UmaDeepak’s Azhagiyin Kaadhal Thavam – 9
UmaDeepak’s Azhagiyin Kaadhal Thavam – 9
அத்தியாயம் – 9
ஐநூறு வருடங்களுக்கு முன் :
அந்த மலையடிவாரத்தில் ஓடும் நதியின் அருகில், மலர்ந்து இருந்த பூக்களின் அருகே அமர்ந்து தியானத்தில் இருந்தார் துறவி. மிடார நாட்டில் இருந்து அறுபது மைல் தூரத்தில் இருந்தது, அவரின் ஆஷ்ரமம்.
யாருமறியாமல் இரவில் அவளின் குதிரையில் கிளம்பிய இளவரசி மதியழகி, அங்கே வந்து சேர மதிய பொழுதானது. துறவியை அவள் ஒரு முறை அரண்மனைக்கு அவர் வந்து இருந்த பொழுது கண்டு இருக்கிறாள்.
எதற்காக அப்பொழுது அவர் வந்தார் என்று தெரியவில்லை என்றாலும், அப்பொழுதே வீரர்களை விட்டு அவரின் ஆஷ்ரமம், அவரை பற்றிய தகவல்களை சேகரித்து தருமாறு கேட்டு இருந்தாள். மனதில் அப்பொழுதே, அவரை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதல் இருந்ததால் அவள் அன்று அவரை பற்றி அறிந்து கொண்டாள்.
இன்று பிரச்சனைக்கான தீர்வு, இவரிடம் இருக்கிறது என்று அவளின் மனதில் ஒரு நம்பிக்கை இருக்கவும், அவரை தேடி வந்து விட்டாள். தியானத்தில் இருந்தவரை, எப்படி அழைப்பது என்று தெரியாமல் சிறிது தடுமாறினாள்.
ஆனால் மனதின் உந்துதலில், இளவரசி வந்து இருப்பதை அவரின் ஞான திருஷ்டியில் அறிந்து கொண்டவர், கண் திறந்து அவளை பார்த்து வரவேற்ப்பாக புன்னகை புரிந்தார்.
“வணங்குகிறேன்! நான் மிடார நாட்டு அரசர் இளங்கோவனின் மகள் மதியழகி ஆவேன். தங்களிடம் என்னையும், என் நாட்டு மக்களையும் சூழ்ந்து இருக்கும் ஆபத்து பற்றி பேச வந்து இருக்கிறேன் துறவரே” என்று பணிவாக அவரை வணங்கி, அவள் வந்ததன் நோக்கத்தையும் கூறினாள் அவரிடம்.
“வாருங்கள் இளவரசி! தாங்கள் வந்ததன் நோக்கம் யாம் அறிவோம். தாங்கள் இன்னும் பல போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும் இளவரசி, இன்று தாங்கள் இங்கே வந்தது நல்லதற்கு தான்”.
“தாங்கள் சற்று நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், பிறகு தாங்கள் வருடங்கள் கடந்து வேறு ஒரு உலகிற்கு செல்ல தங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். அங்கு தங்கள் மனம் கவர்ந்தவர், தங்களை காத்து கொள்வார்” என்று கூறிய துறவியரை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.
“தாங்கள் என்ன கூறுகிறீகள்? இது எப்படி சாத்தியமாகும்? அது மட்டும் இல்லாமல், தாய் தந்தையை பிரிந்து நான் மட்டும் செல்வதா அங்கே. இதற்கு வேறு வழியே இல்லையா? தய கூர்ந்து தாங்கள் வேறு வழி இருந்தால் அதை கூறுங்கள் துறவியே” என்று கெஞ்சிக் கொண்டு இருந்தாள்.
“மன்னிக்க வேண்டும் இளவரசி! தாங்கள் இனி இங்கு இருப்பது, அவ்வளவு உசிதமல்ல. தாங்கள் இங்கு இருந்தால், பல சேதாரங்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது”.
“முக்கியமாக, முதலில் தங்கள் தந்தைக்கு தான் முதல் ஆபத்தே. தங்களை காக்கும் பொருட்டு, அவர் உயிரை விட கூட தயங்க மாட்டார். நாட்டு மக்கள் நலன் கருதியும், தாங்கள் இப்பொழுது இந்த முடிவு எடுப்பது அவசியம் இளவரசி” என்று துறவி கூறிவிட்டு சென்றார் அவரின் ஆஷ்ரமத்திற்க்குள்.
