உலாவரும் கனாக்கள் கண்ணிலே-20

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கண்ணாடி சார்ந்த பணிகள் இருப்பதால் அங்கு தொழில்முறை பயணமாக மூன்று நாட்கள் செல்ல இருப்பதாக ஜனதாவிடம் தெரிவித்தான் சந்துரு.

சந்துருவின் வார்த்தைகளைக் கேட்ட ஜனதா, தன்னையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டுமாறு கேட்டாள். தொழில்முறை பேச்சுகள் முடிந்த பிறகே ஜனதாவை வெளியே எங்கும் அழைத்துச் செல்ல தன்னால் இயலும் எனக் கூறினான், சந்துரு.  அதற்கும் சரியென்று விட்டாள், ஜனதா.

சுசீலாவிடம் கூறிவிட்டு கிளம்பிய ஜனதாவை அழைத்துக்கொண்டு கேரளா வந்திருந்தான், சந்திரசேகர்.  கிளம்பும் முன் எந்த முன்னறிவிப்புமின்றி கிளம்பியவர்களை எதுவும் கேட்க முடியாமல் நின்றிருந்தார், சுசீலா.

செழியனிடம் முன்பே விபரம் பகிரப்பட்டிருந்ததால் அவருக்கு வழமைபோல் சந்திரசேகர் மட்டும் தொழில் விடயமாக வெளியூர் போவதாக எண்ணியிருந்தார். மருமகளும் மகனுடன் கிளம்ப, அதை அவர் பெரிதுபடுத்தாமல் அவரது பணிகளில் கவனம் செலுத்தியிருந்தார்.

 

பத்தனமதிட்டா மாவட்டம் தற்போது கேரளாவின் முக்கிய வணிக மையமாக திகழ்ந்து வருகிறது. இந்த மாவட்டத்தின் பெயர்  ‘பத்தனம்’ மற்றும் ‘திட்டா’  ஆகிய இரு வார்த்தைகள் சேர்ந்து உருவானது. இதற்கு ‘நதியோரத்தில் கொத்தாக அமைந்திருக்கும் பத்து வீடுகள்’ என்று பொருள்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக கேரள கைவினைஞர்கள் உலோக கண்ணாடியை உருவாக்கினர். அரன்முலாவிலுள்ள பித்தளை (ஓடு) பொருட்கள் செய்யும் பணியாளர்கள் உலக பிரசித்திப் பெற்ற கைப்பிடியோடு கூடிய உலோக கண்ணாடிகள், செய்வதில் பிரசித்திப் பெற்றவர்கள். இது அரன்முலா கண்ணாடி எனப்படும்.

உலோகக் கலவை கொண்டு தயாரிக்கப்படும் உலகப் புகழ்பெற்ற ‘அரன்முலா கண்ணாடி ‘ பத்தனம்திட்டா வரும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரசித்தம். இந்த கண்ணாடியை உருவாக்கும் தொழில்நுட்பம் குடும்ப ரகசியமாக பாதுகாக்கப்பட்டு இன்று பல சந்ததிகளை தாண்டி அந்த குடும்பத்தை சேர்ந்த கைவினைக் கலைஞர்கள் அதை செய்து வருகின்றனர்.

அரன்முலா கண்ணாடி

 

கடைகள் மற்றும் ஷாப்பிங் மால்களில் விற்க ஏதுவாக, மொத்தமாக வாங்கி விற்கும் விற்பனையாளராக வேண்டி, அரன்முலா கண்ணாடி தயாரிப்பாளர்களை அணுகியிருந்தான் சந்துரு.  தனது கண்ணாடி சார்ந்த பிரிண்டிங்க் தொழில்முறை பணிகளுக்கு இடையே, அரன்முலா கண்ணாடியையும் வாங்கி விற்க எண்ணி இந்த பயணத்தை மேற்கொண்டிருந்தான்.

முதல் நாள் மதியம் வந்திறங்கிய இருவரும் பயணக் களைப்பால் அறையிலேயே ஓய்வெடுத்திருந்தனர்.

