UEU7

UEU7

அத்தியாயம் 13
 இரவின் நீளத்தை அளந்து கொண்டு இருந்தான் ஹர்ஷா! மலருக்கு அந்த விபத்து ஏற்பட்டு இரண்டு நாட்கள் ஆகி இருந்தது! பத்திரிக்கைகள் மற்றும் மீடியாவும் சேர்ந்தது அவர்களுக்கு தோன்றிய கதையெல்லாம் பரபரப்பாக கூறி தீர்த்தார்கள்! இதில் ஹர்ஷாவிடம் பேட்டி வாங்க முயன்று தோற்ற பலர் அவர்களுக்கு தோன்றிய கதையெல்லாம் எழுதி விஷயத்தை பரபரப்பாக்கி கொண்டு இருந்தனர்! அதில் முக்கியமாக ஹர்ஷா மலர் காதல் கதை கதை இருந்தது… அவரவர் கற்பனைக்கு ஏற்றவாறு!
 எதற்கும் கலங்காமல் தைர்யமான முடிவுகளை மிக குறைந்த நேரத்தில் எடுப்பவன் என்று பெயர் வாங்கிய ஹர்ஷாவால் இந்த சம்பவத்தை நினைத்து பார்க்கவே முடியவில்லை… அதிலும் அதன் பின்னர் மலர் நடந்து கொண்ட விதத்தில் மிகவும் காயப்பட்டு போனான்!
 பதறி கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து போனவனை… ஒரு பார்வை? ஒரே ஒரு பார்வை? ம்ம்ம்ஹும்… ஏன் இவ்வாறு செய்தாள்? முகம் கொடுத்து பேச கூடவில்லையே… என்ன நான் என்ன அவளிடம் காதல் பேச்சா பேசினேன்? இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளத்தானே அவளிடம் கேட்டேன்… அதற்கு தகுந்த பதிலா அது?
“எனக்கு இதில் யார் சம்பந்த பட்டிருக்காங்கன்னு தெரியும் ஹர்ஷா… தேவை இல்லாம என் மேல அக்கறை இருக்கற மாதிரி நடிக்க வேண்டாம்… சம்பந்தபட்ட யாரா இருந்தாலும் கண்டிப்பா தண்டனை வாங்கி கொடுக்காம இருக்க மாட்டேன்… நோட் பண்ணிகோங்க… யாரா இருந்தாலும்…” என்று கூறி முகம் திருப்பியவளை பார்க்கும் போது மனம் வலித்தது.
 மீனாக்ஷி வீட்டிற்கு வந்து ஓய்வு எடுக்க மிகவும் வற்புறுத்திய போதும் அவள் மிகவும் பிடிவாதமாக மறுத்து விட்டாள்! மீனாக்ஷி அப்படியே விட மனதில்லாமல் இரண்டு நாட்களாக காலையில் செல்பவர் இரவு வரை மலர் வீட்டில் இருந்து விட்டு தான் வந்தார்… அவருக்கு மிகுந்த வருத்தம்… அப்போதுதானே அந்த பெண்ணின் அழகை கண்ணார பார்த்து மனதில் ஆசையை வளர்த்து கொண்டு இருந்தோம்… அதற்குள் இப்படி ஆகிவிட்டதே என்று… ஆனாலும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்று நினைக்க வேண்டியதுதான்.
 மனதில் இந்த குழப்பங்களோடு… யார் இந்த காரியத்தை செய்து இருப்பார் என்ற கேள்வியும் ஹர்ஷாவை குடைந்தது… அன்று சம்பவம் நடந்த போது நடந்தவைகளை மனதில் ஓடவிட்டான்… அந்த முரடனை இன்னும் போலீசால் கண்டு பிடிக்கமுடியவில்லை! தனது நண்பன் கௌதமிடம் குடுத்த புகைபடத்தாலும் ஒரு உபயோகமும் இல்லாமல் இருந்தது.
விசாரிக்க வந்த போலீசிடமும் மலர் பெரிதாக ஒன்றும் கூறிவிடவில்லை.
“உங்களுக்கு யாராச்சும் எதிரிங்க இருக்கறதா நினைக்கிறீங்களா மேடம்? ”என்று கேட்க,
“இந்த ப்ரோபஷன்ல இதெல்லாம் எதிர்பார்த்துகிட்டே இருக்கறதுதான் சார்… அதுவும் நாம நேர்மையா இருக்கணும்னு பிடிவாதமா இருந்தா… இதையெல்லாம் தவிர்க்க முடியாது…”
“உங்க கிட்ட நேரா மோதி எதிர்த்தவங்க யாராச்சும் இருக்காங்களா மேடம்…”
சிறிது நேரம் ஹர்ஷாவை வெறித்த பார்வை பார்த்த மலர்
“அப்படி என்னால வரையறுத்து சொல்ல முடியலை…”
என்று முடித்து கொண்டாள்! அவர்கள் போன பின் ஹர்ஷா விசாரித்த போதுதான் மலர் அவ்வாறு கடித்தது.
 ஹர்ஷாவுக்கு மலர் ஏதோ மனதில் வைத்து கொண்டு பேசுவதாக பட்டது… தெளிவாகத்தான் இருக்கிறாள்! மனதில் ஏதோ முடிவு செய்து கொண்டு தான் இப்படி நடந்து கொள்கிறாள் என்பதை நன்றாக புரிந்து கொண்டான்!
 ஆனால் யோசிக்க யோசிக்க ஏதோ புரிந்தாற்போல் இருந்தது… முன்னர் நடந்த விபத்தையும் இப்போதைய விபத்தையும் மனம் ஒப்பிட்டது… ஏதோ புரிகிறாற்போல் இருந்தது… ஏனோ அந்த விபத்து தற்செயல் என்று ஒதுக்க முடியவில்லை! தான் மட்டும் இழுக்காமல் இருந்து இருந்தால் அந்த லாரி மலர் மேல் மோதி இருக்க வேண்டியது… இப்போது இப்படி… யாரோ மலரை டார்கெட் செய்கிறார்கள்! யார் என்று தான் புரியவில்லை! அவ்வாறு இருப்பது உண்மையாக மட்டும் இருந்தால்… மனம் கொதித்தது.
உடனே நரேஷை அழைத்தான் ஹர்ஷா.
 தூக்க கலக்கத்தில் செல்பேசியை எடுத்த நரேஷ்,
“மாப்ள… என்னடா… நடு ராத்திரில…”
“அடபாவி மணிய பாருடா… மூனாச்சு…”
“அது உனக்கும் எனக்கும் நடு ராத்திரிதான ஹர்ஷா… இப்போ திடீர்ன்னு உனக்கு இப்படி ஞானோதயம் வரும்னு தெரிஞ்சு எனக்கு தூக்கம் வராம இருக்குமா… அலும்பு பண்ணாதடா! ”
“மவனே ஒழுங்கா நீ முழுசுச்சுட்டு கேட்கலைன்னா இப்போ அங்க வந்து தண்ணிய எடுத்து முகத்துல ஊத்திடுவேன். “
“ஐயோ சாமி நீ பண்ணாலும் பண்ணுவ… சீக்கிரம் சொல்லு…”
என்று கேட்டவனிடம் அன்று நடந்த விபத்தை பற்றி சொல்லி தன் சந்தேகங்களை கூறினான்!
