உலாவரும் கனாக்கள் கண்ணிலே-2

ஜீவனிருக்கும் வரை ஜீவித்திருக்கும்…

கருமையத்தின் கனல்… கனா!

நெய்வேலி டவுன்சிப்பில் உள்ள கிருஷ்ணன் – அன்பரசி வீட்டிற்கு வந்திருந்தனர் நெடுஞ்செழியன் தம்பதியினர்.

கை, கால்களில் உடலின் பல்வேறு இடங்களில் ஏற்பட்டிருந்த லேசான, அதிகமான காயங்களுக்கு ஏற்றவாறு, சிராய்ப்புகளின் மேல் போடப்பட்ட பிளாஸ்டருடன் ஹால் சோபாவில் அமர்ந்திருந்த அமர்நாத் அருகே திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அமர்ந்திருந்தனர்.

அவரவருக்கு தோன்றிய அறிவுரைகளை வழங்கியவாறு இருக்க, அமைதியாக அமர்ந்திருந்தான் அமர்நாத்.

அர்ச்சனா என்ன செய்வதென புரியாமல் மலங்க விழித்தபடி மங்கை மற்றும் சுசீலாவின் அருகே அமர்ந்திருந்தாள்.

“எதுக்கு போன? எங்க போன? வீட்டுல இவ்வளவு ஆளுங்க இருக்கும்போது இப்போ எதுக்கு டூவீலர்ல வெளியில போன? போறவன் யாருக்கிட்ட சொல்லிட்டு போன?”, திசைக்கு பல கேள்விகள் அவனை நோக்கிவர, எதுவும் பேச இயலாமல் குற்றவுணர்வுடன் அமர்ந்திருந்தான், அமர்நாத்.

அன்பரசி வந்தவர்களை கவனித்தவாறு, மகனுக்கு வந்த நிலையை எண்ணி வருந்தியவராய் வேலைகளை கவனித்தபடி இருந்தார்.

பத்ரிக்கும் இலவசமாக அமரின் தயவால் அர்ச்சதைகள் கிடைக்க, விரும்பாத ஒன்றை ஏற்றபடி ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தான்.

“சரி, நடந்தது நடந்து போச்சு… தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுனு நினச்சுட்டு பொண்ணு மாப்ளய வச்சு நல்லா சுத்தி போட்டுரு அன்பு, இன்னிக்கு நைட்டு”

“சரிம்மா…” என்றவாறு அன்பரசி அவர் வேலைகளைத் தொடர

நெடுஞ்செழியன் மருமகனின் அருகில் வந்தவர், “மருமகனே, உடம்பை கவனிச்சுக்கங்க, நாங்க வந்து ரொம்ப நேரமாச்சு… அங்க வீட்ல இருக்கறவங்க பதறி போயிருந்தாங்க… இப்போ நாங்க கிளம்புறோம்”

“சரி மாமா”, என எழ முயற்சி செய்தவனை

தோள் பற்றி அமருமாறு செய்கையில உணர்த்திவிட்டு, அங்கு வேலையாக இருந்த அன்பரசியை நோக்கி,

“அப்ப நாங்க கிளம்புறோம்மா”

“அண்ணே! நீங்களும், அண்ணியும் சாப்பிட்டுட்டு போங்கண்ணே!”, என அன்பரசி கூற

“இல்லம்மா, அங்கயும் பிள்ளைங்க காத்துக்கிட்டு இருக்குங்க, ஜமுனா ரொம்ப பதறிருச்சு… ஒரே அழுகை… நாங்க போயி பாத்துட்டு வரோம்னு சொல்லி சமாதானப்படுத்தி வரதுக்குள்ள போதும் போதும்னு ஆகிருச்சு, காலைல நல்ல நேரம் பாத்து அனுப்பி வைக்குறோம், மங்கை இருக்கும் இங்க… மாப்பிள்ளை தோது பாத்துட்டு அங்க நாளைக்கு அனுப்பி வையுமா”

“சரிண்ணே, போயிட்டு போன் போடுங்க”

“சரிம்மா”

மகள்கள் இருவரிடமும் பேசிவிட்டு, யாரிடமும், எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்த கிருஷ்ணனிடமும் கூறிக் கொண்டு நெடுஞ்செழியன் தம்பதியினர் விருத்தாசலம் திரும்பினர்.

