UKK16
UKK16
உலாவரும் கனாக்கள் கண்ணிலே-16
“உங்களுக்கு அங்க பழகின ஊரு, மக்கள்… ஆனா அங்க எனக்கு யாரையும் தெரியல… நீங்க அறிமுகப்படுத்தி வச்சாலும் அவங்ககூட எனக்கு நல்ல பழக்கமில்லல்ல… அதனால அவங்களிடம் எனக்கு ஃப்ரீயா பேச முடியல,
அதான் உங்களயே எதிர்பார்த்தேன்… ஆனா நீங்க ரொம்ப பிஸியாவே இருந்தீங்க… அதான் சொல்லணும்னு தோணுச்சு”, என்றவள் அதற்குமேல் அங்கிருந்து எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.
“அதனால தான் எங்கிட்ட அன்னைக்கு உனக்கு முடியாதத சொல்லலயா?”, என்ற கணவனின் கேள்வியில் நின்றவள், அதே இடத்தில் திரும்பி
“இல்ல… எல்லாருடனும் பேசிக்கிட்டிருக்கும் போது உங்கள கூப்பிட்டா… எனக்கு முடியலங்கறது எல்லாருக்கும் தெரிய வரும். கல்யாணம் முடிஞ்சு இரண்டு மாசத்துக்குள்ளங்கறப்ப அவங்க எதிர்பார்ப்பு எல்லாம் குழந்தையா தான் இருக்கும்.
அப்டி இல்லனு தெரிய வரும்போது… முடியாத பொண்ண கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்கனு சொல்றதுக்கும் வாய்ப்பு இருக்கு… அதற்கு எடங்குடுக்க வேணாம்னு யோசிச்சேன்.
எல்லார் கூடவும் எனக்கு நல்ல பழக்கம்னா நானே மேனேஜ் பண்ணிருப்பேன், இன்னொன்னு தலை சுத்தல் மாதிரி லாஸ்ட் ஒன் வீக்காவே இருந்தது. ஆனா லோ பிரஷர்னு எனக்கு தெரியல, எங்கயும் விழுந்திருவோமோனு பயம் வேற,
திருவிழாவுக்கு போன இடத்தில அங்க பகல்ல படுக்கவும் யோசனை”, என்ற மனைவியின் பேச்சைக் கேட்டவன் எழுந்து மனைவியை நோக்கி வந்தான்.
“எனக்கு இப்டியெல்லாம் உன் இடத்துல இருந்து யோசிக்க தெரியாது… நாம இத சொன்னா அவங்க இப்டியெல்லாம் ரியாக்ட் ஆக வாய்ப்பிருக்குன்னு உன்ன மாதிரி எல்லாம் நான் என்னைக்குமே யோசிச்சதில்ல. வரும்போது பாத்துக்குவோம்னு போயிருவேன், சாரிடி…”
“அதுக்கு எதுக்குங்க எங்கிட்ட சாரியெல்லாம் சொல்லிக்கிட்டு, போயி குளிச்சிட்டு வாங்க… நான் போயி டிபன் எதாவது செய்யுறேன்”
“ஆனா காலையில எங்கூட வீட்டுக்கு வரும்போதாவது எங்கிட்ட நீ சொல்லிருக்கலாம்?”
“அதான் சொல்லிட்டேனே, திரும்பவும் ஆரம்பிக்காம போயி வேலய பாருங்க”, என்று சிரித்தபடியே சற்று குரலை உயர்த்திச் சொல்லிவிட்டு, அதற்குமேல் அங்கு நிற்காமல் வேலையை கவனிக்கச் சென்றவளை பிடித்து நிறுத்தியவன்,
“வேண்ணா நம்ம வீட்டு வேலைக்கு யாராவது வரச் சொல்லவா?”
