un vizhigalil vizhuntha naatkalil – 16

“ ஹலோ மிஸ்டர் ஜீவானந்தம் “

“ ஆமா ! நீங்க யாரு!” இருந்த மனக்குழப்பத்தில் வேண்டாவெறுப்பாகப் பேசினான் ஜீவா.

“ நானா?! சொல்றேன். ஆக்சுவலி நீங்க தான் எனக்குப் போன் பண்ணி பேசணும். நீங்க பண்ற மாதிரி தெரியல, அதான் நானே பண்ணேன்” குரலில் அத்தனை குழைவு வசுந்த்ரவிற்கு.

“ ப்ச்ச்… டைம் வேஸ்ட் பண்ணாம யாருன்னு சொல்றீங்களா, எனக்கு நிறைய வேலை இருக்கு” சற்று காட்டமாகவே பதில் தந்தான்.

தன்னிடம் வழியாமல் இப்படி முகத்தில் அறைந்தது போலப் பேசும் முதல் ஆண் இவன் தான். ஏனோ அவனது பேச்சில் கோபம் வராமல், அவன் திமிரை ரசிக்கவே தோன்றியது அவளுக்கு.  

“ சரி சரி டென்ஷன் ஆகாதீங்க. நான் உங்க தங்கச்சி யமுனாவிற்கு வருங்கால நாத்தனார்.. ம்ம்ம்… வேற மாதிரியும் சொல்லலாம், ஆனா இப்போ சொல்லவேண்டாம்னு நினைக்கறேன்!” வசீகரமான புன்னகை செய்தால்.

ஜீவாவிற்குள் மெல்லிய பதட்டம். இவளிடம் பேசி  சமாளிக்கவேண்டும் என்று பல நாட்களாக மனதில் யோசித்து வைத்திருந்தான். இப்போது அவளே முன்வந்து பேசியது, அவனுக்கு சிறு நெருடலைத் தந்தது. ஒரு வேளை அவள் வீட்டில் தன்னைப் பற்றிப் பேசி ஆசையை வளர்த்திருப்பார்களோ! நாம தான் லேட் பண்ணிட்டமோ !

“ ஹலோ நீங்களா! நானே உங்களுக்குப் பேசணும்னு தான் இருந்தேன். நீங்களே பண்ணிடீங்க! “ எப்படியோ அவளிடம் பேச ஆரம்பித்தான்.

“ ம்ம்.. பரவால்ல நல்லா சமாளிக்கறீங்க!”

“ இல்லங்க , உங்க கிட்ட பேசியே ஆக வேண்டிய சூழ்நிலைல நான் இருக்கேன். ஆனா போன்ல வேண்டாம். நேர்ல பேசணும்” அவசரமாகச் சொல்ல,

“ஓ! சரி அப்போ நீங்க சாயந்திரம் ஆபீஸ்லேந்து வந்த பிறகு பேசலாம்.” கூலாகச் சொல்ல,

இன்று மாலை வெற்றியை வேறு சந்திக்க வேண்டுமே , அதனால் மறுத்தான்.

“ இல்ல, இன்னிக்கு முடியாது. நாம நாளைக்கு மீட் பண்ணலாம். “

‘இவன் என்ன எனக்கு அப்பாயின்ட்மென்ட் குடுப்பது. எனது அதிகாரம் தான் மேலாக இருக்கணும்.’ வசுந்தராவின் ஆதிக்கம் முன்னே வந்து நிற்க,

“ இல்ல ஜீவா! நாளைக்கு எனக்கு நிறைய வேலை இருக்கு! இன்னிக்கு இல்லனா அப்பறம் எப்போன்னு நானே போன் செய்றேன்” அதே அதிகாரத் தோணி அவளது குரலிலும் இருக்க,

ஜீவா அதை கவனிக்கத் தவறவில்லை. இருந்தாலும் அவனுக்கு இப்போது பேசவேண்டியது இருக்கவே, அவளுடைய முடிவிற்கு வந்தான்.

