UEU6

UEU6

அத்தியாயம் 11
“ஹேஏஏஏஏஏஏஏஏ”
 கைதட்டும் ஓசைகளும் ஆராவாரமும் அடங்க நேரமானது! இப்படி ஹர்ஷாவின் வார்த்தைகளை முற்றிலும் எதிர்பார்த்தே இராத மலர் என்ன சொல்வது என்று தெரியாத நிலையில் இருந்தாள்! இந்த அளவு அனைவர் முன்னிலையிலும் சொல்வான் என்று அவள் நினைக்கவே இல்லையே!
கைகுலுக்கி மகிழ்ச்சியை தெரிவிப்பவர்களுக்கு தன் கையை குடுக்க முடியாது என்று சொல்லும் நிலையில் கூட அவள் இருந்தாள் இல்லை! இதற்கு மாறாக ஹர்ஷா அனைவரிடமும் வாழ்த்துக்களை சரளமாக பெற்று நன்றி கூறி கொண்டு இருந்தான்… மிகவும் மகிழ்ச்சியாக! அவனுக்கு வேண்டியதை தெரிவித்து விட்டான்!
அது அவளுக்கு கண்டிப்பாக ஒப்புதல் இல்லை என்பது தெரியும்… ஆனாலும் அவள் தன்னை அடித்தது அவனுக்கு பெரும் இழுக்காக இருந்தது!
தான் இவ்வாறு சொன்ன பின் அவளால் எதுவும் பேச முடியாது… பேசவும் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்! அதனாலேயே கிடைத்த சந்தர்பத்தை உபயோகித்து கொண்டான்! அதற்கு தகுந்தார்போல் அனைவரும் ஆரவரிக்கவே அவளது மறுப்பு காற்றில் கரைந்தது!
ஒரு சாதாரண விஷயத்திற்கு எப்படி அடிக்கலாம்? என்ற கோபம் அவனுக்கு! ஆனாலும் அவன் அறிந்தே இருந்தான்… முன்னர் இருந்த கோபத்தின் வெளிப்பாடே அது என்று! அவனும் முயன்று தன் கோபத்தை எல்லாம் கட்டுபடுத்தி கொண்டு தான் இருந்தான்.! தான் செய்தவை தவறு என்பது அவனுக்கு தெரியும்… ஆனால் அவனுக்கு சந்தர்ப்பம் கிடைத்த போது தவற விட மனது வரவில்லை!
நிருபர் பகுதியில் இருந்து சேர்ந்து புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கும்படி சத்தம் போட,
“இல்ல… வேணாம்… இப்போ வேணாம் பாஸ்! இப்படியே எடுத்துகோங்க…”
என்று சொல்லி மலர் கைகளை இறுக பற்றி கொண்டான்!
விடுபட முயற்சி செய்தவளை பார்த்தவர்கள் அவள் வெட்கத்தினால் அவ்வாறு செய்வதாக நினைக்க… ஒரு சிலர் சொல்லவும் செய்தார்கள்!
“கையை விடுடா…” கோபத்தில் பற்களை கடித்து கொண்டு சொன்னாள்!
“முடியாதுடி! ” சிரித்து கொண்டே
கைகளை விடுவேனா என்று தன் இரும்பு கரங்களால் இறுக பற்றி கொண்டு தன் பிஎஸ்ஓ வை பார்த்து சைகை காட்ட… ஐந்து பேர் அவர்களை சுற்றி வளையமாக்கி அவர்கள் இருவரும் வெளியேற உதவினர்!
அவளை கிட்டத்தட்ட அணைத்தவாறே கார் வரை அழைத்துவந்து வலுகட்டாயமாக உள்ளே நுழைத்து காரை எடுத்தான்!
“அறிவு இருக்கா உனக்கு? ” கோபத்தில் கொதித்து போய் கேட்டாள்!
“ஏன் உனக்கு கடன் வேணுமா? ” நக்கலாக கேட்கவே,
“ஏன் அப்படி சொன்ன? ”
“ம்ம்ம்ம்… அதுல என்ன தப்பு? ” பேசுவதற்கு ஒற்றை வரிகளாகவே பதில் சொல்லி அவளது கோபத்தை முடிந்த அளவு அதிகபடுத்தி கொண்டு வந்தான்!
மலருக்கு தான் அவன் பேசுவதை கேட்டு ரத்தகொதிப்பு எகிறி கொண்டு இருந்தது! கார் நகரை தாண்டி போய் கொண்டு இருந்தது! இருள் கவிழ்ந்து கொண்டு இருந்த நேரம்… சாலையில் கடக்கிற வாகனங்களின் வெளிச்சம் கண்ணை கூச செய்தது!
“ஹேய் இப்போ நீ காரை நிறுத்த போறியா இல்லையா? ”
“முடியாது! ”
“என்னை பத்தி உனக்கு ஒன்னும் தெரியாது ஹர்ஷா… திறந்து வெளிய குதிச்சுடுவேன்! ” தன்னால் முடிந்த அளவு மிரட்ட ஆரம்பித்தாள்!
 அவள் சொன்னதை கேட்டு சிரிக்க ஆரம்பித்தான் ஹர்ஷா!
“சிரிக்காத… ஐ மீன் இட்! ”
“சரி குதிச்சு தான் பாரேன்! ”என்று சொல்லி விட்டு மறுபடி சிரித்தான்!
