UKIK – 17

UKIK – 17

17

ஆனந்துடன் வெளியே வந்த சஞ்சீவ், “இவன் எல்லாம் மனுஷனா..” என வெளிப்படையாக உறும,

“பாஸ அப்படிச் சொல்லாதீங்க..” ஆனந்த் உடனே அவனுக்கு தடையிட்டான்..

கார் ஓட்டிக் கொண்டிருக்கும் ஆனந்தின் முகத்திற்கு நேரே சொடக்கிட்டவன், “உனக்கு எவ்வளவு பணம் கொடுத்தான்..ம்…” என்க, சிரித்து வண்டியை ஓட்டத் துவங்கினான் ஆனந்த்..

“உங்க கிட்ட ஒண்ணு கேட்கட்டுமா ஆனந்த்..?”

“ம்..அதுக்கு முன்ன நான் உங்கள ஒண்ணு கேட்கட்டுமா சார்..”

“சரி ஆனந்த் கேளுங்க…பட் ஒன் கன்டிஸன் என்னை சார்னு கூப்பிடாதீங்க சென்ஷன் ஆகுது..கால் மீ சஞ்சீவ்..” என்றான் பல்லைக் கடித்து,

“ஓகே சஞ்சீவ்..உங்களுக்கு எப்படி ப்ளாக் கோஸ்ட் பத்தி தெரியும்..?”

“எனக்கு அப்படி எவனையும் தெரியாது..” என்றான் எரிச்சலுடன்,

“அப்போ சார் கிட்ட சொன்னது..?”

“அவன் பேரு ப்ளாக் கோஸ்ட்னு எனக்கு தெரியாது ஆனந்த்..நான் அந்த சர்வர ஹேக் பண்ண ட்ரை பண்ணிட்டு இருந்தப்போ என்னை ஒருத்தன் ட்ராக் பண்ணிட்டான்…என்னோட சர்வர் அவன் கன்ட்ரோல் போயிட்டு நான் போலீஸ்னு நினைச்சு பயந்து என்னோட ஹார்ட் டிஸ்க் அப்புறம் சில ஃபைல்ஸ் எடுத்துட்டு வீட்டுக்கு வந்துட்டேன்…டூ டேஸ் அப்புறம் தான் தெரிஞ்சது என்னைத் தேடி அந்த ப்ளாட்டுக்கு யார் யாரோ ரெளடிங்க மாதிரி வந்துட்டு போனதா..?”

“அப்புறம்..?”

“அப்புறம் என்ன அங்க இருந்து இங்க ஓடி வந்துட்டேன்..”

“சரி..இப்போ பாஸ் சொன்னதும் எப்படி இவன் தான் அவன்னு கண்டுபிடிச்ச..”

“அதான் உன் பாஸ் சொன்னாரே அன்டர் மார்க்கெட்னு..” எனவும் சரியென சிரித்தான் ஆனந்த்..

“சரி ஆனந்த் நான் உன் கிட்ட ஒன்னு கேட்கட்டுமா..?”

“ம்..”

“எதுக்கு உன் பாஸ் பணம் பணம்னு அலையுறாரே யாருக்கு இப்படி சேர்க்குறாராம்..?” எனக் கேட்டவன் கோபமாய் தலையைக் கோத,

“சஞ்சீவ், இஃப் சப்போஸ் நீ ப்ளாக் கிட்ட மாட்டாம அந்த சர்வரை ஹேக் பண்ணிருந்தா? என்ன ஆகிருக்கும்..?” என்க,

“இப்போ எதுக்கு அதைக் கேட்க..?”

“சொல்லு தெரிஞ்சுக்கலாம்னு தான்..”

“என்ன ஆகிருக்கும்..? பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டிருக்கும் அம்பாணி வீட்டுக்கு மருமகனா கூட போயிருப்பேன்..” என்றவனின் பதிலில் சிரித்த ஆனந்த்,

“அப்போ நீ உன் அப்பா, அம்மா, தங்கச்சி இவங்களுக்காக பணம் தேடல உனக்காக மட்டும் தான் தேடிருக்க அப்படி தானே சஞ்சீவ்..?”

ஆனந்தின் கேள்வியின் அமைதியானவன், “அது…”

“உன் குடும்பத்தோட நீ இருந்தும் இவ்ளோ ரிஸ்க் எடுத்து ப்ளாக் சர்வரை தொட நினைச்சிருக்கன்னா.. உனக்கு எல்லாத்தையும் விட அந்த நேரத்துக்கு பணம் தான பெருசா இருந்தது…”

“நோ…நான் தான் பிரச்சனை’னு தெரிஞ்சு ஒதுங்கிட்டனே..”

