ukk-3a

ukk-3a

உலாவரும் கனாக்கள் கண்ணிலே-3A

வாலிபத்தின் கனா வசியமானது!

கனவில்லா உறக்கம் கருணையானது!

வலிநிவாரண மருந்தின் வீரியத்தில் முதலில் உறங்கி இருந்தான் அமர்.  மருந்தின் வீரிய தன்மைக்கு ஆயுள் குறைந்தபின் வேதனையில் விழிப்பு வந்திருந்தது.

காயங்கள் சிறிதாயினும், நடந்த நிகழ்வுகளுக்கு காரணமானவளை நினைத்த அமருக்கு, அவளின் சமீபத்திய செயல்களினால் அவள்மீதான கோபம் கூடியது.  அவள் தனது வாழ்வின் பக்கங்களை ஆக்ரமிக்க எண்ணியதை நினைவு கூர்ந்தான்.

எதிர்பாராமல் நிச்சயிக்கப்பட்ட, அமர்நாத் – அர்ச்சனா திருமண செய்தியைக் கேட்டபின், மௌனிகாவின் மௌனமான மறுபுறத்தைக் காண எழுந்த நிகழ்வினை எண்ணியவாறு இரவின் நிசப்தத்தில் கண் விழித்திருந்தான், அமர்நாத்.

——————–

பத்ரிநாத், நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க நிறுவனத்தில், உதவிப் பொறியாளராக பணி புரிந்து வந்தான்.  அந்நிறுவனத்தில் மண்ணியல் துறையில் முதுகலை படித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகம் இருந்ததை அறிந்தவன் தனது தம்பியை அத்துறையில் சேர்ந்து பயில ஊக்குவித்திருந்தான்.

தனது சகோதரனின் வழிகாட்டுதலுக்கு செவிமடுத்த அமர்நாத், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மண்ணியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருந்தான்.

பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே விரும்பி கற்கும் அத்துறையில், சொற்பமான பெண்களும் கற்க முன்வந்திருந்தனர்.  ஆகையால் இருபத்தாறு ஆண்களும், ஐந்து பெண்களுமாக ஆரம்பித்த இளநிலை பட்டத்தில், பதினேழு ஆண்களும், இரு பெண்களுமாக முதுகலையில் குறுகியிருந்தது… பட்டம் பெற்றவர் எண்ணிக்கை.

அமருடன், இளங்கலை மற்றும் முதுகலையில் பயின்ற பெண்களில் மௌனிகா மிகுந்த திறமைசாலி.  சென்னையை பூர்வீகமாகக் கொண்டவள்.

பயிலும் காலத்தில், ரெக்கார்ட் வேலைகள், வரைபடங்களை வரைதல் போன்ற வேலைகளை உடன் பயிலும் மாணவிகளிடம் ஒப்படைத்து விடுதல் என்பது இத்துறை மாணவர்களுக்கும் பொருந்திப் போனது.

கல்லூரி மாணவர்களின் விளையாட்டுகள் மற்றும் தேசிய பொழுதுபோக்கான ஊர் சுற்றுதலை இடர்பாடுகள் இன்றி, இத்துறை மாணவர்களும் திறம்படச் செய்தனர். அதே நேரம், ரெக்கார்ட் வேலைகள், வரைபடங்களை வரைதல் போன்றவற்றை இவர்களுடன் பயின்ற பெண்களிடம் கொடுக்க, அவர்களும் மறுக்காமல், மறக்காமல், செய்து கொடுத்தனர்.

     முழுநேரமும் புத்தகங்களுடன் இருந்தாலும், புத்தகங்களை வாங்காமலேயே… நூலக புத்தகங்களின் உதவியுடன் இளங்கலையில் பல்கலை கழக தர வரிசையில் முதலிடம் பிடித்த அமர்நாத்தை… ஒரு முறையேனும் தரவரிசையில் பின்தள்ள எண்ணிய மௌனிகாவிற்கு கிடைத்ததென்னவோ இறுதிவரை தோல்வி தான்.