கார் லாக்கை திறக்க மலர் முயற்சி செய்ய… அதுவோ அவளுக்கு பணிவேனா என்று முரண்டு பிடித்தது!
“உனக்கெல்லாம் யாரு தான் IAS தூக்கி குடுத்தாங்களோன்னு தெரியல… சென்ட்ரல் லாக் போட்டு இருக்கும் போது ஓபன் ஆகுமா…” என்று சொல்லி விட்டு சிரிக்க
மலரது முகம் சிவந்து கோவை பழமானது! அவளது கோபத்தை ரசித்து கொண்டே அவன் கூறியது அவளது கடுப்பை இன்னும் எக்கச்சக்கமாக கூட்டியது!
“உன்னோட எய்ம் தான் என்ன? சொல்லி தொலை…” என்று அதே கடுப்பில் கூறினாள்!
“எய்ம்… ம்ம்ம்ம்… அத இங்க எப்பிடி வெச்சு சொல்றது…”
“பின்ன… வேற எங்க? ”
திரும்பி அவளை தீர்க்கமாக பார்த்து
“அதுக்கு தான் போறோம்… வெயிட் பண்ணு! ”
அவள் திடுக்கிட்டாள்! இவன் என்ன சொல்கிறான்? எங்கே அழைத்து போகிறான்? இவனிடம் இப்படி மாட்டி கொண்டு விழிக்க வேண்டி உள்ளதே?
“எங்க கூட்டிகிட்டு போற ஹர்ஷா? இங்க பாரு என்கிட்ட எதாச்சும் மிஸ்பீகேவ் பண்ண ட்ரை பண்ணினா நான் சும்மா இருக்க மாட்டேன்…” என்று அழுத்தமாக கூறினாள்.
“என்ன பண்ணுவ? ”
“எனக்கு டேக்வாண்டோ தெரியும்! ”
“ஹாஆஆஆஆ… அப்படியா… நான் பயந்துட்டேன்… அதான் அம்மணி அப்படி வெளுத்து வாங்குனீங்களா… அதுக்கு பதில் சொல்லன்னுமே… அதான் கூட்டிகிட்டு வந்துருக்கேன்…” என்று சொல்ல மலர் முகத்தில் பயம் சிறிது எட்டி பார்த்தது!
இவன் என்னை என்ன செய்து விட முடியும்.? அப்படி ஏதாவது முயன்றால் பாவம் பார்க்காமல் பதில் குடுத்து விட வேண்டியதுதான்! என்னதான் செய்து விடுவானென்று பார்த்து விடலாம்.
பேசி கொண்டு இருக்கும் போதே ஒரு மாளிகையின் முன் நிற்க… அந்த பெரிய கேட்டை திறந்தான் காவலாளி!
“இது யார் வீடு? ”
அவள் கேட்ட கேள்விக்கு பதில் வராமல் போகவே அவனை சிறிது பயத்தோடு பார்த்தாள்!
அவளை பார்த்து சிரித்து
“என்ன மேடம்… உங்க தைர்யம் எல்லாம் இவ்ளோதானா? ஒரு கலெக்டர் இப்படி பயப்படலாமா? அவ்வளவு பேசுனீங்க… ஓ வாட் அ பிட்டி! ” என்று அவளை நக்கலடிப்பதிலேயே குறியாக இருந்தான் ஹர்ஷா!
“ஷட் அப் ஹர்ஷா! நீ ஒன்னும் என் தைர்யத்த விமர்சனம் பண்ண வேண்டாம்! அதுக்கு உனக்கு தகுதியும் இல்ல… என்ன நிலைமையா இருந்தாலும் என்னை காப்பாத்திக்க எனக்கு தெரியும்! ”
“ம்ம்ம்ம்… சரி… அப்போ தைர்யமா வர வேண்டியதுதானே! அப்புறம் ஏன் இப்படி பயப்படுற…? ” என்று கேட்டான்.
காரை விட்டு இறங்குவதற்கும் மீனாக்ஷி வெளியே வந்து வரவேற்பதற்கும் சரியாக இருந்தது!
மலர் மனதில் நிம்மதி பிறந்த அதே வேளை குழப்பம் டன் கணக்காக சூழ்ந்தது… பார்த்தால் அம்மா போல் தெரிகிறார்… இங்கே எதற்கு அழைத்து வந்தான்? இவனை புரிந்து கொள்ளவே முடியவில்லையே!
வந்த மீனாக்ஷி அவளை அணைத்து வரவேற்றார்!
“வாம்மா… மலர்! ”
“நான்… என்னை… எப்படி…” என்று தடுமாறினாள் மலர்.
“உன்னை பத்தி பெருமை பீத்தறது ஒன்னு தான் இவன் வீட்ல பண்ற வேலை! உன்னை பத்தி நிறைய சொல்லி இருக்கான்…” என்று சொல்லவும் தன்னை பற்றி பெருமையாக அம்மாவிடம் சொல்கிறானா…? நம்ப முடியவில்லையே… என்று அவனை பார்த்து வைத்தாள்… அவள் பார்க்கும் போது அவன் அம்மாவுக்கு தெரியாமல் கண்ணடிக்க… முறைத்தாள்!
“நேர்ல பாக்க அழகா கம்பீரமா இருக்கம்மா…” என்று சிரித்து விட்டு ஹர்ஷாவை பார்க்க.