“இங்க என்ன வேலை இருக்கு, அதல்லாம் ஒன்னும் வேணாம்”
“உங்க வீட்லல்லாம் வராங்கள்ல ஒரு அம்மா வேலைக்கு ”
“ஆமாங்க, எங்க வீட்டச் சுத்தி நிறைய மரம் செடினு இருக்கு. இலையெல்லாம் உதிர்ந்து கிடக்கும், சின்னப் புள்ளைங்க ரெண்டும் அது பாட்டுக்கு தெரியும். பூச்சி எதுவும் இருந்து எதுவும் பண்ணக் கூடாதுன்னு தான் அத பெருக்க மட்டும் ஆளு விட்ருக்காங்க
எனக்கு பாக்க முடியாத நிலைனா நானே வேலைக்கு ஆளு வேணும்னு கேப்பேன்… வேறு என்னல்லாம் ஆசைப்படறேனோ அதல்லாம் கேப்பேன்… ஆமா….”, என்ற மனைவியின் வார்த்தைகளைக் கேட்டவனுக்கு சிரிப்பு வர சிரித்தபடியே, “அப்பாடா இப்ப தான் பழைய ஃபார்முக்கு பொண்டாட்டி வந்திருக்கா”, என தனக்குள் எண்ணியபடி ‘அடுத்து இன்று என்ன செய்யலாம்’ என்ற யோசனையுடன் வேலையை கவனிக்க ஆரம்பித்தான்.
இருவரும் காலை உணவை முடித்துவிட்ட பின்பும், கிளம்பாமல் வீட்டில் இருந்தவனை கேள்வியாக நோக்கியபடி வந்தவள்,
“என்ன வேலைக்கு கிளம்பாம இன்னும் வீட்லயே இருக்கீங்க?, அத்த, மாமா ஏன் இன்னும் இங்க வரல?”
“என்னப் பத்தி மட்டும் எங்கிட்ட பேசு, அவங்கள பத்தி கேக்குறதா இருந்தா அவங்களுக்கே போன போட்டு கேளு… என்னைய விடு”, கடந்து போன நாட்களில் பெற்றோர் நடந்து கொண்ட முறையினை மனைவியிடம் கூற விரும்பாதவன், அதை வார்த்தைகளில் காட்டினான்.
“ஏங்க… என்னாச்சு”, தன்மையாகக் கேட்டாள் பெண்.
“நீ எங்க ஏங்குறது? நாந்தான் உன்ன நினச்சு ஏங்கிப் போனேன், அத பத்தி பேசாம தேவையில்லாததெல்லாம் எங்கிட்டயே கேளு… போடீ…”, பெற்றோரைப் பற்றி மனைவியிடம் சொல்ல பிரியமில்லாமல் பொய்க்கோபம் காட்டினான்.
“நிஜமாத்தான் என்னை போகச் சொல்றீங்களா?”, போட்டுப் பார்த்தாள் அவனுடைய ஆழம் காண
“போனு சொன்னா என்னய விட்டு போயிருவியாக்கும்?”, போகாதே எனும் செய்தியை மறைமுகமாக சொல்லியிருந்தான்.
“நீங்க எப்ப சும்மா சொல்றீங்க, எப்படி சொன்னா… என்ன அர்த்தம்னு… ஒரு இரண்டு நாள் எனக்கு டியூசன் எடுங்க… அப்புறம் பாருங்க என் பெர்ஃபாமென்ஸ”, கலகலவென சிரித்தபடி சொல்லி முடிக்க
“அடிங்க… டியுசன் வேறயா இதுக்கு, அதுக்கெல்லாம் நேரமிருக்காது… பேச்சுவாக்குல சொல்றத வச்சு… சீக்கிரம் என்னப் பத்தி தெரிஞ்சுக்கோ.. அப்புறம் புரிஞ்சு நடந்துக்கோ”, அன்புக் கட்டளை இருந்தது.