     முதுகலையிலும் இருவரும் இணைந்து பயணிக்க வேண்டிய தருணத்தில்… குதர்க்கமாக சிந்தித்த மௌனிகா, தானாகவே அமரிடம் நட்புக்கரம் நீட்டினாள்.  ஒழிவு, மறைவு இல்லாமல் இயல்பாக இருந்த அமரை தர வரிசையில் பின்தள்ள மௌனிகா செய்த சூழ்ச்சிகள் எதுவும் பலிதம் இல்லாமல் போனது.

     முதுகலை இறுதி பருவத் தேர்வின் போது வந்திருந்த ஜியாலஜிகல் சர்வே ஆஃப் இண்டியா எனும் மத்திய அரசு நிறுவனத்தில் விண்ணப்பிக்க அமரிடம் கூறியவள், சவுத் ஆஃப்ரிகாவில் இயங்கும் மண்ணியல் துறை நிறுவனத்தில் அவள் விண்ணப்பித்திருந்தாள்.

     மத்திய அரசின் மண்ணியல் துறையின் கீழ் இயங்கும் நிறுவனத்தில், அமர் ட்ரைனியாக முதலில் பணியமர்த்தப்பட்டான்.  சகோதரன் மற்றும் பெற்றோர் அனைவருக்கும் மிகவும் இளவயதில் மத்திய அரசு பணி அமருக்கு கிடைக்கப்பெற்றதில் மகிழ்ச்சியே.

இந்திய மாநிலங்களில் எங்கு அனுப்பினாலும் போகவேண்டும் என்ற ஒப்பந்தத்தினை ஆமோதித்து அமர்நாத் முழுமனதுடன் பணியிலமர்ந்தான்.

அதே நேரம் மௌனிகா, சவுத் ஆஃப்ரிக்காவிலுள்ள மண்ணியல் நிறுவனத்தில் பணியில் சேர்ந்திருந்தாள்.  மௌனிகாவின் சூழ்ச்சிகள் ஏதும் அறியா அமர் அவளை முழுமையாக நம்பினான்.

     மௌனிகாவிற்கு, பல்கலைக் கழக தரவரிசையில் இரண்டாமிடத்திலிருக்கும் தன்னைவிட, குறைவான வருமானத்தில் முதலிடம் பெற்ற அமர்நாத் பணியில் இருப்பது மகிழ்வான செய்தியாகிப் போனது.

     இதையேதும் அறியா அமர்நாத், வழமை போல அவள் அழைக்கும் போது மௌனிகாவிடம் போனில் பேசிக்கொள்வான்.

———————————-

     மகாராஸ்டிரம் மாநிலத்தின் குளிர்காலத் தலைநகரான, இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய நகரம், நாக்பூரில் நடந்த மண்ணியல் துறை சார்ந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள அமர்நாத் சென்றிருந்தான்.  அப்போது அங்கு எதிர்பாரா நிகழ்வாக ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மௌனிகாவை நேரில் சந்தித்தான்.

“ஹாய் அமர்நாத்!, எப்படி இருக்க?”

     “குட், வாட் அபௌட் யு, மௌனிகா?”

     “பார்த்தா எப்டி இருக்கேனோ, அப்டி இருக்கேன் அமர்!”, என அவனைக் கண்ட மகிழ்வினை வதனத்தில் அவளறியாமல் ‘டச் அப்’ செய்திருந்தாள்.

     “ம்… எப்போ இண்டியா வந்த?”

     “லாஸ்ட் வீக்கே வந்துட்டேன், வந்து ரொம்ப நாளாச்சுனு… டேட் வரச்சொல்லி டெக்ஸ்ட் பண்ணிட்டே இருந்தார், இந்த செமினார் கண்டிப்பா வரணும்னு அல்ரெடி டிசைட் பண்ணிருந்தேன், அதான் ஒன் வீக் பிஃபோர் சென்னை வந்துட்டேன்”

          “டூ டேஸ் பிஃபோர் நீ, எனக்கு கால் பண்ணப்ப கூட இங்க வந்தத சொல்லலயே, ஏன்?”

          “எப்டியும், நீயும் இந்த கான்ஃபரன்ஸ்ல பார்ட்டிசிபேட் பண்ணுவனு தெரியும், அப்போ சர்ப்ரைஸ் மீட்டா இருக்கட்டுமேனு சொல்லல!”, என ஐந்து வருட கதைகளை பேசியபடி, இரு நாள் கருத்தரங்கின் இடைவேளை அட்டவணையை இருவரின் பேச்சுக்களால் நிரப்பியிருந்தனர்.

