உலாவரும் கனாக்கள் கண்ணிலே-7

அமரின் வீட்டினர் அனைவரும் வழக்கமான கலகலப்புடன் இருக்க, அதில் கலந்துகொள்ள விரும்பாமல் அர்ச்சனா தனித்திருந்தாள்.  அர்ச்சனா வளர்ந்த சூழல் அவளை இயல்பாக இருக்கவிடவில்லை.

ஆனால், வீட்டில் இருந்த பெரியவர்கள் முதல் சிறிய குழந்தைகள் வரை அர்ச்சனாவின் செயலை விமர்சனம் செய்யாமல், அப்படியே தனித்து இருக்க விடாமல், புது இடத்தில் பொருந்த சங்கடப்படுவதாக… அர்ச்சனாவை எண்ணி, அவளிடம் தன்முனைப்பு இல்லாமல் பழகி வந்தனர்.

அவளாக வந்து வீட்டில் உள்ள யாரிடமும் இணக்கமான உறவு பாராட்ட எண்ணவில்லை என்பதைவிட தவிர்த்திருந்தாள் என்பதே பொருத்தமாக இருக்கும்.  அமருக்கு அவளின் செயல்பாடுகளைக் கொண்டு அவளின் எண்ணங்களை யூகித்திருந்தாலும், தெரியாததுபோல சிலவற்றை அன்பாகவும், சிலவற்றை கண்டிப்பாகவும் செய்யுமாறு பணித்து வந்தான்.

அமரின் காயங்கள் முற்றிலும் குணமாகியிருக்க, தேனிலவு கொண்டாட்டமாக கேரளாவின் ஆலப்புழா செல்ல முன்பே பதிவுசெய்திருந்த நாளில் பெரியவர்களின் ஆசியோடும், அண்ணன், அண்ணியின் வழிகாட்டுதலோடும் அர்ச்சனாவுடன் கிளம்பியிருந்தான்.

 

அமருடன் பயின்ற கல்லூரித் தோழனான சசிதரனின் வற்புறுத்தலான அழைப்பிற்கு இணங்கி, கேரளாவின் ஆலப்புழாவை தேனிலவுக்கு தேர்ந்தெடுத்திருந்தான், அமர்.  இரவு ஒன்பது மணியளவில் ஆலப்புழாவிற்கு வந்து சேர்ந்த இருவரும், சசிதரன் குடும்பத்தாருக்குச் சொந்தமான ‘கருணா இன்னிற்கு’ அவன் அனுப்பியிருந்த காரில் வந்து சேர்ந்தனர்.  இரவு நேரமானதால் காலையில் நேரில் சந்திப்பதாக அலைபேசியில் சசிதரன் தெரிவித்திருந்தான்.

அறைக்குச் சென்று இருவரும் தங்களை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, புத்துணர்ச்சியுடன், கருணா ரெஸ்டாரண்டில் உண்ணச் சென்றனர். சசிதரனின் நண்பன் என்பதால் சிறப்பு கவனிப்பு அமருக்கு.

வீட்டை விட்டுக் கிளம்பியதில் இருந்து அமருக்கு பெரிய ஆச்சர்யம் என்னவெனில், வீட்டில் ஒரு வார்த்தை பேசவும் யோசித்து வந்த அர்ச்சனா, கிளம்பியது முதல் மலர்ச்சியுடன் வாயை மூடாமல் பேசியது தான்.

“ஸார்… நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நேரமாக பேசிக்கிட்டே இருக்கீங்க. என்ன சாப்பிடணும்னு சொன்னா, உடனே கொண்டு வந்திடுவேன். சாப்பிட்டுக்கிட்டே நீங்க பேசலாம்…” என்றான் இருவரின் தேவைகளைக் கவனிக்க தேங்கியிருந்த சர்வர்.

