Un Vizhigalil Vizhundha Naatkalil – 1

Un Vizhigalil Vizhundha Naatkalil – 1

 உன் விழிகளில் விழுந்த நாட்களில்..1

 

மழையின் சாரல் அந்த ரயில் பெட்டியின் படிக்கட்டுக்கு அருகில் நின்று கொண்டிருந்த இருவரின் முகத்திலும் இதமாக பன்னீர் தெளித்து வர,  அவர்களின் மனதிலோ புயல் அடித்துக் கொண்டிருந்தது.

படு வேகமாக ஓடிக்கொண்டிருந்த அந்த ரயிலின் சப்தமோ அல்லது வெளியே கடந்து சென்ற அந்த அழகிய மரங்களோ இருவரின் கருத்திலும் பதியவில்லை. அவரவர்களின் மனதில் இருந்த கேள்விகளும் மற்றவர் மேல் இருக்கும் கோபம் மட்டுமே பிரதானாமாக நின்றது.

அருகருகே நின்றிருந்தாலும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை. எதிரெதிர் பக்கக்களை பார்த்தபடி இலக்கிலாமல் வெறித்துக் கொண்டிருந்தனர்.

வண்டி தன் வேகத்தைக் குறைத்து அடுத்த ஊரில் நிற்கத் தயாரானது. அந்தப் பெட்டியில் இருந்த சிலர் இறங்குவதற்கு ஏதுவாக இவர்கள் நின்றிருந்த வாயிலை அடைய, இருவரையும் பிரித்து உள்ளே புகுந்தனர். அவளோ அங்கேயே நிற்க, அவன் தங்களுக்கு நடுவில் வந்தவர்களை மனதில் சபித்துக் கொண்டே சற்று விலகி நின்றான்.

இன்னும் அவள் இறங்குவதற்கு இரண்டு நிறுத்தங்கள் இருந்தன என்ற தைரியம். அதற்குள் அவளிடம் பேசிவிட வேண்டும் என்று தன்னை தயார் படுத்திக் கொண்டான்.

வண்டி நின்றது. அங்கிருந்தவர்கள் இறங்கிக் கொள்ள, மீண்டும் அவளுக்கு எதிரே வந்து நின்றான். அவனை ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தவள், காலியான இடம் ஒன்று கண்ணில் படவே, சட்டென அங்கே சென்று அமர்ந்தாள்.

சில்லென்ற காற்றும் இத்தனை நேரம் அடித்த சாரலும், அவள் தலைக்கு மேல் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியும் அவளது உடலை நடுங்கச் செய்ய, அவளது பற்கள் மெதுவாக தந்தியடித்தது. போட்டிருந்த தாவணியை தோளுடன் சுற்றிப் போர்த்திக் கொண்டாள்.

அவளுக்குக் குளிர்வதைக் கண்டவன் ,அத்தனை நேரம் தனக்குள் இருந்த சிறு வருத்தமும் அவளைக் கண்டதும் காணமல் போனதை உணர்ந்தான்.

‘என்ன இருந்தாலும் ஷி இஸ் மை கேர்ள்..’

அவளுக்கு எதிரே வந்து நின்றவன்,

“ப்ச்ச்” என்று அந்த மின்விசிறியை அணைத்தான்.  எதிரே இடம் காலியாகவே அங்கே அமர்ந்தான்.

அவனைப் பார்த்து அவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள , அவளது பற்கள் இன்னும் நடுங்கிக் கொண்டிருப்பதைக் கண்டவன் , சற்று முன்னே நகர்ந்து அவள் முகத்திற்கு அருகே வந்தான். அவன் என்ன செய்யப் போகிறான் என்று மருண்ட விழிகளுடன் அவனைப் பார்க்க,

“எ..எ…என்ன..?!!” தடுமாறிய வார்த்தைகளைக் கண்டவனுக்கு உதடோரம் புன்னைகை ஒட்டிக் கொள்ள, இரண்டு நொடி அவளை தவிக்க விட்டுப் பின் அவளது ஜன்னல் கதவை ‘பட்’டென மூடிவிட்டு தன் இருக்கையில் சாய்ந்தான்.