     “கான்ஃபரன்ஸ் முடிஞ்சு புராஜெக்ட் ஏரியா போறியா? இல்ல ஊருக்கா?”

     “ஊருக்கு தான் போறேன்”

     “அப்ப எங்க வீட்டுக்கு வந்துட்டு போ”

     “இல்ல… நான் அல்ரெடி ட்ரெயின்ல ரிசர்வ் பண்ணிருக்கேன்”

     “இன்னும் மாறவே இல்லையா அமர்?, எங்க வீட்டுக்கு வந்துட்டு ஈவினிங்க் கிளம்பு, நான் டேட் கிட்ட உன்னை வீட்டுக்கு அழச்சுட்டு வரதா சொல்லிட்டேன்”

     “நான் சார் கிட்ட சாரி கேட்டுக்கறேன், அடுத்த முறை பார்ப்போம்”

     “அப்போ நான் சென்னைல இருக்கமாட்டேன்ல”

          “நீ எப்போ ஆஃப்ரிகா போற?”

          “இப்போ ஏன் அத கேக்குற?”

     “இல்ல ஊருக்கு போயிட்டு ரிடர்ன் ஆகும் போது முடிஞ்சா வரேனே”

     “இல்லல்ல… உன்ன நம்ப முடியாது, சோ இப்ப எங்கூடவே வந்துரு”

     “ஓஹ்…”, சற்று நேரம் யோசித்தவன் “சரி, சார் பாத்தும் ரொம்ப நாளாச்சு, வரேன்”, என்றான்.

     “அது…!”,

மௌனிகாவின் பிடிவாதம் வெற்றிபெற, அமர்நாத்துடன் சென்னையிலுள்ள அவர்களின் வீட்டை நோக்கி பயணம் மேற்கொண்டாள் மௌனிகா.

———————————-

மௌனிகாவின் தந்தை சோமசுந்தரம் சென்னையில் தொழில் செய்து வருகிறார்.  மௌனிகாவிற்கு பத்து வயது இருக்கும் போது ஒரு விபத்தில் தனது தாயை இழந்துவிட்டாள்.  அன்றிலிருந்து அம்மையப்பனாக இரு கதாபாத்திரங்களையும் குறைவின்றி செய்து வருகிறார், சுந்தரம்.

தாயில்லா தனது மகளை கண்டிப்புகள் இல்லாமல் அவள் மனம்போன போக்கில் வளர்த்துவிட்டு, தற்போது அதற்கான தண்டனையாக தனிமையில் தவிக்கிறார்.

கடந்த இரு ஆண்டுகளாக திருமண பேச்சை எடுத்தாலே கண்டு கொள்ளாமல் விட்டேற்றியாக இருந்த மகள், இந்த முறை சென்னை வந்தவுடன் ஒரு நிபந்தனையோடு திருமணத்திற்கு சம்மதித்திருந்தாள்.

முதலில் அவளின் நிபந்தனைக்கு செவி சாய்க்காத சோமசுந்தரம், மகளின் பிடிவாதம் அறிந்து, சில நிபந்தனைகளுடன் சரியென்றுவிட்டார்.

——————————–

“டேட், யாரு வந்திருக்காங்கனு பாருங்க!”

ஹாலிலிருந்து சிட்டவுட் வந்து பார்த்த சுந்தரம் அங்கு அமர்நாத்தை எதிர்பார்க்கவில்லை என்பதை அவரின் முகம் கண்ணாடி போல காட்டிக் கொடுத்துவிட, அதை உணர்ந்த அமர்நாத் “சார், நல்லாருக்கீங்களா?”, என அவர்கள் வீட்டில் வந்து… அவரையே நலம் விசாரித்தான்.

“அடடே அமர் வாங்க! நல்லாருக்கீங்களா? வீட்டில எல்லாரும் சௌக்கியமா? உங்க ஜாப் எல்லாம் எப்டி போகுது?

“இருக்கேன் சார், வீட்டுல எல்லாரும் நல்லாயிருக்காங்க சார்!”, இவ்வாறு இருவரும் பேசியபடி இருக்கும்போது எதிர்பாரா ஒரு வினாவை எழுப்பி, அமரை யோசிக்க வைத்திருந்தார்.

