UKK8
UKK8
உலாவரும் கனாக்கள் கண்ணிலே-8
அதிகாலையில் எழுந்து அவசரமாக வெளியே கிளம்பிக் கொண்டிருந்த கணவனை கண்ட ஜனதா, தேனீருக்காக அடுக்களைக்கு வந்திருந்தாள். கணவனுக்கு டீ போட்டு எடுத்துவரும் முன் தனது பைக்கில் சென்றிருந்தான், சந்துரு.
மனதில் தோன்றிய வருத்தத்தை மறைத்தவள், மற்ற பணிகளில் கவனம் செலுத்தினாள். அனைத்து வீட்டு வேலைகளையும் ஜனதாவே கவனித்துக்கொள்ள, சுசீலா ஓய்வாக இருந்தார்.
“ஏம்மா ஜமுனா….”, அடுக்களையில் வேலையாக இருந்தவள், மாமனாரின் அழைப்பில் “வரேன் மாமா”, என்றவாறு கையில் தேனீர் டம்ளருடன் வந்து, “இந்தாங்க மாமா”, என்று கொடுக்க, அதை கையில் வாங்கியவர்
“சேகர் எங்கமா, இன்னும் எந்திரிக்கலயா?”, எனக் கேட்டபடி தேனீரை பருக ஆரம்பித்தார்.
“அவங்க காலையிலயே வெளியே போயிட்டாங்க மாமா”
“எங்க போனானு சொல்லிட்டு போனானா?”
“இல்லயே மாமா”
“முன்னதான் அப்டி இருந்தான், இப்ப நீ வந்துட்ட.. இனிமேலாது நீ அவனை கவனிச்சுக்கணும்மா”
“சரி மாமா”
“வேளைக்கு அன்னம் தண்ணி இல்லாம யாருக்காக இப்படி ஓடி ஓடி சம்பாதிக்கிறானோ!”, என்று முணுமுணுத்தவாறு
“உங்க அத்த எங்கம்மா?”
“டீ குடிச்சுட்டு மேல போனாங்க மாமா”
“அவளுக்கென்ன, குடுத்து வச்ச மகராசி, உன்ன மாதிரி ஒரு மருமக கிடைக்க புண்ணியம் பண்ணியிருக்கா, வேற என்னத்த நான் சொல்ல!”, என்றபடி அவரின் அன்றாட பணிகளுடன் ஐக்கியமாக வேண்டிய ஆயத்த பணிகளைக் கவனிக்கச் சென்றுவிட்டார்.
குளித்து கிளம்பிய செழியன், மருமகள் தந்த காலை ஆகாரத்தை உண்டவாறு, “ஜமுனா… அப்பா இப்போ போன் போட்டாங்கம்மா, இன்னிக்கு வீட்டுக்கு வராங்களாம், நான் கடைக்கு போயி திறந்து வச்சுட்டு வரேன்மா, என்ன வாங்கிட்டு வர மதியத்துக்கு?”
“உங்க விருப்பம் மாமா”
“வேற எதுவும் வேணுமா?”
“எல்லாம் இருக்கு மாமா”
“சரி, சேகருகிட்ட போனுல பேசிக்கறேன், நான் கிளம்பறேன்மா”, என்றவர்
“ஒரு வீட்டுக்குள்ள தான் இருக்கோம், இந்த சுசீலா… கண்ணுல படாம என்னதான் செய்யுறா? வேளைக்கு சாப்டறத மட்டும் மறக்கமாட்டா, காசுனா கண்ணுல படுறா, இல்லனா கண்டுக்க மாட்டா… போற போக்க பார்த்தா… கட்டுன என்ன மறந்துருவா போல”, என்று தனக்குள் பேசியவாறு கடைக்கு கிளம்பினார், செழியன்.
செழியன் சென்ற பிறகு வந்த சுசீலா, அடுக்களையில் இருந்த காலை உணவை எடுத்து உண்டவர், மீண்டும் மாடியறைக்குச் சென்று விட்டார்.
காலை வேளை, அடுக்களைப் பணிகளை முடித்தவள் தனது அறைக்குச் சென்று கணவனை அலைபேசியில் அழைத்தாள். அழைப்பு முழுவதும் போய் கட்டானது.
