UKIK – 9

9

ஈஸ்வரிடம் எடுத்திருந்த மொபைலையும் நேற்று முத்துவிடமிருந்து எடுத்து வந்த மொபைலையும் தனது மேஜை மீது வைத்தவனுக்கு, தலை வின்னென்று வலித்தது..

சந்த்ருவிற்கு இன்னும் சரக்கு வைத்திருக்கும் இடம் தெரிந்திருக்கவில்லை, அதே சமயம் போன முறை சரக்கு எடுக்கவென கொடுத்த ஒரு கோடி ரூபாயும் திருப்பி வந்திருக்கவில்லை..

தனது சாய்விருக்கையில் அமர்ந்தவன் கைகளை கொஞ்சம் எக்கி சிகப்பு நிற ஃபைலை எடுக்க, அவனது பரம்பறைத் தொழிலும் இப்போது அவன் திறம்பட நடத்திவரும் ஐந்து நட்சத்திர ஹோட்டலான “தி ராஜ நாராயணா பேலஸின்” கணக்கு வழக்கு கோப்புகளில் பார்வை பதித்தான்..

இதுதான் இவர்களது பரம்பறைத் தொழில், இருபத்தி மூன்றாம் வயதில் இவனது கைக்கு வந்த போது இந்தியாவில் மொத்தம் ஐந்து இடங்களில் இருந்த ஹோட்டல், இப்போது பதினைந்து இடங்களில் தலைநிமிர்ந்தது மட்டுமல்லாது ஆசிய கண்டங்களிலும் கால் பதித்திருந்தான்..

குடும்பத்தை எமன் எடுத்துக் கொண்ட பின்பு இவன் பாதுகாப்பு கருதி, இவனது தந்தை மகனது புகைப்படத்தையும் அவன் சமந்தப்பட்ட அனைத்தையும் பாதுகாக்க உத்தரவிட, இப்போதுவரை அதன் முதலாளி யாரென உலகம் அறிய முற்பட்டாலும் விடைகிடைக்காத பதிலாய் தானிருந்தது..

தனசேகரையும் அவனது தந்தையும் முன்நிற்பது போல அனைவருக்கும் காட்டிக் கொண்டவன் தனது புத்திசாலித் தனத்தால் மொத்த ஐந்து நட்சத்திர ஹோட்டல்களையும் திரும்பி பார்க்க வைத்திருந்தான்.

ஒரு மணி நேரத்தில் கணக்கைப் பார்த்து முடித்தவன், அதில் இருக்கும் தனது சந்தேகத்தை தந்தை பெயரில் மெயில் செய்து வைத்தான்..

கீழறையில் இருக்கும் தனசேகரை அழைத்தவன்,
“அங்கிள்..ஆபிஸ் ரூம் வாங்க..” என்பதை மட்டும் உரைத்து, படிகெட்டு வழியே ஆபிஸிற்குள் நுழைந்தான்..

தனக்கு முன்னே வந்து அமர்ந்திருக்கும் தனசேகரையும் அவருக்கு கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்திருக்கும் தனது தந்தையான ராஜ மூர்த்தியையும் கண்டவன் புருவம் சுருங்க கேள்வியாய் பார்த்து கொண்டே அவர்களுக்கு எதிரேயிருந்த இருக்கையில் அமர்ந்தான்..

தந்தையின் முகத்தில் இருந்த சோகத்தைக் கண்டு புருவம் நெறித்தவன் அதைக் கேட்கும் விருப்பமில்லாததால், தனசேகரிடம் தனது பார்வையைத் திருப்பினான்..

அவரது முகத்திலும் குழப்பம் மிதமிஞ்சியிருக்க, ‘என்னவென’ மனம் கேள்வியெழுப்பினாலும், தானாய் வாய் திறந்து கேட்க மனம் ஒப்பவில்லை..

“அங்கிள்…பெங்களூர் ப்ரான்ச்’ல இருந்து இன்னும் அக்கவுன்ட்ஸ் டீடெய்ல்ஸ் வரல..?”

“அது வந்து தம்பி..” தனசேகரின் வார்த்தையில் கவனத்தை வைத்தவனின் முகமோ கேள்வியாய் தனது தந்தையைப் பார்க்க அவரும் அவஸ்த்தையாய் தான் முழித்துக் கொண்டிருந்தார்..

