UKK10
UKK10
உலாவரும் கனாக்கள் கண்ணிலே-10
குழந்தைகள் இருவரையும் பள்ளிக்கு கிளப்ப உமா எழுப்பிவிட்டிருந்தாள். இருவரும் அத்தை மாமாவை பார்த்த சந்தோசத்தில் அவர்களுடன் சிறிது நேரம் தங்களின் மகிழ்வைப் பறிமாறினர். சந்துருவின் வேலை அவனை வா வா என அழைக்க, அதற்கு மேல் இருப்பு கொள்ளவில்லை.
“அப்போ நான் கிளம்பறேன் மாமா, சாயங்காலம் இங்க வந்து ஜனதாவை நான் கூப்ட வரும்போது அர்ச்சனாவைப் பாத்துக்கறேன்”, என்றவாறு எழ
“தம்பி காலை ஆகாரம் சாப்பிட்டுட்டு போங்களேன்”, என்றவர், மனைவியிடம் ‘என்னம்மா ரெடியாகிருச்சா?’, என பார்வையால் கேட்க
“தம்பி எல்லாம் ரெடியாகிருக்கு, நீங்க சாப்பிட்டுட்டே கிளம்பலாம்”, என அன்பரசி மருமகனை உணவருந்த அழைத்தார். சந்துரு காலை ஆகாரம் பெரும்பாலும் உண்ணுவதில்லை எனக் கூறினான். ஆனாலும் பெரியவர்களின் இடைவிடாத வற்புறுத்தலால் உண்ண சம்மதித்தான்.
அர்ச்சனா அதுவரை எழவில்லை என்பதை அறிந்து பொறுமை இழந்த அமர், அர்ச்சனாவை எழுப்ப அவர்களின் அறை நோக்கி விரைந்தான்.
“அர்ச்சனா… நேரமாச்சு எழுந்துரு”
அர்ச்சனா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தமையால் முதலில் அமரின் அழைப்பு அவளுக்கு கேட்கவில்லை.
மீண்டும், “ஏய் அர்ச்சனா… விடிஞ்சு ரொம்ப நேரமாகுது… இன்னும் தூங்காம சீக்கிரம் எழுந்துரு”
“கொஞ்ச நேரம் படுத்துருக்கேனே”, என கண்களைத் திறவாமல் அர்ச்சனா பதில் சொல்ல
“உங்கண்ணன் உன்ன பாக்க வந்து ஒரு மணி நேரத்துக்கும் மேல ஆகப் போகுது”
“அதுக்குள்ளயா எங்க அண்ணன் வந்துருச்சு?”, அதுவரை படுக்கையில் படுத்து இருந்தவள் கணவனின் வார்த்தைகளைக் கேட்டதும் அவசரமாக எழுந்தவாறு கேட்க
“சொல்ல வேண்டியத சொல்லிட்டேன், அதுக்கு மேல நம்பறதும், நம்பாததும் உன்னிஷ்டம்”, என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்காமல் ஹாலுக்கு திரும்பிவிட்டான்.
**********************
மற்றவர்கள் அவரவர் பணியினை பார்க்க, சந்துருவோடு ஜனதாவையும் உண்ண அழைத்தனர், உமாவும், அன்பரசியும். ஜனதாவும் மறுக்காமல் கணவனுடன் அமர்ந்து காலை உணவை அண்ணன் மகள்களுடன் பேசியபடி உண்டாள்.
“ஜானு அத்த, நாங்க வர்ற வர நீங்க இங்க தான இருப்பீங்க?”, நிசி
“ஆமாண்டா, அத்த நீங்க வந்தவுடனே தான் வீட்டுக்கு போவேன்”
“உங்கள கவனிக்காம ஸ்கூலுக்கு நாங்க ரெண்டு பேரும் கிளம்பறோம்னு கோபம் எதுவுமில்லையே?”, நிகி
“அட ஆமாமில்ல, அத கேக்க மறந்துட்டேனே!?”, நிசி
குழந்தைகளின் பேச்சைக் கேட்ட, சந்துரு, ஜனதா இருவரும் சிரித்து விட்டனர்.
“ஒன்னும் கோபம் இல்லம்மா, நீங்க ரெண்டு பேரும் ஸ்கூலுக்கு போயிட்டு வாங்க, எங்களை உங்க அம்மாவும், பாட்டியும் கவனிச்சுக்குவாங்க”, ஜனதா.
பெரிய மனிதர்கள் போல இருவரும் பேசுவதைக் கேட்டு ஜனதா பழகியிருந்தாலும், இன்று ஏனோ அவளுக்கும் அவர்களின் நீண்ட நாளுக்குப் பின்னான பெரிய தன்மையிலான பேச்சுகள் மகிழ்வைத் தந்திருந்தது.