திருமணமாகி பத்து நாட்களில் கணவனுடனான பொழுதுகள் இனிமையாக கழிந்தாலும், அவன் வெளியே சென்றபின் சமையல் மற்றும் இதர வீட்டு வேலைகள் என தன்னை ஈடுபடுத்திக் கொண்டு நேரத்தை நெட்டித்தள்ளுவாள், ஜனதா.
இன்று அப்படி என்ன வேலையாக வெளியே சென்றான், எங்கு சென்றிருக்கிறான் என எதுவும் தெரியாமல் இருந்தவளுக்கு, தனது அழைப்பை கணவன் ஏற்காததால் சற்று அதிகமாகவே மனம் கவலைக்குள்ளானது.
அலைபேசியுடன் ஹாலில் அமர்ந்திருந்தவளின் அமைதியைக் கலைத்த கார் ஹாரன் சத்தத்தில், தனது கவலையை மறைத்தவாறு, சிரித்தபடி வந்து தனது பெற்றோரை வரவேற்றாள், ஜனதா.
“வாங்கப்பா, வாங்கம்மா”
“என்னடா ஜனு, நல்லாயிருக்கியா?”, என்றபடி வந்த அன்பரசி மகளின் முகத்தில் இருந்த வாட்டத்தைக் கவனித்துவிட்டார்.
ஹாலில் இருவரையும் அமர வைத்தவள், அருந்த எலுமிச்சை ஜூஸை கொடுத்துவிட்டு, “ஜூஸ் குடிங்கப்பா, இதோ வரேன்”, என்றபடி தனது மாமியாரிடம்… பெற்றோர் வந்த செய்தியை கூறச் சென்றாள்.
“அத்த…”
“…”, என்ன என்பது போல ஒரு பார்வை மட்டுமே
“அம்மாவும், அப்பாவும் வந்திருக்காங்க”
“ம்…”, அதற்கு மேல் பேசினால் மாமியார் கெத்து குறைந்துபோகும்.
“அத சொல்லத்தான் வந்தேன், நான் கீழ போறேன் த்த”, என கூறியபடி அங்கிருந்து அகன்றவளிடம்
“அவுங்க வரது உனக்கு முன்னாடியே தெரியுமா?”
மாமியாரின் கேள்விக்கு நின்றவள், “மாமா தான் காலைல சொன்னாங்க அத்த”
“ம்”, என்ற மாமியாரின் பதிலை ஏற்றவள், அதற்கு மேல் அங்கு நிற்காமல் கீழே வந்திருந்தாள்.
அரை மணித் தியாலம் கடந்தும் வராத மாமியாரை எதிர்பார்த்தபடி, பெற்றோரிடம் பேசியவாறு மதிய உணவுக்கான பணிகளை மேற்கொண்டாள் ஜனதா.
அதற்குள் அங்கு வந்த செழியன் “அடடே வாங்க சம்பந்தி, வாம்மா”, என்றவாறு கையில் வாங்கியிருந்த பொருட்களை மருமகளிடம் கொடுத்தார்.
“சீக்கிரமா சமைமா”, என்றபடி இருவருடன் பேசியபடி ஹாலில் அமர்ந்துவிட்டார்.
பல பழங்கதைகள் பேசியவாறு இரு வீட்டு பெரியவர்களும் இருக்க, சுசீலா எட்டிப்பார்க்காமல் அறையிலேயே இருந்தார். செழியன் வந்து வெகு நேரமாகியும் சுசீலாவைக் காணாததால், “எங்கம்மா சுசீலா”, என மருமகளிடமே கேட்டார்.
“மேல ரூம்ல தான் படுத்திருக்காங்க”
“இருங்க சம்பந்தி, நான் வரேன்”, என்றபடி அதிகம் மாடியேறாதவர் அன்று ஏறி அறைக்குள் நுழைந்தார். அங்கு படுத்தபடி சீரியல் பார்த்தபடி இருந்த சுசீலாவிடம்
“சம்பந்தகாரவங்க வீட்டுக்கு வந்திருக்காங்க, வந்து கவனிக்காம என்ன பண்ணிக்கிட்டு இருக்க?”
“வந்தா என்ன!, அதான் வந்தவுடனே கவனிக்க அவங்க மக இருக்காள்ல?”
