்ச்சியும் இல்லை. மனதில் சூனியம் சூழ்ந்தது. எதையோ இழந்தது போல் தோன்றியது!
“நான் எதை இழந்தேன்… இல்லையே… என்னிடம் என்ன இல்லை…? ” சூன்யத்தில் மனது எழுப்பிய கேள்விகளுக்கு ஹர்ஷாவால் விடை காண முடியவில்லை.
“என்ன ஆயிற்று எனக்கு? எப்போதும் போல இருக்க வேண்டியதுதானே… போன முறை தன்னிடம் வம்பு வளர்த்த டிஐஜியை தூக்கி பந்தாடவில்லையா? இதென்ன எனக்கு புதிதா… இல்லையே… ஆனால் அப்போது இருந்த மன திருப்தி… இப்போது? இல்லையே… ஏன்… இந்த மௌனத்தில் தன் மனம் எங்கேயோ எதையோ தேடுகிறதே?
காலையில் எழுந்தவுடன் மலருடன் வம்பு வளர்த்த ஹர்ஷா செல்பேசியை துண்டித்த பின் மிகவும் குழம்பி போனான்.
அவன் காதுகளில் மலர் கூறிய ஒன்றே ஒலித்து கொண்டு இருந்தது.
“எனக்கு என்று யாரும் இல்லை… அதனால் இழக்க ஒன்றுமில்லை! ”
ஏன் இல்லை… அவளுக்கு நான் இல்லையா? அவள் என்னுடையவள் இல்லையா? அவள் ஏன் அப்படி சொல்ல வேண்டும்?
அவன் திடுக்கிட்டான், தன் மனது போகும் திசையை பார்த்து.
“அவள் என்னுடையவளா? ”
 எப்படி? என்ன இது தன்னால் ஒரு பெண்ணை மட்டும் விரும்ப முடியாது என்று நினைத்து இருந்தேனே… முதலில் இது நேசம் தானா? இல்லை… கண்டிப்பாக இல்லை அவளிடம் இருப்பது நேசம் இல்லை… முதலில் நரேஷிடம் நான் சொன்னது போல் ஒரு ஈர்ப்பு தான்… வேறு ஒன்றுமில்லை” என்று முடிவாக ஒரு சாமாதானத்திற்கு வந்தான்!
சரி ஏதாவது புத்தகம் படிக்கலாம்… அப்போதாவது மனநிலை சரி ஆகிறதா பார்க்கலாம் என்று அந்த வாரத்தில் வந்த வார பத்திரிக்கை ஒன்றை கையில் எடுத்தான் ஹர்ஷா.
புத்தகத்தை புரட்டியவனுக்கு ஒரு பக்கத்தில் வந்ததும் கண்கள் நிலைத்து நின்றது!
புத்தகத்தின் கவர் ஸ்டோரியாக வந்து இருந்த மலரின் பேட்டி தான் அது.
தான் காப்பகத்தில் வளர்ந்ததையும்… படிக்க தான் பட்ட சிரமங்களையும்… மிகவும் இயல்பாக கூறி இருந்தாள். வாழ்க்கையில் தான் சந்தித்த கடினமான நேரங்களையும் அதை சமாளித்து இந்த பதவியில் அமர்ந்த விதத்தை பற்றியும் கூறி இருந்தாள்.
தான் பிறந்த போதே தங்க கரண்டியோடு பிறந்த விதத்தையும் வளர்ந்த விதத்தையும் அவளோடு ஒப்பிட்டான். ஏனோ மனம் வலித்தது!
படிக்க படிக்க அவள் மேல் மரியாதை அதிகமானது!
அதே சமயம் தான் அவளிடம் ஆரம்பத்தில் இருந்து நடந்து கொண்டது சரி தானா என்ற கேள்வியும் எழுந்தது? முதல் தடவை பார்த்தபோதே அவளிடம் மிகவும் மரியாதை குறைவாக நடந்து கொண்டு விட்டு… ச்சே… ஏன் அப்படி நடந்து கொண்டேன்?