அமர்நாத், திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்தபின் நடந்த நிகழ்வுகளை மனதில் அசை போட்டவாறு, தனது இந்நிலைக்கு காரணமான டூவீலர் பயணத்தை எண்ணியபடி அமர்ந்திருந்தான்.

————————————

கிருஷ்ணன் – அன்பரசி வீட்டில் மணமக்களை வரவேற்று, முறையாகச் செய்யும் முறைகளை நிறைவாய் செய்தனர்.  பிறகு வீட்டிற்குள்ளிருக்கும் வேலைகளை பகிர்ந்து செய்து கொண்டிருந்தனர்.

கிருஷ்ணன், வீட்டிற்கு வருபவர்களை வரவேற்று உபசரித்த வண்ணமிருந்தார்.

     அன்பரசி, மூத்த மருமகள் உமாவுடன் உபசரிப்புக்கு ஏற்றவகையில், குளிர்பானங்கள், டீ, காபி என அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு, தயாரிக்கும் வேலைகளில் கவனமாயிருந்தார்.

     அமர்நாத், வீட்டின் காம்பவுண்ட் சுவரை ஒட்டியிருந்த மரத்தடியில் நின்றவாறு தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தான்.

     அர்ச்சனாவிற்குரிய உதவிகளை அவளுடன் வந்திருந்த, அவளின் தமக்கை மங்கை கவனித்து அவளின் உடைகளை மாற்ற, அலங்காரங்களை மாற்ற உதவிகொண்டிருந்தாள்.

சீர் சாமான்கள் இறக்குபவர்களிடம் எந்த பொருளை எங்கு வைக்க வேண்டும் என ஆலோசனை கூறிக்கொண்டிருந்தான், கிருஷ்ணன் அவர்களின் மூத்தமகன் பத்ரிநாத்.

     பொருட்களை இறக்கி வைப்பதற்கு இடையில் ஓடிப்பிடித்து விளையாடும் சிறுபிள்ளைகளை ஓரமாக விளையாட பணித்தும் பயனில்லாமல் போக, அவர்களிடம் ஒரு கண் வைத்தபடி வண்டியிலிருந்து இறக்கும் சாமான்களை கவனித்துக் கொண்டிருந்தான், பத்ரிநாத்.

     “அப்பா, நேத்தும் ஸ்கூல் லீவ் தான எங்களுக்கு?”, என்ற தனது மகள் நிகிதா வினவ

     “ஸ்கூல் லீவில்ல, நீங்க ரெண்டு பேரும் சித்தப்பா மேரேஜ்கு லீவ் போட்டுருக்கீங்க”

     “நான் சொன்னேன்பா… இவ தான் அப்டி இல்லனு சொல்றா”, என புகார் வாசித்தாள் நிசிதா.

     நிகிதா, நிசிதா இருவரும் இரட்டைகள்.  எல்.கே.ஜி. படித்துக் கொண்டிருக்கும் மேதைகள்.

     “வெகிகிள்ள இருந்து பெரிய சாமான் எடுக்கும் போது இடையில வரக்கூடாதுனு சொல்றேன், சொன்ன பேச்சு கேட்காம இடையில வரலாமா!?”

          “நாங்க இடையில வரலப்பா, திங்க்ஸ் எடுத்து வைக்கிறவங்க தான் எங்க விளையாட்ற இடத்துக்குள்ள வராங்க, இல்ல நிகி!?”, என நிசி கூற

          “ஆமாப்பா… அவங்ககிட்ட சொல்லுங்க, எங்களை டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுனு”

     நண்பர்கள் விடைபெற்றுச் செல்ல, பத்ரியுடன் வளவளத்தபடி நின்ற வாண்டுகளை கவனித்த அமர், இருவரையும் நோக்கி அருகில் வந்தான்.  நிகி, நிசி வாங்க சித்தப்பா கூட என அழைக்க

     “இனி உங்ககூட நாங்க பேசமாட்டோம், என்னடி நிசி!?”

