UTN 3

உயிர் தேடல் நீயடி 3

‘காவ்யதர்ஷினி’ பெயரை உச்சரிக்கும் போது விபீஸ்வர் முகத்தில் மென்மை பரவியதை காசிநாதன் குறித்து கொண்டார்.

“உங்க திருமணம் முடிஞ்சு எவ்வளவு நாளாச்சு?”

“ரெண்டு மாசம்”

“உங்களோடது லவ் மேரேஜா? இல்ல, அரேன்ஜ் மேரேஜா?”

அவரின் அடுத்த கேள்வி விபீஸ்வரனை கொஞ்சம் யோசிக்க வைத்தது.

“என்னை பொறுத்தவரைக்கும் லவ் மேரேஜ்! அவளை பொறுத்தவரைக்கும் அரேன்ஜ் மேரேஜ்!” என்ற அவன் பதிலைக் கேட்டு காசிநாதன் நெற்றி சுருக்கினார்.

“அப்படின்னா, மிஸஸ் காவ்யதர்ஷினி உங்களை காதலிக்கல! அம் ஐ ரைட்?”

“…”

“திருமணத்திற்கு பிறகும் நீங்க ரெண்டு பேரும் மனமொத்து வாழல! சரிதானே?”

“…”

ஜனனிக்கு ஆத்திரமாக வந்தது. ‘என்ன மாதிரியான கேள்விகள் இவை. அதுவும் இந்த நிலையில், விபியின் மனதை மேலும் ரணமாக்கக் கூடியவை’ என்று எண்ணி கவலையுற்றாள்.

“உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல எதனால பிரச்சனை ஏற்பட்டதுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

காசிநாதனின் அடுத்த கேள்விக்கும் அவனிடம் பதில் வரவில்லை.

“நீங்க அமைதியா இருக்கிறதால மட்டும் பிரச்சனை தீராது மிஸ்டர் விபீஸ்வர், காவ்யதர்ஷினி இறப்புல சந்தேகம் இருக்கிறதா எங்களுக்கு புகார் வந்திருக்கு!” அவர் அழுத்தமாக பேச, ஜனனி பொறுமை இழந்தாள்.

“அதுவொரு ஆக்ஸிடென்ட், அந்த விபத்துல விபியும் தான் பாதிக்கப்பட்டு இருக்கான், அந்த அம்மாவுக்கு தான் புத்தி இல்லன்னா, நீங்களும் விசாரணைனு வந்திருக்கீங்க” அடக்கப்பட்ட ஆத்திர குரலில் இவள் பதில் பேச, காசிநாதன் தன் ஆராய்ச்சி பார்வையை ஜனனி பக்கம் செலுத்தினார்.

“நீங்க யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா மேடம்?”

“நான் ஜனனி, விபியோட ஃபேமிலி ஃபிரண்ட்” அவளின் அறிமுகத்தை சிறு தலையசைப்புடன் உள்வாங்கி கொண்டவர், “இன்னும் உங்க வீட்ல வேற யாரெல்லாம் இருக்காங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா மிஸ்டர் வபீஸ்வர்?”

“நானும் எங்க அம்மாவும் மட்டும் தான், ஜெனி என்னோட உதவிக்காக வந்திருக்கா!” இப்போது அவன் பதில் சொன்னான்.

“ம்ம் உங்க அம்மாவ இப்ப பார்க்கலாமா?”

“சாரி இன்ஸ்பெக்டர், மாம் இப்ப உங்களுக்கு பதில் சொல்ற நிலைமையில இல்ல! ப்ளீஸ் புரிஞ்சுகோங்க”

“இட்ஸ் ஓகே, உங்களுக்கு நடந்த விபத்தை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?”

விபத்து நடந்த அந்த நொடி விபீஸ்வரனின் மனக்கண்ணில் வந்து போனது. அவன் ஆழ்ந்து மூச்செடுத்து தன்னை சமன்படுத்திக் கொண்டான்.