“ சரி அப்போ நாம இன்னிக்கு ஒரு ஏழு மணிக்கு சந்திக்க முடியுமா?”

சரி என ஒப்புக் கொண்டாள்.

“ அது சரி நீங்க எதுக்கு கால் பண்ணீங்க?” விடாமல் கேட்க,

“ நேர்ல பாக்க்கரப்ப சொல்றேன், பை!’ போனை வைத்திருந்தாள்.

‘ இவளை சமாளிக்கறது கொஞ்சம் இல்ல, நிறையவே கஷ்டம் போலிருக்கே! அவ அம்மாக்கு மேல இருப்பா போல! இவள கட்டிக்கறவன் இவளுக்கு அடிமையத் தான் இருக்கணும். இதயா என் வாழ்க்கைல வராம , இவள கட்டிக்க சொல்லிருந்தா என் வாழக்கை நரகமாயிருக்கும். கடவுளே!! ‘ நினைத்தும் பார்க்க முடியவில்லை அவனால்.

****

“அண்ணா…”

நிமிர்ந்தும் பார்க்காமல் தன் வீட்டின் பின்னால் இருக்கும் வெப்ப மரத்தடியில் சாய்வு நாற்காலியில் வானத்தை வெறித்த படி அமர்ந்திருந்தான் வெற்றி.

அவன் காலருகில் வந்து அமர்ந்தாள் வாணி.

“ அண்ணா, என்னை மன்னிச்சிடு.. “

“…..”

அவனின் மௌனம் அவளை மிகவும் வருத்தியது. தன் மேல் அவன் வைத்திருந்த நம்பிக்கையை தான் உடைத்துவிட்டோமே என்று அவளுக்கும் மனம் வேதனைப்பட்டது.

“ ப்ளீஸ் பேசு ண்ணா… என்னை திட்டு! அடி! ஆனா இப்படி இருக்காத “ அவளது கலங்கிய கண்களும் நலுங்கிய குரலும் வெற்றியைச் சற்று லேசாக அசைத்துப் பார்த்தது.

“ வேணாம் வாணி. நம்ம குடும்பத்துக்கு இது சரி பட்டு வராது”

எடுத்த எடுப்பிலேயே அவன் இப்படிச் சொன்னது அவளுக்கு கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் போக்கியது. பேசி சமாளிக்கலாம் என்று தான் நினைத்தான். ஆனால் இவன் சற்றும் பிடிகொடுக்க மாட்டான் என்பது போல பேசிவிட்டான்.

“ என்ன வாணி அமைதியா இருக்க? இனிமே அவன பாக்காத, பேசாத, புரியுதா “ பேச்சில் கனிவும் இருந்தது, அதே சமயம் ஆணையும் இருக்க,

“ அண்ணா …” வார்த்தை வரவே பயந்தது.

“ சொல்லு “

“ ஜீவா கிட்ட ஒரு தடவ பேசிப் பாருண்ணா..” தலையை உயர்த்தாமல் அவன் கால்களைப் பார்த்தே சொல்ல,

“ வாணி …” மிரட்டலாக ஒலித்தது அவன் குரல்.

அதிர்ந்து விழித்தாள் வாணி.

“ இங்க பாரு! அன்னிக்கே கோயில்ல உங்க ரெண்டு பேரையும் பார்த்தேன். என் தங்கச்சி தப்பு பண்ண மாட்டான்னு நம்பிக்கைல தான் உன்னை எதுவும் நான் கேட்கல, ஆனா இன்னிக்கு அவனோட தனியா பஸ்ஸ்டாப்ல நிக்கற அளவு வந்துட்ட, உனக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்துச்சு. அவன் வீட்டுக்கு விசேஷத்துக்கு வேற போயிருக்க, இதெல்லாம் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா!” மனம் குன்றிப் போய் எதற்கும் பதில் சொல்ல முடியாமல் நின்றாள்.

