உலாவரும் கனாக்கள் கண்ணிலே-13

          மனைவியின் பேச்சுகள் உண்டாக்கிய வேதனை உணர்வால் பசி மறைக்கப்பட்ட நிலையில் வீட்டிலிருந்து கோபத்துடன் அலுவலகம் வந்தவன், அடுத்த ஷிப்டிற்கான பணிக்கு கிளம்பியிருந்தான்.  பெரும்பாலும் ஒரு நாளைக்கு இரு சைட்கள் மட்டுமே சென்று பார்ப்பான், அமர்.

சைட்டிற்கு என கிளம்பாத போதும், வீட்டில் நடந்த விடயங்களின் தாக்குதலில் இருந்து தன்னை மீட்க ஜீப்பில் ஏறி அமர்ந்தவன், வண்டி கிளம்பியதும் கண்களை மூடி அமர்ந்த நிலையில் வந்தான்.

டிரைவர் யார் வந்தாலும், அவர்களுடன் கலகலப்பாக பேசியபடி வருபவன் இன்று அமைதியாக இருப்பதும், மிகவும் களைப்பான தோற்றத்துடன் காட்சியளித்ததும் மனதை உறுத்த, அடுத்த நாற்பது நிமிடத்தில் பொட்டங்கி அருகிலுள்ள டவுனில் மிகச் சிறந்த உணவகத்தின் முன் வண்டியை நிப்பாட்டி இருந்தான் டிரைவர்.  சைட்டிற்கு செல்லாமல் வண்டி நின்றவுடன் கண்களைத் திறந்து பார்த்த அமர்,

“என்னப்பா வண்டிய இங்க நிப்பாட்டிட்ட?  சாப்பிடப் போகணுமா?”

“ஆமாம் சார், உங்களுக்கு சாப்பிடணும்னா போயி சாப்பிட்டுட்டு வாங்க.. நான் வயிட் பண்றேன்”

“ஓஹ்… எனக்காக தான் வண்டிய நிப்பாட்டுனியா… கிளம்பு சைட்டுக்கு போகலாம்”

“பாத்தா ரொம்ப டையர்டா இருக்கீங்க ஜீ… சைட்டு பக்கம் போனபின்ன… பசிச்சாலும் அங்க சாப்பிட எதுவும் கிடைக்காது, அதனால் லைட்டாவாவது எதாவது சாப்பிடுங்க, இல்லனா துங்காபூரி (ஒடிசாவின் பிரபலமான உணவான மிகப்பெரிய அளவிலான பூரி, பாலியாத்ரா விழாவின் சிறப்பு உணவு இது) ஒரு பார்சல் வாங்கிக்கங்க”

“எதாவது பேக்கரி இருந்தா ஸ்நாக்ஸ் எதாவது வாங்கிக்கிறேன், பசிச்சா அத சாப்பிட்டுகலாம்”, என்றவன் அதே போல பேக்கரி ஒன்றின் அருகில் வண்டியை நிறுத்தச் செய்து தேவையானவற்றை வாங்கிக் கொண்டு கிளம்பி சைட்டை நோக்கிச் சென்றனர்.

எதையும் போட்டுக் குழப்பாமல், பணியில் கவனமாக இருந்துவிட்டு மாலை ஆறு மணிக்கு சைட்டிலிருந்து கிளம்பினான் அமர்.  அதுவரை மனைவியிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை என்பதையும் மனம் யோசித்தது.

கணவனின் யாசிப்பு தெரியாமல் கனப் பொழுதையும் வீணாக்காமல் அலைபேசியுடன் கழித்தாள்  அர்ச்சனா. வண்டியில் வரும்பொழுது, ஜனதா அலைபேசியில் அமரை அழைத்திருந்தாள்.

“என்னாடாம்மா நல்லாருக்கியா?”

“எங்கண்ண இருக்கீங்க இப்போ?”

“சைட்ல இருந்து ரிடர்ன் ஆகிட்டு இருக்கேண்டா”

“வாய்ஸ் ரொம்ப டல்லாருக்கே”

“ம்.. அங்க வீட்ல எல்லாரும் நல்லாருக்காங்களா?”

“நல்லா இருக்காங்கண்ணா, மதியம் என்ன சாப்டீங்க?”