தோட்டத்தில் பூக்களின் நடுவே அமர்ந்த இளவரசி, துறவி அவளிடம் கூறிய விஷயத்தை யோசிக்க தொடங்கினாள். அவர் கூறுவதும் சரி தான், ஆனால் அவர் கூறிய வருடம் கடந்து செல்வது தன்னால் இயலுமா? என்ற சந்தேகத்திலும், சிறிது பயத்திலும் இருந்தாள்.
இருந்தாலும், இப்பொழுது தான் இந்த முடிவு எடுப்பது அவசியம் என்பதை உணர்ந்தாள். அவளுக்கு இதை பற்றி, இன்னும் சிறிது தெளிவு படுத்திக் கொள்ள வேண்டி இருந்தது. துறவி வருவதற்காக காத்துக் கொண்டு இருந்தாள்.
அரண்மனையில், இவளை காணவில்லை எனவும் அரசர் இளங்கோவன் பதறிவிட்டார். அரசி மங்கையோ, அழுதே கரைந்தார். அரசி குமாரிதேவி தான் ராணியின் கம்பீரத்துடன், அவரின் மகன் இளமாரனை அழைத்து இளவரசியை தேடும் பணியை கொடுத்துவிட்டு அரசரை தேற்றினார்.
அப்பொழுது அங்கே பெண் கேட்பதற்காக வந்த வேந்தன் மன்னர், விஷயத்தை கேள்விப்பட்டு அவர் ஒரு பக்கம் இளவரசியை தேட சொல்லி தன் படை வீரர்களுக்கு கட்டளையிட்டார். இச்செய்தி பாசிலுக்கு தெரிந்து, அவன் சற்று நேரம் சிந்தனை வயப்பட்டான்.
“இளவரசி! நீர் யாரிடமும் சொல்லாமல், நீயாக சென்றாயா? இல்லை அரசர் உம்மை ஒளித்து வைத்துக் கொண்டு, நாடகமாடுகிறாரா?”.
“நீயாக சென்று இருந்தாலும் சரி, அரசர் உம்மை பாதுகாக்க எண்ணி உன்னை ஒளித்து வைத்து இருந்தாலும் சரி, உன்னை கண்டுபிடித்து அடைந்தே தீறுவேன். முதலில் ராஜ்யத்தை கைப்பற்ற எண்ணி இருந்தேன், ஆனால் இப்பொழுது உன்னை கண்டுபிடிப்பது தான் என் முதல் வேலை” என்று மனதிற்குள் சூளுரைத்துக் கொண்டான்.
அப்பொழுது அங்கே இவனை தேடி வந்த இவனின் மாமா, அவனிடம் முதலில் ராஜ்யத்தை கை பற்ற சொல்ல, அவன் மறுத்தான்.
“ராஜ்யத்தை பிறகு சூழ்ச்சி செய்தேனும், நாம் அதை கை பற்றி விடலாம் மாமா. ஆனால், இப்பொழுது விட்டால் பிறகு இளவரசியை கண்டு பிடிப்பது மிக கடினம். ஆகையால் என் முதல் வேலை, இப்பொழுது இளவரசியை தேடுவது” என்று கூறிவிட்டு அவனின் செல்ல குதிரை, கருப்பு நிற முஷ்டாக் மீது ஏறி அமர்ந்து பறந்தான்.
அரண்மனையில், அரசர் வேதனையோடு அமர்ந்து இருந்தார். மகளிடம் எல்லாவற்றையும் கூறி இருக்க கூடாதோ என்று, இப்பொழுது மனம் உடைந்து போனார். இதை நினைத்து நினைத்து, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது அன்று இரவு.
இன்று:
காலையில் வீட்டு தோட்டத்தில், வியர்வை வழிய சீரான ஓட்டத்தில் ஓடிக் கொண்டு இருந்தான் ஆதி. இன்று அவன் படக் குழுவினருடன், பாரிஸ் செல்ல போகிறான்.
கிருஷ்ணாவும், புதுமுக ஹீரோயின் ராதா ஷிகாரும் சேர்ந்து ஆட போகும் ரொமண்டிக் பாடல் ஒன்று அங்கே காட்சியாக எடுக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. நேற்றே அதற்கான வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு, வீட்டில் விஷயத்தையும் சொல்லி விட்டான்.
இந்த செய்தி கேட்டதில் இருந்து கவலையில் ஆழ்ந்து இருப்பது, மதியழகி தான். மனம் கவர்ந்தவனை காலையிலும், மாலையிலும் பார்த்து பழகியவள், அவன் ஒரு மாதத்திற்கு இங்கு இருக்க போவதில்லை எனவும், அவளுக்கு கவலையாக இருந்தது.