“நான் அவகூட லாங் டிரைவ் போயிட்டு இருந்தேன்! வழியில ஒரு சின்ன பிரச்சனை! ப்ச் ரொம்ப அற்ப விசயம்! என்மேல கோச்சிட்டு காவ்யா ரோட்ல இறங்கி நடக்க ஆரம்பிச்சுட்டா… நானும் அவ பின்னாடியே போய் சமாதானம் பண்ண முயற்சி பண்ணிட்டு இருந்தேன்… அப்ப தான், அந்த கார்! எங்களை மோதி தள்ளிட்டு போயிடுச்சு!”

“அந்த காரோட அடையாளம் ஏதாவது சொல்ல முடியுமா?”

“ப்ச் நொடியில எல்லாமே நடந்து முடிஞ்சிடுச்சு! என்னால அந்த காரை அடையாளப்படுத்த முடியல!” என்று நெற்றியை தேய்த்துக் கொண்டான்.

“தொழில் முறையில இல்ல குடும்ப சம்பந்தமா உங்களுக்கு எதிரிங்க யாராவது இருக்காங்களா?”

“தொழில் போட்டி அதிகம் தான், ஆனா, கொலை செய்ற அளவுக்கு கிடையாது!” மறுப்பாய் தலையசைத்து உதட்டை பிதுக்கினான். மேலும், “உறவுகாரங்க கூட நாங்க அதிகமா அட்டாச் ஆகல. சோ, இதுல யாரையும் சம்பந்தபடுத்த முடியாது” விபீஸ்வர் வெளிப்படையாகவே பதில் சொன்னான்.

“உங்க மனைவி வழியில ஏதாவது பிரச்சனை, சண்டை, பகை அதுபோல எதாவது…” அவர் முடிக்காமல் நிறுத்த,

“அவங்க பக்கம் எல்லாருமே ரொம்ப சாதாரணமானவங்க, அதால கொலை செய்ற அளவுக்கெல்லாம் சான்ஸ் இல்ல சர்”

“அப்புறம்… நீங்க லேடிஸ் விசயத்தில கொஞ்சம் வீக்னு கேள்விபட்டேன், அதனால…!”

அவன் முகம் சட்டென மாறியது.
“அது என்னோட சொந்த விசயம் சர், இப்ப என்னோட ஓய்வு நேரம் ப்ளீஸ்” விபீஸ்வரின் இறுக்கமான பதிலில், காசிநாதன் யோசனையுடன் விடைபெற்று கிளம்பினார். ‘விசாரணை இன்னும் முடியவில்லை’ என்ற எச்சரிக்கையோடு.

# # #

நடு இரவின் ஆழ்ந்த அமைதியில் அந்த பங்களா அமிழ்ந்து இருந்த நேரம்.

ஜன்னல் கதவுகள் காற்றில் மூடித் திறக்கும் படபட சத்தம் அங்கு நிலவி இருந்த நிசப்தத்தை கலைப்பதாய்.

லலிதாம்பிகையின் உறக்கம் கலைய, கண்களை திறந்து சத்தம் வந்த திசையைப் பார்த்தார்.

அறையின் அரை வெளிச்சத்தில் சரியாய் எதுவும் தெரியவில்லை. எழுந்து அமர்ந்து கண்களை துடைத்துக் கொண்டு மேசை விளக்கை சொடுக்கினார்.

ஏசியின் இதமான குளிர் பரவி இருந்த அவர் அறையில் மூடியிருந்த சன்னல் கதவுகள் எல்லாம் திறந்து மூடி வேக காற்றில் அடித்துக்கொண்டிருக்க, திரைச்சீலைகள் எல்லாம் அலைப்பாய்ந்து போராடிக் கொண்டிருந்தன.

‘என்ன இது?’ என்று அவரின் யோசனை முடியும் முன்னே, ஜன்னல் அருகே புகை போன்ற மாய உருவம் தெரிந்தது.