“ம்…”, எதிர்பாரா கேள்வியினால் சற்று நேரம் யோசித்தவன், “புளிக்குழம்பு வச்சு கோஸ் பொரியல் மா”

“நீங்க சாப்டமாதிரி தெரியல எனக்கு, வேற யாரோ சாப்டத ஞாபகப்படுத்தி சொல்ற மாதிரி சொல்றீங்கண்ணா”

“இல்லமா… சைட்ல கொஞ்சம் அதிகமா வேலனால மறந்துட்டேண்டா, அதான் யோசிச்சு சொன்னேன்”

“வீட்டுக்கு போக எவ்வளவு நேரமாகும்ணா”

“இன்னும் ஒன் அவர்ல வீட்டுல இருப்பேண்டா”

“சரி நீங்க வீட்டுக்கு போனபின்ன கூப்பிடுறேன், இப்ப வைக்கிறேண்ணா”

“சரிடாம்மா”

உடன் பிறந்தவளின் பேச்சில், உள்ளம் கனிந்திருக்க வீடு வரும்வரை வேறு சிந்தனைக்கு போகாமல், டிரைவருடன் பொதுவான விடயங்களைப் பேசியபடி வீடு திரும்பியிருந்தான்.

வீட்டு வாசலில் கால் வைத்தவுடன், அலைபேசி அழைக்க, ஜனதா மீண்டும் அழைத்திருந்தாள்.  போனை அட்டெண்ட் செய்தவன்,

“எப்டிடாம்மா கரெக்டா வீட்டுக்குள்ள வந்தவுடனே கால் பண்ணிருக்க”, என்றான் ஆச்சர்யம் ஆரவார சிரிப்பாய் மாற

“ம்.. அது தான் ஜனதா… சீக்ரெட் சொல்லமாட்டேன்”, என சிரித்தவள் “அர்ச்சனாகிட்ட உங்க போன கொடுங்க”, என்றாள்.

கதவைத் திறந்துவிட்ட அர்ச்சனா, ‘போனுல யாரு…? மூஞ்சியெல்லாம் ஒரே பல்லாருக்கு, நம்ம பாத்தா சிரிக்க காசு கேப்பான், ரொம்ப அழகா இருக்குற திமிரு அதான் பயபுள்ள நம்மல வச்சு செய்யுது… ரூல்ஸ் பேசுது…

ஓஹ்… தங்க ஊசியாக்கும்… தங்கச்சினா என்னமா சிரிக்கிறான்? நமக்கும் ஒரு அண்ணன்… ஆப்படிக்கிற மாதிரியே பேசிக்கிட்டு… கண்ணுல விரல விட்டு ஆட்டுறான்’, என நினைத்தபடியே கணவனை இமைக்க மறந்து கண்களில் படம் பிடித்தபடியே பார்த்திருந்தாள்.

அமருக்கு என்னடா இது சோதனை எனத் தோன்றினாலும், தங்கைக்கு தங்களின் கருத்து கருத்தரங்கம் பற்றிய விடயம் தெரியக்கூடாது என்பதில் முடிவாக இருந்தாலும் வேறு வழியில்லாமல்,

“அர்ச்சனா, இந்தா ஜனதா பேசுது”, என தனது அலைபேசியை மனைவியிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து அகன்றான்.

உடல் அகன்றாலும், மனைவியின் பார்வையில் இருந்த வேறுபாட்டை உணர்ந்தவன் ‘என்ன இன்னைக்கு அவ பார்வையில மயங்குன மாதிரி… ஒரு மார்க்கமா.. வச்ச கண்ணு எடுக்காம பட்சி பாக்குது?, திமிருல திமிறிக்கிட்டே தெரிஞ்சது! மதியம் போட்ட போடுல அடக்கி வாசிக்கிது போல.. கொஞ்சம் அசந்தா நம்மள வச்சு செஞ்சிரும்’, என நினைத்தபடியே அங்கிருந்து சென்றான்.

“என்ன அர்ச்சனா நல்லாருக்கியா?”, ஜனதா

“ம்… இருக்கேன்”

“ரொம்ப டல்லா சொல்லுற”

“இல்ல நல்லா தான் இருக்கேன்”, எத்தனை முறை சொன்னாலும் அதில் எனர்ஜி இல்லை.

“அண்ணன் மதியம் என்ன சாப்டாங்க”

“தெரியலயே!”

“மதியம் சாப்ட வீட்டுக்கு வரலயா?”

“வந்தாங்க ஆனா சாப்டாம போயிட்டாங்க”

“ஏன்?… ஆஃபீஸ்ல கூப்டாங்களா?”

“இல்ல…”, என்ற குரல் உள்ளே போக ஏதோ சரியில்லை என்று உணர்ந்தவள்,” நீ சாப்டியா?”

“ம் சாப்டேன்”

“உனக்கு பசிச்ச மாதிரி அண்ணனுக்கும் பசிச்சிருக்கும்ல, இப்பவாது எதாவது சாப்பிடக்குடு அர்ச்சனா, எங்கண்ண பசி தாங்கமாட்டாங்க”

“சரிண்ணி…”

“அண்ணங்கிட்ட போனக்குடு”, என்றதும் கிச்சனில் நின்று கொண்டிருந்தவனிடம் போனைக் கொடுத்தாள்.