அந்தச் சத்தத்திலும், அவன் அருகே வந்து கொடுத்த ஷாக்கிலும் அவளது இதயம் வேகமாகத் துடிக்க, ஒரு பெருமூச்சுடன் ,

“ச்சே!” வியர்த்த தன் முகத்தைக் கையால் துடைத்துக் கொண்டாள்.நடுக்கம் சற்றுக் குறைந்தது. அவளுக்காக பார்த்து பார்த்து அவன் செய்த அந்தச் சிறு சிறு செயல்களை உள்ளம் ரசித்தாலும், ஏனோ அவன் முன்பு மட்டும் கோப முகமூடியை போட்டுக் கொண்டது. அவனை முறைத்துப் பார்த்து விழிகளால் பேசினாள்.

‘இப்படி எதாவது செஞ்சு கூல் பண்ணிடு அப்புறம் எதையாவது கேட்டு கோபப் படுத்திடு. நீ தேவனா இல்ல அரக்கனா! ‘

அவள் அதிர்ந்ததில் அவனுக்குச் சிரிப்பு வந்தாலும், நடுங்கிய அவளது உதட்டை விட்டு கண்ணைப் பிரிக்க முடியவில்லை.  ஊமையாய் பேசிய கண்களும் அவனை ஆரம்பத்திலிருந்தே கட்டிப் போட்டு வைத்திருந்தது. அவனது கண்கள் அவளது முறைப்பிற்கு பதில் சொன்னது.

‘ பாதகி! பக்கத்துல இருந்துட்டு படுத்தறா. சும்மா சீண்டிப் பார்க்கலாம்னு எதையாவது கேட்டா உடனே யோசிக்காம எதாவது சொல்லிட்டு மூஞ்சிய தூக்க வேண்டியது. அரக்கி! என் அழகு அரக்கி!’

இவர்களின் இந்த மௌன பாஷை முடிவதற்குள் அடுத்த நிறுத்தம் வந்துவிட, அடுத்து அவள் இறங்கவேண்டிய ஊர் வந்துவிடும் அவளிடம் இன்னும் தான் பேசவே இல்லையே என யோசித்தவன், சட்டென அவளிடம் இருந்த நோட்புக் கைப் பிடுங்கினான்.

ஒரு நொடியில் அவனிடம் சென்ற நோட்டைப் பார்த்தவள் , வாயைத் திறந்து கேட்காமல் எரிச்சலுற்று  , “ ம்ம்ம்..” என்று கையை நீட்டி கொடு எனக் கேட்டாள்.

“வாய திறந்து கேளு தரேன்! “ அந்த நோட்டை திறந்து அதில் பார்வையை ஓட்டியபடியே கேட்டான். அவளிடமிருந்து பதில் வராது போகவே, நிமிர்ந்து பார்க்க,

அவள் மீண்டும் எழுந்து கதவின் அருகே சென்று நின்றுகொண்டிருந்தாள்.

‘ இவளுக்கு கொழுப்பப் பாரு. திமிர் புடிச்சவளே! இதோ வரேன் டி’ தன் லேசான தாடியை தடவிக் கொண்டே அவளிடம் சென்றான். நல்ல வேளையாக வேறு யாரும் எழுந்து வரவில்லை. நிறுத்தம் வருவதற்கு இன்னும் நேரமிருந்தது.

சந்தர்ப்பம் கிடைத்ததில் தவறவிடாமல் அவளிடம் பேசினான்.