ஒருவழியாக இருவரையும் நேரத்திற்குள் கிளப்பி, பள்ளி வேனில் அனுப்பிவிட்டு திரும்பியிருந்தான் , பத்ரி.
*************************
உண்டபின் கிளம்பிய சந்துருவை வழி அனுப்ப வந்த ஜனதாவிடம்,
“சரி… நான் இப்போ தான சாப்பிட்டுருக்கேன், அதனால மதியம் சாப்பிட வர முடியாது, சாயங்காலம் வரேன்”, என மனைவியிடம் விடைபெற்று கிளம்பினான், சந்துரு.
சந்துருவின் விடைபெறல் முற்றுப்பெறும் முன் “வாங்கண்ணே… வாங்கண்ணி”, என அர்ச்சனா, சந்துருவையும், ஜனதாவையும் வரவேற்றிருந்தாள். அமரின் வார்த்தைகளைக் கேட்டு எழுந்து, காலைக்கடன்களை முடித்து ஹாலுக்கு வந்து வரவேற்ற அர்ச்சனாவை சற்றே கோபத்துடன் எதிர்கொண்டான், சந்துரு.
“நல்லா இருக்கீயா அர்ச்சனா?”, ஜனதா
“ம்…”, தலையாட்டினாள்.
தங்கையின் வரவேற்பில் மகிழ்ந்தாலும், அவளின் தாமதமான துயிலெழல் சந்துருவைக் கோபப்படுத்தியிருந்தது.
“ஏம்மா, பச்ச புள்ளைங்க எல்லாம் எழுந்து, கிளம்பி ஸ்கூலுக்கு போயிட்டாங்க, இது தான் குடும்ப பொண்ணு தூங்கி எந்திரிக்கிற நேரமா?”, என தனது கையில் இருந்த கடிகாரத்தினைப் பார்த்தான், சந்துரு.
தமையனின் ரௌத்திரத்தை எதிர்பாரா அர்ச்சனா திகைத்து நின்றாள். தமையன் அருகில் நின்றிருந்த ஜனதா அங்கிருந்து அகல, அதுவரை இருந்த இறுக்கம் சற்று தளர
“இ..ல்.ல.. ண்… ணே..”, என தயங்கியவள், கூற வந்த விடயத்தை விட்டிருந்தாள்.
“இது நல்லால்ல அர்ச்சனா”, குற்றம் சுமத்த வந்தவளைக் குற்றவாளியாக்கியிருந்தான்.
“…”
“யாரு வீட்லயாவது இப்டி நடக்குதா?”, தமையனைக் கேட்க எண்ணியவளை, கேள்வியால் நிலை மறக்கச் செய்திருந்தான்.
“…”
“உன்னச் சொல்லிக் குத்தமில்ல, எல்லாம் அம்மா கொடுத்த இடமும், வளர்த்த விதமுந்தான்”
“….”
“சீக்கிரம் உன்னைய மாத்திக்க… இல்லனா ரொம்ப கஷ்டம்மா”
“சரிண்ணே”
“சின்ன புள்ள இல்லம்மா இன்னும்… எதுக்கு போன் போட்டிருந்த எனக்கு?”
சொல்லுவோமா, வேண்டாமா என யோசித்தவள் “கொரியர் ஒன்னு வந்துச்சு”
“யாருக்கிட்ட இருந்து?”
“யாருன்னு தெரியல!”
“தெரியாதவங்க அனுப்பினத எதுக்கு வாங்குன?”
“நான் வாங்கல, வீட்டுல ஏற்கனவே வாங்கி வச்சிருந்தாங்க!”
“சரி… இன்னும் பிரிக்கலல்ல”
“பிரிச்சாச்சுண்ணே…”
“உனக்கு தெரியாதவங்க அனுப்பினத, பிரிக்கும் முன்ன வீட்ல இருக்கிற பெரியவங்ககிட்ட சொல்லி கொரியரை நீ திருப்பி அனுப்பிருக்கணும், ஏன் பிரிச்ச?”
“இல்லன்னே… எனக்கு தான் கொரியர் வந்துச்சு அதான் பிரிச்சேன்”
“தெரியாதவங்க அனுப்பினா எப்டிமா பிரிக்கலாம்?”
“தெரியாதவங்க இல்ல… அது அவரு கூட படிச்ச பொண்ணாம்”
“இப்போ யாருன்னு தெரிஞ்சிருச்சாக்கும்!”