“வர்மா! தங்களுக்கு, என் மனம் புரியவில்லையா? உங்கள் அன்பை பெற, நான் என்ன செய்ய வேண்டும்? தங்களுக்கு என்னை கண்டால் ஏன் பிடிப்பதில்லை?” என்று மனதிற்குள் கேள்வி கேட்டுக் கொண்டாள்.
இப்பொழுது எல்லாம் பிராணநாதா, என்று அழைப்பது இல்லை. காரணம், ஆதியின் கோபமே. அவனின் கோபத்தை பார்த்து, அரண்டு விட்டாள் மதியழகி.
“மதி மா! நீ அவனை சும்மா பேர் சொல்லியே கூப்பிடு, அவனுக்கு நீ அப்படி பிராணநாதான்னு, நீட்டி முழக்கி கூப்பிடுறது பிடிக்கல போல, அதான் இப்படி கோபம். எங்களை மாதிரி, நீயும் பேசாம ஆதின்னே கூப்பிடு” என்று ஆதியின் அன்னை காமாட்சி கூறவும், முதலில் தயங்கினாள்.
ஆனால், திரும்பவும் அவனின் கோப முகத்தை காண அவளுக்கு விருப்பமில்லை. ஆகையால், அவள் அன்று முதல் அவனை வர்மா என்று அழைக்க பழகி விட்டாள். அவள் தன் பெயரின் பின் பாதியை கூப்பிடும் பொழுது, முதலில் வித்தியாசமாக தெரிந்தாலும், அவள் தன்னை அப்படி கூப்பிடும் பொழுது அவனுக்கு பிடித்து தான் இருந்தது.
ஜாக்கிங் முடிந்து, வீட்டிற்குள் நுழைய போனவனை பார்த்த மதியழகி தானும், மேலே தனதறையில் இருந்து கீழே இறங்கி வந்தாள். ஹால் சோபாவில் வந்து அமர்ந்து, அன்றைய தினசரியை எடுத்து புரட்டிக் கொண்டு இருந்தான்.
அவனை கண்களால் விழுங்கிக் கொண்டே, அவள் நேராக சமையலறைக்குள் நுழைந்தான். அவள் பார்வை தன் மீது இருப்பது தெரிந்தும், அவளை கண்டுகொள்ளாமல் இருப்பது போல் காட்டிக் கொள்ள மிகவும் சிரமப்பட்டு போனான்.
“இன்னும், ஒரு ரெண்டு மணி நேரம் தாக்கு பிடி டா ஆதி. அப்புறம் ஒரு மாசம் அங்க பாரிஸ் ல போய், இவ போட்டோ பார்த்து சைட் அடிச்சிக்கலாம். இங்க இப்போ நாம கிரீன் சிக்னல் கொடுத்தோம், மாட்டினோம்”.
“டேய் அண்ணா ரமணா! சீக்கிரம் இவளை பத்தி கண்டுபிடிச்சு கொடு டா. என்னால என்னை கண்ட்ரோல் பண்ண முடியல, விட்டா அவளை கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்திடுவேன்”.
“ஆண்டவா! கொஞ்சம் என் மேல இரக்கம் காட்டு! இவளுக்கு சீக்கிரம் பழசு எல்லாம், நியாபகம் வரட்டும்” என்று மானசீகமாக கடவுளிடம் ஒரு வேண்டுதலையும் வைத்தான்.
அப்பொழுது அவன் முன்னால், கொலுசொலி ஓசை கேட்கவும் அவள் தான் தன் முன்னால் நிற்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டான். பேப்பரை மடக்கி வைத்துவிட்டு, அவள் நீட்டிய கஞ்சியை எடுத்துக் கொண்டு பருக தொடங்கினான்.
அவன் கஞ்சியை பருக, அவளோ அவனை கண்களால் அவனை பருகிக் கொண்டு இருந்தாள்.
“இப்படி பார்த்து, பார்த்தே கொல்லுறா மனுஷனை ராட்சசி” என்று மனதிற்குள் சலித்துக் கொண்டான்.
“டேய் விஷ்வா ! வா டா மதிக்கு டிக்கெட் எடுக்க சொல்லி இருந்தேனே எடுத்துட்டியா” என்று காமாட்சி, அப்பொழுது அங்கே வந்த விஷ்வாவிடம் கேட்டார்.
“எடுத்துட்டேன் மா! இந்தாங்க” என்று அவரிடம் டிக்கெட்டை கொடுத்தான் விஷ்வா.
