UTN 22

UTN 22

உயிர் தேடல் நீயடி 22

அந்த உயர்ரக கார், ஓட்டுனரின் கைவண்ணத்தில் சாலையில் வேகமெடுத்து பறந்து சென்றது.

பின்னிருக்கையில் விழிகளில் ஈரம் தாங்கியவளாய் காவ்யதர்ஷினி அமர்ந்திருந்திருக்க, அவளருகே
தன் கைப்பேசியில் மின்னல் வேக உத்தரவுகளை பிறப்பித்து கொண்டிருந்தான் விபீஸ்வர்.

“நீங்க சீக்கிரம் டிரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணுங்க டாக்டர், ஃபியூ மினிட்ஸ்ல நாங்க அங்க இருப்போம். சிவாக்கு எதுவும் ஆக கூடாது டாக்டர்” விபீஸ்வரின் அழுத்தமான உத்தரவில் காவ்யா அவன் பக்கம் திரும்பினாள். சற்றுமுன் கைப்பேசியில் ஒலித்த சேதி மீண்டும் அவளை மிரள வைத்தது.

‘காவ்யா க்கா, நான் சிவா ஃப்ரண்ட் பேசுறேன்… சிவாக்கு பைக் ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சு! ஆம்புலன்ஸ் சொல்லி இருக்கோம்… இன்னும் வரல, ரொம்ப இரத்தம் வெளியே போகுது… எங்களுக்கு என்ன செய்யறது ஒண்ணும் புரியல க்கா, சீக்கிரம் வா கா!” அவன் பதற்றமான குரலில் இவளுக்கும் பதறியது. ஏதோ சொல்ல முயன்றவள் கண்கள் இருண்டு நினைவற்று கீழே சரிந்தாள்.

வாயில் காவலர்கள் அவள் விழுந்ததைப் பார்த்து ஓடிவர, அவர்களை கவனித்த விபீஸ்வரும் இறங்கி விரைந்து வந்து அவளை தூக்கி கன்னம் தட்டி விழிக்க வைக்க முயன்றான். அவளருகில் இருந்த கைப்பேசியை எடுத்து தன் காதில் ஒற்றியவன் மறுமுனை சொன்ன சேதி கேட்டு, “நீ முதல்ல ஸ்பாட் எங்கன்னு சொல்லு” என்றான் வேகமாய்.

இடத்தை அவன் சொன்னதும், காவ்யாவை ஒருகையால் பிடித்தபடி பிரபல மருத்துவமனைக்கு அவசர தகவல் தந்து விட்டு, காவ்யாவை தூக்கி காரில் கிடத்தினான்.

அவள், “சிவா…!” என்று அலறி விழிக்க, “சிவாக்கு எதுவும் ஆகாது நீ பயப்படாம இரு” என்ற அவனின் நம்பிக்கை மொழிகளுக்கும் இவள்‌ மனதின் பதைபதைப்பு அடங்குவதாக இல்லை.

மாநிலத்தின் முதல்தர மருத்துவமனை முன்பு கார் நிற்க, இருவரும் வேகவேகமாக உள்ளே சென்றனர். சிவாவை அந்த நிலையில் பார்த்து காவ்யா முழுவதுமாக உடைந்து போனாள்.

அறுவை சிகிச்சைக்கு வேண்டிய ஏற்பாடுகள் உடனுக்குடன் நடைப்பெற்றன. சிவாவின் சிகிச்சைக்கான பொறுப்பை முழுவதுமாக விபீஸ்வர் நேரடியாகவே கவனித்து கொண்டான்.

தன் தம்பி நல்லமுறையில் மீண்டு வந்தால் போதுமென்ற வேண்டுதல் தவிர, மற்றவை எதுவும் காவ்யா நினைவில் பதியவில்லை.

அவள் முன்பு சிவாவின் தோழர்கள் மூவரும் படபடப்போடு நின்றிருந்தனர். அவர்களிடம் வந்த விபீஸ்வர், அதிலொருவன் கன்னத்தில் ஓங்கி அறை விட்டு மறுபடி கையோங்க, அவன் கையை பிடித்து தடுத்தவள், “சர் அவங்க சிவாவோட ஃபிரண்ட்ஸ்! அவங்கள ஏன் அடிக்கிறீங்க?” பதறி கேட்டாள்.