இப்போதுதான் தோன்றியது அவளிடம் சற்று மரியாதையாகவே நடந்து கொண்டு இருக்கலாமோ என்று.
ஏன்? தான் ஒன்றும் பெண்கள் மேல் விழுந்து பழகுபவன் இல்லையே? அவர்களாக வந்தால் ஒழிய தான் பழகுவதும் இல்லை. ஆனால் ஏன் மலரிடம் இப்படி நடந்து கொள்கிறோம்? இந்த மாதிரி யோசிப்பது எல்லாம் புதிது. ஒரு வேலை நான் தவறு செய்கிறேனோ?
தலையை சிலுப்பி கொண்டான். வேண்டாம் அவளை நினைக்க வேண்டாம்.
யோசித்து யோசித்து தலை வலித்தது. அப்போதுதான் கடிகாரத்தை பார்த்தான்.
மணி இரண்டு!
இவ்வளவு நேரமாகவா அவளை பற்றியே நினைத்து கொண்டு இருந்தேன்.? ச்சே என்ன இது? வேண்டாம் இந்த நினைப்பு… தன்னை சிறை செய்ய நினைக்கும் இந்த நினைவு வேண்டாம்… அவளும் வேண்டாம் அவள் நினைவும் வேண்டாம்… ஒரு சில நாட்கள் பார்க்காவிட்டால் அவளை பற்றிய நினைப்பு கூட வராது.
 வர்ஷினியை அழைக்க வேண்டும்… இன்று மாலை டிஸ்கோத்தேக்கு.
வர்ஷினி வளர்ந்து வரும் நடிகை. ஹர்ஷாவிடம் நட்பை வளர்த்து கொண்டால் தனக்கு பெரிய மனிதர் தொடர்பு எல்லாம் கிடைக்கும் என்று அவனிடம் ஒட்டி கொண்டு இருப்பவள்… முடிந்தால் அவனை திருமணம் செய்து கொண்டால் அனைத்து வசதிகளுக்கும் இப்படி கஷ்டப்பட தேவை இல்லை… தானாக கிடைத்து விடுமே… ஆனால் ஹர்ஷாவை அந்த மாதிரி வளைக்க முடியவே இல்லையே! விலாங்கு மீனாக அல்லவா இருக்கிறான்!
அன்று வர்ஷினி பார்த்து பார்த்து அலங்கரித்து இருந்தாள், எப்படியாவது ஹர்ஷாவை கைபற்ற துடிக்கும் துடிப்போடு!
சரியாக இரவு ஏழு மணிக்கு ஹர்ஷாவின் கார் வந்தது!
“ஹாய் ஹர்ஷ்… எப்படி இருக்கீங்க? இப்போ தான் என் நினைப்பு வந்துச்சா? ”என்று கூறியவாறே அணைக்க முற்பட்டாள்!
ஹர்ஷாவுக்கு தீயை தொட்டது போல் ஆனது… அணைக்க வந்தவளை தவிர்த்து
“ரெடியா… டைம் ஆகுது… பார்ட்டி ஆரம்பிச்சுடும்…”
அவன் விலகலை ஒரே நொடியில் புரிந்து கொண்டாள் அந்த புத்திசாலி!
“நான் ரெடி தான் ஹர்ஷா… நீங்க தான் லேட்”
“ஓகே சீக்கிரம்…”
அவள் அறிந்த ஹர்ஷா இப்படி இல்லையே… எதிலும் ரசனையோடு இருப்பவன் ஆயிற்றே… இப்போது காட்டும் அவசரத்திற்கும் இவனுக்கும் சம்பந்தம் இல்லையே… சரியான புள்ளியை பிடித்து விட்டாள் வர்ஷினி… இல்லையென்றால் அவள் வர்ஷினி இல்லையே!
 பார்ட்டி தொடங்கியது. ஆராவரமான சூழலில்! எங்கும் பேச்சு சத்தம்! எப்போதும் இந்த மாதிரி இடங்களை ஹர்ஷா மிகவும் விரும்புவான்! வியாபார அழுத்தங்களை குறைக்க அவன் தேர்ந்தெடுக்கும் வழிகளில் ஒன்று!