ஆலப்புழா, பெரும்பாலும் தமிழக மக்களும் வந்து செல்லக்கூடிய சுற்றுலாத்தலம் ஆகையால், சில இடங்களில் தமிழக உணவுகள் கிடைக்கும். கருணா இன்னில், கேரளா, தமிழ்நாடு, வடகத்திய சப்பாத்தி, டால் மற்றும் இதர சைடிஸ்கள் என இரு வகையான மாநில உணவுகளும், பொதுவான வடமாநில உணவும் கிடைக்கும். சசிதரன் தமிழ்நாட்டில் தனது முதுகலை படிப்பை முடித்துவிட்டு திரும்பியவுடன் கொண்டு வந்த மாற்றங்களில் இதுவும் ஒன்று.

“நீ என்ன சாப்பிடுற? ” அர்ச்சனாவை பார்த்துக் கேட்டான் அமர்.

“எனக்கு ரெண்டு இட்லி போதும்”, அதற்குமேல் எதுவும் கேட்கவில்லை அர்ச்சனா.

“எங்க ரெண்டு பேருக்குமே முதல்ல ரெண்டு இட்லியும் வடையும் கொடுங்க. அதுக்கு அப்புறம், ரவா தோசை குடுங்க…”

“எனக்கு இட்லி மட்டும் போதும். தோசை எல்லாம் வேண்டாம்” அவசரமாக குறுக்கிட்டாள் அர்ச்சனா.

“சரி, அப்போ… எனக்கு ஒரேயொரு தோசை மட்டும் குடுங்க…” என்று அமர் சொல்ல, அங்கிருந்து நகர்ந்தான் சர்வர்.

சற்று நேரத்தில் இட்லியும் வடையும் வந்து சேர, இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர். பேசியபடி இருவரும் சாப்பிட்டு முடித்து ஓட்டலை விட்டு வெளியே வந்த போது வாட்ச்சைப் பார்த்தான் அமர். மணி பத்தைத் தாண்டி இருந்தது.

 

அமருக்கு, மனைவியுடன் அன்பாகப் பேசிப், பழகி அதன் பின்னரே தாம்பத்ய உறவில் ஈடுபட விரும்பம். தனது உள்ளத்தையும் மறைக்காது மனைவியிடம் தெரிவித்திருந்தான், அமர்.

திருமணம் முடிந்த உடனே தாம்பத்யம் நடப்பது இயல்பு, அப்படி நடக்காத நிலையில் மாப்பிள்ளைக்கு குறைகள் ஏதேனும் இருக்கும் அல்லது மாப்பிள்ளைக்கு வேறு பெண்ணின் மீது நாட்டமிருக்கும் என அர்ச்சனாவின் திருமணமான கிராமத்துத் தோழிகள், திருமண சிறப்பு(ஸ்பெசல்) தனி(Tuition) வகுப்பின் வாயிலாக இலவசமாக  சில தம்பதிகளின் இணைபிரியா இணக்கமான உறவுக்கு வழி கூறியிருந்தனர்.  தோழிகளின் பகிர்தலில் சில உண்மைகள் இருந்தாலும், திருமணத்தன்று நடக்கவேண்டிய நிகழ்வு, நடந்த விபத்தால் தள்ளிப்போகச் செய்ததாக எண்ணியிருந்தாள், அர்ச்சனா.

எதிர்பாரா விபத்தினால் உண்டான காயத்துடன் கணவன் தன்னை நெருங்குவதை அருவருப்பாக எண்ணியதால் கணவனிடமிருந்து விலகியே இருந்தாள், அர்ச்சனா.  அதை பேச்சிலும், செயலிலும் அமரிடம் காட்டியதால், அதை புரிந்து கொண்ட அமர் விலகியிருந்தான்.

தனது அண்ணனும் கணவனும் பேசியதை அறைகுறையாக எதிர்பாரா விதமாக கேட்டிருந்தாலும் அதற்காக அலட்டிக்கொள்ளவில்லை.   ஏதோ புரிந்தது மாதிரி இருந்தாலும், குழப்பிக் கொள்ளவில்லை.  ஏனெனில், உடன்பிறந்தவனுக்கு தெரிந்த விடயம் ஆகையால் தனக்கு எந்த பாதிப்பும் இல்லாத நிகழ்வாக இருக்கும் என விட்டிருந்தாள்.