தொழில் சார்ந்த விடயங்களை கணவன் கூறும்போது தனக்கு தோன்றும் சில கருத்துகளையும் கணவனிடம் கூற, சந்துரு

“பேசாம… இந்த கடைய உன் பொறுப்புல பாத்துக்க சொல்லி விட்றலாம்னு இருக்கேன், என்ன சொல்ற ஜனதா?”, சந்துரு

“எனக்கு தொழில் முறை சார்ந்து ஒன்னும் தெரியாதுங்க, நீங்க தொழில் பத்தி சொல்லும் போது எனக்கு தோணுறத சொல்றேன். அதுக்காக அந்த கடைப் பொறுப்பெல்லாம் என்னால எடுத்து சக்ஸஸ்புல்லா பாக்க முடியுமானு தெரியலங்க”

“நீ உன்னால முடிஞ்சத நம்ம கடையில வந்து பாரு, எதுவும் டவுட்னா எங்கிட்ட கேளு… அதுல என்ன கஷ்டம் உனக்கு”

“கஷ்டம்லாம் இல்ல, நீங்க கைட் பண்றதா இருந்தா அத செய்றேன்”

அடுத்த நாள் தொழில்முறை பேச்சிற்காக காலை ஒன்பது மணியளவில் வெளியில் சென்றவன், அறைக்குத் திரும்பும் போது மணி இரண்டாகி இருந்தது.

மிகவும் யோசனையோடு வந்தவனைக் கண்ட ஜனதா

“என்னங்க, யோசனையோடு இருக்கீங்க, போன விஷயம் என்னாச்சு?”

“அவங்க தொழில் ரகசியம் நம்ம கிட்ட சொல்ல மாட்டாங்க, எப்பொழுதும் இங்க இருந்து நம்ம எவ்வளவு ஆர்டர் குடுக்கறமோ அவ்வளவு பொருளையும் நமக்கு அனுப்பி வப்பாங்க, ஒன் இயர் அக்ரிமெண்ட் போட்டு பாக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.

ஆரம்பத்துல கொஞ்சமா ஆர்டர் போட்டு பாப்போம்.  போகறத பாத்துட்டு அப்புறம் மேற்கொண்டு யோசிக்கணும்.  இது சக்ஸஸ் ஆனா அடுத்து இத விரிவு படுத்தலாம்.  இல்லனா என்னனு முடிவு பண்ணணும்”

“எப்ப அக்ரிமெண்ட் போடணும்”, ஜனதா.

“நாளைக்கு வர சொல்லிருக்காங்க, உன் பேர்ல போடலாம்னு இருக்கேன்”, அவள் எதிர்பாரா முடிவினைக் கூறி திகைக்க செய்தான்.

“எதுக்குங்க என் பேர்ல எல்லாம்… உங்க பேருலயே அக்ரிமெண்ட் இருக்கட்டும், நான் தான் கடைய பாத்துக்கறேன்னு சொல்லிட்டேன்ல, திரும்பவும் என்னய எதுலயும் கோர்த்து விடாதீங்க”, அறியாமை தந்த பயத்தால் பின்வாங்கினாள்.

“நீ சும்மா இரு, யாரு பேருல போட்டா என்ன? அதனால இத பத்தி எதுவும் நீ சொல்லாத…,

கோர்க்கறதுக்கு நீ என்ன பாசி மணியாடி? அப்படியே கோர்த்தாலும் நம்ம பிஸினெஸ்ஸூக்குள்ள தான கோர்த்து விடறேன்”, என சிரித்தவன்

“சரி வா போயி சாப்பிட்டு வரலாம்”, என உண்ண அழைத்துச் சென்றான்.

மதிய உணவிற்குப்பின் ஜனதாவின் வேண்டுகோளின்படி வாஸ்து வித்யாலயம் அழைத்துச் சென்றான். பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள வாஸ்து வித்யா குருகுலம், வாஸ்துக் கலை மற்றும் சுவரோவியங்களை பாதுகாப்பதிலும், அவைகளின் வளர்ச்சியிலும் முன்னோடியாக விளங்கி வருகிறது.

வாஸ்துவித்யா குருகுலத்தில், தந்திரா, முரல் பெயிண்டிங், விஞ்ஞான காலவெடி போன்ற கலைகளை திறன்மிக்க ஆசிரியர்களைக் கொண்டு கற்பிக்கின்றனர். வாஸ்து வித்யா குருகுலம் பழைய சுவரோவியங்களைப் பாதுகாப்பதிலும் சிறந்து விளங்குகிறது.