தன் கையை அவளின் பிடியிலிருந்து உதறிக் கொண்டவன், “பொல்லாத ஃப்ரண்ஸ்… சிவாக்கு ஆக்ஸிடென்ட் ஆனதுக்கு இவனுங்க தான் காரணம்” எனக் கோபமாக அவர்களை கைக்காட்டினான்.

காவ்யா விளங்காமல் அவர்களை பார்க்க, அனைவரும் தலையை தொங்க போட்டு கொண்டனர்.

“எல்லாரும் சேர்ந்து பைக் ரேஸ் வச்சிருக்காங்க, அதுவும் மெயின் ஏரியால” விபி கோபமாகவே சொல்ல,
காவ்யாவின் மனமும் நொந்து போனது.

அவர்கள் மூவரும், “சாரி சார், ஏதோ ஜாலிக்காக டிரை பண்ணோம், அது தப்பா போயிடுச்சு” தயங்கியபடி மன்னிப்பு கேட்க, அவன் வெறுப்பாக தலையசைத்தான்.

“ஏன்டா இப்படி எல்லாம்? ஜாலிக்காக உங்க உயிரோடவா விளையாடுவீங்க!” காவ்யா வேதனையாக கேட்க, “சாரி க்கா, இனிமே இப்படி எல்லாம் பண்ணமாட்டோம்” அவர்களும் கண்ணெதிரே நண்பனுக்கு நேர்ந்த விபத்தை பார்த்து பயந்து இருந்தனர். எனவே அவளிடம் உறுதி கூறிக் கொண்டு கிளம்பி விட்டனர்.

காவ்யாவின் பார்வை அறுவை சிகிச்சை அறையின் மூடிய கதிவில் பதிய, தன் தைரியத்தை விட்டு தேம்பலோடு கண்ணீர் வடித்தாள் அவள்.

“ஹேய் ரிலாக்ஸ் காவ்யா, சிவாக்கு ஒண்ணும் ஆகாது” விபீஸ்வர் தைரியம் சொல்ல, முந்தி வந்த அழுகையை கட்டுபடுத்தி கொண்டு, ஆமோதிப்பாக தலையாட்டினாள்.

அடுத்த ஒருமணிநேர இடைவெளியில் சிவாவின் சிகிச்சை முடிந்திருந்தது. வயிறு, வலது தோள்பட்டையில் பலமான காயம், வலது கையில் எலும்பு முறிவு, முகத்திலும் உடலின் மற்ற பாகங்களிலும் ஆழமற்ற காயங்கள் ஏற்பட்டிருந்தது. தலைக்கவசம் அணிந்திருந்தமையால் அவன் தலை தப்பி இருந்தது.

மருத்துவர் அவன் உடல்நிலை பற்றி விளக்கிச் சொல்ல, சிவாவின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதே காவ்யாவிற்கு போதுமானதாக இருந்தது.

பார்கவியும் மஞ்சரியும் வந்து விட விபீஸ்வர் அவர்களிடம் விடைப்பெற்று கிளம்பினான். தூர சென்றவனின் முதுகையே வெறித்து நின்ற காவ்யாவிற்குள்‌ ஏதோ இனங்காண இயலாத வெறுமை வந்து போனது.

எத்தனை இக்கட்டான சூழ்நிலையில் அவன் தனக்கு உதவி இருக்கிறான் என்று எண்ணும் போதே அவளுக்குள் நன்றியுணர்வு பெருகியது. ‘தான் உறுதி இழந்த நேரத்தில் அவன் இல்லையென்றால் தான் மட்டுமே அலைந்து திரிந்து திண்டாடி போயிருக்க கூடும்’.

அதோடு விபீஸ்வரால் தான் சிவாவிற்கு தாமதமின்றி உயர்தரமான சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதையும் அவள் உணர்ந்தே இருந்தாள்.

அழுது புலம்பிய தாயையும் தங்கையையும் ஆறுதல் படுத்தி அனுப்பி வைத்தவள், சிவா கண்விழிக்கும் தருணத்திற்காக காத்து கிடந்தாள். விடியற்காலை பொழுதில் அவனுக்கு நினைவு வந்து சிறிது நேரத்திலேயே தப்பியது.

‘ஹே ஹே ஹே எனக்கு வேலை கிடைச்சிடுச்சு பார்த்துக்க பார்த்துக்க…’ கையில் வேலைக்கான உத்தரவு காகிதத்துடன் ஆட்டம் போட்ட சிவா அவளின் நினைவில் வந்து போனான்.