          “ஆமா…” என இருவரும் அவனிடம் செல்லாமல் முகம் திருப்ப, அவர்களின் உயரத்திற்கு தன்னை சிறியவனாக்கி அருகில் அவர்கள் இருவரின் கைபற்றி அங்கிருந்து அகலச் செய்தபடி

     “செல்லங்களுக்கு, சித்தப்பாகிட்ட என்ன கோவம்?”

     “நீங்க, வேற யாரொ ஒரு பாப்பாவை தூக்கினீங்கள்ல, அதனால இனி நாங்க பேச மாட்டோம், உங்ககூட!”

     யோசித்தவன், திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களின் பிள்ளையை தூக்கியதனால் வந்த பிணக்கு என்பதை உணர்ந்தவன்

    “நம்ம வீட்டுக்கு வர பெரியவங்கள எல்லாம் யாரு கவனிப்பா?”

     “பாட்டி… தாத்தா… அம்மா… அப்புறம் நீங்க?”, இப்போ இந்த கேள்வி எதற்கு? என இருவரும் பார்வையால் அமரை நோக்க

     “அப்ப வீட்டுக்கு வந்த சின்னவங்கள யாரு கவனிக்கனும்?”

          இருவரும் இணைந்து ” நாங்க தான்”, என பெரியவர்கள் தோரணையில் கூற

     “அப்ப நீங்க இரண்டு பேரும் விளையாட்டுல பிசியா இருந்ததால, சித்தப்பா அவங்கள கவனிச்சிருப்பேண்டா… அதுக்கு சித்தப்பா கூட பேச மாட்டீங்களா?”

     இருவரும் ஒருவரையொருவர் அப்படியா செய்தி என பார்த்தபடி

     “அது இன்னும் நடக்காத பாப்பா”, என இருவரும் இணைந்து கூற

     “ஆமா அந்த பாப்பாவை உங்களால தூக்க முடியாதுல, அதான் நான் தூக்கி ஹாய் சொன்னேன், உங்களுக்கு பதிலா”

     “ப்ராமிஸ்”

     “ஆமா, இதுக்கெல்லாம் எதுக்கு பிராமிஸ்?, சித்தப்பா உங்ககிட்ட எதுக்கு பொய் சொல்ல போறேன்?”

     “சரி, அப்போ, எங்களுக்கு ஐஸ்க்ரீம் வாங்கி தருவீங்களா இப்ப…”

     “ஈவினிங் ஐஸ்க்ரீம் சாப்பிட கூடாது, நாளைக்கு சித்தப்பா வாங்கி தரேன்… என்ன சரியா?”, என்று இருவரிடமும் பேசியபடி அங்கிருந்து சற்று தொலைவில் அழைத்து சென்றிருந்தான்.

     “என்ன (பங்காளி என்பதன் சுருக்கம்) பங்கு? என்ன வேணுமாம் ரெண்டு வாண்டுக்கும்?, என கேட்ட பத்ரிக்கு

     “ஒண்ணுமில்ல, தலைவா!”, என சப்தமாக சொன்னவன் (பிறகு கூறுகிறேன் என சைகையால் அவனிடம் தெரிவிக்க

     அதே நேரம் அவன் போன் ஒலிக்க, அதை எடுத்தவன் ‘நியூ நம்பர்’ காலை அலட்சியம் செய்ய முடியாமல், அங்கிருந்து அகன்றபடி மொபைலை ஆன் செய்து

     “ஹலோ…”, என்க… எதிர்முனையில் சப்தம் இல்லாமல் போக மீண்டும் “ஹலோ…” என்றான்.

     “என்ன அமர்? மேரேஜ்லாம் நல்லபடியா முடிஞ்சிருச்சா?”, என்ற கேள்வியில் எதிர்முனையில் இருப்பதை யாரென உணர்ந்தவன், சுற்றிலும் பார்வையை ஓடவிட்டபடி

     “ம்… முடிஞ்சுது… என்ன விடயமா கால் பண்ண, சீக்கிரம் சொல்லிட்டு போன வையி”

     “ஏன்? உன் புதுப் பொண்டாட்டி பக்கத்துல இருக்காளா?”