லலிதாம்பிகையின் நரம்புகள் எல்லாம் சில்லிட்டு போக, அவர் தொண்டை குழி அடைத்துக் கொண்டது.

அந்த புகை உருவம் மெல்ல தெளிவாக காட்சியானது.

சோகம் சுமந்து கலங்கிய விழிகளோடு நின்றிருக்கும் காவ்யதர்ஷினியின் தத்ரூப உருவம் அது!

“விபி… விபி… விபீ…” இருகைகளாலும் காதுகளைப் பொத்திக்கொண்டு, கண்களை இறுக மூடியபடி, அந்த பங்களாவே அதிரும் படி பயத்தில் கத்தினார் அவர்.

# # #

‘அப்படின்னா, மிஸஸ் காவ்யதர்ஷினி உங்களை காதலிக்கல! அம் ஐ ரைட்?’

‘திருமணத்திற்கு பிறகும் நீங்க ரெண்டு பேரும் மனமொத்து வாழல! சரிதானே?

‘உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல எதனால பிரச்சனை ஏற்பட்டதுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?’

காசிநாதனின் கேள்விகள் திரும்ப திரும்ப அவன் காதுகளில் ஒலித்து, அவனின் கடந்து போன நிகழ்வுகளை எல்லாம் கிளற, அந்த நடுநிசியிலும் உறக்கமின்றி தவித்து கொண்டிந்தான் விபீஸ்வர்.

அப்போது தான் அவன் அம்மாவின் அலறல் சத்தம் அவனை விதிர்க்க செய்தது.

தடுமாறி எழுந்து தானே சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு லலிதாம்பிகையின் அறையை நோக்கி விரைவாக நகர்ந்தான்.

இவன் அங்கு செல்லும் முன்னரே, வாயில் காப்பாளர்கள் இருவரும், சமையற்காரன் கலீலும் நின்றிருந்தனர்.

“என்னாச்சு மாம்?” விபீஸ்வர் வினவியபடி உள்ளே வர, ஜனனியை இறுக பிடித்தபடி உடல் நடுங்க லலிதாம்பிகை அமர்ந்திருந்தார்.

“விபி… விபி, பே…பேய்… அங்க…” அவர் திக்கிதிணறி சொல்ல,

“என்ன பேயா? உளராதீங்க மாம்” என்று கடுப்பாக சொன்னவன், அம்மாவின் பயந்த முகத்தை கவனித்து, “ஏதாவது கெட்ட கனவா இருக்கும், டோன்ட் வொர்ரி மாம்” என்று ஆறுதலாய் அவர் கை பற்றி கொண்டான்.

“இல்ல, என் கண்ணால் பார்த்தேன். அங்க, அங்க தான்!” என்று ஜன்னல் பக்கம் கைகாட்டியவரின் கண்கள் அகல விரிந்தன.

அங்கே, மூடிய கண்ணாடி ஜன்னல் கதவுகள் மூடியபடியே இருக்க, திரைச்சீலைகளும் தேமே என்று தொங்கி கொண்டிருந்தன. அந்த அறை எந்த மாற்றமும் இன்றி எப்போதும் போல நேர்த்தியாக இருந்தது.

“அங்க ஒண்ணும் இல்ல மாம், நீங்க வீணா பயப்படுறீங்க” என்று விபீஸ்வர் சொல்ல,

“பேய பார்த்தேன், பிசாச பார்த்தேன்னு மிட்நைட்ல சும்மா காமெடி பண்ணாதீங்க ஆன்ட்டி” என்று ஜனனி அவரை கடிந்தபடி, தண்ணீர் எடுத்து கொடுக்க, அவர் மடமடவென பருகி முடித்து ஆசுவாச மூச்செறிந்தார்.

“என்னை நம்பு கண்ணா, நான் பாத்தது நிஜம். அந்த… அந்த காவ்யா பொண்ணு தான் இங்க நின்னுட்டு இருந்தா!”