இவ்வாறு அன்றைய தினத்தை மனைவியுடன் அனு அனுவாய் ரசித்திருந்தான், சந்துரு. ஜனதாவிற்கு பழையபடி இலகுத்தன்மை வந்திருக்க கணவனுடன் அன்றைய தினத்தை தனக்கு பிடித்தாற்போல செலவழித்தாள்.
மதிய உணவிற்கான வேலைகளில் ஜனதா இருக்க, இது வரை அடுக்களைப் பக்கம் எட்டியே பார்க்காத கணவன் வந்து உதவி செய்தது ஆச்சர்யத்தைத் தர,
“என்னங்க இன்னைக்கு மழைதான் வரப்போகுது!”
“வந்தா நல்லது தான!”
“அட என் டியூப் லைட்டே!”, சிரித்தபடியே கூறினாலும் அதிக உரிமை எடுத்துவிட்டோமோ என்ற பதற்றம் முகத்தில் இருக்க
“ஏய் உனக்கு ரொம்ப வாயி நீளந்தாண்டி… புருசன பாத்து டியூப் லைட்டுங்கற”, அவளின் பதற்றம் ரசித்தவன் பதறாமல் பேசினான்.
“பாத்ததால தான தெரியுது”, எனச் சிரித்தவள் “அளந்து பாத்திங்களா என் வாய…?”
“அடிப்பாவி இப்டியெல்லாம் பேசுவியா?”, ஆச்சர்யமாக கேட்டான்.
“அடப்பாவி எப்டியெல்லாம் பேசுனேன்?”, வினாவிற்கு பதில் வினவினாள்.
“வாயிக்கு வாயி பேசற, இத்தன நாளு இந்த வாயெல்லாம் எங்கடி மறச்சு வச்சிருந்த?”
“ம்… ஒத்த வாய எங்க வைக்க… நம்ம லாக்கர்ல தான்”, என நக்கல் பேசினாள் பெண்.
“லாக்கர நான் பாக்கலாமா? ப்ளீஸ்டி”, என மனைவியை நெருங்கினான் சந்துரு.
“ம்.. ஒன்னும் வேணாம், லாக்கர் பாக்கர நேரமா இது?”, பகலில் நெருங்கியவனை வெட்கம் விலக்கி வைக்கச் சொன்னது.
“மாமாவுக்கு பாக்கணுமே”, கெஞ்சலாக வந்தது.
“நீங்க சரிபட்டு வரமாட்டிங்க போல, மொதல்ல கிச்சனவிட்டு ஹாலுக்கு போங்க, உதவி பண்றேன்னு சொல்லிட்டு என்ன வேலய பாக்க விடமாட்டிங்கறீங்க”, சலிப்பாக ஆனால் சரசமாகப் பேசினாள்.
“ஏண்டி விரட்டற, தாயும், தகப்பனும் ஊருக்கு போயிட்டாங்கனு தான சின்னப்பயன மிரட்டுற!”, மனைவியின் பொய்யான வார்த்தைளுக்குப் பதிலாக தனது வார்த்தைகளின் வழியே மேலும் விளையாடிப் பார்த்தான்.
“ஆமா மிரட்டிட்டாலும்… நீங்க ரொம்ப பயந்துதான் போயிருவீங்க, யாரவன் அந்த சின்னப்பயன்?”, பதில் தெரிந்தாலும் அவன் வாயிலிருந்து பதிலை வாங்க எண்ணி கேட்டிருந்தாள்.
“நாந்தான்”, என சந்தோஷித்திருந்தான்.
“நம்பிட்டேன்”, நம்பிக்கையின்மையை கிண்டலாகக் கூறினாள்.
“ஏண்டி நான் எதச் சொன்னாலும் நம்ப மாட்டியா?”, புரிந்து கொண்டவன் புரியாதது போல கேட்டிருந்தான்.
“வேறு எத நான் நம்பல? சொல்லுங்க”
“சின்னப்பையன்னு என்ன நம்பு”, சொன்னவனுக்கு சிரிப்பு தாளவில்லை.