“மதி, நீ போய் ஒரு மாசத்துக்கு தேவையான துணி எல்லாம் பெட்டியில் அடுக்கு மா ” என்று கூறி அவளை அனுப்பி வைத்துவிட்டு, ஆதியை பார்த்தார்.
ஆதிக்கும், ஒன்றும் புரியவில்லை “இவளை எங்க அனுப்ப பிளான் போடுறங்கன்னு தெரியலையே” என்று குழம்பினான்.
“ஆதி! ஒரு மாசத்துக்கு மதி உன் பொறுப்பு, உன் கூட தான் பாரிஸ் வர போறா” என்று அவன் தலையில் குண்டை தூக்கி போட்டார்.
“ம்மா! நான் ஷூட்டிங் ல பிஸியா இருப்பேன், இவளை அங்க கூட்டிட்டு போனா என்ன நடக்கும்ன்னு உங்களுக்கு தெரியும் ல” என்று அன்னை தன்னை புரிந்து கொள்ளாமல் பேசுகிறாரே என்று நொந்து போனான்.
“புரியாம பேசாத டா! ரமணா எனக்கு ஒரு வேலை கொடுத்து இருக்கான். மதியை பத்தி ஒரு நியூஸ் கூட அவனுக்கு கண்டு பிடிக்க முடியல, அதான் அவ சொன்ன மாதிரி 500 வருஷம் முன்னாடி நடந்த வரலாறு ல செக் பண்ண சொன்னான்”.
“எப்படியும் அதுக்கு ஒரு மாசமாகும், அவ இங்க இருந்தா முடியாது. அதான் அவளை இப்போ ஒரு மாசம், உன் பொறுப்பில் விட நினைக்கிறேன்” என்று அவனின் அன்னை கூறியதை கேட்டு அதிர்ந்தான்.
“அப்போ நான் கிழவியை தான் லவ் பண்ணுறேனா! ச ச ! அப்படி எல்லாம் யோசிக்க கூடாது, அவ இப்போ அப்படியா இருக்கா”.
“அவளுக்கு அம்னிஷியாவா இருந்தாலும் சரி, இல்லை 500 வருஷம் முன்னாடி இருந்து வந்த இளவரசினாலும் சரி, இந்த ராஜாக்கு ஏத்த ராணி அவ தான்” என்று மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்டான்.
அதன் பின் அவன் தனது அறைக்கு சென்று, குளித்து உடை மாற்றி நேற்றே பேக் செய்து வைத்து இருந்த தன் பெட்டியை எடுத்துக் கொண்டு கீழே இறங்கி ஹாலில் காத்து இருந்தான்.
சிறிது நேரத்தில் மாடியில், பெட்டி உருள்ளும் சத்தம் கேட்கவும் நிமிர்ந்து பார்த்தான். மஞ்சள் நிறமும், பச்சை நிறமும் கலந்த கலவையில் ஒரு அழகிய சல்வார் ஒன்றை அணிந்து, தேவதையாக இறங்கி வந்து கொண்டு இருந்தாள்.
இமைக்க மறந்து, அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான் ஆதி. எதர்ச்சையாக திரும்பிய மதி, ஆதியின் பார்வையில் வெட்கம் கொண்டு, அவளின் கன்னங்கள் செம்மை நிறம் பூசிக் கொண்டது.
அதில் மேலும் பேரழகியாக தெரிந்தாள், மதி. காமாட்சி இவர்களை பார்த்துவிட்டு, நேரமாவதை உணர்ந்து இருவரையும் நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தார்.
“மதி மா, ஆதி கூடையே இரு. உனக்கு துணையா உன் கூட பிரகதின்னு ஒரு பொண்ணு, எப்போவும் இருப்பா ” என்று அவர் கூறியதை கேட்டு விஷ்வாவும், ஆதியும் அதிர்ந்தனர்.
“ஆதி! அம்மா இவளை மதிக்கு துணையா அனுப்புறாங்களா? இல்லை நம்மளை வாட்ச் பண்ண அனுப்புறாங்களா? ” என்று அவன் காதில் கிசுகிசுத்தான்.
“அதான் டா எனக்கும் புரியல, இவ டிக்கெட் உன்னை எடுத்துட்டு வர சொன்ன பொழுதே, உன் கிட்ட பிரகதி பத்தி ஏதும் சொல்லலையா அம்மா ” என்று கேட்டான் ஆதி.
அவன் இல்லை என்று தலை ஆட்டவும், ஹாய் அத்தை என்று பிரகதி உள்ளே வரவும் சரியாக இருந்தது. அவளை பார்த்த மதி, மயங்கி அங்கேயே சரிந்தாள்.
தொடரும்…