Unnalei Uzhagam Azhagachei – 1

சென்னையின் மிகப் பிரபலமான இன்ஜினியரிங்க் கல்லூரி..

மேல் நடுத்தர வர்க்கத்தினரும், பணக்கார பசங்களும் மட்டுமே படிக்கும் அக்கல்லூரியின் முகப்பைக் கடந்து கொஞ்சம் உள்ளே நுழைந்தால் பார்க்கும் இடமெல்லாம் கண்ணைக் கவரும் வண்ணம் பச்சையாய் செடி கொடிகள் படர்ந்திருக்க அங்கிருந்த ஆண்களும் பெண்களும் அழகாய் இருந்தனர்..

கணினித் துறைக்கும், மெக்கானிக்கல் துறைக்கும் இடையேயான பக்கவாட்டில் இருபிரிவுக்கும் பொதுவான வாகன நிறுத்துமிடம் இருக்க, அதில் ஆறு ஏழு மாணவர்கள் நிற்க வைத்திருந்த பைக்கில் ஏறி அமர்ந்து தங்களது எதிர்காலத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்..

அவர்களைவிட்டு கொஞ்சம் தள்ளியிருந்த சிமென்ட் இருக்கையில் மூன்று மாணவிகள் அமர்ந்திருக்க, அவர்களை அம்மாணவர்கள் கண்டுகொண்டதாய் தெரியவில்லை..

மூன்று மாணவிகளும் வேறு தலைப்பில் தங்களது கனவு நாயகன் விஜய் தேவரெகொண்டாவைப் பற்றி காரசாரமாய் விவாதித்து கொண்டிருக்க, அவர்களின் பேச்சு அம்மாணவர்களின் காதில் விழுந்தாலும் அவர்கள் செகென்ட் கணினி பிரிவு என்பதை அறிந்தவர்கள் காதில் வாங்கியும் வாங்காமலும் தங்களது அரட்டைகளைத் தொடர்ந்தனர்..

சிறிது நேரத்தில் மாணவர்கள் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி வந்த அபி, அங்கு நடுநாயகமாய் கடலை வறுத்துக் கொண்டிருந்த பரணியிடம், “பரணி, ஃபெரோ எங்க..?” எனக் கேட்க,

“நினைச்சேன்..என்ன டா காலையில இருந்து இன்னும் ஒருத்தியும் அவனைத் தேடலையேன்னு..” முணுமுணுத்தவன்,

“எதுக்கு..?” என்றான் புருவத்தை ஏற்றி இறக்கி…

“இல்ல, அவன் கிட்ட கொஞ்சம் பர்சனலா பேசனும்..” என்றவளின் தயக்கம் அவளுக்கு எரிச்சலைக் கொடுக்க,

“அவன் வந்ததும் உனக்கு சொல்லி அனுப்புறேன்..” என்றவன் தனது பக்கத்தில் நின்ற சேதுவிடம்

“மச்சி, அவனுக்கு மட்டும் எப்படி டா மடியிறாளுக..” என்றவனுக்கு இன்னும் தனக்கு ஆள்யில்லையே என்ற வருத்தம் மட்டும் இறுதி ஆண்டு என்பதால் மேலோங்கி இருந்தது..

மறுபடியும் அவர்களது உரையாடல் துவங்கிய அரை மணி நேரத்தில் இவர்களை நோக்கி நடந்து வந்தாள் ராஜி, அவளும் சொல்லி வைத்தது போல, “பரணி அண்ணா…ஃபெரோ எங்க..?” எனக் கேட்க

“நீயுமா மா? நீங்களும் அதே பெர்சனல் விஷயம் தானா..?” என்றான் கொஞ்சம் எரிச்சலுடன்..

“இல்ல அண்ணா..அவர் தான் ‘காலைல வந்ததும் என்னவந்து பார்த்துட்டு போ’ன்னு சொன்னார்..”