“ம்மா… இன்னும் அங்க 10000 வாலா வெடிச்சுட்டு தான் இருக்கு… எனக்கு சொல்லவே பயமா இருக்கும்மா… நீங்களே அவ கிட்ட சொல்லுங்க! ” என்று தன் அம்மாவிடம் ரகசியம் பேசியவனை பார்த்து
“எங்க… உன் திருமுகத்த காட்டு மகனே… பயப்படுற மூஞ்சியா இது…” என்று மலரை பார்த்து கேட்க.
அவளுக்கு ஒன்றும் சொல்ல தெரியாமல் விழித்தாள்… பெரிதாக பயமுறுத்தி அழைத்து வந்து… இப்படி தன் தாய் முன் நிறுத்துவான் என்று கனவா கண்டாள்? ஆனாலும் இவன் செய்வது புரியவே இல்லையே… இங்கே இவன் தாயை பார்த்தால் கொஞ்சம் கூட இவனை தப்பாக நினைக்க வழியேயில்லை… ஆனால் அவன் தன்னிடம் நடந்து கொண்ட முறைகளுக்கும் இங்கே நடப்பவைகளுக்கும் சம்பந்தமே இல்லையே… எது தான் உண்மை…? மனம் குழம்பி போய் இருக்கையில் அடுத்த அம்பு வந்து பாய்ந்தது.
மாடியில் இருந்து வேகமாக இறங்கி வந்தவள் இன்னும் சொல்ல போனால் பறந்து வந்தவள் மலரை பார்த்து
“அண்ணி… நீங்க ரொம்ப ஸ்ட்ரிக்டாமே… அண்ணன் சொன்னார்… உங்கள இங்க எல்லாருக்கும் பிடிக்கும் அண்ணி… உங்களையும் துவாரகா அண்ணியையும் இங்க கூப்பிட்டு ட்ரீட் குடுக்கணும்னு சொல்லிகிட்டே இருந்தேன்… உங்க கூட துவாரகா அண்ணி வரலியா? ”
“அந்த அம்மணி எங்க இருந்து வரது… இப்போ சார் பண்ணி வெச்ச வேலைய பத்தி யாருக்காவது தெரியுமா? ”
என்ட்ரி குடுத்து குற்றபத்திரிக்கை வாசித்தவன்… வேறு யார்… நரேஷ் தான்… அப்படியே அமைதியாக நழுவ போன ஹர்ஷாவை பிடித்து கொண்டே கேட்டான்!
“இப்போ என்ன திருவிளையாடல் பண்ண ஹரி? ” என்று மீனாக்ஷி அம்மா கேட்க
“அங்க செமினார் முடிஞ்ச கையோட என்ன பண்ணினார்ன்னுகேளுங்க ஆன்ட்டி? ” என்று நரேஷ் எடுத்து குடுக்க
“அம்மா… அது… வந்து…” ஹர்ஷா தடுமாற
“என்ன வந்து போயி… ஒழுங்கா சொல்லு…” என்று ரிஷியும் கிடுக்கி பிடி போட்டாள்!
“அங்க இந்த பொண்ணு சம்மதம் இல்லாமையே பிரஸ் கிட்ட கல்யாணம்ன்னு சொல்லியாச்சு… டிவி போட்டு பாருங்க… இந்த நியூஸ் தான் இப்போ வர போகுது… அதுவும் இல்லாம அங்க இருந்து மலரை கடத்திட்டு வர மாதிரி பயமுறுத்தி கூட்டிட்டு வந்து இருக்கான்… துவாரகா என்னை வறுத்து எடுக்கறா! ” நொந்து போய் நரேஷ் கூற.
“அடப்பாவி… உன் ஆளு உன்னை வறுக்கறதுதான் உனக்கு கவலை இல்லையா…” என்று அவனை ஹர்ஷா வார
“நீ என்ன சொல்லுவ… உனக்கு இப்பிடி மாட்டிகிட்டு முழுச்சு பார்த்தா தெரியும்…”
நரேஷிடம் மெதுவான குரலில்…” நான் இப்போ அப்படி தாண்டா முழுச்சுட்டு இருக்கேன்… நீ வேற சூனியம் வைக்காத…”
என்று புலம்பவும் நரேஷால் சிரிப்பை அடக்க முடியவில்லை!
“தெரியுதில்ல… அப்புறம் ஏன் அப்படி பண்ண…? ”
“சரி சரி கண்டுக்காத…”
மீனாட்சி ஹர்ஷாவை பார்த்து முறைத்து விட்டு
“மலர்… எங்க ஹரிய கல்யாணம் பண்ணிக்க சம்மதமா? ” நேரடியாக கேட்க… ஒரு கணம் தடுமாறிய மலர்.
“இல்லம்மா… இவருக்கும் எனக்கும் ஒத்து வராது…” என்று சொல்லவும்.
ஏமாற்றம் அந்த மூவரின் முகத்திலும் ஏமாற்றம் தெரிய… ஹர்ஷா உணர்ச்சியை துடைத்த பார்வை கொண்டு கூர்ந்து பார்த்தான்!