அவனது நண்பர் குழாமும் அவனை ஆரவாரமாக வரவேற்றது!
“ஹேய் என்னப்பா… மேடமை அழைச்சுட்டுவருவன்னு பார்த்தா இதோட வந்து இருக்க? ”
ஹர்ஷா அதற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் வெட்க சிரிப்பை பதிலாக தர
நண்பர் கூட்டம் இன்னும் ஆரவாரித்தது!
“ஹேய் மாப்பிள்ளைக்கு வெட்கம் வந்துடுச்சு! ”
ஹர்ஷாவுக்கு இதற்கும் என்ன சொல்வதென்று புரியவில்லை… அது உண்மை இல்லை என்று ஒப்பு கொள்ளவும் முடியவில்லை… தன் மனதில் தோன்றி இருக்கும் சலனத்தை அறிந்தே இருந்தவனால் ஒன்றும் பேச முடியவில்லை.
 தன்னை வந்து அணைத்து… இணைந்து நடனமாடும்படி அழைத்த வர்ஷினியை தள்ளி நிறுத்தினான்!
“கொஞ்சம் விடு வர்ஷினி…”
“ஹர்ஷ் என்ன இது? டிஸ்கொத்தேக்கு வான்னு சொல்லிட்டு… நீங்க என்ன தள்ளி நின்னுட்டே இருக்கிங்க… இதுவரைக்கும் நான் உங்கள தொட்டதே இல்லையா… இப்போ என்ன? ”
கேள்வி கேட்டாள் வர்ஷினி
ஏனோ அவளது செயல் அவனுக்கு அருவருப்பை அளித்தது. ஏன் இத்தனை நாள் இவற்றை எல்லாம் ரசித்து கொண்டு இருந்தவன் தானே!
புரிந்தது அவனுக்கு!
காதல்!
அவள் இல்லையென்றால் இருக்க முடியாது என்று புரிந்தது! அவளே தன் உலகமாக இருக்க வேண்டும் என்ற தன் ஆசை புரிந்தது! அவள் தீண்டல் மட்டுமே இனி தனக்கு ஒப்புதலாகும் என்ற உண்மை புரிந்தது!
நான் மலர்விழியை காதலிக்கிறேன்!
ஒன்றும் பேசாமல் பார்த்து கொண்டு இருந்தவன், பின்னர் தலையை சிலுப்பி.
“வர்ஷினி நான் இப்போ வீட்டுக்கு போகணும்… உன்னைய டிராப் பண்ணவா? ”
“அதான் ட்ராப் பண்ணிட்டியே…” என்று மனதுக்குள் நினைத்து
“இல்ல வேணாம்… நானே பாத்துக்கறேன்…” என்று கூறினாள்.
“ஓகே… சரி நான் கிளம்புறேன்…”
நண்பர்களை பார்த்து”ஓகே பிரெண்ட்ஸ்… அப்புறம் மீட் பண்ணலாம்”என்று சொல்லி விட்டு வந்து காரை எடுத்தான்.
 அவனுக்கு அந்த தனிமை தேவையாக இருந்தது. எப்போதும் வேகமாக ஓட்டுபவன்… இன்று மெதுவாக அந்த இரவை அனுபவித்தபடியே காரை செலுத்தினான்!
மௌனமான நேரம்.
இளமனதில் என்ன தாகம்.
மனதின் ஓசைகள்.
இதழின் மௌனங்கள்
காதலிப்பவர்களை வித விதமாக கிண்டலடித்தவன் இப்போது அவனே காதலில் விழுந்து விட்டான். ஆனால் அவனது இப்போதைய கவலை எப்படி இதை மலரிடம் சொல்வது? இதையும் அவள் பழிவாங்கும் நடவடிக்கையாகவே எடுத்து கொண்டால்?
*******
நடு ஹாலில் தன் தாய் தங்கையுடன் நரேஷும் இருந்தான்.