“அந்த அவர் இன்னும் வரல வந்தா சொல்லி அனுப்புறோம்..” எனச் சொன்னவன், மறுபடியும் தனக்கு அருகே அமர்ந்திருந்த சேதுவிடம்

“மச்சி, அவனுக்கு மட்டும் எப்படி டா மடியிறாளுக..” என்க,

“விடு மச்சி, நமக்கு சிக்குவாளுங்க..” என மற்றவன் தேற்றிட மறுபடியும் அவர்களது அரட்டை விட்ட இடத்தில் இருந்து தொடங்கியது…

அவர்கள் பேச ஆரம்பித்த பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு பெண்ணாய் வந்து பரணியிடம் கேட்க, பரணி சேதுவிடம் புலம்ப என்ற கதையாய் இருக்க, இறுதியாய் வந்தாள் ஈசிஇ டிப்பார்ட்மென்ட்டில் இருந்து ஒரு பெண்,

இவர்களது குழுவை நெருங்கியவள், அனைவருக்கும் பொதுவாய் சொடக்கிட, “எவா இவ..?” என்ற கத்தலுடன் திரும்பிய பரணி,

“என்னம்மா வேணும்..” என்றான் அவளது சிவந்த முகத்தை பொருட்படுத்தாமல்,

“ஃபெரோஸ் ஸ்டீபன் எங்க…?”

“நீயும் அவனைத் தான் தேடி வந்தியா மா…? உனக்கு ஏதாச்சும் பர்சனெல் விஷயமா..?” அடுக்கடுக்காய் தன்முன்னே நின்று கேள்வி கேட்கும் பரணியை அவள் முறைக்க

“சரி சரி முறைக்காத அவன் வந்ததும் சொல்லி அனுப்புறேன்…” என்றவன் இப்போது சேதுவிடம் திரும்பி,

“மச்சி, அவனுக்கு மட்டும் எப்படி டா மடியிறாளுக..” என்றதும், பரணியின் முதுகில் தட்டி பின்னே நின்றவள் அழைக்க,

“எஸ் கம் இன்..” என்றவன், ‘இப்ப யாரு..?’ என்ற ரியாக்சனில் திரும்ப,

கன்னத்தில் ஒரு அறை வைத்து, “யாரு மடியுறா..? கொன்னுருவேன்..” என்றாள் பல்லைக் கடித்து,

அவள் அடித்த அடியில் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்ற கூட்டத்தினர், “ஏய்! எங்க வந்து யார் மேல கையை வைக்குற..?” என அவளை நோக்கி கூச்சலிட, எதிரே இத்தனை பேர் கத்தியும் அசையாது அவ்விடத்திலே மார்பின் குறுக்கே கையைக் கட்டி நின்றவளின் அருகே இப்போது பைக்கை நிறுத்தி இறங்கினான் ஃபெரோஸ் ஸ்டீபன்..

அவளின் பின்னால் நின்றவனைக் கண்டதும் எகிறிக் கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் அமைதியாக, அவர்களின் அமைதியை உணர்ந்தவள் திரும்பி பார்க்க, அங்கே கால்களை அகல விரித்து காற்றில் கேசம் அலைய, தீர்க்கமாய் அவளைப் பார்த்து நின்றான் ஃபெரோஸ் ஸ்டீபன்..

தன்னை நோக்கி அவள் திரும்பியதும், என்னவென இரு புருவத்தை மேலே ஏற்றி இறக்கி கேட்டவனின் சட்டையில் முதல் பொத்தான் விடுப்பட்டு இருக்க, அவளது மனம் லேசாக வசீகரித்தாலும் அவனை முறைத்து தான் நின்றாள்…

அவளை விடுத்து அவளுக்கு பின்னால் நின்ற நண்பர்களிடம், “என்ன மாமு..?” எனக் கேட்க,

“டேய் மச்சான்…யாரு டா இவா..? வந்ததும் வராததுமா நம்ம பரணி மேல கைய வைக்குறா..?”