“என்ன விட பெரியவன்னு நினச்சுல்ல எங்க வீட்ல உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தாங்க”, அவன் சிரிப்பை உணர்ந்தவள் மேலும் அவன் நகைக்குமாறு பேசியிருந்தாள்.
“ஏய் வாயாடி… நேரம் கிடைக்கும்போதெல்லாம் சைக்கிளு கேப்ல என்ன… அவன் இவன்னு சொல்ற”, பாயிண்டை பிடித்திருந்தான்.
“ஏன் கேப்ல சொல்லணும், நான் நேருலயே சொல்வேன்”, அவளின் அந்நியோன்யம் நேரிடையாகப் பேசியது.
“சரியான கேடிடி நீ”, அவளைக் கண்டு கொண்டதாக அறிவித்தான்.
“அப்ப இந்த கேடிக்கு ஏத்த கேடிதான் நீங்கனு ஒத்துக்கிறீங்களா?”, ஜாடிக்கு ஏற்ற மூடி என்பதை ஒத்துக்கொள்ளுமாறு கூறினாள்.
“முடியலடி, உங்க வீட்லயும் இப்டிதான் பேசுவியா?”, சிரித்து களைத்திருந்தவன், ஓய்விற்காக சமாதானமாகி கேள்வி எழுப்பி இருந்தான்.
“இல்ல”, அவளும் களைத்திருந்தாள்.
“அப்ப”, விட மனதில்லாத மனம் மீண்டும் மன்றாடியது.
“எங்க நிசி, நிகி கூட சேர்ந்து தனியா கிட் சானல் பாத்து கத்துக்கிட்டேன், அப்புறம் அவங்களோட பேசும்போது தான் இப்டி பேச ஆரம்பிச்சேன், ஆனா அவங்க லெவலுக்கு பேசிட்டு இருந்த என்ன இன்னைக்கு உங்க லெவலுக்கு உயர்த்திட்டீங்க போங்க”
“அந்த குருத்துகளா இவ்வளவு கருத்தா பேசுதுங்க?”
“அவங்கட்ட பேசும்போது நானெல்லாம் டம்மி தான்”
“இப்ப உள்ள புள்ளைங்க எல்லாம் முன்ன மாதிரி இல்ல, நானெல்லாம் பேச ஆரம்பிக்கும் போதே நாலு வயசுனு எங்கம்மா சொல்லும்… இப்ப நாலு வயசு புள்ளங்க என்னமா பேசுதுங்க?”
“அவங்க பார்க்கற சானல்ல இருந்து தான் இப்டி பேச கத்துக்கறாங்க, பெரியவங்க மீனிங் தெரிஞ்சு பேச யோசிக்கற சிலதை அவங்க யோசிக்காம பேசும்போது நமக்கு சிரிப்பு வந்திருது”, ஜனதா.
என பல கதைகள் பேசியபடி மதிய உணவினை உண்டவர்கள், ஓய்வாக டிவியின் முன் அமர இருவரும் பேசியபடி பார்த்து இருந்தனர்.
பேச்சு குறைந்து டிவியில் கவனம் போன சற்றுநேரம் கழித்து சந்துரு கேட்ட கேள்விக்கு பதிலில்லாமல் போகவே அருகில் இருந்தவளைப் பார்க்க அமர்ந்தவாறு உறங்கியிருந்தாள் ஜனதா.
அவளின் உடல்நிலையில் இன்னும் முன்னேற்றம் வராததை உணர்ந்தவன், அவளைத் தூக்கிச் சென்று தங்களது அறையில் உள்ள படுக்கையில் மெதுவாக படுக்க வைத்தான். பகலில் உறங்கி பழக்கம் இல்லாததால், ஹாலில் அமர்ந்து டிவி பார்த்தான், சந்துரு.
மாலை ஆறு மணிக்கு எழுந்தவள், தான் மட்டும் படுக்கையில் இருப்பதை உணர்ந்து நேரம் பார்த்தவள் பதறி எழுந்து வந்தாள், ஜனதா.