“விசாரிச்சு தெரிஞ்சுகிட்டேன், இவங்க நம்மள ஏமாத்திட்டாங்கண்ணே”
“எப்டிமா அப்டி சொல்ற?”
“அதனால, கேக்கறதுக்கு எல்லாம் இடக்கு மடக்கா பதில் சொல்றாங்க”
“நீ என்ன கேட்ட?”
“…”, தான் அமரைக் கேட்டதெல்லாம் யோசித்தவாறு நின்றவள், தமையனிடம் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எதுவும் கணவனிடம் கேட்கவில்லை என ஆழ்மனம் கூற, அதை வெளிக்கூறாமல் நின்றிருக்க
“என்னனு சொல்லுமா”
மௌனிகாவைப் பற்றி அமரின் வாயிலாக கேட்டறிந்த விடயங்களை தமையனிடம் கூறினாள், அர்ச்சனா. தங்கை கூறுவதை அமைதியாகக் கேட்டறிந்த சந்துரு,
“அப்ப மாப்பிள்ளைக்கு தெரிஞ்ச பொண்ணு மாப்பிள்ளை பேருக்கு அனுப்பாம ஏன் உன் பேருக்கு அனுப்பியிருக்குனு யோசிச்சியா?”
“…”, இல்லையென தலையாட்டிவளுக்கு அதற்கு மேல் ஒன்றும் பேச இயலவில்லை.
“மாப்பிள்ளை, பொண்ணுனு கல்யாண வயசில இருக்கிறவங்கள… பிரியப்பட்டவங்க அவங்க பிள்ளைகளுக்கு, பாக்கிறது, விசாரிக்கறது எல்லா இயல்பும்மா
அந்த மாதிரிதான் அமரைப் பற்றித் தெரிஞ்ச மௌனிகாவோட அப்பா கல்யாணத்துக்கு கேட்டிருக்கார்”
இது புதிய செய்தியாக அர்ச்சனாவிற்கு இருந்தது.
“அப்றம் ஏன் இவரு அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கல?”, அர்ச்சனா
“அமருக்கு அவங்க பெற்றவர்கள் சொல்லும் பெண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்கிற தன்னுடைய விருப்பத்தை மௌனிகா அப்பாகிட்ட, அவரு கேட்டவுடனே சொல்லிட்டாரு, அதான் அமர் வீட்ல உன்னைப் பார்த்ததும் சரின்னு சொல்லிட்டார்”
“அப்புறம் ஏன் கொரியர் அனுப்பியிருக்கு அந்த பொண்ணு”
“அந்த பொண்ணுக்கு அப்டி ஒரு விருப்பம் இருந்திருக்கலாம். கல்யாணம் பேசினவுடனே, எல்லாம் விசாரிச்சு… அப்புறம் தான் கல்யாணம் பண்ணிருக்கோம். அர்ச்சனா… இங்க… உன்னை நல்லா தான பாத்துக்கறாங்க? நீ சந்தோசமா தான இருக்க?”
“ஆமாம்”, என்ற தங்கையின் தலையசைப்பில் நிம்மதியடைந்தவன்
“இது வரை பெண்கள் விசயத்துல எந்த கெட்ட பேரும் அமருக்கு கிடையாதும்மா, நல்ல குடும்பம்… பலமுறை விசாரிச்சு தான் உனக்கு கல்யாண ஏற்பாடு பண்ணோம்.
அதனால தேவையில்லாம மனச குழப்பாத, அப்டி அமருக்கு அந்த பொண்ணை பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கங்கனு உங்க கல்யாணத்துக்கு முன்னாடியே நானே அமருக்கிட்ட சொன்னேன்”
“இத நீங்க ஏன் எங்கிட்ட மொதல்லயே சொல்லலண்ணே?, அதுக்கு அவரு என்ன சொன்னாரு?!”
“சொல்லியிருந்தா என்னம்மா பண்ணியிருப்ப?”
“இல்ல நான் தெரிஞ்சுக்க தான் கேட்டேன்”
“கல்யாணத்துக்கு முன்ன பசங்க எப்டியிருக்காங்கங்கறது பொண்ண பெத்தவங்க, கூட பிறந்தவங்க விசாரிச்சு, பிடிச்சிருந்தா தானம்மா கல்யாணம் பண்ணுறோம்.
சந்தேகம் இருந்திருந்தா எப்டி உன்ன அப்டி ஒரு மோசமான ஆளுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுப்போம்?
அவருக்கு உன்ன கல்யாணம் பண்ண முழு சம்மதம்னு அவரு வாயால சொல்லிக் கேட்டபின்னே தான், நான் முழு மனசோட உங்க கல்யாண வேலய பாக்க ஆரம்பிச்சேன்”
“…”, பேசாமல் தமையனின் வார்த்தைகளைக் கேட்டிருந்தாள்.