‘டேய் அண்ணா, வெறும் பதினஞ்சாயிரம் சம்பளத்துக்கு நீ போடுற ஆட்டம் ஓவரா இல்ல’ மஞ்சரி அவனை கேலி பேச, ‘முதல்ல குறைவாதான் கிடைக்கும்… போக போக ஏறும் பாரேன், நான் வேலை செய்ய போற கார் கம்பெனி அப்படி தெரியுமா!’ என்று தங்கைக்கு நாக்கை துருத்தி அழகு காட்டிவிட்டு, பார்கவி இடம் துள்ளியோடி வந்தவன், ‘அம்மா சீக்கிரம் காவ்யாக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பீங்க, நான் நடத்துவேன் அக்கா கல்யாணத்தை ஜாம் ஜாம்னு’ என்று கெத்து காட்டினான்.

‘வேலை கிடச்சதும் பெரிய மனுசன் போல பேச்ச பாரு’ காவ்யா சிரித்தபடியே தம்பியின் தலையில் தட்டி விட்டாள் அன்று.

இன்று உடல் முழுவதும் கட்டுகளோடு வலியில் முணங்கும் தம்பியை பார்க்க, அவளால் தாங்க முடியவில்லை. கலக்கத்துடன் அறைக்கு வெளியே வந்து வரிசையாக அமைந்திருந்த இருக்கையில் அமர்ந்து அழுது விட்டாள்.

இரவோடு விடியல் கைக்கோர்க்கும் இந்நேரம்! கலக்கமும் வேதனையும் நீர் கோர்க்கும் கண்ணோரம்! இதயம் உள்ள இடத்தில் அழுத்தம் கூட, அவளை சுற்றி இதமாய் பரவியது அவன் வாசம்!

கண் கண்ணாடியை கழற்றி நனைந்திருந்த கண்களை துடைத்து விட்டு மறுபடி அணிந்து கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.

“நீங்க எப்ப வந்தீங்க சர்?” அவளுக்கு முன்பே அங்கு அமர்ந்திருந்த விபீஸ்வரை கவனித்து திகைப்பாக கேட்க,

“உனக்கு என் காதல் மேல நம்பிக்கை வராம இருக்கலாம்! ஆனா, இந்த நிலைமையில உன்ன தனியா விட்டு என்னால நிம்மதியா தூங்க முடியல, அதான் வந்துட்டேன்” என்று பதில் சொன்னவனை இன்னும் வியந்து‌ பார்த்தாள் அவள்.

“அது… சிவாவுக்கு நினைவு வந்திடுச்சு, இன்னைக்கு அவன்கூட பேசலாம்னு டாக்டர் சொன்னாரு, இனி நான் இங்க பார்த்துக்கிறேன், ரொம்ப நேரமாயிடுச்சு நீங்க போய் தூங்குங்க சர்” காவ்யா தயக்கமாக சொல்ல, விபி தலையசைத்து விட்டு எழுந்து நடந்தான்.

“விபி சர்!” அவள் அழைப்பில் நின்று திரும்பினான்.

“ரொம்ப நன்றி சர், சரியான நேரத்தில பெரிய உதவி செஞ்சிருக்கீங்க… நீங்க இல்லனா நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பேன்” அவள் நன்றி சொல்ல,

“உன் நன்றிய நீயே வச்சுக்க, அது எனக்கு தேவையில்ல” விபீஸ்வர் காட்டமாய் சொல்லிவிட்டு சென்றான்.

அவன் கோபத்தின் காரணம் விளங்காமல் இவள் திருதிருத்து விழித்து நின்றிருந்தாள்.

அடுத்த நாள் சிவா அவசரபிரிவிலிருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டான். அந்த அறை அனைத்து வசதிகளுடன், துணையாக வசிப்பவருக்கும் சகல ஏற்பாடுகளுடன் அமைந்திருந்தது. சிவாவை கவனிக்க உடன் ஒரு செவிலியும் அமர்த்தப்பட்டிருந்தார். இதுவும் விபீஸ்வர் ஏற்பாடு தான்.

அந்த அறையின் ஒருநாள் வாடைகையை விசாரித்தவளுக்கு அடிதொண்டை காய்ந்து போனது. இப்போதுதான் அவளுக்கு வேறு சந்தேகமும் தோன்ற, வேகமாய் சென்று சிவாவின் சிகிச்சைக்கு இதுவரை செலவான தொகைப் பற்றி விவரம் கேட்டறிந்தவளுக்கு தலை கிறுகிறுக்க தொடங்கியது.