“என்னது..?” திகைப்பாய் கேட்டவன் அப்போது கன்னத்தில் கை வைத்து நின்ற பரணியைக் கண்டான்,
கோபமாய் அவளது பக்கம் திரும்பியவன், “என்ன டி இது..?” என்க

“என்ன டி யா…? அந்த அடி உன் கன்னத்துல விழ வேண்டியது டா..?” எனத் திமிராய் உரைக்க,

“நீ அடிக்கலாம் பட்டு குட்டி..அடிக்கலாம் மிதிக்கலாம் ஏன் ஓடி வந்து மாமா கூட கபடி கூட விளையாடலாம்
டா..ஆனா மாமா ஃப்ரெண்டை அடிக்கலாமா..அது தப்பில்லையோன்னோ..?” என வலிசலாய் அவளிடம் பேச, அங்கே நின்ற நண்பர்களுக்கு எந்த சுவரில் முட்டி கொள்ளலாம் என வந்தது..

“டேய் வேணாம் என்னைக் கடுப்படிக்காத..” அவளது கோபத்தினை மார்ப்பின் குறுக்கே கைகளைக் கட்டி நின்றவன் இப்போது இடுப்பில் கைவைத்து ரசிக்க,

“சரி சரி..கூல் பேபி…ஆஸ்க் சாரி டூ ஹிம்..” என்றான் சிரித்த முகமாய்..

“முடியாது டா…” திமிராய் அவள் சொல்ல

“ஐ சே ஆஸ்க் சாரி டூ ஹிம்..” என்றவனின் குரலில் இருந்த அழுத்தத்திற்கு நேரெதிராய் முகம் சிரித்தது..

“ஐ கான்ட்…நீ பண்ணுனது தப்பு..” என்றவள் ஆள் காட்டி விரலை அவளை நோக்கி காட்ட,

“சரி நான் பண்ணுனது தான தப்பு…அவன் கிட்ட சாரி கேளு..” என்றான் விடாபிடியாக,
அவளுக்கு பரணியை அடித்தது தவறு எனப் புரிய, மன்னிப்பு கேட்கலாம் என அவள் நினைக்கு போது ஃபெரோஸ் வந்தான்..அவன் சொல்லிய பின் தான் மன்னிப்பு கேட்டால் தனது தன்மானத்திற்கு இழுக்கு என நினைத்தவள்..

“நான் உன் ஃப்ரென்ட் கிட்ட சாரி கேட்கனும்னா நீ அருண் கிட்ட சாரி கேட்கனும்..” என்றவள் இதற்குமுன் நின்றது போல மார்பின் குறுக்கே கைகளை கட்டி நிற்க,

“அந்த நாதாரி கிட்ட நா எதுக்கு சாரி கேட்கனும்..” என்றவன் முகம் கொஞ்சம் கடுகடுத்தது..

“ஏன் அது உனக்கு தெரியாதா..?” என்ற இருவரின் உரையாடலில் குறுக்கே வந்த பரணி,

“எம்மா தாயே..யாரு மா நீ..?” அவளிடம் கேட்டவன், ஃப்ரோஸிடம் திரும்பி,

“யாரு மச்சான் இவா..?” எனக் கேட்க, அவள் வாயைத் திறக்கும் முன் முந்திக் கொண்டு வாயைத் திறந்த ஃபெரோஸ்..

“மாமுஸ்…திஸ் இஸ் மை ஆளு அபித்தகுஜலாம்பாள் டா..” என்றவன் கை நீட்டி அவளைச் சுட்டி காட்ட

“டேய் மவனே..” என ஃபெரோஸிடம் எகிறியவள் இவர்களிடம் திரும்பி,

“நான் ஒன்னும் அபித்தகுஜலாம்பாள் இல்ல என் பேரு ஸ்ரீஆண்டாள் பிரியதர்ஷினி..” என்றவளிடம் தனது பக்கத்தில் சேதுவின் கையில் வைத்திருந்த வாட்டர் கேனை திறந்து கொடுத்த பரணி..