“இனி அவரைப் பத்தி தெரிஞ்சுக்கோ, ஒருத்தருகொருத்தர் அனுசரனையா இருக்கணும், அர்ச்சனா”
“சரிண்ணே”
“எனக்கு நேரமாகுது, சாயங்காலம் உங்கண்ணிய கூட்டிட்டு போக வருவேன், அப்ப வந்து பேசுறேன், நேரமாச்சு கிளம்பறேன்”
“ம்… சரிண்ணே”, என தலையாட்டியவள், சந்துரு கிளம்பியதும்… அது வரை பேச்சின் சுவாரசியத்தில் இருந்தவளுக்கு பசியுணர்வு தோன்ற அடுக்களைக்குள் யாரும் அழையாமல் வந்திருந்தாள் அர்ச்சனா. அங்கு ஜனதாவுடன் பேசியபடி உமாவும், அன்பரசியும் ஆளுக்கொரு வேலையாக இருந்தனர்.
“நேத்து சாப்பிடாம படுத்துட்டியா, அர்ச்சனா… உனக்கு செய்து வச்ச இட்லி அப்டியே இருந்ததே ஹாட்பாக்ஸ்ல!”, உமா
“ஆமாக்கா, நேத்து வயிறு சரியில்ல அதான்”, கொரியர் செய்தி இன்று காலை, வீட்டின் தலைப்புச் செய்தியானது தெரியாமல், தனக்கு வராத நோயை வந்ததாக கூறினாள், அர்ச்சனா
“ஏம்மா முடியலனா, நேத்து வந்தவுடனே சொல்லிருக்கலாம்ல, டாக்டர்கிட்ட போயிட்டு வந்திருக்கலாம்”, அன்பரசி
“அந்தளவுக்கு இல்ல அத்த, மதிய வேளை சாப்பிட்டது ஒத்துக்கல போல, அதான் ஒரு வேளை சாப்பிடாம இருந்தா சரியாகிரும்னு படுத்திட்டேன்”
“அதான், நாங்களும் நீ ஊருக்கு போயிட்டு வந்த அலச்சல்ல… சோர்வா இருப்பனு தாம்மா தொந்திரவு பண்ணல”, அன்பரசி
தட்டில் காலை சிற்றுண்டியை எடுத்தவளை, “சின்ன அண்ணனையும் சாப்பிடக் கூப்பிடு அர்ச்சனா”,என ஜனதா கூற
“அவங்க எங்க போனாங்கனு தெரியலயே”, என்றவாறு அவளுக்கு வேண்டிய காலை உணவைத் தட்டில் எடுத்துக் கொண்டு உணவு மேசையை நோக்கிச் சென்றாள். ஜனதா அமரை தேடி அழைத்து வருவதற்குள் சாப்பிட ஆரம்பித்திருந்தாள் அர்ச்சனா.
“அர்ச்சனா சாப்பிடுதுண்ணே, நீங்களும் சாப்பிடுங்க வாங்க” என கொல்லைப்புறம் கிருஷ்ணனுடன் நின்று பேசிக்கொண்டிருந்த அமரை அழைத்தாள், ஜனதா.
“பசிச்சா போயி சாப்பிடு அமரு, அப்றம் பேசிக்கலாம்”, கிருஷ்ணன்.
“இல்லப்பா நான் அப்புறமா போயி சாப்பிட்டுக்குறேன்”, என்று தந்தையிடம் கூறியவன், “அவளுக்கு பசிச்சா சாப்பிடட்டும்மா, நான் நம்ம தலைவா கூட சாப்பிட்டுக்கறேன்”, என தங்கையை நோக்கிக் கூறினான் அமர்.
“சரிண்ணே”, என்றவள் சாப்பாட்டு மேசை இருந்த அறைக்கு வருவதற்குள் உண்டு முடித்திருந்தாள், அர்ச்சனா.
கொரியர் பற்றி அறிந்திருந்த ஜனதா, தன் சகோதரனுடனான மனக்கசப்பால் அர்ச்சனா இன்று தனித்து உண்கிறாளா? இல்லை எப்பொழுதும் அப்படி தானா? என யோசித்தபடியே, தாயை நோக்கிச் சென்றாள்.
ஆண்களுக்கு வேண்டிய பதார்த்தங்களை அவர்கள் வேண்டும் அளவு பரிமாறி உண்ணச் செய்துவிட்டே, பிறகு வீட்டில் இருக்கும் பெண்கள் உணவு எடுத்துக் கொள்ளும் வழக்கத்தைக் கடைபிடிப்பார், அன்பரசி.