“ஒய்! நான் என்ன கேட்டேன்னு இப்படி கோச்சிகிட்டு இருக்க. அவன் கூட பேசற என்கிட்ட மட்டும் முறுக்கிக்கற. அதான் அப்டி கேட்டேன். “

கையை உயர்த்தி அவனை நிறுத்தியவள், “விளக்கம் ஒன்னும் தேவையில்ல. நோட் தாங்க. இல்லனா நீங்களே வெச்சுகோங்க” வெடுக்கென சொல்ல,

அவள் அப்போது வாய் திறந்து பேசியதே பெரிதாகத் தோன்றியது. அதற்கு மேல் எதுவும் கேட்காமல் அவளது இடது கையைப் பிடித்து நோட்டை திணித்தான்.

“சரி இந்தா. நாளைக்கு நோட் சப்மிட் பண்ணனும்னு யமுனா சொன்னா.. சும்மா விளையாடினேன். உன் ஸ்டாப் வந்துடுச்சு. நாளைக்கு காலைல பாப்போம். 7.30.  “ அவளுக்கு மட்டும் கேட்குமாறு பேசினான்.

“ஆமா.. இவரு மட்டும் யமுனா, கங்கா , சரஸ்வதின்னு யார் கிட்ட வேணா பேசலாம் , நாம பேசுனா தப்பு..” எங்கோ பார்த்துக் கொண்டு அவள் வாய் முணுமுணுத்தது அவனுக்கு நன்றாகவே கேட்டது.

 

மீண்டும் பேச வாய் திறந்தவன், பின்னால் மற்றவர்கள் வருவதைக் கண்டு, விலகிச்சென்று ஒரு ஜன்னல் ஓர சீட்டில் அமர்ந்தான். அவள் இறங்கிச் செல்கையில் பேச வசதியாக!

அவன் கையில் அத்தனை நேரம் குடியிருந்த அந்த நோட்டை மிகவும் ரசித்து தன் நெஞ்சோடு அனைத்துக் கொண்டாள். அவனையே அனைத்துக் கொள்வது போல!  என்ன தான் அவன் மேல் கோபம் இருந்தாலும் மனம் அவனை நாடாமல் இல்லை.

ரயில் நின்றதும் அவன் எங்கே இருக்கிறான் என்று பார்க்கும் ஆவல் இருந்தாலும், அடக்கிக் கொண்டு, ‘பார்க்காத..பார்க்காத..’ மனதால் கண்களுக்குக் கட்டளையிட்டாள்.

“ ஓய்! “ அவன் குரல் கேட்டு அருகே பார்க்க, ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்தான்.

“ ஃப்ளேம்ஸ் (flames)ல வெறும் ஜீவான்னு போட்ருக்க. ஹ்ம்ம்! என்  ஃபுல் நேம் ஜீவானந்தம். காட் இட்.. ஆனா இதெல்லாம் போட்டுப் பாத்து கஷ்டப் படாத.. எண்ட் ரிசல்ட் நம்ம கைல தான் இருக்கு.“ ஒற்றைப் புருவத்தை உயர்த்திக் கேட்டான். நடந்ததை மறக்கச் செய்ய வேண்டும்மென நினைத்து அவளை மீண்டும் வம்பிழுத்தான்.

தான் நோட்புக்கில் கிறுக்கத் தனமாக போட்டுப் பார்த்ததை கவனித்துவிட்டான் என்பது ஒரு புறம் தலையில் அடித்துக் கொள்ள வைத்தது. ஆனாலும் அவனுக்கு பதிலடி கொடுக்க வாய் துடித்தது. சொல்லியும் விட்டாள்.

“அதே மாதிரி நானும் ஒன்னும் ‘ஓய்’ இல்ல, இதயவாணி. முகத்தை தோளில் இடித்துக் கொண்டு ,

“நீங்க என்னவேனா பேசி ரிலாக்ஸ் பண்ண வைக்கலாம்னு மட்டும் நினைக்காதீங்க. நீங்க நேத்து கேட்டது தப்பு தான். இதுக்கு மேல சொல்ல எதுவும் இல்ல. பை.” விடு விடுவென நடந்து சென்றுவிட்டாள்.