“அதுக்காக… வந்தவங்கள வாங்கனு கேக்கனும்ல நீ”
“வாங்கனு நான் கேக்கலனா, வராம இருந்துக்குவாங்களா?”
“ஏய்! என்ன பேசறேனு யோசிச்சுதான் பேசுறியா?”, என சற்று கடுமையான குரலில் கேட்ட கணவனை சற்றும் பொருட்படுத்தாமல் இருந்த மனைவியை வேதனையோடு நோக்கினார்.
“…”
“நம்ம புள்ளயும் அவங்க வீட்டுக்கு வாழ போயிருக்கு, அத மறந்துராத”
“என் புள்ளைக்கு என்ன? அவ ராஜாத்தி, இவங்கள நம்பியா இருக்கா, நம்ம மாப்பிள்ளை இன்னும் ஒரு வாரத்துல அவரு வேல பாக்கற இடத்துக்கு அர்ச்சனாவை கூட்டிட்டு போயிருவாரு, அப்றம் எதுக்கு நான் இவங்க வீட்டுக்கு போகப் போறேன்?”
“ஆக… நீ அவங்க வீட்டுக்கு இனி போக மாட்ட?”
“அங்க என்ன வேல எனக்கு?, என் மக அங்க இருந்தா தான போகணும், அவதான் ஒரிசா போகப் போறாளே!”, பூரிப்பு
“ஒரிசாலயேவா அர்ச்சனா இருக்க போகுது?”
“இருந்தாலும் அவளுக்கு ஒரு குறையும் இனி வராது!”
“அதுக்காக நீ இப்படி நடந்துக்குவியா?”
“எப்படி நடந்துகிட்டேன்?”
“இது நல்லதுக்கு இல்ல சுசீலா, தப்பு பண்ணாத”
“நீங்க போயி வந்தவங்கள கவனிங்க”, என எகத்தாளமான குரலில் கூறிய சுசீலாவிடம் பேசுவது வீண் என முடிவு செய்தவர், கீழே இறங்கிவிட்டார்.
“சுசீலாவுக்கு கொஞ்சம் தலை சுத்தலா ரெண்டு நாளா இருந்தது, அதான் கீழ எழுந்து வர முடியாம படுத்து இருக்கு”, சமாளிப்பு பழக்கமாகியிருந்தது செழியனுக்கு.
“அப்டியா!?”, என இருவரும் ஆச்சர்யமாக மகளைப் பார்த்துவிட்டு, “ஜனதா எங்ககிட்ட சொல்லல, இல்லன அப்பவே போயி பாத்திருப்பேனே”, என்றபடி அன்பரசி எழுந்து நின்றிருந்தார்.
“ஜனதா, வா உங்க அத்தைய போயி பாத்துட்டு வருவோம்”, என மகளை உடன் அழைத்தார், அன்பரசி.
பதறிப் போன செழியன், “முன்னக்கி இப்போ பரவாயில்ல அவளுக்கு, நீ எதுக்குமா மேல அலஞ்சுகிட்டு, இப்போ அவளே கீழ வரேனு சொன்னா”, என தன்னை நொந்து எதிர்பாரா நிகழ்வுகளுக்கு ஏற்றவாறு பொருந்த பொய் சொல்லத் தெரியாமல் தடுமாற்றத்துடன் பொய்யை சொன்னார், செழியன்.
என்ன செய்வதென தெரியாமல் விழித்தபடி நின்றிருந்தாள், ஜனதா. அப்போது வீட்டிற்கு திரும்பியிருந்தான் சந்துரு. காலையில் எழுந்தது முதல் எதுவும் சாப்பிடாமல் வீடு திரும்பிய கணவனைப் பார்த்தவள், உடனே தோசை வார்க்க அடுப்பில் கல்லை வைத்திருந்தாள், ஜனதா.
வந்தவர்களை வரவேற்றவன், கிச்சனுக்குள் சென்று மனைவியிடம் ஏதேனும் வாங்கி வர வேண்டுமா எனக் கேட்டான். மனைவி வேண்டாமென்றவுடன், ஹாலுக்கு வந்தவன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து பெரியவர்கள் பேசிக்கொண்டிருப்பதை அமைதியாக கவனித்தவாறு அமர்ந்து விட்டான்.