அவளின் கையிருப்பு இந்த தொகையில் பாதியளவு கூட தேறாது. அங்கே இங்கே என்று பிரட்டினாலும் தொடர்ந்து சிகிச்சைக்கு இன்னும் அதிகமாக செலவாகுமே என்று கணக்கிட்டவள் மலைத்து தான் போனாள்.

இப்படி காசை நீராக விபீஸ்வர் செலவிட்டதால் தான் சிவா எந்த அதிக சேதாரமும் இன்றி மீண்டிருக்கிறான் என்ற உண்மையையும் அவள் உணர்ந்தே இருந்தாள்.

இனி என்ன செய்வது என்று யோசித்து ஓரளவு முடிவிற்கு வந்திருந்தாள். அடுத்த நாளில் இருந்து சிவா ஓரளவு பேச தொடங்கி இருந்தான். அவன் உடல்நலமும் சிறிதுசிறிதாக தேறி வந்தது. மாறி மாறி அம்மா, அக்கா, தங்கையிடம் மன்னிப்பு கேட்டு ஓய்ந்து தான் போனான்.

# # #

மறுநாள் அனுமதியுடன் விபீஸ்வர் கேபினுக்குள் வந்து நின்றாள் காவ்யா. அவளை பார்த்ததும் விபியின் முகம் மென்மையாய் மலர்ந்தது.

“சிவா இப்ப எப்படி இருக்கான் கவி?”

“முன்ன விட பரவால்ல சர், உங்களை பார்க்கணும் உங்களுக்கு நன்றி சொல்லணும்னு சொல்லிட்டிருக்கான்”

“ஈவ்னிங் நானும் வரணும்னு நினச்சிருந்தேன்”

“உங்க உதவியால தான் சிவா இப்ப எங்களுக்கு திரும்ப கிடைச்சிருக்கான் ரொம்ப நன்றி சர்…” என்றவள் உணர்ச்சிவசத்தோடு கைகூப்பினாள்.

“இப்படி சில்லியா நடந்துக்காத, உனக்கும் உன் ஃபேமிலிக்கும் ஏதாவதுன்னா நான் சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருப்பேன்னு நினைச்சியா?” அவன் பதில் உரிமையின் பிரதிபலிப்பாக வந்தது.

“அது சர்… நீங்க ஹாஸ்பிடல்ல நிறைய செலவு பண்ணி இருக்கீங்க… இப்ப என்னால முழுசா அடைக்க முடியல… கொஞ்சம் டைம் கொடுங்க நான் சீக்கிரமே… அடைச்சிடுவேன்” என்றவள் ஓரளவு பணத்தொகை கோடிட்ட காசோலையை அவனிடம் தயக்கமாக நீட்டினாள்.

“இப்போதைக்கு என்னால முடிஞ்சது இது…” என்று.

அதுவரை அமைதியாக இருந்த விபீஸ்வரின் முகத்தில் கடுமை ஏறியது. அந்த காசோலையை வாங்கி கிழித்து எறிந்தவன், அவளருகே வேகமாக வந்து அவளின் மேல் கையை பிடித்து எழுப்பினான்.

“என்னடீ நினைச்சிட்டு இருக்க உன் மனசுல? அன்னிக்கு என்னனா என் காதல் மேல நம்பிக்கை இல்லன்னு சொல்லிட்டு போன, இப்ப என்னவோ எனக்கு செக் எடுத்துட்டு வந்து நீட்டுற! என்னை பார்த்தா உனக்கு எப்படி தோணுது?” ஆக்ரோஷமாக அவளை பிடித்து உலுக்கலானான்.

எப்படியும் அவனிடம் கடங்காரியாய் இருக்க இவளின் தன்மானம் இடங்கொடுப்பதாக இல்லை.
அவன் கோபபடுவான், மறுப்பான் என்று காவ்யா எண்ணினாள் தான், ஆனால் அவன் தனது வேலை இடத்தில் இத்தனை ஆவேசமாக நடந்து கொள்வான் என்று காவ்யா நினைத்திருக்கவில்லை.