“ரொம்ப முக்கியமான ஸ்கூப் ஆச்சே…”
“அப்போ இத பெரிய விஷயமா நினைக்கில”
“இப்போ என்ன பண்ணலாம்ன்னு நீ நினைக்கிற? ”
“முதல்ல மலர்க்கு ஷேடோ போடணும் நரேஷ்… முழுசா விசாரிக்கணும்… கெளதம் கிட்ட சொல்லி… யார் கூட எல்லாம் சண்டை போட்டு இருக்கான்னு… என்கிட்டயே எவ்ளோ சண்டை போட்டு இருக்கா… யாரத்தான் விட்டு வைக்க போறா? ”
கெளதம் துப்பறியும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருபவன்… ஹர்ஷாவின் அனைத்து துப்பறியும் வேலைகளை செய்பவன்… நரேஷ் போல இவனும் ஒரு நல்ல நண்பனே!
“துவாரகா கிட்ட சொல்லி கொஞ்சம் டீப்பா கவனிக்க சொல்லணும்…”
“அது நல்ல ஐடியாடா! ”
“கெளதம் கிட்ட சொல்லி போனையும் டேப் பண்ணனும் நரேஷ்… எதாச்சும் ஸ்கூப் கிடைக்கலாம்…”
“அந்த பி ஏ பொண்ணு தீபாவ பிடிச்சா தகவல் கிடைக்கும்…”
“ம்ம்ம்ம் அதுவும் பன்னனும்டா… அதோட இன்னொரு ஐடியாவும் இருக்கு… செஞ்சுட்டு சொல்றேன்… நீ மலரோட செல்போன் நம்பரோட ஸ்டேட்மென்ட் கடந்த ரெண்டு மாசத்துக்கு வாங்கு… அதாவது மலர் சென்னை வந்ததுக்கு அப்புறம் இருந்து…”
“ஹர்ஷா… இத பண்ணவன் அதுக்கு முன்னால மலர் கிட்ட வம்பு பண்ணவனா இருக்க கூடாதா? ”
“அப்படி பண்ணி இருந்தாலும் இந்த ரெண்டு மாசத்துக்குள்ள மலர் கிட்ட மறுபடி மோதி இருப்பானே நரேஷ்… சப்போஸ் கிடைக்கிலைன்னா அடுத்த ஆப்ஷன் பாக்கலாம்…”
“ஏன் உன் கிட்ட எதுவும் சொல்லலியா…”
“அந்த லூசு என்கிட்டே ஒன்னும் சொல்ல மாட்டேங்குது… இன்பாக்ட் என்னைய ஒரு மாதிரியா நினைக்கிறா போல இருக்கு… ஆனா அவ மேல ஒரு துரும்பு பட்டா கூட நான் சும்மா விட மாட்டேன்னு அவளுக்கு தெரியல… அப்படி இருக்கும் போது ஆசிட் ஊத்துன ஆள சும்மாவா விட்ருவேன்… நெவர்! ” கோபத்தோடு அவன் கூற
“ஹேய்… கூல் மேன்… கூல்… அந்த பொண்ண நீ இவ்ளோ லவ் பண்ணுவன்னு நான் நினைக்கில… எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஹர்ஷா… ஷி இஸ் எ லக்கி கேர்ள்…”
“ஓகே நரேஷ்… நீ தூங்கு அப்புறம் பேசிக்கலாம்…”
“அட பாவி மக்கா… என் தூக்கத்த ஸ்பாயில் பண்ணிட்டு இப்போ ரொம்ப நல்லவனாட்டம் தூங்குன்னு சொல்றியா? ”
“ஹஹஹா… சாரிடா மச்சி… குட் நைட்…”
“மாப்ள… மணிய பாரு… ஆறு… இவ்ளோ நேரம் என்னை அறுத்துட்டு… குட் நைட்டா… இது உனக்கே அடுக்குமா? ”
அதை கேட்டு பலமாக சிரித்தவன்… உறங்க சென்றான் அதிகாலையில்.
*******
வேதா டவர்ஸ்
மவுண்ட் ரோட்டில் இருக்கும் அந்த பத்து மாடி கட்டடத்தில் எல்லோரும் மிக பரபரப்பாக வேலை பார்த்து கொண்டு இருந்தனர்… திங்கள் கிழமை காலை என்பதால் அந்த பரபரப்பு.
சுறுசுறுப்பாக தன் அறைக்கு வந்த ஹர்ஷா தேவையான உத்தரவுகளை பிறப்பித்த வண்ணம் இருந்தான்… சோம்பலே அவனுக்கு பிடிக்காத ஒன்று.
நரேஷை அழைத்தான் ஹர்ஷா.
“நரேஷ் நான் சொன்னதெல்லாம் என்ன ஆச்சு? ”
“கெளதம் கிட்ட சொல்லிட்டேன் ஹர்ஷா… இன்வஸ்ட்டிகேஷன் நீ சொல்ற ரூட்ல தான் போயிட்டு இருக்கு…”
“குட்… அப்புறம்…”
“மலர்க்கு ஷேடோ அரேஞ் பண்ணியாச்சு… துவாரகாகிட்டயும் சொல்லியாச்சு… தீபா இன்னிக்கு பன்னிரண்டு மணிக்கு பெர்மிஷன் போட்டுட்டு வரதா சொல்லி இருக்காங்க…”
“அப்புறம் அந்த செல்போன் ஸ்டேட்மென்ட் என்னாச்சு நரேஷ்? ”
“concerned authority கிட்ட கேட்டு இருக்கேன் ஹர்ஷா… எப்படியும் பன்னிரண்டு மணிக்குள்ள கிடைச்சுடும்”
“தட்ஸ் குட்…”
“ஹர்ஷா… நான் ஒரு விஷயம் சொல்லணும்…”
“சொல்லுடா…”
“இல்ல ஹர்ஷா… அது இந்த விஷயத்துக்கு எந்த அளவு உபயோகமா இருக்கும்ன்னு தெரில… ம்ம்ம்ம்… எதுக்கும் கன்பர்ம் பண்ணிட்டு சொல்லறேன்…”
“பரவால்ல நரேஷ் சொல்லு…”
சொன்னான்.
நரேஷை கூர்மையாக பார்த்த ஹர்ஷா ஒரு கணம் தயங்கி பின்.
“ஓகே நரேஷ்… உன் இஷ்டம் போல இந்த திசைளையும் பார்க்கலாம்… துவாரகாவே பார்த்து இருக்கா இல்ல…”
பின்னர் வேலைகள் வரிசையாக வர… அதில் மூழ்கி போனான்.
மூச்சு விட கூட முடியாமல் வரிசையாக வேலைகளும் செல்பேசி அழைப்புகளும் வர அதில் மூழ்கியவன் மணியை பார்த்தான்… பதினொன்று!
நெட்டி முறித்தவனின் காதுகளில் வெளியே நடந்த வாக்குவாதம் விழுந்தது.
எழுந்து போய் கேட்கலாம் என்னும் போதே… கதவை திறந்து கொண்டு வந்தவள்…… வர்ஷினி!