உள்ளே நுழைந்த அவனுக்கு சூழ்நிலையின் வித்தியாசம் புரிந்தது!
“நில் ஹர்ஷா! ”மீனாக்ஷி அம்மாவின் குரல் கடுமையாக ஒலித்தது.
நின்றான்.
“நீ இவ்வளவு நாள் எப்படி எல்லாமோ தான் இருந்த… ஆனா மாறிடுவன்னு நான் நினச்சேன். ஆனா இப்படி பண்ணுவன்னு நினைக்கில… இது என்ன? ” என்று அவனிடம் செய்தி வந்த பேப்பரை காட்டினார்.
“ஒரு பொண்ண பழிக்கறதும் கோயில இடிக்கறதும் ஒன்னு கண்ணா… நான் வளர்த்த பிள்ளையா ஒரு பொண்ணு கிட்ட இப்படி கீழ்த்தரமா பிகேவ் பண்ணி இருக்கறது? ” என்று தன் நெஞ்சை பிடித்து கொண்டு அமர்ந்தார்.
ஹர்ஷாவுக்கு குற்ற உணர்வு அழுத்தியது. என்ன இருந்தாலும் தான் செய்தது தவறுதானே! அம்மாவின் முகம் பார்க்காமல் வேறு பக்கம் நோக்கி கொண்டு இருந்தான். ரிஷி அவனை பார்த்து
“அண்ணா… உனக்கு தங்கை ஒருத்தி நான் இருக்கேன்… என்கிட்டே இப்படி யாராச்சும் பண்ணா… நீ என்னண்ணா பண்ணுவ? அந்த பொண்ணுக்கு யாரும் இல்லையாமே! பாவம்ண்ணா அவங்க! உன்னை என் அண்ணன் சொல்லிக்கவே எனக்கு கஷ்டமா இருக்குண்ணா… ப்ளீஸ் என் முகத்துலே முழிக்காத”
“சாரி ஹர்ஷா… நீ என்னோட பிரெண்டா இருக்கலாம்… ஆனா ஒரு பொண்ண டீஸ் பண்ண ஒரு அளவு இருக்கு… இது ரொம்ப அதிகம்… அதுவும் இல்லாம போன் பண்ணியும் பேசி இருக்க… கேக்க யாரும் இல்லைங்கற தெம்பு தானே… இப்போ நான் மலருக்கு அண்ணனா கேக்குறேன்… நீ பண்றது நியாயமா?
மூவரும் சேர்ந்து மலருக்காக பேச… ஒரு வகையில் மகிழ்ந்தான். அதுதான் காதலோ?
“நீங்க பேசறத எல்லாம் பேசி முடிச்சிட்டீங்களா? இப்போ நான் பேசலாமா? ”
மூவரும் மௌனமானார்கள்!
நரேஷை பார்த்து ஹர்ஷா,
“டேய் மச்சான்… உன் தங்கைய எனக்கு கல்யாணம் பண்ணி குடுப்பியா? ”என்று கேட்டு விட்டு புன்னகைக்க… அனைவரின் முகமும் ஒருசேர மலர்ந்தது.
அத்தியாயம் 10
மூவருக்குமே சந்தோஷமாக இருந்தாலும் ஒரு ஓரத்தில் சந்தேகம் தோன்றாமலும் இல்லை… சமாதானப்படுத்திய ஹர்ஷாவின் முகத்தில் மின்னிய பெருமித புன்னகை அவனது மனதை வெளிப்படையாகக்கூற… ரிஷி அவனை கிண்டலடித்தாள்! உடன் நரேஷும் சேர்ந்து கொள்ள களை கட்டியது கச்சேரி! பதிலுக்கு பதில் கொடுத்தவனுக்கு ஒரு கட்டத்தில் அவர்களது கிண்டலை எதிர்கொள்ள முடியாமல் வெட்கத்துடன் தடுமாற ஆரம்பிக்க… ஆபத்பாந்தவியாக தனது அன்னை வந்தார்.