வீட்டில் நன்றாக கவனிக்கும் பெண்கள் இருந்தால், ஆண்கள் பெரும்பாலும் வெளி இடங்களில் உண்ணுவதை தவிர்த்து விடுவார்கள், அதனால் அவர்களின் ஆரோக்யம் மேம்படும் என அதற்கான காரணத்தையும் கூறுவார், அன்பரசி.
சிறு குழந்தைகளுக்கு வேண்டிய சிறப்பு கவனிப்பு, பிறகு வேலை முடிந்து வரும் ஆண்களுக்கு வேண்டியவற்றைக் கவனிப்பார். அதன் பிறகே வீட்டில் இருக்கும் பெண்கள் உண்ணும் பழக்கத்தை வழக்கமாக்கியிருந்தார்.
படிக்கும் கால கட்டங்களில், ஆண்களுடன், ஜனதாவையும் உண்ணச் செய்து பள்ளி, கல்லூரிக்கு அனுப்பிவிடுவார். விடுமுறை நாட்களில் அனைவரும் இருக்கும்போது முதலில் பெண்கள் பரிமாற ஆண்களும், பிறகு வீட்டு ஆண்கள் பரிமாற பெண்களும் உண்ணுவது அவர்களின் வீட்டுப் பழக்கம்.
பௌர்ணமி நாட்களில், இரவு உணவை மாடிக்கு எடுத்துச் சென்று அனைவரும் ஒருவருகொருவர் பரிமாறி, பேசியபடி உண்டு மகிழ்வர்.
உமா, பத்ரிநாத் இருவரும் திருமணம் முடிந்து வந்த புதிதில், ஜனதா வீட்டில் இருந்ததால் சில விடயங்களைக் கவனித்திருக்கிறாள். உமா, பத்ரியை விட்டு விட்டு… பத்ரி உண்ணும் முன்பாக உண்ணமாட்டாள். இருவரும் இணைந்து உண்ணுவார்கள், இல்லையெனில் உமா பரிமாற பத்ரி உண்ணுவான்.
ஆனால், வந்த ஒரு சில நாட்களில் அர்ச்சனாவைக் கவனித்த ஜனதாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. அர்ச்சனா அமரின் வருகையை பற்றி யோசிக்காமல், பசிக்கும் போது உண்டுவிட்டு, பிறகு அமர் உண்டானா? இல்லையா? என்பதையும் பொருட்படுத்தாமல் அறைக்குள் அடைக்கலமாவதைக் கவனித்திருந்தாள்.
தனது தாயார் கவனித்துக் கொள்வதால், அர்ச்சனா அமரைக் கவனத்தில் கொள்வதில்லையோ என தாயிடமும் கேட்டறிந்தாள், ஜனதா.
ஜனதாவிற்குத் தோன்றிய அனைத்தும், அன்பரசிக்கு, தோன்றியிருந்தது. பல முறை அமருக்கு பரிமாற அர்ச்சனாவை அழைத்தும், அவள் வராமல் போகவே, அன்பரசி இளைய மகனுக்கு கவனித்து பரிமாறுவார்.
ஜனதா தனது கல்லூரி கல்விக்காக விடுதியில் தங்கிப்படித்த காலங்களில், அன்பரசி வீட்டில் இல்லாத நாட்களில் மட்டுமே, ஆண்கள் அடுக்களைக்குள் சென்று தனக்கு வேண்டியதை எடுத்து உண்டிருந்தார்கள்.
மற்ற நாள்களில் அன்பரசியே கவனித்துச் செய்வார். உமா திருமணமாகி வந்தபின்பு அன்பரசிக்கு சற்று வேலைப்பளு குறைந்திருந்தது. ஆனாலும் அவரால் இயன்ற உதவிகளை, வேலைகளை எப்பொழுதும் போல பார்த்துவிடுவார்.
காலை உணவுக்காக வந்தமர்ந்த அமரைக் கண்டவுடன், அர்ச்சனாவை அழைத்து பரிமாறச் சொன்னாள், ஜனதா. காலையில் தாமத துயிலெழலுக்கு அண்ணன் செய்த அர்ச்சனைகளை நினைத்தவள், மேற்கொண்டு வார்த்தைகளை வளர்க்காமல் அமருக்கு பரிமாறினாள்.
அமருக்கு அர்ச்சனாவின் பரிமாறல் ஆச்சர்யம் தந்தாலும் முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக உண்டு எழுந்தான்.