வாஸ்து வித்யா குருகுலம்

வாஸ்து வித்யா குருகுலத்தில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த பிரேம் இடப்பட்ட சுவரோவியங்களை கண்டு ரசித்தனர்.  அதன்பின் அங்குள்ள பாடசாலைகள் நடக்கும் இடங்களைச் சென்று பார்வை இட்டனர்.

 

மறுநாள் காலையில் இருவருமாக கிளம்பிச் சென்று அக்ரிமெண்ட் பணிகளை முடித்து அறைக்குத் திரும்ப மதிய உணவு வேளை கடந்திருந்தது.  வரும் வழியில் மதிய உணவை முடித்து விட்டதால் சற்று தொலைவில் இருக்கும் பெருந்தேனருவிக்குச் செல்வதற்காக கிளம்பினார்கள்.

பத்தனம்திட்டா நகரிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் பெருந்தேனருவி அமைந்திருக்கிறது. இந்த அருவி 100 அடி உயரத்திலிருந்து ஆர்ப்பரித்துக் கொட்டுவதும், அதன் பிறகு பம்பை நதியுடன் கலக்கின்ற காட்சியும் பயணிகளின் நினைவை விட்டு என்றும் அகலாது. அதோடு இந்த அருவியின் சுற்றைமைப்பு இதை அற்புதமான சுற்றுலாத் தலமாக திகழச் செய்து கொண்டிருக்கிறது.

பெருந்தேனருவி

 

பெருந்தேனருவியின் ஆர்ப்பரிப்பை ஆனந்தமாக இருவரும் கண்டு ரசித்தனர்.  தேனருவி பம்பை நதியுடன் கலக்கும் காட்சியையும் கண்டு களித்தனர்.

மாலை வரை பெருந்தேனருவி மற்றும் பம்பை ஆற்றின் வெள்ளி போல மின்னும் நீரின் அழகில் மயங்கியவர்கள், அதன் பின் அறைக்குத் திரும்ப இரவு நேரமாகியிருந்தது.

வந்தவேளை வெகுவிரைவில் முடிந்ததில் சந்துரு மகிழ்ந்திருந்தான். எதிர்பாராமல் வந்த பணி நிறைவடைந்திருந்தாலும் உடனே ஊருக்குச் செல்லும்  தனது எண்ணத்தை ஒத்தி வைத்திருந்தான்.

ஊருக்குக் கிளம்பினால் இது போன்றதொரு வாய்ப்பை மீண்டும் ஏற்படுத்தி மனைவியை அழைத்துச் செல்வது என்பது அவனது தொழில்சார் பணிகளுக்கு இடையில் கடினம் என்பதை மனதில் கொண்டிருந்தான். இப்பயணத்தை நீட்டித்து, இருவருக்கும் மறக்க முடியாத ஆனால் ஒருவரையொருவர் ஆகர்ஷிக்கும் பயணமாக்க எண்ணினான்.

மூன்றாம் நாள் மனைவியின் வேண்டுதலின் படி, அம்மாவட்டத்தில் உள்ள கடமநிட்டா தேவி கோயில், ஸ்ரீ வல்லபா கோயில், மலங்கரா ஆர்தோடக்ஸ் தேவாலயம், குடமன் சிலந்தியம்பலம், கவியூர் மஹாதேவா கோயில் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்றான்.

பத்தனம்திட்டா மாவட்டம், ஆலயங்கள் மற்றும் கலாச்சார பயிற்சி மையத்துக்காக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. மேலும் ஆண்டு தோறும் நடத்தப்படும் படகுப் போட்டி காண்பவரைக் கவர்வதோடு, வெளிமாநில மற்றும் வெளிநாட்டு மக்களும் விரும்பிப் பார்ப்பதால் தனியிடத்தைப் பெற்ற மாவட்டமாக திகழ்கிறது.