 

ஆலப்புழாவின் காலை குளிருக்குப் பயந்து உல்லன் பெட் ஷீட்டுக்குள் அடைக்கலம் புகுந்திருந்த அர்ச்சனா கண் விழிக்க வெகு நேரமாகியிருந்தது.

தொடர் பயணம் தந்த களைப்பைக் களைந்து, அவளை புத்துணர்ச்சியாக அனுப்பியிருந்தது முந்தையநாள் இரவுத் தூக்கம்.  திருமணம் முடிந்த பிறகு, ஒரு இரவுப் பொழுதை யாருடைய தலையீடும் இல்லாமல்,  நினைத்ததை கணவனுடன் மனம்விட்டு பேசி, அணுஅணுவாய் ரசித்து, அனுபவித்த பூரிப்பும் அவளது முகத்தில் தெரிந்தது.

தனக்கு அருகில் சற்று விலகிப் படுத்திருந்த அமரை எங்கே என்று தேடினாள். அவனைக் காணவில்லை. ஒருவேளை பாத்ரூமில் குளித்துக் கொண்டிருப்பானோ என்று தேடினாள். அங்கேயும் அவன் இல்லை. அவன் குளித்து முடித்து வெளியேறியிருந்ததை ஈரமாகியிருந்த டவலும், ஈரம் காயாமல் இருந்த சோப்பும் உறுதி செய்தன.

உடனே, கதவு திறந்து இருக்கிறதா, மூடி இருக்கிறதா என்று பார்த்தாள். வெளியே பூட்டப்பட்டு இருந்தது. அமர்தான், கதவைப் பூட்டிவிட்டு எங்கோ சென்றிருந்தான்.
அர்ச்சனாவிற்கு பதற்றமாகிவிட்டது. மொபைலை எடுத்து, அமரின் நம்பரை அவசரமாகத் தேடி டயல் செய்தாள். அவளை மேலும் பதற்றமாக்க விடவில்லை அவன். மூன்றாவது ரிங்கிலேயே மொபைலை ஆன் செய்தான்.

“ஹாய் அர்ச்சனா. குட் மார்னிங்.”

“குட் மார்னிங் எல்லாம் இருக்கட்டும். இப்போ நீங்க எங்கே இருக்கீங்க?”

“கூல் அச்சுமா. நான் உன்னை விட்டுட்டு வேறு எங்கேயும் போகலை. சூரியன் வர்றதுக்கு முன்னாடியே சசிகூட குளிர்ல வாக்கிங் போக வெளிய வந்துட்டேன். இங்க வாக்கிங் போகறது சுகமான அனுபவம். அதான், காலையிலேயே குளிச்சிட்டு வெளியே கிளம்பி வந்துட்டேன்.”

“என்னையும் வாக்கிங் போக கூட்டிட்டுப் போய் இருக்கலாமே…”

“எனக்கும் அந்த ஆசை இருந்துச்சு. ஆனா…”

“என்ன ஆனா…”

“அதுபத்தி நேர்லயே சொல்றேனே…”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. இப்பவே அதுக்கான காரணம் சொல்லியாகணும்.”

“அடம்பிடிக்காத அர்ச்சனா. இன்னும் அஞ்சு நிமிஷத்துல உன் முன்னாடி நிப்பேன். அதுக்குள்ள பிரஷ் பண்ணிட்டு, காஃபி சாப்பிட ரெடியா இரு.”

“சமாதானப்படுத்துறது சரிதான். நீங்க இங்கே வந்த உடனேயே அந்த காரணத்தைத்தான் முதலில் கேட்பேன். பதில் சொல்ல ரெடியா வாங்க…” அமரிடம் அதற்கான பதிலை எதிர்பார்க்காமல் மொபைல் இணைப்பைத் துண்டித்தாள் அர்ச்சனா.

சரியாக ஐந்து நிமிடம் வேகமாகக் கரைந்திருந்தது. திடீரென்று அர்ச்சனாவின் மொபைல் அழகாகச் சிணுங்கியது. மொபைல் திரையில் ”டார்லிங்” என்கிற பெயர் பளிச்சிட்டது. அமரை, அப்படி தான் தனது மொபைலில் பதிவு செய்திருந்தாள். அடுத்த நொடியே அறையின் ஹாலிங் பெல் ஒலித்தது. உடனே கதவைத் திறந்தாள்.