     “உனக்கு தேவையில்லாத விடயத்துல எதுக்கு தலையிடற, எதுக்கு கால் பண்ணணு மொதல்ல சொல்லு”

     “உன் வைஃப்கு மேரேஜ் கிஃப்ட் அனுப்பு வச்சேன்”

     “அவளுக்கு கிஃப்டா! இப்போ உங்கிட்ட அவ கிஃப்ட் கேட்டாளா…?”

     “உன்ன சந்தோசமா வச்சிருக்குற வித்தையை அவளுக்கு கிஃப்டா ஷேர் பண்ணுறேன்”, என வில்லங்கமாகச் சிரித்தவளிடம் , “கொரியர்ல நேற்றே அனுப்பினேன், இன்னுமா வரல?”

     “என்ன கிஃப்ட, எந்த கொரியர்ல அனுப்பின?”

     “அத எதுக்கு உங்கிட்ட சொல்லணும், கொரியர் வீட்டுக்கு வந்து கிஃப்ட் பார்சல் ஓபன் பண்ணவுடனே உன் வைஃப் எல்லார்கிட்டயும் சொல்லுவா, அப்போ தெரிஞ்சுக்க”

     “ஏய்… அப்றம் எதுக்கு… இப்போ போன் பண்ண எனக்கு?“, என கேட்க

     “கொரியர் வந்துருச்சானு கன்ஃபார்ம் பண்ணதான்”

     “வந்தா, நானே உனக்கு மெசேஜ் பண்றேன், வையி போன”, என்றபடி போனை வைத்தவன்

     ஃப்ர்ஸ்ட் ஃப்ளைட் கொரியர் அலுவலகத்தில் பணியில் இருக்கும் தனது நண்பனுக்கு அழைத்து விவரம் சொன்னவன், மற்ற கொரியர்களில் வந்திருக்கிறதா என்பதை அறிய என்ன வழி எனக் கேட்டான்.

     சில நண்பர்களை போனில் அழைத்து விவரமறிந்து வர கேட்டவன், நேரமாகியும் எந்த செய்தியும் நண்பர்களிடமிருந்து வராமல் போக இருப்பு கொள்ளாமல் அவனுடைய டீவீலரில் யாரிடமும் கூறாமல் வெளியே கிளம்பிவிட்டான்.

     வீட்டிற்குள் இருந்த அன்பரசி நீண்ட நேரமாக தன் கண்ணில் படாத அமரை நினைத்தவர், அர்ச்சனாவிடம் கேட்க, அவள்

     “நான் அவங்கள பாக்கலயே அத்த”, என்க

     மங்கையிடம் சற்று உரையாடிவிட்டு, வெளியே வந்தார்.  அங்கு நிசி, நிகி இருவரையும் அழைத்து விசாரிக்க

“சித்தப்பா எங்களுக்கு ஐஸ்கிரீம் வாங்க பைக்ல போயிருக்காங்க”, என ஒருவரையொருவர் பெருமையுடன் பார்த்துக்கொள்ள

     “அவன் மட்டுமா போனான்?”

     “ஆமா பாட்டிமா”, என்று இருவரும் இணைந்து கூற அங்கிருந்து வீட்டிற்குள் வந்தவர், மூத்த மருமகளிடம் புலம்பியவாறு, அமரின் போனுக்கு அழைத்துவிட்டார்.  நெடுநேரம் போனை எடுக்காதிருந்தவன்,

     “அம்மா, பக்கத்துல இருக்குற கடைல தான் நிக்குறேன்.  இதோ வரேன்மா”

     “ஏண்டா, இப்டி சொல்லாம வெளியில இந்த நேரம் எதுக்கு போன?”

     “இதே வந்துட்டேன் எலிசபெத் பேபி”, என்றவன் ஒரு மணி நேரமாகியும் வராமல் போகவே, பத்ரியை அழைத்தார்.

     வெளி வேலையில் இருந்தவன், “என்னமா, அவன் என்ன சின்ன புள்ளயா?”, எனக் கேட்க

     “கல்யாண மாப்பிள்ளை எதுக்குடா தனியா வெளியில போனான்?”

     “போகக் கூடாதாம்மா!?”