அதோடு இந்தியா முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டு தோறும் கூட்டம் கூட்டமாக வந்து செல்லும் சபரிமலை, பத்தனம்திட்டா மாவட்டத்தில்தான் அமைந்திருக்கிறது. இதன் காரணமாக கேரளாவின் யாத்ரீக தலைநகரமாக பத்தனம்திட்டா மாவட்டம் கருதப்படுகிறது.

இந்த மாவட்டத்தில் உள்ள கடமநிட்டா தேவி கோயிலில் பத்து நாட்கள் நடைபெறும் படயணி எனும் சம்பிரதாய நடனத்தை காண ஒவ்வொரு கலா ரசிகர்களின் உள்ளமும் ஏங்கும்.

காலையில் துவங்கிய பயணம் இரவு வரை நீண்டிருந்தது.  இரவு அறைக்கு வரும்வரை அமைதியாக வந்த கணவனை ஆச்சர்யத்துடன் ஆனால், அமைதிக்குப் பின் இருப்பது மோகப் புயலா இல்லை மன்மத பானமா என யோசித்தபடியே வந்திருந்தாள், ஜனதா.

புன்னகையை தேக்கியிருந்தவனின் முகம் மாற்றம் பெறாமல் இருந்தது.  அறைக்குள் வந்தவுடன் ரிலாக்ஸ் செய்து வந்தவள்

“என்னங்க ரொம்ப அமைதியா இருக்கீங்க?”

“ம்… என்ன ஜனதா?”, அவளின் எதிர்பாரா கேள்வியில் நிகழ்வுக்கு வந்தவன் கேட்டிருந்தான். பிறகு “நானும் ரெஃப்ரெஷ் பண்ணிட்டு வந்திர்றேன்”, என இரவு நேர இலகு உடைக்கு மாறி யோசனையுடன் வந்தவனை நோக்கிய ஜனதா,

“என்ன சிந்தனையெல்லாம் ரொம்ப பலமா இருக்கே? அதன் பக்க விளைவுகள் எப்படி இருக்கும்னு எனக்கு பயமா இருக்குங்க!”, சிரித்தபடியே தன்னவனை சீண்டியிருந்தாள் பெண்.

“ஒன்னுமில்ல…”, சிந்தனையிலிருந்து விடுபடாமல் பேசினான்.

“ஓராயிரம் இருக்குனு உங்கள பாத்தாலே தெரியுது, பதில மாத்துங்க பாஸ்”, நிகழ்காலத்திற்கு இழுத்து வர முயன்றாள்.

“பாஸூ எல்லாம்… இனி நீதான் எனக்கு”, உணர்ந்து கூறினான்.

“என்னங்க புரியற மாதிரி பேசாம… எஸ்.ஜே.எஸ் மாதிரியே பேசுறீங்களே!”

“யாரு நானா புரியாத மாதிரி பேசறேன்… உன்ன…”, என்றவன் எட்டி நின்றிருந்த மனைவியை இழுத்து இருகைகளுக்கிடையே கொண்டு வந்து பின்புறமாக மனைவியை அணைத்திருந்தான். “யாருடி அது… எஸ்.ஜே.எஸ்?”

“இது என்ன கள்ளாட்டம்… பேச்சு பேச்சா இருக்கும் போது… கைக்கு ஏன் வேலை குடுக்குறீங்க?”, என கணவனின் கையணைப்பிற்குள்ளிருந்து வெளிவர எத்தனித்தவள். “எஸ்.ஜே.எஸ் யாருனு நீங்களே கண்டுபிடிங்க”

விடாமல் இறுக அணைத்திருந்தவன், எவனா இருந்தா என்ன என்ற மனநிலையில் அதை விட்டுவிட்டு தன் மனதில் தோன்றியதை கேட்டிருந்தான், “ஏண்டி உனக்கு என்ன வயசாகுதுன்னு இன்னைக்கு கோவில் கோவிலா என்னயும் கூட கூட்டிக்கிட்டு சுத்துன?”

“கோவிலுக்கு போறதுக்கு வயசு வேணுமா?”