மனைவி கொண்டு வந்த தோசையை வாங்கியவன், “அத்த மாமாவை சாப்பிடச் சொல்லலயா”, என்றான் மனைவியிடம்.
“அவங்களுக்கு மதிய சமையல் ரெடியாகுது, நீங்க தான் காலைல இருந்து ஒன்னும் சாப்பிடல நீங்க சாப்பிடுங்க”, என கூறியபடி மனைவி கொடுத்த தோசையை வாங்கி உண்டான்.
அதுவரை தாய் அங்கில்லை என்பதை உணர்ந்தவன், இருவரிடமும் கேட்காமல் அர்ச்சனாவின் அறையை நோக்கி மேலே வந்திருந்தான்.
அங்கு படுத்தவாறு டிவி பார்த்துக் கொண்டிருந்த தாயை சற்று நேரம் வாசலில் நின்று கவனித்தவன்,
“அம்மா”, என அழைத்தான்.
மகனை இந்த நேரத்தில் சற்றும் எதிர்பார்க்காத சுசீலா, மனம் தனது செயலில் பதறினாலும் அதை வெளிக்காட்டாமல்,
“என்ன சேகரு, இந்நேரத்துக்கு வீட்டுக்கு வந்திருக்க?”
“ஏன், நான் இந்நேரத்துக்கு வீட்டுக்கு வரக்கூடாதா?”
“அப்டி சொல்லப்பா, எப்பவும் இந்நேரத்துல வரமாட்டியேனு கேட்டேன்”
“ஜனதா வீட்டுல இருந்து அத்தையும், மாமாவும் வந்துருக்காங்க, இங்க நீங்க டிவி பாத்துட்டு இருக்கீங்க?”
“ஏன்பா, என்ன சொல்ற… அவங்க வீட்டுல இருந்து வந்துருக்காங்களா? எப்போ வந்தாங்க?”, என குரலில் மிகுந்த பதற்றத்தைக் காட்டிய சுசீலா
“உங்களுக்கு தெரியாதா?”, அப்பாவியான ஒரு கேள்வி
“எனக்கு தெரியாதேப்பா…, இந்த ஜனதா எங்கிட்ட ஒரு வார்த்த வந்து சொல்லலயே?”, என்றபடி எழுந்தவர், “நீயாவது வந்து எங்கிட்ட இப்போ சொன்னியே”, என்றபடி அவிழ்ந்த கூந்தலை கொண்டையிட்டார், சுசீலா.
“உனக்கு நிறய வேலையிருக்கும், நீ போப்பா”, என்ற தனது தாயின் வார்த்தைக்கு அங்கிருந்து அவர்களின் அறை நோக்கி நகர்ந்திருந்தான் சந்துரு. கலைந்த தனது சேலையை மட்டும் சரி செய்தவர் முடியாத தோற்றத்துடன் கீழே இறங்கினார், சுசீலா.
சுசீலா வருவதைப் பார்த்த அன்பரசி, ”அண்ணி, இப்போ தலை சுத்தல் பரவாயில்லயா?”, எனக் கேட்க அன்பரசியின் கேள்வியில், தலையும் புரியாமல், வாலும் புரியாமல், ஆனால் சட்டென சுதாரித்த சுசீலா “அப்டியேதாண்ணி இருக்கு”, என்றபடி “வாங்கண்ணே!”, என கிருஷ்ணனை வரவேற்றவாறு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
ஹாலில் நடக்கும் பேச்சு வார்த்தைகள் காதில் விழுந்தது. ஆனாலும் சிரித்தபடி அவளின் வேலையில் கவனமாக இருந்தாள், ஜனதா.
சுசீலாவின் நடவடிக்கைகளை கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக உடன் இருந்து பார்த்த செழியனுக்கு மனைவியின் செயலில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. ஆகையால், அவர் எதையும் கண்டு கொள்ளாமல் தனது பேச்சில் கவனமாயிருந்தார்.
மனதில் அதிர்ந்தவள், அதிர்ந்து பேசாத ஜனதா மட்டுமே.
மதிய உணவை முடித்தவுடன், அன்பரசியும், கிருஷ்ணனும் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். ஜனதாவிடம் தனித்து எதுவும் பேச முடியாததால் தனக்கு எழுந்த சந்தேகக் குவியல்களுடன் அன்பரசியும் கிளம்பியிருந்தார்.