“தங்கைக்கு வரன் பாக்குறதா மௌனி சொன்னா, எதுவும் அமஞ்சுதா?”

‘இதைப்பற்றி இவர் எதுக்கு விசாரிக்கிறார்’ என எண்ணியவனாய், “ஒன்னும் அமைய மாட்டிங்குது சார், பாத்துட்டே தான் இருக்காங்க”

இருவரும் பேசிக்கொண்டிருக்க, அதற்குள் குளித்து பிங்க் நிற காட்டன் ஃபேப்ரிக் சல்வார்கமீஸ், பிரிண்டட் பேண்டில் ஹாலுக்கு வந்தவள்,

“டேட், அப்றம் ரெண்டு பேரும் கண்டினியூ பண்ணுங்க, இப்ப அமர் குளிச்சு ரெஃப்ரெஷ் ஆகட்டும், அதுக்குள்ள நீங்களும் கிளம்புங்க”, என்றவள் ஹாலில் இருந்த டிவியை உயிர்ப்பித்து பார்க்க ஆரம்பித்தாள்.

அரைமணி தியாலத்தில் இருவரும் கிளம்பி ஹாலுக்கு வர, மூவருமாக காலை உணவை அமைதியாக உண்டனர்.

பிறகு சோமசுந்தரம் தனது அலுவலகத்திற்கு கிளம்பும் முன், அமரை தனது அலுவலகத்திற்கு உடன் வருமாறு அழைக்க… மறுக்க இயலாமல் சரியென்று அவருடன் கிளம்பினான்.

காலை நேர இலகுவான போக்குவரத்திற்கு இடையில், நாற்பது நிமிடங்களில் அவரின் அலுவலக வளாகத்தினுள் சுந்தரத்தின் கார் நுழைந்தது.

அமரை அழைத்துக் கொண்டு அலுவலகத்தினுள் செல்லும்போது, பணியாளர்களின் காலை வணக்கங்களை இன்முகத்துடன் ஏற்றவாறு, அவரின் அறைக்குள் அழைத்துச் சென்று அமர வைத்தார்.

பதினைந்து நிமிடங்கள் காத்து இருக்குமாறு பணித்துவிட்டு, அவரது அறையில் இருந்து வெளிவந்தவர், சில முக்கியமான வேலைகளை செய்ய அலுவலர்களிடம் கூறினார்.

ஒரு மணி தியாலம் அவரை தொந்திரவு செய்ய வேண்டாமென அவரின் பெர்சனல் செக்ரட்டரியிடம் தெரிவித்தவர், அவரின் அறைக்குள் காத்திருக்கும் அமர்நாத்திடம் பேச வேண்டிய விடயங்களை யோசித்தவாறு, புன்னகை மாறாமல் அமரின் முன் வந்தமர்ந்தார்.

அதுவரை அவரின் மேசை மீது இருந்த சில பிஸினஸ் மேகசின்களை பார்த்துக் கொண்டிருந்தவன், அதை எடுத்த இடத்தில் வைத்தவாறு, சுந்தரத்தின் முகம் பார்த்திருந்தான்.

“அமர், இப்போ நான் உங்ககிட்ட கேட்கப்போற விடயத்துக்கு உங்களோட நேரடியான பதிலை எதிர்பார்க்குறேன், கேக்கலாமா?”

“என்ன சார் நீங்க, கேளுங்க என்னால முடிஞ்ச, தெரிந்த பதிலை நான் சொல்லுறேன்.  எதைப் பற்றி சார்?”

“மௌனிகா பத்தி உங்க அபிப்ராயம் என்ன?”, மிகவும் நிதானமாக அவரிடமிருந்து வந்த எதிர்பாரா வினாவிற்கு தனது மௌனத்தை விடையாக்கி, ஏனிந்த கேள்வி இப்போது என் எண்ணியவனாய் சுந்தரத்தின் முன் அமர்ந்திருந்தான்.

“….”

“உங்க காலேஜ்மேட் அப்டிங்கறத தாண்டி, உங்களுக்கிடையேயான உறவு என்ன?”

“….”

“ஏன் பேசாம இருக்கீங்க, சொல்லுங்க அமர்!”

“….”

“என்ன தம்பி! யோசிக்கிறதுக்கு என்ன இருக்கு இதுல?”