நரேஷ் பதட்டமாக…” சொல்ல சொல்ல கேக்காம உள்ளே வந்துட்டாங்க ஹர்ஷா…”
“பரவால்ல நரேஷ்… நான் பார்த்துக்கறேன்…” என்று கூறியவனை ஒரு மாதிரியாக பார்த்து கொண்டே போனான்.
“என்ன வர்ஷினி… திடீர்ன்னு ஆபீஸ் எல்லாம் வந்து இருக்க? ஏதாவது பிரச்சனையா…? ”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல ஹர்ஷா… உங்களை பார்த்தே ரொம்ப நாளாகுதே… அதான் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்… முன்ன மாதிரி எல்லாம் ஆள் கண்ணுக்கே சிக்குறது இல்ல…”
“ம்ம்ம்…”
ஒன்றும் கூறாமல் வெறுமனே மெளனமாக இருந்தவனை பார்த்து கண்கலங்கியவள்
சிறிது நேரம் பேசி கொண்டு இருந்து விட்டு.
“சரி ஹர்ஷா நான் போயிட்டு வரேன்…” என்று கூறும் போதே தலையை பிடித்து கொண்டு உட்கார்ந்து விட்டாள்.
“ஹேய் வர்ஷினி… என்ன பண்ணுது… எதாச்சும் உடம்புக்கு பிரச்சனையா? ”
“இல்ல ஹர்ஷா… இன்னிக்கு கொஞ்சம் உடம்புக்கு காய்ச்சல் வராப்ல இருந்துச்சு… விடாம ஷூட்டிங்… அதும் அவுட் டோர்… தண்ணீர் ஒத்துக்கலை போல இருக்கு… வாமிட்டும் வர மாதிரி இருக்கு… ஹர்ஷா நான் கொஞ்சம் ரெஸ்ட்ரூம் யூஸ் பண்ணிக்கிலாமா? ”
“வர்ஷினி… இதுகெல்லாம் கேக்கணுமா? இந்த பக்கம் ரெஸ்ட்ரூம் இருக்கு… யூஸ் பண்ணிக்கோ…” என்று சொன்னான்.
முகம் கழுவி விட்டு வந்தவளுக்கு தலையை சுற்றியது… நிற்க முடியாமல் துவண்டு விழ போனவளை ஹர்ஷா தாங்கி பிடித்து படுக்க வைக்க முயற்சிக்க… அவள் கைகளோ தன் கழுத்தை சுற்றி பிணைந்து இருப்பதை அறியவில்லை… பெரிதாக நினைக்கவில்லை.
சட்டென்று கதவு திறந்தது.
யாரென்று வெளியே பார்க்க
மலர்விழி.
முகம் சிவக்க… கோபம் கொப்பளிக்க… நின்று கொண்டிருந்தாள்!
ஹர்ஷாவுக்கு தலை கால் புரியாத சந்தோஷம்… பின் வராதவள் வந்து இருக்கிறாளே.
“மலர்… வாட் அ சர்ப்ரைஸ்… நிஜமா நீ தானா… நம்பவே முடியலியே…” தனது சந்தோஷத்தை வெளிபடுத்தாமல் இருக்க முடியவில்லை.
அவளோ ஒன்றுமே பேசாமல் இருவரையும் மாற்றி மாற்றி பார்த்து கொண்டு இருந்ததை பார்த்தவனுக்கு மனதில் சங்கடமாக இருந்தது.
“மலர்… உள்ள வாடா… முதல் தடவையா நம்ம ஆபீஸ் வந்து இருக்க…” என்று உபசரிக்க… தான் இவ்வளவு நேரம் இங்கே தானே இருந்தோம்… நம்மை ஒரு வார்த்தை இது போல சொல்லவில்லையே என்று மனம் வலித்தது வர்ஷினிக்கு.
“கைய இப்படி வெச்சுட்டு வரணுமா மலர்… எதாச்சும்ன்னா என்னை போன்ல கூப்பிட்டு இருக்கலாமே…” என்று ஆதரவாக கூறினான்.
“இல்ல… இது நேர்ல பார்க்க வேண்டிய வேலை… சரி நான் கிளம்புறேன்…” என்றவளை கூர்மையாக பார்த்தான் ஹர்ஷா… ஆனால் காட்டிகொள்ளாமல்
“என்ன மேடம் வந்தீங்க… உடனே கிளம்புறீங்க…? இன்னும் எவ்ளோ நாள் லீவ் இருக்கு மலர்? ” புன்னகையோடு கேட்க
“இன்னும் ஒரு வாரம் லீவ் இருக்கு…” வேறு புறம் பார்த்து கொண்டு அவள் கூற
“சரி நான் வேணும்னா கொண்டு வந்து வீட்ல விடட்டா…? ”
“வேணாம் சார்… எனக்கு திவ்யமா ரெண்டு கையும் காலும் இருக்கு… நானே ஸ்கூட்டி ஓட்டிட்டு போவேன்…”
தோளை குலுக்கி கொண்டு.
“பிடிவாதத்த விட்டுடுவியா… ஓகே பார்த்து போடா…”
என்று விடை குடுத்து விட்டு செல்பேசியை எடுத்தவன் அவளுக்கு துணையாக பின்னால் ஒரு வண்டியை அனுப்ப கூறி விட்டு நிமிர்ந்தான்!
வர்ஷினி பக்கம் திரும்பியவன்… இன்னும் இவள் கிளம்பவில்லையா என்பதை போல பார்க்க.
“ஓகே ஹர்ஷா… நானும் கிளம்பறேன்…” என்று கூறி விட்டு வெளியேறினாள்!
*******
 இருவரும் போன பின் நரேஷை அழைத்தவன்.
“நரேஷ்… ஆச்சா? ”
“பண்ணிட்டேன் ஹர்ஷா… இன்னும் கொஞ்ச நேரத்துல சின்க் ஆக ஆரம்பிச்சு சிக்னல் கிடைக்க ஆரம்பிச்சுடும்… நம்ம டீம் ரெடி ஹர்ஷா…”
“குட்… ஸ்டேட்மென்ட்ஸ் வந்துடுச்சா? ”
“வந்துடுச்சு… அதோட தீபாவும் வந்துட்டாங்க, …”
“நீ ஸ்டேட்மென்ட் எடுத்துட்டு தீபாவையும் கூட்டிட்டு வா…”
“ஓகே ஹர்ஷா…”
பைல் எடுத்து கொண்டு தீபாவோடு உள்ளே வந்தவன்… ஹர்ஷாவிடம் பைலை கொடுத்து விட்டு அவனது பதிலுக்காக காத்து கொண்டு இருந்தான்.
தீபாவுக்கு இருக்கையை காட்டி.
“ப்ளீஸ் உக்காருங்க… மேடம்…”
பைலை பார்த்து கொண்டே தீபாவிடம் பேச்சு குடுத்தான்.