     நீ உங்கல்யாணத்தன்னிக்கு எங்கடா வெளில போயிட்டு வந்த…? வீட்ல தான இருந்த! வரவங்க மாப்பிள்ளை எங்கனு கேட்டா… வெளியில போயிருக்கான்னா சொல்லுவாங்க, சீக்கிரமா அவன கூட்டிக்கிட்டு வீடு வந்து சேரு”, என்றபடி வைக்க

     “சரிமா”, என்றபடி அமருக்கு கால் செய்தான்.  மூன்று முறை முழுவதுமாக ரிங் போயி கட்டாகியது, ஆனால் அமரால் போன் எடுக்கப்படவில்லை.  சற்று நிதானித்தவன் வீட்டிற்கு கிளம்பி வந்தான்.

     வரும் வழியில், அவர்கள் வீட்டிற்கு அரை கிலோ மீட்டர் தொலைவில் கூட்டமாக இருக்க, அங்கு வண்டியை நிதானித்து ஓட்டியபடி மெதுவான வந்தான். வரும்போது பார்வையை சுற்றிலும் செலுத்தியவன் கண்களில், சற்று தொலைவில் இருந்த ஸ்ப்ளெண்டர் விழ, அது அமருடையது என்பதை அறிந்து, அவன் வந்த வண்டியை ஏனோ தானோ என நிறுத்திவிட்டு  கூட்டத்தை விலக்கி முன்னேறினான்.

வெண்ணிற ஆடைகள் சிவப்பாகி வேஷ்டி கிழிந்து, தரைக்கு உதிரத்தை தானம் செய்த நிலையில் தரையில் கிடந்த உடன்பிறந்தவனைக் கண்டு பதறி, ஓடி வந்து அள்ளி எடுத்தான்.

     “என்ன பங்கு? எப்படி ஆச்சு?”

     வேதனையில் பேச முடியாமல் இருந்தவனை, அருகில் சென்றுகொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தச் செய்து, அமரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.

வழியில் தனது தம்பியிடம், தாய் அழைத்து பேசியதையும், அதனால் அவனைத் தேடி வந்த விடயத்தையும் கூறியவாறு வந்தான், பத்ரி.

     கவனக்குறைவால், எதிரில் வந்த வண்டியை கவனிக்காமல் வளைவில் திரும்பும்போது வந்த வேகத்தில் மோதி கீழே விழுந்திருந்தான்.

எதிரில் வந்த வண்டியின் ஓட்டுநர் அமரின் கவனமில்லா நிலையை கணித்து, வண்டியை நிறுத்திவிட்டான். நிறுத்திய வண்டியில் மோதி விழுந்ததால் சிராய்ப்புகளுடன், உறுப்பு இழப்புகளில்லாமல் தப்பித்திருந்தான்.

          டாக்டர். இளங்கோவன், அவர்களின் குடும்ப மருத்துவர். ஆகையால், அமரின் கவனமின்மைக்கு சப்தமிட்டு, இஞ்செக்சன் போட்டு, வலி நிவாரண மாத்திரைகளை எழுதிக் கொடுத்தவர், ஆழமான காயங்களுக்கு மருந்திட்டு, சதை கிழித்திருந்த இரு இடங்களில் தையல் போட்டு, இரு நாட்கள் கழித்து மீண்டும் வந்து காயங்களை சோதிக்க வருமாறு கூறி அனுப்பிவைத்தார்.

     அதுவரை வீட்டிற்கு விடயத்தை பகிராத பத்ரி, தனது மனைவி உமாவிற்கு அழைத்து நடந்த விடயங்களைக் கூறியவன், தான் உடனே வீட்டிற்கு அமரை அழைத்துக் கொண்டு வரவிருக்கும் தகவலை கூறிவிட்டு வைத்தான்.

     சற்று நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த இரு மகன்களையும் அதிராமல் கண்ட தாயின் பார்வையில், தகவல் தெரிந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்டனர், இருவரும்.

     இது எதுவும் தெரியாத, அர்ச்சனா, மங்கை இருவரும் அதிர்ச்சியில் இருக்க, ஹாலில் தமயனை அமர வைத்துவிட்டு அங்கிருந்து அகன்றுவிட்டான், பத்ரி.