“குடிங்க சிஸ்டர்..இவ்வளவு பெரிய பெயரை சொல்லி கண்டிப்பா களைச்சி போயிருப்பிங்க..” என்க.. அவனை முடிந்தமட்டிலும் முறைத்தவள், அவனையே பார்த்து நிற்க,

“எதுக்கு இப்போ அவனையே பார்க்குற..?” என்ற ஃபெரோஸிற்கு தெரியும் அவள் என்ன நினைத்திருப்பாள் என்பது,

“இல்ல இன்னொரு கன்னத்தைவிட்டு வச்சது ரொம்ப தப்போன்னு யோசிக்கிறேன்..” என்றதும் கையில் வைத்திருந்த வாட்டர் கேனை தொப்பென கீழே போட்டவன் இருகை கொண்டு கன்னத்தை மூடிக் கொள்ள, அதில் வாய்விட்டுச் சிரித்தான் ஃபெரோஸ் ஸ்டீபன்..

சிரிக்கும் ஃபெரோஸை நோக்கி திரும்பியவள், “நீ வந்து சாரி கேளு டா..” என்க

“அவன் எதுக்கு சாரி கேட்கனும்..?” என அடுத்தக் கேள்வியை கேட்ட சேது இப்போது முன்னெச்சரிக்கையாய் கன்னத்தை கைகளுக்குள் மறைத்து கொண்டான்..

நண்பர்களது செயலில் மீண்டும் சிரித்த ஃபெரோஸ், “அவன் கிட்டலாம் சாரி கேட்க முடியாது போடி..” என்றதும்,

“டேய் அவன் பாவம் டா ரொம்ப ஃபீல் பண்ணுறான்..ப்ளீஸ்..” என அவள் கெஞ்ச

“டேய் மச்சான்…எந்த அருண் கிட்ட டா இவா சாரி கேட்க சொல்லுறா..” என்ற பரணியிடம்

“அதான் மாமு…அந்த ஈசிஇ படிப்ஸ் அருண் செல்வம்…” பதிலளித்தவனின் முகம் போன போக்கில்,

“இவா யாரு டா அவனுக்கு வக்காலத்து வாங்கிட்டு..” என்றதும்

“மாமு அவன் இவளோட ஆளு..” கம்மி போன குரலில் சொன்னாலும், முகம் என்னவோ அவளைப் பார்த்து சிரித்து கொண்டு தான் இருந்தது..

“அட நாரப் பயலே…இது என்னடா கதை..” அவனின் நண்பர்கள் புலம்பி,

“சரி அது கிடக்கு..நீ இப்போ என்ன பண்ணி தொலைச்ச..?”

“வெயிட் டா… எல்லோரும் இப்போ மேலே பாருங்க..”
ஃபெரோஸ் சொன்னதும் அனைவரும் மேலே பார்த்து நிற்க, கழுத்து வலித்ததே தவிர அங்கே ஒண்ணும் தெரியவில்லை..

“என்ன டா மச்சான் ஒண்ணுமே தெரியல..” ஒவ்வொருவராய் சொன்னதும்..

“என்ன டா தெரியுது அங்க..?” என்ற ஆண்டாளின் குரலில் நடப்புக்கு வந்தவன்

“அது ஒண்ணுமில்ல பட்டுகுட்டி ஃப்ளாஷ் பேக் ஓட்டப் போறேன்..அதான் எல்லோரையும் மேல பார்க்க சொன்னேன்..” எனச் சொன்னதும், விசுக்கென பார்த்த நண்பர்கள் ஏகபோகத்துக்கு முறைக்கத் துவங்கியிருந்தனர்..