அதைப் பெற்றுக் கொண்டவன், “சொல்லுடாம்மா வேற என்ன விசேசம் அங்க?”

“ஒன்னும் விசேசம் இல்ல, நீங்க முதல்ல எதாவது சாப்பிடுங்க, நான் இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடுறேன்”

“சரிடா பை”, என்று வைத்தான்.

அதற்குள் பாலைக் காய்ச்சி இருந்தவன் இன்ஸ்டண்ட் காஃபீயை தயார் செய்து, கையில் காஃபீயுடன் ஹாலுக்கு வந்தமர்ந்தான்.

கணவனின் செயல்களைக் கவனித்தவள், “எங்கிட்ட சொல்லிருந்தா நான் போட்டு தந்திருப்பேன்ல”, சமரசம் சாமரம் வீச ஆரம்பித்தது.

“உங்கிட்ட கேட்டு… அதுக்கு நீ ஆயிரம் வியக்யானம் பேசி காஃபீ குடிக்கறதுக்கு தெம்பில்ல எனக்கு, அதான் நானே போட்டுக் குடிச்சிக்குறேன்”

“ஏன் இப்டி பேசுறீங்க?”

“நீ தான் என்ன அப்டி பேச வச்சுருக்க”, அதற்குமேல் பேச்சை வளர்க்காமல் அங்கிருந்து படுக்கையறை நோக்கிச் சென்றவன், உடை மாற்றினான்.

பிறகு டிவியின் முன் அமர்ந்துவிட்டான்.

மனம் முழுவதும் கணவனின் மதிய பேச்சிலேயே இருக்க, தனது வீம்பை சற்றுத் தளரச் செய்திருந்தாள், அர்ச்சனா.

சேரில் அமர்ந்து டிவி பார்த்தவனின் அருகே வந்து கீழே அமர்ந்தவள், கணவனின் கால்களில் சாய்ந்தபடியே மொபைலை கவனிப்பது போல கணவனைக் கவனிப்பது தெரியாமல் டிவி பார்ப்பது போல அமர்ந்திருந்தாள்.

அர்ச்சனாவின் அருகாமையை உணர்ந்திருந்தாலும், கண்டுகொள்ளாமல் டிவியில் கவனமாக இருந்தான், அமர். பசி தோன்ற எழுந்து அடுக்களைக்குள் சென்றான். அவளும் உடன் சென்றவள்

“சாப்பிட என்ன செய்ய உங்களுக்கு?”

வீம்பை விட்டு “இனிதான் செய்யணுமா?”

“ஆமா, மதியம் சாதம் இருக்கு சாப்பிடுறீங்களா? இல்ல ரவ இருக்கு உப்புமா செய்யவா?”

“சாதம் இருந்தா அதயே சாப்பிட்டுக்கறேன்”, என்றவுடன்

“நீங்க கைய கழுவுங்க, எடுத்துட்டு வரேன்,”

சற்று நேரத்தில் உணவுத் தட்டுடன் வந்தவள், அதை அமரிடம் கொடுத்து விட்டு மொபைலுடன் அமர்ந்தாள் அர்ச்சனா. உண்டு முடித்து வந்தவன் அரை மணித்தியாலம் அமர்ந்திருந்தான்.

ஜனதாவின் அழைப்பை ஏற்று பேசிவிட்டு, பெற்றோர், உடன் பிறந்தவனுக்கு அழைத்து இயல்பான கருத்து பரிமாற்றங்களைச் செய்து விட்டு அதற்கு மேல் அடுத்த நாளுக்கான உற்சாக உழைப்பிற்கு வேண்டி, உடலை ஓய்வெடுக்க பணித்தான்.

ஆனாலும், அனைத்தையும் ஹாலில் இருந்தபடியே பார்த்திருந்தவள், தன்னைக் கணவன் கண்டு கொள்ளாது படுத்ததை நினைத்தவளுக்கு, ‘நாம கீழ இறங்கி வந்தாலும் ரொம்ப பிலிம் காட்டுது நம்ம ஆளு, என்ன டிசைனு இவன், கேட்லாக் இருந்தா கூட தேவல, எப்டி யூஸ் பண்ணலாம்னு பாக்கலாம்’ என நினைத்தவள் வெகுநேரத்திற்கு பின் எழுந்து சென்று… உண்டுவிட்டு வந்து மீண்டும் மொபைலுடன் அமர்ந்துவிட்டாள்.