“ நீ பஸ்டாப்புல நிக்கறத நம்ம மாமா யாராவது பார்த்திருந்தா , நம்ம அம்மாவோட நிலமைய நினைச்சுப் பாரு. நாம எப்போடா தப்பு பண்ணுவோம், நம்ம அம்மா வ அவமானப் படுத்தலாம்னு காத்திட்டு இருக்கறவங்க நிறைய பேர் . அதுக்கு நீயே இடம் குடுக்கலாமா..”

“ இல்லண்ணா .. அம்மாவுக்கு அவமானம் வர மாதிரி நான் ஒரு நாளும் நடந்துக்க மாட்டேன். ஒரு தடவ நீயே அவர் கிட்ட பேசு. அப்பறம் அவர் எவ்வளவு நல்லவர்னு உனக்கேத் தெரியும். நீ எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சா ஒரு நல்லவனா பாத்து தான பண்ணிவைப்ப , அது ஏன் இவரா இருக்கக் கூடாது! ” மெதுவாக சொல்ல,

“ நீ இவ்வளவு சொல்ற அளவு அவன் உனக்காக என்ன பண்ணிட்டான் வாணி?” வலியுடன் பேசினான்.

“ உன்கிட்ட நான் எப்போதுமே மனசுவிட்டு பேசிருக்கேன் அண்ணா. அதே உரிமைல தான் இப்பயும் சொல்றேன். அவர் எனக்காக அவங்க குடும்பத்தையும் எதிர்க்க தயாரா இருக்காரு. அவங்க பாத்து வெச்சிருக்கற பொண்ண கூட வேணாம்னு சொல்லிட்டாரு .. அவர் கிட்ட பேசினா உனக்கும் அவரப் பிடிக்கும் “

“ நீ என்ன சொன்னாலும் எனக்கு சமாதானம் ஆகாது வாணி. நீ உள்ள போ நான் அவன் கிட்ட பேசிக்கறேன்”

அவளை உள்ளே போகச் சொன்னவன், மனம் முழுதும் குழப்பமாகவே இருந்தான். தங்கையின் ஆசை ஒரு புறம், தாயின் வளர்ப்பு ஒரு புறம். இரண்டிற்கும் நடுவில் சிக்கித் தவித்தான்.

ஒரு வேளை அவன் நல்லவனாகவே இருந்தால் , அவளின் வாழ்வைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை தான். ஆனால் உடனே எந்த முடிவிற்கும் வரவும் அவனால் இயலவில்லை.

இது வாணியின் வாழ்வின் முக்கியமானத் தருணம். இதில் எடுக்கும் முடிவு அவளின் மொத்த வாழ்க்கையும் பாதிக்கும் விஷயம். எதுவாக இருந்தாலும் சற்று அவசரமில்லாமல் யோசித்துச் செய்யவேண்டிய ஒன்று. முதலில் அவனிடம் பேசிப் பார்த்து , பிறகு  முடிவு செய்யவேண்டும் . அவன் கெட்டவன் என்று தெரிந்தால் , அந்த நிமிடத்திலிருந்து அவன் வாணியை நெருங்க முடியாது என்று உறுதியாய் இருந்தான்.

மாலை ஆனதும் ஜீவா கம்பனியில் உடம்பு சரியில்லை என்று சொல்லிவிட்டு சீக்கிரம் கிளம்பியிருந்தான்.

வெற்றி சொன்ன இடத்திற்கு ஐந்து நிமிடம் முன்பாகவே வந்து காத்திருந்தான். ‘நிச்சயம் வெற்றி சம்மதம் சொல்ல அவனை அழைத்திருக்க மாட்டான். இத்யாவை விட்டு விலகிக் கொள் என்றே சொல்வான் ‘ என்று ஜீவா அறிந்திருந்தான்.

தன் மனதில் உள்ள காதலை வெற்றிக்கு உணர்த்தவே வந்திருந்தான் ஜீவா.