*******************************
அன்பரசியும் யாரும் இல்லாத நேரங்களில், இளைய மருமகளை அழைத்து, அமருக்கு பிடித்த பதார்த்தங்கள் பற்றி கூறினார். மேலும், அந்த பதார்த்தங்களை செய்யும் போது, அதனைச் செய்யும் முறைகளையும் எடுத்துக்கூறினார். வலுக்கட்டாயமாக அழைத்தாலே அன்றி அவளாக முன்வந்து எதையும் கற்றுக்கொள்ள எண்ணவில்லை என்பதும் மனதில் வருத்தத்தை தந்திருந்தது, அன்பரசிக்கு.
இதற்கிடையில், ஒரிசாவிற்கு கிளம்பும் நாளும் வர, அர்ச்சனாவுடன் அமர் தனது பணியின் நிமித்தமாகக் கிளம்பியிருந்தான்.
கொரியர் நிகழ்விற்குப் பின் அர்ச்சனாவின் கேள்விகளுக்கான பதிலைத் தருவதுடன், யாரோ போல இருக்கும், அமர் அர்ச்சனாவிற்கு புதியவன். இருந்தாலும் யாரிடமும் அமரைப் பற்றி கூற இயலவில்லை. தனிக்குடும்பம், அர்ச்சனாவிற்கு விருப்பப்பட்ட ஒன்றாக இருந்தது. அமரின் பாராமுகம் வருத்தத்தைத் தந்திருந்தாலும், அவளாகச் சென்று பேச அவளின் இயல்பு தடையாக இருந்தது..
ஆனால், தனது வீம்பால் தான் அமர் அவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதை வசமாக மறந்திருந்தாள், பெண். தன்முனைப்பு கணவனிடம் வலியச் செல்ல விடவில்லை. ஆகையால், விலகல் வலி தந்தாலும், கணவனின் வாலிப தேவைகளை தீர்க்கும் பொருட்டு, கணவன் தன்னை நாடி வரும் நாளுக்காக காத்திருந்தாள்.
இரண்டாவது தனிமைப் பயணம், அர்ச்சனாவிற்கு சற்று பின்னடைவுடன் தொடங்கியது. வீட்டிலுள்ளவர்களின் முன்பு கலகலவென எந்த வேறுபாடுமின்றி பேசும் அமர், அறைக்குள் வந்தவுடன், நத்தை போல இருந்தது, வருத்தத்தைத் தந்தது. ஆனாலும், அதைப் போக்க முனையவில்லை, அர்ச்சனா.
ஒரிசா சென்ற பிறகு கட்டாயம் மாறுவான் தன் மணாளன் என்ற மனக்கோட்டையுடன், கணவனுடன் கிளம்பி இருந்தாள், அர்ச்சனா.
**************************
மகளின் மனக்குமுறல்களை எதுவும் அறியாத சுசீலா மலையளவு மகிழ்வில் திளைத்திருந்தார். மகளை பயணம் அனுப்ப வந்திருந்தவரின் செயல்களில் இருந்த வித்தியாசத்தினை அமரின் வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் உணர்ந்திருந்தாலும், யாரும் அதை ஒரு பொருட்டாக எண்ணவில்லை.
வீட்டிற்கு அனைவரும் திரும்பியிருக்க, செழியன், சுசீலாவிடம் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
“நீ ஊருப்பக்கமே போகாம இங்கயே இருக்க… எப்போ போற?”
“அங்க போயி நான் தனியா என்ன பண்ண?”
“வீடு பூட்டியே கிடக்கக் கூடாதுன்னு நீ தான் வாரா வாரம் ஊருக்கு ஓடுவ!”
“பக்கத்துல சாவி குடுத்துட்டு வந்திருக்கேன், தினம் பொழுது போனா விளக்கு போட்டு, அப்றம் அணைச்சு வப்பாங்க”
“ஆடு, கோழியெல்லாம் நின்னுச்சு!”
“அதல்லாம் கல்யாணத்துக்கு முன்னயே வித்துட்டேன்”
“எங்கிட்ட சொல்லவே இல்ல”
“என்னத்த சொல்ல நானு, நீங்களும், சேகரும் ஒரு நல்ல நாளு, பெரிய நாளுக்கு கூட ஊருப்பக்கமே வரது இல்ல, நான் ஒருத்தி மட்டும் அங்க இருந்து என்ன செய்ய? அதான் எல்லாம் வித்துட்டு இங்கயே வந்துட்டேன்”
“வீடாவது கிடக்கா, இல்ல அதயும் சொல்லாம் வித்துட்டியா?”, என சிரித்தபடியே செழியன் கேட்க
“அத எப்டி நான் விக்க முடியும்?, நல்லா தான் கேக்குறீங்க!”