“மேடம் இப்போ எதுக்கு நாங்க பேச கூப்டோம்னு தெரியுங்களா? ”
“சொல்லுங்க சார்…”
“இந்த ஆகஸ்ட் 15 தேதில இருந்து முக்கியமா… எதாச்சும் நடந்துச்சா? ஆபீஸ்ல… மலர் கிட்ட யாரெல்லாம் சண்டை போட்டுட்டு போனதுன்னு நினைவு இருக்கா? எதாச்சும் சம்பவம் இருந்தா சொல்லுங்க மேடம்…”
“பெரிய அளவுலன்னு பார்த்தா எம்எல்ஏ ஒருத்தர் ரொம்ப சண்டை போட்டார் சார்… இலவச மனை பட்டா விஷயமா… அப்புறம் எல்லாம் சின்ன சின்ன மிரட்டல் எல்லாம் தினம் இருக்கறதுதான்… அதுக்கெல்லாம் மலர் மேம் பயபடமாட்டாங்க சார்…”
“அந்த எம்எல்ஏ யாருங்க தீபா…? ”
“எம்எல்ஏ சுதர்சன பெருமாள் சார்…”
“அப்புறம் அடிக்கடி வந்தவங்க யாராச்சும் இருக்காங்களா தீபா…” என்று கூறும் போதே பைலை பார்த்த ஹர்ஷாவுக்கு புருவங்கள் முடிச்சிட்டன… நெற்றியை சுருக்கி பார்த்துகொண்டே கேட்டான்.
“அடிகடின்னு பார்த்தா எப்போவும் போல யுஷ்வல் தான் சார்… ஆனா அடிகடி ஒரு மேடம் தான் போன் பண்ணுவாங்க… அப்போ அப்போ வெயிட் பண்ணி வெளியவும் போவாங்க… ரெண்டு பேரும் சார்…”
என்று கூறும் போதே ஹர்ஷா அர்த்தமாய் நரேஷை பார்க்க.
நரேஷும் கண்களை அசைத்து ஒப்புதல் தெரிவித்தான்… ஹர்ஷா நிதானமாக பைலை பார்த்து கொண்டே ஒவ்வொரு வார்த்தையாக உச்சரித்தான்.
“ஏங்க தீபா… அது சினிமா நடிகை வர்ஷினியா? ”
உடனே தீபா… தலையை ஆட்டி.
“ஆமாம் சார்… அவங்களேதான்…”
அத்தியாயம் 14
 இருள் கவிழ்ந்து கொண்டு இருந்த நேரம்! சிலுசிலுவென்று காற்று வீசிய அந்த தோட்ட ஊஞ்சலில் உட்கார்ந்து லேசாக ஆடியபடி சப்தமிட்டு கொண்டு இருந்த பறவைகளையும் பூக்களையும் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள் மலர்! ஒவ்வொரு மரத்திற்கும் நீர் விட ஹோஸ் பைப்பை மாற்றி போட்டு விட்டு உட்கார்ந்தாள்… எப்போதும் இந்த ஓய்வு கிடைப்பதில்லையே… கிடைத்த வாய்ப்பை விடாதே என்று மூளை அறிவுறுத்தியது… வெளியே அமைதியாக தெரிந்தாலும் உள்ளே எரிமலையாக கொதித்து கொண்டு இருந்தது மனது.
என்ன ஒரு ஏமாற்றுத்தனம்… உண்மையாக காதலில் உருகுபவன் போல என்ன நடிப்பு… இவன் நடிப்புக்கு ஆஸ்கார் அவார்டே குடுக்கலாம்.
“அவன் வேண்டாம் வேண்டாம்ன்னு சொல்லிட்டே அவனையே நினைச்சுட்டு இருக்கியே மலர்…” மனசாட்சி கேள்வி கேட்டது.
“இல்லையே நான் அவன நினைக்கவே இல்லையே… நான் எதுக்கு அவன நினைக்கணும்… அவன் ஒரு பொறுக்கி… அந்த பொறுக்கிய நான் நினைக்கனுமா? ”
“அப்புறம் அவன் எத்தன பேர் கூட சுத்துனா என்ன? உனக்கு ஏன் கோபம் வரணும்… நீ பாட்டுக்கு உன் வேலைய பார்க்க வேண்டியதுதானே… அவன வேவு பாக்க தானே அன்னைக்கு அவன் ஆபீஸ்க்கு போன? ”
“நான் எதுக்கு வேவு பார்க்கணும்… வர்ஷினி இன்னமும் அவன் அவளோட கண்ட்ரோல்ல இருக்கறதாதான் சொன்னா இல்ல… அத ப்ரூவ் பண்ணி வேற காட்டுறேன்னு சொன்னா அதான் போனேன்… அங்க போய் நான் பார்த்தது… ச்சே…”
“இவளுக்கும் ஹர்ஷா ஒருத்தன் தான் பழக்கம்ன்னு கிடையாது மலர்… அத புரிஞ்சுக்கோ… அன்னைக்கு ஸ்பென்சர்ல உன் கிட்ட பேசிட்டு இருக்கப்ப வந்த அந்த ஆள் கிட்ட எப்படி குழைஞ்சு பேசினாள்ன்னு பார்த்த இல்ல… அவ மீனக்ஷியம்மாக்கு மருமகளா? ”
“அது அவங்க மகன் கவலை பட வேண்டியது எனக்கு எதுக்கு அந்த கவலை…”
“ஏன் மலர் உனக்கு நிஜமாவே தப்பிச்ச உணர்வு தான் இருக்கா? யார் கிட்ட வேணும்னாலும் உன் பொய்ய சொல்லு… ஆனா என்கிட்டயேவா? ”என்று அவளது மனசாட்சி அவளை பார்த்து கேலி செய்தது.
“நோ எனக்கு வேற எந்த உணர்வும் இல்ல… எதுவும் வராது… வரவும் வேண்டாம்… நான் அழவும் வேண்டாம்… எனக்கு வருபவன் எனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்… அந்த நேர்மை அவனிடம் இல்லை என்னும் போது அவனை நான் எதற்கு நினைக்க வேண்டும்… வேண்டாம்… எனக்கு எதுவுமே வேண்டாம்… ஹர்ஷாவை இனிமேல் பார்க்கவும் மாட்டேன்… வெட்கம் கெட்ட மனதுக்கு சொன்னாலும் புரிவதில்லை…”
மாறி மாறி அவள் மனதில் நடந்த விவாதங்களில் தெளிவாக சிந்திக்க முடியாமல் குழம்பினாள் மலர்.
காலிங் பெல் அடிக்கும் சப்தம் கேட்டது… இந்த நேரத்தில் யார்? குழப்பத்தில் இருக்கும் போதே அவள் அருகில் விசிறியடிக்கபட்ட காகிதங்கள் வந்து விழுந்தன.
நிமிர்ந்தாள்! … முகம் முழுக்க கோபத்தோடு ஹர்ஷா.
“அறிவ என்ன அடகு வெச்சுட்டு வேலை பார்க்குறியா? ”
“ஏன்… உங்கள மாதிரியே என்னையும் நினைச்சீங்களா? ”
அலட்சியமாக வந்தது பதில் மலரிடமிருந்து.