“எப்போ வந்தாரு..?” தந்தையின் மீது பார்வை வைத்து தனசேகரிடம் கேள்வி கேட்க,

“ஐயா வந்து ரெண்டு நாள் ஆச்சுங்க..” என்றவருக்கு சரியெனத் தலையசைத்தவன்,

“சொல்லுங்க..” என்றான் தான் முன்பு கேட்ட கேள்விக்கு பதில் கேட்கும் விதமாய்..

“தம்பி, அந்த ப்ராஞ்ச்ல உங்க தம்பி..” சந்த்ரு முறைத்த முறைப்பில் வாயை கப்சிப் என மூடிக் கொண்டவரைத் தொடர்ந்தவன்,

“அவனை வரச் சொல்லுங்க..” என்பதை உரைத்து மேஜையின் மீதிருந்த பேப்பர் வெயிட்டைச் சுழற்ற, தனசேகர் வெளியே சென்றார்..

“சந்து..” கிட்டதட்ட பதினைந்து வருடங்களுக்குப் பிறகு தந்தையிடமிருந்து தனது பெயர் உச்சரிப்பை கேட்கிறான், பதிலேதும் சொல்லாமல் பேப்பர் வெயிட்டை மட்டும் உருட்டிக் கொண்டேயிருக்க,

இவ்வளவு வருடமாய் பார்க்க கூட விரும்பாதவனின் அமைதியைத் தனக்கு சாதகமாய் எடுத்துக் கொண்டவர், “சஞ்சீவ் பெங்களூர் ப்ராஞ்சை பார்த்துக்கிறேன்னு சொல்றான்..” என்றார் தகவலாய்..

அதற்கும் மறுமொழி கூறாமல் அமர்ந்திருந்தவனிடம், “அவன் ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் லன்டன்ல MBA முடிச்சான்..அதனால அவன்கிட்ட கொடுத்தா நல்லபடியா பார்த்துப்பான்..” என்றதற்கும் அமைதியாய் அவர் இருக்க,

“உங்க சித்தி உன்னைப் பார்க்கனும்னு..” இதற்கு மட்டும் சுட்டெரிப்பதைப் போல முறைத்தவன், பேப்பர் வெயிட்டை இப்போது வேகமாய் சுழற்ற,

அவனது கைகளுக்கு மேல் தனது கைகளை வைத்தவர், “என்னை மன்னிச்சிடு சந்த்ரு..” என்றவருக்கு பதிலுரைக்காமல் அவரது கைகளுக்குள் இருக்கும் தனது கையை எடுத்து கொண்டான்..

அவன் கைகளை எடுக்கவும், தனசேகர் வெளியிலிருந்து கதவை மெல்லமாய் தட்ட, இவன் பதிலுரைக்கும் முன்னே கதவினைத் தள்ளி கொண்டு உள்நுழைந்தான் சஞ்சீவ்..

தனக்கு முன்னே வந்து நிற்கும் சஞ்சீவை வெறுமையான பார்வை பார்த்தவன், உட்காருமாறு இருக்கையைக் காட்ட, மூர்த்திக்கு பக்கத்தில் அவன் அமர்ந்ததும், அதற்கு பின்னிருந்த இருக்கையில் தனசேகர் அமர்ந்தார்..

சில நிமிடங்கள் அமைதியாய் கண்மூடியிருந்த சந்த்ருவின், உயரத்தையும், கொஞ்சமும் சிரிக்க மாட்டேன் என இறுக மூடியிருந்த இதழையும் அவனது இமைத் தாண்டித் தீண்டும் கற்றை முடிகளை அவன் கோதி விடுவதைக் கண்ட சஞ்சீவ், ஆறடி உயரமும், கோதுமை நிறமும் என ரன்வீர் கபூரைப் போல இருந்தான்..

கண்களை இறுக்கமாய் மூடித் திறந்தவன் ஏதோ முடிவெடுத்து விட்டதைப் போல, “வாட்ஸ் யுவர் நேம்..?” என்றான் தனது கனீர் குரலில்..

‘உனக்குத் தெரியாதா’ என்ற கேள்வியினை விழிகளில் தாங்கி, “சஞ்சீவ் அண்ணா..” சின்னவன் அண்ணன் என அழைத்ததை புறந்தள்ளியவன்,

“உனக்கு நாளைல இருந்து நான் சொல்ற வரைக்கும் இங்க இருக்குற நம்ம ப்ரான்ச்ல ட்ரெய்னிங்…உனக்கு அங்க சூப்பர்வைசர் வேலை தான்…எந்த இடத்துலையும் நீ யாருன்னு சொல்லக் கூடாது..நீ ட்ரெய்னிங் முடி அதுக்குள்ள உனக்கு ஒரு பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணித் தரேன்..” என்றவனை இடைமறித்த சஞ்சீவ்..