கிருஷ்ணன் மகனை பார்த்த பார்வையை எதிர்கொள்ள இயலா அமர்நாத் “சாரிபா” என்ற ஒற்றைச் சொல்லுடன் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்துவிட்டான்.

     சற்று சுதாரித்த அர்ச்சனாவின் அக்கா மங்கை, தாய், தந்தைக்கு அழைக்காமல் தனது தம்பியிடம் விடயத்தைப் பகிர்ந்தாள். தகவலை அறிந்த சந்திரசேகர் தனது பெற்றோர் மற்றும் மனைவிக்கு தெரியபடுத்தினான்.

தகவல் அறிந்தவுடன் விருத்தாசலத்தில் இருந்து அனைவரும் கிளம்ப எத்தனிக்க, வீட்டின் தலைவரான நெடுஞ்செழியன், தனது சம்பந்திக்கு அழைத்தார். அதை எதிர்பார்த்திருந்த கிருஷ்ணன்

     “மன்னிக்கணும் மச்சான், எதிர்பாராமல் நடந்த நிகழ்வில் உண்டான அதிர்ச்சில உங்களிடம் சொல்ல மறந்துவிட்டேன்” என ஆரம்பிக்க

     “எனக்கு புரியுது மச்சான் உங்க நிலம, மாப்பிள்ளை எப்டி இருக்கார் இப்போ?”

     “சிராய்ப்புகள் தான், மற்றபடி ஒண்ணும் பிரச்சனை இல்லனு டாக்டர் சொன்னதா, பெரியவன் சொன்னான்”

     “சரி, நாங்க கிளம்பி வரோம் இப்ப… நேரில பேசிக்கலாம்”

     பெரிய காயங்கள் ஒன்றுமில்லை எனக் கிருஷ்ணன் கூறியும் மனம் கேட்காமல், மற்றவர்களை வீட்டில் இருக்குமாறு கூறிவிட்டு தம்பதியர் இருவரும் கிளம்பி வந்திருந்தனர்.

     இவ்வளவு விடயங்களுக்கும் காரணமானவளை நினைத்த அமருக்கு, தன்மேல் மிகுந்த கோபம் உண்டாயிற்று.  ஆனாலும் வலிநிவாரணியின் உதவியுடன் கண்ணயர்ந்திருந்தான்.

     தனது மருமகளின் நிலையை எண்ணி வருந்திய அன்பரசி, “ரெண்டொரு நாள்ல சரியாகிருவான்மா, நீ மனசில எதுவும் வச்சுக்காத… போயி தூங்கு”, என அறைக்குள் உறங்க கூறிவிட்டு ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்ட கட்டிலில் படுத்து உறங்கிய அமரின் படுக்கை அருகில், பாயை விரித்து படுத்துக்கொண்டார்.

————————————-

     வீடு திரும்பியவுடன், நெடுஞ்செழியன் விபரங்களைக் கூற அது வரை இருந்துவந்த இருக்கமான சூழல் மறைந்திருந்தது.

     பழைய படி கேலியும், கிண்டலுமாக வீடு மாற, இரவு உணவுக்கான ஏற்பாடுகளில் வந்திருந்தவர்களை கவனித்து பரிமாறி, தங்குபவர்களுக்கு உரிய வசதிகளையும், கிளம்புபவர்களுக்கு வழியனுப்பலுமாக நேரம் போனது.

     குறித்திருந்த நேரத்தில் மணமக்களை அவர்களது அறைக்குள் அனுப்பிவிட்டு, மற்றவர்கள் அசதியில் உறங்க ஆரம்பித்திருந்தனர்.

——————————–

     திரைப்படங்களில் காட்டப்படும் முதலிரவு அறை போல பூவால் அலங்காரங்கள் இல்லாமல், ஆனால் சற்று வித்தியாசமாக இருந்த அறையை கவனித்தவாறு உள்ளே நுழைந்தாள் ஜனதா.

     அறையில் இருந்த டபுள்காட்டில் அமர்ந்தவாறு, மொபைலுக்குள் முகம் புதைத்திருந்தவன், உள்ளே நுழையும் மனைவியின் முகம் பார்த்தான்.  தாலி ஏறிய நிமிடத்திலிருந்து, அறைக்குள் அவன் வரும்வரை அவளை கவனித்திருந்தான்.