“இன்னும் இங்க அரட்டை முடியலியா… ஒடுங்க… போய் படுங்க…” அவர் மிரட்டஉஷ் என்று சொல்லி கொண்டே அவரவர் அறைக்கு சென்றனர்! மீனாட்சி அவனை அழைத்தார்.
“ஹர்ஷா! ஒரு நிமிஷம்ப்பா! ”
“சொல்லுங்கம்மா…”
“நீ சொல்றது எல்லாம் உண்மைதானே.! ” என்று நம்பாமல் கேட்க.
“ஏன்மா இப்படி சொல்லறீங்க? நான் அவளை கல்யாணம் செய்துக்க விரும்பறேன்… இது நூறு சதவித உண்மை… என்னை சந்தேகபடாதீங்கம்மா… உங்க பிள்ளை கொஞ்சம் நல்லவனும் கூட” என்று அடிபட்ட குரலில் சொன்னான்!
“இல்லை கண்ணா… அந்த பொண்ணு மனசுல ஆசைய வளர்த்துட்டு அப்புறம் நீ மனசு மாறிட்டா… அந்த பாவம் வேணாம் ஹர்ஷா…” என்று பரிதாபமாக கூறிய தாயை பார்த்து தீர்மானமாக கூறினான்!
“இந்த ஜென்மத்துல எனக்கு மனைவின்னு ஒருத்தின்னா அது மலர் மட்டும்தான்மா…”
“ரொம்ப சந்தோஷம்ப்பா… சரி போய் படு, … காலைல ஏதோ செமினார் இருக்குன்னு சொன்னியே…” என்று அவனை புன்னகையோடு அனுப்பி வைத்தார்!
அந்த நிம்மதிக்கு ஆயுள் குறைவு என்பதை அறியாமல்.
**********
கருத்தரங்கு அரங்கம் நிரம்பியிருந்தது… வந்தவர்களை வரவேற்று கொண்டு இருந்தாள் மலர்… முன்னர் இருந்த ஆட்சியர் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கம். அனைத்து பெரிய தொழிலதிபர்களும் கலந்து கொண்டு இருந்தனர்… விழா ஏற்பாடுகளை கவனித்து கொண்டு இருந்தவள்… வேறு எதையும் நினைக்க கூட நேரமில்லாமல் பறந்து கொண்டு இருந்தாள்… அவளை இருவிழிகள் கரைத்து குடித்து கொண்டு இருந்தது!
‘STEPS TO ELIMINATE THE BOTTLENECKS IN INDUSTRY’
அழகான ஆங்கிலத்தில் அனைவரையும் வரவேற்ற மலர் அப்போதுதான் கவனித்தாள் ஹர்ஷா அங்கு இருப்பதை… மனதில் கொழுந்து விட்டெறிந்த கோபத்தை கட்டுபடுத்தியபடி அவனை எரிக்கும் விழிகளால் பார்த்துவிட்டு முகத்தை திருப்பி கொண்டாள். எப்படி இவனை இங்கு மறந்தேன்…? அப்போதுதான் கவனித்தாள், பேச்சாளர் பட்டியலை… Mr. H Annamalai of vedha Groups… இவனையா வரவேற்றேன்?
அவள் முகத்தை வைத்தே அவளை படித்து கொண்டு இருந்த ஹர்ஷா… அவள் பார்த்த பார்வைக்கு சற்றும் சளைக்காமல் பார்த்து வைத்தான்!
அடுத்து அடுத்து ஒவ்வொரு விருந்தினராக அழைக்கப்பட ஒவ்வொருவரும் வந்து தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
 கடைசியாக வந்த ஹர்ஷா பேச ஆரம்பித்த போது இவன் என்ன பேசி விடுவான் என்று அலட்சியமாக எண்ணிய மலர், அவன் பேச ஆரம்பித்த இரண்டாவது நிமிடம் நிமிர்ந்து உட்கார்ந்தாள். மிக மிக அழகான ஆங்கிலம்! அதை அவன் எடுத்தாண்ட விதம், அவன் பேசிய முறை, முக்கியமாக அரை மணி நேரத்தில் அவன் சொன்ன கருத்துக்கள்! அனைவரும் மாற்றி மாற்றி எழுப்பிய கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளித்த விதத்தை பார்த்து கொஞ்சம் அரண்டு தான் போனாள். தன் துறையை பற்றி மட்டுமல்லாமல் அனைத்து விதமான கேள்விகளையும் அவன் எதிர்கொண்ட விதம் அவனை கொஞ்சம் மரியாதையாக பார்க்க வைத்தது!