“வேணாம் மலர்… நான் ரொம்ப கோபமா இருக்கேன்… அத புரிஞ்சுக்கோ…”
“ஏன்… நான் எதுக்கு புரிஞ்சுக்கணும்…”
“ஏய் கேக்கறதுக்கு பதில சொல்லுடி…”
“இந்த வாடி போடிங்கற வேலையெல்லாம் வெச்சுகிட்டா மரியாதை கெட்டு போய்டும்…” ஒற்றை விரலை காட்டி அவள் மிரட்ட
“ஆமா… அது ரொம்ப வாழுது… இப்போ தான் கெட்டு போறதுக்கு…”
“தெரியுதுல்ல… அப்போ வந்தத சொல்லிட்டு போற வழிய பாருங்க…”
“என்னை ரொம்ப சீண்டி விடறடி… கண்டிப்பா இது உனக்கு நல்லது இல்ல… நீயெல்லாம் IAS ன்னு சொல்லிக்காத… நீ பண்ணிட்டு இருக்க காரியத்துக்கு…” தலையில் அடித்துகொண்டான்.
“ஏன்? அப்படி என்ன புதுசா கண்டுட்டீங்க? ”
மூச்சை நிதானமாக உள்ளே இழுத்து கொண்டு.
“வர்ஷினி கூட உனக்கு என்ன உறவு வேண்டி இருக்கு…”
அதை கேட்டு சிரித்த மலர்.
“கண்டிப்பா உங்களுடையது மாதிரி ஒரு ரிலேஷன்ஷிப் கிடையாது…”
அதை கேட்ட ஹர்ஷாவுக்கு உள்ளே சுருக்கென்று தைத்தாலும் அதை காட்டி கொள்ளும் சமயமல்லவே இது… கொஞ்சம் தகைந்து போய் தான் ஆக வேண்டும்.
“மலர்… சொல்றத புரிஞ்சுகோடா… அவ சரியான ஆள் கிடையாது…”
“நீங்க ரொம்ப சரியான ஆளோ? ”
“நீ ஆகஸ்ட் 15ல இருந்து இந்த செப்டம்பர் பத்து வரைக்கும் 25 முறை பேசி இருக்க… அவ கிட்ட…”
“ஸ்டாப் ஸ்டாப்… நான் பேசல… உங்க ஆசைநாயகிதான் எனக்கு போன் பண்ணி பேசுனா… அத நோட் பண்ணிகொங்க யுவர் ஆனர்…”
“மலர்… தேவை இல்லாம ஏன் இப்படி எல்லாம் பேசுற… ஆசைநாயகின்னு எல்லாம்…”
“உண்மையை தானே சொல்றேன் மை லார்ட்…”
“சரி உனக்கு புரிய வைக்க எனக்கு இப்போ நேரமில்ல… அவ உன் கிட்ட என்ன சொன்னான்னு எனக்கு இப்போ தேவை இல்ல… ஆனா இப்போ இத கேளு…”
என்று சொல்லி தனது பென்டிரைவில் இருந்ததை ஸ்பீக்கர் இணைத்து ஓட விட்டான்.
 அது மலருக்கும் வர்ஷினிக்கும் இடையிலான சம்பாஷனை.
எந்த அளவு ஹர்ஷாவை மட்டம் தட்டி திரித்து கூற முடியுமோ அதை செய்து இருந்தாள்.
மலர் எதையும் ஆமோதிக்கவில்லை என்றாலும் ஆட்சேபிக்கவும் இல்லை.
அதை கேட்க கேட்க ஹர்ஷாவின் முகம் சொல்ல முடியாத துயரத்தை காட்டியது.
மலரின் முகமோ கோபத்தில் கோவை பழமாக பழுத்து கொண்டு இருந்தது.
“என்னை வேவு பாக்குறீங்களா? ”கோபமாக அவள் கேட்க பதிலுக்கு மலரை கூர்மையாக பார்த்தவன்,
“பார்ப்பேன்… அவசியம்னா… என்ன வேணும்னாலும் பண்ணுவேன்… அதான் என்னை பத்தி இவ்ளோ நல்ல அபிப்ராயம் வெச்சு இருக்க இல்ல… அப்புறம் ஏன்டி என்னை கேள்வி கேக்குற? ”
அதை கேட்டு மலர் ச்சே என்று கூறி முகத்தை திருப்பி…” இது கிரிமினல் offence ஹர்ஷா… அது தெரியுமா… நான் இப்போ உங்களை sue பண்ண முடியும்…”
அதை கேட்டு கடகடவென்று சிரித்தவன்.
“இது யார் கிட்ட இருந்து வந்ததுன்னு தெரியுமா உனக்கு… உளவு துறை டிஐஜி கிட்ட இருந்து… நீ என்னை ரொம்ப அண்டர்எஸ்டிமேட் பண்ற மலர்…”
மலர் ஒன்றும் பேசாமல் வாயடைத்து போனாள்! இதற்கு என்ன பதில் கூறுவது.
“பிடிம்மா தாயி… இதையும் பாரு…”
அவன் கைகளில் திணித்தது… ஒரு கத்தை புகைப்படங்கள்… அத்தனையும் வர்ஷினியும் ஏதேதோ ஆண்களுமாக.
பார்ட்டிக்களில் வெளியிடங்களில் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள்… மிக மிக நெருக்கமாக… ஒவ்வொன்றிலும் வேறு வேறு ஆண்கள்.
மலருக்கு அதை பார்க்கவே சங்கோஜமாக இருந்தது… அவனை நேர்கொண்டு பார்க்காமல் தலையை தாழ்த்தி கொண்டே அவனிடம் தந்தாள்!
“ஏன் தந்துட்ட… என் ஆசை நாயகியை பார்க்க முடியலியா? ”
மலர் ஒன்றும் பேசாமல் உட்கார்ந்து இருக்கவே
“சரி மலர்… அவ என் ஆசை நாயகின்னே வெச்சுக்கோ… அதுக்கு உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது…? ”
“எனக்கு எங்க கோபம் வருது… சரி எனக்கு வந்தாதா தான் உங்களுக்கு என்ன? ”
“ம்ம்ம்ம்… என்னவா… இருக்கு உனக்கு… இரும்மா இரு…” என்று நினைத்து கொண்டான்.
“ஹர்ஷா… அவ என் கிட்ட ஏன் இப்படி சொன்னான்னா… அவ உங்களை பைத்தியமா லவ் பண்றதுனால இருக்கலாம்…” என்று கூறி கொண்டு இருக்க
“ஹேய்… வெயிட் வெயிட்… பைத்தியமா லவ் பண்றதுனால… ம்ம்ம்ம்… நோட் பண்ணிட்டேன்… சரி சரி சொல்லு…”
அவனை முறைத்து விட்டு.
“ம்ம்ம்… லாரி இன்சிடன்ட், ஆசிட் இன்சிடன்டுக்கு எல்லாம் அவளுக்கு தைர்யம் இருக்கும்ன்னு இன்னமும் என்னால நம்ப முடில ஹர்ஷா… பிளாட்டே வேறன்னு தான் தோணுது…”
அவளை பார்த்து புன்னகைத்து.
“ம்ம்ம்… உனக்கும் கொஞ்சம் மூளை இருக்குன்னு தெரியுது… காரணம் அவ இல்லை… வேற ஒரு ஆள்… இவ வெறும் அம்புதான்…”
மலருக்கு தூக்கி வாரி போட்டது.
“யாரு… யார சொல்றீங்க ஹர்ஷா…” என்று கேட்டவளை நிதானமாக பார்த்து
“இத கேளு…” என்று… இன்னொரு பைலை திறந்து ஓட விட்டான்.
அது வர்ஷினிக்கும் இன்னொரு குரலுக்கும் நடக்கும் உரையாடல்!