ஒரு வாரம் அவரவர் வழியில், வாயை சற்று குறைத்து அர்ச்சனா அவளின் வேலைகளை சற்று தாமதமானாலும் செய்து முடித்தாள்.  அமரும் அவனது பணியின் காரணமாக சைட்டிற்கு சென்றுவிடுவதால் சுமூகமாக பிரச்சனைகள் எதுவுமின்றி நாட்கள் நகர்ந்திருந்தது.

அமர் எதுவும் நடக்காதது போல இயல்பாக பேசினான். ஞாயிறு அன்று அமருக்கு விடுமுறை ஆதலால் அமரிடம் வெளியில் சென்று வரலாமா எனக் கேட்டாள்.  அமரும் சரி அழைத்துச் செல்கிறேன் என்றிருந்தான்.

ஞாயிரும் வந்தது.  அதிகாலையில் எழும் பழக்கத்தில் எழுந்தவன், அர்ச்சனாவையும் எழுப்பினான்.

“வெளிய போகணும்னா சீக்கிரமா எந்திருச்சு கிளம்பு, அர்ச்சனா”

அதற்கு மேல் சமத்து பெண்ணாக எழுந்து கிளம்பினாள்.

ஒடிஷாவின் மிக முக்கியமான பழங்குடி இனத்தவர் இப்பகுதியில் வசிக்கின்றனர் என்பது மற்றொரு சிறப்பம்சமாகும். கிழக்குத்தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டிருக்கும் ஜேப்பூர் நகரத்தின் மூன்று திசைகளிலும் அரக்கு மலை எனும் மலை U வடிவத்தில் சூழ்ந்திருக்கிறது. எனவே இயற்கை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ரம்மியமான சூழலை இந்நகரம் கொண்டுள்ளது.

ஷக்தி, படகரா மற்றும் துதுமா என்று அழைக்கபப்டும் கம்பீரமான மூன்று நீர்வீழ்ச்சிகள் இங்கு பயணிகளை கவர்ந்து இழுக்கின்றன. தேவ்மாலி எனும் மலைப்பள்ளத்தாக்கு மற்றும் சுனபேதா எனும் காட்டுயிர் சரகம், கோலாப் எனும் வசீகரமான ஆறு, இவர்கள் தங்கியிருக்கும் பொட்டங்கி கிராமம் அமைந்திருக்கும் மாவட்டமான கோராபுட் நகரம் ஆகியன முக்கியமான சுற்றுலா தளமாகும்.

இவர்கள் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து நடந்து வரும் தொலைவில் (ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவில்) இருந்த துதுமா நீர்வீழ்ச்சிக்கு முதலில் அழைத்துச் சென்றான் அமர். வீட்டிலிருந்து வேண்டிய உணவை அர்ச்சனாவைக் கொண்டு சமைத்து எடுத்துச் சென்றிருந்தனர்.

“ஏங்க, இந்த இடத்துல வச்சு என்ன ஒரு போட்டோ எடுங்க”

அர்ச்சனாவும் மிகவும் மகிழ்வுடன் அந்த நாளை அமருடன் செலவழித்திருந்தாள்.  அமரும் இயல்பாக இருந்தான்.  ஒவ்வொரு இடத்திலும் அர்ச்சனா அவளின் மொபைலில் படம் பிடிக்கச் சொல்ல அமரும் அதை மறுக்காமல் செய்திருந்தான்.

“இந்த ஃபால்ஸ்ல குளிச்சா நீ இன்னும் க்யூட்டாகிருவியாம் அர்ச்சனா, எங்கூட குளிக்க வரியா?”

“நான் வேற டிரெஸ் எதுவும் எடுத்துட்டு வரல, இங்க குளிச்சா க்யூட்டாவேன்னு நீங்க சும்மா சொல்றீங்க”, கணவனின் எதிர்பாரா அழைப்பில் மகிழ்ந்திருந்தாள்.

“நான் சொல்றத நம்பலனா போ”, என்றவன் மாற்று உடைகளுடன் வந்திருந்ததால் குளித்துவிட்டு வந்தான். அது வரை அமரை கண்களால் விழுங்கியிருந்தாள், பாவை.

குளித்து முடித்து வந்தவனிடம், “நீங்க இன்னும் க்யூட்டாகி என்ன பண்ணப்போறீங்களாம்”, என வெட்கம் முகத்தில் வெளிச்சம் போட்டாலும், அதை மறைத்தவாறு கேட்டாள் அர்ச்சனா.

“ம்… என்ன பண்ணலாம்னு நீயே சொல்லு”, என ஒரு புருவத்தை மேலேற்றி கேட்டவனைக் காண இரு கண்கள் போதவில்லை, அர்ச்சனாவிற்கு.

“நான் சொன்னா நீங்க கேப்பீங்களா?”, அவளின் ஆசை கேட்டது.