“சர்… விடுங்க பிளீஸ்… கை வலிக்குது…” காவ்யா வலியில் முகம் சுருங்கி கெஞ்ச, “என்னால உன்ன விடமுடியாது கவி… உனக்கு என் காதல் மேல தான நம்பிக்கை இல்லாம போச்சு… சரி வா நாம கல்யாணம் பண்ணிக்கலாம்” அதே கோபத்தோடே சொன்னான்.

“உங்களுக்கு எல்லாமே விளையாட்டா போச்சா? கொஞ்சமாவது யோசிச்சு பேசுங்க சர், ஆத்திரத்தில கண்டதையும் உளராதீங்க” அவன் தந்த அதிர்ச்சியில் காவ்யாவும் கண்டித்து பேசினாள்.

அவளின் கண்டிப்பில் இவன் முகத்தில் யோசனை பரவியது. அவளை விட்டு நகர்ந்து சற்று நேரம் ஏதோ யோசித்தவன் அவளிடம் திருப்பி, “நான் உறுதியா தான் சொல்றேன். உனக்கு என் காதல் மேல தான நம்பிக்கை இல்லாம போச்சு. நம்ம கல்யாணம் நடந்தா என் காதல் மேல உனக்கு நம்பிக்கை வரும் இல்ல! அதோட உன்ன விட்டு விலகி இருக்க என்னாலயும் முடியாது, நீ என்னைவிட்டு விலகி போறதையும் ஏத்துக்க முடியாது” அவன் தீவிரமாக பேசிக்கொண்டு போக, இவள் அவன் பேசும் மொழி புரியாதது போல விழி பிதுங்க நின்றிருந்தாள்.

அவன் அதே தீவிரத்தோடு, “சிவாக்கு ஆபத்துன்னு தெரிஞ்சதும் எவ்வளவு துடிச்சு போன, உன் அம்மா வந்ததும் அவங்க தோள்ல சாய்ஞ்சு கதறி அழற… அவ்வளவு நேரமும் நான் உன் பக்கத்துல தானடீ இருந்தேன்! என்கிட்ட ஆறுதல் தேட தோணல இல்ல உனக்கு! உன் வேதனைக்காக நான் துடிச்சது தெரியாம போச்சுல்ல உனக்கு?” அவளுக்கு எல்லாமுமாக தான் மட்டுமேயாக வேண்டும் என்ற தன் பிடிவாத காதலின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினான் அவன்.

“நான் நான் அப்படி நினைக்கல… நீ… நீங்க தான் ஏதேதோ நினைச்சு குழப்பிகிறீங்க!”

விபீஸ்வர் அசட்டையாக கைகள் உயர்த்தி சோம்பல் முறித்துக் கொண்டு,
“பேபி செம்ம ஹேப்பி மூட்ல இருக்கேன், நம்ம மேரேஜ் பிக்ஸ் ஆகிடுச்சு. நீயும் பிக்ஸ் பண்ணிக்கோ” விபி ஒற்றை கண் சிமிட்டி கொண்டாட்டமாக சொல்ல இவளுக்கு மூச்சடைத்தது.

“சர்… கல்யாணம் எல்லாம் சின்ன விசயம் இல்ல! வீவீட்டு பெரியவங்க பார்த்து முடிவு பண்ணணும்! நான்… எப்படி உங்களை? அதெல்லாம் நடக்காது சர்!” அவன் தெளிவாக பேச, இவள் திக்கித் திணறினாள். அவனின் அதிரடி வேகத்தில் இவள் இதயத்தின் படபடப்பு நூறு மடங்கு வேகத்தில் துடிப்பது போலிருந்தது.

“அட ஆமா இல்ல, சரி வா போலாம்” என்று விபீஸ்வர் அவள் கைபற்றி வெளியே இழுத்து வந்தான்.

“சர்… எங்க போகணும்?” அவள் பதறி கேட்க, ” நம்ம கல்யாணம் பத்தி நம்ம வீட்டு பெரியவங்க கிட்ட பேசணும் இல்ல” அவன் சாதாரணமாக சொன்னபடி நடந்தான்.

“…!”

விபீஸ்வரும், காவ்யதர்ஷினியும் கைகள் கோர்த்து போவதை அலுவலகத்தில் உள்ள அனைத்து கண்களும் அதிசயமாக பார்க்க, அவர்கள் தங்களுக்குள் சுவாரஸ்யமாக கிசுகிசுத்துக் கொண்டனர்.

உயிர் தேடல் நீளும்…

error: Content is protected !!