     அமரின் விபத்து செய்தி காதுகளுக்கு எட்டும்வரை இருந்த ஜனதா, காணாமல் போயிருந்தாள்.  ஏதோ மனதிற்குள் நினைத்தவாறு வந்தவளை

     “ஜனதா”, என அழைத்தான்.

     கணவனின் அழைப்பில் நிதானத்திற்கு வந்தவள், அவனை நோக்கி என்னவென பார்க்க

     அருகில் வந்தமருமாறு தனது செய்கையில் அவளிடம் கூற

     அங்கு செம்பில் வைக்கப்பட்டிருந்த பாலை எடுத்து அவனிடம் நீட்டியபடி தலையை கீழே குனிந்தபடி அருகே வந்தமர்ந்தாள்.

     “நாளைக்கு காலைல உங்கண்ணனனை போயி பார்க்கலாம், இப்போ பாலை குடிச்சுட்டு போயி தூங்கு” எனக்கூற

     தலையை ஆட்டியவள், செம்புடன் இருந்த பாலை கணவனிடம் கொடுத்துவிட்டு, அரை டம்ளர் பாலை குடித்ததாக பேர் செய்தவள், படுக்கையில் ஒருக்களித்தபடி படுக்க

     அவளையே பார்த்தபடி, பாலை அருந்தியவன் விளக்கை அணைத்துவிட்டு அவளருகில் படுத்துக்கொண்டான்.

     உறக்கம் வராமல் தவித்தவள், அவர்களது அறையில் ஒட்டியிருந்த கழிவறைக்கு போவதும், வந்து படுப்பதுமாக மூன்று முறை இருக்க, அதுவரை அவளைக் கண்டும் காணாதது போல் படுத்திருந்த சந்திரசேகர்

     “ஜனதா…” என அழைக்க

     “ம்…”

     “தூக்கம் வரலியா?”

     “ம்”

     படுக்கையில் தனதருகே படுத்திருந்தவளை தன்பக்கமாக இழுத்தவன்

     கை வளைவில் அணைத்தவாறு, “உடம்புக்கு எதுவும் முடியலயா?”, எனக் கேட்க

     “இல்ல”

     “அப்றம் ஏன் தூங்காம இருக்க?”

     “தெரியல…”

     “என்னம்மா செய்யுது?”

     “பயமாருக்கு…”

     “எதுக்கு?”, பதிலில்லாமல் போக, “உங்க அண்ணனை நினச்சா?”, என அடுத்த கேள்வியைக் கேட்க

     “ம்”

அவனை ஒட்டியிருந்தவளை இன்னும் இறுக தனது கைகளில் அணைத்தவன், “மனச போட்டு குழப்பாம… தூங்கு, சின்ன காயம்னு தான சொன்னாங்க, சீக்கிரம் சரியாகிரும்”

அவள் கண்களில் ஈரம் உணர்ந்தவன், பதறி எழுந்து விளக்கை எரியவிட்டான்.

அவளை எழச்செய்து “எதுக்கு இப்ப அழற?”

“அர்ச்சனா பாவம் தான! அவ எவ்வளவு கனவோட கல்யாணம் பண்ணி போயிருப்பா?  அண்ணனுக்கு இப்டினா அவ ரொம்ப ஃபீல் பண்ணுவா தான?”

“ம்”

“அதுக்கு இப்ப நீ அழுது என்ன ஆகப்போகுது? கண்ண மூடித் தூங்கு, எல்லாம் சரியாகிரும்”, என்று கூறியபடி மனைவியை அணைத்து இலகுவாக முத்தமிட்டான். விளக்கையும், தன்னவளையும் அணைத்தவன் உறங்க ஆயத்தமானான்.

எதையும் உணரா ஜனதா, உறங்க விளிக்கும் கணவனின் கைவளைவில் தன்னை ஒப்படைத்திருந்தாள்.

மனதின் தணல், கனாக்களை விருட்சமாக்கும்!!!

————————————-

error: Content is protected !!