“எனக்கு இப்போ தான் சந்தோஷமா இருக்கு… அவ கைலையாச்சும் ஆசிட் ஊத்திட்டு வந்தானே உங்க ஆள்… ஆனா முகத்துல ஊற்றி இருந்தா இன்னும் சந்தோஷப்பட்டு இருப்பேன்…”
இது வர்ஷினி… அதை கேட்டு ரசித்து பேரும் சிரிப்பு சிரித்தது அந்த குரல்.
“கொஞ்சம் பொறு செல்லம்… ரெண்டு பேரையும் முடிச்சு கட்டிரலாம்…”
 இது அந்த ஆண் குரல்!
“நீங்க சொல்றது மட்டும் தான்… ஆனா நடக்கறது என்னவோ ஏறுக்கு மாறா தான் இருக்கு…”
“என்னடா கன்னுகுட்டி… என்ன அப்படி ஏறுக்கு மாறா நடந்துது… அதான் ஆசிட் ஊற்றி பயத்த ஏற்படுத்தி விட்டாச்சு இல்ல…”
“இதுக்கெல்லாம் பயப்படுற ஆளா அவன்… லாரி வெச்சு அடிக்க நீங்க பிளான் பண்ணது என்னாச்சு? சரியா நடந்துதா… என் சைடு கரெக்டா போகுது… நான் மலர குழப்பி விடறத கரெக்டா செய்துட்டு இருக்கேன்… ஆனா நீங்க தான் சரியா செய்யவே இல்ல… பிளான் போட்டா மட்டும் பத்தாது… கரெக்டா செய்யவும் தெரியணும்…”
“சரி இப்போ அடுத்த பிளான் எப்படி நடக்க போகுது பாரு… நீயே என்னை வந்து கட்டிக்குவ… ஹர்ஷா காட்டிய பகைக்கு நான் பகை தீர்க்க போறேன்…”
“சரி சரி… இதெல்லாம் போன்ல ரொம்ப பேச வேணாம்… நேர்ல பேசிக்கலாம்…”
“அதுவும் சரிதான்… ஹஹஹஹா…”
பெருங்குரலில் சிரித்தது அந்த குரல்
அந்த ரெகார்டிங் ஓடி முடிந்த பின்னாலும் கூட மலரால் பேச முடியவில்லை… அவளது முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது… இதென்ன ஒன்றுமே புரியவில்லையே… அப்படியென்றால் டார்கெட் ஹர்ஷாவா?
“இது எங்க இருந்து பிடுங்குனீங்க? ” குழப்பம் மாறாத குரலில் அவள் கேட்க.
“ஹஹா… அதே intelligence DIG கிட்ட தான்… அந்த ஆள் அரசியல் ரீதியா பவர்புல் ஆள்! அதனால எப்போவுமே அவன் போன் டேப்பிங்ல இருக்கும் உளவு துறைல… இது வெளிய தெரியாது! சந்தேகம் வரவும் அங்க இருந்து சுட்டேன் இந்த விஷயம் எல்லாம்”
“அது யார் ஹர்ஷா… அந்த ஜென்ட்ஸ் வாய்ஸ்…? ”
“ம்ம்ம்… உனக்கும் தெரிஞ்ச ஆள் தான்… ஆனா இப்போ வேணாமே… பழைய பகை… OMRல அந்த இடம் வாங்கினப்ப… இந்த ஆள் தான் மத்தியஸ்தம் பண்ணி வாங்குனாப்ல… ஆனா பணத்த முழுசா ஸ்வாஹா பண்ணிட்டு புறம்போக்க எல்லாம் என் தலைல கட்டிட்டான் போலி பத்திரம் தயார் பண்ணி… அதுனால அப்போ செம சண்டை அந்த ஆள் கூட… கொஞ்சம் அதிகமா கூட போச்சு…” விளக்கமாக எதையும் கூறாமல் அவுட்லைனாக கூறி கொண்டு போக… மலர் இடையில் குறுக்கிட்டாள்.
“அதிகமா போச்சுன்னா…”
 “அவனுக்கு கெஸ்ட் ஹவுஸ்ல வெச்சு கொஞ்சம் ட்ரீட்மென்ட் குடுத்தேன்…”
“ட்ரீட்மென்ட்ன்னா…”
“ம்ம்ம்… போலீஸ் லாக்அப்ல எப்படி ட்ரீட் பண்ணுவாங்களோ அப்படிதான்…”
மலர் முகம் கசங்கியது.
“மலர் என்னடா… இங்க பாரு டோன்ட் கெட் அப்செட்மா… நான் இருக்கேன்ல… நான் பார்த்துக்கறேன்… அது அவனுக்கு தேவைதான்… துரோகத்துக்கு என்ன ப்ரெசென்ட் பண்றது? அப்போ அந்த லேன்ட் விஷயமாத்தான் நிறைய பிரச்சனை வந்ததுன்னு உனக்கு தெரியாதா மலர்… அவன் எவ்ளோ பணத்த அடிச்சிருந்தாலும் நான் கவலை பட்டிருக்க மாட்டேன்… என்னோட கௌரவமே ஸ்பாயில் ஆகற மாதிரி பொய் டாகுமென்ட்ஸ் எதுக்கு பண்ணனும்? வேதா ஹர்ஷான்னா ஒரு கௌரவம் இருக்கு… அத கெடுக்க அவன் பார்த்தானே… அதான் அவனுக்கு பனிஷ்மென்ட்…”
அவளுக்கு கண்கள் கலங்கியது… அவனை பார்க்கும் போதே உள்ளுக்குள் ஒரு குளிர் பரவுவதை அவளால் உணர முடிந்தது… பயமா? தனக்கா? அடித்தளமே ஆட்டம் கண்டது போல் இருந்தது மலருக்கு.
அவள் கண்கலங்குவதை பார்த்த ஹர்ஷாவுக்கும் கண்கள் கலங்கியது… அந்த சூழ்நிலை கனமாக இருந்தது.
“சரி வீட்டுக்கு வந்தவனுக்கு கொஞ்சம் தண்ணி கூடவா குடுக்க மாட்ட… நீயெல்லாம் தமிழ் பொண்ணா? ” என்று கிண்டலடித்து கொண்டே சமையலறைக்கு சென்று தண்ணீர் எடுத்து அருந்தி விட்டு வந்தான்… இருந்த இறுக்கமான சூழ்நிலையை மாற்ற.
அவளுக்கும் கொண்டு வந்து குடுத்தான்.
மலர் அவனை பார்த்து முறைத்து கொண்டே.
“எல்லாம் சொல்லிட்டீங்க இல்ல… கிளம்புங்க எனக்கு தலை வலிக்குது…”
“அச்சோ தலை வலிக்குதா? இருடா… உனக்கு நான் ஒரு சூப்பர் காபி போட்டு தரேன்…” என்று சொல்லி விட்டு மீண்டும் சமையலறைக்கு போக.
மலர் தலையிலடித்து கொண்டு “ஐயோ இம்சை…”
“இம்சையா… இருடி… காபில உனக்கு உப்பு போட்டு தரேன்…” என்று கண்ணடித்து விட்டு அவன் தன் வேலையில் மும்முரமானான்.