“வாட்” ஜனனியின் கேள்வி திகைப்பாய் வந்தது.

விபீஸ்வர் முகத்திலும் அந்த திகைப்பு பரவ, அவன் பார்வை அந்த பெரிய அறையை சுற்றியது. அவனின் பார்வைக்கு எதுவும் புலப்படாமல் போக, தலையை குலுக்கி தன்னை மீட்டு கொண்டான்.

“சும்மா எதையாவது உளராதிங்க ஆன்ட்டி, அப்புறம் என் வாயில ஏதாவது வந்திட போகுது, ஒழுங்கா படுத்து தூங்குங்க” என்று ஜனனி கடுகடுக்க,

“எஸ் மாம், அது உங்க பிரம்மையா இருக்கும். படுத்து ரெஸ்ட் எடுங்க எல்லா சரியாயிடும்” என்று தாயை சமாதானப்படுத்தினான்.

“இல்லடா, இதுக்கு மேல என்னால தூங்க முடியும்னு தோணல”

“ஓகே மாம், ரிலாக்ஸ், சிலீப்பிங் டேப்லெட் போட்டுக்கோங்க எல்லாத்தையும் மறந்து தூங்கிடுவீங்க” என்றவன் ஜனனியை பார்க்க, அவள் அருகிருந்த இழுவை பெட்டியில் இருந்து ஒரு மாத்திரை எடுத்து, லலிதாவை சாப்பிட செய்து படுக்க வைத்தாள்.

“ஜெனிம்மா, இன்னைக்கு நைட் மட்டும் என்கூடவே படுத்துக்க, பிளீஸ் டா” என்று லலிதா யாசிக்க, ஜனனியும் ஆமோதித்து அவர் அருகில் படுத்து கொண்டாள்.

மாத்திரையின் வீரியத்தில் லலிதாவின் இமைகள் கவிழ்ந்திட, ஜனனி தவிர, விபீஸ்வரனும் மற்றவர்களும் அங்கிருந்து நகர்ந்தனர்.

தன் அறைக்கு வந்து கட்டிலில் உடல் சாய்த்தவனுக்கு உறக்கம் வெகுதூரமாய்.

தன் மன அமைதிக்கும் உறக்கத்திற்கும் கூட, ஒரு தூக்க மாத்திரை தேவை என்று தோன்ற, அருகில் இருந்த இழுவைப் பெட்டியில் இருந்து மாத்திரை ஒன்றை கையிலெடுத்தான்.

‘எனக்கும் இப்ப தூக்கம் வரல சர், நானும் தூங்கணும். ஒரேயொரு தூக்க மாத்திரை தரீங்களா? ப்ளீஸ்’ காவ்யதர்ஷினியின் இறைஞ்சும் சிறுகுரல் அவன் பக்கத்தில் ஒலிக்க, சட்டென திரும்பினான்.

அவன் கையிலிருந்த மாத்திரை தரையில் விழுந்தது.

அவன் பக்கத்தில் வெறுமை மட்டுமே தெரிந்தது. தன் மனபிரம்மையை நினைத்து அவனிதழில் விரக்தி சிரிப்பு வந்து போனது.

கட்டிலில் சாய்வாக அமர்ந்து கொண்டவன், தலையணையை எடுத்து தன் மார்போடு சேர்த்து கொண்டான்.

“ப்ளீஸ் பேபி, நீ திரும்ப வந்துடு… என்னை இப்படி பழிதீர்த்துக்காத பேபி… நீயில்லாத ஒவ்வொரு நிமிசமும் நரகமா இருக்கு டீ எனக்கு” அவன் இறுக மூடிய இமைகளில் நீர் கோர்க்க, தலையணையை இறுக அணைத்து கொண்டு இதையே திரும்ப திரும்ப முணுமுணுத்துக் கொண்டிருந்தான் அவன்.

# # #

உயிர் தேடல் நீளும்…