“சார், நான் எதிர்பார்க்காத கேள்விகள் நீங்க கேட்டதால பதில் சொல்லாம யோசிக்கிறேன்”

“அப்டியா! நீங்க யோசிக்கிற அளவிற்கு நான் எதுவும் கேட்டமாதிரி எனக்கு தெரியல!,  ஆனாலும் நீங்க சொல்றதால… வயிட் பண்ணுறேன். டென் மினிட்ஸ் போதுமில்ல…

டீ ஆர் காஃபி உங்களுக்கு எது சொல்ல…?”

“எனக்கு எதுவும் வேணாம் சார்… டென் மினிட்ஸ்லாம் அதிகம், இப்போவே சொல்றேன்… மௌனிகா என் காலேஜ்மேட்… அப்டிங்கறத தாண்டி நான் இதுவரை எதுவும் யோசிச்சதில்ல… உறவுன்னு சொல்ற அளவுக்கு எதுவும் இல்ல… தெரிஞ்ச பொண்ணு… அவ்வளவு தான்”

“எந்த உறவுமில்லாத… தெரிஞ்ச பொண்ணு, அவங்க வீட்டுக்கு கூப்பிட்டா உடனே போவீங்களா?”

அவரின் கேள்வியால் எழுந்த சங்கடத்தை புறம் தள்ளியவன், “சார்… அப்டியெல்லாம் போக மாட்டேன்… நாங்க பீஜி படிக்கும்போது நீங்க அவங்கள பாக்க காலேஜ் வரப்ப எல்லாம் உங்ககிட்ட பேசிருக்கறதால, தெரிஞ்சவங்க வீடுதான… சரி போகலாம்னு என்னை சமாதானம் செய்திருந்தேன்…

உங்ககிட்ட, நான் உங்க வீட்டுக்கு வரதா சொல்லிட்டதா மௌனிகா சொன்னதால… அறிமுகமானவங்க வீட்டிற்குதானன்னு வந்துட்டேன்… பட் உங்க வீட்டுக்குள்ள எண்டராகும் போது உங்க பார்வையிலேயே தெரிஞ்சுகிட்டேன்… என் வரவை நீங்க எதிர்பார்க்கலனு”

“வெல், அதைத் தாண்டி தோழி அப்படினு எதுவும் மௌனிகாவ பத்தி யோசிச்சதில்லயா?”

“நிச்சயமா தோழினு எல்லாம் எனக்கு சொல்லத் தெரியல, யுஜில அவங்ககூட நான் பேசினதே இல்ல, பிஜி போனதுக்கு பின் தான் அவங்ககூட எனக்கு பழக்கம்,  இதுவரை எங்க டிபார்ட்மெண்ட் ரிலேட்டடா, ஜாப் ரிலேட்டடா, ஃப்ரண்ட்ஸ் பற்றி பேசியிருக்கிறேனே தவிர… அவங்க பெர்சனல் பற்றி எதுவும் பேசினதில்ல…

அவங்க எங்க ஃபேமிலி பற்றி கேட்டா பதிலுக்கு உங்க டேடி எப்டி இருக்காங்கனு கேப்பேன்… அது ஒரு மனிதநேயத்துல மரியாதைக்காக கேக்குறது அவ்வளவு தான்… ஆனா என் கேரியர்ல இன்னிக்கு இந்தளவிற்கு வந்ததுக்கு அவங்க மேல நன்றியுணர்வு இருக்கு, அதனால் அவங்க கால்ஸ்ஸ பர்பஸா அவாய்ட் பண்ணதில்ல.”

“ம்”, அமரின் பதிலில் சுந்தரம் மௌனமாகியிருந்தார்.

“என்ன சார், இப்போ நீங்க யோசிக்கிறீங்க!”

“இல்ல… உங்ககிட்ட நான் ஸ்ட்ரெய்ட்டாவே கேக்குறேன்பா, என் பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?  நானே உங்க வீட்ல வந்து பேசுறேன்!”

“சார், என் தங்கைக்கு ரொம்ப நாளா பார்த்துட்டு இருக்காங்க… அவளுக்கு முடிஞ்ச பின்னாடி தான், நான் கல்யாணம் பண்ணிக்கறதா ஏற்கனவே வீட்டுல சொல்லிட்டேன்.