************************************************************************
தன்னிலை உணரும் முன் வலுக்கட்டாயமாக தனது நாசியில் வைக்கப்பட்ட கைக்குட்டையின் உதவியால் மயங்கியிருந்தாள் அர்ச்சனா.
வடக்கு கொல்கத்தா பகுதி நகரின் பழமையான பகுதியாகும். இப்பகுதியில் உள்ள பல கட்டிடங்களில், 19 வது நூற்றாண்டு கட்டிடக்கலை வெளிப்படுவதைக் காணலாம். மேலும் பல தெருக்கள் குறுகிய சந்துகளாக காணப்படுகிறது.
பழக்கமின்மை காரணமாக மௌனிகா மெதுவாக கைக்குட்டையை அர்ச்சனாவின் மூக்கில் வைக்க, எதிர்பாராமல் நடந்த நிகழ்வில் சுதாரிக்காமல் கைக்குட்டையில் இருந்த மருந்தினை சுவாசிக்கவே அர்ச்சனா மயங்கியிருந்தாள்.
ஆரம்ப நிலை மயக்கத்தில் இருந்ததால், உடலியக்கம் மூலம் மறுப்பைக் காட்ட இயலாதபோதும் மௌனிகாவின் பேச்சுக்கள் அனைத்தையும் கேட்டவாறு வந்தாள்.
“சாயந்திரம் வந்துரதா சொன்ன ஆளுங்கள இப்பவே வர சொல்லிருக்கேன்”, மௌனிகா
வண்டியின் முன்புறம் டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்தவன்
“ஏன் அடிக்கடி ஷெட்யூல் மாத்திட்டே இருக்க?”, கோபமாகவே கேட்டான்.
“உனக்கு இன்னும் அமர் பத்தி தெரியல, ஆனா அவன எனக்கு லாஸ்ட் ஃபிஃப்டீன் இயர்ஸா தெரியும், அதான் பிளான் மாத்திட்டேன்”
“ஆனாலும் ரொம்ப அவசரப்படுற”
“அவசரமில்ல இது, அவன பத்தி தெரிஞ்சவங்கறதால இந்த முடிவு எடுத்திருக்கேன்”
“சொதப்பாம பண்ணணும்”
“அவன் மேல இவளுக்கு சந்தேகம் வர மாதிரி பண்ணியும் இவ அவன விட்டுப் போகல, அதான் செகண்டா இந்த பிளான் ஆரம்பிச்சேன், இவள அங்கயே விட்டுட்டு வந்திருந்தா இன்னும் நல்லாயிருக்கும்னு நினச்சேன். அங்க இவள தூக்க ஆளுங்க எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன்.
ஆனா அமர் அவள இங்க கூட்டிட்டு வந்து எல்லாம் சொதப்பி என்னய கிறுக்காட்டிட்டான். பிளான் மாறுனதால ரொம்ப கஷ்டமாகிருச்சு. இப்ப அவனுக்கு ஏதோ டவுட் வந்திருக்குமோனு தோணுது, அதான் இவள சீக்கிரம் கை மாத்தி விட்டுட்டா நாம ஷேஃபாயிரலாம்”
“எத வச்சு சொல்லுற?”, வண்டியை ஓட்டியபடி பேசினான்.
“இவ மொபைல் லொகேசன்ல மெய்டன் காமிக்குது, ஆனா இவ அங்க இல்ல. என் மொபைல்ல புது சிம் ஆக்டிவேட் பண்ணி மெசேஸ் பண்ணேன், அவ இன்னும் பாக்கல, அதான் இவளுக்கு கால் பண்ணேன்.
