Un Vizhigalil Vizhuntha Naatkalil – 6

“ பத்திரமா இருந்துக்கோ டா.. காலேஜ் லைஃப்ல நிறைய டிஸ்டிராக்ஷன்ஸ் வரும். நாம தான் தெளிவான முடிவு எடுக்கணும். இது லைஃபயே மாத்திடும். நாம எப்பவும் எதிர்காலத்தை மனசுல வெச்சு நடந்துக்கணும். புரியுதா?” என்றும் இல்லாமல் இன்று வாணிக்கு அறிவுரை வழங்கினான்.

எதற்காக இப்போது இதை சொல்கிறான் என்று வாணிக்கு ஒன்றும் விளங்கவில்லை, இருந்தாலும் அன்பு அண்ணனின் முதல் அறிவுரை. அதனால் சரியென மண்டையை ஆட்டினாள்.

“ சரிண்ணா. கண்டிப்பா எதையும் யோசிக்காம செய்யமாட்டேன். ஆனா நீ இதை ஏன் சொல்றன்னு தான் யோசிக்க வேண்டியதா இருக்கு!” அப்பாவியாய் விழியை விரித்துக் கேட்க,

தன் தங்கை இன்னும் குழந்தையாகத் தான் இருக்கிறாள், அவளுக்கு மனதில் எந்த சலனமும் இல்லை என்று அவன் மனம் சொன்னது, இருந்தாலும் இன்னொரு மனம் விழிப்போடு இரு என்று சுத்தியல் கொண்டு அடித்தது. எதுவாக இருந்தாலும் அடுத்த விடுமுறைக்குத் தான் பார்க்க முடியும்.

“ ஒண்ணுமில்ல டா.. சும்மா சொன்னேன்.  காலேஜுக்கு பார்த்து போய்ட்டு வா. கண்மணி கூடவே போய்ட்டு வா. தனியா வராத. எதுவா இருந்தாலும் உடனே போன் செய்ங்க “ என்று அம்மா தங்கை இருவரையும் பார்த்து சொல்லிவிட்டுத் தான் மனதே இல்லாமல் புறப்பட்டான்.

ரேகாவிற்கு மகனின் இன்றைய நடவடிக்கை சற்று சந்தேகத்தை ஏற்படுத்தினாலும் , அவன் தன் தங்கை வளர்ந்துவிட்டதால் இந்த உபதேசம் என்று நினைத்துக்கொண்டார்.

ஆக , யாரும் அறியாமல் அவன் மட்டுமே மனதில் இதை வைத்துக் கொண்டான்.

வாணி எப்போதும் போல இருந்தாலும் அவள் மனதில் ஒரு ஓரத்தில் தனக்கென்று ஒரு சிம்மாசனத்தை பிடித்துவிட்டான் ஜீவா. அது அவளே அறியாத ஒன்று.

தினமும் அவனைக் காண்கையில் தனக்குள் ஏன் இத்தனை மகிழ்ச்சி என்று அவளுக்கு அப்போது புரியவில்லை. ஒரு நாள் அவனைக் காணாவிட்டாலும் அந்த நாளும் அவளுக்கு ஒடுவதில்லை. காதலை உணரக் கூட அவளால் முடியவில்லை. இல்லை, அதைக் காதாலாக ஏற்றுக் கொள்ள அவளுக்கு பயமாக இருந்தது என்பதே உண்மை.

ஆனால் ஜீவா அவளை எப்படியாவது காதலை உணரவைக்கும் முயற்சியில் இறங்கியிருந்தான்.

யமுனாவை விட்டு எப்படியாவது அவளிடம் முதலில் பேசி அவளது மனதை அறிந்து கொள்ள நினைத்தான். அவனுக்கு அவளைத் தொடர்பு கொள்ள வேறு வழியே இல்லை. அவள் எப்போதும் அவளுடைய தோழி கண்மணியுடன் வருவதால் அவள் அவனிடம் தனியாகப் பேசுவதும் அரிதாக இருந்தது.

இருந்தாலும் கண்மணி அவளின் மனதை ஓரளவு யூகித்திருந்தாள். வாணி அவளிடம் மனதை திறந்து சொல்லாதது அவளுக்கு சற்று கோபம் இருந்தாலும், உயிர் தோழி அவனை நேசிக்கிறாள் என்று ஒரு புறம் மகிழ்ச்சியாகவே உணர்ந்தாள்.