சாவகாசமாக வேட்டி சட்டை அணிந்து நடந்து வந்தான் வெற்றிவேல். முன்பே ஜீவாவை நிற்பதைப் பார்த்ததும் , சற்று பொறுப்பானவன் தானோ என்று தோன்றியது. ஜீவாவிற்கு  எதிரே வந்து நின்றான் .

அவனை எடை போடும் பார்வை பார்த்தான். ஜீவா அமைதியாகவே நின்றான். வரவேற்கவோ , முகமன் கூறவோ இருவருக்கும்  எண்ணம் இல்லை.

ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து வெற்றி  மெல்ல ஆரம்பித்தான்.

“ வழக்கமா எல்லா அண்ணன்களும் சொல்ற மாதிரி, என் தங்கச்சிய விட்டுடுன்னு சொல்லத் தான் வந்தேன். ஆனா அவ மனசும் எனக்கு முக்கியம். உன்னை எதுக்காக அவளுக்கு பிடிச்சதுன்னு தெரிஞ்சிக்கனும்னு நினைக்கறேன்.

உன்னப் பத்தியும் உன் குடும்பத்தை பத்தியும் விசாரிச்சேன். உன்னப் பத்தி எந்த கெட்ட வதந்தியோ இல்ல கெட்ட விதமாகவோ யாரும் சொல்லல. இருந்தாலும் உங்க குடும்ப வசதிக்கு நாங்க சரிப்பட்டு வர மாட்டோம். “

அவன் பாதி சொல்லிக் கொண்டு இருக்கும் போதே இடையிட்டான் ஜீவா.

“ நானோ என் குடும்பத்துல இருக்கறவங்களோ என்னைக்கும் பணத்த பெருசா நினச்சதில்ல. எங்க அப்பவே பாத்து தான் செலவு செய்வார். எங்களையும் அப்படித் தான் வளத்தாங்க. அதை ஒரு காரணமா நீங்க சொல்ல வேண்டாம்.” பட்டென சொல்லிவிட்டான்.

“ சரி. பணத்தை விடு, ஊரறிய உனக்கும் வேற ஒரு பொண்ணுக்கும் நிச்சயம் பண்ணப் போறோம்னு சொன்னப்பிறகு , உங்க அப்பா கிட்ட நீ இதை சொல்லியிருக்க வேண்டியது தான. ஏன் பண்ணல?” ஊடுருவும் பார்வை பார்த்தான்.

“ அது… நான் …” சற்று தயங்கினான் ஜீவா.

“ ஏன் அந்தப் பொண்ன உனக்குப் பிடிச்சிருக்கா” ஏளனமாகக் கேட்க,

சுள் என்று கோபம் வந்தது ஜீவாவிற்கு.

“ நான் அந்தப் பொண்ண இது வரை பார்த்ததில்ல.. எனக்குப் பிடிக்கலன்னு அந்தப் பொண்ணு கிட்ட சொல்றத்துக்கு தான் இப்போ போறேன்..”

“இதை நான் நம்பனுமா?” நக்கலாக சிரித்தபடி கேட்டான் வெற்றி.

“ நீங்க நம்பரத்துக்காக நான் இதை சொல்லல, என் வாழ்க்கைல பொண்டாட்டின்னு ஒருத்தி இருந்தா அது இதயா மட்டும் தான். வேற யாருக்கும் என் இடமில்லை. இதுல நான் உறுதியா இருக்கேன்.”

அவனது கோவமான பேச்சு சிறிது நம்பிக்கையை வெற்றியின் மனதில் விதைத்தது.

“ சரி. நீ சொல்றது உண்மையாவே இருக்கட்டும். உன் வீட்டு பிரச்சனை எல்லாம் முடிஞ்ச பிறகு, உனக்கும் அந்தப் பெண்ணுக்கும் கல்யாணத்தை நிறுத்திய பிறகு என்கிட்ட வந்து பேசு. அது வரைக்கும் என் தங்கை கூட பாக்கறது பேசறது எதுவும் இருக்கக் கூடாது. நீ இதுல கரெக்ட்டா இருந்தா, நானே உங்களுக்குக் கல்யாணம் செஞ்சு வைக்கறேன். உன்னால முடியுமா?” சவாலாகக் கேட்டான்.

