Un Kannil Inbangal Kanbein – 3

3

கூட்டத்தினரில் சந்த்ருவை அவள் உற்று நோக்க அவனது பார்வையோ அவளை விடுத்து வண்டியில் இருந்த அந்தப் பையனின் மீதே நிலைத்திருந்தது..

ஒரு சில விநாடிகளே ஆனாலும் அவனது ஆழமான பார்வை அந்தப் பையனை நோட்டம் விட்டு பின் இவளிடம் வந்து நிற்க அவளும் இவனை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்..

இவளது பார்வைக்கு பதிலளிக்கும் விதமாய் கண்களைச் சிமிட்டி அவன் சிரிக்க, அவனை வெட்டும் பார்வை பார்த்து,

“நாராயணா வண்டிய எடு யா..” என்றாள் சீற்றமாய்
கனியின் சீற்றத்தில் வாயை மூடி வண்டியைக் கிளப்பிய நாராணயனின் வாய், “இம்சை யா..” என முணுமுணுத்தது..

கனி அவ்விடம் விட்டு அகன்றதும், தனது வண்டி நோக்கிச் சென்றவன் உடன் வந்த ஆனந்திடம், “ஆனந்த், இப்போ அந்தப் போலீஸ்ல சிக்குனானே அவன் எனக்கு இன்னைக்கு ஈவ்னிங் குள்ள வேணும்… புரிஞ்சுதா.. இன்னைக்கு ஈவ்னிங்…” என்றான் தீவிரமாய்..

மற்றவன் சரியென்றதும் தனது மொபைலில் இருந்து அழைப்பினை இப்போது சந்தித்த அப்பெரும் புள்ளிக்கு விடுத்தவன், “போலீஸ்ல சிக்குன ஒரு பையன தூக்க சொல்லிருக்கேன்.. அவனா தப்பிச்சதா தான் இருக்கனும்..” என்றவன் அவரிடமும் அதையே சொல்லி வைத்தான்..

ஸ்டேஷன் வாசலில் ஜீப் நின்றதும் வேகமாய் கீழிறங்கியவள் அங்கிருந்த செக்யூரிட்டியை அழைத்து, “அவனை உள்ள கூட்டிட்டு வாங்க..” என்க,

அவளது கட்டளைக்கு ஏற்றபடி உள்ளே அவனை இழுத்து வந்தவர், கனியின் முன் நிற்க வைத்தார்..

அதற்குள் கனி அவனது மெம்மரி கார்டை தனது போனில் போட்டு செக் செய்ய, அவனது மொபைலையும் பக்கத்தில் நின்ற பெண் போலீஸிடம் கொடுத்து பார்க்கச் சொன்னாள்..

இவளது சுறுசுறுப்பான வேலையைக் கண்டவன், கொஞ்சம் எட்டி அவளது பெயரைப் படிக்க முயல,
“என்ன என் பெயர் தெரியனுமா..?” அவனது முகத்தை வைத்தே மனதைப் படித்தவள் இப்போ தான் மறைத்து
நின்ற தனது பெயர் பலகையைவிட்டு கொஞ்சம் தள்ளி நிற்க

“கனிஷ்கா சரவணன், அசிஸ்டென்ட் கமிஷ்னர் ஆப் போலீஸ்” என்ற தங்க நிறத்தில் கருப்பு மையால் எழுதப்பட்ட பலகை பளபளத்தது..

அவளது பெயரை வாய்விட்டு சத்தம் வராமல் படித்தவன் இன்னும் அவள் தன்னை எடைப் போடுவதைப் பார்த்து குனிந்தான்..

எதிரே நின்றவன் அப்பாவியாய் மூஞ்சை வைத்தாலும், கண்களில் அனைத்தையும் தாண்டி தான் மாட்டிக் கொள்வோமோ என்ற பயம் அப்பட்டமாய் தெரிந்தது..

அவனது விழிகளுக்குள் எதையோ தேடுவது போல் கனி உற்று நோக்க, அவள் பார்த்த பார்வையில் அவனது அடிவயிற்றில் சில்லிட்டது..

“பெயரென்ன..?” பக்கத்தில் நின்ற கான்ஸ்டெபிளிடம் லத்தியை வாங்கி கொண்டே அவள் கேட்க, அவனது கண்களில் லத்தியைக் கண்டு பயம் கொள்ளாமல், பின்னால் அந்தப் பெண் போலீஸ் நோண்டிக் கொண்டிருந்த மொபைலிலே நிலைத்திருந்தது..