“சரி, இப்ப கோவில் விசேசம் வருமில்ல, அப்பவாது ஊருக்கு போவியா மாட்டியா?”
“அதுக்கெப்படி போகாம இருக்க முடியும், அப்ப நாலு நாள் அங்க போயி இருந்துட்டுத் தான் வரணும்”
“சேகரு கல்யாணம் முடிஞ்சு குடும்பத்தோட அங்க வரதா நேர்த்தி இருக்குல்ல?”
“ஆமா, முன்னாடியே அவங்கிட்ட சொல்லி வைக்கணும், இல்லனா வேலனு வரமாட்டான்”
“காப்பு கட்டுனவுடனே சொல்லு அவங்கிட்ட”
“ஊருல இருந்து போனு போடுவாங்க”, என வீட்டுக்கதை, ஊர்க்கதைகள் பேசியபடி இருவரும் இருக்க, சந்துருவும், ஜனதாவும் அவளின் வேலை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.
“என்ன ஜனதா, அடுத்த மாசத்துல இருந்து நம்ம கடைக்கு வரேனு சொன்ன, வரியா?”
“ஆமாங்க, இன்னும் பத்து நாள் இருக்கில்ல”
“அதுக்கு முன்ன ஒரு நாள் வந்து பாரு, உனக்கு எல்லாம் வசதியா இருக்கானு”
“என்னைக்கு வர, நீங்களே சொல்லுங்க”
“உன்னிஷ்டம், எப்ப பாக்கணும்னாலும் போயி பாரு?”
“அப்ப நீங்க என்ன அங்க கூட்டிட்டு போக மாட்டீங்களா?”
“நாளைக்கு கொஞ்சம் வெளி வேல இருக்கு, நாளை மறுநாள்னா கூட்டிட்டு போறேன்”
“ம்… சரிங்க, அப்றம் கிராமத்துல ஏதோ கோவில் விசேஷத்துக்கு போகணும்னு அத்த சொல்லிட்டு இருந்தாங்க, அது எப்பனு கேட்டுக்கங்க”
“அம்மாவுக்கு வேலயில்ல, மொதல்ல அவங்க அங்க போகட்டும், விசேஷம் அன்னிக்கு மட்டும் காலைல நாம ரெண்டு பேரும் போயிட்டு வரலாம், நான் பேசிக்கிறேன் அம்மாகிட்ட, இத பத்தி நீ எதுவும் சொல்லாத”
“சரிங்க…”
“ஏன் ஜனதா… உன்ன கல்யாணம் முடிஞ்சு எங்கயும் வெளியூறுக்கு கூட்டிட்டு போகலனு வருத்தமா இருக்கா?”
“அப்டியெல்லாம் இல்லங்க, உங்களால எப்போ முடியுதோ அப்ப கூட்டிட்டு போங்க, முடியலனா நீங்களும் என்ன செய்வீங்க”
“கொஞ்ச நாள் பொறுத்துக்கோ, கண்டிப்பா எங்காவது போயிட்டு வரலாம், இப்போ தான் மிரர் டிசைன் வேல ஆரம்பிச்சு இருக்கோம், அது செட்டாயிட்டா… நாம போயிட்டு வரலாம். அது வரை இங்கிருந்து எங்கயும் என்னால நகர முடியாது”
“சரி மெதுவா போவோம். அப்றம் இன்னொரு விசயம் உங்ககிட்ட கேக்கணும்னு நினச்சேன்”
ஆர்வமாக மனைவியின் புறமாக திரும்பியவன், “என்ன கேக்கப்போற எங்கிட்ட!”
“எங்க வீட்ல இருக்குற ஸ்கூட்டிய இங்க எடுத்துட்டு வந்துட்டா அப்றம் டெய்லி உங்கள எதிர்பார்த்துட்டு இருக்காம வெளியே நானே போயிட்டு வந்திருவேன், இல்லைனா உங்கள தொந்திரவு பண்ற மாதிரி இருக்கு, வண்டிய அம்மாகிட்ட சொல்லி பத்ரி அண்ணன கொண்டு வந்து விடச் சொல்லவா?”
“இல்ல அங்க இருந்து எடுத்துட்டு வரச் சொல்ல வேணாம், இன்னும் ரெண்டு மாசம் நானே உன்னை எங்கன்னாலும் கூட்டிட்டு போயி விட்டுட்டு கூட்டிட்டு வருவேன், அப்றம் நாம லோன்ல வண்டி வாங்குவோம் உனக்கு”
“ஏன்?…. அம்மா வீட்ல என் வண்டி சும்மா தான இருக்கு, அத தான் கொண்டு வந்து தர சொல்லப் போறேன். அதுக்கெதுக்கு புது வண்டி வாங்கணும்?”