“வாவ்… சூப்பர்…” அவன் மேல் உள்ள பகை உணர்ச்சியை தாண்டி மனதிற்குள் அவனுக்கு சபாஷ் போட்டாள்! இவனுக்கு இவ்வளவு மூளை இருக்கா?
கண்டிப்பாக சராசரி அறிவை தாண்டி… அந்த விஷயங்களை கரைத்து குடித்தவனால் மட்டுமே இவ்வளவு அழகாக கருத்துக்களை எடுத்து வைக்க முடியும்! பின் என்னிடம் மட்டும் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறான்?
பேசி முடித்து, கருத்தரங்கு முடிந்த பின் கலந்து கொண்ட அனைவருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் சேர்த்து சிறிய விருந்து ஒன்று நிர்வாகத்தின் சார்பாக தரப்பட, மலரே அதை முன்னின்று நடத்தினாள்.
கையில் தட்டுடன் தன்னிடம் பேசிய அனைவருக்கும் தக்க பதில்களை கூறி கொண்டு இருந்த மலர் அவ்வப்போது அவன் என்ன செய்கிறான் என்று பார்த்து கொண்டாள். தன்னை தொந்தரவு செய்யாத வரை தனக்கு நிம்மதி, அதுவும் இத்தனை பேர் இருக்கும் இந்த இடத்தில்.!
அவனோ அவளை சிறிதளவு கூட கண்டுகொள்ளாமல் திரும்பி கூட பார்க்காமல் தனது நண்பர்களிடமும் தெரிந்தவர்களிடமும் பேசி கொண்டே சாப்பிட்டு கொண்டு இருந்தான்… மிகவும் சுவாரசியமாக.
“எப்போடா திருந்துன? ” என்று மலரே நினைக்கும் அளவு அவன் மலரை சிறிதும் நோக்கினான் இல்லை! .
அவளது செல்பேசி அழைக்க, அங்கு மிகவும் சத்தமாக இருந்ததால் தனி அறைக்கு சென்று பேச போனாள்!
பார்ட்டி ஹால்க்கு திரும்ப எத்தனித்தபோது காதுக்கு மிக அருகில்
“ஹாய்”
மிரண்டு திரும்பினாள்! வேறு யார் ஹர்ஷா தான்!
“என்ன ரொம்ப நேரமா என்னை சைட் அடிச்சுட்டு இருந்த? ” என்று குறும்புதனமாக வினவ.
“நான்… உன்னை சைட் அடிச்சேனா? இந்த சுவற்றுல போய் முட்டிகிட்டாலும் முட்டிக்குவேனே தவிர உன்னை போய் எவளாச்சும் சைட் அடிப்பாளா? ” கோபத்தில் வார்த்தைகளை கடித்து துப்பினாள்!
“ஹை… இந்த உடான்ஸ் தானே வேணாங்கறது… சரி சரி போனா போகுது பொழச்சு போ! …” என்று கூறி கண்ணடிக்க
மலருக்கு பற்றி கொண்டு வந்தது!
“ஆமா இவன் பெரிய மன்மதன்… இவன் பின்னால ஊரே சுத்துதாமா! ” என்று முணுமுணுத்துவிட்டு “இப்போ வழிய விடறியா… நான் போகணும்…”
“தாராளமா போ… உன்னை என்ன கட்டிபிடிச்சுட்டா இருக்கேன்…? ” என்று மறுபடி வம்பிழுக்கவும்.