ஆறு மாதத்திற்கு முன்பிருந்தே அவளை காதலிக்கிறான் ஃபெரோஸ்..இது நாள் வரையில் நண்பர்களுக்கு கூட அவன் சொன்னதில்லை…நண்பர்களிடம் சொன்னால் காலேஜ் முழுவதும் டபாரம் அடித்துவிடுவார்கள் என நினைத்தவன் ஓகே ஆன பின்பு சொல்லிக் கொள்ளலாம் என நினைத்திருந்தான்… இவன் தனது காதலை தெரிவிக்க நினைத்த அன்று அவளைக் காதலிப்பதாய் சொல்லி செத்துவிடுவதாய் மிரட்டிக் கொண்டிருந்தான் அருண் செல்வம்..

இவனது உரையாடலையும் கையில் அவன் வைத்திருந்த கத்தியையும் மாறி மாறிப் பார்த்தவளின் முகம் பேயரைந்தது போல இருக்க, முதலாம் வருட இறுதியில் இருந்தவளும் அவன் எங்கே செத்துவிடுவானோ என்ற பயத்திலே,

“ஐ லவ் யூ..” என்றிருந்தாள்..

அவள் சொன்னதும் வருத்தமாய் இரு நாட்கள் சுற்றியவனுக்கு என்ன முயன்றும் ஆண்டாளை விட முடியவில்லையென்பதாலும் அவளுக்குப் அருணைப் பிடித்து காதலிக்கவில்லை என்பதை உணர்ந்ததாலும் அவனும் அவளை இன்றுவரை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறான்…

அனைவரின் முறைப்பையும் அசராமல் புறந்தள்ளியவன், “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி..”

“ம்ம்ம்…” என மற்றவர்கள் கோரஸ் போட,

காலை ஏழு மணிக்கு தனது ரெக்கார்டை முடிக்கும் பொருட்டு ஒன்பது மணி காலேஜுக்கு அப்போதே வந்திருந்தாள் ஆண்டாள்..

அவளது ஏழு மணி விஜயத்தை ஆண்டாளின் தோழி ராகவி மூலம் அறிந்து கொண்டவன், ஆறே முக்காலுக்கெல்லாம் கல்லூரி வாயிலில் தவமிருக்க, ராகவியுடன் நுழைந்தாள் ஆண்டாள்..

“கண்மணி…” தனது முதுகிற்குப் பின்னால் கேட்கும் செல்லமான அழைப்பில் இருந்தே அந்தக் குரலுக்கு சொந்தக்காரனை அறிந்து கொண்டவளுக்கு ரத்தக் கொதிப்பு உயர்நிலையை அடைந்தது….

‘அவனைக் கண்டுக்காத மாதிரியே திரும்பி பார்க்காம ஓடிடனும்’ மனதிற்குள் நினைத்தவள் பக்கத்தில் நின்ற தனது
தோழியின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க அவளோ கனகச்சிதமாய் அவன் நின்ற திசையை வெறித்துப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்…

இன்றைக்குள் அவளது பார்வை தன்னை அழைத்தவனைவிட்டு மீளாது என்பதை உணர்ந்தவள், முன்னேறி மெதுவாய் இரண்டு அடிகளாய் எடுத்து வைத்து பின் மெதுவாய் தனது வேகத்தைக் கூட்ட, இப்போது அவனது குரல் அவளது முதுகிற்கு பின்னால் கேட்டது…

“ஸ்ரீ ஆண்டாள் பிரியதர்ஷினி (எ) அபித்த குஜலாம்பாள் கொஞ்சம் நிக்றேளா..” அவளது பெயரைக் கிண்டலாய் மொழிந்து அவள் முன் சொடக்கிட்டு அழைத்தான் ஃபெரோஸ் ஸ்டீபன்..