“ஏன் அண்ணா நான் இந்த ஹோட்டல் பிஸ்னஸ் பார்த்துக்க கூடாதா..?இல்ல தகுதியில்லன்னு வேற பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணித் தரேன்னு சொல்றீங்களா.. இல்ல நான் தான் உங்க குடும்பம் இல்லன்னு சொல்றீங்களா..?” படபடப்பாய் ஆங்கிலத்தில் கேள்வி தொடுப்பவனிடம்,

‘ஆமா..நீ என் குடும்பம் இல்ல தான்’ எனக் கத்த வேண்டும் போல இருந்தாலும், கைகளை மடக்கி உணர்வுகளை அவன் கட்டுக்குள் கொண்டு வரவும்,

“டேய் யார் கிட்ட எப்படிபேசனும்னு உனக்குத் தெரியாது..?” எனக் கன்னடத்தில் சஞ்சீவை பொறிந்தார் மூர்த்தி..

“நீங்க சும்மா இருங்க டாட்..உங்களால தான் நானோ என் அம்மாவோ உரிமையில்லாம இருக்கோம்..இன்னும் இது இப்படியே இருந்தா நாளைக்கு மாலினியை பொண்ணு கேட்டு வரவங்க கிட்ட நாம தல குனிஞ்சு தான் நிக்கனும்..” தன்கண் முன்னே தனது தந்தையிடம் எகிறுபவனை உறுத்து விழித்தவனுக்கு அறையும் வேகம் வந்தாலும்,

‘மூர்த்தி அவனுக்கும் அப்பா தான்..’ மனதின் ஓலத்தில் வாயை மூடி அமர்ந்து கொண்டான்..

அவன் எகிறி முடித்து அமைதியானதும், “அங்கிள், இவனோட ரெஸ்யூம் எல்லாத்தையும் சரிபார்த்துட்டு இந்த ப்ரான்ச் எம்.டி கிட்ட சொல்லி வேலைக்கு சேர்த்து விடுங்க..அப்றம் இவனோட ரெஸ்யூம் வெளில யார் கைக்கும் போக கூடாது..” திடமாய் உச்சரித்தவன் எழுந்து கொள்ள,

‘தான் இவ்வளவு கேட்டும் வாயை மூடி திமிரமாய் தான் உரைத்ததில் நிலையாய் நிற்பவனை முறைத்தான் சஞ்சீவ்..

சின்னவனது முறைப்பை பொருட்படுத்தாதவன், விறுவிறுவென தனது அறைக்குச் சென்றுவிட்டான்..

சந்த்ரு அந்தப்பக்கம் சென்றதும், “சஞ்சீ, உன் அண்ணன நீ இப்படி தான் எதிர்த்து பேசுவீயா..?” அதட்டலாய் மொழியும் தந்தையிடம்,

“அவன் எனக்கு அண்ணன்னு நீங்க தான் சொல்றீங்க..ஆனா அவன் எங்களுக்கான உரிமைய இன்னமும் எங்களுக்கு கொடுக்கல..” இவனது பதிலில் தனசேகருக்கே கோபம் வர, அவ்விடம் விட்டு அகன்று விட்டார்..

“உரிமைய அவன் எதுக்கு உனக்கு கொடுக்கனும்னு நினைக்க சஞ்சீ..?!”

“அவன் கொடுக்கனும்னு நான் நினைக்கல…ஏன் எங்கள உரிமை எடுக்க விடலன்னு தான் கேட்குறோம்..?”

“என்மேல மட்டும் தான் உங்களுக்கு உரிமையிருக்கு, இந்த சொத்து மேல உரிமை இருக்கிறது அவனுக்கு மட்டும் தான்..புரிஞ்சதா..? எனக்கே இதுல உரிமையில்ல…” எனவும்..

“ச்சை..” எரிச்சலாய் மொழிந்த சஞ்சீவ் அவ்வறையை விட்டு வெளியேற, மூர்த்தி அங்கிருந்த ஆளுயர சந்த்ருவின் புகைப்படத்தை வருடினார்..