‘நான் வெளியே சென்று நீ மட்டும் லாட்ஜ் அறையில் தனியாக இருக்கும்போது முதலில் மொபைலில் மிஸ்டு கால் கொடுத்துவிட்டு ஹாலிங் பெல்லை அடிப்பேன். அதுக்குப் பிறகுதான் கதவைத் திறக்கணும்’ என்று அமர் ஏற்கனவே சொல்லி இருந்ததால் கதவை ஆர்வமாகத் திறந்தாள் அர்ச்சனா. எதிரே அமர்!

“ஹாய்… நைட் நல்லாத் தூங்கினீயா?”

“ஆமாம்” என்று பதில் சொல்வதற்கு     வாயெடுத்தாள் அர்ச்சனா. அதற்குள் அவனே முந்திக்கொண்டு பேசினான்.

“கண்டிப்பா நீ நல்லாத் தூங்கியிருப்ப. உன்னோட கோலத்தைப் பார்த்தாலே தெரிஞ்சிதே…” என்று அமர் சொல்லவும்… சட்டென்று அமைதியானாள். எதை மனதில் வைத்துக்கொண்டு அமர் இப்படிப் பேசுகிறான் என்பது அவளுக்குப் புரியவில்லை.

“ரொம்பவும் யோசிக்காத அச்சுக்குட்டி. இப்போ உன்னோட முகத்தைப் பாக்கும்போது, ஆயிரம் தாமரை மொட்டுக்கள் ஒரேநேரத்தில் மலர்ந்தால் எப்படியொரு பிரகாசம் இருக்குமோ… அப்படியொரு பிரகாசம் தெரியுது.

அதனாலத்தான், நீ நைட் முழுக்க நல்லாத் தூங்கியிருப்பன்னு சொன்னேன்” என்று சொல்லிவிட்டு தனக்குள்ளே சிரித்துக் கொண்டான், அமர்.  ஆனால், அர்ச்சனாவிற்குதான் உண்மை சட்டென்று பிடிபடவில்லை. அதனால், பேச்சை மாற்றினாள்.

“அதுசரி… இன்னிக்கு காலையில ஏன் என்னையும் வாக்கிங் கூட்டிட்டு போகலன்னு கேட்டதுக்கு நேர்ல பதில் சொல்றேன்னு சொன்னீங்களே… அது என்ன பதில்?”

“இப்பவே அதை சொல்லித்தான் ஆகணுமா?”

“கண்டிப்பா சொல்லித்தான் ஆகணும்!”

“அது சாதாரண விஷயம்தான். சொல்ல வேணாம்னு நினைக்கிறேன்.”

“இப்படி சஸ்பென்ஸ் வெச்சுப் பேசினா… நீங்க என்ன ரீஸன் சொல்லப் போறீங்கங்ற இன்ட்ரஸ்ட்தான் எனக்கு இன்னும் அதிகமாகும். அதனால, இப்பவே சொன்னா நல்லா இருக்கும்.”

“நான் அதுபத்தி சொல்றதுல பிரச்னை ஒண்ணுமில்ல. நீதான் தப்பா எடுத்துப்பீயோன்னு கொஞ்சம் பயமா இருக்கு…”

அமர் இப்படிச் சொன்னதும், சட்டென்று அமைதியாகி தனக்குத்தானே அப்படியொரு கேள்விக் கேட்டுக் கொண்டாள் அர்ச்சனா.

‘ஏதாவது விவகாரமான விஷயமா இருக்குமோ? பேசாம அப்படியே விட்டுடுவோமா…, விட்டாலும் மனசு கேக்காதே’ என்று அவள் நினைத்தாலும், அவளது ஆழ்மனதின் இன்னொரு பக்கத்தில் அந்த சஸ்பென்ஸ் விஷயத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆவலும் இருந்தது. அதனால் அந்தப் பேச்சை அவள் ஒத்திப்போடவில்லை.