“உனக்கு பிரச்சனைனு தெரிஞ்சு நீ ஒதுங்கிருக்க சஞ்சீவ்…”

“ஆமா, எப்படியோ ஒதுங்கிட்டம்ல…ஆனா உன் பாஸ் என் குடும்பத்தை கொன்னு அந்தப் பணத்தை அடையனும்னு நினைக்கிறது கரெக்ட்டா..?” என்க,

“என் பாஸ் எப்போ உன் குடும்பத்தை கொல்லுவேன்னு சொன்னாரு…நீ அவர் பேச்சைக் கேட்கலன்னா தானே..? இதுல எங்க இருந்து பணம் வந்தது..?” என ஆனந்த் கேட்க, இப்போது கோபத்தில் இருந்தவனது மனம் குழப்பத்தில் ஆழ்ந்தது..

வரவேண்டிய இடத்தில் வண்டியை நிறுத்திய ஆனந்த், “ரொம்ப குழப்பிக்காத சஞ்சீவ்…கம் ஆன்…உனக்கு உன் பேமிலி சப்போர்ட் இருக்கும் போதே தப்பு பண்ணிருக்க அவருக்கு பேமிலி விட பணம் தான் எல்லாத்தையும் கொடுத்திருக்கு சோ அவர் தப்பு பண்ணுறதா உனக்கு தோணினா அந்தத் தப்பு அவரோடது இல்ல..” என்றவனுடன் ஒரு பெருமூச்சை விடுத்து இணைந்தான் சஞ்சீவ்..

***

கனியின் வீட்டு வாசலில் கார் வந்து நிற்க அதிலிருந்து சின்னதாய் ஒரு பேக்குடன் வந்திறங்கினான் அனுஷ்..

வீட்டின் முற்றத்தில் தொங்கவிடப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த அரசி அனுஷை பார்த்துவிட்டு வீட்டுக்குள் ஓட, வந்திறங்கிய கேபின் டிரைவருக்கு பணத்தைக் கொடுத்தவன் வீட்டுக்குள் வந்தான்..

பரத், கால் இடைவெளியில் குழந்தையைப் படுக்க வைத்து விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்க, தேவி சேரில் அமர்ந்து கனியுடன் பேசிக் கொண்டிருந்தாள்..

வெளியில் இருந்து ஓடி வந்த அரசி பரத்தின் அருகே சென்று மெத்தையில் முகம் புதைத்துக் கொண்டு,
“அப்பா வந்தாச்சு..” என்றாள் முகத்தை நிமிர்த்தாமல்..

அரசி சொன்னதும் மூவரும் வெளியே வந்து அவனை வரவேற்க, “ஹாய் டார்லிங், ஹாய் சிஸ்டர், ஹாய் டா மாப்பிள்ளை..” என அனைவரையும் பார்த்தவன், கனிக்கு பின்னால் நிற்கும் மகளை,

“பேபி..” என்றான் இரு கைகளையும் நீட்டி..

கனி, “போ பேபி…” எனவும், ஒருமுறை தலையை நீட்டி எட்டிப் பார்த்தவள் மறுபடியும் மறைந்து கொள்ள,

சட்டென அனுஷிற்கு அவள் தான் நினைவுக்கு வந்தாள்…அவளை மறக்க முடியுமா அவனால்? நினைவுகளை விரட்டியவன், “பேபி வளர்ந்துட்டா..” எனவும்..

“ம்ம்..” என ஆமோதித்த கனிஷ்கா..

“என்ன மாம்ஸ் வெளில நின்னே பேசிட்டு போறீங்களா..உள்ள வாங்க..” என்ற அழைக்க, உள்ளே வந்தவன்..

“என்ன டார்லிங்…பேன்ட் ஷர்ட் தானா எப்பவும்..?” எனக் கேட்டுக் கொண்டே பரத்தின் கைகளில் இருக்கும் குழந்தையை கொஞ்சினான்..

“நம்ம தொழில் அப்படி..என்ன பண்ணுறது மாம்ஸ்..” என்றவள் பேசிக்கொண்டிருக்கும் போதே, தனது அறையில் இருந்து அனைத்து பொம்மைகளையும் எடுத்து வந்து தந்தையின் காலுக்கு அடியில் கடைப் பரப்பினாள் அரசி..

“ப்பா…இதப் பாருங்க..”