“ஒரு ட்ரிப் வந்தா ஜாலியா ஷாப்பிங், என்டர்டெய்ன்மெண்ட், என்ஜாய்மெண்ட்னு இல்லாம… கோவிலுக்கு கூட்டிட்டுப் போயி கூட்டிட்டு வர்ற…

நேத்து என்னனா எக்ஸிபிசன்… அங்க போயி நொந்து வெந்து வந்தேன். ரசனைக்கு ராணியா இருந்தா மட்டும் போதுமா… ஒரு புருஷனோட மனச புரிஞ்சு நடக்கத் தெரியலயே…

நீ என்ன, எதுக்கு அங்கல்லாம் கூட்டிட்டு போகச் சொன்னேனு சொல்லு மொதல்ல”,என கழுத்து வளைவில் இதழ் பதிக்க

“பதில் வேணுமா இல்ல சும்மா பினாத்துறீங்களா?”, பதித்த இதழின் வேகம் உடலில் ஊடுருவிப் பரவ…, ஜெர்க் ஆன குரலில் பினாத்தியிருந்தாள் பெண்.

“பினாத்த நான் குடிச்சா இருக்கேன்?”

“கள்ளு குடிக்காமலே மயக்கத்துல இருக்கீங்க… போட்டா மட்ட தான் போல”, கச்சிதமாக கணித்திருந்தாள்.

“அதெல்லாம் எனக்கு பழக்கமில்லடி, சமீபத்திய போதை எனக்கு நீ மட்டும் தான்.  தெளிய விடாத போதை… தெளிய பிரியப்படாத… நான் வேணும், வேணும்னு நினைக்கிற…, கேக்குற… ராஜபோதை…”, கள்ளுண்ணாமலேயே மனைவியின் அருகாமையில் கிறங்கியிருந்தான்.

“என்ன பேச்செல்லாம் வேற பக்கமா போகுது”, போகாத பக்கங்களல்ல… ஆனாலும் அவனின் அருகாமை அவ்வாறு ஜனதாவைப் பேசத் தூண்டியது.

“எப்பவும் அது உன் பக்கமா தான் இருக்கு, நீதான் இப்ப கைக்குள்ள இருந்து வெளிய போகணும்னு எங்கிட்ட இருந்து ஓட பாக்குற”, பாசாங்கான விளையாட்டை பிடித்து விளையாடினார்கள்.

“என்ன சொன்னாலும் இப்ப நீங்க கேக்கற நிலமையில இல்ல”, கணிக்க தவறியிருந்தாள், கவனமெல்லாம் அவனனானதால்.

“ஏய் சொல்ற நிலமைல இல்லனு சொல்லுடி… பேச்ச மாத்தாத…”, பாயிண்டைப் பிடித்திருந்தான்.

“பேச்ச மாத்றது நானா இல்ல நீங்களா?”, விதண்டாவாதம் செய்ய துணிந்தாள்.

“பட்டிமன்றம் நடத்தப் போறீயா?”, போட்டிக்குத் தயாரானான்.

“தூங்கற நேரத்துல என்ன பட்டிமன்றம்?”, புரியாததால் புலம்பிருந்தாள்.

“ஆமா பெட்ல பட்டிமன்றம், இன்னைக்கு யாரு ஜெயிக்கிறானு”, இந்திரலோக இந்திரிய விளையாட்டைப் பட்டிமன்றமாக்கியிருந்தான்.

“இந்த ஆட்டைக்கு நான் வரல”, பயந்தது போல பதுங்கினாள் பெண்.

“நீ வரீயானா நான் கேட்டேன்? களத்துல இறங்கியாச்சு… இனி வேணாம்னு சொல்றதா இருந்தாலும் நோ யூஸ், ஆடி ஜெயிக்கணும், இல்ல தோக்கணும்… ரெண்டே ஆப்சன் தான் உனக்கு”,விதிமுறைகள் இல்லா விளையாட்டினை துவங்கியிருந்தான்.

அதற்கு மேல் இருவரின் பேச்சுக்களும், செயல்களும் சென்ற திசையும், முறையும் கஜூரஹோ சிற்பங்களின் சாயலில் போக வந்த இரு நாட்களும் மோகமும், காமமும் போட்டியிட அனைத்து விளையாட்டிலும் யாரையும் யாராலும் வெற்றி கொள்ள முடியாமல் டிராவில் முடிந்திருந்தது.