“இல்லை நீங்க. அது, என்ன விஷயமா இருந்தாலும் சரி, நீங்க அதை இப்பவே என்கிட்ட சொல்லித்தான் ஆகணும்.”

“என்ன அர்ச்சனா… இவ்ளோ அடம்பிடிக்குற?”

“என்னது அடம்பிடிக்கிறேனா? நான் என்ன உங்கக்கிட்ட இருபது பவுன்ல தங்க ஆரமும், நெக்லஸுமா வாங்கிக் குடுங்கன்னா கேட்டேன்? என்னை வாக்கிங் போகுறதுக்கு ஏன் கூட்டிட்டு போகலன்னுதானே கேட்டேன்?”

“அம்மா தாயே… உண்மையைச் சொல்லிடுறேன். சாதாரண மேட்டருக்கு இவ்ளோ டயலாக் எல்லாம் அதிகம். இங்கே வா… என் பக்கத்துல வந்து உட்காரு. உன்னோட காதுல ரகசியமாவே அதைச் சொல்றேன்.”

“என்னது… ரகசியமா?”

“ரகசியம்தான்! வேற யாருகிட்டேயும் சொல்லிடாத”, சரியென்று தலையாட்டிவிட்டு அமர் முகத்துக்கு அருகில் தனது காதைக் கொண்டு சென்றாள் அர்ச்சனா. சிரித்துக் கொண்டே பதில் சொன்னான் அவன்.

“இன்னிக்கு அதிகாலையில உன்னை வாக்கிங் போவோமான்னு கூப்பிடுறதுக்காக எழுப்பினேன். நீ எழுந்திருக்கறதுக்கு பதிலா வேகமாக உருண்டு திரும்பின. அப்போ நீ போட்டு இருந்த நைட்டியோட முன்பக்க நாட் அவிழ்ந்திடுச்சு. உன்னோட அந்தக் கோலத்துல, நான் இதுவரைக்கு நேர்ல பாக்காததப் பாத்துட்டேன்…”

அமர் இப்படிச் சொல்லவும் அவனிடம் இருந்து வேகமாக அகன்று தள்ளி உட்கார்ந்த அர்ச்சனா, கழுத்தை ஒட்டிப் போட்டிருந்த தனது துப்பட்டாவை வேகமாக கீழ் நோக்கி இழுத்துவிட்டு சரிசெய்தாள், அவளை அறியாமல்! அவளது முகம், வெட்கத்தில் வேகமாக சிவந்தது.

மனைவியின் சிவந்த வதனம் வாவென அழைக்க, விலகியவளை அணுகி, முகத்தில் மூச்சடக்கி முத்துக்குளித்து, மூச்சிரைத்தவளை மூச்சிற்காக விடுவித்திருந்தான்.

அடுத்து வந்த நேரம் முழுமையும், அமரின் சீண்டல்களுடன், சீராட்டலும், தளுவலுமாக இருக்க ஒரு வழியாக குளித்து கிளம்பியிருந்தாள் அர்ச்சனா.

காலை உணவை முடித்துவிட்டு, ஆலப்புழா படகு வீட்டிற்கு செல்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமருடன் வந்து கொண்டிருந்த அர்ச்சனா, தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று அடிக்கடி பார்ப்பதும், வளைந்து நெளிந்து ஆடையைச் சரி செய்வதுமாக இருந்தாள். பெரும்பாலும் சுரிதார் மட்டுமே அணிந்து பழகியிருந்தாள்.  அமர் கட்டாயப்படுத்தி அணியச் சொன்ன ஜீன்ஸ் பேண்ட், டீ-சர்ட் கோட்டுடன் அவளுக்குப் புதிது என்பதால், அந்த ஆடை அவளுக்கு அசவுகரியமாகத் தோன்றியது.

ஆனால், அர்ச்சனாவின் நடவடிக்கைகளால் மிகச் சிலரே அவளை பார்த்தார்களே தவிர, மற்றபடி அவளைப் பார்க்க வேண்டும் என்று யாரும் பார்க்கவில்லை. அர்ச்சனாவின் மனஓட்டத்தைப் புரிந்துகொண்ட அமரே பேசினான்.