ஆனால் ஏன் அவனிடம் இன்னும் பேசாமல் இருக்கிறாள் என்று அவளுக்கும் விளங்கவில்லை. எதுவாக இருந்தாலும் அவளாக தன்னிடம் வந்து சொல்லாததால் இவளும் எதையும் அவளுக்கு எடுத்துரைக்க விரும்பவில்லை.

வாணியும் கண்மணியும் உயிர்த் தோழிகள் தான். வாணி அவளிடம் எதையும் மறைத்ததில்லை. ஆனால் ஜீவா விஷயத்தை அவளிடம் எப்படிக் கூறுவது என்று தெரியவில்லை. காதல் என்ற வார்த்தை கூட தன் குடும்பத்தின் மானத்தை வாங்கிவிடுமோ , தன் தாயின் வளர்ப்பை பிறர் குறை கூறும்படி ஆகி விடுமோ என்று அஞ்சினாள்.

யமுனா வாணியிடம் அவர்கள் சேர்ந்து செல்லும் வகுப்பின் பொது மட்டுமே பேச முடிந்தது. முதலில் வாணி சிறிது தயங்கினாலும் போகப் போக நன்றாக பேச ஆரம்பித்தனர்.

யமுனா ஜீவாவைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசமாட்டாள். அதற்காகத்தான் தன்னிடம் பேசுகிறாள் என்று வாணி நினைத்துவிடக் கூடாது என்பதில் அவள் தெளிவாக இருந்தாள். வாணியும் அப்படியே! ஜீவாவைப் பற்றித் தப்பியும் கேட்டுவிட மாட்டாள்.

கண்மணிக்குத் தன்னுடைய உயிர் தோழி வேறொருத்தியுடன் நெருக்கமாகப் பழகுவது சிறிது பொறாமையை உண்டாகியது. போகப் போக கண்மணி அவளிடம் பேசுவதை கொஞ்சம் குறைத்துக் கொண்டாள்.

வாணிக்கு இப்போது ரயிலில் வரும்போதும் யமுனா கூடவே வருவதால் கண்மணி பேச்சைக் குறைத்துக் கொண்டது ஒரு பெரிய விஷயமாகப் படவில்லை. அதே சமயம் அவள் கண்மணியை ஒதுக்கி விடவும் இல்லை. அவர்களின் பேச்சில் கண்மணியையும் எப்போதும் சேர்த்துக் கொள்வாள்.

 

“வாணி, உனக்கு நாவல் பழம் பிடிக்குமா?” , அருகில் ஒரு சைக்கிளில் விற்றுக் கொண்டிருந்தார் ஒருவர்.

“ ம்ம்.. புடிக்கும் யம்மு.. வாங்கலாமா? கண்மணி உனக்கு?” இருவரையும் கேட்க,

“ எனக்கு வேண்டாம் வாணி.” ஒதுக்கத்துடன் சொன்னாள் கண்மணி.

“ ஹே வாங்கலாம் பா. நீ ரெண்டு சாப்பிடு போதும்” அவள் பதிலுக்குக் காத்திருக்காமல் வாங்கச் சென்றாள் வாணி.

புது நட்பிற்கு இடையே தான் வந்தது போல உணர ஆரம்பித்தாள் கண்மணி. அவளுக்கு உள்ளுக்குள் எரிந்தது.  அந்த நெருப்பிற்கு நெய் வார்க்க வந்து சேர்ந்தான் வில்லியம்.

வில்லியம் வாணி யின் நண்பன் தான் ஆனாலும் ஒரே ஊர் என்பதால் கண்மணிக்கும் தெரியும். கண்மணியும் அவனுடன் நன்றாகப் பேசுவாள்.

அன்று நிறைய பேசிக்கொண்டு வந்தது வாணியும் யமுனாவும் தான்.

“ என்ன ஆச்சு கண்மணி ஏன் அமைதியா வர?” வாணி அவளின் முகவாட்டத்தைக் கணித்துக் கேட்க,

“ ஒண்ணுமில்ல கொஞ்சம் தல வலி”

“ ஹே வாணி இன்னிக்கு கிளாஸ்ல நம்ம பாட்டு டீச்சர் பாடுன பாட்டு ஒரு நாள் எங்க வீட்ல கேட்டேன். ஜீவாண்ணா க்கு ரொம்ப புடிக்கும். சீ டீ ல போட்டுட்டே இருப்பான். “ அவள் எதார்த்தமாக சொல்ல,

வாணிக்கும் அவள் கூறியது சாதாரணமாகத் தோன்ற, “அப்படியா? கர்னாட்டிக் கூட கேப்பாங்களா?” என்க,

“ம்ம்ம்.. எல்லா டைப் சாங்க்சும் கேப்பாங்க” – யமுனா

கண்மணிக்கு அவர்களின் நட்பு ஜீவாவிற்காகத்தான் என்று தோன்ற ஆரம்பித்தது. அவள் முகம் சட்டென மாற, அப்போதுதான் அவளை கவனித்தாள் வாணி.