“ப்பா..இது மாமா வாங்கினது…”

“ப்பா..இது பொம்மை சிரிக்கும் பாருங்க..”

“ப்பா..இது ரைம்ஸ் சொல்லுது…” என்றவள் அந்த பொம்மையுடனே சேர்ந்து பாட்டு பாடிக் காட்ட, அனுஷைத் தவிர மற்றவருக்குப் புரிந்தது,

அரசி தனது அப்பாவை எவ்வளவு தேடியிருக்கிறாள் என..

தன்னைப் பேச விடாமல் தொணதொணக்கும் அரசியின் கன்னம் கிள்ளி முத்தம் வைத்த அனுஷ், போ போய் ரூம்ல எல்லாம் வச்சிட்டு வா எனச் சொல்லி,

“டார்லிங்..பேபி கிட்ட எல்லாம் சொல்லியாச்சா..” எனக் கேட்க,

“இல்லையென” மறுப்பாய் தலையசைத்தாள் கனிஷ்கா..

ஏன்? எனக் கேட்க வாய் திறந்தவன், அரசி ஓடி வருவதைக் கண்டு வாயை மூடிக் கொண்டான்..
“மச்சான் ப்ரெஷ் ஆகிட்டு வாங்க சாப்பிடலாம்..” வீட்டாளாய் பரத் முன்னே வர,

“அப்பா, நீங்க என்கூடவே இருங்க..” என அவனின் கைகளைப் பிடித்து கொண்டாள் அரசி..

குழந்தையின் பாசம் நெகிழ வைப்பதற்கு பதில், எரிச்சல் கொடுப்பதாய் இருக்க, அவன் வாயைத் திறக்கும் முன்பே, “பேபி, நீ மம்மி கூட வா நாம பார்க் போகலாம்…அப்பா தூங்கட்டும்..” என்க..

பார்க் என்றதும் தந்தையை மறந்தவள் கனியிடம் ஒன்றிவிட்டாள்…அரசியை அழைத்து கொண்டு கனி பார்க்கிற்கு சென்றுவிட, மேலே பரத் காட்டிய அறையில் தஞ்சம் புகுந்தான் அனுஷ்..

அறைக்குள் வந்ததில் இருந்தே அவனுக்கு மூச்சு முட்டியது, ஏதேதோ நினைவுகள் அனைத்திலும் அவளது நினைவுகள் ஆட்டிப் படைக்க, உண்டு முடித்து அறைக்குள்ளே இருந்துவிட்டான்..

மாலை நேரத்தில் வெளியே வந்தவன் கனியைப் பற்றி கேட்க, “அவா டியூட்டி போயிட்டா மச்சான்..” என்றான் பரத்..

“ம்…பேபி எங்க..?” என்றவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே தேவியின் கைப்பிடித்து ஆடிக் கொண்டே வந்தாள் அரசி..

“பேபி, நீ மாமா கிட்ட வா..” அழைத்தவன் அரசியைத் தனது கைவளைவிற்குள் வைத்து கொள்ள,

“தேவி, ஆப்ரேஷன் பண்ணுன உடம்பு..ப்ளீஸ் போய் ரெஸ்ட் எடு..இங்க நாங்க பார்த்துக்கிறோம்..” என்க

“அய்யோ எனக்கு ஒண்ணுமில்லங்க..” என்றவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவர்களது புதல்வன் அழத் தொடங்கினான்..

திரும்பி ஓடத் துணிந்த தேவியின் கைப் பிடித்து இழுத்து தடுக்க, அவனது கைப்பட்டதும் அன்னிச்சையாய் ஒதுங்கி அரண்டு நின்றாள் தேவி…

தான் தொட்டதற்கு பயந்து வெளிப்படையாக நடுங்குபவளிடம், “ஈஸி ஈஸி..நான் போய் டிம்மிய தூக்குறேன் நீ ஓடாத..” என்றவன் அனுஷின் பார்வை தங்கள் மீது வித்தியாசமாகப் படிவதை கண்டுகொள்ளாமல் அறைக்குச்
சென்று மகனைத் தூக்கி வந்தான்..

இவர்கள் சம்பாஷனை நடந்து கொண்டிருக்கும் போதே, அரசி அனுஷின் மடியில் ஏறி அமர்ந்து கொண்டாள்…

“பேபி, சாப்பிட்டியா..?” எனவும்,

“ம்..சாப்பிட்டேன் ப்பா..” என்றவள் கையில் வைத்திருந்த பொம்மைக்கு தலைவாற, அமைதியாய் அவளைப் பார்த்து கொண்டு அமர்ந்துவிட்டவனின் மனதில் அவளது நினைவுகளே!