“ச்சே திருந்தாத கேஸ்…” என்று திட்டிவிட்டு வெளியே போக எத்தனிக்க… கீழே இருந்த கட்டை தடுக்கி விழ போனவளை
“ஹேய் மலர் பாத்து…” என்று அனிச்சையாக அவளது இடுப்பை பிடித்து நிறுத்தினான்… பிடித்த வேகத்தில் அவனை தள்ளி விட்டவள்… அத்தனை கோபத்தையும் சேர்த்து வைத்து அவன் கன்னத்தில் மாறி மாறி அடித்தாள்.
“பொறுக்கி… சான்ஸ் கிடைச்சா போதுமே… நீயெல்லாம்… ச்சே ரோக், scoundrel, bastrad… நீயெல்லாம் ஒரு மனுஷன்னு சொல்லிக்காத? ” என்று ஆத்திரத்தில் அவனை வார்த்தைகளால் பிரட்டி எடுத்தாள்!
ஆத்திரமாக திட்டிவிட்டு போக எத்தனித்தவளை தடுத்தது ஒரு இரும்புக்கரம்.
“ஏய்… நீ தான் இந்த உலகத்திலேயே அழகின்ற நினைப்பா? உன் பின்னாடி அலையறேன்னு நினைச்சுட்டு பேசறியா? அந்த நினைப்பெல்லாம் வெச்சுக்காத! இவ்வளவு பட்டும் உனக்கு இன்னும் என்கிட்டே சரியா நடந்துக்க தெரியல மலர்… தூண்டி விட்டுட்டே இருக்க…”
அவனை அலட்சியபடுத்தி கோபத்தோடு வெளியே வந்தவள் தன்னை ஒரு நொடியில் மாற்றி கொண்டு எல்லோரிடமும் சிரித்து பேச துவங்கினாள்!
ஆனால் ஒன்றை கவனிக்க மறந்துவிட்டாள்… அங்கு பத்திரிக்கையாளர்களும் இருப்பதை!
ஆரம்பத்தில் இருந்தே கவனித்து கொண்டு இருந்தவர்கள் தனி அறையில் இருந்து மலர் வருவதையும் சிறிது நேரம் கழித்து ஹர்ஷா வருவதையும் பார்த்தனர்! அவர்களுக்கு தேவை செய்திதானே!
மூன்று பேராக மலரிடம் வந்தனர்… சிரித்து கொண்டே.
“மேடம்… எப்போ நியூஸ் சொல்ல போறீங்க? ”
மலர் ஒன்றும் புரியாமல் “என்ன நியூஸ்… ஒன்னும் புரியல… தெளிவா சொல்லுங்க சார்…”
“என்னம்மா… உங்களுக்கும் வேதா ஹர்ஷா சாருக்கும் இருக்க அபெர் தானே இப்போ ஹாட் நியூஸ்”
“வாட்… என்ன சொல்றீங்க? அபெரா? “ என்று அதிர்ந்து அவள் மறுத்து கூற ஆரம்பிக்கும் போது இடையில் வந்த ஹர்ஷா.
“சாரி பிரெண்ட்ஸ்… என்ன இப்போ உங்களுக்கு தெரியணும்…? ” என்று கேட்டான்.
“உங்களுக்கும் மேடமுக்கும் காதலாமே… அது உண்மையா? ”
“பர்சனல் கேள்வி எல்லாம் இப்போ எதுக்கு பாஸ்? ”
“சார் இதென்ன ஆபீஸா… உங்கள வந்து உங்க ஆபீஸ்ல எல்லாம் பாக்க முடியறது குதிரை கொம்பு சார்… பார்ட்டி ஹால் தானே சொல்லுங்க! ”
“ம்ம்ம்ம்… காதல் இல்ல! ” என்றவன் மலரை தீர்க்கமாக பார்த்து.
“கல்யாணம் பண்ணிக்க போறோம்! … கண்டிப்பா முறையா தெரிவிக்கறோம்… வந்து ஆசீர்வாதம் பண்ணுங்க…” அவளை பார்த்தவாறே கூற.
மலருக்கு அதிர்ச்சியில் சகலமும் உறைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!