ஆனால், வரும்வழியில் தனது சந்தேகங்களை கணவனிடம் பகிர்ந்தவர், மகளை நினைத்து வருத்தம் கொண்டவாறு வீடு வந்து சேர்ந்திருந்தனர்.
மதிய உணவுக்கான பணிகளை முடித்த ஜனதா, தனது அறைக்கு திரும்பியிருந்தாள். அங்கு அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த கணவனை ஆராய்ச்சியாய் பார்த்தவாறு, உலர்ந்த துணிகளை மடித்து வைத்தாள். பேசியை வைத்தவன்,
“என்ன பொண்டாட்டி!, பார்வையிலேயே மாமன கொக்கி போட்டு இழுக்கற?”
“…”
“என்ன ஜனதா? மாமன காலையில இருந்து பாக்காம டல்லாயிட்டியா”
“…”, கணவனின் கேள்வியில் நிமிர்ந்து பார்த்துவிட்டு, பழையபடி துணிகளில் கவனம் செலுத்தினாள்.
“ஏய், உங்கிட்ட தான பேசிட்டு இருக்கேன்”,குரலில் சற்று கடுமை
“…”
அவனின் கேள்விகளுக்கு பதிலில்லாமல் போகவே, “என்னடி, ரொம்ப பண்ணுற”, ஆண் திமிர்
“…”, மடித்த துணிகளை அதற்கான இடத்தில் எடுத்து வைத்தாள், ஜனதா.
“என்ன இப்போ உன் பிரச்சனை?”, தானே பிரச்சனை என அறியாததால் வந்த கேள்வி
“…”
“ரொம்ப பண்ணுறடீ”, இவன் செய்வதை விமர்சிக்க யாருமில்லை என்ற தைரியம் பேசியது.
“யாரு நானா?”, அவளே அவளுக்கு வினாவானாள்.
“பின்ன யாரு?”
“நல்லா யோசிங்க”, என்றவள் படுக்கையில் சென்று படுத்துவிட்டாள்.
“ஜனதா?”
“என்ன?”
“என்ன விசயம்? ஏன் ரொம்ப டல்லாருக்க?”
“ஒன்னுமில்ல”
“சொன்னாதான் எனக்கு தெரியும்? இங்க பாரு என்ன!”, என்று அவனை நோக்கித் திருப்பியிருந்தான் படுக்கையில் இருந்த மனைவியை
அவனை பார்க்காமல் குனிந்தவாறே, “சொல்ல ஒன்னுமில்ல”
“இல்லயே, நிறய இருக்கற மாதிரி இருக்கே, நீ சொல்றத பார்த்தா!”, என்றபடி தன்னை நோக்கி இழுத்து அணைத்திருந்தான்.
“விடுங்க என்னை”
“என்னாச்சு?”
“வெளியில போகும்போது எங்கிட்டல்லாம் சொல்லிக்கணும்னு தோணாதவர்கிட்ட என்ன பேச நான்?”
“அதுக்காடி முகத்த தூக்கி வச்சிட்டுருக்க? நான் என்னவோ ஏதோனு பயந்துட்டேன்!, லேட் நைட்ல போன் வந்துது, அதான் காலையில சீக்கிரமா போயிட்டேன், சொல்லலாம்னா நான் கிளம்பும்போது உன்ன காணல”
“நான் நம்ம ரூம்ல இருப்பேன், இல்லனா கிச்சன்ல தான இருப்பேன், வேற எங்க போனேன்?”
“கிச்சன் பக்கம் போயி பாக்க தோணலம்மா, எப்போவும் அப்டிதான் கிளம்பி போவேன் அவசரத்துல… அதே மாதிரி இன்னிக்கும் போயிட்டேன்…”
“இவ்ளோ நாள் போனீங்க சரி, இனியும் இப்டி தான் போவீங்களா?”
“போற அவசரத்துல மறந்துட்டேன்டி”
“இனி எங்கிட்ட சொல்லிட்டு தான் போகணும்… ஆமா சொல்லிட்டேன்”
“சரி… இனி சொல்லிட்டே போறேன்”
“போன் பண்ணாலும் எடுக்கல. நான் என்னனு நினைக்கிறது?”