“மணி, ஸ்தமதி கேஸ் முடிஞ்சுதா..?” கோர்ட்டில் பார்த்த கான்ஸ்டெபிளிடம் கனி விசாரிக்க,

“மேடம், குற்றவாளிய நாங்க நெருங்கிட்டோம்..”

“ஓஹ்..எப்படி மணி கண்டுபிடிச்சீங்க..” நக்கல் வழியும் குரலில் அவள் கேட்க,

“அது வந்து மேடம்..”

“எது வந்து மேடம்..இந்த தடவ எந்த அப்பாவி சிக்குனானோ..” என வெளிப்படையாக மணிக்கு பக்கத்தில் நின்ற ஏசிக்கு கேட்குமாறு முனங்கியவள் வெளியேறிவிட்டாள்..

அவளது நக்கலில் மணியை முறைத்த ஏசி, “யோவ் அந்தப் பொம்பளைக் கேட்டா எல்லாத்தையும் சொல்லனுமா யா..?” சிடுசிடுப்புடன் அவர் கேட்கவும் கப்சிபென வாயை மூடிக் கொண்டு ஒதுங்கி நின்றான் மணி..

காரில் ஏறிய கனி, “நாராயணன் வண்டியை எடுங்க..” எனச் சொல்லி, பரத்திற்கு அழைப்பு விடுக்க, அப்போது பரத்துடன் அனுஷுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்..

“மச்சான், அக்கா தான் கூப்பிடுறா..” மொபைலைப் பார்த்து கொண்டே அனுஷிடம் சொன்னவன்,

“சொல்லு கனி..” என்க,

“டேய், சிபிஐ’க்கு உங்களால ட்ரான்ஸ்பர் பண்ண முடியலையா..?” என்றாள்.

“எதை..?”

“ஒஹ் அதுக்குள்ள மறந்து போச்சா..? அதான் ஜெஸிஎன் கிட்ட ஸ்தமதி கேஸ் பத்தி பேசச் சொன்னேனே..?” என்றதும்,

“ஹே, கோர்ட்ல இன்னும் போலீஸ்க்கு பதினைஞ்சு நாள் டைம் கொடுத்திருக்காங்க..அதுவரைக்கும் எங்களுக்கு கேஸ் வராது கனி..புரிஞ்சிக்கோ..”

“ஓகே..அது புரியுது..ஆனா இதுல அவர் நினைச்சா பெர்சனலா இன்வால்வ் ஆகலாம் தான..” எனவும்,

“ஜெஸிஎன் அப்படி எல்லாம் கேஸ் எடுக்கிற ஆளா..?”எனத் திருப்பி கேட்டான் பரத்,

“நீ அவன் கிட்ட இதைப்பத்தி பேசுனியா..?”

“ம்..என்னால அவர பார்க்க முடியல..சோ அவரோட அஸிஸ்ட் கிட்டச் சொல்லி பேச சொன்னேன்..”

“ம்ம்..என்ன சொன்னான்..?”

“ஏய் கொஞ்சமாச்சும் மரியாத கொடு டி..அவர் சிபிஐக்கு வராம எடுக்க முடியாது சொல்லிட்டார்..” எனவும்,

“பார்த்தியா..இவனுக்கெல்லாம் என்ன மரியாத..” என்றவள் தொடர்ந்து,

“பரத், அக்யூஸ்ட் ட்ராக் பண்ண முடியலன்னு ஏதோ ஒருத்தன கேஸ்ல லாக் பண்ண பார்க்குறாங்க டா..”

கனியைப் பற்றி தெரிந்தவன், “உன் கேஸ் இல்லல..சோ போய் உன் வேலைய மட்டும் பாரு..இது உனக்குத் தேவையில்ல” என்றவன் அழைப்பைத் துண்டித்துவிட்டான்..

அழைப்பைத் துண்டித்த பரத்தை முறைக்க முடியாமல், தனது மொபைலை வெறித்தவள், கண் மூடிக் கொண்டாள்..

“என்னவாம் பரத்..?”

“அது ஒரு கேஸ் மச்சான்..”

“அப்போ ஜெசிஎன்..?”

“அது என்னோட ஹையர் அபிஷியல் மச்சான்..அப்புறம் அங்க பிஸினஸ் எப்படி போகுது..?” என்றவர்களது பேச்சு அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்தது..