அப்டியே அவளுக்கு நல்ல வரன் வந்து கல்யாணம் முடிச்ச பிறகு, எங்க வீட்ல இந்த கல்யாணத்த ஒத்துக்கலனா நீங்க வயிட் பண்ணுனது வேஸ்ட் ஆகிரும். எங்க குடும்பத்துல இண்டர்கேஸ்ட் மேரேஜ் எல்லாம் ஒத்துக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம்…

அதனால மௌனிகாவுக்கு வேற அலையன்ஸ் பாக்குறது நல்லது சார், இன்னிக்கு மௌனிகாவை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு நம்பிக்கை வார்த்தை சொல்லிட்டு, என் குடும்பத்திற்காக அப்ப நான் பின்வாங்கிட்டா உங்க பொண்ணு வாழ்க்கை வீணாகிரும்”

“உங்கள பாத்து நான் தப்பா கணக்கு போட்டுட்டேன்… ம்ம்… , இந்த வீடு, ஆஃபீஸ் எல்லாம் பாத்துட்டு என் பொண்ணை மறுக்காம கல்யாணம் பண்ணிக்குவீங்கனு நினச்சேன்… பட் அத பொய்யாக்கிட்டிங்க…! இந்த காலத்திலயும் இப்டி ஒரு பிள்ளை!!! ரொம்ப ஆச்சரியமா இருக்கு, சரி தம்பி, உங்க காண்டாக்ட் நம்பர் சொல்லுங்க!”

‘நம்ம காண்டாக்ட் நம்பர் இவருக்கு எதற்கு?’ என யோசித்தாலும், அதைக் கேட்காமல், அவன் காண்டாக்ட் நம்பரை அவரிடம் கூறியிருந்தான்.

அவனது நம்பரை மொபைலில் பத்திரப்படுத்தியவர், “உங்க இந்த முடிவுல மாற்றம் வர வாய்ப்பு ஏதும் இருக்கா?”

“இருக்கற மாதிரி எனக்கு தோணலை சார்”

“சரி… என் பொண்ணுகிட்டதான் இனி நான் பேசணும்”

“ஒரு சின்ன கிளாரிஃபிகேசன் சார், கேக்கலாமா?”

“ம்… கேளுங்க”

“இப்ப நீங்க கேட்டது மௌனிகாவுக்கு தெரியுமா?”

“ஓ… எஸ், அவ சொன்னதால தான்பா நான் கேட்டேன்!, ஏன் கேக்குறீங்க…?”

“இல்ல… இது வரை அப்படி ஒரு ஐடியா இருக்கிற மாதிரி அவங்க எங்கிட்ட பேசினதில்ல… அதான் கேட்டேன் சார்”

“சரிபா… என் பொண்ணு உங்க பதிலுக்காக வீட்ல வயிட் பண்ணிட்டு இருக்கா, லன்ச்கு கிளம்புவோம், இன்னும் ஒரு விடயம், நீங்க இப்பொ இத பத்தி எதுவும் அவகிட்ட சொல்ல வேணாம், நான் பேசிக்கிறேன்”

“ஓகே சார்”, என்றவன் தீவிர யோசனைக்கு சென்றுவிட்டான்.   வரும் வழியில், சற்று நிதானமாக இருவரும் பேசிக் கொண்டதை நினைவு கூர்ந்தவன், யோசித்தபடியே வந்தான்.

அதிக போக்குவரத்தால் இரு ஒரு மணி தியாலத்தை விரயமாக்கி வீடு வந்து சேர்ந்திருந்தனர்.  ஆவலாக இருவரையும் எதிர்கொண்ட மௌனிகாவை வழமை போல இலகுவாக இருவரும் எதிர்கொண்டனர்.  இருவரின் முகத்தில் அவள் தேடிய பதில் கிடைக்காமல் போக பொறுமை இழந்திருந்தாள் பெண்.

மதிய உணவிற்கு பின், இருவரிடமும் விடைபெற்று கிளம்பிவிட்டான் அமர்நாத்.

அமர்நாத் சென்றவுடன், தந்தையை முற்றுகை இட்டிருந்தாள் மௌனிகா.  சற்று நேரம் அமைதியாக இருந்த சுந்தரம் இருவரும் பேசிக்கொண்டதை, அமரின் முடிவை மறைக்காமல் மகளிடம் பகிர்ந்துகொண்டார்.