“உன் பேச்ச கேக்காமாலா சண்டே இங்க கூட்டிட்டு வந்திருக்கேன்”, என வசீகரமாய் சிரித்து வைத்தான்.

அமரின் சிரிப்பில்… அவளின் சிந்தனை சிட்டு போல பறக்க… உடல் உணர்வுகளின் கொந்தளிப்பில் இருக்க… மந்திரித்த ஆடு போல மாறியிருந்தாள், அர்ச்சனா.

அன்று முழுவதும் அமரின் வார்த்தைகள் அனைத்தும் சாசனமானது.  மறுப்பு என்பதை மறந்து, அமரின் வார்த்தைகளை செயல்படுத்துவதில் பொழுதை இனியதாக கழித்திருந்தாள், அர்ச்சனா.

கோராபுட் நகரத்தின் முக்கியமான சுற்றுலா தளங்களை அன்று முழுவதும் கண்டு களித்து மாலையில் மிகவும் களைப்பாக வீடு திரும்பியிருந்தனர் இருவரும்.

“போகும்போது எதாவது சாப்பிட நைட்டுக்கு வாங்கிப்பமா?”, அர்ச்சனா

“வாங்கலாம், ஆனா நம்ம ஊரு சாப்பாடு மாதிரி இல்லணு கீழ போடாம சாப்பிடணும், அப்டினா வாங்குவோம்.  இல்லனா எதாவது செய்துக்கலாம்”

“எனக்கு ரொம்ப டையர்டா இருக்கு, அதான் வெளியில வாங்கலாம்னு சொன்னேன்”

“காசு எவ்வளவு செலவு செய்தாலும், இங்க சாப்பாடு எனக்கு பிடிக்காது, அதனால எவ்வளவு நேரமானாலும் வீட்ல போயி தான் சமைச்சு சாப்டுவேன்”

“அப்போ வேணாமா?”, பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு கேட்ட மனைவியை அதற்கு மேல் வற்புறுத்த மனமில்லாமல்,

“இங்கயே இன்னிக்கு சாப்டுட்டு போவோம், ஆனா இனி வெளியில சாப்பிடணும்னு கேக்காத, காலையில கிளம்பும் போது நைட்டுக்கும் வேணும்கறத எதாவது செய்து வச்சிட்டு கிளம்பு, அப்போ பிரச்சனை இருக்காது”, என கறாராக கூறிவிட்டான்.

அங்கிருந்த ஹோட்டலில் இருவரும் தேவையானதை ஆர்டர் செய்து உண்ண ஆரம்பித்திருந்தனர். அர்ச்சனாவிற்கு சுவை பிடிக்காததால் உணவு எடுக்க முடியவில்லை, அமர் வீணாக்காமல் உண்ணக் கூறியது நினைவில் வந்து இம்சிக்க, வேறு வழியில்லாமல் உண்டதாக பேர் பண்ணி எழுந்தாள். ஆனால், அமர் வாங்கியதை எதுவும் கூறாமல், வீணாக்காமல் உண்டு எழுந்தான்.

களைப்புடன் வீடு வந்தவர்களுக்கு, மனதில் களிப்பும் சேர மகிழ்வுடன் வார இறுதி சென்றிருந்தது.

*********************************

 

சந்துரு வழக்கம் போல வேலைகளில் இருந்தாலும், ஜனதா நேரத்திற்கு அழைத்து விரட்டுவாள்.  என்ன செய்தீர்கள், இனி என்ன செய்ய போகிறீர்கள், எப்பொழுது வருவீர்கள் என கேட்டபடி இருப்பாள்.

சில நேரங்களில் அழைப்பை ஏற்கமுடியாமல் போனாலும், பிறகு அழைத்து மனைவியிடம் பேசிவிடுவான், சந்துரு.

வீட்டில் வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு ரிலாக்ஸாக முகநூல், வாட்ஸாப் என எப்பொழுதேனும் நேரம் கிடைக்கும் போது பார்க்கும் ஜனதாவிற்கு, அர்ச்சனாவின் முகநூலில் பதிவேற்றப்பட்டிருந்த புகைப்படங்களைப் பார்த்ததும் சந்தோஷித்திருந்தாள்.

அமரைப் பற்றிய கவலை ஜனதாவிற்கு.  அமருக்கு பொருத்தமானவளாக அர்ச்சனா இல்லையோ என்ற ஜனதாவின் எண்ணத்தை முறியடிக்கும் விதமாக பல தினுசில் புகைப்படங்களைப் பதிவேற்றியிருந்தாள்.