நடந்தவற்றை தனது அறையில் உள்ள சிசிடிவில் பார்த்து கொண்டு தான் இருந்தான் சந்த்ரு..

முன்னுக்கு இப்போது இறுக்கம் கூடிக் கொண்டே போக, ஆனந்த் அழைப்பு விடுத்தான்..

அழைப்பை ஏற்று காதுக்கு கொடுத்தவன் அமைதியாய் இருக்க, “பாஸ், இவனுக்கு..ம்… முத்துக்கு மயக்க மருந்து கொடுத்து இன்னைக்கே அங்க விடவா..?”

“வேணாம்..அவனை அவனோட வீட்டு பக்கம் கொண்டு போய் விடச் சொல்லுங்க…யார் கடத்துனா எதுக்கு கடத்துனாங்கன்னு எதுவும் அவனுக்குத் தெரிய கூடாது..” என்றவன் அணைப்பை கத்தரித்து, தனக்குத் தெரிந்து டிடெக்டிவிற்கு அழைப்பு விடுத்தான்..

“சார்..” எதிர்பக்கம் ரவியின் குரல் கேட்டதும்,

“ரவி..நான்..”

“ம்..தெரியும் சார்..”

“எனக்கு ஒரு சின்ன வேலை ஆக வேண்டியிருக்கு..”

“சொல்லுங்க சார்..”

“எனக்கு ஒருத்தங்கள நான் சொல்ற வரைக்கும் ஃபாலோ பண்ணி டீடெய்ல்ஸ் கொடுக்கனும்..” என்றதும்

“யாருன்னு சொல்லுங்க சார்..?”

“நம்ம ஏரியா ஏசி கனிஷ்கா சரவணன்..அவங்களை ஃபாலோ பண்ணனும்..இந்த விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது..ஜஸ்ட் அவங்க எங்க எங்க போறாங்கன்னு எனக்குத் தகவல் சொல்லிட்டே இருந்தா போதும்..”

“சரிங்க சார்..எதுவும் பிரச்சனையா..?”

“நோ நோ..இது வேற விஷயம்..இன்னைக்கு நைட் உங்களுக்கு வரவேண்டிய பேமென்ட் வந்திடும்..” என்றவன் அதற்குமேல் ஒன்றுமில்லை என அணைப்பை வைத்துவிட்டான்..

அவன் அழைப்பை வைத்த நேரம் கதவு டம்டமென்று தட்டப்பட்டது..

****

அதிகாலையில் ரவுன்ட்ஸை முடித்து கொண்டு எப்போதும் வீட்டுக்கு வரும் கனிஷ்கா, அன்று வீட்டுக்கு வராமல் நேரே ஸ்டேஷன் சென்றுவிட்டாள்..

சிசிடிவியில் கிடைத்தவனையும், தான் குறித்து வந்து சுவரின் நீள அகலங்களையும் வைத்து குறிப்பெடுத்தவளுக்கு, முதல் சிசிடிவியில் பதிந்தவன் தான் கொலைகாரன் என்பது தெள்ளத் தெளிவாய் புரிந்தது..

ஆனால் இரண்டாம் சிசிடிவியில் தெரிந்த உருவம் முதல் உள்ளவனைப் போல கிட்டத்தட்ட இருந்தாலும், உயரம் குறைவானவன் என்பதைக் கண்டு கொண்டவள், இப்போது முதல் சிசிடிவியில் பதிவானவனை பிரின்ட் அவுட் போட்டு குறித்து கொண்டாள்..

அதன் பிறகு அவன் குதித்த திசைக்கு நேரில் சென்று அவள் அலசி ஆராய, இப்போது கனிஷ்காவின் அடுத்தடுத்த செய்கை கமிஷ்னர் உட்பட அனைவரையுமே அச்சுறுத்தியது, இன்னும் ஒரு நாள் கழித்து மாற்றிவிடலாம் என நினைத்திருந்தவர்கள்,

தங்களது எண்ணங்களை மாற்றிக் கொண்டு அன்றே தனது அலுவலகத்துக்கு கனிஷ்காவை வரப் பணித்து, அவளை இந்தக் கேஸில் இருந்து விடுவிடுத்து வேறு ஒரு ஏரியாவிற்கு மாற்றினர்..

அவர்களின் அதிரடியான மாற்றலில் ‘இப்போது தான் சரியான பாதையில் செல்கிறோம்’ எனப் புரிந்து கொண்டாள் கனிஷ்கா..