“ஆரம்பத்துல இருந்தே எதுவும் சரியா இல்ல… இவர் என்கிட்டே எப்போவுமே மரியாதையா பேசியதில்ல… கல்யாணம்ன்னா பரஸ்பரம் மரியாதை வேணும்மா… அவர் மேல எனக்கும் என் மேல அவருக்கும்… அந்த மரியாதை இருந்தாலொழிய அந்த உறவுமுறை சாத்தியமில்ல… நீங்க என்னை மன்னிச்சுடுங்கம்மா…”
சொன்னவள் நெஞ்சிலும் வெறுமை சூழ்ந்தது! இந்த அருமையான குடும்பம் தனக்கு குடுத்து வைக்கவில்லை என்பதில் ஏமாற்றம் அடைந்தாள். மனமே மயங்காதே! அவன் கானல் நீர்! உன் குணத்துக்கும் அவன் குணத்துக்கும் ஏழாம் பொருத்தம்!
அவள் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தவர்களில் முதலில் சுதாரித்தது ஹர்ஷா தான்!
தோள்களை குலுக்கி கொண்டு எழுந்து தனது அறைக்கு சென்றான்!
“பரவால்ல தங்கம்… மருமகளாதான் வரணும்ன்னு இல்லை… மகளா கூட இந்த வீட்டுக்கு வரலாம்…” என்று ஏமாற்றத்தை மறைத்து கொண்டு வாஞ்சையாக கூற… அந்த பாசத்தில் உருகி போனாள் மலர்!
“அண்ணி… நான் சின்ன வயசுதான்… உங்க அனுபவமோ படிப்போ இல்ல அண்ணி… ஆனா நீங்க எடுத்து இருக்கறது தப்பான முடிவு… அண்ணியா இல்லைன்னாலும்எனக்கு நீங்க பிரெண்டா இருக்கலாம்ல… அதுக்கு ஓகே தானே? ” என்று கேட்க
ரிஷி பேசுவதை கேட்டு ஒரு வகையில் பெருமையே உண்டானது! அவள் தன் அண்ணன் மேல் வைத்து இருக்கும் பிரியத்தை பார்த்து சந்தோஷமாக உணர்ந்தாள்!
“கண்டிப்பா நீ என் பிரெண்ட் தான் ரிஷி! ” என்று ரிஷியை அணைத்து தன் அன்பை வெளிபடுத்தினாள்!
இதையெல்லாம் தன் அறையிலிருந்து செல்பேசியில் பேசி கொண்டே பார்த்து கொண்டு இருந்தான் ஹர்ஷா!
“ஹர்ஷா…” அம்மா அழைப்பது கேட்டது.
“வரேன்ம்மா…” கீழே விரைந்தான்!
 கிளம்ப தயாராக இருந்தாள் மலர்! அவளை சிறிதும் பார்க்காமல் தன் அம்மாவிடம்,
“என்னம்மா? ”
“கண்ணா… தங்கத்த கொண்டு போய் வீட்ல விட்ருடாம்மா… நேரமாச்சு ஹரி…”
அவனை பார்த்து முறைத்து விட்டு அனைவரிடமும் விடை பெற்று கொண்டு காரில் ஏறினாள்!
*******
 பேச்சு சில அர்த்தங்களை மொழிபெயர்த்தால் மௌனம் பல அர்த்தங்களை மொழிபெயர்க்கின்றது! எந்த பேச்சும் இல்லாத மௌனம் சில வேளைகளில் வசதியாகவும் இருக்கிறது!
அந்த இரவு வேளையில் மலருடனான பயணம் மனதிற்கு இதமாக இருந்தாலும் அவள் பேசிய வார்த்தைகள் ஏற்படுத்திய கணம் ஹர்ஷாவின் மனதை அழுத்தியது!
வளைவை அடுத்த சிறிது தூரத்தில் காரை ஓரமாக நிறுத்தினான்!
 யாருமில்லாத நிசப்தம் இருவர் மனதிலும் வெவ்வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்தியது!
“ஏன் நிறுத்தீட்டீங்க…”
“கொஞ்சம் இறங்கு… பேசணும்…”
“என்ன பேசணும்…”
அந்த தாக்கம் அவனது பேசும் திறனை பறித்து கொண்டது போலும்… வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறினான்! அவனுக்கே அவனை நினைத்து ஆச்சர்யமாக இருந்தது!
“காரை எடுக்கலாமே… எனக்கு நேரமாகுது…”
ரோடை ஒட்டி நின்று கொண்டு இருந்த மலர் அவசரபடுத்த… அவளை பார்த்து கொண்டே
“ம்ம்ம் போகலாம்… ஆனா ஒரு சில விஷயம் பேசணும்…” நிதானித்தவனை கூர்மையாக பார்த்தாள்… தீவிரமாக யோசித்து பேச முயன்றவனை இடையில் ஏதாவது கூறி தடுக்கவிரும்பவில்லை.
“சாரி…” ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டு அவளை பார்த்தவனை வித்தியாசமாக பார்த்தாள் மலர்!
அவளையே வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தவன்… அப்போதுதான் கவனித்தான் வளைவில் இருந்து திரும்பிய லாரி தன் கட்டுபாட்டை இழந்து மலரை நோக்கி வேகமாக வந்து கொண்டு இருந்தது.
அவசரமாக கண் இமைக்கும் நேரத்தில் அவளை பிடித்து இழுத்த ஹர்ஷா இருவருமாக சமாளிக்க முடியாமல் நிலை தடுமாறினான்!
கட்டுபாட்டை இழந்த லாரி அருகில் இருந்த மரத்தில் மோதியது.