இதை சற்றும் எதிர்பாரா மௌனிகா, அவளின் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.  இரண்டு முழு நாட்கள் அறையை விட்டு வெளிவராமல் யோசித்தவள், தனது தந்தை கூறியிருந்த நிபந்தனைகளை ஏற்க மறுத்து தனது பணியை மேற்கொள்ள கிளம்பிவிட்டாள்.

அமர்நாத் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லையெனில், அவர் தேர்ந்தெடுக்கும் நபரை மறுக்காமல் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற அவரின் நிபந்தனையை செயலிழக்கச் செய்துவிட்டு, அவள் மனம்போல பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.

மகளின் பிடிவாதம் அறிந்த சுந்தரம் ஆறு மாதங்கள் பொறுமை காத்தார்.  பிறகு அமரை தானாகவே தொடர்புகொண்டு பேசினார்.  அமரின் இருப்பிடம் வருவதாக கூறியவரை மறுத்து, அவனே அவரை சென்னையில் வந்து சந்திப்பதாக கூறினான்.

சுந்தரம் வீட்டிற்கு வர எவ்வளவு கட்டாயப்படுத்தியும், அமர் தன் பிடியை தளர்த்திக்கொள்ளாமல் வெளியில் எங்காவது சந்திக்கலாம் என கூறியிருந்தான்.  சுந்தரம், பொது இடங்களில் அதிக நேரம் குடும்ப விடயங்களை பேசுவது சிரமம், ஆகையால் அலுவலகத்திற்கு வருமாறு கூற, ஒரு மனதாக சம்மதித்து அலுவலகத்திற்கு வந்திருந்தான்.

“ஹலோ சார்!”

“வாப்பா அமர், உக்காரு”

“சொல்லுங்க சார், என்ன விடயமா என்ன வர சொன்னீங்க?”

“உங்களுக்கு தெரியாததில்ல… எல்லாம் மௌனிகா பற்றி தான்”

“அவங்களுக்கென்ன சார்!, அவங்க ஜாப்ல பிஸியாயிருக்காங்க”

இருவரின் நிபந்தனைகளைப் பற்றி கூறியவர், தனது நிபந்தனையை மறுத்து மகள் பணிக்கு கிளம்பியதையும், அதிலிருந்து தன்னுடன் முன்பு போல பேசுவதில்லை எனவும் கூறியவர், முன்பு போல அமருடன் பேசிக்கொள்கிறாளா மகள் என அமரிடம் தனது ஐயத்தினை தெளிவுபடுத்த வினாவை எழுப்பியிருந்தார், சுந்தரம்.

முன்பு போல பேச்சு இல்லையெனவும், மாதமொருமுறை அவர்களது பணி சார்ந்த விடயங்களை பற்றி விவாதித்ததாகவும் தெரிவித்தான், அமர்.

“தம்பி, உங்க தங்கைக்கு பேசி முடிச்சவுடனே சொல்லுங்க, நான் வீட்ல வந்து பேசுறேன்”

“சார், நான் ஏற்கனவே உங்ககிட்ட தெளிவா சொல்லிட்டேன், அதுக்கு மேல உங்க விருப்பம் சார்”

“தம்பி, உங்க வீட்டு பெரியவங்க கைல, காலுல விழுந்தாவது என் பொண்ணை உங்களுக்கு கல்யாணம் பண்ணிவைக்கிறதா முடிவு பண்ணிட்டேன்”

அவரின் நிலையை எண்ணி வருந்தியவன், மௌனிகாவைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்திருந்தான்.  அவளின் புற அமைப்பு அனைவரையும் ஒரு கனம் திரும்பி காணச் செய்யும்.  ஆனால், தான் ஏன் அவளின் கண்ணோட்டத்தில், அவளைக் காண முற்படவில்லை என யோசித்தான்.

பிறகு பணிக்கு திரும்பியவனின் ஓய்வு நேர சிந்தனையை மௌனிகா ஆக்ரமிக்க ஆரம்பித்திருந்தாள்.  ஆனால், அவளிடம் இது பற்றி மூச்சுவிடவில்லை.

error: Content is protected !!