தனது முழுபெயரையும் தவறாய் உச்சரிக்கும் சீனியரை முறைக்க முடியாமல், “அண்ணா…” என்ற அழைப்புவிடுக்க

அவளது அழைப்பில் முகத்தைச் சுருக்கியவன், “ஏன்னா’ன்னு வேணும்னா கூப்பிடு பட்டுகுட்டி…அண்ணா வேணாமே…” பாவம் போலும் அவனது குரல் இருந்தாலும் முகத்தில் அவ்வளவு சீண்டலும் இதழில் அழகான சிரிப்பும் நிலைத்திருந்தது..

அவனது பேச்சில் வெளிப்படையாக முறைத்தவள், “எதுக்கு இப்படி என்னைப் பாடாப்படுத்தி எடுக்றேள்…” என்க

“ஹேய் மைனா… எத்தன தடவ சொல்லணும்..ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ ரியல்லி லவ் யூன்னு….”

“நேக்கு தான் உங்களை பிடிக்கலன்னு சொல்லிட்டேனோ இல்லையோ…” அவளது பதிலுக்கு எப்போதையும் போல செவிமடுக்காதவன்…

“ஓஹ் அப்போ மாமி எனக்கு மட்டும் கெட் அவுட்டு அந்த அருணுக்கு மட்டும் கெட் இன்னா…” அவனது கோபமான கேள்விக்கு

“அது தான் நானும் அருணும் லவ் பண்ணுறோம்னு உங்களுக்கு தெரியுமே அப்படியும் ஏன் என்னை டார்ச்சர் பண்ணுறீங்க…” அழுது விடுவதை போல கேட்கும் தனது மனம் கவர்ந்த ஸ்ரீ ஆண்டாள் பிரியதர்ஷினி முன் சொடக்கிட்டவன்…

“ஐ லவ் யூ தர்ஷி” என்றான் தனது பக்கத்தில் வந்து நிற்கும் அவளது காதலன் அருணை கண்டுக் கொள்ளாமல்….
இவனது பேச்சை பக்கத்தில் நின்று கேட்டு கொண்டிருந்த ராகவி, “ஃபெரோஸ் அப்போ நேத்து என்ன டார்லிங் கூப்பிட்டது பொய்யா..?” எனக் கண்களில் குறும்புடன் கேட்க,

“டார்லிங்…நீ எப்பவுமே என் டார்லிங் தான் ஆனா என் மாமி முன்னாடி இதைச் சொல்லாதே… அப்புறம் எனக்கு நீதான் வாழ்க்கை கொடுக்க வேண்டியதா இருக்கும்..” என்றவன் கண்ணடித்து அங்கிருந்து நகர, ராகவி அவன் சென்ற திசையைப் பார்த்து சிரித்தாள்..

ப்ளாஸ் பேக்கில் இருந்து வெளிவந்தவர்களிடம்,

“இது தான் மாமு நடந்தது…” என்றவனிடம்

“டேய் மச்சான் நீயா டா ஏழு மணிக்கே வந்த..?” என்ற கேள்வி கேட்க

“ஆமா டா மாமு…சாப்பிட கூட இல்ல தெரியுமா..?” எனப் பரிதாபமாய் நண்பன் சொன்னதும்,

“குட்டிப்பா சாப்பிடாம வரலாம் செல்லக்குட்டி…” சேது ஃபெரோஸின் கன்னம் தடவி கேட்க

“டேய் உங்க நாடகத்த நிறுத்துங்க டா..” என வெடித்தவள்,

“உன்னால அவன் ஃபீல் பண்ணிட்டு சாவப் போறேன்னு சொல்றான்…ப்ளீஸ்..நம்மக்குள்ள ஒண்ணுமில்ல’ன்னு சொல்லு..” என்றவளை அவன் முறைக்க, அவனது முதுகுக்கு பின்னே ஹாக்கி ஸ்டிக்கால் அடித்தான் அருண் செல்வம்..

உலகம் அழகாகும்…