க்ஷண நேரத்தில் நடந்த இந்த விபத்தை பார்த்து முதலில் அதிர்ந்தாலும் அந்த லாரி ஓட்டுனருக்கு என்ன ஆனதோ என்று பார்க்க விரைந்தாள் மலர்! உடன் ஹர்ஷாவும்!
மோதிய வேகத்திலேயே மரத்தில் இடித்து முன் பாகம் நசுங்கி இருந்தது!
அதை பார்த்த மலர் முதலில் அதிர்ச்சியில் ஹர்ஷாவின் கைகளை அழுந்த பற்றி கொண்டாள்! அவனும் அவளின் தோளை அணைத்து.
“பக்கத்துல போகாதடா… போலீஸ்க்கு முதல்ல இன்போர்ம் பண்ணிரலாம்…” அவளை தோளோடு சேர்த்து அணைத்தபோது அவளது நடுக்கத்தை உணர… அணைப்பை இறுக்கினான்… தன் செல்பேசியிலேயே கமிஷனரை அழைத்து அவளிடம் குடுத்தான்!
செல்பேசியை எடுத்த கமிஷனர் ஹர்ஷா என்று நினைத்து.
அதீத மரியாதையோடு.
“சார்… நான் செல்வா பேசுறேன்…”
“நான் மலர்விழி பேசுறேன் கமிஷனர் சார்…”
ஒரு நிமிடம் அந்த பக்கம் திகைத்தது தெரிந்தது.
நடந்த விபத்தை சொல்லி காவலர்களோடு ஆம்புலன்சையும் வர சொன்னாள்!
வருவதற்கு முன் அந்த ஆளுக்கு உயிர் இருக்கிறதா என்று பார்க்க போனவளை கையமர்த்தி தானே ஏறி பார்த்தான்!
அதில் இருந்த இருவருமே நசுங்கி உயிர் விட்டிருந்தனர்.
அத்தியாயம் 12
“மலர்… ஏய்… மலர்… எந்திரிடி… ஏய்… லூசு…” என்று துவாரகா உலுக்கி கொண்டு இருக்க… மலர் கண்களை மூடி கொண்டு தூக்கத்தில் அரற்றி கொண்டு இருந்தாள்!
கண்களை பயத்தோடு விழித்து பார்த்தவள்… தொப்பலாக நனைந்து இருந்தாள்! உடல் நடுங்கி கொண்டு இருந்தது!
“ஹய்யோ… கனவா…” என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
கனவு என்றாலும் எப்படி இப்படி தத்ரூபமாக? நம்ப முடியவில்லை… இது கனவுதான் என்றால்.
“ஹேய்… என்ன பன்ஸ்… என்ன ஆச்சு? எதாச்சும் கெட்ட கனவா? ” என்று உலுக்கி கேட்ட துவாரகாவுக்கு பதில் சொல்ல கூட முடியவில்லை! உடல் இன்னமும் நடுங்கி கொண்டு நாக்கு குழறியது!
“இல்… இல்ல… ஒன்னும் இல்ல்ழ்ழ… ச்… சு சும்மா… கனவு தான்… நீ போய் படுடா…” என்று திக்கி திணறினாள்!
“மலர்… எதாச்சும் மனசுல குழப்பம் இருந்தா இப்படி கனவா வருமாம்… சாமிய கும்பிட்டுட்டு படு…” என்று சொல்லி விட்டு திருநீறு எடுத்து இட்டு விட்டாள்!
“கனவென்றாலும் எப்படி இப்படி நிஜம் போலவே? அதுவும் அந்த முகம் எனக்கு மிகவும் பழக்கப்பட்ட முகமாக தெரிந்ததே… அது யாராக இருக்கும்? ” கனவின் தாக்கம் குறையாமல் நடுங்கி கொண்டே யோசித்து கொண்டு இருந்தவள் தன்னையும் அறியாமல் கண்களை மூடினாள். உறக்கம் தழுவி கொண்டது!
அன்றைய தினம் மிக சுறுசுறுப்பாக அமைந்தது! காலைலேயே முதல்வரை பார்த்து மாவட்டத்துக்கு தேவையான சிலவற்றை கூறி ஒப்புதல் வாங்கினாள். அதன் பின் வரிசையாக சந்திப்புகள் இருந்தது. இலவச நில பட்டா விண்ணப்பங்களை பரிசீலித்து தயாராக கையெழுத்திட்டு வைத்து இருக்கும் போதுமக்கள் பிரதிநிதி தன்னுடைய விண்ணப்பங்களை சேர்க்க சொல்லி கட்டாயபடுத்தினார்! ஆராய்ந்து பார்த்ததில் அவை யாவும் தகுதியற்ற விண்ணப்பம் என்பது தெரிய வர… அவற்றை நிராகரித்தாள்! அதற்கு வேறு தனியாக அந்த மக்கள் பிரதிநிதி வந்து சண்டை போட்டு விட்டு போக
“ச்சே… பொறுப்பே இல்லாத மனுஷங்க…” என்று தோன்றுயது மலருக்கு!
போகும் போது மிக கடுமையாக வேறு மிரட்டி விட்டு செல்ல… செயலாளர் தீபா தான் மிகவும் பயந்து போனாள்!
நெட்டி தள்ளிய வேலைகளை முடித்தவள் கைகளை தூக்கி சோம்பல் முறித்து கடிகாரத்தை பார்த்தாள்.
மணி ஏழு.