புருசனுக்கு ஆக்சிடெண்ட்னு சொன்னவுடனே அவ இருக்கிற எடத்தோட அட்ரஸ் சொல்றா, அது இவள நாம் பிக்கப் பண்ண இடம். அவன் கான்பரன்ஸ் பிளேஸ்ல இருக்கான். அந்த இடம் இவ மொபைல் லோகேசன் காட்டுது, ஆனா இவ என் கால் அட்டெண்ட் பண்ணிட்டா
அதான் எனக்கு டவுட் வந்தவுடனே பார்ட்டிகிட்ட பேசிட்டேன், எஃப்பில இருந்த இவ போட்டோவ ஷேர் பண்ணதுக்கே ஆகா ஓகோனு சொன்னான். சீக்கிரமா வந்து பொருள எடுத்துக்கோன்னு சொன்னவுடனே சரின்னுட்டான்.
இப்ப அவுட்டர் போன உடனே, கன்வே பண்ண ஹாஃப் அன் ஹார்ல பார்ட்டி நேர வந்திரும். இவ கண்ணு முழிப்பாளானு தெரியல, என்ன நடந்திச்சுன்னு இவளுக்கு புரியறதுக்கு முன்னே இவள ஒப்படைச்சிட்டு, கிளம்பிற வேண்டியதுதான்.
ஆறு மாசம் சோகமா இருப்பான். அப்புறம் எங்க அப்பாவ பேசச் சொல்லாம இந்த தடவ நானே களத்துல இறங்கறதா முடிவு பண்ணிருக்கேன், ஆனா அர்ச்சனா விசயம் மட்டும் கடைசி வர அமருக்குத் தெரியாம பாத்துக்கணும்”
“ஏற்கனவே உன்ன வேணானு தான சொன்னான்”
“அவன் சரியான அம்மா, அப்பா கோண்டு… அவங்கள தாஜா பண்ணா இவன் சரினிருவான், அதுகள மொதல்ல சரி கட்டணும், அது தான் மெயின் ஸ்விட்ச்”
“இவள வேற எதாவது ஐடியா பண்ணிருக்கலாம் நீ”
“உனக்கு பிரியம்னா சொல்லு, ஆனா இவள எப்டி நாடு கடத்துவ உடனே, அதுக்குள்ள அமரு வந்தான்… நாம, நம்ம பிளான் எல்லாம் வேஸ்டாகிரும்”
“நிதானமா பண்ணிருக்கலாம்”
“நிதானமா பண்ண எனக்கு நிதானம் வேணும்ல, இவ அவனுக்கு வர்த்தே இல்ல, ஆனா அவங்கண்ணுல அவ்ளோ ஆசை இவ மேல, இது அவன பத்தி தெரியாம இருக்கு, ஆனா இதுக்கு அவன்னு கொடுத்து வச்சிருந்திருக்கு பாரேன்.
நமக்கு தான அவனோட அறிவு, புத்திசாலித்தனம் எல்லாம் தெரியும். ஆனா தவமிருந்தாலும் வரந்தர மாட்டேனுட்டான். எங்கைல முதல்ல சிக்க வச்சிட்டு தான் அப்புறம் யோசிக்கணும், அவன என்ன செய்யப் போறேனு இன்னும் யோசிக்கல… என்ன தவிக்க விட்டதுக்கு பதில் சொல்லியே ஆகணும்”
“படிக்கும் போதே நீ ட்ரை பண்ணிருக்கணும்”
“அவன் படிக்கும்போது என்னைக்குமே யாரையும் வேறு கண்ணோட்டத்துல பாத்து நான் பாத்ததில்ல… ஆனா இவள எப்டி பாக்கறான், அந்த கண்ணுல தெரியற பீல் சொன்னா தெரியாது… அத பாத்தா தான் எனக்கு பத்திட்டு வருது”
“மேன்லி அண்ட் கைண்ட் பெர்சனாலிட்டி அது மட்டும் தான் எனக்குத் தெரியும்”, ஆண் ஒரு ஆணைப்பற்றி சிலாகித்திருந்தான்.