“ பேசக் கூடாதா?” ஏனோ ஏக்கம் அவனது குரலில் தடுக்க முயன்றும் வெளி வந்தது.

“ஆமா. உன்னால அது முடியாதுன்னா நீ என் தங்கையோட டைம் பாஸ் பண்ணத் தான் சுத்தறன்னு அர்த்தம்.” முறைத்துக் கொண்டே சொன்னான்.

“ என்னால முடியும். நான் நிருபிக்கறேன்.சீக்கிரமே! இன்னும் ஒரே வாரத்துல சால்வ் பண்ணிட்டு நான் உங்க கிட்ட பேசறேன்.”

“நானும் உனக்காக காத்திருக்கேன். என் தங்கைக்காக நான் குடுக்கற ஒரு வாய்ப்பு. அவ விருப்பம் பொய்யாகாம இருக்கணும்னு தான் நானும் ஆசப் படறேன்” பாசம் தான் அவன் பேச்சில் தெரிந்தது.

ஜீவாவிற்கு வெற்றியை நன்றாகவே புரிந்துகொள்ள முடிந்தது. அவனும் இரண்டு தங்கைகளுக்கு அண்ணன் ஆயிற்றே!

“ உங்களப் பத்தி இதயா சொன்னப்ப எனக்கு சரியா தெரியல. ஆனா இப்போ புரியுது, உங்களுக்கு உங்க குடும்பத்து மேல எவ்வளவு பாசம்னு. உங்க பயம் எனக்கு நல்லா புரியுது. நான் உங்க நம்பிக்கைய நிச்சயம் காப்பாத்துவேன். எல்லாம் முடிஞ்சதும் வந்து பேசறேன். நான் கிளம்பறேன் வெற்றி. தேங்க்ஸ் பார் தி டைம்” அவனிடம் கை நீட்ட, வெற்றியின் கை தானாகவே நீண்டது.

இருவரும் கை குலுக்கி விடை பெற்றனர்.

‘கடவுளே இவன் நல்லவனாகவே இருக்க வேண்டும். என் தங்கை சந்தோஷமா இருக்கணும் ’ மனதில் வேண்டிக்கொண்டே வீட்டிற்குக் கிளம்பினான்.

ஜீவா முதலிலேயே சென்றிருக்க, வெற்றி சிறிது நேரம் கழித்தே கிளம்பினான்.

அதற்குள் எங்கிருந்தோ ஓடி வந்தான் வில்லியம். இவர்கள் கை குலுக்குவதைக்  கண்டவன் வயிறு பற்றி எரிந்தது.

“ அண்ணா , என்ன சொல்றான் அந்த ராஸ்கல்” அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“ பாக்க நல்லவனாத் தான் தெரியறான் வில்லியம். பொருத்திருந்து பார்ப்போம்” எதார்த்தமாகச் சொல்ல , அதை வில்லியமால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

“ அண்ணா, அவன் பேசறதுல கில்லாடி.வாணி ஏமாந்த மாதிரி நீங்களும் அவன் வலைல விழுந்துடாதீங்க. “ ஏற்றிவிட நினைத்தான்.

“ இல்ல . அவனுக்கு ஒரு வாரம் டைம் குடுத்திருக்கேன். எல்லா பிரச்சனையும் முடிச்சுட்டு வந்து பேசறேன்னு சொல்லிருக்கான். பாத்துக்கலாம். நீ வீட்டுக்குப் போ” பிடி கொடுக்காமல் பேசிவிட்டுக் கிளம்பினான் வெற்றி.

‘ ஒரு வாரத்துல எல்லாம் சால்வ் பண்றானா?!! விடமாட்டேன் டா.. ‘ நரி திட்டம் போட ஆரம்பித்தது.