கதவை தட்டிய ஓசை கேட்டு
“எஸ் கம் இன்! ”
உள்ளே வந்த செயலாளர் “மேம் மீனாக்ஷி மெடிக்கல் காலேஜ்ல இருந்து வந்து இருக்காங்க! ” என்று குறுஞ்சிரிப்புடன் சொல்ல.
“ஹாய்…” வந்தது ரிஷி! … வந்தவள் அவளை வீட்டிற்கு அழைக்க.
“இல்லடா… இன்னொரு நாள் வரேன்… இன்னும் கொஞ்சம் வேலை பாக்கி இருக்கு…”
ரிஷி குரலை தழைத்து மெல்லிய குரலில் மலருக்கு மட்டும் கேட்குமாறு.
“நீங்க ஏன் வர மாட்டேங்றீங்கன்னு எனக்கு தெரியும்… அண்ணன் இருப்பான்னு தானே… அண்ணன் ஊர்ல இல்ல… டெல்லி போய் இருக்கான்… சோ நோ பயம்…”
 “ஓகேடா விடமாட்ட போலிருக்கே… வரேன்…”
“அப்படியே கொஞ்சம் purchase இருக்கு… பூஜைய முடிச்சுட்டு அப்புறம் கொஞ்சம் ஷாப்பிங் போலாமா ப்ளீஸ் மலர் அக்கா… உங்க கூட போகனும்ன்னு ஆசையா இருக்கு பூஜை அரைமணி நேரத்துல முடிஞ்சுரும்… எட்டு மணிக்கு நாம ஷாப்பிங் போனா போதும் ஒன்பது மணிக்கு வீட்ல கொண்டு போய் விட்டுடறேன்…”
சிறிது யோசித்தவள்… ரிஷியின் அன்பை கருத்தில் கொண்டு.
“ஓகே ரிஷி… போலாம்… ஆனா ரொம்ப லேட் ஆகாம இருக்கனும்… எதாச்சும் எமெர்ஜென்சி கால் எதாச்சும் வந்துச்சுன்னா நான் புறப்பட வேண்டி இருக்கும்… ஓகே வா?
ரிஷி சந்தோஷமாக தலையாட்டினாள்!
*******
பூஜை களைகட்டி இருந்தது! உள்ளே நுழையும் போதே ஏதோ கோயிலுக்குள் நுழைவது போன்ற உணர்வு. ஒரு சில இடங்களில் தான் அந்த மனத்தாக்கம் உண்டாகும்… நமது மனதுக்கு மிக நெருக்கமான இடங்களில் மட்டுமே சாத்தியம்… அந்த உணர்வை இங்கே உணர்ந்தாள்!
உள்ளே நுழையும் போதே மீனாக்ஷி எதிர்கொண்டு அழைத்தார்.
“வாம்மா மலர்… எப்படிடா இருக்க? பத்து நாள்ல இளைச்சு போய்ட்ட மாதிரி இருக்கே… சாப்பாடு நல்லா சாப்பிடுறியா… ஏண்டா முகம் எல்லாம் இவ்ளோ சோர்வா இருக்கு…”
விடாமல் கேட்டு கொண்டே இருக்கவும் ரிஷி முந்திக்கொண்டு.
“அம்மா ஆபீஸ்ல இருந்து நேரா வந்தா டயர்டா இல்லாம வேற எப்பிடி இருப்பாங்க… என்னமா நீ…”
“ஏண்டா நல்லா தூங்கறது இல்லையா… ஏதோ கனவு கண்டு ராத்திரில பயந்துக்கிறியாம்…”
“இதெல்லாம் யாரும்மா சொல்றது…” மலருக்கு வியப்பு!
“துவாரகா பொண்ணுதான் சொல்லுச்சும்மா…” என்றபோது அந்த வியப்பு இன்னும் கூடியது… நம்மை அக்கறையாக உண்மையான அன்போடு விசாரிக்கவும் உள்ளங்கள் இருக்கின்றன என்ற நிம்மதி தன்னில் சூழ்வதை உணர்ந்தாள்!
“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனைல்லமா… சும்மா ரெண்டு நாள் அந்த மாதிரி ஆச்சு… அப்புறம் ஒன்னும் இல்ல…” அவருக்கு சமாதானமாக கூறினாள்!
“போக வர இடத்திலெல்லாம் பார்த்து போகணும்… ஜாக்கிரதையா இருடா… பத்து நாள் முன்னாடி லாரி மோத பாத்துச்சாமே… இன்னிக்கு காலைல தான் தம்பி சொன்னான்… அதான் இந்த பூஜைம்மா… எந்த திருஷ்டி இருந்தாலும் போய்டும்…”
அதை கேட்ட ரிஷி முந்தி கொண்டு…” அம்மாக்கு இதிலெல்லாம் ரொம்ப நம்பிக்கை உண்டுக்கா…” தன் அம்மாவிடம் திரும்பி…”
மலர் அவர்களின் பாசத்தை பார்த்து மனதுக்குள் நெகிழ்ந்து கொண்டே
“ஏம்மா இதுக்கு போய் பூஜையா…”
“ஏண்டா… ரிஷி இப்படி பயந்தாலும் ஹரின்னாலும் நான் இதே மாதிரி தான் பூஜை பண்ணி அவங்களுக்கு திருஷ்டி கழிப்பேன் மலர்… நீ ஹரிய கல்யாணம் பண்ணிட்டாலும் பண்ணாம விட்டாலும் நீ இந்த குடும்பத்துல ஒரு பொண்ணு தான்… பேசாம நீ போய் ரிஷி ரூம்ல ப்ரெஷ் ஆகிட்டு வாடா… டீ குடிச்சுட்டு பூஜைல கலந்துக்குவ… ரிஷி கூட்டிட்டு போடாம்மா…”
ரிஷியுடன் அறைக்கு சென்ற மலர்… குளித்து விட்டு அவள் வற்புறுத்தி குடுத்த சேலையை கட்டி கொண்டு தலைமுடியை தளர பின்னி பூ வைத்து ஒப்பனை சிறிதும் இல்லாமல் கீழே வர… அவளை பார்த்த மீனாக்ஷிக்கு மலைப்பாக இருந்தது!