“அச்சு… இது நம்ம ஊரு கிடையாது. எங்கிருந்தெல்லாமோ வர்ற டூரிஸ்ட்கள்தான் இங்கே அதிகம். இங்கே வர்ற எல்லோருமே மாடர்னா டிரெஸ் போட்டுக்கத்தான் ஆசைப்படுவாங்க. ஜீன்ஸ் பேண்ட்டும், டீ-சர்ட்டும், இன்னிக்கு உள்ள மாடர்ன் கல்ச்சர்ல தவிர்க்க முடியாத ஒண்ணு. அதைப் போட்டுக்கறதுலேயும் தப்பே இல்லை.”

“ஆனா… எல்லா ஆண்களும் ஒருமாதிரியா பார்ப்பாங்களே…”

“அப்படியெல்லாம் அவங்க பார்க்கறதா நீதான் கற்பனை பண்ணிக்கணும். இங்கல்லாம் சாரி உடுத்தியிருந்தாதான் வித்யாசமா பாப்பாங்க, சுரிதார் மாதிரி ஜீன்ஸ் டீசர்ட் போட்டாலும் ஒன்னும் வித்யாசமா பாக்கமாட்டாங்க… ஆனா யாரும் பாக்கக்கூடாதுன்னா நாம் ரூமுக்குள்ளயேதான் இருக்கணும்! எனக்கு ஓகே… நீ என்ன சொல்ற?” அமரின் இந்தக் கேள்விக்கு அர்ச்சனாவால் உடனடியாகப் பதில் சொல்ல முடியவில்லை. அமைதியாக இருந்தாள்.

“அச்சு… உன்னோட நிலைமை எனக்குப் புரியுது. ஆனாலும், என் ஒய்ப் எப்படியெல்லாம் மாடர்னா டிரெஸ் பண்ணிக்கணும், அவளோட எப்படியெல்லாம் ஜோடியா ஊர் சுத்தணும்னு நான் பெரிய கற்பனையிலேயே கோட்டை கட்டி, அதுக்கு உன்ன ராணியாக்கி வெச்சிருக்கேன். அதை மட்டும், எக்காரணத்தைக் கொண்டும் வீணாக்கிடாதே…”

“…” , மறுபடியும் அர்ச்சனாவிடம் மவுனம்தான்.

“மவுனமா இருந்தது போதும் அச்சு. இங்கே நீ மட்டும்தான் ஜீன்ஸ் பேண்டும், டீ-சர்ட்டும் போட்டுக்கல. நமக்கு எதிர்ல தன்னோட ஹஸ்பண்டோட உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்கற பொண்ணைப் பாரு. அவங்க போட்டு இருக்கற டீ-சர்ட்டையும் பாரு. ரொம்பவும் “லோ நெக்”காப் போட்டு இருக்காங்க, ஈவன் கோட் கூட இல்ல. தான், அப்படி டிரெஸ் போட்டு இருக்கறதுல எந்தத் தப்பும் இல்லன்னு அவங்க நெனைக்கிறாங்க.

அப்படியொரு டிரெஸ் போட்டு இருக்கறதுனால, தான் இன்னும் இளமையா, ரொம்ப ரொம்ப அழகா இருக்கறதாவும் நெனைக்கறாங்க. ஆனால் நீ அவங்கள விட பெஸ்டா, டீசண்டா ஒரு டிரெஸ் போட்டுட்டு ஏன் மனச போட்டு குழப்பிக்கிற, நீயும் அவங்களல்லாம்விட அழகா இருக்கிறனு  நினைச்சிக்கோயேன்…”

இப்போது அமரை லேசாக முறைத்தாள் அர்ச்சனா.