தேனிலவு சென்றபோது எடுக்கப்பட்ட படங்கள், திருமண படங்கள் என அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது.  இடையிடையே லொகேசனும் பகிரப்பட்டு இருந்தது.  இதை எதற்காக பகிரவேண்டும் என யோசித்த ஜனதா, அடுத்து அர்ச்சனாவிடம் பேசும்போது லொகேசன் ஷேரிங்கை ஆஃப் செய்யுமாறு கூறவேண்டும், என நினைத்தாள்.

 

ஊர் திருவிழாவிற்கு நான்கு நாட்களுக்கு முன்பே கிளம்பியிருந்தார், சுசீலா. அவரும் கிளம்பும் முன், மருமகளையும் உடன் கிளப்ப பல வகைகளில் மகனிடம் கூறியும், கேட்டும், அவரின் முயற்சியில் தோல்வியை தழுவி இருந்தார். ஜனதாவை தன் தாயுடன் அனுப்ப மறுத்துவிட்டான், சந்துரு.

திருவிழா நாளும் வர, முதன் முறையாக சத்தியவாடிக்கு மனைவியுடன் பயணப்பட்டான், சந்துரு.  அங்கு வீட்டில் சந்துருவின் தமக்கை, மங்கை தனது குடும்பத்துடன் திருவிழாவிற்கு வந்திருக்க வீடு கலகலவென காட்சியளித்தது. இவர்களும் அங்கு செல்ல அருகிலுள்ள வீடுகளில் இருந்து ஜனதாவைப் பார்க்கவென பெரிய கூட்டம் வந்தது.

அனைவருடனும் இயல்பாக பேசினாள், ஜனதா.  கணவனிடம் தனக்கு அறிமுகமாகாமல் இருக்கும் உறவுகள் பற்றியும், அவர்கள் தனக்கு என்ன உறவில் இருக்கிறார்கள் என்பதையும் கேட்டறிந்து கொண்டு, அதே உறவு முறைகளைக் கூறி அழைத்துப் பேசினாள்.

அனைவருக்கும் ஜனதாவின் ஒட்டுதல் மிகுந்த பேச்சு பிடித்து போனது.

சந்திரசேகரின் பூர்வீக கிராமத்து வீடு ஐம்பது வயதினைக் கொண்ட… பழைய தார்சினால் ஆன சற்று பெரிய வீடாக இருந்தது.  சந்துருவின் தாத்தா கட்டியது.  அதனால், செழியனின் உடன் பிறந்தவர்கள் அனைவரும் திருவிழாவிற்கு அழைக்கப்பட்டு வந்திருந்தனர்.

சந்துருவின் அத்தைகள் மற்றும் அவர்களின் பிள்ளைகளும் அங்கு வந்திருக்க குதூகலமும், கொண்டாட்டமுமாக அனைவரும் அந்நாளைக் கழித்தனர்.

இதுவரை திருவிழாவிற்கு நாத்தனார்களை சுசீலா அழைத்ததில்லை. அப்படி இருந்தவர், இந்த ஆண்டு என்ன காரணத்திற்காக அத்தைகளையெல்லாம் அழைத்திருக்கிறார் என மனதில் ஒரு கேள்வி மங்கைக்கு எழுந்திருந்தது.

அதை தனது தம்பி வந்ததும் கேட்டிருந்தாள்.  சந்துருவிற்கும் அதே கேள்வியிருக்க, ஆனால் அவனும் பதில் தெரியாமல் குழப்பத்தில் இருந்தான்.

சந்துருவின், நான்கு அத்தைகளுக்கும் திருமண வயதில் இன்னும் பெண்கள் இருந்தனர். வசதி வாய்ப்புகள் இல்லாத நிலையில் உள்ள வீட்டு பெண்களை மகனுக்கு திருமணம் செய்ய பிரியம் இல்லாததால் நாத்தனார்களின் மகள்களைத் தவிர்த்திருந்தார்.

விசேச நாட்களில் வீட்டிற்கு வந்து, அதனால் மகனை திருமணத்திற்கு நிர்பந்திக்கும் நிலைக்கு நாத்தனார்கள் கொண்டு சென்றால் அதைத் தவிர்க்க இயலாது என்பதால், இதுவரை அவர்களைத் தவிர்த்திருந்தார்.

அதுபோல் கேட்கும்படியான சந்தர்ப்பத்தைத் தவிர்க்கவே, இது வரை எந்த விழாக்களுக்கும் நாத்தனார்களுக்கு அழைப்பு விடவில்லை. தற்போது மகனுக்கு திருமணம் முடித்த தைரியத்தில், நாத்தனார்களை இந்த ஆண்டு விழாவிற்கு துணிவுடன் அழைத்திருந்தார், சுசீலா.