“தீட்டாத வைரமே இப்படி ஜொலிக்கிறதே… இந்த பெண்ணுக்கு அலங்காரம் பண்ணி பார்த்தால்… தன் மகன் தலை சுற்றி போனதில் எந்த தவறும் இல்லை… அதுவும் இப்படி அழகோடு மிகுந்த அறிவோடும் இருக்கும் பெண்ணை யாருக்கு தான் பிடிக்காது? “
பூஜையில் உட்கார்ந்தவர்கள் மிகவும் பக்தியோடு கண்களை மூடி இருந்தனர். உள்ளே நுழைந்த ஹர்ஷாவை பார்த்த மீனாக்ஷி கண்களாலேயே ஜாடை செய்து போய் குளித்து உடை மாற்றி வர சொன்னார்… வந்தவன் சத்தமே போடாமல் மலர் அருகில் புன்னகையுடன் அமர்ந்து கொண்டான்.
கண்களை விழித்து பார்த்த மலர் திகைத்து போனாள்… அருகில் ஹர்ஷா இருப்பதை பார்த்து.
மலரை பார்த்து கண்களை சிமிட்டி “ஹாய் ஹனி…” என்று புன்னகைக்க.
 சட்டென எழுந்த மலர் அவனை பார்த்து கண்களை உருட்டி முறைத்து
“என்ன ஹனியா? ம்ம்ம்ம்… அடி வாங்குனது மறந்துடுச்சு போல… என்று சன்னமாக சீறிவிட்டு ரிஷிக்கு மறுபுறம் போய் உட்கார்ந்து
“ஹேய் ரிஷி… அண்ணன் என்னமோ ஊர்ல இல்லைன்னு சொன்ன… பொய் தான சொல்லி கூட்டிட்டு வந்த…”
“ஹய்யோ இல்ல… அண்ணா இப்போ தான் டெல்லில இருந்து வந்துருக்காங்க… நம்புங்க… ப்ளீஸ்…”
ஆரத்தி எடுத்து கொண்டு வெளியே வந்தவர்களை… சாப்பிட அழைத்தார் மீனாக்ஷி!
“அம்மா எனக்கு லேட் ஆகுது… நான் கிளம்பறேம்மா… என்று கூறிய மலரை பார்த்து
“ஏண்டா பூஜைல கலந்துட்டு சாப்பிடாம போவியா… நல்லா இருக்கே… சாப்பிட்டு போலாம் கண்ணா… அதோட ஷாப்பிங் வேற போகனும்னு ரிஷி சொன்னாளே…” அவளை எப்படியாவது இங்கேயே இருக்க வைக்கும் ஆதங்கத்தோடு சொல்லி… அவளை உண்ண வைத்தார்.
அவளை கண்ணால் மட்டும் உண்டு கொண்டு இருந்த ஹர்ஷாவுக்கு அன்று எல்லாமே அழகாக தெரிந்தது. பார்த்து பத்து நாள் ஆனாலும் போனில் கூட பேசவில்லை. அவனது பழைய பெண்தோழிகள் அழைத்தபோது எதையும் ஏற்கவில்லை… மலர் மட்டுமே போதும் என்ற மனநிலையில் இருந்தவனுக்கு இன்று திடீரென்று வீட்டில் அவளை பார்த்தும் திகைப்பாக இருந்தது! அதுவும் அந்த ஆகாய நீல சேலையில் அந்த தேவதையே வந்தது போல் கண்களை மூடி அமர்ந்து இருந்தவளை பார்த்த ஹர்ஷாவுக்கு அவளை அப்படியே அள்ளி அணைக்க மனம் பரபரத்தது… பரபரத்த மனதை அடக்கியவனுக்கு எப்படிடா இவள் மனதை மாற்றுவோம் என்று ஏக்கமாக இருந்தது!
ஷாப்பிங் கிளம்பியவர்களை பார்த்து மீனாக்ஷி…” ஹரி நீயும் துணைக்கு போடாம்மா… ரெண்டு பெரும் தனியா போறாங்க… இல்ல…” என்று கூறிய தாயை பார்த்து
“அம்மா நீயல்லவோ எனது தெய்வம்…” என்று பாட தோன்றியது ஹர்ஷாக்கு.
புன்னகையுடன் காரை எடுத்தவன் நேரே போனது மிக பிரபலமான நகை கடைக்கு.
மூவருமாக கடைக்குள் நுழைவதை பார்த்து கொண்டு இருந்த ஒரு ஜோடி கண்களில் இருந்த குரூரத்தை யாரும் பார்க்கவில்லை!