“மிஸ்டு கால் பார்த்தேன், வீட்டுக்கு மதியம் நேரில போறமேனு கூப்பிடல”
“உங்களுக்காக உங்களயே நினச்சுகிட்டு வீட்டுல ஜனதானு ஒருத்தி இருக்கிறத இனி மறக்காதிங்க… மறந்துட்டீங்கனா இனி நான் இல்லாம போயிட்டேனு நினச்சுக்கங்க”, என்றபடி அழ ஆரம்பித்திருந்தாள் ஜனதா.
அதுவரை சண்டைக்கோழியாய் தன்னை எதிர்த்தவளை ரசித்துப் பார்த்தபடி பேசிக்கொண்டிருந்தவன், அவளின் எதிர்பாரா அழுகையில், அவளின் வார்த்தைகளில் திகைத்தான்.
அவளை இழுத்து அணைத்தவன், “ஏய், ஏண்டி இப்டியெல்லாம் பேசுற… வேணும்னு நான் அப்படி சொல்லாம போகல, இது வர என் பழக்கம் அது தான். கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்கிறேன்… அதுக்காக இப்படியெல்லாம் பேசாத… இந்த பத்து நாளா தான் நான் எனக்காகன்னு வாழ ஆரம்பிச்சுருக்கேன்… அது நீ என் வாழ்க்கைல வந்ததால…”
“போனதுக்கப்புறமாவது வெளியில இருந்து எனக்கு போன் பண்ணி சொல்லிருக்கலாம்ல?”, அழுகையினூடே கேட்டாள்.
“இனி சொல்றேன் ஜனதா, அழுகைய நிப்பாட்டு, சின்ன புள்ள மாதிரி அழாத”
“என் கஷ்டம் உங்களுக்கு தெரியல… அதான் அப்படி சொல்லாம இருந்துட்டீங்க”
“இன்னும் எனக்கு உன் கஷ்டம் புரியல தான், ஆனா அப்டி ஒரு கஷ்டம் உனக்கு வராம இனி பாத்துக்கறேன்டி”
அழுகையை நிப்பாட்டியிருந்தவள், “எனக்கு பசிக்குது”
ஜனதாவின் வார்த்தைகளைக் கேட்டவன், அவளின் ஓய்ந்த தோற்றத்திற்கான காரணத்தை யூகித்தான். அவனுக்காக காலையிலிருந்து பட்டினியாக இருந்த மனைவியை நினைத்தவன் அதற்குமேல் பேசாமல் அணைப்பில் இருந்தவளை விடுவித்தான்.
நேராக கிச்சனுக்கு சென்றான். சமைத்து வைத்திருந்த அவள் சாப்பிடாத உணவை தட்டில் எடுத்துக்கொண்டு மனைவியிடம் வந்தவன்,
தன் கைகளால் பிசைந்த சாதத்தை கையிலெடுத்து, “ம் ஆ காமி”
“…”, உணவை வாங்க வாயைத் திறந்திருந்தாள்.
‘எனக்கு பசிக்குது’ என்ற வார்த்தையை ஜனதா உச்சரித்து… நிகழ்காலத்துக்கு அவள் வருமுன், “ம் ஆ காமி”, என்ற கணவனின் வார்த்தையில், அவனது செயலில்,அவனின் காருண்யத்தில், மீண்டும் கண்களில் நீர் திரள, முதல் கவளத்தை வாங்கியிருந்தாள்.
பிறகு தானே உண்டு கொள்வதாக ஜனதா கூறியதையும் கேளாமல், அவனே மனைவிக்கு ஊட்டி முடித்திருந்தான்.
உண்டு முடித்தவளை சற்று நேரம் உறங்கப் பணித்தவன், ஜனதாவின் உணர்வுகளை உள்வாங்க போராடினான். புரிந்தது போல இருந்தாலும், தனது இத்தனை ஆண்டுகால வாழ்வில், தனக்கென மட்டும் யோசிக்காமல், கணவனுக்காகவும் யோசிக்கும் ஜனதா அவனுக்கு புதியவள். ஏனெனில் தனது தாயை அவ்வாறு அவன் பார்த்ததில்லை.