 

தேடி வந்த வாய்ப்பு கிட்டியதுடன், தேனிலவு போல இனிமையாகக் கழிந்த நாட்களை அசை போட்டவாறு விருத்தாசலம் திரும்பியிருந்தனர் தம்பதியர்.  இருவரின் அருகாமை தந்த களிப்பு முகத்தில் தெரிய… வசியம் செய்யும் வித்தைகளுக்கு சொந்தக்காரனான மன்மதன் இருவரையும் மயக்கி வைத்திருந்தான்.

 

தொழில்முறை அக்ரிமெண்ட் பற்றி தந்தை செழியன் அவர்களிடம் அலைபேசியில் உரையாடியபோது தெரிவித்திருந்தான், சந்துரு.  மனைவியின் முற்றுகை இடப்பட்ட வினாக்களுக்கு விடையளிக்கும் போது வினயமில்லாமல் விடயத்தை கூறியிருந்தார், செழியன்.  மகனின் செயலில் மனக்குழப்பத்திற்கு ஆளாகியிருந்தார் சுசீலா.

மகனின் செயலால் வந்தது என்பதை விட கணவர் சொன்ன விடயத்தைப் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாமல், அவராக யூகித்திருந்தார்.  யூகங்கள் மதியை மயங்கச் செய்யும் என்பதை அறியாமல் மனம் போன போக்கில் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தார், சுசீலா.

 

**************************

     அர்ச்சனாவின் முடிவினை ஏற்று மறுக்காமல் அமருடன் அனுப்பி வைத்திருந்தனர், அன்பரசி, கிருஷ்ணன் தம்பதியர்.  மகனுக்கு அறிவுரைகளை வழங்கி வள்ளலாகி இருந்தனர் இருவரும்.  இருவரின் அறிவுரைகளால் அரண்டிருந்தான் அமர்.

ஒடிசாவிற்கு வந்தவுடன் வழமைபோல அலுவலக பணி, சைட் வர்க் என பிஸியாகியிருந்தான் அமர்.  அலைபேசியில் முக்கியமான அழைப்பிற்காக எடுத்து பயன்படுத்துவதோடு இணைய வழிப் பயன்பாட்டு முறைகளை குறைத்திருந்தாள் அர்ச்சனா.

பழைய நோக்கியா டபுள் ஒன் ஒன் ஸீரோ மாடலை வைத்துப் பயன்படுத்திய அர்ச்சனாவிற்கு திருமண நிச்சயம் செய்தபின் ஆண்ட்ராய்டு போனை வாங்கி சந்துரு பரிசளித்திருந்தான்.

அது வரை பயன்படுத்தியிராத புது மாடல் அலைபேசியை கையில் வாங்கியவுடன் அதில் இருக்கும் நன்மை தீமைகளைப் பற்றி அறியாமல் மனம் போன போக்கில் அதனுடன் நேரத்தை செலவிட்டாள். தன்னையறியாமல் சில விடயங்களுக்கு அடிமையாகியிருந்தாள் அர்ச்சனா.

அதன் விளைவும் பயங்கரமானதாகிப் போனதால் முன்பு போல இலகுவாக சமூக வலைதளங்களைப் பயன்படுத்த ஏதோ ஒரு அச்சம் மனதில் தோன்ற அலைபேசி பயன்பாட்டைக் குறைத்திருந்தாள் அர்ச்சனா.

வீட்டு வேலைகள் செய்வது, தொலைக்காட்சியில் படங்கள் பார்ப்பது மற்றும் இதர நேரங்களில் அருகில் குடியிருப்பவர்களுடன் ஊமை பாசையில் ஆரம்பத்தில் உறவாடியவள், நாட்கள் செல்லச் செல்ல ஓரிரு வார்த்தைகளை கணவனிடம் கேட்டு பேச தொடங்கியிருந்தாள்.

வாழ்க்கை தான் எதிர்பார்த்தது போல இல்லாத வருத்தம் மறைந்திருந்தது. அனைத்து பணிகளைச் செய்யவும் பணியாளர்கள், சோசியல் வர்க்கில் ஈடுபடுத்திக் கொள்ளும் குடும்பத்துத் தலைவிகளை படங்களில் பார்த்து பார்த்து அதையே தனது எதிர்கால கனவாக எண்ணி வந்தவளுக்கு வாழ்க்கை அதன் நிதர்சனத்தைப் புரிய வைத்திருந்தது.