இப்படி நடந்துகொள்பவளை என்ன சொல்லி தேற்றுவது என்று அவனுக்கே மலைப்பாக இருந்தது. அவள் சென்றதும் மனதில் ஒரு வெறுமை. இருந்தாலும் காலையில் மீண்டும் பார்க்கலாம் என்று நினைக்கும்போது மனம் குதித்தது.

அதுவும்  யமுனா விடம் தான் பேசுவதைக் கண்டு பொஸசிவ்நெஸில் அவள் பொங்குவது இன்னும் பிடித்திருந்தது.

‘ உன்கிட்ட நெறையா பேசணும் இதயா. மொத்தமே உன்கிட்ட பேசுனது மூணு தடவ தான். அதுக்குள்ள என்னை நீயும் உன்னை நானும் எப்படி புரிஞ்சுக்கறது. வெறும் பார்வையால எத்தனை நாள் பேசமுடியும். நெருங்கி வரவே தயங்கற. உன் மனசுலயும் என் மேல இண்டரஸ்ட் இருக்கு. ஸ்பீக் அவுட் பேபி! முதல் பார்வைலையே எனக்கு தெரிஞ்சுடுச்சு. நீ தான் என்னோட லைஃப். அதை நீ எப்போ உணரப் போற.. என் காதலை சொல்ல காத்திருக்கேன் டி. சீக்கிரம் என்னை சொல்ல வைக்கறது உன் கையில தான் இருக்கு.‘  திரும்பிப் பார்க்காமல் செல்லும் அவள் பின்னால் அவன் மனமும் சென்றது.

அவளும் வேகமாக நடந்து பின் வேகத்தைக் குறைத்து மெதுவாக நடக்கத் தொடங்கினாள். சீக்கிரம் வீட்டிற்குச் சென்றாலும் தன் தாய் எதையாவது பேசிக் கொண்டே இருப்பாள் என்று தெரியும். நிம்மதியாக எதையும் யோசிக்க முடியாது. அவளுக்கு சற்று அவனைப் பற்றி அசை போட வேண்டியிருந்தது.

அதுவும் இன்று அவளுடைய தோழி வரவில்லை. வந்திருந்தாலும் அவனைப் பற்றி தோழியிடம் பேச இன்னும் தைரியம் வரவில்லை. காரணம் இன்னும் அவளுக்கே அது என்ன உணர்வென்று தெரியவில்லை.

அதனால் அவனைப் பற்றி சிந்திக்க இந்த பதினைந்து நிமிட நடைப் பயணம் தேவை என்று அவள் மனம் கெஞ்சியது. அவனைப் பற்றி யோசிப்பதும் , அவனை சந்தித்த நாளிலிருந்து அவளுக்குள் ஏற்படும் புது உணர்வும் அவளுக்கு ஒரு இன்ப உலகத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஆமை நடை பயின்று கொண்டே , அவன் நேற்று தன்னிடம் இரண்டாம் முறையாகப் பேசியதை நினைத்துப் பார்த்தாள்.

அவளுடைய பள்ளித் தோழன் வில்லியம். ஐந்தாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தார்கள். அதற்குப் பின் அவள் பெண்களுக்கான பள்ளியில் சேர்ந்து விட்டாள். இருவரும் ஒரே தெரு என்பதால் நட்பு தொடர்ந்தது.

பத்தாம் வகுப்பு படிக்கும் போது அவன் குடும்பத்துடன் பக்கத்து ஊருக்கு குடி பெயர்ந்து விட பிறகு பேச்சுவார்த்தையில்லை. டவுனில் கல்லூரி சேர்ந்த பிறகு, அங்கிருந்து தன் ஊருக்கு வர ரயிலில் தான் பயணம். அவனும் அதே ரயிலில் வர அவனுடன் மீண்டும் நட்பு தொடர்ந்தது.