மலருக்கு சட்டென்று உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சிலிர்த்து முகம் சிவந்தது.
எதேச்சையாக திரும்பிய ஹர்ஷா அவள் முகம் சிவந்து நிற்பதை பார்த்தவனுக்கு உள்ளே பறப்பது போல இருந்தாலும்… புருவத்தை மட்டும் உயர்த்தி என்னவென்று கண்களால் கேட்டான்… புன்னகைத்து கொண்டே!
மலர் ஒன்றும் பேசாமல் இருக்கவும், .
“என்னடா… காபில எதாச்சும் கலந்து குடுத்துடுவேன்னு பார்க்குறியா…” என்று வேண்டுமென்றே கேட்க.
மலர் முகத்தை திருப்பி கொண்டு போய் சோபாவில் உட்கார்ந்தாள்… தொலைகாட்சியை ஆன் செய்து விட்டு.
மணி ஏழாகியது.
“ஹேய்… நிலைமைய பாரு… காபி கூட நான்தான் போட்டு குடிக்கணும் போல இருக்கு… இந்த அழகுல உனக்கு வேற… இந்தா பிடி… நியூஸ் போடு…” என்று கேலி செய்து கொண்டே காபி கப்பை அவளிடமும் குடுத்து விட்டு தானும் ஒன்று வைத்து கொண்டு அருகில் உட்கார்ந்தான்.
“ம்ம்ம்… உங்களை நான் என்ன வீட்டுக்கு அழைச்சேனா? நீங்களா வந்தீங்க… நீங்களா காப்பி போட்டுகிட்டீங்க… ரொம்ப புலம்பாதீங்க சார்…” என்று கூறி கொண்டே காபியை குடித்தாள்.
“ம்ம்ம்… நல்லா தான் இருக்கு…” என்று நினைத்து கொண்டு இருந்தவளிடம்.
“காபி எப்படி இருக்கு…” என்று கேட்க.
“ம்ம்ம்… சுமாரா இருக்கு… ஏதோ கொடுத்துக்காக குடிக்கிறேன்…” சலித்தாள்.
“ஓஓஓஓ… ஏனுங்க அம்மணி அப்படீங்களா? நீங்க ஒன்னும் அவ்ளோ கஷ்டப்பட்டு குடிக்க வேணாம்… இங்க குடுங்க…” என்று அவன் பிடுங்க
அந்த காபியை விட மனசில்லாத மலர்.
“ஏய்… ஒழுங்கா குடுங்க… அது என்னோடது…” என்று மிரட்டுவது போல சிணுங்க… அதை ரசித்தவாறே.
“அதான் நல்லாவே இல்லையே… அது எதுக்கு உனக்கு…” என்று போக்கு காட்ட.
“சரி… நல்லா இருக்கு… குடுத்து தொலைங்க…” என்று கடுப்பாகி பிடுங்க முயல… போக்கு காட்டி கொண்டே
“ஹஹா… அது…” என்று குடுத்தான்.
தொலைகாட்சியில் செய்திகள் ஆரம்பமானது.
“பிரபல நடிகையும் சாமியாரும் காதல் லீலைகள்… பிரத்யோக காணொளி உங்களுக்காக…” என்று தொடர்ந்து கொண்டே போக.
மலர் திகைத்து ஹர்ஷாவை பார்த்தாள்!
ஹர்ஷா முகத்தில் உணர்ச்சியே இல்லாமல் அந்த தொலைகாட்சியை பார்த்தவாறு அமர்ந்து இருந்தான்.
“நிலா டிவி உங்களதுதானே…”
“ம்ம்ம்… ஆமாம் அதுக்கு என்ன? ”
“உங்களுக்கு ஆகாதவங்கள போட்டுதள்ளுவதற்கே வச்சு இருக்கீங்களா? ”
“நியூஸ் கிடைச்சா போடுறது மீடியாவோட வேலை… அதைத்தான் செய்தியாசிரியர் செஞ்சு இருக்கார்… அவங்க வேலைல நான் எப்படி தலையிடறது? ”என்று கேள்வி கேட்டு அவளது முகத்தை பார்க்க.
“இது தர்மமில்லைன்னு உங்களுக்கே தெரியும்… இது முழுக்க முழுக்க உங்க வேலை தான்னு எனக்கும் தெரியும்… ஏன் ஹர்ஷா இப்படி எதேச்சிகாரமா நடக்க நினைக்கிறீங்க… இவளுக்கே இப்படீன்னா அந்த ஆள என்ன பண்ண போறீங்க ஹர்ஷா? ”கோபமாக அவள் கேட்க
“நான்… ஹஹஹா… நீ இப்போ டிவிய பாரு… அவன என்ன பண்ண போறேன்னு அப்புறமா பாரு…” அமர்த்தலாக அவன் மொழிந்ததை கேட்ட போது உள்ளுக்குள் குளிர் பிறந்தது!
வர்ஷினியும் அந்த சர்வானந்தாவும் காதல் களியாட்டங்களில் ஈடுபட்டு சீண்டி கொள்வது முதல் அடுத்த நிலைக்கு போவது வரை எடிட் செய்யப்பட்ட வீடியோ ஐந்து நிமிடம் ஓடியது… அதை ஹர்ஷாவுடன் அமர்ந்து பார்க்க முடியாமல் திகைத்து தலை குனிந்து மாற்ற போனவளிடம் இருந்து ரிமோட்டை பிடுங்கினான்!
“பாரும்மா… இவ தானே என்னை ரொம்ப சின்சியரா லவ் பண்றவன்னு சொன்ன… என் மேல இருக்கற அதீத காதலால தான் இதையெல்லாம் செய்யறான்னு சொன்ன… அப்படிப்பட்ட என்னோட ஆசைநாயகிய பாரு…” குத்தலாக அவன் கூறி முகத்தை திருப்பி பார்க்க வைத்தான்.
அப்போது அவன் முகத்தில் தெரிந்தது வஞ்சமா… இல்லை கோபமா… இல்லை ஆற்றாமையா… மலரால் வகைபடுத்த முடியவில்லை.
“என்ன இருந்தாலும் இது அவளோட அந்தரங்கம்… இத எப்பிடி நீங்க வெட்டவெளிச்சமாக்கலாம்… இது தப்பு தான்…” நியாயத்தை எடுத்து கூறினாள்!
“ஆமா தப்புதான்… எடிட் பண்ணி போட்டது தப்புதான்… முழுசா போட்டு அவ மானத்த வாங்காதது என் தப்புதான்… என் மேல கை வெச்சா கூட நிதானமா தண்டனை குடுப்பேன் மலர்… உன் மேல கை வெச்சாங்க இல்லை… அப்புறம் சும்மா விடுவேன்னு நினைச்சியா? ”
என்று கால் மேல் கால் போட்டு கொண்டு கைகளை கட்டி கொண்டு நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக கேட்க… மலருக்கு காய்ச்சலே கண்டுவிடும் போல இருந்தது… அவனது இந்த ரூபம் கண்டு சகலமும் அதிர்ந்தாள்.
“தண்டனை குடுக்க நீங்க யாரு ஹர்ஷா… என்ன கடவுளா? எல்லாம் தலைகனம்! ” கசப்பாக கூற.