கண்மணியிடம் தான் இன்னும் ஜீவாவைப் பற்றி பேசியது கூட இல்லை என்பது உரைக்க, யமுனா இல்லாத சமயம் அவளிடம் விளக்கம் தர முற்பட்டாள்.

ரயிலுக்காக ஸ்டேஷனை அடைந்ததும் வாசலில் நின்று கொண்டிருந்த வில்லியம் வாணியைப் பார்த்து “ ஹே வாணி .. எப்படி இருக்க, ரொம்ப நாள் ஆச்சு “ என்று பேச்சுக் கொடுத்தான்.

அவனைக் கண்டதும் வாணிக்கு சிறு எரிச்சல் உண்டானது. மற்ற நண்பர்களிடம் அவன் தன்னைப் பற்றி என்ன கூறியிருக்கிறான் என்றே சிந்திக்கத் தோன்றியது. அன்று ஜீவா சொன்னதிலிருந்து அவனிடம் பேசுவதை வெகுவாக குறைத்திருந்தாள்.  இன்று எதிரே வந்து நிற்கவும் , அவனைத் தவிர்க்கத் தான் தோன்றியது.

“ நல்லா இருக்கேன் வில்லி.. அப்புறம் பாக்கலாம் “ அவனை லேசாக கழட்டி விட, பின்னால் வந்த கண்மணி அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

வாணி முன்னே யமுனாவுடன் சென்று விட,

கண்மணியை நிறுத்தினான் வில்லியம். “ என்ன கண்மணி உன் ப்ரென்ட் இப்போலாம் பேசக் கூட மாட்டேங்கறா .. வாட்ஸ் ஹாப்பெனிங்”

“ அவ என்னையே கண்டுக்க மாட்டேங்கறா.. நீ எல்லாம் முன்னாடி கூட நிக்க முடியாது.” இருந்த எரிச்சலில் அவனிடம் என்ன பேசுவது என்று இல்லாமல் பேசினாள்.

“ஏன் இப்போ என்ன ஆச்சு அவளுக்கு?” தீவிரமாகக் கேட்க,

“ மேடம் இப்போ சுவாமி ஜீவனந்தா பக்தை.  சுவாமிஜியும் அருள் புரிஞ்சிட்டாருன்னு நினைக்கறேன்” நக்கலாகக் கூற,

“யாரு அந்த புதுசா வரானே அவனா? “ அவனுக்கும் அதே கடுப்பு இருந்தது கண்மணிக்குப் புரிந்தது.

“ பாரு உனக்கும் தெரிஞ்சிருக்கு..” எடுத்துக் கொடுத்தாள்.

“ நானும் கொஞ்ச நாளா பாத்துட்டு தான் இருக்கேன். இவ என்னமோ அவன் முதல் நாள் போட்டுட்டு வர டிரஸ் கலர்ல அடுத்த நாள் போடறா , இவ போடற கலர்க்கு மாட்சிங்கா அவன் போடறதும்.. வாட்ச்  பண்ணிட்டு தான் இருக்கேன். “ கையைப் பிசைந்து கொண்டே பேசினான்.

“ சரி நீ ஏன் டென்ஷன் ஆகற? உனக்கு என்ன வந்துச்சு? நீ வாணிய…??!!” அவனுக்கு தூபம் போட்டு ஏத்தி விட்டாள்.

“ஆமா கண்மணி, ரொம்ப நாளா எனக்குள்ள இருக்கற ஆசை தான் , சொல்ல நேரம் பாத்துட்டு இருந்தேன் ஆனா அதெல்லாம் இந்த ஜீவா கெடுத்துடுவான் போலிருக்கு” , அவனும் கண்மணியிடம் தன் மனதில் உள்ளதை சொல்லிவிட்டான்.

காதலில் விழுந்த தோழியைக் கண்டு மகிழ்ந்தவள் தான் கண்மணி. ஆனாலும் ஜீவாவைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை என்பதற்காகவும் அதற்கும் மேல் தன்னை ஒதுக்கிவிட்டு யமுனாவுடன் நட்பானதற்காவும் இந்த வில்லியமை தூண்டிவிடுவது அவளுக்குமே சற்று உறுத்தலாக இருந்தது.  இப்போது வார்த்தை வந்துவிட்டது. இனி அது போகிற போக்கில் போகட்டும் என்று விட்டுவிட்டாள்.