“அதுக்கு மேல அறிவு ஜீவி இன்னும் என்சைக்ளோபீடியால இல்லாத ஒன்னு அவன்னு சொல்றத விட அந்த என்சைக்ளோபீடியாவே அவன்தான்”
“ரொம்ப படமா இருக்க மாட்டான்”, உணர்ந்ததைக் கூறினான்.
“அது தான் இதுக்கு எல்லாம் தெரியல அவன் அருமை”
“அது எப்டி உனக்கு தெரியும்?”
“அங்கங்க ஆளு வச்சு விசாரிச்சது தான், மாமியா வீட்ல இருக்கற வர ரொம்ப திமிரா இருந்திருக்கு… அவங்க வீட்டுக்கு ரெகுலரா போற வேலக்காரிட்ட டெய்லி கால் பண்ணிப் பேசுவேன்,
ஒரு இன்சிடென்ட்ல கொஞ்சம் காயம் அமருக்கு, நான் துடிச்சுட்டேன்… ஆனா இவ பக்கத்துல கூட எட்டிப்பாக்கலயாம். அப்டி ஒரு கல்நெஞ்சக்காரியா இருக்கா… அமருக்கு இவ ஏத்தவளே இல்ல… என்ன ஜென்மமோ இவ…
ஆலப்புழா போயிருந்தான்… அங்கயும் என் பிரெண்ட் இருக்கான். அவங்கிட்ட சாதாரணமா கேக்குற மாதிரி விசாரிச்சேன்.. அவங்களோட போட் ஹவுஸ்ல போயிருக்கிறதா சொன்னான்… போட்டோஸ் எல்லாம் இவ தான் போட்ருந்தா… கலாரசிகன்டா அவன்”,கண்களில் கனவுகளுடன் கூறினாள்
“அப்புறம் ஒரிசா வந்தா… அங்கயும் காசுக்கு மாறடிக்கிற ஆளுங்க இருக்கற வர நமக்கு எல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன், பத்தாததுக்கு இவ மாதிரி டெக்னாலஜி புரியாம இருக்கிற பட்டிக்காடுகள்னால பல விசயம் அப்பப்ப தெரிஞ்சுக்கலாம்”, என்றபடி சிரித்தாள் மௌனிகா.
நாற்பது நிமிட பயணத்திற்குப்பின் வடக்கு கொல்கத்தா பகுதியில் இருந்த சந்துகளுக்குள் சென்று ஆளரவமில்லா வீட்டின் முன் வண்டி நின்றது.
அரை மயக்க நிலையில் ஹாலில் இருந்த சோபாவில் படுக்க வைக்கப்பட்டிருந்தாள் அர்ச்சனா.
“இன்னும் பத்து நிமிசத்தில வந்திருவான் பார்ட்டி” என்றபடி வந்தவளிடம்
“தண்ணி தெளிச்சு மயக்கம் தெளிய வைக்கலாமா?”, டிரைவர்.
“வேணாங்… கத்திட்டா வம்பு, இருக்கட்டும் இப்படியே ஒப்படைச்சிட்டு கிளம்பிரலாம்”
“வேற எந்த பிரச்சனையும் வந்திராதுல்ல?”
“பயப்படாத, அமர் இன்னிக்கு கான்ஃபரன்ஸ் முடியற வர இவங்க எடத்துக்கு போக மாட்டான். அதுக்குல்ல நாம இங்க இருந்து கிளம்பிரலாம்”, என பேசியவாறு இருக்க கதவு தட்டும் ஓசை கேட்டு
“அதுக்குள்ளயா வந்துட்டான்”, என தனது கனா நிறைவேறப் போவதன் முதற்படியாக அமரின் அத்தியாயங்களில் இடம்பெற்றிருந்த அர்ச்சனாவை அகற்றிவிடப் போவதாக எண்ணி சந்தோஷித்து, பார்ட்டியின் அவசரத்தை வியந்தபடி கதவைத் திறக்க எழுந்தாள்.
********************************************************