********
நகைகளும் துணியும் ரிஷிக்கு வாங்கும் சாக்கில் மலருக்கும் அளவு வைத்து பார்த்து தனியாக வாங்கி கொண்டதை மலர் அறியவில்லை!
 துணிக்கு ஏற்றாற்போல் காலனி வாங்க வேண்டும் என்று ரிஷி கேட்க… அவர்கள் இருவரையும் அருகிலிருந்த மால்க்கு அனுப்பி விட்டு காரை பார்க் செய்ய வந்தவனை இடித்து கொண்டு ஒருவன் போனான்… முரட்டு தோற்றத்தோடு இருந்த அவனை பார்த்த ஹர்ஷா மனதுக்குள் எதோ ஒரு நெருடல்!
ஏதோ நடக்க போவதாக உள்ளுணர்வு உறுத்தியது!
குழப்பத்தோடு கடைக்குள் சென்றவன்… அங்கு கையில் ஒரு பாட்டிலோடு ரிஷியையும் மலரையும் நெருங்கினான் அந்த முரடன்.
இது தெரியாமல் இருவரும் சிரித்து பேசி கொண்டு இருக்க… கையில் இருந்த பாட்டிலை யாரும் அறியாதவாறு திறந்தவன் மலர் மேல் சடுதியில் ஊற்ற எத்தனிக்க.
அவனை பார்த்து கொண்டே இருந்த ஹர்ஷா கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்து சென்று தட்டி விட்டான்.
ஆனாலும் மலர் கைகளில் சிறிது பட்டது.
பட்ட இடங்கள் கொதிக்க ஆரம்பிக்க… மலருக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது அது ஆசிட் என்று உணர.
“அம்மாஆஆஆஆஆஆ…”
எரிச்சல் தாங்க முடியாமல் மலர் கத்தினாள்!
தான் வந்த காரியம் பாதி தான் முடிந்த நிலையில் அந்த முரடன் வெளியே ஓட எத்தனிக்க அவனை பிடிக்க முயன்ற ஹர்ஷா… அவன் ஓட முயல… அவனை பிடிப்பதை காட்டிலும் மலருக்கு முதல் உதவி செய்வது தான் முக்கியம் எனப்பட்டது.
நொடியில் தனது செல்போனை எடுத்து அவனை புகைப்படம் எடுத்தான். பின்னர் போலீசுக்கும் தன் நண்பனின் தனியார் துப்பறியும் நிறுவனத்துக்கும் தகவல் கொடுத்தவன்… பேசி கொண்டே பக்கத்தில் இருந்த நீரை எடுத்து மலர் கைகளின் மேல் கொட்டினான்!
அதிர்ச்சியில் ஒரு நிமிடம் உறைந்து நின்ற ரிஷி… அவசரமாக நீரை மலர் கைகளில் ஊற்றி கொண்டே இருந்தாள்… மலர் வேதனை தாங்க முடியாமல் கதறினாள்! ரிஷியும் பதட்டத்தில் கண்களில் கண்ணீர் வழிய நீரை வேகமாக ஊற்றி கொண்டே இருந்தாள்.
“அண்ணி… ப்ளீஸ் கொஞ்சம் பொறுத்துக்கோங்க… ஆசிட டைல்லுட் பண்ணலைன்னா பர்ன் ஆழமா போய்டும்… ப்ளீஸ் அண்ணி…”
செல்பேசியில் பேசி கொண்டே வேகமாக மளிகை சாமான்கள் இருக்கும் இடத்திற்கு பறந்தான் ஹர்ஷா.
சமையல் சோடாவை எடுத்து கொண்டு வந்த ஹர்ஷா… அதை மலர் கை மேல் ஆசிட் பட்ட இடங்களில் எல்லாம் கொட்ட… அந்த எரிச்சல் தாங்காமல் மலர் இன்னும் கதறினாள்!
“அண்ணி கொஞ்சம் பொறுத்துகோங்க… இத விட ஒரு நல்ல முதல் உதவி கிடையாது… ஒரே நிமிஷம் ஹாஸ்பிடல் போய்டலாம்…” தான் அண்ணனின் புத்தி கூர்மையை எண்ணி வியந்தபடியே.
இந்த மாதிரி சம்பவங்கள் நடக்கும் போது sodium bicarbonate எனும் சமையல் சோடாதான் முதல் உதவி என்று அனைவரும் அறிந்து இருக்க போவதில்லை… அப்படியே அது பற்றி தெரிந்தவர்களாக இருந்தாலும் அதை உடனே, … அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்து செய்பவர்கள் குறைவு! … அண்ணனுக்கு எப்படி உடனே தோன்றியது… என்று வியந்தபடியே… மலரை அழைத்து கொண்டு காருக்கு போனாள்!
கார் மருத்துவமனை விரைந்தது.
ஆனால் மலருக்கு ஒரு எண்ணம்… பத்து நாள் முன்னர் தான் மேல் லாரி மோத வந்ததையும் அப்போது ஹர்ஷா காப்பாற்றியதையும்
இப்போது தான் மேல் ஒருவன் ஆசிட் ஊற்ற வந்ததையும் அவனிடம் இருந்தும் ஹர்ஷாகாப்பாற்றியதும்.
ஒப்பிட்டது மனது.
இவை இரண்டும் முன்னரே பிளான் செய்தது போல உள்ளதே, .
ஒரு வேளை இவை முன்னரே ஹர்ஷாவுக்கு தெரியுமா?
அப்படி என்றால்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!