அதுவும் அவள் இப்போது அவ்வளவாக பேசுவது இல்லை. இருந்தாலும் அந்த வில்லியம் தன் நண்பர்கள் முன் சீன் போட அவளிடம் அவ்வப்போது வந்து பேசுவான்.

அவனது நண்பர்களிடம் அவன் என்ன சொல்லி இருக்கிறானோ! ஆனால் இவள் இன்னும் நன்பானாக மட்டும் தான் பேசுவாள்.

அப்படி அவன் வந்து பேசும்போது தான் ஜீவா அவர்களைப் பார்த்தது. நேற்று அந்த வில்லியம் அவள் அருகில் இடம் இருந்ததால் சிறிது நேரம் வந்து அமர்ந்திருந்தான் . அவன் சென்றதும் ஜீவா அவளுக்கு எதிரே வந்தமர்ந்தான்.

“ ஓய்! “

இதயாவாணி நிமிர்ந்து , அவனைக் கண்டால் எப்போதும் வரும் வெட்கத்தை மறைத்து இரண்டாம் முறையாகப் பேசினாள்.

“என்ன..?” – வாணி

“ நீயும் அந்த வில்லியமும் லவ் பண்றீங்கன்னு பசங்க பேசிக்கறாங்க . அப்படியா?” அவன் கண்களில் இல்லை என்று சொல்லிவிடேன் என்ற கெஞ்சல் அப்பட்டமாகத் தெரிய,

அவளுக்கு உள்ளுக்குள் எரிச்சல் பொங்கியது. ‘என்னைப் பார்த்து எப்படி நீ கேட்கலாம்’ என்று அவன் சட்டையைப் பிடிக்கும் அளவு கோபம் வந்தது. வேறு யாரவது இருந்தால் இன்னும் என்ன சொல்லித் திட்டடி இருப்பாளோ. ஆனால் அவனிடம் அப்படி இல்லை என்று சொல்லவே மனம் விரும்பியது. தங்களுக்குள் பொய் என்பது இருக்கக் கூடாது என்று அந்த நிலையிலும் அவள் யோசித்தாள். வாய் தன் போக்கில் பதில் சொன்னது.

“ யார் சொன்னா.. அவன் என்னோட ஸ்கூல் ப்ரென்ட் அவ்ளோ தான்.” அவசரமாக அவள் சொன்னதிலிருந்து தான் தப்பாக நினைக்கக் கூடாது என்பதில் அவளுக்கு இருக்கும் ஆர்வம் அவனுக்கு நிம்மதியைத் தந்தது.

“ ஓகே ஓகே ! ச்சில்…. ரிலாக்ஸ்..” என்று இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.

பதில் சொல்லிவிட்டாளே தவிர , மற்றவர்கள் சொன்னதைக் கேட்டு அவன் ஏன் அப்படிக் கேட்டான் என்று கோபம் இருந்துகொண்டே இருந்தது. அதையும் மறைக்காமல் அவனிடம் சொன்னாள்.

“ இப்படியா கேப்பீங்க ஒரு பொண்ணு கிட்ட.. ச்சே!” என்று எழுந்து சென்று மற்ற பெண்களுடன் நின்று கொண்டாள்.

அந்தக் கோபம் தான் இன்றும் அவனிடம் வெளிப்பட்டது.

அவனுக்கும் அவன் கேட்டது தப்பு என்று தெரிந்தாலும், வேறு யாரவது எதாவது சொல்லி தன்னைக் குழப்புவதற்கு பதிலாக சம்மந்தப் பட்டவளிடமே கேட்டுத் தெரிந்து கொள்வது மேல் என்றுத் தோன்றியதால் தான் அவ்வாறு கேட்டான்.

அவனுக்கு இந்த ரயில் பயணம் புதிது. நண்பர்களும் இங்கே இல்லை. காரணம் அவன் இப்போது தான் புதிதாக வேலைக்குச் சேர்த்திருந்தான். அந்த ரயிலில் அவனுக்குத் தெரிந்த ஒரே பெண் யமுனா , அவனுடைய ஒன்று விட்ட சித்தப்பா மகள்.