ஆள் வைத்து சமையல் ஏற்பாடு செய்யப்பட்டது.  காலை பத்தரை மணிக்கு கோவிலுக்கு சென்று வந்தனர் சந்துரு மற்றும் ஜனதா இருவரும்.  பிறகு வந்தவர்களை கவனிக்கவே நேரம் போனது ஜனதாவிற்கு.

கணவனைக் கண்ணால் கூட பார்க்க முடியாமல் அவனைச் சுற்றிலும் பெண்கள் கூட்டம் இருப்பதை காலையில் வந்தவுடனே கவனித்திருந்தாள், ஜனதா.  ஆனாலும், அதை பெரிதாகக் கொள்ளவில்லை.

விழாவிற்கு வீட்டிற்கு வந்திருந்த பெண்களுக்கு சேலையும், ஆண்களுக்கு வேஷ்டியும் வாங்கிக் கொடுக்க வேண்டும் எனவும், ஆனால் சேலை, வேஷ்டி எடுத்துவராததால், பணமாகக் கொடுத்துவிடும்படியும் சுசீலா மகனிடம் கூறியிருந்தார். தாய் சொன்னவுடன், முன்பே இதைக் கூறியிருந்தால் வரும்போது வாங்கி வந்திருப்பேன் என தாயிடம் முறைத்திருந்தான்.

எவ்வளவு பணம் ஒவ்வொருவருக்கும் கொடுக்க வேண்டும் என தனது தந்தை செழியனிடம் கேட்டபோது, அவர் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் வீட்டிற்கு வந்திருந்த இருபத்தைந்து நபர்களுக்குமான தொகையை தன்னிடமோ, அல்லது சுசீலாவிடமோ  கொடுத்துவிடுமாறும், தாங்கள் அவர்களுக்கு பணத்தை கொடுத்து விடுவதாகவும் கூற, அவ்வளவு பணம் தற்போது எடுத்து கையில் எடுத்து வரவில்லை என்று கூறினான், சந்துரு.

நடந்து முடிந்திருந்த அவர்களின் திருமணத்திற்கு அனைவருக்கும் ஆடைகள் வாங்கி கொடுத்திருந்தான், சந்துரு.   திருமணம் முடிந்து இரண்டு மாதங்களே முடிந்திருந்த நிலையில் அடுத்து என்ன இப்போ என தந்தையிடமும் கோபப்பட்டிருந்தான், சந்துரு.

 

நான்கு மணிக்கு சத்தியவாடியில் இருந்து கிளம்பலாம் என அழைத்து வந்திருந்த சந்துரு ஆறு மணியாகியும் கிளம்பும் எண்ணமில்லாமல் உறவுகளுடன் நேரத்தைக் கழித்திருந்தான்.

ஜனதாவிற்கு அங்கு மூச்சு முட்டுவது போல தோன்ற ஆரம்பித்து இருந்தது.  வந்ததில் இருந்து உணவு உண்ணக்கூட நேரமில்லாமல் வேலை பார்த்து அசதி வந்திருந்த போதும், அவளால் ஓய்வெடுக்க முடியாமல் அடுத்தடுத்த வேலைகளுடன் இணைந்திருந்தாள்.

அப்போது அங்கு வந்த பெண் ஒருத்தி, சுசீலாவிடம் வந்து

“அத்த சேகரு எங்கத்த?”, எனக் கேட்க எதற்காக இவனைக் கேட்கிறாள் என ஜனதா பார்த்திருந்தாள்.

“உள்ளதான் அங்க எல்லாரும் இருக்காங்க, அவனும் அங்க தான் இருப்பான் போயி பாரு, எதுக்கு சேகர தேடுற?”, என்றார் சுசீலா

“மாமாவுக்கு மருந்து தீந்து போச்சு, அத வாங்கிட்டு வரச் சொல்லத்தான் தேடுறேந்த்த”

“விருத்தாசலம் போகணுமே”

“ஆமா அவுங்க காரு வச்சிருக்காங்கள்ல, அதான் அவங்கட்ட சொன்னா போயி வாங்கிட்டு வந்திருவாங்கனு சொல்ல வந்தேன்”

“போ நேரமாகுது சீக்கிரம் போயி சொல்லு அவங்கிட்ட”, என அத்தை என அழைத்தவளை அனுப்பி வைத்தார், சுசீலா.

காலையில் இருந்து இவ்வளவு நேரம் வரை பார்த்திராத புதுமுகம் யாரென கேட்க எண்ணிய ஜனதா

“அத்த இப்போ வந்தாங்கள்ல அவங்க யாரு?”

“அதுவா… ஒன்னுவிட்ட நாத்தனாரோட பொண்ணு அது, பேரு வித்யா”

“ஓஹ், அவங்க இந்த ஊருலதான் இருக்காங்களாத்த?”