தனக்காக இல்லாமல், பிறருக்காக காத்திருக்கும் உறவுகளை இதுவரை சந்திக்கவே இல்லை. முதன் முறையாக, மனதில் சற்று கர்வம் தோன்ற தனக்காகவும் காத்திருக்க, காதலிக்க, கசிந்துருக, காலமெல்லாம் கடவுள் கொடுத்த கொடையாக ஜனதாவை எண்ணிய சந்துருவிற்கு மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி.
அதே மகிழ்ச்சியுடன், மனைவியின் நெற்றியில் இதழ் பதித்து எழுப்பினான்.
காலை எழுந்தது முதல் மிகுந்த மனஉளைச்சலுடன் இருந்தவளுக்கு, குட்டித்தூக்கம் புத்துணர்வைத் தந்திருந்தது.
மகிழ்வுடன் எழுந்தவளிடம், “ஜனதா, உனக்கு வேலைக்கு போகணும்னு ஏதும் ஆசையிருக்கா?”
“இருந்துச்சு, ஆனா வீட்ல அண்ணன் ரெண்டு பேரும் வேணாம்னு சொல்லிட்டாங்க”
“இப்போ இல்லயா?”
“நீங்க விட்டா வேலைக்கு போயிக்க சொன்னாங்க”
“யாரு உங்க வீட்ல அப்டி சொன்னது?”
“எல்லாரும் தான்”
“ம்…, உனக்கு போகணும்னா, வெளியில எங்கயும் வேலைக்கு போக வேணாம், நம்ம கடையில போயி பாத்துக்க”
“கொஞ்ச நாள் வீட்ல இருக்கேன், போரடிச்சா போறேன்”
“உன் இஷ்டம்”, என எதிர்காலம் பேசினார்கள்.
*************************
ஆலப்புழா, படகுவீட்டின் பதவிசான பயணத்தில், வாழ்க்கையை ஆரம்பித்த அமர், அர்ச்சனா இருவரும், நான்கு நாட்களையும் புரிதல், அறிதல், தெரிதல், தெளிதல் இவற்றுடன் மோகமும், தாபமும், தூபம் போட அதைச் சரி செய்ய வாத்யாயசனாரை (காமசூத்ரா எழுதியவர்) உதவிக்கு அழைத்து, வள்ளலலின் கொடை போல வாலிபம் தந்த வசந்தமான நினைவுகளுடன் ஊர் திரும்பியிருந்தனர்.
பழையபடி, அவளின் கூம்பிய மனதைக் காட்டும் கண்ணாடியான வதனத்துடன் திரும்பிருந்தாள், அர்ச்சனா. அண்டியவளை(மனைவி) பற்றி அனைத்தையும் அறிந்திருந்தாலும், எதையும் அறியாதவன் போல வந்திருந்தான், கொரியர் வந்ததை அறியாத அமர்.
மகள்களின் சேட்டைகளில் இருந்து தன்னை மீட்டுக்கொள்ள போராடும் உமா, கொரியர் வந்ததை முற்றிலும் மறந்திருந்தாள்.
அறைக்குள் நுழைந்த அர்ச்சனாவிற்கு ஆச்சர்யம். தனக்கு தெரியாத, தன்னை அறிந்த முகமறியா பெண்ணிடமிருந்து வந்த கொரியர் தந்த மகிழ்ச்சி அளவிடற்கரியது. பெருமையுடன், பொறுமையாக, யாரிடமும் கொரியர் பற்றிய செய்தியை கலந்துகொள்ளாமல் பிரித்தவளுக்கு உள்ளிருந்த ஐநூறு கிராம் எடையுள்ள வெண்மை நிற கிரிஸ்டல் 3D தாஜ்மகால் அன்பளிப்பு தந்த மகிழ்ச்சியை, அதற்குள் இருந்த கடித வரிகளுக்குரியவள் பறித்துக்கொண்டாள்.
பெரியவர்களிடம் பேசிவிட்டு அறைக்குள் நுழைந்த அமரின் கண்களில்பட்ட அர்ச்சனாவின் அதிர்ந்த முகம் மற்றும் அவளின் கையில் இருந்த அன்பளிப்பு பொருள் சொன்ன செய்தியில் அமரின் மனதில் புயல் வந்திருந்தது.
உலாவிய உள்ளம் ஊடலுடன்
உலாவரும் கனவு காதலுடன்!!!
———————————–