ஜீவாவிற்கு இதயாவை பற்றி வேறு யாரிடமும் கேட்க விருப்பமில்லை. ஆகையால் தான் அவளிடமே கேட்டுத் தெரிந்து கொண்டான். ஒரு வேளை அவர்கள் இருவரும் விரும்பினால், தான் மட்டும் அவள் மேல் ஆசையை வளர்த்துக் கொண்டு திரிவதில் என்ன பயன்.

இதை அவளிடம் சொல்லக் கூட வாய்ப்பளிக்காமல் அவள் எழுந்து சென்றிருந்தாள்…

‘அவன் ஏதோ சொல்லவந்தானோ! நாம தான் அவசரப் பட்டு எழுந்து போயிட்டோமோ! நிதானமா யோசிக்கும் போது தான் எல்லாமே புரியுது. நாளைக்கு காலைல அவனைப் பார்த்து ஏன் அப்படிக் கேட்டான்ன்னு விளக்கம் கேட்கணும். சும்மா கோவப் பட்டு என்ன செய்யப் போறேன்.. முட்டாள் வாணி! ’ தன் தலையில் தானே குட்டிக் கொண்டு வீடு வந்தாள்.

மறுநாள் சந்திகக்கும் ஆவலில் இருவரும் சீக்கிரம் தூங்கச் சென்றனர்….

இவர்கள் தூங்கி எழும் முன்பு அவர்களைப் பற்றிய சிறிய அறிமுகத்தை நாம் தெரிந்து கொள்வோம்.

இவள் தான் இதயவாணி. நடுத்தரக் குடும்பம். அம்மாவும் அண்ணனும் அவளும் தான். அப்பா இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அண்ணன் வெற்றிவேல் அவளை விட ஐந்து வயது மூத்தவன். இப்போது வெளியூரில் வேலை செய்துகொண்டிருந்தான். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வந்து நான்கு நாட்கள் இருந்துவிட்டு செல்வான்.அம்மா ரேகா வின் செல்லப் பிள்ளை. வெற்றி தான் குடும்பப் பொறுப்பை பார்த்துக் கொள்கிறான். இதயாவை அவளது தாய் கண்டிப்புடன் தான் வளர்ப்பார் ஆனால் வெற்றி எப்போதும் அவளை குழந்தையாகவே பார்ப்பான். அவனது செல்லத் தங்கை. 

இப்போது அவள் கல்லூரியில் முதலாம் ஆண்டு கணிதம் பயின்று கொண்டிருந்தாள். சேர்ந்த மூன்று மாதத்தில் ஒரு நாள் ரயிலில் வரும்போது தான் அவள் ஜீவாவை சந்தித்தாள்.

ஜீவா , ஜீவானந்தம். இவனது குடும்பம் ஊரில் செல்வாக்கான குடும்பம். இவனது தந்தை தவசிக் கவுண்டர். அம்மா சங்கரி. இவன் தான் மூத்த மகன், இவனுக்கு அடுத்து ஒரு தங்கை இருந்தாள். சுபத்ரா. ஜீவா கல்லூரியில் பிஈ முடித்துவிட்டு இப்போது தான்  வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவனது தந்தை அவனுக்கு கார் வாங்கிக் கொடுப்பதாகச் சொல்லியும் அவன் தன் சொந்த உழைப்பில் வாங்க வேண்டுமென்று தினமும் ரயிலில் சென்று வந்தான்.

வேலையில் சேர்ந்த முதல் நாள் வீடு திரும்பும் போது தான் ரயில்வே ஸ்டேஷனில் அவளைக் கண்டான்.

அவர்களின் சந்திப்பைப் பற்றி விரைவில் காண்போம்…

 

Tell your Comments Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!