முதன்முறையாக தனது கையைவிட்டு ஒரு கேஸ் செல்கிறது..ஏமாற்றமாய் இருந்தாலும் இதை மாற்றியே தீர வேண்டுமென நினைத்தவள் அந்த விடுமுறை நாளை மொத்தமாய் அரசிக்கென செலவழித்தாள்..

அரசியுடன் தனித்திருந்த அம்மாலை பொழிதில் தன்னைவிடுத்து இன்னொருவனை, “டாடி..” என அழைத்து அரசி ஓட..
‘மாமவ அப்பானு தான கூப்பிடுவா..?’ என்கிற யோசனையோடு திரும்பியவளுக்கு..

அரசியை அணைத்து கொண்டு நின்ற சந்த்ரு விடையாய் கிடைத்தான்..

‘இவனா..?’ அதிர்ந்து விழித்தவள் கோபமாய் இருவரையும் பார்த்து முறைத்து,

“ஏய் அரசி..” எனக் கோபமாய் கூப்பிட்டாள்.

“என்ன மம்மி..” அசூசையாய் கேட்டாள் சின்னவள்.

சின்னவளை விடுத்து சந்த்ருவை முறைத்தவள்,”ஹலோ மிஸ்டர்…யார் நீங்க…?” ஒற்றை விரலை நீட்டி அவள் கேட்க,

“மம்மி..இது தான் டாடி..” எனச் சொல்லி கொஞ்ச நஞ்ச பிபியையும் எகிற வைத்தாள் அரசி..

“நீ வாயை மூடுடி..” அரசியைப் பார்த்து கத்தியவள்..

“யாரு யா…குழந்தை கிட்ட அப்பா கிப்பான்னு ம்ம்..”

“அப்பா இல்ல மம்மி டாடிஇ..” மறுபடியும் அழுத்தமாய் சொல்லும் அரசியை முறைத்தவள்..

“பேபி..அடி வாங்கமா ஓரமா போய் விளையாடு..” என்றதும் பெரியவளை முறைத்து கொண்டே,

“டாடி..நான் அங்க இருக்கேன் நீங்க வாங்க..” சந்த்ருவிடம் உரைத்தவள் கொஞ்சம் தள்ளியிருந்த ஊஞ்சலில்
அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தாள்..

திரும்பி அரசி விளையாடும் இடத்தைப் பார்த்தவள், இப்போது சந்த்ருவிடம் திரும்பி, “உன்கிட்ட தான் மிஸ்டர்..” எனக் கேட்க,

“உனக்கு மரியாதையாவே பேசத் தெரியாதா..?” என்று தன் அதிமுக்கிய கேள்வியைக் கேட்டான் சந்த்ரு..

அவனது கேள்விக்கு பதிலளிக்காமல் அவனை முறைத்தவள், “பேபிய உனக்கு எப்படித் தெரியும்..?” எனக் கேட்க,

“அதை நீயே உன் பேபி கிட்ட கேட்க வேண்டியது தான..?” என்றவனின் பார்வை அவளிடமிருந்தாலும் பின்னால் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையிடமும் தஞ்சமிருந்தது..

“யோவ், உன் கிட்ட கேட்டதுக்கு நீ முதல்ல பதில் சொல்லு யா..?” மரியாதை கொஞ்சம் கொஞ்சமாய் தேய்வதைக் கண்டவன்,

“எப்போதும் நான் பொறுமையா இருக்க மாட்டேன்..மரியாதை கொடுத்து பேசு..” என்றவன் தொடர்ந்து,

“தேவி கிட்ட போய் கேளு..பேபி எதுக்கு என்னை டாடின்னு கூப்பிடுறா’ன்னு..” மிதப்பாய் சொன்னவனுக்கு அவள் பதில் சொல்ல கண் மூடித் திறப்பதற்குள், அவளைவிடுத்து பின்னே கீழே விழவிருந்த அரசியை பிடித்திருந்தான்..

கண் இமைக்கு நொடிகளுக்கு பதினைந்து அடியை அசால்டாய் கடந்தவன் அரசியை பிடித்து நிறுத்தியிருந்தான்..

அவனது வேகத்தில் ஒருமுறை இதயம் நின்று அடித்து துடிக்க அவளும் அரசியிடம் விரைந்திருந்தாள்..

கண்கள் இன்பங்களைத் தேடும்…

error: Content is protected !!