சின்னத்திரை, திரைத்துறை சார்ந்த மக்களின் கனவுகளை உள்வாங்கி வந்திருந்தவளுக்கு, கடந்து வந்த நாட்கள் உண்மையை உடைத்துச் சொல்லியிருந்தது.  ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்ள இயலாத மனம் தற்போது அதை இலகுவாக ஏற்றுக் கொள்ள முன்வந்திருந்தது.

தன்முனைப்பு எனும் குணத்தால் உண்டாகும் தீமைகளை உணர்ந்ததால், கணவனுடன் இலகுவாக, இணக்கமாக வாழும் வாழ்க்கையின் ரகசியத்தை உணர்ந்து கொள்ள தன்னை ஆயத்தப்படுத்தியிருந்தாள் அர்ச்சனா.

கணவனின் ஒவ்வொரு அசைவையும் எதற்காக என உணரும் அளவிற்கு அவனை உள்வாங்க ஆரம்பித்து இருந்தாள்.  இதனால் சிறுபிள்ளைத்தனமான சண்டைகள், கருத்து வேறுபாடுகள் காணாமல் போயிருந்தது.

அர்ச்சனாவின் மாறுதல்கள் மனதிற்கு மகிழ்வைத் தந்திருந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் வழமைபோல் அமர் தனது கடமைகளையும், பணிகளையும் ஒருங்கே கவனித்திருந்தான்.

கணவனின் தொழில்முறை சார்ந்த விடயங்களைப் பற்றி அறிய ஆர்வம் காட்டிய மனைவியை ரசித்திருந்தான்.  ஆர்வம் மறையும் முன் தன் பணிகள் பற்றிய மனைவியின் கேள்விகளுக்கு விடையளித்திருந்தான்.

மண்ணியல் சார்ந்த அமரின் ஆய்வுகளை ரசிக்கவும் ஒரு ரசிகை அவனுக்கு புதியதாக மனைவி எனும் உறவில் கிடைத்திருந்தாள். அர்ச்சனாவின் அறியாமையினால் செய்த விடயங்களை சுட்டிக் காட்டி கிண்டல் செய்யும் பழக்கம் அமரிடம் இல்லாததால், கணவன் பற்றிய சிந்தனைகள் உயர்வாக மாற தொடங்கியது.

பணிகளின் நிமித்தமாக வெளியூர் செல்பவன் உரிய நேரத்தில் திரும்பாவிட்டால் அழைத்து கேட்கும் அளவிற்கு கணவனின் நலனில் அக்கறை கொண்ட மனைவியாக மாறியிருந்தாள்.

வாழ்க்கை புதுப்புது விடயங்களை அறிமுகம் செய்ய ஒவ்வொன்றையும் ஆர்வமாக கற்றுக் கொள்ளவும், கண்டதை, கேட்டதை கணவனுடன் பகிர்ந்து கொள்ளவும் பழகியிருந்தாள் அர்ச்சனா.

மாற்றங்கள் ஒன்றே மாறாத இவ்வுலகில் மனைவியின் நல்ல மாற்றம் அமருக்கு நிறைவைத் தந்திருந்தாலும், தன்னைவிட வயதில் மிகவும் சிறியவளான அர்ச்சனாவை பாதுகாப்பதில் அவனுக்கு நிகர் அவனே எனுமளவிற்கு தன் மதியூகத்தால் அதற்கான ஏற்பாடுகளை மனைவியின் ஒப்புதலுடன் செய்து வைத்திருந்தான்.

பணி முடிந்து வரும்வேளையில் கணவனின் வருகைக்காக காத்திருந்தாள் அர்ச்சனா.  வரும் வேளை கடந்து ஒரு மணித் தியாலம் கூடுதலாக ஆனபின்பும் வராததால், அமரின் அலைபேசிக்கு அழைக்க… அது நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக செய்தி வந்தது.

பதற்றத்துடன் அர்ச்சனா காத்திருக்கையில் சிறிய கட்டுடன் வீட்டிற்கு வந்த கணவனைக் கண்டு இயல்பாகப் பதறியிருந்தாள் பெண்.

     ************************

error: Content is protected !!