“நிர்மலா, அந்த போன கொடுங்க..” அசால்டாய் கேட்டவள், அதில் கலேரி மெயில் எனத் தனது பார்வையை ஓட்ட,

“அதுல எல்லாமே மேப், கோலம்னு தான் மேம் இருக்கு..வேறெந்த வீடியோவும் இல்ல…” மற்றவள் சொன்னதும் சரியெனத் தலையசைத்த கனி, இன்கம்மிங் அவுட் கோயிங் கால்களை செக் செய்ய,
அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து வந்த நெட் கால்களாகவே இருக்க, அவுட் கோயிங் கால்கள் வெறுமையாய் இருந்தது..

“ஏதுவோ தவறு”, அவளது உள்மனம் அடித்து பேச,

“உன்கிட்ட பெயரைக் கேட்டு எவ்வளவு நேரமாச்சு..?” கேள்வி அவனிடமிருந்தாலும் கைகள் லத்தியின் முனையைச் சரிபார்த்து கொண்டிருந்தது..

“ஈஸ்வர்..” வேகமாய் பதிலளித்தவன் எச்சிலைக் கூட்டி விழுங்க,

“அது என்ன போன் ஃபுல்லா சென்னையோட முக்கிய இடங்களோட மேப் ஸ்டில்ஸ்…? ஏன் நீ சென்னைக்குப் புதுசா..?”

“ஆ…ஆமா..ஆமா..”

“உனக்கு சொந்த ஊர் எது..?”

“பாண்டிசேரி..”

“ஓஹ்…” என்றவள் அவனது முன்னே நோட் பேடைத் தூக்கிப் போட அதை லாவகமாக கேட்ச் பிடித்தவனிடம்

“ஈஸ்வர், அதுல உன் அட்ரெஸ் எழுது..?” என்றவள் இப்போது அவனது மெம்மரி கார்டை செக் செய்ய அதுவும் வெறுமை தான்..

“ஈஸ்வர்..போன் நல்லா இருக்கே..? எப்போ வாங்குன..?” என்க,

“அதுவாங்கி ரெண்டு வருஷம் இருக்கும் மேம்..” என்றவனிடம்

“உன் தமிழ் வித்தியாசமா இருக்கே…”

“ஆமா மேம் எனக்கு டெல்..எங்கம்மாவுக்கு டெல்லி பக்கம்..” என்றவனிடம் இருந்த தடுமாற்றத்தைக் குறித்து கொண்டவள்..

“ஓஹ்..அப்படியா..சரி பஸ்ல என்ன பிரச்சனை..?” என்றவள் இப்போது கைகளைக் கட்டி சேரை அவன்முன் இழுத்து போட்டு அமர்ந்து கொள்ள,

“அது வேற யாரோ இடிச்சதுக்கு நான் தான்னு..” என்றவன் பேசி முடிக்கும் முன், கனியின் மேஜையில் இருந்த தொலைபேசி அலறியது…

அவன்மீது ஒற்றைப் பார்வையை பதித்து கொண்டே, நிர்மலா எடுத்து கொடுத்த போனை காதுக்கு கொடுத்தாள்..

“ஏசி மேம்..”

“ம்ம்…சொல்லுங்க..”

“மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் பக்கம் ஒரு மர்டர்..சீக்கிரம் ஸ்பாட்டுக்கு போங்க..” டிசி ஆபிஸில் வந்த போனில் பதறி எழுந்தவள்,

“நிர்மலா, என்கூட வாங்க…” காற்றாய் பறந்தவள்,

“நாராயணன் வண்டியை எடுங்க…” என்றாள்..

உடன் வந்த யாருக்கும் அவளது பதட்டம் புரியவில்லை என்றாலும், அங்கு நின்றவனின் இதழில் சின்னதாய் ஒரு சிரிப்பு மலர்ந்தது..

கனியின் கார் அவ்விடம் விட்டு அகன்றதும், ஈஸ்வரை அங்கிருந்த பெஞ்சில் அமரச் சொல்ல, அமைதியாய் உட்கார்ந்தவனுக்கு அங்கிருந்து வெளியேறும் மார்க்கம் மட்டும் புலப்படவில்லை..

சுற்றி கண்களை ஓட்டிக் கொண்டிருந்தவனுக்கு, வெளியே நின்ற மூன்று நான்கு போலீஸ்காரர்களைத் தவிர ஒன்றிரன்டு பொதுமக்கள் ஆங்காங்கே நிற்பது புரிய, இப்போது அவனுக்கு தப்பிப்பதைவிட, எதனால் கனி பதட்டமாய் கிளம்பினாள் எனத் தெரிந்து கொள்ள வேண்டியது இருந்தது..

அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே முகமூடி அணிந்த ஆறுபேர் வெடுவென ஸ்டேஷனுக்குள் நுழைய, என்ன ஏதென அனைவரும் சுதாரித்து தடுக்கும் முன் அருகே வந்த இரு போலீஸாரை காலிலும் கையிலும் சுட்டவர்கள், துப்பாக்கி முனையில் ஈஸ்வரை மீட்டிருந்தனர்..

சம்பவம் நடந்த இடத்தில் உயிர்சேதத்தை குறித்து கொண்டிருந்தவளுக்கு, ஸ்டேஷனில் இருந்து அழைப்பு வர, நிலைமை புரிந்தவள் என்ன ஏதென ஸ்டேஷனுக்கு வரும் போது அனைத்தும் தலைகீழாய் இருந்தது..

****

கனடாவின் டொராண்டோவில் இரவு நேர லேசான மழைச் சாரலில் தனது காரை செலுத்திக் கொண்டிருந்த அனுஷின் மனநிலையை முற்றும் நிறைத்திருந்தாள் கனி…

லேசாக விசில் அடித்தவன் தனது வலது கையில் மாட்டியிருந்த பிட்னெஸ் வாட்சின் வைப்ரேஷனில் பார்வையை ஓட்ட, அதில் தனது செல்ல மகளிடமிருந்து வந்த ஏபிசிடியைப் பார்த்து சிரித்தான்…

“அனைத்திலும் தங்களது மகள் சுட்டி தான்..” மானசீகமாய் மகளைக் கொஞ்சியவனுக்கு இப்போது சிறிது காலமாய் இந்தத் தனிமை ஒரு சின்ன சுனக்கத்தைக் கொடுத்து கொண்டிருந்தது..

வீட்டின் போர்டிக்கோவில் காரை நிறுத்தியவனை வாயிலில் நின்ற லீசா வரவேற்க, அவளைக் கேள்வியாய் பார்த்தவன்,
“என்ன லீசா…?” என்றான் ஆங்கிலத்தில்

“உனக்காக தான் அனுஷ்…ஏன் இப்போ எல்லாம் என்கிட்ட பேசல..” என்றவளின் உணர்வுகள் அவளது தாய் மொழியும் ஆங்கிலமும் கலந்து உச்சரிக்க

அவளை முறைத்தவன், ஒற்றை கையால் கதவைத் திறந்து கொண்டே அவளை வீட்டினுள் அழைத்தான்..
சில நிமிடங்கள் அவளிடம் பேசிவிட்டு வலுகட்டாயமாய் அவளை அனுப்பி வைத்தவனுக்கு,

“ஊருல இருக்குற எல்லாருக்கும் என்னைப் பிடிக்குது இந்த கனிக்கு மட்டும் ஏன் என்னைப் பிடிக்காமல் போச்சு…”என்ற நினைப்பு எழாமல் இல்லை..

முயன்று தனது நினைப்பினை தள்ளி வைத்தவன், கையோட வாங்கி வந்திருந்த பிட்சாவை கை கழுவிவிட்டு உண்ணத் துவங்க, நாக்கு தமிழ்நாட்டு உணவை கேட்டாலும் கடனே என உண்டு முடித்தான்..

தட்டில் இருந்த அனைத்து துண்டுகளையும் விழுங்கியவன், கொஞ்சமாய் கிழே சிதறி இருந்த சீஸ்களையும் ஆனியன்களையும் கையில் எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டு டிவியை ஆன் செய்தான்..

ஆன் செய்ததும் தமிழ் நியூஸ் சேனல்களுக்கு மாற்ற, தங்க நகை விளம்பரத்தில் பிரபு பேசிக் கொண்டிருக்க, கீழே தலைப்பு செய்தியில் “சென்னை போலீஸ் ஸ்டேஷனில் துப்பாக்கிச் சூடு” என்ற வாக்கியம் ஓடிக் கொண்டிருந்தது..

செய்தியைப் பார்த்த அடுத்த நொடி கனிக்கு தனது அழைப்பை விடுக்க, அவளது எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாய் ஒரு பெண் குரல் மாறி மாறி சொல்ல, இவனது கோபம் இப்போது அப்பெண்ணின் மீதும் தொடர்ந்தது..

ஒரு அரை மணி நேரம் லேப்பில் ஆழ்ந்தவன், தனக்கு தெரிந்த நபர்களுக்கு அழைத்து விசயத்தைக் கரந்து வைக்க, இன்னும் கனியின் எண் நடப்புக்கு வரவில்லை..