***

சஞ்சீவையும் ஆனந்தையும் அனுப்பி வைத்த சந்த்ரு உடைக் கலைந்து வேறு உடைக்கு மாறியவன், தனது பிரத்யேக அறைக்குள் நுழைந்தான்..

அந்த அறை முழுவதும் கண்ணாடியால் பதிக்கப்பட்டிருந்தது, சாதாரணமாக யார் வந்தாலும், எத்திக்கிலும் தங்களது பிம்பம் தெரிவதால் குழம்பி போவார்கள்..

ஒவ்வொரு கண்ணாடிகளுக்கும் பின்னர் எறும்பை விடச் சின்னதாக கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது..

ஹெக்ஸகான் சேப்பில் இருக்கும் அந்த அறையின் தரைக் கூட கண்ணாடிப் பதிக்கப்பட்டிருக்க, சரியாக அதன் மத்தியில் அவன் நிற்க, இப்போது அவனது முன், கைரேகையும், எட்டிலக்க கடவுச்சொல்லையும் கேட்டு கண்ணாடி தட்டி அவனது முன்னே நீண்டது.

கைரேகையை முதலில் பதித்தவன் அவனது எட்டிலக்க கடவுச் சொல்லைக் கொடுக்க, இப்போது அந்த ஹெக்ஸகான் அறையில் ஒரு கதவு கொஞ்சம் திறந்தது..

ஒரு ஆள் நுழையும் அளவு மட்டுமே இடைவெளி அது, அதற்கு முன்னால் வந்து நின்றவன், கதவின் கைபிடியில் இருந்த கீபேடில் நான்கு இலக்க வார்த்தைகளைக் கொடுத்து உள்நுழைந்தான்..

‘சவுன்ட் ப்ரூவ்’ அறை, அந்த அறையின் ஒரு மூலையில் பொருத்தப்பட்டிருந்த டிவி இவன் உள்நுழைந்ததும் ஆன் ஆகி, அவனது பெட்ரூம், அலுவலக அறை மற்றும் ஹாலில் நடப்பவற்றைக் காட்டிக் கொண்டிருந்தது..

அந்த டிவியைத் தவிர்த்து அறை முழுவதும், நீயூஸ் பேப்பராய் ஓட்டி வைக்கப்பட்டிருக்க, நடுவில் போடப்பட்டிருந்த மேஜையில் இரண்டு கணினியைத் தவிர்த்து மற்ற இடங்களில் கோப்புகளாய் இறைந்து கிடந்தன..

மாஸ்டர் சேரும், ஒரு குஷன் சேரையும் தவிர்த்து ஒரு சிறிய கப்போர்ட் குழுவதும் கையடக்க கோப்புகள்..

மூலையில் ஒரு பெரிய பச்சை நிறப் பலகை மாட்டி வைக்கப்பட்டிருக்க அதில் எதையோ கிறுக்கி வைத்திருந்தான் சந்த்ரு…உள் நுழைந்தவன் அந்த சேரில் அமர்ந்து கணினியில் எதையோ தேடிப் பார்க்க,
ஈஸ்வரின் எண்ணுக்கு அழைப்பு வந்தது..

சந்த்ரு எதிர்பார்த்த அழைப்பு அது, “ஹாய் மை லவ்..” எப்போதும் போனை எடுத்ததும் அமைதியாய் இருப்பவன் இன்று ஆர்ப்பாட்டமாய் பேசுகிறான்…

“ரொம்ப சந்தோஷமா இருக்க போல..?” ப்ளாக்கின் குரல்,

“பின்ன, நான் உன்னையே நினைச்சு உனக்காகவே யோசிக்கும் போது நீ கால் பண்ணுனா சந்தோஷமா தான இருக்கும்…”

“என்னோட இத்தன வருஷத்துல, என்னை நினைச்சு சந்தோஷப்பட்டவன் நீயா தான் இருப்ப..”

“பின்ன, நானும் இத்தன வருஷத்துல ஒருத்தன ரசிச்சு, வெயிட் பண்ணி கொல்லப் போறேன்னா அது நீ தான..”

“ஹா ஹா..ப்ளடி **** நீ என்னைக் கொல்லுறதா..வாட் எ ஜோக் மை மேன்..”

“ஜோக்…ம்…சரி உன்னைக் கொல்லும் போது அதைப் பார்த்துக்கலாம்..இப்போ சொல்லு எப்போ என்னைப் பார்க்க வர..?” எனச் சந்த்ரு கேட்டு முடிக்கவும் அவனது வீட்டு ஹாலில் ஒருவன் நுழைந்தான்..

ஆட்டம் தொடரும்..

error: Content is protected !!