“என்ன புரிஞ்சிக்க அர்ச்சனா. நெய்வேலில இந்த டிரெஸ் உன்ன போட சொன்னேனா? இல்லைல. வெளிய எங்கயாவது போகும் போது, அதுவும், இந்த வயசுலதான் இந்த மாதிரியெல்லாம் டிரெஸ் போட்டு அழகு பார்க்க முடியும். எனக்கு பாக்க அழகா இருக்க.  ஆனா யாரும் உன்னை தப்பான கண்ணோட்டத்துல பாக்கற மாதிரியான ட்ரெஸ்ஸ உனக்கு நான் வாங்கிக் கொடுக்கல, நீ போட்டுத்தான் ஆகணும்னு நான் வாங்கிக் கொடுத்த டிரெஸ், உன்னை இன்னும் அழகா காட்டுதே தவிர, துளியும் செக்ஸியா காட்டல. அப்படி இருக்கும் போது, இந்த டிரெஸ் போட்டுக்கிட்டு வெளியே வர்றதுல என்ன தப்பு இருக்கு?”

அமருக்குப் பதில் சொல்ல அர்ச்சனா வாய் திறந்த போது, அருகில் சர்வர் வந்து நின்றான்.  இருவருக்கும் வேண்டியதைக் கூறி, எடுத்துவரும் வரை அர்ச்சனாவை சமாதானம் செய்து ஒரு வழியாக படகு வீட்டிற்கு செல்ல ஆயத்தமாகினர் இருவரும்.

 

மலையாளத்தில் கெட்டு என்பது ”குடியிருப்பு கட்டமைப்புகளையும்”, வல்லம் என்பது ”படகையும்” குறிக்கிறது. இந்த படகுகள் மரப்பலகைகள் மீது கூரை வேயப்பட்டவையாகும். இந்த படகு பலா மரக்கட்டைகளால் செய்யப்பட்டு தென்னை நாரினால் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும்.

இது பிறகு வேகவைக்கப்பட்ட முந்திரி கொட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பு பிசினால் பூசப்படுகிறது. கவனமான பராமரிப்புடன், ஒரு கெட்டுவல்லம் தலைமுறைகளுக்கு நீடித்திருக்க முடியும்.

கெட்டுவல்லத்தின் ஒரு பகுதி மூங்கில் மற்றும் தேங்காய் நாரினால் மூடப்பட்டிருக்கும், அது படகோட்டிக்கு ஓய்வறையாகவும் சமையலறையாகவும் இருக்கும்.  பெரும்பாலும், கணவன், மனைவியாக இருக்கும் நபர்களையே படகோட்டுதல் மற்றும் சமையல் பணிகளை கவனித்தல் பணிக்கு அமர்த்துகின்றனர். படகிலேயே சாப்பாடு தயாரிக்கப்படும், அதற்கு துணையாக காயல்களில் இருந்து புதிதாகப் பிடிக்கப்பட்டு சமைக்கப்பட்ட மீன்களும் இருக்கும்.

ஆலப்புழாவில் மட்டும், ஐநூருக்கும் அதிகமான படகுவீடுகள் உள்ளன.  மூங்கில் பாய்கள், குச்சிகள் மற்றும் பாக்கு மரங்கள் கூரைக்காகப் பயன்படுத்தப்படுகின்றனர், தேங்காய் நார் பாய்கள் மற்றும் மரப்பலகைகள் தரைக்காகவும் தென்னை மரங்கள் மற்றும் தேங்காய் நார்கள் படுக்கைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இப்போதெல்லாம், விளக்கிற்காக சோலார் பேனல்களும் விரும்பப்படுவதால் சிலர் அதையும் செயல்படுத்தி வருகின்றனர்.

படகு வீடுகளில், அலங்கரிக்கப்பட்ட படுக்கையறைகள், நவீன கழிப்பறைகள், வசதிமிக்க வரவேற்பறைகள், ஒரு சமையலறை மற்றும் ஒரு பால்கனியையும் உள்ளிட்டு நல்ல ஓட்டல் அறைகள் போன்ற வசதிகளுடன் இருப்பதால் தனிமையை விரும்பும் தேனிலவு தம்பதியர் இங்கு வருவதையே அதிகம் விரும்புகின்றனர்.

மரத்தின் வளைந்த கூரை பாகங்கள் அல்லது பின்னப்பட்ட பனையோலைகளின் நிழல் தருகின்றன. அதனால் இடையூறில்லாமல் காட்சிகளையும் பார்க்க முடியும்.  பெரும்பாலான படகுகள் உள்ளூர் துடுப்புக்காரர்களால் செலுத்தப்படும். சில படகுகளில் நாற்பது எச்பி இன்ஜின்களும் இருக்கும் இவர்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த படகு வீட்டிலும் இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது.