“இல்ல அது நீ அங்க போனா யூஸ் பண்ணு, இங்க யூஸ் பண்ண நான் தான் உனக்கு வண்டி வாங்கித் தருவேன்”
“சரி… எல்லாம் உங்க இஷ்டம்”
“எல்லாம் என் இஷ்டமா? அப்ப என் இஷ்டத்தை எல்லாம் சொன்னா அத மறுக்காம செய்வியா?”
“அது நீங்க சொல்லப்போற விசயத்தைப் பொறுத்து”
“வர வர தெளிவா ஆகிட்ட”
“எல்லாம் உங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டதுதான்”, என்றாள் சிரித்தபடி
சிரித்தபடி இருந்த மனைவியை தனது அணைப்பிற்குள் கொண்டு வந்தவன், “உனக்குனு எதுவுமே எங்கிட்ட ஏன் கேக்க மாட்டிங்கற”, கணவனின் குரலில் இருந்த வருத்தம், ஜனதாவை வருத்தம் கொள்ளச் செய்திருந்தது.
“எங்கிட்ட எதுவும் இல்லனா கண்டிப்பா உங்ககிட்ட தான இனி கேப்பேன்?”, வருத்தம் போக்க வார்த்தைகளால் முனைந்திருந்தாள்.
“இப்ப கூட உங்க அம்மாகிட்ட தான கேக்கணும்னு சொன்ன!”, தன்னை மனைவி கருத்தில் கொள்ளாததை, அலட்சியப் படுத்திவிட்டதாக எண்ணி ஆணவன் மனது அரற்றியது.
“புதுசாவா வாங்கி கேட்டேன் எங்கம்மாகிட்ட…? இருக்குறத எடுத்துட்டு வரத்தான… அம்மாகிட்ட சொல்லலாமானு கேட்டேன்”, நியாயம் பேசினாள்.
“இனி எதுனாலும் எங்கிட்ட மட்டும் தான் கேக்கணும், என்ன சரியா?”, உரிமைப் போராட்டம் துவங்கியிருந்தான்.
கணவனின் குரலில் இருந்த செய்தி ஜனதாவிற்கு புரிய, இனி இது போன்ற தவறைச் செய்யக் கூடாது என நினைத்தவள், “ம்… இனி எதுனாலும் உங்ககிட்ட மட்டும் கேக்கிறேன் போதுமா?”, என்றபடி அவனின் அணைப்பிற்குள் தன்னை ஐக்கியப்படுத்தியிருந்தாள்.
“அன்னைக்கு உங்க வீட்ல இருந்து ஒரு சாரி வாங்கிட்டு வந்தல்ல”, விடாமல் வினா எழுப்பினான்.
“ம்… அது அர்ச்சனாவுக்கு… அண்ணன் வாங்கும் போது, எனக்கும் வாங்குனாங்களாம். அதத்தான் அம்மா எனக்கு குடுத்தாங்க”
“இனி உங்க அண்ணங்ககிட்டல்லாம் எதுவும் கேக்காத?”
“ஏன்? அப்ப அர்ச்சனாவுக்கு நீங்க எதுவும் இனி வாங்கித் தர மாட்டிங்களா?”
“அதுக்கு நான் செய்யாம வேற யார் செய்வா? ஆனா நீ உங்கண்ணங்ககிட்ட கேக்காத”
“இது எந்த ஊரு நியாயம்? நீங்க உங்க தங்கைக்கு வாங்கிக் கொடுப்பீங்க, ஆனா நான் எங்கண்ணங்ககிட்ட வாங்கிக்க கூடாதா?
நானா போயி எனக்கு எதுவும் வேணுமின்னு கேக்கமாட்டேன், ஆனா அவங்க பிரியமா வாங்கிக் கொடுத்தா வாங்கிப்பேன், அதுக்கு நீங்க ஒன்னும் சொல்லக் கூடாது, என்ன சரியா?”, குரலில் தனது ஸ்திர தன்மையை வெளிக்காட்டியிருந்தாள் ஜனதா.
“ம்…”, என ஒரு மனதாக சம்மதித்திருந்தான். அவனின் சம்மதத்தை அடுத்து வந்த ஒவ்வொரு அவனின் செயல்களிலும் உணர்ந்தவள், கணவனின் அன்பில் திளைத்திருந்தாள்.
*******************************************
வானிலே… நிலா… உற்சவம்; தேனிலா… உலாவரும் கனா… உற்சவம்
*******************************************