சில நேரங்களில்  நாம் செய்யும் சிறு தவறு, மற்றவரை எந்த அளவு பாதிக்கும் என்று அந்த நொடியில் சிந்திக்கத் தவறுவதால் பலர் தங்கள் வாழ்வில் பல நேரம் நிம்மதியின்றி தவிக்கும்படி நேர்கிறது. பின்னாளில் நினைத்துப் பார்த்தால் அது வருத்தம் தரக் கூடியதாகவே இருக்கும்.

அப்படி ஒரு செயலைத் தான் தன்னை அறியாமல் செய்து கொண்டிருந்தாள் கண்மணி. இதனால் வாணியின் வாழ்வில் துன்பம் ஏற்படும் என்று முன்பே தெரிந்தால் ஒரு வேளை அந்தச் செயலை செய்யாமலே இருந்திருப்பாள்.

“ எனக்குத் தெரிஞ்சு இன்னும் அவங்களுக்குள்ள அவ்வளோவா பேச்சு வார்த்தை இல்லை. நீ அவகிட்ட பேசு , நான் வரேன்” கிளம்பிவிட்டாள்.

வில்லியமோ வாணியிடம் இதைப் பற்றிப் பேசி தன்னுடைய இமேஜை குறைத்துக் கொள்ள தயாராக இல்லை. மாறாக ஜீவாவிடம் சென்று பேச நினைத்தான். அவனை விட வாணியைப் பற்றி அவனுக்கே சிறு வயது முதல் தெரியும் என்ற காரணம்.

வாணியைக் கண்டதும் லேசான புன்னகையுடன் வாணியின் அருகே வர , எதிரே வந்தான் ஜீவா.

உடனே வில்லியம் கண்மணியைப் பார்க்க, அவள் வாணியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஜீவாவும் வாணியும் ஒருவரை ஒருவர் அர்த்தப் பார்வை பார்த்துக் கொண்டனர்.

அதைக் கண்டு காதில் புகை வராத குறையாக இருந்தது வில்லியமிற்கு. ‘காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் தூக்கிட்டு போறதா.. விடமாட்டேன் டா உன்ன..’ மனதில் கருவிக் கொண்டு , அவனுக்கு எதிரே வாணியிடம் தனக்குள்ள நெருக்கத்தை காட்ட விரும்பி , முடிவை மாற்றிக் கொண்டு  அவளிடமே சென்றான்.

“ வாணி, வெற்றி அண்ணா வந்தாங்களா? அப்பா பாக்கணும்னு சொன்னாரு.” பேச்சைத் தொடங்க,

“ அப்படியா.. நான் அண்ணா கிட்ட சொல்றேன். இப்போ தான் வந்துட்டு போனாங்க.” கடனுக்குப் பேசி வைத்தாள்.

“ பாவம் வெற்றி அண்ணா. உங்க ஞாபகமாவே இருக்குன்னு லாஸ்ட் டைம் பாத்தப்ப சொல்லியிருக்காரு. வில்லிய கொஞ்சம் பாத்துக்க சொல்லுங்கன்னு சொன்னாராம்.”  ஜீவாவிற்கு முன்னே தங்கள் குடும்பத்தின் நட்பை பிரசன்னம் செய்தான்.

ஜீவாவிற்கு வாணி ஏற்கனவே தெளிவு படுத்தி விட்டதால் அவன் அலட்டிக் கொள்ளாமலே நின்றிருந்தான்.

“ நான் என்ன சின்ன பாப்பா வா . அதெல்லாம் என்ன நானே பாத்துக்குவேன். அண்ணன் சும்மா சொல்லிருப்பான். நீ வொரி பண்ணிக்காத. நீ சரியா படிக்கறது இல்லன்னு ஆண்ட்டி சொன்னாங்க. முதல்ல அதைப் பாரு” அவன் மேல் இருந்த சிறு கோவத்தை அவள் இவ்வாறு சொல்லித் தீர்த்துக் கொண்டாள்.

அதைக் கேட்ட வில்லியமின் முகம் வெட்கிக் கருக, ஜீவாவோ உதட்டை மடக்கிக் கொண்டு சிரித்தான்.

அதைக் கண்ட வில்லியம், பல்லைக் கடித்து அங்கிருந்து சென்றான். அவனுக்குள் ஒரு வில்லன் தோன்றவே செய்தான்.

 

Comments Here