“ம்… ஆமா”, என்றவர் அதன் பிறகு அங்கிருந்து சென்றுவிட்டார்.

மருந்தை வாங்கிக் கொடுத்துவிட்டு, இரவு உணவிற்கு பின், வீட்டிற்கு கிளம்ப வேண்டும் என பத்து மணிக்கு வந்து நின்ற மகனை, சுசீலா, செழியன் இருவருமே, இன்றிரவு தங்கிவிட்டு காலையில் செல் என்று கூற, அதற்குமேல் இருவரும் அங்கு தங்கும்படியானது.

அவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையில் வேலைகளை முடித்துவிட்டு சென்று படுத்த ஜனதாவிற்கு உறக்கமில்லை.  வந்திருந்த பெண்கள் அனைவரும் ஹாலில் உறங்க, ஆண்கள் அனைவரும் நீளமான வராண்டாவில் உறங்கியிருந்தனர்.  விடியல் வரை உறங்காமல் விழித்திருந்தவள், காலையில் தங்களின் அறைக்கு வந்து அழைத்த கணவனுடன் கிளம்பி விருத்தாசலம் வந்திருந்தாள்.

பழைய கலகலப்பில்லாமல், சிந்தனையோடு வந்தவளை முதலில் கவனிக்கவில்லை.  நீண்ட நேரத்திற்குபின் கவனித்தவன், தன்னை ஆட்சி செய்பவளின் சொல்லாட்சியைக் கேட்காமல் சிந்தனையில் இருந்தான், சந்துரு. வீட்டிற்கு சென்றவள்

“என்னை ரெண்டு நாளைக்கு எங்க அம்மா வீட்ல கொண்டு போயி விடுறீங்களா?”, முகம் பார்க்காமல் கேட்டவளை, புரியாமல் பார்த்திருந்தான், சந்துரு.

“உங்களத்தான்… கேட்டேன்”, வார்த்தைகள் கூட வலுவில்லாமல் வந்தது.

“ம்.. கிளம்பு, கொண்டு போயி விட்டுட்டு வேலைக்கு போறேன்”, என்றவன் நெய்வேலியில் கொண்டு போய் மனைவியை விட்டான்.

வரவேற்பு எப்பொழுதும் போல் இருக்க, கலகலப்பில்லாமல் இருந்த மனைவியை யோசனையுடன் பார்த்திருந்தான்.

“தம்பி சாப்டுட்டு போங்கப்பா”, அன்பரசி.

பணிக்கு கிளம்பியவன் மனைவியுடன் இருக்கப் போகும் சிறு நேரத்தை வீணாக்க விரும்பாமல், “சரித்த”, என்றவன் உண்ண அமர்ந்தான்.  மகளின் முகத்தில் இருந்த வாட்டம் அன்பரசிக்கு ஏதோ புரிவது போல இருக்க… அதைப் பற்றிக் கேட்காமல், மருமகனை கவனிக்கச் சென்றார்.

உடன் உண்ண மனைவியும் வருவாள் என்ற எண்ணத்தில் சம்மதம் கூற, அதைப் பொய்யாக்கியவள், அங்கு வரவில்லை.

வந்தவுடன் அறைக்குள் சென்று படுத்தவளை புரியாமல் பார்த்திருந்தான்.

ஆனாலும் நேரமின்மை கருதி கிளம்பியிருந்தான்.

யோசனையோடு கிளம்பியவனை, ”ஜனதாவ ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டு வரணும்பா, உங்க மாமா வெளிய போயிருக்காரு.. வர நேரம் தான். டோக்கன் போட்டு பாத்துட்டு வந்து போன் பண்றேன்”, என்றார் அன்பரசி.

“எதுக்கு ஹாஸ்பிடல் இப்போ”, புரியாமல் கேட்டவனை “உங்ககிட்ட ஜனதா எதுவும் சொல்லலயா?”

“இல்லத்த எங்க ஊருக்கு போயிட்டு இப்போ தான் வீட்டுக்கு வந்தோம், உடனே இங்க வரணும்னு சொல்லுச்சு, அதான் கூட்டிட்டு வந்தேன். என்ன செய்யுது அதுக்கு, எங்கிட்ட ஒண்ணும் சொல்லல”, குரலில் சற்று பதற்றம் வந்திருந்தது.

“ஹாஸ்பிடல் போயிட்டு வந்து போன் பண்றேன்பா, வீட்டுல எல்லாரையும் கேட்டதாகச் சொல்லுங்க”,

“சரித்த”, என்றவன் குழப்பமான மனதுடன் கிளம்பியிருந்தான்.

***********************************************

error: Content is protected !!