“நீ என்ன வேணும்னாலும் சொல்லிக்க மலர்… இது தான் என் ஸ்டைல்! ” ஒரேடியாக முடித்தவனை கூர்ந்து பார்த்தவள்.
“ஓஓஓஓஓ… இதே ஸ்டைல்ல தான் அன்னைக்கு எனக்கும்… அதாவது உங்க லேங்குவேஜ்ல… தண்டனை குடுத்தீங்களோ… கிரேட் ஹர்ஷா… கிரேட்…” நக்கலாக அவள் கூற வாய் திறவாமல் மெளனமாக இருப்பது இப்போது ஹர்ஷா முறையானது… சங்கடமான அந்த சூழ்நிலையை எதிர்கொள்ள தயங்கினான்!
“வாவ்… என்ன ஸ்டைல்… என்ன ஸ்டைல்… ஏன் ஹர்ஷா… இப்படி விளையாடுறது தான் உங்க பொழுதுபோக்காமே… அவ தான் சொன்னா! ” அதை அவள் கூறும் போதே உள்ளுக்குள் வலித்தது.
“ம்ம்ம்… அப்படியா… வேற என்ன சொன்னா? ” இயல்பாக கேட்பது போல கேட்டாலும்… உள்ளுக்குள் அவன் கோபத்தை அடக்கி கொண்டிருப்பதை உணர்ந்தாள்!
“ம்ம்ம்ம்… லவ்ல உங்க வொர்கிங் ஸ்டைல் பத்தி… நீங்க எவ்ளோ கிரேட் லவர்ங்கறது பத்தி… எப்படி தீவிரமா அவள காதலிச்சீங்கன்னு ரொம்ப விரிவா சொன்னா… எல்லாமே சொன்னா… அதான் இப்போ…” என்று கூறும் போதே அவளது குரல் உள்ளே போய் தழுதழுத்தது… மேலே பேச முடியாமல் கண்களில் அருவி வழிய ஆரம்பித்தது.
எத்தனையோ சூழ்நிலைகளை வெற்றிகரமாக சமாளித்த அந்த மனிதனுக்கு மலர் முன் நிற்கவே தயக்கமாக இருந்தது… ஏனென்றால் தொட வேண்டாத இடங்களை தொடுகிறாளே… ஆனாலும் இந்த பிரச்சனைகளை வளர்த்தி கொண்டு போவதில் விருப்பமில்லை!
“வேணாம் ஹரி… எனக்கு எதுவுமே வேண்டாம்… இந்த ஊர் வேண்டாம்… வேலை வேண்டாம்… நான் எங்கயாவது போயிடறேன்… எனக்கு நிம்மதி வேணும்… நிம்மதி மட்டும் தான் வேணும்…” கதற ஆரம்பித்தவளை பார்த்த ஹர்ஷா பதறி அவள் முன்னே முட்டிகாலிட்டு
“ஹேய்… ப்ளீஸ் இப்படி பேசாதடா… நான் இருக்கேன்மா உனக்கு…” அவளது கைகளை பற்றி கொண்டவன் கண்களிலும் கண்ணீர்!
“இல்ல… வேண்டாம்… வேண்டாம்… எனக்கு யாரும் வேணாம்…” என்று கண்களில் அருவி பொழிய கதறியவளை பார்க்கும் போது ஹர்ஷாவுக்கு நெஞ்சே வலித்தது.
“நான் உன்னை லவ் பண்றேன் மலர்… என்னோட அடி மனசுல இருந்து சொல்றேன்… ஐ லவ் யூ கண்ணம்மா… ப்ளீஸ் அழாத… என்னால முடில… உன் மனச தொட்டு சொல்லு… நீ என்னை லவ் பண்ணலியா? ” கண்களில் கண்ணீரோடு… வார்த்தைகளில் வலியோடு அவன் கேட்க.
மலர் அவனை பார்த்த பார்வையில் வெகுவாக காயப்பட்ட உணர்வு தெரிந்தது… அந்த புறம் திரும்பி கொண்டு அழுதவளை என்ன சொல்லி தேற்றுவது என்று புரியாமல் விழித்தான் ஹர்ஷா… ஒருவாறு அழுகையை கட்டுபடுத்தியவள்… ஒரு முடிவுக்கு வந்தவளாக
“ஹரி நான் ஒத்துக்கறேன்… என்னை நீங்க இம்ப்ரெஸ் பண்ணீட்டீங்க… உங்க புத்திசாலிதனத்துனால… உங்க அறிவால… எஸ்… உங்களை பிடிச்சிருக்கு… ரொம்ப பிடிச்சிருக்கு…” என்று கூறிவிட்டு… மறுபடியும் கதறினாள்.
ஒரே நிமிடத்தில் உலகமே வண்ணமயமாக ஆன உணர்வு ஹர்ஷாவுக்கு… டக்கென்று பின்னால் ஒரு பல்பு எரிய… குயில்கள் கூவ… மயில்கள் ஆட… ஒரு டஜன் வெள்ளையுடை தேவதைகள் அவனை சுற்றிலும் ஆடினார்… அவனுக்கு வேறு எல்லாமும் மறந்தது… ஏன் அவனையே மறந்து அவளை பார்த்து சந்தோஷமாக சிரித்தான்… ஆனால் கதறி கொண்டு இருந்தவள் அவனை பார்த்து.
“ஆனா எனக்கு நீங்க வேண்டாம் ஹரி… ப்ளீஸ்… எனக்கு நீங்க வேண்டாம்! என்னை விட்டு போய்டுங்க…” கல்லும் கரைய அழுதாள்!
ஒரே நொடியில் கொதித்த பாலில் பட்ட நீராக மனம் அடங்க.
“மலர்… இங்க பாரும்மா… நீயும் நானும் ஒன்னும் சின்ன பிள்ளைங்க இல்லடா… நீ அழுகைய நிறுத்திட்டு நிதானமா பதில் சொல்லு மலர்… வாட் இஸ் ஈடிங் யூ? ”
“நோ… வேண்டாம்…”
“ப்ளீஸ் சொல்லுமா…” அவளை வற்புறுத்த.
அழுகை இன்னும் நிற்காமல்… தேம்பி கொண்டு இருந்தாள் மலர்.
“இப்போ சொல்ல போறியா இல்லையா மலர்…” குரலை உயர்த்தி அவளை அதட்ட… உடல் நடுங்கியது… ஒருவாறாக தன்னை தேற்றி கொண்டு.
“உங்களை பார்க்கும் போதெல்லாம் நீங்க என்கிட்டே சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருது ஹரி…”
“என்ன… சொன்னது…” அவளை கூர்மையாக பார்த்து கேட்டான்.
வெகுவாக திக்கி திணறி.
“ஒரு நாள் நீங்க என்கிட்டே சொன்னீங்க… என்னை ஜெயித்து உங்க ப… படு… படுக்கைல நா… நான் இருக்கும் போது சொல்லி காட்டுவேன்னு சொன்னீங்க… அப்படி சொல்லி காட்ட நான் ஆள் இல்ல ஹர்ஷா… என்னால முடியாது… செத்துடுவேன்… எனக்கு நீங்க வேணாம்… ப்ளீஸ் ஹர்ஷா…” அவள் கதற… கல்லாக சமைந்தான் ஹர்ஷா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!