****

தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஸ்டேஷனில் இத்துணிகர சம்பவம் என்றதும் அதிர்ச்சியுடன் பயணித்தவளை இன்னும் சென்னையில் ட்ராபிக் சோதித்து பார்த்தது…

“நாராயணா, வேற வழில போங்க…” என்றவள் சொன்னதும், பதட்டத்தில் காரை லேசாக ரிவர்ஸ் எடுத்தவன் பின்னால் நின்ற காரில் மோதிவிட,

“யூ இடியட்..” பல்லைக் கடித்து கத்தியவள் வேகமாய் வண்டியில் இருந்து இறங்கி பின்னால் நின்ற வண்டியை நோக்கி நகர, காரைவிட்டு இறங்கிய நாராயணனுக்கு இப்போது என்னச் செய்வது எனத் திணறினான்…

பின்னால் நின்ற பிஎம்டபிஸ்யூவின் ட்ரைவர் சீட் விண்டோவை தட்டியவள் கிழே லேசாகக் குனிய, கண்ணாடியைத் திறந்து கூலர்ஸைக் கழற்றாமல் தலையை மட்டும் இவளை நோக்கி திருப்பினான் சந்த்ரு..

காலையில் இருந்து இரண்டாவது முறையாக அவனைப் பார்க்கிறாள், இவன்கிட்ட போயா மன்னிப்பு கேட்க என உடன்பிறந்த ஈகோ தடுத்தாலும்,

“சாரி சார்..கொஞ்சம் அர்ஜென்ட் அதான்…” என்றாள் தணிவான குரலில்..

“இட்ஸ் ஓகே..இனி இப்படி மிஸ்டேக் பண்ணாதீங்க..” பெரிய மனது செய்து மன்னிப்பு கொடுத்தவன்,முகத்தில் அடித்தது போல கண்ணாடியை ஏற்றிக் கொண்டான்..

வந்த கோபத்தை இருக்கும் இடம் கருதி அடக்கி வைத்தவள் வண்டியில் ஏறி,
“நாராயணா, பார்த்து போங்க..” என்பதை மட்டும் சொல்லி, விடாமல் ஒலித்த வாக்கி டாக்கியில் கவனத்தைச் செலுத்தியதால் தனது பின்னே கடந்த ஒரு வாரமாய் தொடரும் ஒருவனை இன்றும் கவனிக்கவில்லை..

இவளது ஸ்டேஷனை அடித்து நொறுக்கிய பின்னும் அமைதியில்லாது அவளது முகபாவனைகளை பார்த்திட நினைத்த சந்த்ரு, அவளைத் தொடர்ந்து வண்டியைச் செலுத்த அவன் கவனித்துவிட்டான் அவளை நோட்டம்விடும் அவ்வட நாட்டு வாலிபனை..

தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்து தொழில் நிமித்தமாய் யாரிடமோ பேசிக் கொண்டிருக்கும் ஆனந்திடம், “ஆன்ந்த்..ஒன் மினிட்..” என்றான் செய்கையில் போனை கட் செய்ய அறிவுறுத்தி,

“சார், ஐ வில் கால் யூ பேக்..” அந்தப் பக்கம் பேசியவரிடம் சொன்னவன், என்னவென சந்த்ருவிடம் கேட்டு வைக்க

“நம்ம ஃபெரென்ட்ல ஒரு ராயல் என்பீல்ட் க்ளாஸிக்ல ஒரு ப்ளாக் டெனிம் போட்டு ஒருத்தன் போறான் பார்த்தியா…அவனோட பைக் நம்பர் TN********”

“எங்க சார்..ரெண்டு பேர் ப்ளாக் ட்ரெஸ்..”

“யூ மேட்..அவன் ஆஷ் கலர்ல பேக் போட்டிருக்கான் பாரு…”

“எஸ் சார்..அந்த டால் பையன் தான..”

“யா..யூ ஆர் ரைட்..அவனை ஃபாலோ பண்ண சொல்லுங்க..” அவனது கட்டளைப் பறந்த அடுத்த நிமிடம், பல்சரில் இவர்களிடம் தலையசைத்து ஒருவன் அந்த வாலிபனை பின் தொடர்ந்தான்..

அனைத்தும் சொற்ப நிமிடங்களில் நடந்துவிட, தனக்கு பின்னால் சுற்றப்படும் வலையை அறியாத கனிஷ்காவின் கார், இப்போது ஸ்டேஷன் வாயிலில் நின்றது..

இன்பங்கள் தொடரும் மர்மங்களாய்…