இரண்டு அல்லது மூன்று படகுவீடுகளை ஒன்றாக இணைத்து படகு இரயில்களும் இயக்கப்படுகிறது.  அவை பெரிய குழுக்களாக வரும் சுற்றுலா பார்வையாளர்களுக்காகப் பயன்படுகிறது.

சசிதரனுக்கு சொந்தமான பத்து படகு வீடுகளில் ஒன்றை தனது நண்பனின் தேனிலவிற்காக ஏற்பாடு செய்திருந்தான்.  திருமணத்திற்கு வந்திருந்தபோது தன் புது மனைவியிடம் நண்பனை அறிமுகம் செய்திருந்தான் அமர்.  ஆனால், அர்ச்சனாவிற்கு பார்த்த நினைவு இல்லை என கூறிவிட்டாள்.

இருவரையும் படகு வீடு வரை தனது காரிலேயே வந்து விட்டுச்சென்றிருந்தான், சசிதரன்.  மேலும், தனது படகோட்டிகளிடம், அமரை அறிமுகம் செய்ததோடு இரு முழு நாட்களுக்குத் தேவையானவற்றை சரியான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதா என்பதையும் கேட்டறிந்து விடைபெற்றிருந்தான் சசிதரன்.

ரசிப்புத் தன்மை மிகுந்த அமர், பால்கனியில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தவாறு பயணத்தை ரசிக்க ஆரம்பித்திருந்தான்.  இளையராஜாவின் பாடல்களுடன், இன்பமாக தேனிலவை தன் இனியவளுடன் ரசிக்க ஆயத்தமாகியிருந்தான்.  படகு வீட்டிற்குள் நுழைந்து அரை மணி தியாலத்தில், ஆடையை மாற்ற வேண்டுமென நச்சரித்த தன்னவளிடம் சேலையை உடுத்துமாறு கூறியிருந்தான்.

இதுவரை அமரின் வற்புறுத்தல்களுக்கு மட்டுமே செவிமடுப்பவள், முதல் முறையாக அவன் கூறியவுடன் உடையை மாற்றச் சென்றிருந்தாள்.

**************

அமரும், அர்ச்சனாவும் தேனிலவுக்கு கிளம்பிச் சென்றிருக்க, கிருஷ்ணன் மற்றும் அன்பரசி இருவரும் மகள் ஜனதாவைப் பார்க்க விருத்தாசலம் சென்றிருந்தனர்.

வீட்டில் சற்று ஓய்வாக இருந்தாள் பத்ரியின் மனைவி உமா. கையில் இருந்த புத்தகத்தில் வாசித்த வாக்கியங்களில் தன்னை மறந்து, நினைவுகளில் உலாச் சென்றிருந்தவளை, நினைவுகளிலிருந்து மீட்டு வந்தது, காலிங் பெல்.

வெளியே வந்த உமாவிடம், வீட்டின் உறுப்பினர்தானா? கொரியர் வந்திருக்கும் பெயருக்கு உரியவர் என்பதை ஊர்ஜிதம் செய்தான், கொரியருடன் வந்தவன். கொரியரை கொடுத்தவன் ஒப்புகை கையொப்பம் பெற்றுச் சென்றிருந்தான்.

வீட்டில் நடந்த கொரியர் விடயம் அறியாதவள், அர்ச்சனாவின் பெயருக்கு வந்த கொரியரை பொறுப்பாக அமரின் அறையில் வைத்துவிட்டு, விட்டதைத் தொடர்ந்தாள் புத்தகத்தில்… உலா செல்ல உதவுமா… புத்தகத்தின் பொக்கிஷ வரிகள்?!

———————————–

 

உலா வரும் கனாக்களை நனவாக்க உல்லாசமாய்

தேனிலவில் சங்கமித்திருந்தனர் தம்பதியர்!!!

********************

 

error: Content is protected !!